அம்கா
- பூங்கொடி பாலமுருகன்
- Jul 15
- 3 min read

நூல் :- அம்கா
ஆசிரியர் :- விழியன்
பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்:- 80
விலை :- ரூ.80/-
வணக்கம் செல்ல குழந்தைங்களே.. வாழ்க்கையில் எவை எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரும் என்று நினைக்கறீங்க? படிப்பு, அந்தஸ்து, வேலை, பணம் இப்படி நிறைய சொல்லிட்டு போகலாம். ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி தரும் ஒன்று. மனதளவில், உடல் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று பற்றிக்கொள்ளுதல், வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று ;நமக்கு மகிழ்வையும் தரும் கூடிய ஒன்று.
அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள 14 கதைகளிலும் பொதுவான அம்சம் இறுகப் பற்றிக் கொள்ளுதல் தான். ஒரு நெகிழ்வான வாசிப்பு அனுபவத்தை தரும் நூல்.
அம்கா :-
மகிழமது என்ற குழந்தை, அந்தஸ்து வேறுபாடு இன்றி , ஒரு சுகாதாரப் பணியாளரின் மகள் சசியுடன் பழகுகிறாள். பசி வயிற்றோடு வரும் குழந்தைக்கு வயிற்றுக்கும், அவள் அறிவுப் பசிக்கும் உணவிட ஆரம்பிக்கிறாள். அந்தக் குழந்தை இவளுக்கான நினைவு பரிசாக ஒரு ஓவியத்தை வரைந்து நன்றி! அம்கா.. என்று எழுதி இருக்கிறது. அக்கா என்பதை பிழையாக எழுதி இருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவள் அன்பை அந்த சொல்லில் காட்டியிருக்கிறாள். அதன் பொருள் தெரிய கதையை வாசியுங்கள் குட்டீஸ்.
இரைச்சல் :-
பெரும்பாலான நேரங்களில் பெரியவர்களான நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். ஆனால் நாம் செய்கின்ற செயல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில்லை. அப்படி ஒரு பள்ளியின் அருகே இருக்கும் கோவிலில், ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் கடவுள் பாடல்கள் வைக்கப்படுகிறது. அதைத் தட்டி கேட்டால் அது மத பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஆசிரியர்கள் பயப்படும் வேளையில், பள்ளிக்கு புதிதாக வந்த நாகப்பன் என்ற மாணவன் , அறிவுப்பூர்வமாய் செய்த செயல், அந்த ஊர் பெரியவர்களின் மனதை மாற்றியது. அப்படி அவன் என்ன செய்தான்?
பிடிச்சுக்கோ:-
உள்ளடக்கிய கல்வி முறை என்பது அனைத்து குழந்தைகளும், அவர்களின் திறன்கள் மற்றும் தேவைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே வகுப்பறையில், ஒரே பள்ளிகளில் படிக்கும் ஒரு கல்வி முறை. ஆனால் நம் வகுப்பறைகள், கல்விக் கூடங்கள் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா?
அப்படி நடக்க முடியாமல் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பள்ளிக்கு வரும் சூர்யா என்ற குழந்தையின் அம்மாவின் பாரத்தை குறைப்பதற்காக, சூர்யாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பது தான் கதை.
தற்காலிக தாத்தாக்கள்:-
இளமையில் வறுமைக் கொடிது; முதுமையில் தனிமை கொடிது; அப்படி தனிமையான முதுமையில் வசிக்கும் தாத்தாக்கள், தங்களுக்கான உலகத்தை எப்படி நேர்மையான அணுகு முறையோடு உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை பேசும் கதை.
அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை:-
ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்கிறார். ஆனால் திடீரென்று அங்கே எதிர்பாராமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தே பள்ளிக்கு செல்கிறார். இது சாதாரணமாக நடந்தது அல்ல. இதன் பின் ஏதோ இருக்கிறது. அதைக் கண்டறிய காவல்துறை வருகிறது. அது ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்தாலும், தங்களது அறிக்கையில் அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை என்று அந்த காவல்துறை ஆய்வாளர் மேரி பதிவு செய்து அனுப்புகிறார். ஏன் அவர் நடந்ததை எழுதவில்லை? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.
அ.ள்.ளி அள்ளி அ.ர.வ.ணை அரவணை அள்ளி அரவணை:-
பள்ளிகளில் அனைவரும் சமம் என்று சொன்னாலும் கூட, எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. அப்படி புத்தகக் கண்காட்சிக்கு தனக்கு வர எப்போதும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஏக்கப்பட்டு கீர்த்தி என்ற குழந்தை பீரித்தி என்ற குழந்தையிடம் சொல்வதைக் கேட்ட கவிதா அக்கா துரிதமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும், அனைத்து குழந்தைகளும் புத்தகக் கண்காட்சிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அந்த கவிதா அக்கா?
ஒரு பிரியாணி பார்சல்ல்ல்:-
தேவனும், ராகுலும் நண்பர்கள். எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பிரியாணி வாங்கி சாப்பிட ஆசை. காலை உணவு உண்ண தரும் காசை சிறிது செய்தாக சேகரித்து பிரியாணி வாங்க ஒரு கடைக்கு செல்கிறார்கள். ஆனால் போதுமான அளவு தொகை அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்களுக்கு வயிறு முட்ட பிரியாணி கிடைத்ததோடு, ஒரு வயதான கண் தெரியாத பாட்டிக்கும் சேர்த்தே பிரியாணி கிடைத்தது. எப்படி கிடைத்திருக்கும்? அந்தக் கடையில் மனிதம் நிறைந்த நெஞ்சங்களும் இருந்தது என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமா?
குமோங்மங் - திடீரென வந்த வால் நட்சத்திரம்:-
கொரோனா காலகட்டத்தில், வாகனங்கள் அதிகம் செல்லாததால் ஒலி மாசுபாடில்லை; புகை மாசுபாடு இல்லை; ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தக் கதையில் கற்பனையில் வரும் ஒரு வால் நட்சத்திரம், உலகில் உள்ள அனைத்து வாகன எரிபொருட்களையும் மாயமாய் கொண்டு சென்று விடுகிறது. என்ன
நடந்தது என்பது தான் கதை.
ஊற்று:-
மருதன், மோகனா ,வந்தனா, டேனிஷ் என்ற நான்கு குழந்தைகள், தங்கள் முன்பின் அறியாத தினேஷ் என்ற சிறுவனுக்கு உதவி செய்கிறார்கள். முன்பின் அறியாத சிறுவனுக்கு என்ன உதவி செய்தார்கள்?
உதவி என்பது அறிந்தவர்களுக்கு மட்டும்தான் செய்ய வேண்டுமா? அதேபோல் கேட்டால் தான் உதவி செய்ய வேண்டுமா என்ன ?
இப்படி இந்த தொகுப்பில் உள்ள நிறமற்ற வண்ணங்கள், க்ளாப்ஸ், வீர தீரம், கதம் கதம் கொக்கோ ரதம் ரதம் கிக்கோ, இந்த மலைக்கே போன்ற கதைகள் அன்பையும் இறுகப்பற்றுதலையும் அழுத்தமாய் பேசுகிறது.
சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே. என்ன குட்டீஸ் நீங்களும் தேவையானவர்களின் கரங்களை இறுகப்பற்றிக் கொள்வீர்கள் தானே?
Comments