இயலில் தேடலாம்!
337 results found with an empty search
- குட்டி சுட்டி பூனை - ராணி குணசீலி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி மிரண்டு ஓடும் பூனைக்குட்டி குட்டிக்கரணம் போட்டு தான் குறும்பு செய்யும் பூனைக்குட்டி கண்ணை உருட்டி உருட்டியே காலைச் சுற்றும் பூனைக்குட்டி வாலை ஆட்டும் பூனைக்குட்டி பாலை குடிக்கும் பூனைக்குட்டி தாவி மடியில் ஏறியே தலையைச் சாய்க்கும் பூனைக்குட்டி அடுக்கி வைத்த பொருட்களை இழுத்துப் போடும் பூனைக்குட்டி
- பதின்பருவ வயதினரின் உளவியல் சிக்கல்கள்
பச்சிளம் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை மனித வாழ்க்கையை ஏழு பருவங்களாகப் பிரித்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இவற்றில் மிக முக்கியமான பருவமானது பதின்பருவம். ஒரு நபரின் ஆளுமையையும் அடையாளத்தையும் அவரது வாழ்க்கையையும் முடிவு செய்வதே பதின்பருவம்தான். உடல்ரீதியகவும் மனரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் பருவமும் அதுதான். ஆகவே அப்பருவத்தில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பே. பதின்வயதில் ஏற்படும் சிக்கல்களை இரண்டு வகைகளாக விளக்கலாம். முதலாவது பொதுவாக நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு எல்லாக் காலகட்டத்திலும் பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் . இரண்டாவது குறிப்பாக இந்த டிஜிட்டல், கணினியுகத்துக்கே உரிய சிக்கல்கள். முதலில் பொதுவான சிக்கல்களை எடுத்துக் கொள்ளுவோம். பதின்பருவத்தில் உடல்ரீதியாகப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவராக மாறும் ஒரு இடைநிலை (transition) பருவமாகவும் இரண்டுங்கெட்டான் பருவமாகவும் பதின்பருவம் இருக்கிறது. உடல்ரீதியாக மிக அதிக வளர்ச்சி இக்காலகட்டத்தில் ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேகம் அதிகமாக இருக்கும் பருவம். குழந்தையாக இருக்கும்போது தான் என்ற அடையாளம் தனித்தன்மையுடைய தேவைகள் எதுவுமில்லாமல் பெற்றோர்களின் நேரடிப் பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள். பெரும்பாலான தேவைகளைப் பெற்றோரே குறிப்பறிந்து தீர்த்து வைப்பார்கள். குழந்தைகள் விரும்புகின்றனவோ இல்லையோ குழந்தைகளின் விருப்பங்கள் இவையாகத்தான் இருக்கும் எனப் பெற்றோர்களே அனுமானித்து நடப்பார்கள். பதின்வயதில் முதன் முதலாகத் தான் என்ற ஆளுமை உருவாகத் தொடங்குகிறது. இதுதான் என் உடல், இதுதான் நான், இவைதான் என் தேவைகள் எனத் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யத் தொடங்குகின்றனர் இப்பருவத்தினர். இந்த ஆளுமையை உருவாக்குவதில் குடும்பம், நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள், சமூகம் என எல்லாவற்றுக்கும் பங்கு இருக்கிறது. உடல்ரீதியாகத் தன் நிறம், உயரம், பருமன், முடி போன்றவை குறித்துப் பெருமிதமோ அவமானமோ ஏற்படத் தொடங்குவது இக்காலகட்டத்தில்தான். நகைச்சுவையாக ஒன்றைச் சொல்வார்கள் – “மனிதன் தன் வாழ்வின் முதல் இருபது வருடங்கள் தான் பெரியவன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான். பின் அடுத்த அறுபது வருடங்கள் தான் இளைஞன்தான் என நிரூபிக்கப் போராடுகிறான்” என்பார்கள். எந்த யுகத்திலும் பதின்வயதினரின் தலையாய பிரச்சனையே தான் பெரியவன் என்பதை நிரூபிப்பதுதான். கவனச் சிதறல் என்பது மிக அதிகமாக இருப்பது இந்தப் பருவத்தில்தான். உடலிலும் உள்ளத்திலும் ஆற்றல் பொங்கி வழிவதால் கண்ணில் படும் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு அதீதமாக இருக்கும் இக்காலகட்டத்தில். புதிதாக எதையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பு அதிகம் இருக்கும். அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது மூளையின் முன்பகுதி (Frontal Lobe) தான் நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து இது தீமை, இதைச் செய்யக் கூடாது என விலக்குகிறது. இருபது இருபத்தி ஐந்து வயதுக்குப் பின்னர்தான் அந்தப் பகுதி வளர்ச்சியில் முழுமை அடைகிறது. ஆகவே பதின்வயதில் ஆபத்துகளை சந்திக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல்” என அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள். பைக்கில் வேகமாகச் செல்வது தொடங்கி, சிறு சிறு சட்ட மீறல்கள் தொடங்கி போதைப் பொருட்களை முயற்சி செய்து பார்ப்பது என எல்லாமே இந்தப் பருவத்தில் நடக்கும். பதின்வயதின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் கவனச் சிதறல். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது. புறத் தூண்டுதல்களைக் கண்டால் உடனே கவனம் சிதறும். விளையாட்டுகள் போன்ற விஷயங்களில் மனம் அதிகமாக திசை திரும்பும். குறிப்பாக கல்வி கற்க வேண்டிய மிக முக்கியமான பருவத்தில் கவனச் சிதறல் அதிகமாக இருப்பதால் எதிர்காலமே பாதிக்கப் படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. அடையாளச் சிக்கல் (Identity crisis) என்பது இந்தப் பருவத்தில்தான் வருகிறது எனப் பார்த்தோம். சிலசமயங்களில் ‘நீ இன்னும் குழந்தை இல்லை. பொறுப்பாக இரு’ என்றும் சில சமயங்களில் ‘இதெல்லாம் பெரியவர்கள் விவகாரம். உனக்குச் சம்பந்தமில்லை’ என்றும் அடக்கப் படுவதில் தொடங்குகிறது இந்த அடையாளக் குழப்பம். நண்பர்கள் தரும் அழுத்தம் (Peer Pressure) இந்தப் பருவத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஒரு முக்கியமான காரணி. நண்பர்களிடம் ஹீரோ போல் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியதால் இந்த மாதிரி முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது தொடங்கி ஐ போன் வேண்டும், பைக் வேண்டும் என்பது வரை தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில விஷயங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் சிக்கல்களை உண்டாக்குகிறது. நண்பர்கள் தரும் அழுத்தம் மாதிரியே நாயகன் வழிபாடும் (Hero Worship) இக்கால கட்டத்தில் சிக்கல்களை உருவாக்குகின்றன. பத்து வயது வரை பெற்றோர்கள் சொன்னதை அப்படியே செய்துவந்தவர்கள் அவர்கள் செய்வதைக் கட்டுப்படுத்துவதாக உணரத் தொடங்கி தன் சுதந்திரத்தைக் காப்பாற்ற அதிலிருந்து வெளியே வர நினைக்கும் போது ஒரு முன்மாதிரியாக திரைப்பட, அரசியல், விளையாட்டு பிரபலங்களைக் கண்டடைகிறார்கள். நிறைகுறைகளை அலசி ஆராயாமல் நூறு சதவிகித வழிபாடு அல்லது நூறு சதவிகித தூற்றல் என்ற கண்மூடித்தனமான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். அடையாளச் சிக்கல்களின் ஒரு பகுதி பதின்வயதில் ஏற்படும் பாலின அடையாளம். உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிய அறியாமை, எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு போன்றவை இக்காலகட்டத்தில் முக்கியமானவை. சில சமயங்களில் சூழலின் தாக்கத்தினாலும் உடல்ரீதியான மாற்றங்களாலும் பாலின அடையாளம் பாலின ஈர்ப்பு போன்றவைகளில் மாறுதல்கள் ஏற்படலாம். தான் ஆணா