எல்லாக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் சிறார் இலக்கியத்தில் வேண்டும் - யெஸ்.பாலபாரதி
- யெஸ்.பாலபாரதி

- Jul 15
- 2 min read

1. சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்புகளும் போதாமைகளும் என்னென்ன?
சமகால சிறார் இலக்கியத்தின் சிறப்பு என்பது பல்வேறு துறைப் பின்னணி கொண்டவர்களும் எழுதத் தொடங்கியிருப்பதுதான். அதன்மூலம் சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகமாகியுள்ளது உண்மையில் மகிழ்வளிக்கிறது. ஆனால் அதன் ஆழம் அதே விகிதத்தில் அதிகரிக்கவில்லை என்பது வருத்தத்தையும் தருகிறது. இதையே சமகால சிறார் இலக்கியத்தின் போதாமையாக நான் பார்க்கிறேன். குழந்தைகளுக்குத்தானே நூல் எழுத வேண்டும், எனவே இங்கே குறைந்தபட்ச உழைப்பைப் போட்டு, அதிகபட்சமான புகழ், விருது போன்றவற்றை பெற்றுவிடலாம் என்ற தவறான கற்பிதத்தோடு பலரும் உள்நுழைகின்றனர். அவர்களால் சொந்தமாக எதையும் சொல்ல முடியாதபோது ஏற்கனவே வேரூன்றிய படைப்பாளிகளின் படைப்பிலிருந்தே அங்குமிங்குமாக உருவியெடுத்த உருப்படிகளைக் கொண்டு, துரித உணவுகளைப் போல படைப்புகளைச் சமைத்துப் பரிமாறுகின்றனர். இத்தகைய நூல்களை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாது அதற்கான விளம்பரங்களையும் முழுமூச்சாகச் செய்து, சிறார் இலக்கியத்தின் மேற்பரப்பை ஆகாயத் தாமரை போல மூடுகிறார்கள் என்பதே இப்போதைய சிறார் இலக்கியத்தின் முதன்மையான சிக்கல்.
2. இன்றைய சிறார் இலக்கியத்தில் அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம்
இருக்கிறதா?
பிறமொழிப் படைப்புகளோடு ஒப்பிடுகையில், அனைத்துக் குழந்தைகளுக்குமான பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லை என்பதே உண்மை. ஒரு படைப்பில் ஒரு குறிப்பிட்ட பின்னணியைச் சார்ந்த அல்லது வகைமையை சேர்ந்த குழந்தைக்கான பிரதிநிதித்துவம் என்பது இரு வகையில் இருக்கலாம். ஒன்று, அந்தக் குழந்தைகளின் சிக்கல்களும் சிறப்புகளும் விரிவாகப் பேசப்படலாம். அல்லது பொதுவானதொரு படைப்பில் தானும் இடம்பெறுவதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கதையில் இரு மதத்துக் குழந்தைகளின் ஒற்றுமை, உணர்வு பூர்வமான நட்பு போன்றவை பேசப்படலாம். அல்லது ஒரு சாகசக் கதையில் இடம் பெறும் நண்பர் குழுவில் எல்லா மதத்துக் குழந்தைகளும் இடம் பெறுவதாகக் காட்டலாம். என்னுடைய ஆமை காட்டிய அற்புத உலகம் போன்ற சாகசக் கதைகளில் இடம் பெறும் நண்பர் குழுவில் மும்மதப் பெயர் கொண்ட குழந்தைகளும் உண்டு. அதே போல் எனது பெரும்பாலான கதைகளில் மாற்றுத் திறன் குழந்தைகளும் இடம் பெறுவர். சந்துருவுக்கு என்ன ஆச்சு, துலக்கம் போன்ற மாற்றுத் திறன் குழந்தைகளின் பிரத்யேக சிக்கல்களைப் பேசும் கதைகளும் என் படைப்புலகில் உண்டு. எனவே இருவிதமாகவும் எல்லா வகைக் குழந்தைகளும் இலக்கியத்தில் இடம் பெறுவதை படைப்பாளிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. சமகாலச் சிறார் இலக்கியத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும்?
முந்தைய இரு கேள்விகளுக்கான எனது விடைகளையும் சேர்த்தாலே இந்தக் கேள்விக்கான விடை வந்துவிடும். சிறார் இலக்கியத்தின் அகலம் அதிகரிப்பதைப் போலவே அதன் ஆழமும் அதிகரித்தாக வேண்டும். அதாவது வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் படைப்பாளிகளும், அவர்களது உலகின் நுட்பமான பேசுபொருட்களை சிறார் இலக்கியத்தில் படைப்பாக மாற்ற வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் உலகில் நாம் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும். சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் இருக்கும் குழந்தைகளுக்கான பிரதிநிதித்துவமும் நம் படைப்புகளில் இருந்தே தீர வேண்டும். வேறுபட்ட பின்னணி கொண்ட குழந்தைகள் படைப்புகளில் உலாவும்போது, வாசிக்கும் அதே பின்னணி கொண்ட குழந்தைக்கு அது ஒரு கூடுதல் மகிழ்வைத் தந்து, தன்னை அப்படைப்போடு இணைத்துக் கொள்ள உதவும். அதே நேரம் மற்ற பின்னணிகளில் உள்ள குழந்தைகளுக்கு, பிற குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலையும் தர முடியும். இதுவே அக்குழந்தைகளுக்கு பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனை(Empathy) கூர்மைப்படுத்தி, குடிமைப் பண்பு கொண்ட ஒரு பண்பட்ட சமூக உறுப்பினராக வளர்த்தெடுக்கும்.

