இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- கரடிக்கு ஏன் குட்டையான வால் வந்தது?
ஒரு குளிர் கால காலை நேரம். ஒரு நரி ஒரு கொத்து மீன்களை மீனவனிடமிருந்து திருடியது. நரி தன் குகைக்குப் போகும் வழியில் கரடியைச் சந்தித்தது. நரியிடம் இருக்கும் மீன்களைப் பார்த்து கரடியின் கண்கள் பெரிதாயின. கரடியின் நீண்ட வால் உற்சாகத்தில் ஊஞ்சல் போல் ஆடியது. (குழந்தைகளே, முன்னொரு காலத்தில் கரடிகளுக்கு நீண்ட வால் இருந்தது.) நரி கரடியிடம் கேட்டது : 'அம்மாடி! இவ்வளவு மீன்கள் உனக்கு எப்படி கிடைத்தது. எனக்கும் கொஞ்சம் கொடுப்பியா?' 'இல்லை. இவைகள் என்னுடைய மீன். இவைகளைப் பிடிக்க எனக்கு ரொம்ப நேரமானது. உனக்கு வேண்டுமென்றால் நீயே பிடித்துக் கொள்' என்றது நரி. 'தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கு. நீ எப்படி மீன்களைப் பிடித்தாய்?' கரடி ஆச்சரியத்துடன் கேட்டது. கண்களை சிமிட்டிக் கொண்ட நரி, 'ஏன் நீ என்னுடன் வா. உனக்குக் காட்டுகிறேன், என்றது. நரி கரடியை ஏரிக்கு அழைத்துச் சென்றது. 'கரடியே, ரொம்ப எளிது. பனிக்கட்டியில் முதலில் ஒரு ஓட்டைப் போடு. அதில் உன் வாலை விடு. ரொம்ப நேரம் வைத்திரு. உன் வாலில் வந்து மீன்கள் கடிக்கும். நிறைய மீன்கள் வேண்டுமென்றால் ரொம்ப நேரம் வைத்திருக்கனும். வாலை எடுத்து விடாதே. நிறைய மீன்களைப்பிடித்து விட்டோம் என்று நீ நினைத்தவுடன் வாலை பலமாக இழு' என்று நரி கரடிக்கு மீன் பிடிக்கும் வழியைச் சொன்னது. நரி சொன்னது போலவே கரடி செய்தது. கொஞ்ச நேரம் ஆனது. தன் வாலை ஏதோ கடிப்பது போல் உணர்ந்தது. 'நரி நீ சொன்னது சரி' என்று கரடி மகிழ்ச்சியில் கத்தியது. 'நான் மீன்களை பிடித்து விட்டேன்' என்றும் சொன்னது. அதைக் கேட்ட நரி ஓடியே போய் விட்டது. ஓடும் போதே தனக்குள் சிரித்துக் கொண்டது. கரடியின் வால் உறை பனிக்குள் சிக்கிக் கொண்டது என்பது நரிக்குத் தெரியும். அதனால்தான் அது ஓடியது. கரடி மதியத்திற்கு மேலும் அங்கு உட்கார்ந்து இருந்தது. கரடியின் வால் மேலும் மேலும் கடிப் பட்டது. நரியை விட அதிகமான மீன்களைப் பிடித்து விட்டோம் என்று கரடி எண்ணிக் கொண்டது. கடைசியாக கரடி மீன்களைப் பிடித்தது போதும் என்று முடிவுக்கு வந்தது. கரடி தன் வாலை உறை பனிக்குள்ளிருந்து வெளியே இழுத்தது. வால் கொஞ்சம் கூட நகரவில்லை. இன்னொரு முறை வேகமாக இழுத்தது. ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக கரடி தன் முழு பலத்தையும் சேர்த்து இழுத்தது. வால் அறுந்து விட்டது. (குழந்தைகளே! அன்று முதல் கரடிகளுக்கு குட்டையான வால் வந்து விட்டது.) கரடி வலியால் கத்தியது. 'நரி நீ என் கையில் கிடைத்தால் சட்னி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டது. கரடி நரியைத் தேடி அலைந்தது. கடைசியாக நரி கரடியிடம் மாட்டிக் கொண்டது. குழந்தைகளே! கரடி நரியை என்ன செய்தது? என்பது அடுத்த கதை. ( நார்வே நாட்டு நாடோடிக் கதை )
- பேசும் கடல் - 1
கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள் இனியனையும் அமுதாவையும் தொட்டுவித் துடித்தன. அருகில் அவர்களது அப்பா மீன்பிடி வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அலை வந்து. அமுதாவையும் இனியனையும் தொட்டது.தஈர மணலில் கட்டிய கோபுரங்களும் வீடுகளும் அலையில் கரைந்தன. அமுதாவுக்கு கோபம் வந்தது. “உனக்கு ரொம்ப கொழுப்பு, நாங்க கட்டிய வீட்டை ஏன் இடிச்ச “ கடலைப் பார்த்துக் கேட்டாள் அமுதா. “ இது நான் தினமும் வந்து போகும் இடம்தான் இன்றைக்கு நீங்கள் கோபுரம் கட்டி இருப்பதை கவனிக்கவில்லை, சாரி பேத்தி “ என்று கடல் சிரித்தது. ” என்னது நான் உன் பேத்தியா? ” “ஆமாம்; மனிதர்களுக்கு நான் தானே தாய்.. கடல்தாய்.. சொல்லப்போனால் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய் “ ’ உண்மைதான் பாட்டி அதுக்கு என் கோபுரத்தை இடிக்க வேண்டுமா? “ உங்க கிட்டே பேசணும்னு தான் வேகமாக வந்துட்டேன்.. சாரி..” "ஓ.... அப்படியா பாட்டி.. நீங்க கூப்பிட்டா நாங்களே வந்துருப்போம்..” ” இனியன் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து நிலங்களை பற்றி குறிப்பிடுகிறார். அதில் நெய்தல் நிலத்தை பற்றி கூறும்போது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று அழைக்கப்படும் என்கிறார். அதாவது “வருணன் மேய பெருமணல் உலகம்” என்று அடைமொழி கொடுக்கிறார் “ ” கடல் பாட்டி நாங்க எட்டாம் வகுப்பு தான் படிக்கிறோம். தொல்காப்பியம் எல்லாம் எப்படி எங்களுக்கு புரியும்?. ” என்றான் இனியன். “அது சரி கடற்கரை என்பது மணல் நிறைந்த பெருவழி என்று இதற்கு பொருள். சங்க பாடல்களில் கடற்கரைப் பகுதிகள் வெண்மணல் வெளியாக இருந்தது என்றும் இங்கு கடல்சார் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு இவர்களின் தொழில் கருவிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடற்கரையோரம் நெய்தல் மக்கள் கடல் தோன்றிய காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த பகுதியை உங்களுக்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்.” “பாட்டி அம்மா அதுக்கு ஏன் தொல்காப்பியம் சங்க இலக்கியம் என்று சொல்றீங்க நம்ம ஊரில் வாழும் மக்களே இதற்கு சான்று, என்றாள் அமுதா. ” சபாஷ் அமுதா கடற்கரையோரம் கடல் தொழில் செய்து வாழும் அனைவரும் நெய்தல் நிலத்துக்காரர்கள் இவர்கள் அனைவரையும் பரதவர்கள் என்று