பெண்ணா, தனக்கு யார்மீது ஈர்ப்பிருக்கிறது என்பதிலெல்லாம் குழப்பங்கள் வரக்கூடும். இவைகள் எல்லாம் எக்காலத்திலுமே பதின் வயதினருக்கு இருக்கும் பிரச்சனைகள். குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தச் சிக்கல்கள் வேறு பரிமாணங்களை எட்டி இருக்கின்றன. கணினி , செல்போன் யுகத்தின் மிகப் பெரிய பிரச்சனையே எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிக எண்ணிக்கையில் கிடைப்பது. Problem of plenty என்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களால் கவனச் சிதறல் (Digital Distraction) அதிகமாக ஏற்படுகிறது. புதிது புதிதாக விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும் விஷயங்களால் இருபது நொடிகளுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றன என்கின்றன ஆய்வுகள். இதனால் நான்கு வரிகள் கூட சேர்ந்தாற்போல் படிக்க முடியாமல் போகிறது . இது இந்த காலகட்டத்தில் எல்லோரும் எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் என்றாலும் பதின்வயதினருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் புத்தகங்கள் வாசிப்பது குறைந்து காணொளிக் காட்சிகளாகப் பார்ப்பது அதிகரித்து வருவது நுண்ணறிவுத்திறன்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. அது போலவே உடலுழைப்பின் தேவை வெகுவாகக் குறைவதால் போதிய உடற்பயிற்சியின்மை மனதிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பொதுவாகவே போட்டி மனப்பான்மையால் கல்வி என்பது ரசித்துக் கற்கும் விஷயமாக இல்லாமல் மதிப்பெண்கள் பெற உதவும் விஷயமாகவே மாறிவிட்டதால் ஏற்படும் அழுத்தம் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். தொழில்நுட்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றன. இதற்குத் தக்கவாறு நமது திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதே போல் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) ஒரு துறையில் அதீத திறமைசாலியாக இருந்தால் மட்டுமே இனி பிழைக்க முடியும் . சராசரிகளின் காலம் முடிந்து விட்டது (The average is over ) என்கிறார்கள். இதுபோன்ற சிக்கல்களை உணர்ந்து கொள்ள நமக்கு விழிப்புணர்வும், பதின்வயதினரும் இயல்பாக உரையாட வெளிப்படைத்தன்மையும் தேவை. உடற்பயிற்சி, இசை போன்ற நல்ல பொழுதுபோக்குகளில் மனதினைச் செலுத்துவதும் அவசியமாகிறது
- Adolescence web series - 3
ஜேமி கதறி அழுகிறான். அவனது அப்பா செய்வதறியாது திகைத்து இருக்கிறார். எவ்வளவு பெரிய குற்றம்! தன் மகன் ஒரு கொலையைச் செய்திருக்கிறான். சம வயதுப் பெண் குழந்தையைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறான். வெடித்து அழுகிறார். மகனைக் கட்டிக் கொண்டு கதறுகிறார். ஏன்? இப்படி? என வார்த்தைகள் சிதறுகின்றன. நான் எதுவும் செய்யவில்லை என்று ஜேமி அழுகிறான். எல்லாம் முடிந்தது என்று வழக்கறிஞர் அமர்ந்திருக்கிறார். விசாரணை முடிந்தது. ஆதாரங்களின் படி கொலையாளி யார் என்பது உறுதியாகிவிட்டது. 'கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி எங்கே?' இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டால் போதும். விசாரணை முழுமை அடைந்துவிடும். இன்ஸ்பெக்டர் பாஸ்கம், துணை ஆய்வாளரரான பிராங்க் உடன் ஜேமி, கேட்டி ஆகியோர் படித்த பள்ளிக்குச் செல்கிறார். இன்ஸ்பெக்டரின் மகன் ஆதம் அங்குதான் பத்தாம் வகுப்பு படிக்கிறான். என் வேலைக்காக உன் பள்ளிக்கு வருகிறேன். என்னால் உனக்கு ஏதும் தொந்தரவு வராது. என்ற செய்தியை மகனுக்கு அனுப்பிவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார், பாஸ்கம். பள்ளிக்கூட வாசலில் கேட்டியின் படங்கள், பூங்கொத்துகள், மெழுகுவர்த்திகள் நிறைந்திருக்கின்றன. காவல் துறையினர் இருவரையும் பள்ளி முதல்வர் அழைத்துச் செல்கிறார். "இப்பதான் இரங்கல் கூட்டம் முடிஞ்சது. மாணவர்கள் பலரும் கோபமா இருக்காங்க.” என்று சொல்கிறார். மூவரும் பள்ளிக்குள் செல்கிறார்கள். ஜேமியின் நண்பர்கள் ரயனும் டாமியும் பேசிக்கொள்கிறார்கள். போலீஸ் வந்திருப்பதாக ரயன் சொல்கிறான். "கண்டிப்பா வருவாங்க. எல்லா இடத்திலேயேயும் இருக்காங்க." என்று மெதுவாக டாமி சொல்கிறான். 'எனக்குப் பிடிக்கல' என்று டாமி சொல்கிறான். ரயனின் முகத்தில் பதற்றம். மெதுவாகப் பேசுகிறான். டாமி அலட்சியமாகப் பேசுகிறான். ஜேமியிடம் பேச முடியாத நிலை. இருவரின் வீட்டுக்கும் போலீஸ் வந்து விசாரித்ததைப் பகிர்ந்து கொள்கின்றனர். கத்தியைப்பற்றி ஏதாவது கேட்டார்களா என்று டாமி கேட்கிறான். ஆமாம் என்கிறான் ரயன். என் அப்பா, யாரிடமும் எதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறார் என்று ரயன் சொல்கிறான். பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று இருவரும் பேசிக்கொள்கிறார்கள். காவல் ஆய்வாளர்கள் முதலில் கேட்டியின் நெருங்கிய தோழியான ஜேட் என்ற மாணவியைச் சந்திக்கின்றனர். ஜேட் கோபப்படுகிறாள். "என்னிடம் ஏன் கேட்கறீங்க? உங்க மகனும் இங்கு தானே படிக்கிறான். அவனிடம் கேளுங்க. அவன் பார்க்க நல்லாவே இருக்க மாட்டான்." என்று கத்துகிறாள். ஆசிரியை அவளைச் சமாதானம் செய்ய முயல்கிறார். தொடர்ந்து என்ன கேட்டாலும் கோபப்படுகிறாள். கேட்டி, ஜேமி இருவருக்கும் இடையே நட்பு ஏதுமில்லை என்கிறாள். 'இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருவருக்கும் நட்பு இருப்பதாகத் தெரிகிறதே!' என்று பிராங்க் கேட்டதற்கு அதிக கோபப்படுகிறாள். உங்களோடு எதுவும் பேச முடியாது என்று சொல்லி அறையை விட்டு வெளியேறுகிறாள். ஜேமி, கேட்டியின் வகுப்பறை. எட்டாம் வகுப்பு G பிரிவு. வகுப்பறைக் கதவின் அருகே சொல்லும்போதே உள்ளிருந்து கடும் கூச்சல் கேட்கிறது. மூவரும் உள்ளே நுழைகிறார்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர் யாருமில்லை. கலவர பூமியாக இருக்கிறது. ஆசிரியை, மாணவர் அனைவரையும் அமைதிப்படுத்துகிறார் . காவலர்களை அறிமுகப்படுத்துகிறார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வகுப்பு ஆசிரியர் வருகிறார். பதற்றமும் பயமும் நிறைந்த ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்குச் சொல்லுங்க. எனது செல்பேசி எண்ணை உங்கள் ஆசிரியரிடம் கொடுக்கிறேன். என்று பாஸ்கம் சொல்கிறார். ஜேமியைக் கைது பண்ணிட்டீங்க. நிஜமாவே உங்களிடம் வீடியோ இருக்கா? என்று ஒரு மாணவன் கேட்கிறான். தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்துகொண்டே இருக்கிறான். ரயனும் டாமியும் அமைதியாக இருக்கின்றனர். காவல் அலுவலர்களுடன் ஆசிரியை எட்டாம் வகுப்பை விட்டு வெளியே வருகிறார். கேலியாகப் பேசிக்கொண்டே இருந்த மாணவனிடம், 'படிப்பில் கவனம் வை' என்று சொல்கிறார். வகுப்பறை விட்டு வெளியே வந்த காவலர்கள் இருவரும் ஆசுவாசாசமாகச் சற்றே நிற்கிறார்கள். எல்லா வகுப்பறைகளிலும் கடுமையான நாற்றம் இருக்கிறது. என்னால் தாங்கவே முடியவில்லை என்று பிராங்க் சொல்கிறார். பாஸ்கம் அதை ஆமோதிக்கிறார். வகுப்பறைகளில் மாணவர்கள் ஏதாவது சாப்பிடுகிறார்கள். அதிகமாகச் சத்தமிடுகிறார்கள். ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தொடரின் முதல் பாகத்தில் காவல் நிலைய நடைமுறைகள் காட்டப்பட்டது போல இரண்டாம் பாகத்தில் தற்காலப் பள்ளி நடைமுறைகள் காட்டப்படுகின்றன. பள்ளிக்குள் பதற்றம் நிறைந்திருப்பதாகவே காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் அதிகப் பதற்றத்துடன் இருக்கிறார்கள். ஆங்காங்கே சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்யும் காட்சிகள் வருகின்றன. செல்பேசியில் ரீல்ஸ் எடுக்கும் மாணவ மாணவியரை ' வகுப்புக்குப் போங்க!' என்று ஆசிரியை சொன்னதுமே 'வாயை மூடுங்க மிஸ்!' என்கிறார்கள். எட்டாம் வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் கேலி செய்வார்கள் என்று சில காட்சிகள் உணர்த்துகின்றன. இன்றைய சூழலில் வளரிம்பருவ வகுப்பறையை எப்படிக் கையாளுவது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரச்சினையாக இருக்கிறது. பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகளைக் கலந்துரையாடிச் செயல்பாடுகளை உருவாக்குவதே இன்றைய அவசரத் தேவை. பாஸ்கம்மின் மகன் ஆதம் எப்போதும் பயம் நிறைந்த முகத்துடனேயே இருக்கிறான். 'அப்பா, இன்று கடுமையான வயிற்று வலி. நான் பள்ளிக்கு லீவு போடவா?' என்று ஆதம் அனுப்பிய குரல் பதிவுடன் தான் Adolescence தொடர் தொடங்குகிறது. பள்ளிக்குள் ஆதம் சக மாணவர்களால் கடுமையாகக் கேலி செய்யப்படுகிறான். கறுப்பினத்தவன் என்பதால் நிறவெறியும் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. உணவு நேரத்தில் குப்பைகளை அவனது தட்டில் போடுவது, பணம் கேட்டு மிரட்டுவது என்று ஆதம் சக மாணவர்களால் துன்புறுத்தப்படுகிறான். ஆதம் பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவனது வகுப்பறைக்கு காவல் அலுவலர்கள் செல்கிறார்கள். ஆசிரியர் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இவர் நம் ஆதமின் அப்பா என்றும் சொல்கிறார். உடனே பின்னால் இருந்த மாணவன் 'ஆதம்' என்ற சத்தத்துடன் குரங்கு போல ஆதமின் காதருகே உறுமுகிறான். ஆசிரியர் எச்சரித்த போதும் அதை அலட்சியம் செய்தபடி மீண்டும் உறுமுகிறான். ஆசிரியர், சத்தமாக அவனைக் கண்டிக்கிறார். பிறகு என் அறைக்கு வா என்றும் சொல்கிறார். அவனது செய்கை தவறானது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பாஸ்கமிடம் கூறுகிறார். நடந்த அசம்பாவிதம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பாஸ்கம் சொல்லும்போதே தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. எங்கும் பதற்றம். சத்தம் அதிகரிக்கிறது.
- எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி
1. சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்புகளும் போதாமைகளும் என்னென்ன? சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது. ஆனால் அதன் ஆழம் அதே விகிதத்தில் அதிகரிக்கவில்லை என்பது வருத்தத்தையும் தருகிறது. இதையே சமகால சிறார் இலக்கியத்தின் போதாமையாக நான் பார்க்கிறேன். குழந்தைகளுக்குத்தானே நூல் எழுத வேண்டும், எனவே இங்கே குறைந்தபட்ச உழைப்பைப் போட்டு, அதிகபட்சமான புகழ், விருது போன்றவற்றை பெற்றுவிடலாம் என்ற தவறான கற்பிதத்தோடு பலரும் உள்நுழைகின்றனர். அவர்களால் சொந்தமாக எதையும் சொல்ல முடியாதபோது ஏற்கனவே வேரூன்றிய படைப்பாளிகளின் படைப்பிலிருந்தே அங்குமிங்குமாக உருவியெடுத்த உருப்படிகளைக் கொண்டு, துரித உணவுகளைப் போல படைப்புகளைச் சமைத்துப் பரிமாறுகின்றனர். இத்தகைய நூல்களை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாது அதற்கான விளம்பரங்களையும் முழுமூச்சாகச் செய்து, சிறார் இலக்கியத்தின் மேற்பரப்பை ஆகாயத் தாமரை போல மூடுகிறார்கள் என்பதே இப்போதைய சிறார் இலக்கியத்தின் முதன்மையான சிக்கல். 2. இன்றைய சிறார் இலக்கியத்தில் அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் இருக்கிறதா? பிறமொழிப் படைப்புகளோடு ஒப்பிடுகையில், அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லை என்பதே உண்மை. ஒரு படைப்பில் ஒரு குறிப்பிட்ட பின்னணியைச் சார்ந்த அல்லது வகைமையை சேர்ந்த குழந்தைக்கான பிரதிநிதித்துவம் என்பது இரு வகையில் இருக்கலாம். ஒன்று, அந்தக் குழந்தைகளின் சிக்கல்களும் சிறப்புகளும் விரிவாகப் பேசப்படலாம். அல்லது பொதுவானதொரு படைப்பில் தானும் இடம்பெறுவதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கதையில் இரு மதத்துக் குழந்தைகளின் ஒற்றுமை, உணர்வு பூர்வமான நட்பு போன்றவை பேசப்படலாம். அல்லது ஒரு சாகசக் கதையில் இடம் பெறும் நண்பர் குழுவில் எல்லா மதத்துக் குழந்தைகளும் இடம் பெறுவதாகக் காட்டலாம். என்னுடைய ஆமை காட்டிய அற்புத உலகம் போன்ற சாகசக் கதைகளில் இடம் பெறும் நண்பர் குழுவில் மும்மதப் பெயர் கொண்ட குழந்தைகளும் உண்டு. அதே போல் எனது பெரும்பாலான கதைகளில் மாற்றுத் திறன் குழந்தைகளும் இடம் பெறுவர். சந்துருவுக்கு என்ன ஆச்சு, துலக்கம் போன்ற மாற்றுத் திறன் குழந்தைகளின் பிரத்யேக சிக்கல்களைப் பேசும் கதைகளும் என் படைப்புலகில் உண்டு. எனவே இருவிதமாகவும் எல்லா வகைக் குழந்தைகளும் இலக்கியத்தில் இடம் பெறுவதை படைப்பாளிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 3. சமகாலச் சிறார் இலக்கியத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும்? முந்தைய இரு கேள்விகளுக்கான எனது விடைகளையும் சேர்த்தாலே இந்தக் கேள்விக்கான விடை வந்துவிடும். சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகரிப்பதைப் போலவே அதன் ஆழமும் அதிகரித்தாக வேண்டும். அதாவது வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் படைப்பாளிகளும், அவர்களது உலகின் நுட்பமான பேசுபொருட்களை சிறார் இலக்கியத்தில் படைப்பாக மாற்ற வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் உலகில் நாம் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும். சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் இருக்கும் குழந்தைகளுக்கான பிரதிநிதித்துவமும் நம் படைப்புகளில் இருந்தே தீர வேண்டும். வேறுபட்ட பின்னணி கொண்ட குழந்தைகள் படைப்புகளில் உலாவும்போது, வாசிக்கும் அதே பின்னணி கொண்ட குழந்தைக்கு அது ஒரு கூடுதல் மகிழ்வைத் தந்து, தன்னை அப்படைப்போடு இணைத்துக் கொள்ள உதவும். அதே நேரம் மற்ற பின்னணிகளில் உள்ள குழந்தைகளுக்கு, பிற குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலையும் தர முடியும். இதுவே அக்குழந்தைகளுக்கு பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனை(Empathy) கூர்மைப்படுத்தி, குடிமைப் பண்பு கொண்ட ஒரு பண்பட்ட சமூக உறுப்பினராக வளர்த்தெடுக்கும். 