4. கடந்த ஐந்தாண்டுகளில் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்வூட்டுகிறது. ஆனால் அதே நேரம் மேலே நாம் பேசியிருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய தரமான படைப்புகள் மிக அரிதாகத்தான் வந்திருக்கின்றன. நாம் போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்பதே என் எண்ணம்.
5. சிறார் இலக்கியம் மரப்பாச்சி சொன்ன ரகசியத்துக்கு முன் மரப்பாச்சி சொன்ன
ரகசியத்துக்குப் பின் எப்படி இருக்கிறது?
சிறார் இலக்கியத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்பதை விடவும், வாசிப்பாளர்களிடம் அந்நூல் ஏற்படுத்தியுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை பல்வேறு எதிர்வினைகள் மூலம் உணர்ந்து வருகிறேன். வேதாளம் தோளில் தொங்குவது, தெனாலி ராமன்/பீர்பால் போன்ற விதூஷகர்களின் கதைகள் போன்றவை மட்டுமே சிறார் இலக்கியம் என்று எண்ணியிருந்த பல பெற்றோர்களுக்கும், மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலின் அறிமுகம் சென்று சேர்ந்தது. அதன் மூலம் சிறார் இலக்கியத்தில் சமகாலச் சிக்கல்களும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித்தரும் சூழல் உருவானது. தனிப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இந்நூலை வாங்கித் தந்து வாசிக்கச் செய்வதைப் போலவே, பல்வேறு இடங்களில் இந்நூல் கூட்டு வாசிப்புக்கு உட்படுத்தப்படுவதையும் நெகிழ்வோடு கண்டு வருகிறேன். குறிப்பாக ‘தர்மபுரி வாசிக்கிறது’ எனும் நிகழ்வில் மூவாயிரம் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இந்நூல் சென்று சேர்ந்ததையும், அத்தனை குழந்தைகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அந்நூலை வாசித்ததையும் அருகிலிருந்து பார்க்க நேரிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான, மகிழ்வானதொரு தருணம். அந்த கூட்டு வாசிப்பை முன்னிட்டே அந்நூலின் காப்புரிமையை பொதுவில் வைத்தேன். அதே போல குழந்தை நேய செயல்பாட்டாளர்கள் பலரும் அந்நூலை பல நூறு பிரதிகள் வாங்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தபடியே இருப்பது ஒவ்வொரு முறையும் என்னை நெகிழச் செய்கிறது.
நேர்காணல் - உதயசங்கர்




Comments