அழைப்பர் இதற்கு உறுதிமிக்க படகை ஆள்பவன் என்று பொருளும் உண்டு. இவர்கள் படகுகளில் வந்து என்னிடம் மீன்பிடித்து வாழ்கிறார்கள். கட்டுமரம் நாட்டு படகு விசைப்படகு என்று பல வடிவங்களில் மீன் பிடிக்கிறார்கள். தோணி மீன்பிடிக்கப்பல் என்று மிகப்பெரிய அளவிலும் மீன்பிடித்தலும் சரக்கு வணிகமும் நடைபெறுகிறது. மீன்களை பிடிப்பதற்கு வலை தூண்டில் ஒருவகையான உளி போன்றவை பயன்படுத்துகிறார்கள். ” ” எங்க அப்பா வலைவீசி தான் மீன் பிடிப்பாங்க, எப்பவாச்சும் தூண்டில் மீன் பிடிப்பாங்க உளியில் மீன் பிடிப்பதை நாங்கள் பார்த்ததே இல்லையே? ” என்று இனியன் கேட்டான். ” பழங்காலத்தில் உளியை எரிந்து மீன் பிடித்துள்ளனர் சுறாமீனை பிடிக்க வலை வீசினால் அது வலையை கிழித்துக்கொண்டு மீண்டும் என்னிடமே வந்துவிடும். அதனால் உளியை எரிந்து மீனை பிடிப்பார்கள். நெய்தல் மக்களை வேட்டை சமூகம் என்றும் அழைக்கிறார்கள். “எங்க அப்பா எதுவுமே எங்களுக்கு சொல்லவே இல்லையே ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!!! ” என்றாள் அமுதா. ” ஆச்சரியப்படுறீங்களா! என்னிடமும் பெரும் ஆச்சரியமிக்க அதிசயங்கள் மிக்க பல வளங்கள் இருக்குது.. என் மடியில் வாழக்கூடிய நெய்தல் நிலத்து மக்களிடமும் பல்வேறு பண்பாட்டுகள் உள்ளன. அதைப்பற்றி உங்களுக்கு நான் விரிவாக சொல்லுகிறேன். பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்புகள், பழக்கவழக்கங்கள்?, தொழில்நுட்ப அறிவு, வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு போன்றவற்றை பற்றி அறிவது. நான் உங்களுக்கு புரிகிற மாதிரி விளக்கமா சொல்றேன்.” ” சொல்லுங்க..பாட்டி..” ( அலை அடிக்கும் )
- ஏன் பிறந்தோம்? - 1
குழந்தைகளுக்குத் தத்துவமா? இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? ஒரு உண்மை தெரியுமா? இயற்கையில் குழந்தைகள் எல்லாருமே தத்துவவாதிகள் தான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதா? தத்துவம் எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்கிற காரியம். பெரியவர்களுக்கே புரியாத விஷயம். இதில் குழந்தைகளுக்குத் தத்துவம் என்பதெல்லாம் கேலிக் கூத்தாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஒரு விஷயம் தெரியுமா? குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களான நாமும் தத்துவவாதிகள் தான். அன்றாடம் தத்துவச்சிந்தனைகளுடன் தான் நாளைத் தொடங்குகிறோம். நாளை முடிக்கிறோம். நாமும் தத்துவவாதிகள் என்று நமக்கே தெரியாது. ஏன் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாது? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! இன்னும் பல ஆச்சரியங்களை இந்தத் தொடரில் சந்திக்க இருக்கிறோம். இப்போது குழந்தைகளிடம் தொடங்குவோம். பொதுவாகக் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்றோ எதுவும் தெரியாது! என்றோ குழந்தைகள் மீது அலட்சியம் காட்டுகிறோம். ஆனால் பிறக்கும் போதே குழந்தைகள் தத்துவச்சிந்தனையுடன் பிறக்கின்றன. எப்படி? அதைப் பார்ப்பதற்கு முன்னால் முதலில் தத்துவம் என்றால் என்ன? என்று பார்த்து விடலாமா? தத்துவம் என்பது இந்த உலகை அறிந்து கொள்வது. வாழ்க்கையைப் புரிந்து கொள்வது. வாழ்க்கையை விளக்குவது. வாழ்க்கையின் நோக்கம் பற்றி விவாதிப்பது. வாழ்க்கையின் லட்சியங்களை உருவாக்குவது. இப்படிச் சொல்லலாம். இவை தனித்தனியாகவோ சேர்ந்தோ இருக்கலாம். சரிதானே! இந்த பூமியில் உள்ள எந்த விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, தத்துவம் பேசுகிறதா? இல்லை. ஏன் பேசுவதில்லை? மிக முக்கியமான காரணம், அவை தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன. அப்படி வாழ்வதற்கான இயற்கைச்சூழல் இல்லாதபோது மறைந்து விடுகின்றன. அப்படிப் பல பறவைகள், விலங்குகள் மறைந்ததை நாம் அறிவோம். அவற்றின் தோற்றம் பற்றியோ, மறைவைப் பற்றியோ அவற்றிற்குத் தெரியாது. ஏன் பிறந்தோம் என்றோ? எப்படிப் பிறந்தோம் என்றோ? எதற்காகப் பிறந்தோம் என்றோ? அவை சிந்திப்பதில்லை. பிறக்கும்போதே தன் உடலில் தகவமைந்திருக்கும் மரபணுக்களின் தூண்டுதலில் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றைச் செய்கின்றன. இவற்றில் எதையும் கட்டுப்படுத்தவோ, மாற்றவோ விலங்குகளால் முடியாது. இயற்கையின் தீர்மானத்தின் படியே வாழ்ந்து மடிகின்றன. என்ன காரணத்தினால் அவற்றால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆமாம். அவற்றிற்குச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை. அது தான் எனக்குத் தெரியுமே என்று நினைக்கிறீர்களில்லையா! சரிதான். ஆக நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம். தத்துவத்துக்கு அடிப்படை சிந்தனை. அல்லது சிந்திக்கும் ஆற்றல் மனிதன் பிறந்ததிலிருந்தே சிந்திக்கும் விலங்காக இருக்கிறான். எனவே அவன் தத்துவவாதியாகவும் இருக்கிறான். என்ன சரிதானே! அப்படி என்றால் குழந்தைகளும் தத்துவவாதிகளாகத்தான் பிறக்கிறார்கள் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? சரி. தத்துவத்துக்கு அடிப்படை என்ன? சிந்திக்கும் ஆற்றல். சிந்திக்கும் ஆற்றல் என்றால் என்ன? (தொடரும்)
- சாவித்திரிபாய் பூலே
