அறிவோம் ஆளுமை – 4 அம்பேத்கர் எனும் பன்முக ஆளுமை
- சரிதா ஜோ

- Jul 15
- 2 min read

ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா!
நகுலன் : வணக்கம் அத்தை. கையில் வைத்திருப்பது என்ன புத்தகம்?
ஜோ : அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ரதி : அத்தை போன மாதம் நீங்கள் ஏன் வரவில்லை?
ஜோ : போன மாதம் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு கதை சொல்ல நிகழ்வுக்காக ஆசிரியர் செந்தில்குமார் அழைத்திருந்தார். அங்கு சென்று விட்டேன். உதயசங்கர் தாத்தா வந்திருப்பாரே?
நகுலன் : ஆமாம் அத்தை. அவர் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள் பற்றிச் சொன்னார்..
..
ரதி : இந்த வாரம் நீங்கள் அம்பேத்கரைப் பற்றி தானே கூறப் போகிறீர்கள்?
ஜோ : ஆமாம். அவரைப் பற்றித்தான். அவருக்குப் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.
நகுலன் : எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் அத்தை. அவர் தானே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்?
ரதி : அவர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தானே?
ஜோ : இருவரும் சொன்ன கருத்திலிருந்து நீங்களும் வாசிப்பாளர்கள் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அம்பேத்கர் ஒரு வழக்கறிஞர், பொருளியல் நிபுணர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவர் தான் இந்திய அரசியலமைப்பின் முதன்மை வரைவாளர்.
நகுலன் : அவர் மகாராஷ்டிராவில் தானே பிறந்தார்?
ஜோ : ஆமாம் மகாராஷ்டிராவில் உள்ள மௌ என்னும் இடத்தில் 1891 இல் பிறந்தார். அவர் மஹர் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர். சிறு வயதிலேயே சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளானார். அவருக்குப் பள்ளியில் தண்ணீர் குடிக்கவும் மேஜை நாற்காலிகளில் உட்காரவும் அனுமதி இல்லை. வகுப்பறையில் வெளியில் அமர வைக்கப்பட்டார். அதுவும் ஒரு சாக்குப்பை கொண்டு வந்து போட்டு அதன் மேல் தான் அவர் அமர வேண்டும்.
ரதி : எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறார். கேட்கவே மனசு வலிக்குது அத்தை.
ஜோ : இந்த அவமானம் தான் அவரை இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் அளவிற்கு வெறித்தனமாக படிக்க வைத்தது. படித்தால் மட்டுமே தனக்கான மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினார். தனக்காக மட்டுமல்ல தன் சமூகத்திற்குமான மதிப்பு கல்வியால் தான் என்பதை உணர்ந்தார்.
நகுலன் : அவர் என்ன படித்திருக்கிறார் அத்தை?
ஜோ : அவர் முதலில் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சிலும் கல்வி பயின்றார். அவர் ஒரு பி.எச்.டி பட்டதாரி.
ரதி : அவருடைய சமூகத்துக்காக என்ன எல்லாம் செய்தார் அத்தை.?
ஜோ : அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை, சம உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முயற்சி செய்தார். 1927 ஆம் ஆண்டு மகத் குடிநீர் சத்தியாகிரகம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் உரிமையை நிலைநாட்டினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருந்தார்.
நகுலன் : அவர் அரசியலிலும் இருந்தாரா?
ஜோ : ஆமாம் கண்ணு.. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சாசனம் உருவாக்கிய குழுவின் தலைவர் அவர்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமையைச் சட்டம் ஆக்கினார்.
ரதி : அவர் ஏன் பௌத்த மதத்திற்கு மாறினார் அத்தை?
ஜோ : அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு பௌத்த மதத்தைத் தழுவினார். ஏனெனில் ஹிந்து மதத்தில் சாதிய ஒடுக்கு முறை நீங்காது என்று அவர் நம்பினார். பௌத்த மதம் சமத்துவத்தை வலியுறுத்தும் மதம் என்பதால் அதனைத் தழுவினார்.
ரதி : புத்தரும் அவர் தம்மமும்
என்ற புத்தகம் எங்கள் வீட்டில் இருக்கிறது. அம்பேத்கர் வேறு என்னென்ன புத்தகங்களை எழுதி இருக்கிறார்?
ஜோ : ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். முக்கியமான நூல்கள்
Annihilation of Caste
The Buddha and His Dhamma
Who Were the Shudras?
The Problem of the Rupee.
எனக்கு மிகவும் பிடித்த அம்பேத்கரின் பிரகடனம் கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்.!
.
குழந்தைகள் : ஆகா.. எங்களுக்கும் பிடித்திருக்கிறது.. டிசம்பர் 6 தானே அம்பேத்கர் நினைவு நாள்?
ஜோ: டிசம்பர் 6, 1956 இல் அவர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பின் அவர் நினைவாக இந்தியா முழுவதும் சிலைகள், கல்வி நிறுவனங்கள், சாலையின் பெயர்கள், நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை இந்திய அரசு உருவாக்கியது. 1990 ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
குழந்தைகள்: நாங்களும் படித்து முடித்ததும் அவரைப் போலவே ஏற்ற தாழ்வுகளில்லாத சமத்துவ உலகம் உருவாகப் பாடுபடுவோம்..
.
ஜோ : கண்டிப்பாக.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே ஆயுதம்.. அம்பேத்கரைப் போல் நீதிக்காக சமத்துவத்திற்காக வாழ வேண்டும். மகிழ்ச்சி குழந்தைகளே!
குழந்தைகள் : இன்று அம்பேத்கரைப் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொண்டோம். இதை நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் நன்றி அத்தை.




Comments