4. கடந்த ஐந்தாண்டுகளில் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்வூட்டுகிறது. ஆனால் அதே நேரம் மேலே நாம் பேசியிருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய தரமான படைப்புகள் மிக அரிதாகத்தான் வந்திருக்கின்றன. நாம் போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதே என் எண்ணம். 5. சிறார் இலக்கியம் மரப்பாச்சி சொன்ன ரகசியத்துக்கு முன் மரப்பாச்சி சொன்ன ரகசியத்துக்குப் பின் எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பதை விடவும், வாசிப்பாளர்களிடம் அந்நூல் ஏற்படுத்தியுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை பல்வேறு எதிர்வினைகள் மூலம் உணர்ந்து வருகிறேன். வேதாளம் தோளில் தொங்குவது, தெனாலி ராமன்/பீர்பால் போன்ற விதூஷகர்களின் கதைகள் போன்றவை மட்டுமே சிறார் இலக்கியம் என்று எண்ணியிருந்த பல பெற்றோர்களுக்கும், மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலின் அறிமுகம் சென்று சேர்ந்தது. அதன் மூலம் சிறார் இலக்கியத்தில் சமகாலச் சிக்கல்களும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித்தரும் சூழல் உருவானது. தனிப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கித் தந்து வாசிக்கச் செய்வதைப் போலவே, பல்வேறு இடங்களில் இந்நூல் கூட்டு வாசிப்புக்கு உட்படுத்தப்படுவதையும் நெகிழ்வோடு கண்டு வருகிறேன். குறிப்பாக ‘தர்மபுரி வாசிக்கிறது’ எனும் நிகழ்வில் மூவாயிரம் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இந்நூல் சென்று சேர்ந்ததையும், அத்தனை குழந்தைகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அந்நூலை வாசித்ததையும் அருகிலிருந்து பார்க்க நேரிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான, மகிழ்வானதொரு தருணம். அந்த கூட்டு வாசிப்பை முன்னிட்டே அந்நூலின் காப்புரிமையை பொதுவில் வைத்தேன். அதே போல குழந்தை நேய செயல்பாட்டாளர்கள் பலரும் அந்நூலை பல நூறு பிரதிகள் வாங்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தபடியே இருப்பது ஒவ்வொரு முறையும் என்னை நெகிழச் செய்கிறது. நேர்காணல் - உதயசங்கர்
- கமீலாவின் வீரம்
"மேத்யூ மேத்யூ இந்த இலை விழுது பிடி பிடி” எனக் கத்தியது அனா. “இதோ வந்துட்டேன் அனா..” என ஓடியது மேத்யூ.. என்ன பெயரெல்லாம் வித்தியாசமா இருக்குனு பாக்குறீங்களா.. மேத்யூவும் அனாவும் தென் அமெரிக்க காடுகள்ல வாழ்றாங்க. அதான் அந்த பேரு. அவங்க யாருன்னா கேக்குறீங்க? "மேத்யூவும் அனாவும் பூஞ்சை வளர்க்கும் எறும்பு வகையைச் சேர்ந்தவர்கள். இலைவெட்டி எறும்புகள்னு கூட சொல்லலாம். அட வாங்க ஏதோ சொல்லுது மேத்யூ என்ன என்று கேப்போம்" "உன் அளவுக்கு 3 மடங்கு இலைய எடுக்கனும். அல்லது குறைவா" "சரி சரி நீ சொல்றது சரி தான். 3 மடங்க விட அதிகமா எடுக்கக்கூடாது. கண்காணிப்பாளர் சொல்லிருக்காரு" "யாரு அந்த டியாகோ வா?" "ஆமா அவர் தான். எவ்ளோ உயரமா இருக்காருல்ல" என இலையைத் தூக்கிக் கொண்டே கேட்டது அனா. "அவனென்ன உயரம் அவன விட தலைமைக் கண்காணிப்பாளர் கமீலா தான் உயரம்" என எல்லாம் தெரிந்தது போல சொன்னது மேத்யூ. இருவரும் பேசிக் கொண்டே புற்றின் வாயிலுக்கு வந்து விட்டனர். "நல்ல இலைய எடுத்துட்டு வந்தீங்களா?" எனக் கேட்டது காவல் எறும்பு. "அங்க வாசல்ல என்ன டா சத்தம்? வேலைய பாருங்க" என்ற கமீலாவின் குரல் மட்டும் கேட்டது. எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க ஓடினார்கள். மேத்யூவும் அனாவும் இலையைக் கொண்டு போய், புதிய விவசாயப் பகுதியில் வைத்தன. "அட மேத்யூ, அனா வேகமா வந்துட்டீங்களே.. குடுங்க" என இலையை வாங்கிக் கொண்டது விக்டோரியா. அங்கிருந்த விக்டோரியாவும், மற்ற எறும்புகளும் அந்த இலைகளை மென்றன. பின் தம் உமிழ்நீரோடு சேர்த்து ஒரு கலவையை உருவாக்கி ஓரிடத்தில் நிரப்பின. இங்கு தான் இந்த இலைகளின் மீது பூஞ்சை வளரும். அந்த பூஞ்சை தான் எறும்புகளின் உணவு. இந்த பூஞ்சைத் தொகுதி முழுதாக ஆறு மாதங்கள் ஆகும். காவல் எறும்புகள் விவசாய இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அப்போது பரபரப்பாக வந்த இரண்டு காவல் எறும்புகள் டியாகோவைப் பார்த்தன. "பூஞ்சைத் தொகுதி 4567ல் நோய்க் கிருமி தாக்கம் தெரிகிறது மேத்யூ" என்றன. "என்ன நோய்க்கிருமியா? மேத்யூ, அனா என்னோட வாங்க" என அந்தப் பகுதிக்கு விரைந்தது டியாகோ. அங்கே பூஞ்சைகளில் சில இடங்களில் நோய்த்தாக்கம் தெரிந்தது. இதை அப்படியே விட்டால் மொத்த தொகுதியும் வீணாகப் போய்விடும். "அனா நீ போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வா" என கட்டளையிட்டது டியாகோ. விக்டோரியாவும் அவளது கூட்டமும் வந்து சேர்ந்தனர். ."இந்த நோய்ப்பகுதிகளை எல்லாம் அப்புறப்படுத்து" என்றது டியாகோ. நோய் தாக்கின பகுதிகளை அப்புறப்படுத்தி அவற்றை குப்பைப் பகுதியில் சேகரிக்க ஆரம்பித்தார்கள். வேகம் வேகம் என உற்சாகமூட்டியது டியாகோ. காவல் எறும்புகளைக் கூப்பிட்டு பாராட்டவும் மறக்கவில்லை. "வேலை செய்யாம என்ன வேடிக்கை. ஓடு" என்ற கமீலாவின் குரல் எங்கோ துரத்தில் ஒலித்தது. ஓடு ஓடு என அடுத்த இலையை எடுக்க ஓடினர் மேத்யூவும் அனாவும். கமீலா மிகவும் சுறுசுறுப்பாக புற்றின் உள்ளேயும் வெளியேயும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அனைத்து எறும்புகளும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தன. எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றியது. ஆனால் புற்றின் உள்பகுதியில் இவர்களுக்கான ஆபத்து ஒளிந்து இருந்தது. "கமீலா கமீலா அங்கே அங்கே" என பதற்றமாக ஓடி வந்தன லியாவும், ஜேம்ஸூம். இருவரும் கமிலாவைப் போன்ற கண்காணிப்பாளர்கள் தான். "ஏன் என்னாச்சு?" எனக் கேட்டது கமீலா. "நம் இராணி அம்மா வழக்கத்துக்கு மாறா நடந்துக்கறாங்க. ஒரு பூஞ்சைத்தொகுதிக்குள்ள போய் எல்லாத்தையும் சாப்டுறாங்க" "பசிச்சா சாப்ட மாட்டாங்களா? அதுவும் நம்ம இராணியம்மா" எனக் கேட்டது அனா மேத்யூவிடம். இருவரும் அதற்குள் அடுத்த சுற்று இலைகளை எடுத்து வந்திருந்தன. "எனக்கும் ஒன்னும் புரியல. வா இலைய வச்சிட்டு வந்து பாக்கலாம்" என்ற மேத்யூ விக்டோரியாவிடம் இலையைக் கொடுத்து விட்டு நடந்ததைச் சொன்னது. "எந்த பூஞ்சைத் தொகுதில இருக்காங்க?" எனக் கேட்டபடி விரைந்தது கமீலா. அவர்கள் பின்னாலே போனார்கள் மேத்யூவும் அனாவும். டியாகோவும் வந்து விட்டது. "இப்ப நாம எல்லாரும் உணவு எடுக்க வேண்டியது கிழக்குப் பக்கம் இருக்கற 2695வது பூஞ்சைத் தொகுதியில தான" "ஆமா!" "ஆனா இராணி அம்மா மேற்குப்பக்கம் இருக்கற 3874வது தொகுதில போய் சாப்டுட்டு இருக்காங்க. காவல்கார எறும்புகளை எல்லாம் பயமுறுத்தி விரட்டிட்டாங்க" என்றது லியா. "லியா நீ நல்லா பார்த்தயா? அது நம்ம இராணி தானா? ஜேம்ஸ் நீ வலது பக்கம் போய் அங்க இராணி இருக்காங்களானு பாரு" என்றது கமீலா. "என்ன கமீலா சொல்ற? அதான் இராணி மேற்குப்பக்கம் இருக்காங்கனு சொல்றனே" என்றது லியா. "அது போலி இராணியா கூட இருக்கலாம். அதனால நம்ம இராணி இருக்கற இடத்த பார்த்து அவங்கள நாம பாதுகாக்கனும். மேத்யூ நீயும் ஜேம்ஸ் கூட