சவரக்கத்தி
- ஹேம பிரபா

- May 15
- 2 min read

மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல பிளேடுகளை (blades), இன்றைய குழந்தைகள் கண்டிருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்..
இரு புறமும் கூர்முனை கொண்ட பிளேடுகள் இவை. பள்ளியில் பென்சிலை கூர்ப்படுத்த கருவி இல்லையென்றாலும், வீட்டில் உள்ள ஆண்கள் சவரம் செய்வதென்றாலும் இந்த பிளேடுகள்தான் உதவும். வேண்டுதலுக்காகக் கோவிலுக்குப் போனால் கூட, இந்த பிளேடுகளில் ஒரு பாதியை வைத்து, தலைமுடியை மொட்டையடித்துவிடுவார்கள்.
தற்போது, சவரம் செய்பவர்கள் எது மாதிரியான சவரக்கத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? இதோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு வகையான சவரக்கத்தியாக இருக்கலாம்.

இதுபோன்ற ஒரு சவரக்கத்தி உங்கள் வீட்டில் இருந்தாலோ, இல்லை அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் இருந்தாலோ, அதை எடுத்துப் பாருங்கள். ஒரு பிளேடுக்கு பதிலாக மூன்று பிளேடுகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது அல்லவா?
ஒரேயொரு பிளேடு வைத்து, சவரம் செய்து வந்தவர்கள், இப்படி மூன்று பிளேடு கொண்ட சவரக்கத்திக்கு மாறியது எப்படி?
“ஒன்னு வாங்கினா ரெண்டு இலவசம்” அப்படி இப்படியென்று சும்மாவெல்லாம் இந்த மாற்றம் வரவில்லை. இதற்குப் பின்னால், பல கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வு இருக்கிறது.
கிங் கேம்ப் கில்லட் (King Camp Gillette) என்பவர் கண்டுபிடித்த 1901ஆம் ஆண்டு சவரக்கத்தியானது. இதற்கு ஆங்கிலத்தில் ‘safety razor’ என்று பெயர். ஒரு பிளேடை இரண்டு புறமும் பாதுகாப்புக்கூறுகள் கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் இந்தப் பெயர். இந்தக் கண்டுபிடிப்பினை முன்வைத்து, கில்லட் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான சவரக்கத்திகள் விற்கப்பட்டு, இன்று நாம் அன்றாடம் புழங்கக்கூடிய பெயராக கில்லட் மாறியுள்ளது.
சாதாரண கத்திரிக்கோல் அல்லது ஏதோ சிறு சிறு கருவிகளின் துணைகொண்டு சவரம் செய்துவந்த மக்கள், கில்லட்டின் சவரக்கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஒரு கண்டுபிடிப்பின் மூலம், லாபம் வந்தது. அதோடு நின்றுவிடலாம் என்று கில்லட் நிறுவனம் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தது.

1971ஆம் ஆண்டு, “Trac II” எனப்படும் ஒரு ஒரே உறையில் இரண்டு பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகளை அறிமுகப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இரண்டு பிளேடுகள் எதற்கு என்பதற்கும் அவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது.
முதல் பிளேடு, முடியை தோலிலிருந்து சற்றே வெளியே இழுக்கும். இரண்டாவது கத்தி அந்த இழுக்கப்பட்ட முடியை அதன் வேர் அருகேவே வெட்டிவிடும் - அது மீண்டும் உள்ளே நுழைவதற்குள்.
விளைவு? மிருதுவான சவரம்!
இந்த யோசனையை “பின்னிடைவு விளைவு” (hysteresis effect) என்று அழைத்தனர். ஆனால் அர்த்தம் சுலபம்: ஒரு கத்தி இழுக்கிறது, அடுத்தது வெட்டுகிறது.
‘சவர’ உலகில் இதுவே பெரும் புரட்சி என்றால், அத்தோடு நின்றுவிடவில்லை கில்லட் நிறுவனம். ஒன்றுக்கு பதிலாக, இரண்டு பிளேடுகளை வைத்ததற்கே, இவ்வளவு மிருதுவான சவரம் கிடைக்கிறதென்றால், இன்னும் அதிக எண்ணிக்கையில் பிளேடுகளைக் கொண்டு சவரக்கத்திகளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தனர்.
யோசனை மட்டும் போதுமா? ‘செயல்’ அல்லவா முக்கியம்!
இதற்காக 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
தற்சமயத்தில், 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது சுமார் 6,262.5 கோடி ரூபாய் ஆகும். இந்தக் காசில் பத்து ‘மங்கள்யான்’களையாவது நம்மால் தயாரிக்க முடியும்.
சின்ன சவரக்கத்திக்கு அவ்வளவு பெரிய தொகை ஏன் தேவைப்பட்டது?
மூன்று பிளேடுகளை எந்தளவு தூரத்தில் பொறுத்த வேண்டும்; எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்; எந்த மாதிரியான உலோகக்கலவை தேவை; பிளேடுகள் எவ்வளவு கூர்மையில் இருக்க வேண்டும்; எந்த கோணத்தில் பிளேடுகளைப் பொறுத்த வேண்டும். இப்படி நுட்பமான கேள்விகள் பலவற்றிற்கும் பதில் வேண்டும்.
பத்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் “Mach 3” எனப்படும் சவரக்கத்திகள். மூன்று பிளேடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த கத்திகள். அதற்குப்பின்பு, நான்கு ஐந்து என்று பல பிளேடுகளைக் கொண்ட சவரக்கத்திகள் வடிவமைக்கப்பட்டுவிட்டாலும், “Mach 3” என்பது தனித்துவமாக நிலைத்துவிட்டது.
ஒரு சின்ன கத்திக்கு எத்தனை பெரிய வேலை!!!




சிறப்பான, சுருக்கமான விளக்கம்.
அருமை...!!