top of page

Adolescence web series - 3

ree

ஜேமி கதறி அழுகிறான். அவனது அப்பா செய்வதறியாது திகைத்து இருக்கிறார். எவ்வளவு பெரிய குற்றம்!           

 

தன் மகன் ஒரு கொலையைச் செய்திருக்கிறான். சம வயதுப் பெண் குழந்தையைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறான். வெடித்து அழுகிறார். மகனைக் கட்டிக் கொண்டு கதறுகிறார்.

ஏன்? இப்படி?

என வார்த்தைகள் சிதறுகின்றன. நான் எதுவும் செய்யவில்லை என்று ஜேமி அழுகிறான். எல்லாம் முடிந்தது என்று வழக்கறிஞர் அமர்ந்திருக்கிறார். விசாரணை முடிந்தது.

 

ஆதாரங்களின் படி கொலையாளி யார் என்பது உறுதியாகிவிட்டது. 'கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி எங்கே?' இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டால் போதும். விசாரணை முழுமை அடைந்துவிடும்.

 

இன்ஸ்பெக்டர் பாஸ்கம், துணை ஆய்வாளரரான பிராங்க் உடன்  ஜேமி, கேட்டி ஆகியோர் படித்த பள்ளிக்குச் செல்கிறார். இன்ஸ்பெக்டரின் மகன் ஆதம் அங்குதான் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

 

என் வேலைக்காக உன் பள்ளிக்கு வருகிறேன். என்னால் உனக்கு ஏதும் தொந்தரவு வராது. என்ற செய்தியை மகனுக்கு அனுப்பிவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார், பாஸ்கம்.

 

பள்ளிக்கூட வாசலில்  கேட்டியின் படங்கள், பூங்கொத்துகள், மெழுகுவர்த்திகள் நிறைந்திருக்கின்றன.


காவல் துறையினர் இருவரையும் பள்ளி முதல்வர் அழைத்துச் செல்கிறார்.

"இப்பதான் இரங்கல் கூட்டம் முடிஞ்சது. மாணவர்கள் பலரும்  கோபமா இருக்காங்க.” என்று சொல்கிறார். மூவரும் பள்ளிக்குள் செல்கிறார்கள்.

 

ஜேமியின் நண்பர்கள் ரயனும் டாமியும்  பேசிக்கொள்கிறார்கள். போலீஸ் வந்திருப்பதாக ரயன் சொல்கிறான்.

 

"கண்டிப்பா வருவாங்க. எல்லா இடத்திலேயேயும் இருக்காங்க." என்று மெதுவாக டாமி சொல்கிறான். 'எனக்குப் பிடிக்கல' என்று டாமி சொல்கிறான். ரயனின் முகத்தில் பதற்றம். மெதுவாகப் பேசுகிறான். டாமி அலட்சியமாகப் பேசுகிறான். ஜேமியிடம் பேச முடியாத நிலை. இருவரின் வீட்டுக்கும் போலீஸ் வந்து விசாரித்ததைப் பகிர்ந்து கொள்கின்றனர். கத்தியைப்பற்றி ஏதாவது கேட்டார்களா என்று டாமி கேட்கிறான். ஆமாம் என்கிறான் ரயன். என் அப்பா, யாரிடமும் எதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறார் என்று ரயன் சொல்கிறான். பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று இருவரும்  பேசிக்கொள்கிறார்கள்.

 

காவல் ஆய்வாளர்கள் முதலில் கேட்டியின் நெருங்கிய தோழியான ஜேட் என்ற மாணவியைச் சந்திக்கின்றனர். ஜேட் கோபப்படுகிறாள். "என்னிடம் ஏன் கேட்கறீங்க? உங்க மகனும் இங்கு தானே படிக்கிறான். அவனிடம் கேளுங்க. அவன் பார்க்க நல்லாவே இருக்க மாட்டான்." என்று கத்துகிறாள்.

ஆசிரியை அவளைச் சமாதானம் செய்ய முயல்கிறார். தொடர்ந்து என்ன கேட்டாலும் கோபப்படுகிறாள். கேட்டி, ஜேமி இருவருக்கும் இடையே நட்பு ஏதுமில்லை என்கிறாள். 'இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருவருக்கும் நட்பு இருப்பதாகத் தெரிகிறதே!' என்று பிராங்க் கேட்டதற்கு அதிக கோபப்படுகிறாள். உங்களோடு எதுவும் பேச முடியாது என்று சொல்லி அறையை விட்டு வெளியேறுகிறாள்.

 

ஜேமி, கேட்டியின் வகுப்பறை. எட்டாம் வகுப்பு G பிரிவு. வகுப்பறைக் கதவின் அருகே சொல்லும்போதே உள்ளிருந்து கடும் கூச்சல் கேட்கிறது. மூவரும் உள்ளே நுழைகிறார்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர் யாருமில்லை. கலவர பூமியாக இருக்கிறது. ஆசிரியை, மாணவர் அனைவரையும் அமைதிப்படுத்துகிறார் . காவலர்களை அறிமுகப்படுத்துகிறார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வகுப்பு ஆசிரியர் வருகிறார். பதற்றமும் பயமும் நிறைந்த ஆசிரியர்.

