கமீலாவின் வீரம்
- ராஜலட்சுமி நாராயணசாமி
- Jul 15
- 3 min read

"மேத்யூ மேத்யூ இந்த இலை விழுது பிடி பிடி” எனக் கத்தியது அனா.
“இதோ வந்துட்டேன் அனா..” என ஓடியது மேத்யூ..
என்ன பெயரெல்லாம் வித்தியாசமா இருக்குனு பாக்குறீங்களா..
மேத்யூவும் அனாவும் தென் அமெரிக்க காடுகள்ல வாழ்றாங்க. அதான் அந்த பேரு.
அவங்க யாருன்னா கேக்குறீங்க?
"மேத்யூவும் அனாவும் பூஞ்சை வளர்க்கும் எறும்பு வகையைச் சேர்ந்தவர்கள். இலைவெட்டி எறும்புகள்னு கூட சொல்லலாம். அட வாங்க ஏதோ சொல்லுது மேத்யூ என்ன என்று கேப்போம்"
"உன் அளவுக்கு 3 மடங்கு இலைய எடுக்கனும். அல்லது குறைவா"
"சரி சரி நீ சொல்றது சரி தான். 3 மடங்க விட அதிகமா எடுக்கக்கூடாது. கண்காணிப்பாளர் சொல்லிருக்காரு"
"யாரு அந்த டியாகோ வா?"
"ஆமா அவர் தான். எவ்ளோ உயரமா இருக்காருல்ல" என இலையைத் தூக்கிக் கொண்டே கேட்டது அனா.
"அவனென்ன உயரம் அவன விட தலைமைக் கண்காணிப்பாளர் கமீலா தான் உயரம்" என எல்லாம் தெரிந்தது போல சொன்னது மேத்யூ.
இருவரும் பேசிக் கொண்டே புற்றின் வாயிலுக்கு வந்து விட்டனர்.
"நல்ல இலைய எடுத்துட்டு வந்தீங்களா?" எனக் கேட்டது காவல் எறும்பு.
"அங்க வாசல்ல என்ன டா சத்தம்? வேலைய பாருங்க" என்ற கமீலாவின் குரல் மட்டும் கேட்டது.
எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க ஓடினார்கள்.
மேத்யூவும் அனாவும் இலையைக் கொண்டு போய், புதிய விவசாயப் பகுதியில் வைத்தன.
"அட மேத்யூ, அனா வேகமா வந்துட்டீங்களே.. குடுங்க" என இலையை வாங்கிக் கொண்டது விக்டோரியா.
அங்கிருந்த விக்டோரியாவும், மற்ற எறும்புகளும் அந்த இலைகளை மென்றன. பின் தம் உமிழ்நீரோடு சேர்த்து ஒரு கலவையை உருவாக்கி ஓரிடத்தில் நிரப்பின.
இங்கு தான் இந்த இலைகளின் மீது பூஞ்சை வளரும். அந்த பூஞ்சை தான் எறும்புகளின் உணவு. இந்த பூஞ்சைத் தொகுதி முழுதாக ஆறு மாதங்கள் ஆகும்.
காவல் எறும்புகள் விவசாய இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.
அப்போது பரபரப்பாக வந்த இரண்டு காவல் எறும்புகள் டியாகோவைப் பார்த்தன.
"பூஞ்சைத் தொகுதி 4567ல் நோய்க் கிருமி தாக்கம் தெரிகிறது மேத்யூ" என்றன.
"என்ன நோய்க்கிருமியா? மேத்யூ, அனா என்னோட வாங்க" என அந்தப் பகுதிக்கு விரைந்தது டியாகோ.
அங்கே பூஞ்சைகளில் சில இடங்களில் நோய்த்தாக்கம் தெரிந்தது. இதை அப்படியே விட்டால் மொத்த தொகுதியும் வீணாகப் போய்விடும்.
"அனா நீ போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வா" என கட்டளையிட்டது டியாகோ.
விக்டோரியாவும் அவளது கூட்டமும் வந்து சேர்ந்தனர்.
."இந்த நோய்ப்பகுதிகளை எல்லாம் அப்புறப்படுத்து" என்றது டியாகோ.
நோய் தாக்கின பகுதிகளை அப்புறப்படுத்தி அவற்றை குப்பைப் பகுதியில் சேகரிக்க ஆரம்பித்தார்கள்.
வேகம் வேகம் என உற்சாகமூட்டியது டியாகோ.
காவல் எறும்புகளைக் கூப்பிட்டு பாராட்டவும் மறக்கவில்லை.
"வேலை செய்யாம என்ன வேடிக்கை. ஓடு" என்ற கமீலாவின் குரல் எங்கோ துரத்தில் ஒலித்தது.
