top of page

பேசும் கடல் - 4

ree

வலை பழுது பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம்


 "நாங்கள் கடல் பாட்டி கூட ரொம்ப ஜாலியா பேசினோமே"....... என்று அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள். அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த இனியன் கேட்டான். 


" அப்பா. நீங்க காத்து கடலில் தொழில் செய்வது தெரியும்? அதில் ரொம்ப பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கா? என்று இனியன் கேட்டான். 


"நீங்க கடல்ல காத்துக்கு பெயர் வைப்பீங்களாமே!." என்று ஈர மணலை கன்னத்தில் தேய்த்து கொண்டே கேட்டாள் அமுதா.


"அன்புச் செல்வங்களே! "பெயரிடுதல் என்பதே உரிமையின் அடையாளம். பெயரிட்டு அழைப்பது என்பது உறவின் வெளிப்பாடு. எல்லாரும் எல்லாருக்கும் பெயரிட முடியுமா? "..


"முடியாது " என்று இருவரும் கோரசாகச் சொன்னார்கள்.


 "உரிமை உடையவர்கள் உறவு உடையவர்கள் தான் பெயரிட முடியும். கடலோடிகள் காற்றை உறவாக பார்க்கிறார்கள் என்பதற்கு பெயரிட்டு அழைப்பதே சான்று" 


அப்பா தன் வாயிலிருந்த வெற்றிலையை மணலில் துப்பி விட்டு பேசினார்.


 "என்ன பெயரிடுவீங்க.? " என்று இனியன் கேட்டான். 


"ஏன் பெயரிடுறீங்க.? " என்று அமுதாவும் கேட்டாள்.


"காத்து என்பது பொதுவானது. ஆனால் அது எந்த திசையில் இருந்து வருகிறது? எவ்வளவு வேகத்தில் வருகிறது? என்பதை எல்லாம் பொதுவாக பேச முடியாது தானே?"


" ஆமாப்பா...... " என்றாள் அமுதா.


" அதான் பல பெயரில் அழைப்போம்"  என்றார் அப்பா.


 " புரியும்படி சில பெயர்களை சொல்லுங்க அப்பா." என்றான் இனியன்.


" மேற்கிலிருந்து கிழக்கு நோக்கு வீசும் காற்றை கச்சான் காற்று, சோள காற்று என்று அழைப்போம். கிழக்கிலிருந்து மேற்கே நோக்கி வீசும் காற்றை  வாடைக்காற்று என்று அழைப்போம். " என்றார் அப்பா. 


  "ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு வீசும் காற்றுக்கு ஏன் பெயரிடுறீங்க......" என்று  இனியன் ஆர்வத்தோடு கேட்டான்.


 "காற்றை பொறுத்துத்தான் கடலில் படகை செலுத்த முடியும். கடலில் பயணம் செய்யும் போது காற்று வீசும் திசை தெரிய வேண்டும். எங்கிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது என்பதை கணித்தால் தான் பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும். பாதிப்பும் ஏற்படாது. " என்று அப்பா தன் அனுபவத்தை பிள்ளைகளிடம் பேசும்போது தன்னை ஓர் ஆசிரியர் போல் உணர்ந்தார்.


 கடற்கரையில் காற்று வலுவாக இருந்தது. அமுதாவின் முடியும் பறந்தது. தலை முடியை தன் கைகளில் பிடித்துக் கொண்டு,


" இப்போ என் தலைமுடி எந்த திசையில் பறக்குதுன்னு சொல்லுங்க அப்பா." என்று அமுதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.


" ஆமா இது ரொம்ப முக்கியம்" என்று இனியன் விளையாட்டாய் அமுதாவை தட்டி விட்டான்.


 அப்பா வலையை பின்னிக்கொண்டே,


 "கரையில் வாழ்பவர்கள் தான் பொருள்கள், மரங்கள், கிளைகள் அசைவதைக் கண்டு காற்றின் திசையை சொல்வார்கள் நாங்கள் அதை உணர்ந்து சொல்வோம் "


 " அப்பா புரியல" என்று  அமுதா சொல்லி முடிக்கும் முன்னால் இனியன் கத்தினான். 


"  எனக்கு புரிஞ்சிட்டு " என்று இனியன் தொடர்ந்து பேசினான்,


 "கரையில் மரங்கள் இருப்பது போல் கடலில் எதுவும் இருக்காது. காற்று உங்கள் உடலில் படுவதைக் கொண்டு கணிக்கிறீர்கள்......... சரியா?"  


  "சரிதான் மவனே...... அதுமட்டுமல்ல கடலில் நீரின் ஓட்டத்தையும் கணித்து சொல்வோம் "

என்றார் அப்பா.


"காத்து ரொம்ப வலுவா இருந்தா?" எப்படி தப்பிச்சு வருவீங்க பயமா இருக்காதா?"


என்று ஆச்சரியத்துடன். கண் இமைகளை விரித்துக் கொண்டே கேட்டாள் அமுதா.


 "அதுக்குத்தான் பாய் மரம் கொண்டு போவோம்ல பாய்மரம் கட்டினால் வந்த காற்றை எளிதாக எதிர்கொள்ளலாம்." என்று பேசிக் கொண்டிருக்கும்போதே பெரிய அலை ஒன்று அவர்கள் அருகில் வந்து ஈரமாக்கிச் சென்றது.


"ஏய் பாட்டி ! அப்பா வலையை ஈரமாக் கிட்ட..... என் சட்டையை ஈரமாகிட்ட.... சும்மா இருக்க மாட்டியா?" என்று அமுதா செல்லம் கொஞ்சினாள்.


"நான் என் பேரப்பிள்ளைகளிடம் தான் விளையாட முடியும். அப்பா கிட்ட ரொம்ப நேரம் கேள்வி கேட்டு தெளிவடைஞ்சாச்சா! " என்று கடல்பாட்டி புன்சிரிப்புடன் சொன்னாள்.


" இல்லை" என்று இனியன் குரலை உயர்த்தினான்.


"என்னப்பா கோபம்?"என்றாள் கடல் பாட்டி.


 "பாட்டி பாய் மரம்னா என்ன?"


 "அதுவா.. சொல்லட்டா?


( கடல் பாட்டி பேசுவாள் )

3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jul 17
Rated 5 out of 5 stars.

நல்லாருக்கு தந்தையே

Like

Guest
Jul 16
Rated 5 out of 5 stars.

அசத்தல்

Like

Guest
Jul 16
Rated 5 out of 5 stars.

அருமை அருமை

Like
bottom of page