சகுந்தலா தேவி
- சரிதா ஜோ
- May 15
- 3 min read

ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா!
குழந்தைகள் : வணக்கம் ஜோ அத்தை
ஜோ : கடந்த மாதம் இந்தியாவின் முதல் ஆசிரியரைப் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம்
ஒரு முக்கியமான ஆளுமையை பத்தி பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி உங்களுக்குப் பிடிச்ச பாடம் எது?
நகுலன் : அறிவியல்
ரதி : கணக்கு
நகுலன் : என்னது கணக்கா ஐயோ சாமி கணக்குனாலே எனக்கு காய்ச்சல் வந்துரும்.
ரதி : கணக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. புரிந்துகொண்டால் மிகவும் சுலபம் தெரியுமா?
நகுலன் : ஓ நீ கணக்குல புலி என்று சொல்கிறாயா?
ரதி : இப்போ சின்ன புலி சீக்கிரமா பெரிய புலி ஆயிடுவேன்
நகுலன் : சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் சரியா சொல்றியா?
ரதி கேளு
நகுலன் 65 + 72 + 64 +32 +27+ 43+ 11
ரதி: 314
நகுலன் ஆச்சரியமா இருக்குது அத்தை! பாருங்க கையை இப்படி அப்படி ஆட்டி ஆட்டி உடனே சொல்லிட்டா!
ஜோ : கூடிய சீக்கிரத்துல இந்தியாவுடைய முதல் பெண் கணித மேதை சகுந்தலா தேவி மாதிரி வர என்னோட வாழ்த்துக்கள்.
நகுலன் : யாருங்க அத்தை சகுந்தலாதேவி? அவங்க தமிழ்நாடா?
ஜோ : இல்லை, அவங்க பெங்களூரு
ரதி : அவர் கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கி இருப்பாங்க. அதனால் தான் அவர் அந்த கின்னஸ் சாதனை எல்லாம் செய்ய முடிந்தது.
ஜோ : அதுதான் இல்ல அவங்க ஆரம்பப் பள்ளியைக் கூட தாண்டாதவங்க.
ரதி : அப்படியா! அப்புறம் எப்படி இப்படி ஒரு பெயர் வாங்கினாங்க?
ஜோ : அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார்.
நகுலன் : அடேயப்பா! அப்ப அவர் தினமும் சர்க்கஸ் பார்க்க கூட்டிட்டு போய் இருப்பாரு. எங்க அப்பாவும் சர்க்கஸ் இருந்தால் எப்படி இருந்திருக்கும் நானும் தினமும் சர்க்கஸ் பார்த்து இருக்கலாம்.
ரதி: ஹ! ஹ! ஹ! எனக்கும் கூட அப்படித்தான் தோன்றியது. பிறகு என்னவாயிற்றுங்க அத்தை.
ஜோ : அவரோட அப்பாவோடு சேர்ந்து சீட்டுக்கட்டு வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் அவரின் அப்பாவுக்கு சகுந்தலாவின் கணிதத் திறமை தெரிந்தது. தன்னோட வேலையை விட்டுட்டு தெருக்களில் தன் குழந்தையோட கணித திறமையை ஒரு நிகழ்ச்சியா நிகழ்த்திக் காட்டினார்.
ரதி : சமீபத்துல் செஸ் சாம்பியன் பிரக்யானந்தாவோட அப்பா கூட வேலையை விட்டுட்டு பிரக்யானந்தாவை பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அழைச்சிட்டு போனாரே அந்த மாதிரி சகுந்தலா அவரோட அப்பாவும் அழைச்சிட்டு போயிருக்காங்க.
ஜோ : சரியாகச் சொன்னாய் ரதி! அதே மாதிரி தான்.
ரதி: எங்க அப்பா கூட எங்காவது போட்டி நடந்ததுன்னா என்ன கூட்டிட்டு போவாங்க லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க.
அவருடைய அப்பா ஏன் போட்டிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை?
ஜோ : அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரி நிறைய போட்டிகள் இல்லை. அதனால் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அழைத்துச் சென்று மாணவர்கள் முன்பு திறமை வெளிப்படுத்த வைத்தார். 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு நடத்துனர். இது நிறைய இடங்களில் பேசப்பட்டு அதன்பிறகு தன் குழந்தையோட திறமையை உலகத்துக்கு அறிய செய்யணும் என்பதற்காகவே 1944 இல் லண்டன் சென்று 1960 வரைக்கும் ஏராளமான நாடுகளுக்கு பயணம் செய்து சகுந்தலாதேவியோட திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ரதி : அத்தை அவரோட திறமையைக் கண்டு பிடிப்பதற்கு எந்த மாதிரி கேள்விகள் கேட்டார்கள்?