போ" எனக் கட்டளையிட்டது கமீலா. "அனா, நீ காவல்கார எறும்புகள் நிறைய பேர அழைச்சுட்டு வா, டியாகோ நீ என் கூடவே வா" என போருக்குச் செல்வது போல கிளம்பியது கமீலா. கமீலாவின் பாட்டியான மூத்த கண்காணிப்பாளர் எறும்பு அதனிடம் சொல்லி இருக்கிறது. சில நேரங்களில் வேறு இனத்தைச் சேர்ந்த இராணி எறும்புகள் நம் புற்றை ஆக்கிரமிக்க வரும். அவை பூஞ்சைகளைத் தின்னும், இராணி எறும்பை விரட்டி விட்டு நம்மை அடிமையாக்க முயற்சிக்கும், நம் இன முட்டையிடாது" அதெல்லாம் கமீலாவுக்கு நினைவுக்கு வந்தன. "அந்த பெரிய தாத்தா எறும்பு கூட சொன்னது. நம்ம எறும்புக்கூட்டத்திலேயே போலி இராணி உருவாகுமாம். அது முட்டை போடும் எறும்புகள் உருவாகும். ஆனா அந்த போலி இராணியும் அதோட எறும்புகளும் வேலை எதுவும் செய்யாம நம்ம பூஞ்சைகள சாப்பிடுமாம்" எனத் தன் பங்கிற்கு கதை சொன்னது டியாகோ. மேற்குப்பக்க 3874வது தொகுதிக்கு வந்து விட்டார்கள். "இது நம்ம இராணி இல்ல. வேற இனம் போலி இராணி பொய்க்கா.. தாக்குங்க தாக்குங்க" எனக் கூச்சலிட்டது கமீலா. அதற்குள் காவல் எறும்புகளை அழைத்து வந்து விட்டது அனா. எல்லா எறும்புகளும் வீரத்தோடு போரிட்டன. போலி இராணி பொய்க்கா நிறைய எறும்புகளை விரட்டி விட்டது. எனினும் அஞ்சாமல் அதனோடு மோதினார்கள் காவல்கார எறும்புகள். பொய்க்காவின் இறக்கைகளை மொய்த்து பிய்க்க ஆரம்பித்தன. போலி இராணி எனத் தெரிந்ததும் சமிக்சை கொடுக்கபட்டு நூற்றுக்கணக்கான காவல் எறும்புகள் வர ஆரம்பித்தன. அவற்றின் தாக்குதலைத் தாங்க இயலாமல் தப்பி ஓட முயன்றது பொய்க்கா. கமீலா அதன் காலைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. அனா அதன் தலையில் ஏறிக் கொண்டது. இறக்கைகளை அசைத்து அசைத்து மேலே எழும்பியது போலி இராணி எறும்பு. அனா கீழே விழுந்து விட்டது. போலி இராணி தப்பித்து ஓடி விட்டது. இனி அது இவர்கள் புற்று பக்கமே வராது. "போலி இராணி ஓடி விட்டது. அவரவர் இடத்துக்கு திரும்புங்க" எனக் கட்டளையிட்டது கமீலா. "கமீலா சிறப்பு சிறப்பு" என பாராட்டிக் கொண்டே சென்றன எறும்புகள். "அனா உனக்கு அடி படலையே" என தூக்கி விட்டது டியாகோ. "எல்லாரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா. கமீலா அவசர அவசரமாக கிளம்பியது. "எங்க போற கமீலா" என பின்னாலேயே வந்தது லியா. "இராணி அம்மாவோட பாதுகாப்ப உறுதி செய்ய" என்றது கமீலா. "நாங்க இராணி அம்மாவுக்கு காவலா இருந்தோம். பத்திரமா பாத்துக்கிட்டோம்" என பெருமையாக சொன்னது மேத்யூ. "மேத்யூ, ஜேம்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா. அப்போது அங்கே வந்தது இராணி அம்மா. "கமீலா, உன் புத்திசாலித்தனமும் தைரியமும் தான் நம்ம குடும்பத்த இன்னிக்கு காப்பாத்துச்சு. இனிமே நீ தான் நம்ம புற்றோட தலைமைக் காவல் அதிகாரி" என்ற இராணி கமீலாவின் தலையைத் தடவி விட்டுச் சென்றது. "இராணியா பிறக்கலைன்னாலும் நம்ம இராஜ்ஜியத்தையே நீ காப்பாத்திட்ட" என வாழ்த்தியது இராஜா எறும்பு. "தலைமைக் காவல் அதிகாரி கமீலா வாழ்க" என எம்பிக் குதித்தன மேத்யூவும் அனாவும்.
- நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை அளித்தது பாக்ட்டீரியாவா!
உங்கள் பள்ளியில், ஊரில் மரம் நடும் விழா நடந்திருக்கிறது அல்லவா? உங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு செடியை நட்டிருப்பீர்கள். சுத்தமான காற்று வேண்டுமென்றால், மரங்களை நடுங்கள்; நிழல் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள்; காற்றில் நிறைந்த அளவு ஆக்ஸிஜன் வேண்டுமென்றால் மரங்களை நடுங்கள். இவற்றில் எந்த தவறும் இல்லை. கட்டுரைக்கு போகும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மீம்ஸை பார்த்து விடுங்கள் சொல்லப்போனால் இந்த கட்டுரையின் சாராம்சமே இதுதான். ஃப்யூச்சர் பயோடெக்னாலஜி என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து எடுத்தது. மரங்கள் மட்டுமே ஆக்ஸிஜனை அளிக்கின்றன என்று நினைக்கிறோம். உண்மையில் ஆக்சிஜனை அளிப்பதில் முக்கிய காரணி பாக்டீரியா தான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த பூமி உருவானபோது வளிமண்டலம் எப்படி இருந்தது? பூமி உருவாகி கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இருந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களே அதிகம் இருந்தன. நீராவியும் இருந்தது. இப்போது இருப்பதைப்போல நைட்ரஜனாலும் ஆக்சிஜனாலும் நிறைந்திருக்கவில்லை. சூரிய ஒளி நீராவியின் மீது பட்டு அதிலிருந்து ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் பிரிந்தன. அப்படி பிரிந்து வந்த ஆக்சிஜன் உடனடியாக மீதேனுடன் வினை புரிந்து விடும். எனவே வளிமண்டலத்தில் அவ்வளவாக ஆக்சிஜனே இருக்காது. சயனோ பாக்டீரியா என்னும் ஆக்ஸிஜன் கொடையாளி பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அடுத்த 70 கோடி ஆண்டுகளுக்கு பூமியில் உயிர் எதுவும் உருவாகவில்லை. அதற்குப் பிறகு தோன்றிய உயிர்களும் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜனை பயன்படுத்தவில்லை. கடலில் இருந்த தாதுக்களை வைத்து தங்கள் உடலுக்கான ஆற்றலை பெற்றுக் கொண்டன. புதிய உயிர்கள் அப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டன. கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவியில் சயனோ பாக்டீரியாக்கள் தோன்றின. இந்த பாக்டீரியாக்களால் ஒளிச் சேர்க்கை செய்ய முடிந்தது. அதாவது சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற முடிந்தது. ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஆற்றல் மூலமாக இவை கடல் நீரை பயன்படுத்திக் கொண்டன. மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்போது சூரிய ஒளி கார்பன்டை ஆக்சைடு நீர் ஆகியவற்றை பயன்படுத்தி குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜனை தயாரிக்கும். குளுக்கோசை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜனை கொடுக்கின்றன. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சயனோ பாக்டீரியாக்கள் ஆக்ஸிஜன் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் மரங்கள் இல்லை. ஒளிச்சேர்க்கையின் போது எப்படி ஆக்ஸிஜன் உருவாகிறது என்பதை சுட்டி காட்டத்தான் மரங்களை உதாரணமாக குறிப்பிட்டேன். சயனோ பாக்டீரியாக்கள் தொடர்ந்து ஆக்ஸிஜனை வெளியிட்டன. முதலில் கடல் நீரில் ஆக்ஸிஜன் கலந்து கடல் உயிரினங்கள் ஆக்ஸிஜனை பயன்படுத்தின. அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் வளிமண்டலத்தில் கலந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த தொடர் செயலால் காற்றில் ஆக்ஸிஜன் நிறைந்தது. இதுவே ஆக்ஸிஜனேற்றப் பெருநிகழ்வு என்று சொல்லப்படுகிறது. சயனோ பாக்டீரியாக்கள் பொதுவாக நீலப் பச்சைப்பாசி என்று அழைக்கப்படுகின்றன. பூமியில் இருக்கும் 70 சதவீத ஆக்ஸிஜனை இந்த பாக்டீரியாக்கள் தான் உருவாக்குகின்றன. மீதம் 30 சதவீத்த்தைத் தான் செடிகளும் மரங்களும் உருவாக்குகின்றன.