ஜோ : வணக்கம் செல்லங்களா! சிறார்கள் : வணக்கம் ஜோ அத்தை! ஜோ : இன்னைக்கு இந்தியாவில் பெண்கல்விக்கு வித்திட்ட இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரைப் பற்றித் தான் பார்க்கப் போறோம். ரதி : சாவித்திரிபாய் பூலே பற்றியா? ஜோ : ஆமாம்.. அவங்களப் பற்றித்தான் சாவித்திரிபாய் மகாராஷ்டிரா மாநிலம், கண்டால் மாவட்டத்தில் உள்ள நைகான்தா என்ற கிராமத்தில் 1831 ஆம் ஆண்டு பிறந்தார்.அந்தக் கால வழக்கப்படி சாவித்திரிபாய்க்கு 9 வயதிலேயே ஜோதிபாபுலே வைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். நகுலன் : என்னது ஒன்பது வயசிலேயே கல்யாணமா? ஜோ : ஆமாம், அந்தக் காலத்தில் சிறுவயது திருமணங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. அதே மாதிரி சாதிப்பாகுபாடுகளும் கடுமையாக இருந்தன. ரதி : சாதிப் பாகுபாடுன்னா என்னது அத்தை? ஜோ : மனிதர்களை உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பிரித்து ஒருவருக்குக் கீழ் இன்னொருவர் என்று இழிவுபடுத்துகிற சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள்.. உதாரணத்துக்கு உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது. என்பது தொடங்கி. பொதுக்குளத்தில் நீர் எடுக்கக்கூடாது.. கல்வி கற்கக்கூடாது.. இதுவெல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் ஜாதியினர் ஏற்படுத்திய எழுதாத சட்டம். நகுலன் : மனிதருக்கு மனிதர் இப்படிச் செய்யலாமா? ஜோ : நிச்சயமாகச் செய்யக்கூடாது . அதைவிட கொடுமை, பெண்கள் எந்த ஜாதியில் இருந்தாலும் அவர்களும் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டனர். பெண்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று சட்டங்கள் இருந்தன.. இவற்றையெல்லாம் அருவருப்புடன் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஜோதிராவ் பூலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களின் உரிமையை காக்கவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராட ஆரம்பித்தார். ரதி : அவரு ஒரு சூப்பர்மேன் சரியா அத்தை! ஜோ : ரொம்பச் சரியா சொன்னாய் ஆதவ்.. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் உண்மையில் சூப்பர் மேன். இருவரும் : கரெக்ட்.அத்தை.. அப்புறம்? ஜோ : முதன் முதலில் தன் வீட்டில் இருந்தே புரட்சி தொடங்கினார் ஜோதிராவ்பூலே. தாழ்த்தப்பட்ட மக்களின் துயரம் நீங்கவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போக்கவும் கல்வி அவசியம் என்று தன் மனைவி சாவித்திரிபாயிடம் கூறினார்.சாவித்திரிபாய்க்கு அவரே கல்வி கற்றுக் கொடுத்தார். இதனால் குடும்பத்தினர் மற்றும் உயர் வகுப்பினரின் வெறுப்புக்கும் கொடுமைக்கும் ஆளாக நேரிட்டது. ரதி : அச்சச்சோ அப்புறம் என்ன ஆச்சு? பயந்துட்டாரா? நகுலன் : மக்களுக்கு நல்லது செய்றவங்க பயப்பட மாட்டாங்க. ஜோ :சரியா சொன்னே. நகுல். சாவித்திரிபாய்க்கு அவர் கற்றுக் கொடுத்தபிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்தார். அதன் பிறகு அவர் நிறுவிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக்கினார். ரதி : அப்படியா? அப்ப முதல் பள்ளிக்கூடம் தொடங்கியவர் ஜோதிராவ்பூலே தானா அத்தை? ஜோ : ஆமாம், எல்லா சாதியினரும் கல்வி கற்கும் பள்ளியை முதன் முதலில் தொடங்கியவர் அவர்தான். ஆனால் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியது சாவித்திரிபாய்பூலே தான். நகுலன் : வாவ்..கிரேட்..அந்தப் பள்ளியை எப்படி நடத்தினார் அத்தை? ஜோ : வீட்டில் இருந்து அவர் பள்ளிக் கூடம் செல்லும் வரை உயர்சாதியினரில் ஒரு சிலர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். சாணம், அழுகிய முட்டை, கற்கள், மலம் இவற்றையெல்லாம் அவர் மீது வீசினார்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டே பள்ளிக்கூடம் வருவார். அங்கு எடுத்து வந்திருந்த மாற்றுப் புடவையை மாற்றிக் கொண்டு கல்வி கற்பிப்பார். . ரதி : ஏய் இவங்க சூப்பர் ஹீரோயின் பா ஜோ : உண்மைதான், சற்றும் சோர்வு அடையாமல் 1849, ஆம் ஆண்டு தொடங்கி 1853 ஆண்டுக்குள் பெண்களுக்கான 18 பள்ளிக்கூடங்களை த் தொடங்கினார். அந்தக் காலத்தில் இளம் விதவைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களது முடியை மொட்டை அடித்து அலங்கோலப்படுத்தினார்கள்.. .சாவித்திரிபாய் முடிதிருத்துபவர்களை ஒன்று திரட்டினார். இனிமேல் இளம் விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்று நாவிதர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தார். நகுலன் : கேட்கும்போது சாவித்திரிபாய்பூலே மீது மரியாதை அதிகமாகுது அத்தை.. ஜோ : அதுமட்டுமல்ல..முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். பூனேவில் 1897 ஆம் ஆண்டு பிளேக் நோய் தீவிரமாக பரவியது சாவித்திரிபாய் மருத்துவரான தன் மகனுடன் நோயற்ற ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உதவினார். அப்போது சாவித்திரிபாய்க்கும் பிளேக் தொற்று ஏற்பட்டு அவர் இயற்கை எய்தினார். சிறார்கள் : அப்படின்னா இப்போது நாங்கள் எல்லாரும் கல்வி கற்பதற்கு ஜோதிராவ்பூலேவும் சாவித்திரிபாய்பூலேவும் தான் காரணமா? ஜோ : நிச்சயமாக.. அதனால் கல்வியை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.. அதுதான் அவர்கள் பட்ட துன்பங்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.. சிறார்கள் : ஆமாம் அத்தை.. படித்து நாங்கள் முன்னேறுவோம்.. ஜோ : நன்றி செல்லங்களா.. திரும்பவும் அடுத்த மாதம் இன்னொரு ஆளுமையை பத்தி தெரிஞ்சுக்கலாம்.
- குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள்
நூல் : பிரேமாவின் புத்தகங்கள் ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன் பக்கங்கள் : 48 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தன் மீது வாஞ்சையாய் இருந்து, விரல் பிடித்து அழைத்து போன மனிதர்களை ஆவணப்படுத்தும் வேணுவன மனிதர்கள் என்ற நூலும், நெல்லையைப் பற்றிய ஒரு சுருக்கமான சுவராசிய கையேடான திருநெல்வேலி நிலம் -நீர் - மனிதர்கள் என்ற நூலும் காலம் கடந்தும் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் நூல்கள். இந்த நூல்களைப் படைத்த படைப்பாளி மறைந்த எழுத்தாளர், கதைசொல்லி இரா.நாறும்பூநாதன் அவர்கள். குதூகலிக்கும் குழந்தை மனம் நிரம்பிய எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறார் இலக்கியத்திலும் முத்திரையைப் பிரேமாவின் புத்தகங்கள் மூலம் பதித்துச் சென்றிருக்கிறார். இதில் மொத்தம் 7 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு சமகால பிரச்சினைகளை எளிய மொழியில் குழந்தைகளுக்கு கடத்துகிறது. பிரேமாவின் புத்தகங்கள்:- கோடை விடுமுறை முடிந்து, அடுத்த வகுப்பிற்குள் பிரேமா நுழைந்ததும், தன்னுடைய புது புத்தகங்களுக்கு அட்டை போட பிரேமா நினைக்கிறாள். விளையாட்டு என்றால் அனைத்தையும் மறந்து விடும் இயல்பு கொண்டவர்கள் குழந்தைகள். புத்தகங்களை மறந்துவிட்டு விளையாட பிரேமா சென்றவுடன், புத்தகங்களுக்குள் போட்டா போட்டி. தானே சிறந்தவன் என்றும் தனக்குத்தான் பிரேமா முதலில் அட்டை போடுவாள் என்று இறுமாப்பாய் பேசிக் கொண்டிருக்கும்போது, தளும்பாத நிறைகுடத்தைப் போன்று அமைதியாய் இருக்கிறது ஒரு புத்தகம். பிரேமா அட்டை போட முதலில் எந்த புத்தகத்தை எடுப்பாள்? ஏன் ? என்று சுவாரசியமாய் சொல்லும் கதை. மாடசாமி உண்மையில் மக்கு தானா? இன்றைய கல்விமுறை மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் திறமையை அளவிடுகிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வியலை பற்றி அறியாமல், அரிசி அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என்று சொல்லும் குழந்தைகளுக்கு மத்தியில், வாழ்வியலை நன்கு உணர்ந்த மாடசாமி மக்கு தானா? என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்குள் உருவாக்கும் கதை. ஆறறிவு:- மனிதன் மற்ற உயிர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டும் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை பெற்றிருந்தாலும், உண்மையில் அந்த அறிவை பயன்படுத்துகிறானா? என்ற கேள்வியை டிட்டு என்ற குருவியின் மூலம் ஆசிரியர் வினவுகிறார். மனிதருள் வேறுபாடு உண்டோ? ஆதியில் இல்லாது பாதியில் வந்த இந்த சாதி மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்கி வைத்து இருக்கிறது. ஆனால் மனிதம் தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதைப் பேசும் கதை. காட்டுக்குள் தெரிந்த இன்னொரு காடு :- பல்வேறு பரிணாம வளர்ச்சி களுக்கிடையே , பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பு குனிந்து நடந்து கொண்டிருந்த மனிதன் மெல்ல மெல்ல நிமிர்ந்து இன்று நிலையை எட்டி இருக்கிறான். ஆனால் ஒரு கையடக்க கருவி மீண்டும் மனிதனை பரிணாம வீழ்ச்சி அடைய வைத்து தலை குனிந்தபடியே நடக்க வைத்திருக்கிறது என்பதை காட்டுக்குள் இருக்கும் விலங்குகளின் வழியாக , அலைபேசியின் அதீத பயன்பாட்டை நையாண்டி செய்யும் கதை இது கணக்கு எனக்கு பிடிக்கும்:- கணக்கு பிணக்கு ஆமணக்கு..என்பது உண்மையா? உண்மையில் குழந்தைக்கு கணக்கு பிடிப்பது இல்லையா? இல்லை கணித ஆசிரியரின் மீதான பயத்தினால் கணக்கு பிடிப்பது இல்லையா? என்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்து குழந்தைகள் மொழியில் சொல்லப்பட்டு குழந்தைகளை கணிதத்தை நேசிக்க வைக்கும் கதை இது. பார்வதி அத்தையின் பொங்கல்:- குழந்தைகளுக்கு சமகால நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான கதை இது. பசி சுண்டி இழுக்கும் வயிறோடு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழும் குழந்தைகளை பார்த்திருப்போம். அவர்களின் பசிப்பிணி போக்க வந்த காலை உணவு திட்டத்தை இந்த கதை பதிவு செய்திருக்கிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்போது... சாதி மட்டும் ஏன் பறப்பதில்லை? மொத்தத்தில் இந்த சிறார் கதைகள் அறிவுரை சொல்லும் தொனியிலோ , பயமுறுத்தும் விதத்திலோ இல்லாமல் குழந்தைகளின் உயரத்துக்கு குனிந்து அவர்களுடன் சேர்ந்து தோளில் கை போட்டு இனிமையான வார்த்தைகளில் பேசுகிறது.பிரேமாவின் புத்தகங்கள்.
