சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
- நாராயணி சுப்பிரமணியன்
- May 15
- 2 min read

"சூரியனுடைய ஒளிதான் எல்லா உணவுச்சங்கிலிகளுக்கும் அடிப்படையானது" என்று நாம் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். சூரிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது, தாவரங்கள் இல்லாமல் உணவுச்சங்கிலியும் இயங்காது. ஆகவே சூரியனுடைய ஒளி இல்லாமல் எந்த உணவுச்சங்கிலியும் செயல்பட முடியாது.
1977 வரை எல்லாரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கண்டுபிடிப்பு எல்லாவற்றையும் மாற்றியது.
1977ம் ஆண்டில் என்ன நடந்தது?
தென்னமெரிக்காவுக்கு அருகில் உள்ள கலபகோஸ் தீவுகளில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் குழுவின் தலைமை அறிவியலாளராக இருந்தவர் ராபர்ட் பல்லார்ட் என்ற நிலவியலாளர். நார் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் அமர்ந்துகொண்டு அவர்கள் ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் கருவிகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். கடலுக்கு அடியில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் (Hydrothermal Vent) என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்று தேடியபோது, அவர்கள் ஒரு புதிய வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தார்கள்.
இந்த பாக்டீரியா எப்படியெல்லாம் உணவு தயாரிக்கிறது என்று சோதனை செய்து பார்த்தபோது அறிவியலாளர்கள் வியந்துபோனார்கள். ஏனென்றால், இந்த பாக்டீரியா, கரியமில வாயு என்று அழைக்கப்படும் கார்பன் டை ஆக்சைடையும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயுவையும் மட்டுமே வைத்துக்கொண்டு உணவு தயாரித்துவிடும்! சூரிய ஒளி இல்லாமல் உணவு தயாரிக்கும் முதல் உயிரினம் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது!
"இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
"நாங்கள் எல்லாருமே பேசக்கூட மறந்து அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனோம். இந்த உயிரிகளைக் கண்டுபிடித்தது ஒரு அட்டகாசமான உணர்வைத் தந்தது" என்று அந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார் ராபர்ட் பல்லார்ட். கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரி, அறிவியலையே மாற்றியமைத்தது. சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழ முடியும் என்று அனைவரும் அறிந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, சூரிய ஒளி படாத ஆழ்கடலில் முழுமையான உணவுச்ச்சங்கிலிகள் இருக்கும் என்பதையும் அன்றுதான் கண்டுபிடித்தார்கள்.
சூரிய ஒளி இல்லாமல் இவ்வாறு உணவு தயாரிப்பதை வேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் ஆயிரக்கணக்கான வேதிச்சேர்க்கை நுண்ணுயிர் இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்தான் வேதிச்சேர்க்கை செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த வகை நுண்ணுயிர்கள் வெப்பம் அதிகமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளிலும்கூட தாக்குப்பிடித்து வாழும் தகுதி படைத்தவை. கடினமான சூழலில் வாழும் இதுபோன்ற உயிரிகளை Extremophile என்று அழைப்பார்கள். அதீதத் தன்மையை விரும்பும் உயிரிகள் என்று இதற்குப் பொருள் கூறலாம்.
இந்த வேதிச்சேர்க்கை நுண்ணுயிரிகளின் இன்னொரு சிறப்பம்சத்தை சொல்லட்டுமா? சிலவகை வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் தனியாக வாழும். இன்னும் ஒரு சில நுண்ணுயிர்கள், பிற விலங்குகளின் உடலில் இணைந்து கூட்டாக வாழும்! அந்த விலங்குகள் தனியாக வேட்டையாடவோ,உணவு தயாரிக்கவோ தேவையில்லை. இந்த பாக்டீரியாக்கள் தயாரித்துத் தரும் உணவை அப்படியே சாப்பிட்டால் போதுமானது. விலங்குகளுக்கு உணவு கிடைத்துவிடும், பாக்டீரியாக்களுக்கு இருப்பதற்கு இடம் கிடைத்துவிடும். இருவருக்கும் சாதகமான நட்பு இது. நண்டுகள், ஆழ்கடல் புழுக்கள், சிப்பிகள் என பல வகை உயிரினங்களுடன் இந்த பாக்டீரியாக்கள் இணைந்து வாழ்கின்றன.
இந்த பூமியில் உயிர்கள் உருவானபோது சூரிய ஒளியை வைத்து உணவு தயாரிக்கும் முறை இருக்கவில்லை என்றும், இந்த வேதிச்சேர்க்கை முறைதான் முதலில் வந்தது என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். சூரிய ஒளியும் அதிகப்படியான ஆக்சிஜனும் இல்லாமலேயே இந்த உயிரிகளால் வாழ முடியும் என்பதால் இவைதான் பண்டைய உயிரினங்களாக இருந்திருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், வியாழன் கோளின் நிலவான யுரோப்பா போன்ற பல இடங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் எல்லாம் இதுபோன்ற வேதிச்சேர்க்கை நடப்பதற்கே வாய்ப்பு அதிகமாம்! ஆகவே இங்கெல்லாம் ஒருவேளை நுண்ணுயிர்கள் வாழ்ந்தால் அவையும் வேதிச்சேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிர்களாகத்தான் இருக்குமாம்.
பில் நை என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆர்வலர், "மனித இனத்தின் 100 நூறு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் அதில் வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் கட்டாயம் இடம்பெறும்" என்கிறார்.
Comments