குழந்தைகளின் உரிமைகள் - 1
- கமலாலயன்
- Apr 6
- 2 min read
Updated: May 15

உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. இந்த ஐ. நா. சபையின் துணையமைப்புகளுள் ஒன்று : unicef என்கிற, உலகக் குழந்தைகளுக்கான அமைப்பு.
உலகத்தின் குழந்தைகள் அனைவரும் கல்வி, சுகாதாரம், உணவு, உறைவிடம் உள்பட அனைத்து அடிப்படைத்தேவைகளையும் பெற்றுத்தன்னிறைவு பெற்றவர்களாக ஆக வேண்டும் என்பது இந்த அமைப்பின் குறிக்கோள், இலட்சியம்.
ஒரு குழந்தை என்றால் யார், அதன் உரிமைகள் என்னென்ன, அவற்றைப் பாதுகாப்பதில் பெற்றோர், குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்,சமுகத் தலைவர்கள் போன்று அனைத்துத்தரப்பினரும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக் குறித்து யுனிசெஃப் ஒரு தீர்மானம் இயற்றியிருக்கிறது.
” குழந்தைகளின் அனைத்து உரிமைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவையனைத்தும் ஒன்றுக்கொன்று சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குழந்தைகளிட மிருந்து எந்தக் காரணம் பற்றியும் பறித்துக் கொள்ளப்படக் கூடாதவை.
ஒரு குழந்தை என்றால் யார் ? ஆணோ , பெண்ணோ , யாராயிருந்தாலும், 18 வயதிற்குக் கீழ் உள்ள எந்த ஒரு மனிதரும் குழந்தை என்று unicef வரையறுத்துள்ளது. இதை உலக நல வாழ்வு அமைப்பு உள்பட உலகமே ஏற்றுக் கொண்டும் இருக்கிறது.
யுனிசெஃப் கன்வென்ஷனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறிப்பிடும் அனைத்து உரிமைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த உரிமைகள் உண்டு. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கே வேண்டுமாயினும் வசித்து வரலாம். எந்த மொழி பேசுவோராகவும் இருக்கலாம். அவர்களின் மதம் எது என்பதோ, அவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பதோ, அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதோ – இவை எதுவுமே பிரச்னையே இல்லை.
அந்தக் குழந்தை, ஒரு பையனாகவோ, ஒரு சிறுமியாகவோ இருக்கக்கூடும். ஒரு சிலர் உடல், மன ரீதியான மாற்றுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுள் சிலர் பரம ஏழைகளாக இருப்பார்கள். வேறு சிலர் பணம் படைத்தவர்கள். இன்னும் சிலர் நடுத்தர நிலையில் இருக்கலாம். அவர்களின் பெற்றோர் யார் என்பதோ, அவர்களில் யார் மேற்கண்ட மூன்று நிலைகளில் எந்த நிலையைச் சேர்ந்தவர் என்பதோ இங்கு பிரச்னையில்லை.
குழந்தைகளின் பெற்றோர் எந்தக் கடவுள் அல்லது மதத்தை நம்புகிறார்கள் என்பதும் நமக்கு முக்கியமல்ல. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும் பார்க்க வேண்டியதில்லை. மேற்கண்ட எந்த ஒரு விஷயத்தின் அடிப்படையிலும், எந்த ஒரு காரணத்தினாலும் எந்த ஒரு குழந்தையும் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. இவற்றுள் எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் எந்தக் குழந்தையும் நியாயமற்ற முறையில் நடத்தப்படக்கூடாது. ”
Unicefகன்வென்ஷன் நிறைவேற்றிய மேற்கண்ட தீர்மானத்தின் முதல் அம்சமே மேலே சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஒரு வகையில், அதன் தமிழ் மொழியாக்க வடிவம் என்றே சொல்ல வேண்டும். இதுதான் மற்ற எல்லா அம்சங்களுக்கும் அடிநாதம். ஆனால் இன்றைய நிலை என்ன ?
சற்றுக் கண்களை மூடிக்கொள்வோம். கடந்த பத்து அல்லது பதினைந்து நாள்களுக்குள் நமது கண்களில் பட்ட, நாம் பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சிச் செய்திகளில் படித்த, பார்த்த செய்திகளில், குழந்தைகள் பற்றியவற்றைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்து பார்ப்போம்.
மூன்று வயதுப் பெண் குழந்தையை, அதே பள்ளியில் படிக்கும் பன்னிரண்டு வயதுப் பையன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, தலையில் பாறாங்கல்லால் தாக்கியதில், அது மரணமடைந்தது.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு மூன்று ஆசிரியர்கள், தங்களின் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
ஒரு ஆசிரியர் குழந்தையின் மண்டையில் தாக்கி மண்டை ஓடு உடைந்திருக்கிறது.
இவையும் இன்னமும் ஏராளமான செய்திகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம். இவை எதைக்காட்டுகின்றன ? நமது குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கிறது என்ற ஓர் எதார்த்தத்தைக் காட்டுகின்றன.
மொத்தமுள்ள குழந்தைகளில் ஒரு பத்துப்பேரின் பிரசனைகளை வைத்து ஓட்டு மொத்தக் குழந்தைகளின் நிலைமையே இதுதான் என்று தீர்மானித்து விட முடியுமா ?
முடியாது ! கூடாது !
ஆனால், இவை ஒரு வகைமாதிரிப் பிரச்னைகள். மற்ற குழந்தைகளின் நிலைமைகளில் வெவ்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பத்தில், தெருவில், பள்ளியில், பஸ்களில், கோயில்களில், பிற பொது இடங்களில் என்னென்ன வகையான துன்பங்களைக் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் உரிமைகள் இவை என்று உலகமே ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு விட்ட உரிமைகள் கூட, எந்த ஓரு இடத்திலும், ஒரு போதும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
( உரிமைகள் அறிவோம்.)
留言