top of page

நீலச் சட்டை பார்பி பொம்மை


ree

ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்!


அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார்.


அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்!


“இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார்.


“இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார்.


புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின.


முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன.


“நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன.


சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது.

“கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை.


மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா.


நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை.


அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில்

அவ்வளவு மகிழ்ச்சி!


“அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன்.


“இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண்

சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது.


கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக்

கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க

முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!



2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 16
Rated 5 out of 5 stars.

My mom read this story to me.i loved it.


By Reniyaa 5th standard

P.u.m.s. Puraiyur

Like
Kalayarassy G
Jun 25
Replying to

Thank you very much Reniyaa for sharing your view!

Like
bottom of page