- லண்டனிலிருந்து அன்புடன் - 4
தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற பதிவில் பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப் பதிவில் திரை அரங்குகளில் நடக்கும் நாடகம் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஆமாம் செல்லங்களே! திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்ப்போம் அல்லவா? அதே போல் நாடகங்களுக்கு இங்கு நிறைய அரங்குகள் உண்டு. நமது ஊரிலும் 50-60 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாடக அரங்குகள் நிறைய இருந்தன. அவை அனைத்துமே தற்போது காணாமல் போய்விட்டன. ஆனால் இங்கிலாந்தில் நாடக அரங்குகள் இன்னும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெரியவர்களுக்கான நாடகங்கள் போலவே, சிறுவர்களுக்கான நாடகங்களும் அதற்கான அரங்குகளும் உண்டு. இந்த நாடகங்கள் அனைத்துமே, புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளோ அல்ல புத்தகங்களாகவோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நானும் என் பிள்ளைகளும் பார்த்த நாடகம்தான் Gruffalo’s Child. இந்தக் கதையை எழுதியவர் ஜூலியா(Julia Donaldson, Illustrator: Axel Scheffler). இது ஒரு படக்கதைப் புத்தகம். “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையை அறிந்து கொள்வதற்கு முன்பு முதலில் க்ரெஃபல்லோவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். சரி வாருங்கள், இந்தப் பதிவில் க்ரெஃபெல்லோ கதையைப் பார்ப்போம். எலி ஒன்று காட்டினுள் நடந்து செல்கிறது, எலியினைக் கண்ட நரி அதனைத் தனது உணவாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிறது. நரி, எலியிடம் சென்று மதிய உணவிற்கு தன் வீட்டிற்கு அழைக்கிறது. நரியின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்ட எலி, தான் க்ரெஃபல்லோவை சந்திக்கப் போவதாக சொல்கிறது. “க்ரெஃபல்லோ? அது என்ன ? “ என்று நரி கேட்க, “க்ரெஃபல்லோவை தெரியாதா? அதுக்கு பெரிய நகம் உண்டு. அதுக்கு நரி வறுவல் என்றால் நிறையப் பிடிக்கும்” என்று கற்பனையாகச் சொல்ல. நரி, தப்பித்தால் போதுமென்று ஓடிவிடுகிறது. நரியிடம் தப்பித்த எலி மேலும் காட்டுக்குள் செல்ல அடுத்ததாக ஆந்தை வருகிறது, அதன் பிறகு பாம்பு வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனது கற்பனையில் பயங்கரமான உருவத்தை க்ரெஃபல்லோவை வர்ணிக்கிறது. இப்படியாக மூவரிடமிருந்த தப்பித்த எலி அடுத்ததாக நிஜமாகவே அது சொன்ன உருவத்திலே க்ரெஃபல்லோவை சந்திக்கிறது. எலி கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரம் நிஜத்தில் வருவதே இந்தக் கதையின் சுவாரஸ்யமான விசயம். க்ரெஃபல்லோ தற்போது எலியைச் சாப்பிட நினைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட எலி, அதனிடம்…”இந்தக் காட்டிலே நான்தான் பயங்கரமான மிருகம். என்னை கண்டாலே அனைவரும் நடுங்குவார்கள்” என்று சொல்ல க்ரெஃபல்லோ சிரிக்கிறது. உடனே எலி க்ரெஃபல்லோவிடம் “நீ வேண்டுமானால் என்னுடன் வா, உனக்கு காட்டுகிறேன்” என்று காட்டினுள் நடக்கிறது. முதலில் பாம்பைச் சந்திக்கின்றனர், “ஆகா! சொன்ன மாதிரியே க்ரெஃபல்லோவை எலி கூட்டிட்டு வந்திடுச்சே” என்று பாம்பு நடுநடுங்கிப் போகிறது. அதுபோல ஆந்தையும் நரியும் பயந்து நடுங்கிச் செல்ல, க்ரெஃபல்லோ எலியை நினைத்துப் பயப்படுகிறது. பயந்து காட்டினுள் ஓடி ஒளிந்துகொள்கிறது. எலி நிம்மதி பெருமூச்சுடன் தனது உணவான பழ கொட்டையச் சாப்பிடுவதாகக் கதை முடிகிறது. இது க்ரெஃபல்லோவின் கதை. இந்தப் புத்தகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பல மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின. அதனைத் தொடர்ந்து Gruffalo’s Child புத்தகம் வெளியானது. அதில் என்ன ஆனது தெரியுமா? அதனை அடுத்த பதிவில் பார்ப்போம் செல்லங்களே! அதனுடன் இந்தக் கதை நாடக வடிவில் எப்படி இருந்தது என்பதையும் பார்ப்போம்!
- அறிவோம் ஆளுமை – 4 அம்பேத்கர் எனும் பன்முக ஆளுமை
ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா! நகுலன் : வணக்கம் அத்தை. கையில் வைத்திருப்பது என்ன புத்தகம்? ஜோ : அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு. ரதி : அத்தை போன மாதம் நீங்கள் ஏன் வரவில்லை? ஜோ : போன மாதம் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு கதை சொல்ல நிகழ்வுக்காக ஆசிரியர் செந்தில்குமார் அழைத்திருந்தார். அங்கு சென்று விட்டேன். உதயசங்கர் தாத்தா வந்திருப்பாரே? நகுலன் : ஆமாம் அத்தை. அவர் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள் பற்றிச் சொன்னார்.. .. ரதி : இந்த வாரம் நீங்கள் அம்பேத்கரைப் பற்றி தானே கூறப் போகிறீர்கள்? ஜோ : ஆமாம். அவரைப் பற்றித்தான். அவருக்குப் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நகுலன் : எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் அத்தை. அவர் தானே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்? ரதி : அவர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தானே? ஜோ : இருவரும் சொன்ன கருத்திலிருந்து நீங்களும் வாசிப்பாளர்கள் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அம்பேத்கர் ஒரு வழக்கறிஞர், பொருளியல் நிபுணர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவர் தான் இந்திய அரசியலமைப்பின் முதன்மை வரைவாளர். நகுலன் : அவர் மகாராஷ்டிராவில் தானே பிறந்தார்? ஜோ : ஆமாம் மகாராஷ்டிராவில் உள்ள மௌ என்னும் இடத்தில் 1891 இல் பிறந்தார். அவர் மஹர் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர். சிறு வயதிலேயே சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளானார். அவருக்குப் பள்ளியில் தண்ணீர் குடிக்கவும் மேஜை நாற்காலிகளில் உட்காரவும் அனுமதி இல்லை. வகுப்பறையில் வெளியில் அமர வைக்கப்பட்டார். அதுவும் ஒரு சாக்குப்பை கொண்டு வந்து போட்டு அதன் மேல் தான் அவர் அமர வேண்டும். ரதி : எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறார். கேட்கவே மனசு வலிக்குது அத்தை. ஜோ : இந்த அவமானம் தான் அவரை இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் அளவிற்கு வெறித்தனமாக படிக்க வைத்தது. படித்தால் மட்டுமே தனக்கான மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினார். தனக்காக மட்டுமல்ல தன் சமூகத்திற்குமான மதிப்பு கல்வியால் தான் என்பதை உணர்ந்தார். நகுலன் : அவர் என்ன படித்திருக்கிறார் அத்தை? ஜோ : அவர் முதலில் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சிலும் கல்வி பயின்றார். அவர் ஒரு பி.எச்.டி பட்டதாரி. ரதி : அவருடைய சமூகத்துக்காக என்ன எல்லாம் செய்தார் அத்தை.? ஜோ : அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை, சம உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முயற்சி செய்தார். 1927 ஆம் ஆண்டு மகத் குடிநீர் சத்தியாகிரகம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் உரிமையை நிலைநாட்டினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருந்தார். நகுலன் : அவர் அரசியலிலும் இருந்தாரா? ஜோ : ஆமாம் கண்ணு.. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சாசனம் உருவாக்கிய குழுவின் தலைவர் அவர்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமையைச் சட்டம் ஆக்கினார். ரதி : அவர் ஏன் பௌத்த மதத்திற்கு மாறினார் அத்தை? ஜோ : அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு பௌத்த மதத்தைத் தழுவினார். ஏனெனில் ஹிந்து மதத்தில் சாதிய ஒடுக்கு முறை நீங்காது என்று அவர் நம்பினார். பௌத்த மதம் சமத்துவத்தை வலியுறுத்தும் மதம் என்பதால் அதனைத் தழுவினார். ரதி : புத்தரும் அவர் தம்மமும் என்ற புத்தகம் எங்கள் வீட்டில் இருக்கிறது. அம்பேத்கர் வேறு என்னென்ன புத்தகங்களை எழுதி இருக்கிறார்? ஜோ : ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். முக்கியமான நூல்கள் Annihilation of Caste The Buddha and His Dhamma Who Were the Shudras? The Problem of the Rupee. எனக்கு மிகவும் பிடித்த அம்பேத்கரின் பிரகடனம் கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்.! . குழந்தைகள் : ஆகா.. எங்களுக்கும் பிடித்திருக்கிறது.. டிசம்பர் 6 தானே அம்பேத்கர் நினைவு நாள்? ஜோ : டிசம்பர் 6, 1956 இல் அவர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பின் அவர் நினைவாக இந்தியா முழுவதும் சிலைகள், கல்வி நிறுவனங்கள், சாலையின் பெயர்கள், நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை இந்திய அரசு உருவாக்கியது. 1990 ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. குழந்தைகள் : நாங்களும் படித்து முடித்ததும் அவரைப் போலவே ஏற்ற தாழ்வுகளில்லாத சமத்துவ உலகம் உருவாகப் பாடுபடுவோம்.. . ஜோ : கண்டிப்பாக.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே ஆயுதம்.. அம்பேத்கரைப் போல் நீதிக்காக சமத்துவத்திற்காக வாழ வேண்டும். மகிழ்ச்சி குழந்தைகளே! குழந்தைகள் : இன்று அம்பேத்கரைப் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொண்டோம். இதை நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் நன்றி அத்தை.
