லண்டனிலிருந்து அன்புடன் - 10
- பஞ்சுமிட்டாய் பிரபு

- 19 hours ago
- 2 min read
இங்கிலாந்தின் புத்தகத் தினம் – மாறுவேடத்தில் அசத்தும் ஆசிரியர்கள்

குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் எனப் பல தினங்களைக் கொண்டாடுகிறோம். அதேபோல், புத்தகங்களுக்கென்று ஒரு தனி தினம் உண்டு. ஏப்ரல் 23-ஆம் தேதி "உலகப் புத்தகத் தினம்" கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் அந்தச் சமயம் ஈஸ்டர் விடுமுறை என்பதால், பள்ளிகளில் மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமையையே புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
இங்கிலாந்து பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு குட்டி நூலகம் இருக்கும். வகுப்பில் மட்டுமல்ல, பள்ளிக்கூட வளாகத்திலும் அனைத்து வகுப்பினருக்குமான ஒரு நூலகமும் உண்டு. பள்ளிச் சுவர்களில் புத்தகங்களின் அட்டைப்படங்களே அலங்காரமாகத் தொங்கும். இப்படிப் புத்தகங்களைக் கொண்டாடி மகிழ்பவர்கள், புத்தகத் தினம் என்றால் சும்மாவா விடுவார்கள்?
புத்தகத் தினம் வந்துவிட்டால், பள்ளிக்கூடமே ஒரு கதை உலகம் போல மாறிவிடும்! இங்கு, புத்தகத் தினம் என்றால் அது மாறுவேடத்திற்கான தினம். நம் தமிழ்நாட்டில், மாறுவேடம் என்றால் ஔவையார், பாரதியார், திருவள்ளுவர், சாவித்திரி பாய் போன்ற வரலாற்றுத் தலைவர்கள் போல் வேடமிடுவோம். ஆனால் இங்குப் புத்தகக் கதாபாத்திரங்கள் போல் வேடமிடுவதே இவர்களின் சிறப்பு. சூப்பர் ஹீரோக்கள், டிஸ்னி தேவதைகள் எனப் பல கதாபாத்திரங்களாக மாறிப் பள்ளிக்கு வருவார்கள். குழந்தைகளைவிட ஆசிரியர்கள் வேடமிட்டு வருவதுதான் இந்தத் தினத்தின் சிறப்பு. மந்திரவாதிகள், ஹாரிப்பாட்டர், நார்நியா, பீட்டர் பேன் போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் எனத் தத்ரூபமாக வேடமிட்டு ஆசிர்யர்கள் வாசலில் நின்று குழந்தைகளை வரவேற்பார்கள். இதைப் பார்க்கவே பெற்றோர்கள் திரண்டு வருவார்கள்.
இந்தத் தினத்திற்காகவே பிரத்யேகமாக மலிவு விலைப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பள்ளி சார்பில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புத்தக டோக்கன்(Book Token) வழங்கப்படும். இதைக் கொண்டு அருகிலுள்ள புத்தகக் கடையில் ஒரு புதிய புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த அருமையான ஏற்பாடு! இந்த வருடம், புத்தகத் தினத்திற்காக 16 புத்தகங்களை ஒரு பவுண்டு விலையில் தயாரித்துள்ளனர். அதிலுள்ள ஒரு படக்கதையான "The Big BANG" பற்றித்தான் நாம் சுருக்கமாகத் தற்போது பார்க்கப்போகிறோம்.
ராக்கி, ஹாலோ மற்றும் காஸ்பர் என்ற மூன்று பூனைக்குட்டிகளின் கதை இது. ராக்கி, ஹாலோ பூனைக்குட்டிகளுக்குப் புதிதாகக் காஸ்பர் பூனை அறிமுகமாவதிலிருந்து இக்கதை தொடங்குகிறது. அவர்கள் மூவரும் விளையாடிக்கொண்டே அருகிலிருந்த காட்டிற்குள் சென்றுவிடுகின்றனர். அப்பொழுது, பலத்த மழையும் இடியும் மின்னலும் வருகின்றன. ராக்கியும் ஹாலோவும் இடிச் சத்தத்தைக் கேட்டு நடுங்குகிறார்கள். ஆனால், காஸ்பர் மட்டும் பயமே இல்லாமல் மழையை வேடிக்கை பார்க்கிறது. பலத்த வெளிச்சத்துடன் மின்னல் வெட்டியபோது மூவரும் சிதறி ஓடுகிறார்கள். பிறகு காஸ்பரைக் காணவில்லை!
அப்போதுதான் ராக்கி ஒரு விஷயத்தைக் கவனிக்கிறது. இவ்வளவு பெரிய இடிச் சத்தம் கேட்டபோதுகூட காஸ்பர் அசையவில்லை. காரணம், காஸ்பருக்குக் காது கேட்காது. தனது நண்பன் காஸ்பரை ராக்கி எப்படித் தேடிக் கண்டுபிடித்தது என்பதே மீதிக்கதை.
நம்மைச் சுற்றி வாழும் வாய் பேச இயலாதவர்கள் (மாற்றுத் திறனாளிகள்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் அற்புதமான கதை இது. Sign Language - நாம் அனைவரும் சுலபமாகக் கற்கலாம் – அதன் மூலம் நம் நண்பர்களின் மொழியில் நாம் உரையாடி மகிழலாம் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம் உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும். அழகிய ஓவியங்களுடனும், குட்டி குட்டி வரிகளுடனும் இந்தக் கதை உள்ளதால் மிகவும் சுலபமாக வாசித்துவிடலாம்.
"அது சரி! புத்தகத் தினத்திற்கு நீங்கள் என்ன வேடமிட்டீர்கள்?" என்று கேட்கிறீர்களா? நாங்கள் இந்த வருடம் "Dog Man" கதாபாத்திரமாக வேடமிட்டோம்.
“என்னது, அடுத்து வரும் மாறுவேடப் போட்டிக்கு புதிய யோசனை வந்துவிட்டதா?”
தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.






Comments