லண்டனிலிருந்து அன்புடன் - 4
- பஞ்சுமிட்டாய் பிரபு
- Jul 15
- 2 min read

தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சென்ற பதிவில் பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள் குறித்துப் பார்த்தோம். இந்தப் பதிவில் திரை அரங்குகளில் நடக்கும் நாடகம் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஆமாம் செல்லங்களே! திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்ப்போம் அல்லவா? அதே போல் நாடகங்களுக்கு இங்கு நிறைய அரங்குகள் உண்டு. நமது ஊரிலும் 50-60 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாடக அரங்குகள் நிறைய இருந்தன. அவை அனைத்துமே தற்போது காணாமல் போய்விட்டன. ஆனால் இங்கிலாந்தில் நாடக அரங்குகள் இன்னும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பெரியவர்களுக்கான நாடகங்கள் போலவே, சிறுவர்களுக்கான நாடகங்களும் அதற்கான
அரங்குகளும் உண்டு. இந்த நாடகங்கள் அனைத்துமே, புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளோ அல்ல புத்தகங்களாகவோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நானும் என் பிள்ளைகளும் பார்த்த நாடகம்தான் Gruffalo’s Child. இந்தக் கதையை எழுதியவர் ஜூலியா(Julia Donaldson, Illustrator: Axel Scheffler). இது ஒரு படக்கதைப் புத்தகம்.
“க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையை அறிந்து கொள்வதற்கு முன்பு முதலில் க்ரெஃபல்லோவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். சரி வாருங்கள், இந்தப் பதிவில் க்ரெஃபெல்லோ கதையைப் பார்ப்போம்.
எலி ஒன்று காட்டினுள் நடந்து செல்கிறது, எலியினைக் கண்ட நரி அதனைத் தனது உணவாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிறது. நரி, எலியிடம் சென்று மதிய உணவிற்கு தன் வீட்டிற்கு அழைக்கிறது. நரியின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்ட எலி, தான் க்ரெஃபல்லோவை சந்திக்கப் போவதாக சொல்கிறது.
“க்ரெஃபல்லோ? அது என்ன ? “ என்று நரி கேட்க, “க்ரெஃபல்லோவை தெரியாதா? அதுக்கு பெரிய நகம் உண்டு. அதுக்கு நரி வறுவல் என்றால் நிறையப் பிடிக்கும்” என்று கற்பனையாகச் சொல்ல. நரி, தப்பித்தால் போதுமென்று ஓடிவிடுகிறது. நரியிடம் தப்பித்த எலி மேலும் காட்டுக்குள் செல்ல அடுத்ததாக ஆந்தை வருகிறது, அதன் பிறகு பாம்பு வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனது கற்பனையில் பயங்கரமான உருவத்தை க்ரெஃபல்லோவை வர்ணிக்கிறது.
இப்படியாக மூவரிடமிருந்த தப்பித்த எலி அடுத்ததாக நிஜமாகவே அது சொன்ன உருவத்திலே க்ரெஃபல்லோவை சந்திக்கிறது.
எலி கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரம் நிஜத்தில் வருவதே இந்தக் கதையின் சுவாரஸ்யமான விசயம். க்ரெஃபல்லோ தற்போது எலியைச் சாப்பிட நினைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட எலி, அதனிடம்…”இந்தக் காட்டிலே நான்தான் பயங்கரமான மிருகம். என்னை கண்டாலே அனைவரும் நடுங்குவார்கள்” என்று சொல்ல க்ரெஃபல்லோ சிரிக்கிறது. உடனே எலி க்ரெஃபல்லோவிடம் “நீ வேண்டுமானால் என்னுடன் வா, உனக்கு காட்டுகிறேன்” என்று காட்டினுள் நடக்கிறது.

முதலில் பாம்பைச் சந்திக்கின்றனர், “ஆகா! சொன்ன மாதிரியே க்ரெஃபல்லோவை எலி கூட்டிட்டு வந்திடுச்சே” என்று பாம்பு நடுநடுங்கிப் போகிறது. அதுபோல ஆந்தையும் நரியும் பயந்து நடுங்கிச் செல்ல, க்ரெஃபல்லோ எலியை நினைத்துப் பயப்படுகிறது. பயந்து காட்டினுள் ஓடி ஒளிந்துகொள்கிறது.
எலி நிம்மதி பெருமூச்சுடன் தனது உணவான பழ கொட்டையச் சாப்பிடுவதாகக் கதை முடிகிறது.
இது க்ரெஃபல்லோவின் கதை. இந்தப் புத்தகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பல மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின. அதனைத் தொடர்ந்து Gruffalo’s Child புத்தகம் வெளியானது. அதில் என்ன ஆனது தெரியுமா? அதனை அடுத்த பதிவில் பார்ப்போம் செல்லங்களே! அதனுடன் இந்தக் கதை நாடக வடிவில் எப்படி இருந்தது என்பதையும் பார்ப்போம்!
Comments