- பேசும் கடல் - 4
வலை பழுது பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம் "நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான். " அப்பா. நீங்க காத்து கடலில் தொழில் செய்வது தெரியும்? அதில் ரொம்ப பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கா? என்று இனியன் கேட்டான். "நீங்க கடல்ல காத்துக்கு பெயர் வைப்பீங்களாமே!." என்று ஈர மணலை கன்னத்தில் தேய்த்து கொண்டே கேட்டாள் அமுதா. "அன்புச் செல்வங்களே! "பெயரிடுதல் என்பதே உரிமையின் அடையாளம். பெயரிட்டு அழைப்பது என்பது உறவின் வெளிப்பாடு. எல்லாரும் எல்லாருக்கும் பெயரிட முடியுமா? ".. "முடியாது " என்று இருவரும் கோரசாகச் சொன்னார்கள். "உரிமை உடையவர்கள் உறவு உடையவர்கள் தான் பெயரிட முடியும். கடலோடிகள் காற்றை உறவாக பார்க்கிறார்கள் என்பதற்கு பெயரிட்டு அழைப்பதே சான்று" அப்பா தன் வாயிலிருந்த வெற்றிலையை மணலில் துப்பி விட்டு பேசினார். "என்ன பெயரிடுவீங்க.? " என்று இனியன் கேட்டான். "ஏன் பெயரிடுறீங்க.? " என்று அமுதாவும் கேட்டாள். "காத்து என்பது பொதுவானது. ஆனால் அது எந்த திசையில் இருந்து வருகிறது? எவ்வளவு வேகத்தில் வருகிறது? என்பதை எல்லாம் பொதுவாக பேச முடியாது தானே?" " ஆமாப்பா...... " என்றாள் அமுதா. " அதான் பல பெயரில் அழைப்போம்" என்றார் அப்பா. " புரியும்படி சில பெயர்களை சொல்லுங்க அப்பா." என்றான் இனியன். " மேற்கிலிருந்து கிழக்கு நோக்கு வீசும் காற்றை கச்சான் காற்று, சோள காற்று என்று அழைப்போம். கிழக்கிலிருந்து மேற்கே நோக்கி வீசும் காற்றை வாடைக்காற்று என்று அழைப்போம். " என்றார் அப்பா. "ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு வீசும் காற்றுக்கு ஏன் பெயரிடுறீங்க......" என்று இனியன் ஆர்வத்தோடு கேட்டான். "காற்றை பொறுத்துத்தான் கடலில் படகை செலுத்த முடியும். கடலில் பயணம் செய்யும் போது காற்று வீசும் திசை தெரிய வேண்டும். எங்கிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது என்பதை கணித்தால் தான் பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும். பாதிப்பும் ஏற்படாது. " என்று அப்பா தன் அனுபவத்தை பிள்ளைகளிடம் பேசும்போது தன்னை ஓர் ஆசிரியர் போல் உணர்ந்தார். கடற்கரையில் காற்று வலுவாக இருந்தது. அமுதாவின் முடியும் பறந்தது. தலை முடியை தன் கைகளில் பிடித்துக் கொண்டு, " இப்போ என் தலைமுடி எந்த திசையில் பறக்குதுன்னு சொல்லுங்க அப்பா." என்று அமுதா சிரித்துக்கொண்டே கேட்டாள். " ஆமா இது ரொம்ப முக்கியம்" என்று இனியன் விளையாட்டாய் அமுதாவை தட்டி விட்டான். அப்பா வலையை பின்னிக்கொண்டே, "கரையில் வாழ்பவர்கள் தான் பொருள்கள், மரங்கள், கிளைகள் அசைவதைக் கண்டு காற்றின் திசையை சொல்வார்கள் நாங்கள் அதை உணர்ந்து சொல்வோம் " " அப்பா புரியல" என்று அமுதா சொல்லி முடிக்கும் முன்னால் இனியன் கத்தினான். " எனக்கு புரிஞ்சிட்டு " என்று இனியன் தொடர்ந்து பேசினான், "கரையில் மரங்கள் இருப்பது போல் கடலில் எதுவும் இருக்காது. காற்று உங்கள் உடலில் படுவதைக் கொண்டு கணிக்கிறீர்கள்......... சரியா?" "சரிதான் மவனே...... அதுமட்டுமல்ல கடலில் நீரின் ஓட்டத்தையும் கணித்து சொல்வோம் " என்றார் அப்பா. "காத்து ரொம்ப வலுவா இருந்தா?" எப்படி தப்பிச்சு வருவீங்க பயமா இருக்காதா?" என்று ஆச்சரியத்துடன். கண் இமைகளை விரித்துக் கொண்டே கேட்டாள் அமுதா. "அதுக்குத்தான் பாய் மரம் கொண்டு போவோம்ல பாய்மரம் கட்டினால் வந்த காற்றை எளிதாக எதிர்கொள்ளலாம்." என்று பேசிக் கொண்டிருக்கும்போதே பெரிய அலை ஒன்று அவர்கள் அருகில் வந்து ஈரமாக்கிச் சென்றது. "ஏய் பாட்டி ! அப்பா வலையை ஈரமாக் கிட்ட..... என் சட்டையை ஈரமாகிட்ட.... சும்மா இருக்க மாட்டியா?" என்று அமுதா செல்லம் கொஞ்சினாள். "நான் என் பேரப்பிள்ளைகளிடம் தான் விளையாட முடியும். அப்பா கிட்ட ரொம்ப நேரம் கேள்வி கேட்டு தெளிவடைஞ்சாச்சா! " என்று கடல்பாட்டி புன்சிரிப்புடன் சொன்னாள். " இல்லை" என்று இனியன் குரலை உயர்த்தினான். "என்னப்பா கோபம்?"என்றாள் கடல் பாட்டி. "பாட்டி பாய் மரம்னா என்ன?" "அதுவா.. சொல்லட்டா? ( கடல் பாட்டி பேசுவாள் )
- அம்கா
நூல் :- அம்கா ஆசிரியர் :- விழியன் பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:- 80 விலை :- ரூ.80/- வணக்கம் செல்ல குழந்தைங்களே.. வாழ்க்கையில் எவை எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரும் என்று நினைக்கறீங்க? படிப்பு, அந்தஸ்து, வேலை, பணம் இப்படி நிறைய சொல்லிட்டு போகலாம். ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி தரும் ஒன்று. மனதளவில், உடல் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று பற்றிக்கொள்ளுதல், வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று ;நமக்கு மகிழ்வையும் தரும் கூடிய ஒன்று. அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள 14 கதைகளிலும் பொதுவான அம்சம் இறுகப் பற்றிக் கொள்ளுதல் தான். ஒரு நெகிழ்வான வாசிப்பு அனுபவத்தை தரும் நூல். அம்கா :- மகிழமது என்ற குழந்தை, அந்தஸ்து வேறுபாடு இன்றி , ஒரு சுகாதாரப் பணியாளரின் மகள் சசியுடன் பழகுகிறாள். பசி வயிற்றோடு வரும் குழந்தைக்கு வயிற்றுக்கும், அவள் அறிவுப் பசிக்கும் உணவிட ஆரம்பிக்கிறாள். அந்தக் குழந்தை இவளுக்கான நினைவு பரிசாக ஒரு ஓவியத்தை வரைந்து நன்றி! அம்கா.. என்று எழுதி இருக்கிறது. அக்கா என்பதை பிழையாக எழுதி இருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவள் அன்பை அந்த சொல்லில் காட்டியிருக்கிறாள். அதன் பொருள் தெரிய கதையை வாசியுங்கள் குட்டீஸ். இரைச்சல் :- பெரும்பாலான நேரங்களில் பெரியவர்களான நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். ஆனால் நாம் செய்கின்ற செயல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில்லை. அப்படி ஒரு பள்ளியின் அருகே இருக்கும் கோவிலில், ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் கடவுள் பாடல்கள் வைக்கப்படுகிறது. அதைத் தட்டி கேட்டால் அது மத பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஆசிரியர்கள் பயப்படும் வேளையில், பள்ளிக்கு புதிதாக வந்த நாகப்பன் என்ற மாணவன் , அறிவுப்பூர்வமாய் செய்த செயல், அந்த ஊர் பெரியவர்களின் மனதை மாற்றியது. அப்படி அவன் என்ன