top of page

ஏன் பிறந்தோம் - 2

  • Writer: உதயசங்கர்
    உதயசங்கர்
  • May 15
  • 2 min read


சிந்திக்கும் ஆற்றல் எனறால் என்ன?


முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுதல். அதாவது வேப்பமரம் என்ற ஒன்றை அறிந்து கொள்வது முதல் செயல். அத்துடன் அதைப் போன்றே வடிவத்துடன் இருக்கக்கூடியவை புளியமரம், மருதமரம், கொய்யாமரம், முருங்கைமரம், ஆலமரம், அரசமரம். இவை அனைத்தும் மரங்கள் என்று புரிந்துகொள்வது இரண்டாவது செயல்.


ஒன்றை ஒன்றுடன் இணைத்துப் பார்ப்பதும் வேறுபடுத்திப் பார்ப்பதும்தான் அறிதல். அறிதலின் வழியே ஒரு பொதுக்கருத்து உருவாகிறது. அதாவது மரம் என்கிற பொதுவான ஒன்று இருக்கிறது. அதற்குள் தனித்தனி மரங்களும் இருக்கின்றன. அதாவது மரத்துக்குள் வேப்பமரம், புளியமரம் என்ற தனித்த மரங்களும் அடங்கும். அதேபோல் ஒரு பொதுக்கருத்துக்குள், தனித்த கருத்துகளும் இருக்கும்.


ஒன்றை அறிதல் என்பது முதல் படி. அறிந்ததுடன் வேறுபட்ட ஒன்றை இணைப்பது இரண்டாவது படி.


ஆனால், இப்போது நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதாக இந்தச் செயல் மனித மூளைக்குள் நடந்துவிடவில்லை. மனித மூளையில் சிந்தனை என்ற வேதிவினை நடைபெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின.


மனிதன் மட்டும்தான் சிந்திக்கின்றானா?

இல்லை.


இயற்கையில் உயிருள்ள அனைத்தும் மூளையை-நரம்புத்தொகுப்பைக் கொண்டுள்ளன.


தாவரங்களோ, விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, எந்த உயிராக இருந்தாலும் தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நரம்புகளை, வேதித் தூதுவர்களை, மின் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. தாம் நினைப்பதை வெளிப்படுத்துவதற்கு வேறுவேறு வழிகளைத் தங்களுடைய பரிணாமவளர்ச்சியில் அவை கண்டுபிடித்திருக்கின்றன.


என்ன மாதிரியான வழிகள் என்பதைப் பார்ப்போமா?


கண்ணுக்குத் தெரிந்த உயிர்கள் அனைத்துமே புலன்களின் வழியே உயிர்வாழ்பவை.


உடல் என்கிற ஒன்றின் வழியே உயிருடன் இருப்பவை.


அப்படி என்றால் உயிர் என்றால் என்ன என்கிற கேள்வி வருகிறதா?


உயிர் என்றால் உடலை இயக்குகிற சக்தி. அந்த சக்தி உடலின் மூலமாகவே உருவாக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பது. பின்னிப்பிணைந்திருப்பது என்று சொல்லலாம்.


ஆச்சரியமாக இருக்கிறதா? சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் உயிர் ஒரு ஒளியைப் போலத் தனியே பிரிந்து செல்வதாகக் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள்.


அது எல்லாம் கப்சா! பொய்!


உயிர் என்கிற ஒன்று தனியே கிடையாது.


அது உடலை இயக்கும் ஒரு சக்தி. உடல் இயங்குவதற்காக உருவான சக்தி.

சரியா?


அதனால் உடல் இல்லாத உயிர் கிடையாது.


எளிய பாசியிலிருந்து மனிதர்கள் வரை உடலும் உயிரும் இணைந்து இயங்குவதன் மூலமே வாழ்கிறார்கள்.


உயிர்ப்பட்டியலில் மிகக்குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் தன்னுடைய உடலின் வழியே செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இயற்கைச் சூழல்தான் அந்த உயிர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.


அவை உயிர் வாழ்வது சார்ந்தும் தன் இனத்தைப் பெருக்குவது சார்ந்தும் மட்டுமே செயல்படுகின்றன.


அது இயற்கையின் எழுதப்படாத விதி. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான விதி.


எனவேதான் சாதகமான சூழல் இல்லாதபோது குறைந்த புலனுணர்வு கொண்ட உயிர்கள் அமைதியாக மடிந்துவிடுகின்றன. மறைந்து விடுவதில்லை. தன் விதைகளை அல்லது உடலை உறக்கநிலையில் பாதுகாத்து வைத்துக்கொள்கின்றன. மீண்டும் சாதகமான சூழல் வரும்போது, அவை உயிர்த்தெழுகின்றன.


பாசி, புல், பூச்சிகள், புழுக்கள் என்று இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லமுடியும். சில தாவரங்கள் இயற்கையில் உயிர் பிழைத்திருக்க பலவிதமான சிக்கலான திட்டங்களை வைத்திருக்கின்றன.


உதாரணத்துக்கு பூச்சிகளைச் சாப்பிடும் தாவரம், பூச்சிகள் சாப்பிட்டுவிடாமல் இருக்க ஒரு வேதிப்பொருளை சுரக்கும் தாவரம், தொட்டால் சுருங்கிக் கொள்ளும் தாவரம் என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.


நீங்களும்கூட வேறு என்னென்ன தாவரங்கள் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்துபாருங்களேன்.


தான் வாழ்வதற்காக இயற்கையுடன் அனுசரித்துச் செல்கின்றன தாவரங்கள். அதேநேரம் தனக்கென தனியான குணாதிசயங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இந்த அளவுக்குத்தான் அவற்றின் செயல்பாடு/சிந்தனை இருக்கிறது.


உயிர் வாழ்வதைத் தவிர வேறு சிந்தனை கிடையாது. (அதுவும் அதன் கையில் நூறு சதவீதம் கிடையாது.)


இதுதான் அதன் தத்துவம்.


அந்தச் சிந்தனையின் எல்லைகள் மிகக்குறுகியவை. அவை இயற்கையுடன் பிணைக்கப்பட்டவை. இயற்கையைப் பிரதிபலிப்பவை.


புரியலையே!


ஆமாம். கொஞ்சம் கடினம்தான்.


மூளையின் நுட்பமான, சிக்கலான வேதிச் செயல்பாடுதான் சிந்தனை. இந்த அளவுக்கு இப்போது புரிந்துகொண்டால் போதும்.


என்ன விளையாடுகிறீர்களா? எங்களுக்கு வேறு வேலை கிடையாதா என்று கோபம் வருகிறதா?


சரி, சரி. கொஞ்சம் எளிமையாகச் சொல்லமுடியுமா என்று பார்ப்போம்.


உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட செடியின் இலைகளைக் கிள்ளித் துண்டாக்கிக்கொண்டே இருந்தால், அந்த இலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் அதிர்வலைகள் செடியின் வேர் முதல் நுனிவரை சென்று சேர்கின்றன. அந்த அதிர்வலைகள்தான் ஞாபகப் பதிவாகிறது. அந்த ஞாபகப்பதிவுகள் யாராவது அந்தச் செடியைத் தொட்டாலே பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது. அது அதிர்ந்து நடுங்குகிறது. மின்காந்த அலைகளின் வழியே எதிர்வினை புரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.


அப்படி என்றால் விலங்குகள், பூச்சிகள், பறவைகள், புழுக்கள் எப்படிச் சிந்திக்கின்றன?


( தத்துவம் அறிவோம் )




コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
bottom of page