பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்
- அமுதா செல்வி
- Jul 15
- 1 min read

வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.
இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தீராக் காதலும் கருணையும் கொண்ட தலைசிறந்த பண்புடைய தலைவனான பறம்பின் பாரியை பாணர்களும் புலவர்களும் சிலாகித்து பாடினர். அப்படிப்பட்ட இனக்குழு சமூகத்தின் தலைவனான பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் நீட்சியே இந்த நாவல்.
உலகின் தொல்குடியான தமிழ்குடியின் அறம் சார்ந்த வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் பாரியின் சங்க கால வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு இளையோர் நாவலினை மிகச் சிறந்த முறையில் படைத்திருக்கிறார்.
"சாகசங்களை தேடும் பதின்ம வயதில் பறம்பின் ஏழு மலைகளை அறிந்து கொள்வதில் தன் முழு ஆற்றலையும் செலவழித்தான் பாரி. ஒரே நேரத்தில் இளமையின் வலிமையையும் முதுமையின் பேரன்பையும் பாரியால் காட்ட முடிந்தது" என்பதை வாசிக்கும் போது எப்படி பாரி பேராற்றல் உடைய தலைவனாக தன்னுடைய பதின் பருவத்திலேயே உருவாகிக் கொண்டிருந்தான் என்பதை இந்த நாவலின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் பாரியிடம் கிடைக்கப்பெற்ற கருணையை வேறு எந்த மன்னரிடமும் எந்தப் பாணரும் புலவரும் உணர வில்லை என்று கபிலர் குறிப்பிடுவதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவருடைய பதின் பருவம் இருந்தது என்பதனை அறிந்து கொள்ள இந்த நாவல் துணை செய்கிறது.
கடல் கடந்து பரவி இருக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கும் பாரியின் வரலாற்றை இளையோருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவன் வேள்பாரியாக உருவாவதற்கு பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி துணை செய்தது என்பதையும் கண்முன் காட்சிகளாக விரித்து காட்டுகிறது இந்த நாவல். வாசித்து முடித்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும் பாரியின் கரம் பிடித்து பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி இப்போதும் மனது முழுவதும் நிரம்பி வழிகிறது.
வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 9751549992
Comments