செய்தான்? பிடிச்சுக்கோ:- உள்ளடக்கிய கல்வி முறை என்பது அனைத்து குழந்தைகளும், அவர்களின் திறன்கள் மற்றும் தேவைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே வகுப்பறையில், ஒரே பள்ளிகளில் படிக்கும் ஒரு கல்வி முறை. ஆனால் நம் வகுப்பறைகள், கல்விக் கூடங்கள் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? அப்படி நடக்க முடியாமல் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பள்ளிக்கு வரும் சூர்யா என்ற குழந்தையின் அம்மாவின் பாரத்தை குறைப்பதற்காக, சூர்யாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பது தான் கதை. தற்காலிக தாத்தாக்கள்:- இளமையில் வறுமைக் கொடிது; முதுமையில் தனிமை கொடிது; அப்படி தனிமையான முதுமையில் வசிக்கும் தாத்தாக்கள், தங்களுக்கான உலகத்தை எப்படி நேர்மையான அணுகு முறையோடு உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை பேசும் கதை. அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை:- ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்கிறார். ஆனால் திடீரென்று அங்கே எதிர்பாராமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தே பள்ளிக்கு செல்கிறார். இது சாதாரணமாக நடந்தது அல்ல. இதன் பின் ஏதோ இருக்கிறது. அதைக் கண்டறிய காவல்துறை வருகிறது. அது ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்தாலும், தங்களது அறிக்கையில் அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை என்று அந்த காவல்துறை ஆய்வாளர் மேரி பதிவு செய்து அனுப்புகிறார். ஏன் அவர் நடந்ததை எழுதவில்லை? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம். அ.ள்.ளி அள்ளி அ.ர.வ.ணை அரவணை அள்ளி அரவணை:- பள்ளிகளில் அனைவரும் சமம் என்று சொன்னாலும் கூட, எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. அப்படி புத்தகக் கண்காட்சிக்கு தனக்கு வர எப்போதும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஏக்கப்பட்டு கீர்த்தி என்ற குழந்தை பீரித்தி என்ற குழந்தையிடம் சொல்வதைக் கேட்ட கவிதா அக்கா துரிதமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும், அனைத்து குழந்தைகளும் புத்தகக் கண்காட்சிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அந்த கவிதா அக்கா? ஒரு பிரியாணி பார்சல்ல்ல்:- தேவனும், ராகுலும் நண்பர்கள். எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பிரியாணி வாங்கி சாப்பிட ஆசை. காலை உணவு உண்ண தரும் காசை சிறிது செய்தாக சேகரித்து பிரியாணி வாங்க ஒரு கடைக்கு செல்கிறார்கள். ஆனால் போதுமான அளவு தொகை அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்களுக்கு வயிறு முட்ட பிரியாணி கிடைத்ததோடு, ஒரு வயதான கண் தெரியாத பாட்டிக்கும் சேர்த்தே பிரியாணி கிடைத்தது. எப்படி கிடைத்திருக்கும்? அந்தக் கடையில் மனிதம் நிறைந்த நெஞ்சங்களும் இருந்தது என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமா? குமோங்மங் - திடீரென வந்த வால் நட்சத்திரம்:- கொரோனா காலகட்டத்தில், வாகனங்கள் அதிகம் செல்லாததால் ஒலி மாசுபாடில்லை; புகை மாசுபாடு இல்லை; ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தக் கதையில் கற்பனையில் வரும் ஒரு வால் நட்சத்திரம், உலகில் உள்ள அனைத்து வாகன எரிபொருட்களையும் மாயமாய் கொண்டு சென்று விடுகிறது. என்ன நடந்தது என்பது தான் கதை. ஊற்று:- மருதன், மோகனா ,வந்தனா, டேனிஷ் என்ற நான்கு குழந்தைகள், தங்கள் முன்பின் அறியாத தினேஷ் என்ற சிறுவனுக்கு உதவி செய்கிறார்கள். முன்பின் அறியாத சிறுவனுக்கு என்ன உதவி செய்தார்கள்? உதவி என்பது அறிந்தவர்களுக்கு மட்டும்தான் செய்ய வேண்டுமா? அதேபோல் கேட்டால் தான் உதவி செய்ய வேண்டுமா என்ன ? இப்படி இந்த தொகுப்பில் உள்ள நிறமற்ற வண்ணங்கள், க்ளாப்ஸ், வீர தீரம், கதம் கதம் கொக்கோ ரதம் ரதம் கிக்கோ, இந்த மலைக்கே போன்ற கதைகள் அன்பையும் இறுகப்பற்றுதலையும் அழுத்தமாய் பேசுகிறது. சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே. என்ன குட்டீஸ் நீங்களும் தேவையானவர்களின் கரங்களை இறுகப்பற்றிக் கொள்வீர்கள் தானே?
- பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள். இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தீராக் காதலும் கருணையும் கொண்ட தலைசிறந்த பண்புடைய தலைவனான பறம்பின் பாரியை பாணர்களும் புலவர்களும் சிலாகித்து பாடினர். அப்படிப்பட்ட இனக்குழு சமூகத்தின் தலைவனான பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் நீட்சியே இந்த நாவல். உலகின் தொல்குடியான தமிழ்குடியின் அறம் சார்ந்த வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் பாரியின் சங்க கால வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு இளையோர் நாவலினை மிகச் சிறந்த முறையில் படைத்திருக்கிறார். "சாகசங்களை தேடும் பதின்ம வயதில் பறம்பின் ஏழு மலைகளை அறிந்து கொள்வதில் தன் முழு ஆற்றலையும் செலவழித்தான் பாரி. ஒரே நேரத்தில் இளமையின் வலிமையையும் முதுமையின் பேரன்பையும் பாரியால் காட்ட முடிந்தது" என்பதை வாசிக்கும் போது எப்படி பாரி பேராற்றல் உடைய தலைவனாக தன்னுடைய பதின் பருவத்திலேயே உருவாகிக் கொண்டிருந்தான் என்பதை இந்த நாவலின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் பாரியிடம் கிடைக்கப்பெற்ற கருணையை வேறு எந்த மன்னரிடமும் எந்தப் பாணரும் புலவரும் உணர வில்லை என்று கபிலர் குறிப்பிடுவதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவருடைய பதின் பருவம் இருந்தது என்பதனை அறிந்து கொள்ள இந்த நாவல் துணை செய்கிறது. கடல் கடந்து பரவி இருக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கும் பாரியின் வரலாற்றை இளையோருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவன் வேள்பாரியாக உருவாவதற்கு பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி துணை செய்தது என்பதையும் கண்முன் காட்சிகளாக விரித்து காட்டுகிறது இந்த நாவல். வாசித்து முடித்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும் பாரியின் கரம் பிடித்து பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி இப்போதும் மனது முழுவதும் நிரம்பி வழிகிறது. வெளியீடு - வானம் பதிப்பகம் தொடர்புக்கு - 9751549992