ஜோ : உதாரணத்திற்கு 1977 132 517 என்கிற எண்ணோட கனமூலத்தை வேகமா கணக்கிட்டாரு. அதுல கணினியவே தோற்கடிச்சுட்டார்.
அதன்பிறகு 1988 ஆர்தர் ஜென்குசன் என்கின்ற கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் சகுந்தலாதேவியோட கணிதத் திறமையைப் பரிசோதித்தார். 61 62 98 75 எண்ணின் கன மூலத்தையும் 170 859 375 என்கிற எண்ணோட ஏழாவது மூலத்தையும் கேட்டார்.
நகுலன் : இது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது கொஞ்சம் அதிக நேரம் எடுத்து இருப்பாரு. சரிங்களா அத்தை?
ஜோ : இதில் தான் பெரிய ஆச்சரியமே. கேள்வி கேட்டு முடித்து அவர் நோட்டில் எழுதி முடிப்பதற்கு முன்பே பதில் சொல்லிட்டாரு. இது மாதிரி போகிற இடமெல்லாம் கேட்கிற கணக்குத் தொடர்பான அனைத்திற்கும் உடனே பதில் கொடுத்தாங்க. எல்லாரும் வியந்து போயிட்டாங்க.
ரதி: எந்தக் கணக்கு பண்ணி கின்னஸில் இடம் பிடிச்சாரு?.
ஜோ : ஜூன் 18, 1980இல் இம்பீரியல் கல்லூரி லண்டனில் கணினி துறை மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்கள் 76 86 36 97 74 87 0 மற்றும் 24 650 99 745 779 இந்த இரண்டு எண்களையும் பெருக்கி சரியா 28 வினாடிகளில் விடையைச் சொல்லிட்டார்.
நகுலன் : அதனால்தான் அவருக்கு கின்னஸ் கொடுத்தார்களா? நீதான் கணக்கில் பெரிய புலி ஆயிற்றே ரதி. இதை உன்னால் சொல்ல முடியுமா? சொல்லு பாக்கலாம்?
ரதி : ஐயோடா! இவ்ளோ பெரிய எண்ணெல்லாம் என்னால் முடியாது.
ஜோ : நகுலன், ரதி குட்டி இன்னும் வளர்ந்து இதைவிடப் பெரிய பெரிய கணக்கெல்லாம் போட முடியும். இல்லையா ரதி?
ரதி ஆமாங்க அத்தை. அந்த இரண்டு எண்களையும் பெருக்கினதில் என்ன விடை கிடைத்தது?
ஜோ : கேட்ப்பீர்கள் என்று தெரியும். அதனால தான் நான் சீட்டில் எழுதி வந்து இருக்கிறேன். என்னால் அவ்வளவு பெரிய எண்ணை மனப்பாடம் பண்ண முடியலை.
18 94 76 68 1777 995 426 462 773 730 இந்த எண்ணைச் சொல்வதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது. உண்மையாலுமே அவர் ஜீனியஸ்தான்.
ரதி : அவர்களைப் பற்றி இந்தியில் ஒரு படம் கூட வந்திருக்கிறதாகவும் 2013இல் கூகுள்ல முகப்புல மேடம் சகுந்தலாதேவியோட படத்தை வைத்ததாகவும் அப்பா சொல்லி இருக்காங்க. எப்பவுமே நீ ஒரு சகுந்தலா தேவி மாதிரி வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க அப்பா.
ஜோ : சரியா சொன்னே. நீயும் சகுந்தலா தேவி மாதிரி கணக்கில் பெரிய சாதனைகள் புரியவும் நகுலனும் அவனுக்குப் பிடித்த அறிவியலில் பெரிய சாதனைகள் புரியவும் வாழ்த்துகள் தங்கங்களா!
அடுத்த மாசம் இன்னொரு ஆளுமையை பற்றி தெரிந்து கொள்ளலாம் சரியா செல்லங்களா?
குழந்தைகள் : சரிங்க அத்தை! நன்றிங்க!
Comentários