- அறிவியலும் அன்பும்
நேர்காணல் கேள்விகள்: எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பதில்கள்: எழுத்தாளர் விழியன் 1.எந்த நோக்கத்திற்காக சிறுவர்களுக்காக எழுத வந்தீர்கள்? வாசிப்பு மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் சிறார்களுக்கு எழுத ஆரம்பித்தேன். வீட்டில் சின்ன வயது முதலே ஏராளமான புத்தகங்கள் இருக்கும். கூடவே அப்பா அறிவியல் இயக்கத்தில் செயல்பட்டதால் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரிக் காலங்களில் அறிவியல் முகாம்களை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினோம். அது குழந்தைகளுடன் வேலை செய்ய மேலும் உந்தியது. பணிக்குச் சேர்ந்த பின்னரே எழுத ஆரம்பிக்கின்றேன். சிறுகதை மற்றும் கட்டுரைகள் முயன்று வந்தேன். தோழர் ச.தமிழ்செல்வனின் பேட்டி ஒன்றினைக் கண்டேன். குழந்தைகளுக்கு எழுத வாருங்கள் என்ற வரியே சிறார் எழுத்து பக்கம் திருப்பியது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளாக மட்டும் என எழுதிக்கொண்டு இருந்தவர்கள் வெகு சிலரே. சில வருடங்களாகச் சிறார் இலக்கியம் குறித்து வாசித்தேன். இதுவே நாம் இயங்க வேண்டிய தளம் என்பது புரிந்தது. சிறார்களுக்கு மட்டும் எழுத வேண்டும் என நின்றுகொண்டேன். 2. பென்சிகளின் அட்டகாசம், மலைப்பூ போன்ற உங்கள் படைப்புகளில் கல்வி சார்ந்த ஓர் இழைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அது திட்டமிட்டதா… இல்லை, இயல்பாக நிகழ்கிறதா? சில படைப்புகள் திட்டமிட்டு நடக்கின்றன, சில படைப்புகள் இயல்பாக நடக்கின்றன. சிறார்களுக்கு எழுத வேண்டும் என நினைத்தபோது குழந்தைகளுடன் அன்பாய் இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் நான் உடன் வளர்ந்த அறிவியல் இயக்கம் எதையும் அறிவியல்பூர்வமாக சிந்திக்கக் கற்றுக்கொடுத்தது. குழந்தைகளுடன் அன்பாய் இருத்தலில் என்ன அறிவியல் இருந்துவிடப்போகின்றது என ஆரம்பத்தில் தோன்றினாலும் அது அறிவியல் கலந்த அன்பாக இருப்பதே சரி என்பதைச் சீக்கிரம் உணர்ந்தேன். குழந்தைகள் பற்றிய புரிதல்களைப் பல கோணங்களில் அணுகினேன். ஒரு இடத்தில் கல்வியே குழந்தையின் ஆளுமையையும் வளர்ச்சியையும் பெரிதாகப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தேன். கல்வி சார்ந்து நிறைய வாசிக்கவும் எழுதவும் தொடங்கினேன். அதனால் கல்வி சார்ந்த கருத்துக்களும், மாற்றம் நிகழ வேண்டியவைகளும், அவலங்களும் சிறார் எழுத்துக்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. 3. யதார்த்தக் கதைகள் எழுதுவதில் உள்ள சவால்கள் என்னென்ன… சௌகரியங்கள் என்னென்ன? யதார்த்தக் கதைகள் மட்டுமல்ல கற்பனைக் கதைகளும் சௌகரியங்களும் சவால்களும் நிறைந்தவையே. யதார்த்தக் கதைகளில் மிக முக்கியமான சவால் எந்தப் புள்ளியில் குழந்தைகள் தங்களை இணைத்துக்கொள்கின்றனர் என்பதுதான். அதற்கான திறப்புகளைக் கதையில் வைத்திருக்க வேண்டும். அப்படித் திறப்புகளை உருவாக்காமல் ஒரு படைப்பாளியாக மட்டும் நினைத்தால் அது குழந்தைகளிடம் அல்லது யார் வாசகர்கள் என நினைக்கின்றோமோ அவர்களிடம் சென்று சேராது. மேலும் அந்தக் கதையில் கதாபாத்திரமும் சூழலும் நம்பும்படியாக அமையவேண்டும். அதுவே சௌகர்யமும் கூட. அதே சூழலை நாம் நேரிடையாகப் பார்த்திருப்போம் அல்லது செவி வழியாகக் கேட்டிருப்போம். அப்படி இருக்கும் போது விவரிப்புகள் எளிதாக அமைந்துவிடும். அதுவே மாய யதார்த்தமோ, மாயாஜாலமோ கூடுதலான விவரிப்புகள் மூலம் வாசகர்கள் மனதில் அந்தக் காட்சியை உருவாக்க வேண்டும். இந்த யதார்த்தக் கதைக்குள், வரவழைத்துவிட்டு அதனை எளிமையாக எப்படித் தான் விரும்புவதைச் சொல்வது என்பது அடுத்தகட்டச் சவா ல்.
- எறும்பின் மூளையில் எத்தனை kb?