 

நேற்று முன்தினம் இரவு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பற்றிய தகவல் ஏதேனும்  தெரிந்தால் தயங்காமல் எங்களுக்குச் சொல்லுங்க. எனது செல்பேசி எண்ணை உங்கள் ஆசிரியரிடம் கொடுக்கிறேன். என்று பாஸ்கம் சொல்கிறார்.

 

ஜேமியைக் கைது பண்ணிட்டீங்க. நிஜமாவே உங்களிடம் வீடியோ இருக்கா? என்று ஒரு மாணவன் கேட்கிறான். தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்துகொண்டே இருக்கிறான். ரயனும் டாமியும் அமைதியாக இருக்கின்றனர்.

 

காவல் அலுவலர்களுடன் ஆசிரியை எட்டாம் வகுப்பை விட்டு வெளியே வருகிறார். கேலியாகப் பேசிக்கொண்டே இருந்த மாணவனிடம், 'படிப்பில் கவனம் வை'  என்று சொல்கிறார்.

 

வகுப்பறை விட்டு வெளியே வந்த காவலர்கள் இருவரும் ஆசுவாசாசமாகச் சற்றே நிற்கிறார்கள். எல்லா வகுப்பறைகளிலும் கடுமையான நாற்றம் இருக்கிறது. என்னால் தாங்கவே முடியவில்லை என்று பிராங்க் சொல்கிறார். பாஸ்கம் அதை ஆமோதிக்கிறார்.

 

வகுப்பறைகளில் மாணவர்கள் ஏதாவது சாப்பிடுகிறார்கள். அதிகமாகச் சத்தமிடுகிறார்கள்.  ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 

தொடரின் முதல் பாகத்தில் காவல் நிலைய நடைமுறைகள் காட்டப்பட்டது போல இரண்டாம் பாகத்தில் தற்காலப் பள்ளி நடைமுறைகள் காட்டப்படுகின்றன. பள்ளிக்குள் பதற்றம் நிறைந்திருப்பதாகவே காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் அதிகப் பதற்றத்துடன் இருக்கிறார்கள். ஆங்காங்கே சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்யும் காட்சிகள் வருகின்றன. செல்பேசியில் ரீல்ஸ் எடுக்கும் மாணவ மாணவியரை ' வகுப்புக்குப் போங்க!' என்று ஆசிரியை சொன்னதுமே 'வாயை மூடுங்க மிஸ்!' என்கிறார்கள். எட்டாம் வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் கேலி செய்வார்கள் என்று சில காட்சிகள் உணர்த்துகின்றன.

 

இன்றைய சூழலில் வளரிம்பருவ வகுப்பறையை எப்படிக் கையாளுவது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரச்சினையாக இருக்கிறது. பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகளைக் கலந்துரையாடிச் செயல்பாடுகளை உருவாக்குவதே இன்றைய அவசரத் தேவை.

 

பாஸ்கம்மின் மகன் ஆதம் எப்போதும் பயம் நிறைந்த முகத்துடனேயே இருக்கிறான்.  'அப்பா, இன்று கடுமையான வயிற்று வலி. நான் பள்ளிக்கு லீவு போடவா?' என்று ஆதம் அனுப்பிய குரல் பதிவுடன் தான் Adolescence தொடர் தொடங்குகிறது.

 

பள்ளிக்குள் ஆதம் சக மாணவர்களால் கடுமையாகக் கேலி செய்யப்படுகிறான். கறுப்பினத்தவன் என்பதால் நிறவெறியும் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. உணவு நேரத்தில் குப்பைகளை அவனது தட்டில் போடுவது, பணம் கேட்டு மிரட்டுவது என்று ஆதம் சக மாணவர்களால் துன்புறுத்தப்படுகிறான்.

 

ஆதம் பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவனது வகுப்பறைக்கு காவல் அலுவலர்கள் செல்கிறார்கள். ஆசிரியர் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இவர் நம் ஆதமின் அப்பா என்றும் சொல்கிறார். உடனே பின்னால் இருந்த மாணவன் 'ஆதம்' என்ற சத்தத்துடன் குரங்கு போல ஆதமின் காதருகே உறுமுகிறான். ஆசிரியர் எச்சரித்த போதும் அதை அலட்சியம் செய்தபடி மீண்டும் உறுமுகிறான். ஆசிரியர், சத்தமாக அவனைக் கண்டிக்கிறார். பிறகு என் அறைக்கு வா என்றும் சொல்கிறார். அவனது செய்கை தவறானது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று பாஸ்கமிடம் கூறுகிறார்.

 

நடந்த அசம்பாவிதம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பாஸ்கம் சொல்லும்போதே தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. எங்கும் பதற்றம். சத்தம் அதிகரிக்கிறது.

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Kannan
Jul 19

படிக்க ஆவலைத் தூண்டுகிறது

Like
bottom of page