top of page

தத்துவம் அறிவோம் -16 : எனக்கு மட்டும் தான் எல்லாம் சொந்தம்


விவசாயத்தைக் கண்டுபிடித்த மனிதனின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக  மாறிவிட்டது. என்னென்ன மாற்றங்கள் நடந்தன?


வேட்டைச் சமூகமாக உணவைத்தேடிக் காடு காடாக அலைந்து கொண்டிருந்த  மனிதர்கள் ஒரே இடத்தில் தங்கி வாழத் தொடங்கினார்கள். புலம்பெயர் வாழ்க்கை நிலையான வாழ்க்கையாக மாறியது. 

அதாவது முன்பு அடுத்தவேளை உணவு கிடைக்குமா? என்று தெரியாது.


இப்போது உணவைத் தாங்களே உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையை  விவசாயம் உருவாக்கியது.

தானியங்களை உற்பத்தி செய்ய முடிந்ததால் மனிதர்கள் ஆண்டு முழுவதும் பசி, பட்டினி இல்லாமல்  வாழத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல.


விவசாயம் தேவைக்கு அதிகமான உணவுப் பொருளைக் கொடுத்தது. அதிகமாக உற்பத்தியான  தானியங்களைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா?


ஒரே இடத்தில் நிலையாக இருந்தால் தானே பாதுகாக்க முடியும்.


ஆகவே மனிதன் ஒரே இடத்தில் நிலையாக வாழத் தொடங்கினான். 


இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது.


அதுவரை,  கிடைத்த அத்தனை விலங்குகளையும் வேட்டையாடிச் சாப்பிட்டார்கள்.


இப்போது சில விலங்குகளை குட்டிகளிலிருந்தே வளர்க்கவும் பழக்கவும்  தொடங்கினார்கள்.


காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக்கினார்கள். உதாரணத்துக்கு நாய், குதிரை, மாடு, பன்றி, ஆடு, கோழி போன்றவற்றைப் பிடித்து தாங்கள் இருந்த இடத்தில் வளர்த்துப் பழக்கினார்கள்.

 இதனால் அவர்களுடைய இன்னொரு பிரச்சினையும் தீர்ந்தது.


அலைந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடி மாமிசம் சாப்பிட்ட மனிதர்களுக்கு இப்போது  இருந்த இடத்திலேயே  மிருகங்களைச் சாப்பிட முடிந்தது. 


ஆக,அலைந்து திரிந்த வாழ்க்கை முடிந்து ஒரே இடத்தில் நிலையாக வாழும்  வாழ்க்கை தொடங்கியது. மனித குல வாழ்க்கை வரலாற்றில் இது தான் மிக முக்கியமான மாற்றம். 


இந்த மாற்றம் அன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய முன்னேற்றத்தைக்  கொடுத்தது.

ஆனால் அதே நேரம் சில பல கெடுதல்களையும் கொண்டு வந்தது. 


அவைகளும் மாற்றங்கள் தான்.


முன்பு வேட்டைச் சமூகமாக இருந்தபோது கிடைத்ததைத் தன்னுடைய  கூட்டத்துடன் பகிர்ந்து சாப்பிட்டார்கள். உணவைப் பகிர்ந்து கொள்வதில் சமத்துவம் இருந்தது.


தனிநபர்களை விட கூட்டம் அல்லது குழு முக்கியம் என்ற எண்ணமே  மேலோங்கியிருந்தது. அதையே ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் என்று ஆய்வாளர்கள் அழைத்தனர். 


பொதுவுடமை என்றால் என்ன? இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்க்கலாம். 


இப்போதைக்கு ஒரு சமூகத்தில் மனிதர்களின் உழைப்பு, அதன் பலன்கள்,  நன்மைகள், வசதிகள், முன்னேற்றங்கள் எல்லாம் அந்த மொத்தக் கூட்டத்துக்குச் சொந்தம். 


கூட்டம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும்.


அங்கே அம்பானியும் கிடையாது.


அதானியும் கிடையாது.


எல்லாரும் ஓர் நிறை. எல்லோரும் சமம்.


ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தில் இந்த நிலைமை இருந்தது.


ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது? 


இப்போது ஒரு சிலர் நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். வலுத்தவர்கள் எளியவர்களை அடிமைகளாக்கினார்கள். 


அவர்களை நிலத்தில் வேலை செய்ய வைத்தார்கள். 


சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள் அந்த நிலத்தில் விளைந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள்.


வேலை செய்தவர்களுக்கு உணவு அல்லது கூலி கொடுத்தார்கள்.


கூலி என்றால் விளைச்சலில் சமபங்கு கிடையாது.


நிலத்தில் வேலை பார்த்தவர்களின் உழைப்பை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்கள். 


உழைப்பை விலைக்கு விற்றவர்களுக்கு அதற்கு மேல் எந்த உரிமையும்  கிடையாது.


அவர்கள் கிடைத்த கூலியை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டும்.


நிலம் வைத்திருப்பவர் நிலத்தில் விளைந்த மொத்தப்பலனையும் எடுத்துக்  கொள்வார்.

அதனால் அவர் வசதியாக வாழ்வார்.


புரிந்து விட்டதா?


அமெரிக்கா, செவ்விந்தியாவின் மீது போர் தொடுத்தபோது அமெரிக்கப்படைத்  தளபதி,

“ இன்றிலிருந்து இந்த நிலம் எங்களுக்குச் சொந்தம்.. ” என்று சொன்னானாம். அதைக் கேட்ட செவ்விந்தியப் பழங்குடி மக்களின் தலைவன்,

“ நாம் தான் பூமிக்குச் சொந்தமானவர்கள். பூமி நமக்குச் சொந்தமானது இல்லை..” என்று சொல்லிச் சிரித்தாராம். 


இப்படியொரு கதை உலவுகிறது.


யோசித்துப்பாருங்கள்.


நாம் வாழும் பூமியை யாராவது நிரந்தரமாய்ச் சொந்தம் கொண்டாடமுடியுமா?


மனிதர்கள் மட்டுமல்ல… எல்லா உயிர்களுமே உயிரோடு வாழும்வரை மட்டுமே இது என் நிலம், இது என் தெரு, இது என் ஊர், இது என் நாடு, என்று சொந்தம் கொண்டாட முடியும். 


உயிர்கள் மறைந்த பிறகு நாம் அனைவருமே பூமிக்குச் சொந்தமானவர்களாகி  விடுவோம். இல்லையா? 


அப்படியென்றால் பூமிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம்  செய்த மனிதன் என்ன செய்திருக்க வேண்டும்?


அனைவரும் உழைப்போம்.


கிடைக்கின்ற விளைச்சலை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். 

என்று சொல்லியிருக்க வேண்டுமா? இல்லையா?


நீங்களே சொல்லுங்கள்.


மனிதன் அப்படிச் செய்யவில்லை.


அதற்குக் காரணம் என்ன தெரியுமா?


தனக்கு மட்டுமே அனைத்தும் வேண்டும் என்ற ஆசை.


அதற்கு இன்னொரு பெயர் தான் சுயநலம்.


இதுவரை உலகில் தோன்றிய தத்துவங்களும் இந்த வார்த்தையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. 


இந்தச் சுயநலம் என்ன செய்தது?


மனிதகுலத்தை என்ன பாடுபடுத்தியது?


பார்க்கலாம்.


( அறிவோம் தத்துவம்)


உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page