top of page

லண்டனிலிருந்து அன்புடன் - 2


ree

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம்,


“இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தொடரை, இலண்டனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலிருந்து நாம் தொடங்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் hologauze animations வழியே தோன்றி வாழ்த்துச் சொன்ன “பேடிங்கடன் கரடி” குறித்து சென்ற பதிவில் நாம் பேசியிருந்தோம். உலகப் புகழ் பெற்ற “பேடிங்கடன் கரடி” புத்தகம் பற்றித்தான் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.


"A Bear Called Paddington" என்ற குறுநாவல் 1958ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பாண்ட். 1958யிலிருந்து 2016 வரை மொத்தம் 30 புத்தகங்கள் பேடிங்க்டன் கரடி கதாபாத்திரம் கொண்டு வெளியாகியுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 8-10 அத்தியாயங்கள் கொண்டவை. நீங்கள், எட்டு வயதிற்கு மேல் உள்ளவர் என்றால் நீங்களாகவே இந்தப் புத்தகத்தை வாசித்துவிடலாம்.


Paddington என்பது இலண்டனில் உள்ள ஓர் ஊரின் பெயர். அங்கு ஒரு பெரிய ரயில் நிலையமும் உண்டு. அந்த ரயில் நிலையிலிருந்து, இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு தொலைதூர ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்வது வழக்கம்.


கதையின்படி, மிஸ்டர் பிரவுன் மற்றும் அவரது மனைவி இருவரும் பேடிங்கடன் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அவர்களது குழந்தைகள் வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், குழந்தைகள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். ரயிலின் வருகைக்காக அவர்கள் காத்திருந்த போதுதான், கோட்சூட் & தொப்பி அணிந்த கரடி ஒன்று தனது பெட்டியுடன் ரயில் நிலையத்தில் தனியே அமர்ந்திருப்பதை இருவரும் கவனித்தனர். அந்தக் கரடியின் கழுத்தில் “Please look after this bear” என்றும் எழுதப்பட்டிருந்தது. இருவரும் அந்தக் கரடியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தனர்.


தான் பெரு(Peru) எனும் நாட்டிலிருந்து வருவதாகவும், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டதால், தனது அத்தை லூசி தன்னை இலண்டன் அனுப்பினார் என்றும் ஆனால் தனக்கு எங்குச் செல்வது, எங்குத் தங்குவது, யாரிடம் உதவி கேட்பதும் தெரியவில்லை என்று வருத்தமாகக் கூறுகிறது. வந்து நீண்ட நேரமாகியும், யாரும் தன்னுடன் பேசவில்லை என்றும், தனக்கு மிகவும் பசிக்கிறது என்றும் பேடிங்கடன் கரடி பதில் அளித்தது.


கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர். அப்படித்தான் பேடிங்க்டன் கரடி ப்ரவுன் குடும்பத்தில் இணைகிறது. அதன் பிறகு அந்தக் கரடி குடும்பத்தினருடன் இலண்டனிலுள்ள ஒவ்வொரு பகுதிக்குச் செல்வதும் அங்குச் செல்லும்போது அது செய்யும் சேட்டைகளுமே இந்தப் புத்தகத்தின் கதை.


பேடிங்க்டனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் உண்டு. அது குழந்தைகள் போலவே சிந்திக்கும். orange marmalade எனப்படும் ஒரு இனிப்பு தான் பேடிங்கடனுக்கு பிடித்த உணவு. ஊர் சுற்றுவது, அத்தைக்குக் கடிதம் எழுதுவது, ரகசியமாக வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிசுகள் ஏற்பாடு செய்வது என அது நிறையத் திட்டமிடும். ஆனால் அதன் சில செயல்கள் மட்டுமே பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பல நேரங்களில் அது செய்யும் செயல்கள் சொதப்பி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும். அதிலிருந்து தப்பிப்பதுதான் பேடிங்க்டன் கரடியின் சுவாரஸ்யமான கதை. திரைப்படங்களில் ரசித்த வடிவேலு அவர்களின் நகைச்சுவை போன்றே பேடிங்க்டன் கரடியின் செயல்களும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும்.


பேடிங்க்டன் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்கூட “Paddington at Peru” எனும் மூன்றாம் பாகம் வெளியானது. பேடிங்க்டன் கரடி தனது சொந்த ஊரான பெருவுக்கு சென்று தனது அத்தையைத் தேடுவதாகக் கதை அமைந்திருக்கும். கதையின் முடிவில், பேடிங்க்டனின் சொந்த ஊரான பெருவிலே தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்தா? பெருவா? எது தனது சொந்த ஊர் என்ற குழப்பத்தில் பேடிங்க்டன் தவித்துக்கொண்டிருக்கும்.


நாம் அனைவருமே வெவ்வேறு காரணங்களுக்காக, நமது சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கோ, வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ மாறியிருப்போம். புதிய இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், சொந்த ஊரை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். “சொர்கமே என்றாலும் அது நம் சொந்த ஊர் போல வருமா” பாடலைகூட நாம் கேட்டிருப்போம்.


எது நமது சொந்த ஊர்? பிறந்த ஊரா? அல்லது நாம் தற்போது வாழும் ஊரா? என்ற குழப்பம் அனைவருக்குமே உண்டு. அதே குழப்பத்தில்தான் பேடிங்க்டன் கரடியும் தவித்துக்கொண்டிருக்கும்.


பேடிங்க்டன் தனது கரடி சொந்தங்களுடன் பெருவில்தான் தங்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்க்க, இங்கிலாந்துதான் தனது சொந்த ஊரென பேடிங்க்டன் முடிவெடுக்கும். ஏன் தெரியுமா?


ஏனென்றால், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்கிறது பேடிங்க்டன். அதனால்தான், உலக அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது பேடிங்க்டன் கரடி.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page