எறும்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு கதையைப் படித்துவிடுவோம். *** பள்ளியில் அடுத்த வாரம், ‘வினாடி வினா’ போட்டி வைக்கப் போகிறோம் என்று அறிவித்து இருந்தார்கள். ஒரு குழுவிற்கு மூன்று பேர் இருக்கலாம் என்றும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள். நண்பர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து ‘வினாடி வினா’ போட்டிக்குத் தயாரானார்கள். பாலா, வர்ஷா, பாத்தீமா– மூவரும் ஓர் அணியில் இருந்தனர். ஒவ்வொரு பாடத்தையும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். பாத்தீமாவுக்கு, கணிதம் மிகவும் பிடிக்கும். பாலாவுக்கு சமூக அறிவியல் என்றால் பிடிக்கும். வர்ஷாவுக்கு அறிவியல். இப்படியே பிரித்துக்கொண்டு படித்தார்கள். போட்டி நாளும் வந்தது. ‘இந்திய அரசமைப்பு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?’ என்ற கேள்வி வந்ததும், ஜனவரி 26, 1950 என்று சட்டென்று பதிலளித்தான் பாலா. அடுத்ததாக ‘இரும்பு எந்த வாயுவுடன் வினை புரிவதால் துரு பிடிக்கிறது?’ என்ற கேள்வி வந்ததும் ஆக்ஸிஜன் என்று சரியான பதிலளித்தாள் வர்ஷா. அடுத்ததாக, கணிதம் தொடர்பான கேள்வி. ‘240 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சட்டை, இப்போது பத்து சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அப்படியென்றால் சட்டையின் தற்போதைய விலை என்ன?’ என்ற கேள்வி கேட்டார்கள். கடகடவென்று மனக் கணக்குப் போட்டு 216 என்ற சரியான விடையைச் சொன்னாள் பாத்தீமா. மூவரும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டு போய், இறுதிச் சுற்றுக்கு வந்தார்கள்.இனிமேல், கேள்வி கடினமாகப் போகிறது. இதுவரை ஒவ்வொரு பாடத்தைச் சார்ந்தும் கேள்விகள் வந்துகொண்டிருந்தன. இனிமேல், மூன்று பாடங்களையும் இணைத்து கேள்வி கேட்கப்பட உள்ளது என்று அறிவித்து இருந்தார்கள். தேநீர் இடைவேளையின் முடிந்து, புதுத்தெம்புடன் மாணவர்கள் தயாராய் இருந்தனர். வினாடி வினா தொடங்கியது. ‘1853ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பயணம் செய்த ரயில், எங்கிருந்து எதுவரை எவ்வளவு வேகத்தில் பயணித்தது?’ என்ற கேள்வி. முதல் ரயில் பயணம் மும்பையில் இருந்து தானே வரைக்கும் என்று பாலாவுக்கு நினைவுக்கு வந்தது. இரண்டிற்கும் இடையில் தோராயமாக எவ்வளவு தூரம் இருக்கும் என்று யோசித்தான். பயண நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம் என்பதும், தோராயமாக முப்பது கிலோமீட்டர் பயணித்து இருப்பார்கள் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பயண நேரமும், தொலைவும் தெரிந்ததும், வேகம் = தொலைவு/நேரம் என்ற சமன்பாடு வர்ஷாவுக்கு அத்துப்படி. ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 30 கிலோமீட்டர் என்று டக்கென்று சொன்னாள் கணக்கு பாத்திமா. சரியான விடை என்பது 34கிலோமீட்டர் தூரத்தை, 57 நிமிடங்களில் பயணித்தார்கள். ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 35 கிலோமீட்டர். பிற அணியினருக்கு சுத்தமாக பதில் தெரியவில்லை. இவர்களுடைய பதில், சரியான விடைக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், பாலா – வர்ஷா – பாத்திமா அணியினருக்கு பரிசு கொடுக்கப்பட்டது. *** இப்போது எறும்பு கதைக்கு வருவோம். எறும்பின் மூளையில் உள்ள நினைவகம் (storagespace) வெறும் 256KB மட்டுமே!நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிகள் 64GB, 128GB என்று வெவ்வேறு அளவிலான நினைவகத்துடன் (memory/storage) உள்ளன.நம்முடைய கைபேசிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 256 kb எவ்வளவு சின்னதாக தெரிகிறது அல்லவா? ஆனால், யோசித்துப் பார்த்தால், எறும்புகள் உணவு தேடிச் செல்வது, சேகரித்த உணவை மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து சேமிப்பது என்று பல வேலைகளைச் செய்கின்றன. ஓர் இடத்துக்குப் போய் வருவதற்கு வழியை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், எறும்புகளிடம் உள்ள 256KB நினைவகம் பத்தாதுதானே? மேலும், மூளையின் செயல்பாட்டை வெவ்வேறு பணிகளுக்கும் செலவிட வேண்டும். அப்படியிருக்கும்போது, தங்களிடம் உள்ள இத்துனூண்டு ‘மூளையில்’ எப்படி இத்தனை வேலைகளைத் திட்டமிட முடிகிறது? மேற்கூறிய கதையில், பாலாவுக்கு மும்பை-தானே பற்றிய புவியியல் அமைப்பு தெரிந்திருந்தது. வர்ஷாவுக்கு சமன்பாடு தெரிந்திருந்தது. பாத்திமாவால் கணக்குப் போட முடிந்தது. மூவரும் தனிதனியாக இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடிந்திருக்காது. மூவரின் கூட்டு முயற்சியால்தான் அவர்களால் பதிலளிக்க முடிந்தது. இதற்குப் பெயர்தான் கூட்டுப் புலமை (swarm intelligence) எனப்படுகிறது. எறும்புகள் தங்களுக்கென்று ‘தலைமை எறும்பு’ சொல்வதைச் செய்வதில்லை. ‘தலைமை எறும்பு’ என்ற ஒன்று இல்லாமல், ஒவ்வொரு எறும்பும் தங்களுக்கான பணிகளைச் செய்வதாலேயே ஒரு வேலையை முடிக்க முடிகிறது. உதாரணமாக, தாங்கள் நகரும்போது, பெரமோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு வெளியிட்டு, பிற எறும்புகளுக்கும் வழித்தடத்தை அறிவிக்கின்றன. இது எறும்பின் கூட்டுப் புலமை. இதேபோல, கூட்டுப் புலமை உத்தியைப் பயன்படுத்தி, உலகம் முழுக்க டிரோன் குழுக்கள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவுஆகிய துறைகள் வடிவமைக்கப்படுகின்றன. சின்ன மூளை! பெரிய வேலை!!! ( தொடர்வோம் )
- நிழல் விளையாட்டு
சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி குடை சாய்ந்து விடும் என்பதைப் போலத்தான் அடி எடுத்து வைக்கிறாள். சில சமயம் அப்படியே சாய்ந்து சப்பென்று உட்கார்ந்து விடுவாள். உடனே சிரிப்பு வந்துவிடும் சச்சுவுக்கு. அம்மாவைப் பார்த்துச் சிரிப்பாள். முன்னால் இருக்கிற ஒரே ஒரு பல் மட்டும் பூ மாதிரி சிரிக்கும். சச்சு எழுந்து நடக்கத் தொடங்கிய பிறகு தூங்கி எழுந்தால் போதும் நடைதான். சாப்பிடும் போது தன் அம்மா பின்னாலேயே நடப்பாள். அம்மா பின்னால் வருவதைப் பார்த்தது சச்சுவுக்கு உற்சாகமாகி விடும். கெக்க்க்கே என்று சிரித்துக் கொண்டே இன்னும் வேகமாக தத்தக்கா புத்தக்கா அடி எடுத்து வைப்பாள். அம்மாவும் சிரித்துக் கொண்டே பின்னால்போய், “ பிடி பிடி கள்ளாளி.. செல்லத்தைப் பிடி..” என்று கொஞ்சுவார். இரவில் அம்மா வீட்டில் விளக்கு போட்டார். அப்போது சச்சு ஒன்றைக் கண்டுபிடித்தாள். சச்சு நடக்கும் போது அவளுடன் கூடவே யாரோ நடப்பதைப் பார்த்தாள். அவளைப் போலவே தத்தக்கா புத்தக்கா என்று அதுவும் நடந்தது. அவள் திரும்பிப்பார்த்தாள். சுவரில் நிழல் ஆடியது. அவள் கையை அசைத்தாள். அதுவும் கையை அசைத்தது. அவளுடைய தலையில் கொண்டை போட்டு விட்டிருந்தார் அம்மா. நிழலும் கொண்டை போட்டிருந்தது. சச்சுவுக்கு மகிழ்ச்சி. கெக்க்க்கே என்று சிரித்தாள். நிழலும் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. சச்சுவின் காலில் கிடந்த கொலுசு குலுங்கியது. நிழலின் காலில் கிடந்த கொலுசும் குலுங்கியது. சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அப்படியே எதிரில் இருந்த சுவற்றில் முட்டி விட்டாள். நிழலும் முட்டியது. சரியான முட்டு. சச்சுவுக்கு அழுகையே வந்து விட்டது. அப்படியே உட்கார்ந்து அழுதாள் சச்சு. நிழலும் அழுதது. அழும்போது நல்லாவே இல்லை. உடனே சச்சு அழுவதை நிறுத்தி விட்டாள். அம்மா வந்து சோறு ஊட்டி விட்டார். அம்மாவின் நிழலும் தெரிந்தது. நிழல் அம்மா நிழல் சச்சுவுக்கு ஊட்டிவிட்டது. சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாள். அம்மாவுக்கு ஆச்சரியம். ராத்திரி படுக்கப்போனாள் சச்சு. எப்போதும் அம்மா கூடத்தான் படுப்பாள். படுக்கும்போது பார்த்தாள். நிழல் இல்லை. அம்மா விளக்கை அணைத்தார். அவ்வளவு தான் நிழலைக் காணவில்லை. சச்சு இருட்டுக்குள் நிழலைத் தேடினாள். அவளுக்கு அழுகை வந்தது. அழ ஆரம்பித்தாள். அம்மா பதறிப்போனார். “ ஏண்டா.. சச்சு ஏன் அழுறே..? “ என்று கேட்டார். சுவரைக் காட்டி மழலைமொழியில் “ பொம்ம “ அழுதாள். அம்மாவுக்குப் புரிந்து விட்டது. “ சச்சுப்பாப்பா தூங்கப் போறில்ல.. அந்தப் பொம்மையும் அவங்க வீட்டுக்குத் தூங்கப் போயிட்டு.. காலைல நீ எந்திரிக்கும்போது அதும் வரும்..இன்ன..” என்றார். சச்சுவுக்கு அம்மா சொன்னது சரிதான் என்று பட்டது. உடனே அழுகையை நிறுத்தி விட்டு கண்களை மூடினாள். அவள் உதடுகளில் புன்னகை தோன்றியது. சச்சுவின் நிழலும் உறங்கியது. காலையில் சச்சுப்பாப்பா கூட விளையாடணும்ல..
- முன்னோடிகள் - வாண்டுமாமா
வாண்டுமாமாவைக் கொண்டாடுவோம்! அழ.வள்ளியப்பா என்றவுடன் சிறார் பாடல்கள் நம் நினைவுக்கு வரும். அதுபோல் வாண்டுமாமா என்றவுடன் சிறார் இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளும் நம் நினைவுக்கு வருகிறது. சிறார்களுக்கு வாண்டுமாமா எழுதாத விஷயமே இல்லை எனச் சொல்லலாம். அவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. கௌசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி எனப் பல பெயர்களில் அவர் எழுதியிருக்கிறார். இருந்தாலும், வாண்டுமாமா என்கிற பெயரே அவருடைய அடையாளமாக மாறியது. 50 ஆண்டுகளுக்கு மேல் சிறார் இலக்கியம் படைத்து, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஒரு தனி உலகைப் படைத்தவர். 'கோகுலம்' என்கிற சிறார் இதழை உங்கள் அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டி வாசித்திருக்கலாம். அந்த இதழை வாண்டுமாமாவுக்காகவே கல்கி நிறுவனம் 1972இல் தொடங்கியது. தொடர்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பின், 1984இல் 'பூந்தளிர்' என்கிற சிறார் இதழுக்கு வாண்டுமாமா ஆசிரியர் ஆனார். அந்த இதழ் தமிழ் சிறார் இதழியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதற்கு முதல் காரணம் அதில் இடம்பெற்ற ஆங்கில இதழான 'டிங்கிளி'ன் மொழிபெயர்ப்புப் படக்கதைகள். எஞ்சிய இதழை வாண்டுமாமாவின் எழுத்துத் திறமை சிறப்பாக்கியது. கதைகள், சித்திரக்கதைகள், வரலாறு, அறிவியல், பொது அறிவு, சிறார் இதழியல் என சிறார் இலக்கியத்தில் வாண்டுமாமா தொடாத பகுதிகளே இல்லை. இந்தப் பிரிவுகளில் தனித்துவமான முத்திரையை அவர் பதித்திருக்கிறார். நிறைய புதுமை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய பலே பாலு, சமத்து சாரு போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை. தமிழில் சிறாருக்கான சித்திரக்கதைகளை அவர் அளவுக்கு வேறு யாரும் விரிவாகவும் சிறப்பாகவும் முயன்று பார்க்கவில்லை. ஓவியர் செல்லம், ராமு, வினு, கோபன் ஆகியோருடன் இணைந்து பல சித்திரக்கதைகளை அவர் உருவாக்கியிருக்கிறார். ‘கனவா, நிஜமா?', ‘ஓநாய்க்கோட்டை', ‘மர்ம மாளிகையில் பலே பாலு’, ‘கழுகு மனிதன் ஜடாயு’, ‘கரடிக் கோட்டை’ போன்ற சித்திரக்கதைகள் பிரபலமானவை. ‘குள்ளன் ஜக்கு’, ‘புலி வளர்த்த பிள்ளை’, ‘பலே பாலுவும் பறக்கும் டிராயரும்’ போன்ற கதைகள், நெடுங்கதைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் எழுதி வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்த பல கதைகள், மர்மம் நிறைந்தவையாகவும், குழந்தைகளின் துப்பறியும் ஆற்றலைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. ‘தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), ‘தெரியுமா, தெரியுமே’,‘தேதியும் சேதியும்’, ‘மருத்துவம் பிறந்த கதை', ‘நமது உடலின் மர்மங்கள்' ஆகியவை அவருடைய பிரபலமான பொது அறிவு / அடிப்படை மருத்துவ நூல்கள். 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கானவை. தமிழின் சிறந்த சிறார் எழுத்தாளர்களில் ஒருவரை வேறு மொழிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அதில் முதல் வரிசைப் பெயராக வாண்டுமாமாவைச் சொல்லலாம். 1970 முதல் 2000 வரை தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்களின் உலகில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தது வாண்டுமாமா. 2014இல் 89 வயதில் அவர் காலமானார். தன் வாழ்நாள் முழுவதும் சிறார் எழுத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட வாண்டுமாமாவுக்கு, அரசின் மிகப் பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது அவருடைய நூற்றாண்டு. இந்த ஆண்டிலாவது அவர் பெயரில் சிறார் இலக்கியத்துக்கான ஒரு விருதை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும்.