ஓடு ஓடு என அடுத்த இலையை எடுக்க ஓடினர் மேத்யூவும் அனாவும்.
கமீலா மிகவும் சுறுசுறுப்பாக புற்றின் உள்ளேயும் வெளியேயும் கண்காணித்துக் கொண்டிருந்தது.
அனைத்து எறும்புகளும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தன. எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றியது.
ஆனால் புற்றின் உள்பகுதியில் இவர்களுக்கான ஆபத்து ஒளிந்து இருந்தது.
"கமீலா கமீலா அங்கே அங்கே" என பதற்றமாக ஓடி வந்தன லியாவும், ஜேம்ஸூம். இருவரும் கமிலாவைப் போன்ற கண்காணிப்பாளர்கள் தான்.
"ஏன் என்னாச்சு?" எனக் கேட்டது கமீலா.
"நம் இராணி அம்மா வழக்கத்துக்கு மாறா நடந்துக்கறாங்க. ஒரு பூஞ்சைத்தொகுதிக்குள்ள போய் எல்லாத்தையும் சாப்டுறாங்க"
"பசிச்சா சாப்ட மாட்டாங்களா? அதுவும் நம்ம இராணியம்மா" எனக் கேட்டது அனா மேத்யூவிடம். இருவரும் அதற்குள் அடுத்த சுற்று இலைகளை எடுத்து வந்திருந்தன.
"எனக்கும் ஒன்னும் புரியல. வா இலைய வச்சிட்டு வந்து பாக்கலாம்" என்ற மேத்யூ விக்டோரியாவிடம் இலையைக் கொடுத்து விட்டு நடந்ததைச் சொன்னது.
"எந்த பூஞ்சைத் தொகுதில இருக்காங்க?" எனக் கேட்டபடி விரைந்தது கமீலா. அவர்கள் பின்னாலே போனார்கள் மேத்யூவும் அனாவும். டியாகோவும் வந்து விட்டது.
"இப்ப நாம எல்லாரும் உணவு எடுக்க வேண்டியது கிழக்குப் பக்கம் இருக்கற 2695வது பூஞ்சைத் தொகுதியில தான"
"ஆமா!"
"ஆனா இராணி அம்மா மேற்குப்பக்கம் இருக்கற 3874வது தொகுதில போய் சாப்டுட்டு இருக்காங்க. காவல்கார எறும்புகளை எல்லாம் பயமுறுத்தி விரட்டிட்டாங்க" என்றது லியா.
"லியா நீ நல்லா பார்த்தயா? அது நம்ம இராணி தானா? ஜேம்ஸ் நீ வலது பக்கம் போய் அங்க இராணி இருக்காங்களானு பாரு" என்றது கமீலா.
"என்ன கமீலா சொல்ற? அதான் இராணி மேற்குப்பக்கம் இருக்காங்கனு சொல்றனே" என்றது லியா.
"அது போலி இராணியா கூட இருக்கலாம். அதனால நம்ம இராணி இருக்கற இடத்த பார்த்து அவங்கள நாம பாதுகாக்கனும். மேத்யூ நீயும் ஜேம்ஸ் கூட போ" எனக் கட்டளையிட்டது கமீலா.
"அனா, நீ காவல்கார எறும்புகள் நிறைய பேர அழைச்சுட்டு வா, டியாகோ நீ என் கூடவே வா" என போருக்குச் செல்வது போல கிளம்பியது கமீலா.
கமீலாவின் பாட்டியான மூத்த கண்காணிப்பாளர் எறும்பு அதனிடம் சொல்லி இருக்கிறது. சில நேரங்களில் வேறு இனத்தைச் சேர்ந்த இராணி எறும்புகள் நம் புற்றை ஆக்கிரமிக்க வரும். அவை பூஞ்சைகளைத் தின்னும், இராணி எறும்பை விரட்டி விட்டு நம்மை அடிமையாக்க முயற்சிக்கும், நம் இன முட்டையிடாது"
அதெல்லாம் கமீலாவுக்கு நினைவுக்கு வந்தன.
"அந்த பெரிய தாத்தா எறும்பு கூட சொன்னது. நம்ம எறும்புக்கூட்டத்திலேயே போலி இராணி உருவாகுமாம். அது முட்டை போடும் எறும்புகள் உருவாகும். ஆனா அந்த போலி இராணியும் அதோட எறும்புகளும் வேலை எதுவும் செய்யாம நம்ம பூஞ்சைகள சாப்பிடுமாம்" எனத் தன் பங்கிற்கு கதை சொன்னது டியாகோ.
