Adolescence web series - 1
- கலகல வகுப்பறை சிவா
- 6 days ago
- 2 min read

Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.
'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார்.
சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது.
வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம்.
வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது.
நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம்.
குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம்.
வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம்.
Adolescence
பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன.
ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி.
'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள்.
அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார்.
"நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான்.
இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும்.
13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந்தது என்ன?
(தொடரும்)
Comments