- லூகா (LUCA)
லூகா 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அனிமேஷன் திரைப்படம். இத்தாலியின் ஓர் அழகான கடலோரப் பகுதி கதையின் களம். இத்தாலியின் நாட்டுப்புறக் கதைகளில், டிராகன், பாம்பு போலப் பல உருவங்களில் கடல் ராட்சதர்கள் இடம் பெற்று உள்ளார்கள். இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களும், அந்தக் கடல் இராட்சத இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே. லூகா என்ற கடல் ராட்சத சிறுவன் கரைக்குப் போக ஆசைப்படுகிறான். ஆனால் மக்களால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போகக் கூடாது என்கிறார் லூகாவின் அம்மா. லூகா ஒரு நாள் தன் இனத்தைச் சேர்ந்த ஆல்பர்டோ என்ற சிறுவனைச் சந்திக்கிறான். அவன் கரையில் ஒரு கட்டடத்தில் தனியாக வசிக்கிறான். அவன் லூகாவையும் வரச் சொல்லிக் கூப்பிடுகிறான். எனவே ஒரு நாள் லூகா அம்மாவிடம் சொல்லாமல் கடலை விட்டு வெளியேறுகிறான். அவன் தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் அவன் வாலும் பச்சை நிறமும் மறைகிறது. மனிதனாக உருமாறி விடுகிறான். லூகாவும், ஆல்பர்டும் நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒரு வெஸ்பா பைக் வாங்கி, உலகைச் சுற்றி வரக் கனவு காண்கின்றனர். அந்த ஊரில் ‘டிரையத்லான்’ (TRIATHLON) என்று சொல்லப்படும் போட்டி நடக்க இருக்கின்றது. முதலில் கடலில் நீந்த வேண்டும்; பிறகு பாஸ்தா சாப்பிட வேண்டும். அடுத்து பைக் ஓட்ட வேண்டும். இந்த மூன்றையும் தொடர்ச்சியாகச் செய்து முதலில் முடிப்பவரே வெற்றியாளர்! போட்டியில் வென்றால் பணம் கிடைக்கும்; அதைக் கொண்டு வெஸ்பா வாங்கலாம் எனச் சிறுவர்கள் நினைக்கின்றார்கள். ஜூலியா என்ற பெண்ணுடன் சேர்ந்து, போட்டியில் பங்கு பெற முடிவு செய்கிறார்கள். எர்கோல் விஸ்கோந்தி என்பவன், அந்தப் போட்டியில் 5 முறை வென்றவன். அவன் சிறுவர்களை அடிக்கடி மிரட்டித் துரத்துகிறான். ஜூலியா நண்பர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள். அந்தப் போட்டி துவங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறார்கள். கடைசியாக லூகா பைக் ஓட்டுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக மழை பெய்யத் துவங்குகிறது. மழைத் தண்ணீர் பட்டு லூகாவின் உடம்பு பச்சையாக மாற ஆரம்பிக்கிறது. லூகாவுக்கு உதவ, ஆல்பர்டோ ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான். அவனை வில்லன் எர்கோல் தடுத்துக் கீழே தள்ளுகிறான். கீழேயிருந்த ஈரம் பட்டு, அவன் உருவமும் பச்சையாக மாறுகிறது. சிறுவர்கள் இருவரும் கடல் இராட்சதர்கள் என்று தெரிந்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இருவரும் கொட்டும் மழையில் பைக்கை வேகமாக ஓட்டிப் போகிறார்கள். ஒருவழியாக மிகவும் கஷ்டப்பட்டு, லூகா அணி எல்லைக்கோட்டைத் தொடுகின்றது. “அவர்கள் மனிதர்கள் இல்லை; அதனால் அவர்கள் வென்றது செல்லாது” என்று எர்கோல் வாதாடுகிறான். ஆனால் போட்டியின் நடுவர், லூகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். அந்த ஊர் மக்கள் கடல் இராட்சதர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார்கள், நண்பர்கள் ஆசைப்பட்டபடி, பரிசுப் பணத்தில் ஒரு வெஸ்பா வாங்குகிறார்கள். ஜூலியா போல் தானும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று லூகா விரும்புகிறான். எனவே ஆல்பர்டோ வெஸ்பாவை விற்றுவிட்டு, லூகா பள்ளியில் சேர ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுக்கிறான். லூகா ரயிலில் ஜூலியாவுடன் கிளம்புகிறான். ஆல்பர்டோவைக் கட்டித் தழுவிப் பிரியாவிடை கொடுக்கிறான். சிறுவர்களுக்கு நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் படமிது. மேலும் விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்து, அவர்கள் ரசிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.