மேற்குப்பக்க 3874வது தொகுதிக்கு வந்து விட்டார்கள்.
"இது நம்ம இராணி இல்ல. வேற இனம் போலி இராணி பொய்க்கா.. தாக்குங்க தாக்குங்க" எனக் கூச்சலிட்டது கமீலா.
அதற்குள் காவல் எறும்புகளை அழைத்து வந்து விட்டது அனா.
எல்லா எறும்புகளும் வீரத்தோடு போரிட்டன. போலி இராணி பொய்க்கா நிறைய எறும்புகளை விரட்டி விட்டது.
எனினும் அஞ்சாமல் அதனோடு மோதினார்கள் காவல்கார எறும்புகள்.
பொய்க்காவின் இறக்கைகளை மொய்த்து பிய்க்க ஆரம்பித்தன. போலி இராணி எனத் தெரிந்ததும் சமிக்சை கொடுக்கபட்டு நூற்றுக்கணக்கான காவல் எறும்புகள் வர ஆரம்பித்தன.
அவற்றின் தாக்குதலைத் தாங்க இயலாமல் தப்பி ஓட முயன்றது பொய்க்கா.
கமீலா அதன் காலைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. அனா அதன் தலையில் ஏறிக் கொண்டது.
இறக்கைகளை அசைத்து அசைத்து மேலே எழும்பியது போலி இராணி எறும்பு.
அனா கீழே விழுந்து விட்டது. போலி இராணி தப்பித்து ஓடி விட்டது. இனி அது இவர்கள் புற்று பக்கமே வராது.
"போலி இராணி ஓடி விட்டது. அவரவர் இடத்துக்கு திரும்புங்க" எனக் கட்டளையிட்டது கமீலா.
"கமீலா சிறப்பு சிறப்பு" என பாராட்டிக் கொண்டே சென்றன எறும்புகள்.
"அனா உனக்கு அடி படலையே" என தூக்கி விட்டது டியாகோ.
"எல்லாரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா.
கமீலா அவசர அவசரமாக கிளம்பியது. "எங்க போற கமீலா" என பின்னாலேயே வந்தது லியா.
"இராணி அம்மாவோட பாதுகாப்ப உறுதி செய்ய" என்றது கமீலா.
"நாங்க இராணி அம்மாவுக்கு காவலா இருந்தோம். பத்திரமா பாத்துக்கிட்டோம்" என பெருமையாக சொன்னது மேத்யூ.
"மேத்யூ, ஜேம்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க" என பாராட்டியது கமீலா.
அப்போது அங்கே வந்தது இராணி அம்மா.
"கமீலா, உன் புத்திசாலித்தனமும் தைரியமும் தான் நம்ம குடும்பத்த இன்னிக்கு காப்பாத்துச்சு. இனிமே நீ தான் நம்ம புற்றோட தலைமைக் காவல் அதிகாரி" என்ற இராணி கமீலாவின் தலையைத் தடவி விட்டுச் சென்றது.
"இராணியா பிறக்கலைன்னாலும் நம்ம இராஜ்ஜியத்தையே நீ காப்பாத்திட்ட" என வாழ்த்தியது இராஜா எறும்பு.
"தலைமைக் காவல் அதிகாரி கமீலா வாழ்க" என எம்பிக் குதித்தன மேத்யூவும் அனாவும்.
எறும்புகளின் நாட்டுக்கு போய் வந்தேன். இலைகளை சேகரித்து பூஞ்சை வளர்க்கும் எறும்புகள் மேத்யூ, அனா. இலை மெல்லும் எறும்பு விக்டோரியா, காவல்கார எறும்புகளின் வீரப்போர், கண்காணிப்பாளர் எறும்புகள் டியாகோ, லியா, ஜேம்ஸ். தலைமை கண்காணிப்பாளர் எறும்பு கமீலாவின் புத்திக்கூர்மை, பெரிய தாத்தா எறும்பு டியாகோவிடம் சொன்ன போலி ராணியும் அதன் கூட்டமும் வேலை செய்யாமல் பூஞ்சை தின்னும் இரகசியம், பாட்டி எறும்பின் அனுபவப்பாடம், இராஜா எறும்பு. இராணி அம்மா எறும்பை காவல் காத்த மேத்யு, ஜேம்ஸ். தலைமை காவல் அதிகாரி எறும்பு என எறும்பு பட்டாளத்தில் சஞ்சாரம் செய்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த மனிதர்களை மறந்தே போய்விட்டது.
கதைக்குள் நடப்பு ஒன்று.. இல்லை பலவும் ஒளிந்திருக்கவே செய்கிறது.
ஜெ.பொன்னுராஜ்
👌👌👏👏❤️