லீவு
- விஷ்ணுபுரம் சரவணன்
- Apr 8
- 3 min read
Updated: May 15

சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர்.
“ஏண்டா இவ்ளோ லேட்டு?” என்று முகிலன் கேட்க, “நான் எங்கடா லேட்டு… இன்னும் அக்கா கூட வரவே இல்லையே?” என்று பதில் சொல்லிகொண்டே புத்தகப் பையைக் கழற்றி கீழே வைத்தான்.
”சரிடா…. அக்கா வரதுக்குள்ள முடிவை எடுத்துடணும்” என்றான் விக்கி.
“ஆமாடா… மூணு நாளா இதை வைச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கீங்க. அக்கா கிட்ட தெளிவா சொல்லிடுவோம்” என்றாள் பூரணி.
அனைவரும் அக்கா வருவதற்காகக் காத்திருந்தார்கள்.
அது லீலா வீட்டின் மொட்டை மாடி. லீலா ஆசிரியர் பணிக்குப் படித்திருக்கிறார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் தன் வீட்டு மொட்டை மாடியில் டியூசன் எடுக்கிறார். அதற்காக சின்ன பந்தல் போட்டப்பட்டிருக்கும்.
காலையில் பத்தாம் வகுப்புக்கும், மாலையில் ஒன்பது வகுப்புக்கும் டியுசன் எடுக்கிறார். அவரை முதலில் மிஸ் என்று அழைத்தார்கள். ஆகாஷ் மட்டும் அக்கா என்று கூப்பிட்டான். அது அப்படியே எல்லோருக்கும் பரவி ‘லீலா அக்கா’ என்றுதான் இப்போது அழைக்கிறார்கள்.
பள்ளி முடிந்ததும் ஆகாஷ், முகிலன், பிரின்ஸி, ரஹீம் என ஒன்பதாம் வகுப்பில் உள்ள 40 பேரில் 18 பேர் இங்கு டியூசனுக்கு வந்துவிடுவார்கள். முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரே மாதம்தான் இருக்கிறது. அதனால் தீவிரமாகப் படித்தனர்.
லீலா படியேறி வரும் சத்தம் கேட்டதும் சலசல என்று இருந்த பேச்சுச் சத்தம் சட்டென்று நின்றது.
“ஸ்கூல் விட்டு வந்து ஸ்நாக்ஸ் ஏதாச்சும் சாப்பிட்டிங்களா?” என்று கேட்டவாறே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் லீலா.
”ஓ” என்று எல்லோரும் சொல்லி முடித்தும் சிலர் மட்டும் குசுகுசு எனப் பேசுவது கேட்டது.
“நான் என்ன சொல்லியிருக்கேன்… யார் பேசினாலும் சத்தமாப் பேசுங்க… இல்லாட்டி பேசாதீங்கன்னுதானே?” என்று லீலா கேட்டதும் குசுகுசு பேச்சு நின்றது.
”இவன்தான் அக்கா” என்று முகிலனைக் கைக்காட்டினாள் பிரின்ஸி.
“என்ன முகிலா… என்கிட்ட சொல்லலாமா?”
“இல்ல… அக்கா, நாளைக்கு டியூசன் லீவுன்னு சொன்னீங்க இல்ல…” தயங்கிகொண்டே சொல்ல ஆரம்பித்தான் முகிலன்
“ஆமா… அதுக்கு என்ன?”
“இல்லக்கா, நாளைக்கு லீவு விட வேண்டாமேன்னு பேசிட்டு இருந்தோம்”
“என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சனி, ஞாயிறுல டியூசன் வைச்சா சில பேர வர மாட்டீங்க… இப்ப என்னடான்னா, நானே லீவு விட்டாலும் வேணாம்னு சொல்றீங்க?” என்று வியப்பாகக் கேட்டார் லீலா.
“ இன்னும் ஒரு மாசம்தான் எக்ஸாம்க்கு இருக்குக்கா…. அதான்” என்று எழுந்து சொன்னான் ஆகாஷ்.
“ஓ! அப்படின்னா கூட்டா சேர்ந்து பேசியிருக்கீங்களா… அப்ப, அதைப் பேசி முடிச்சிட்டு பாடத்துக்குப் போலாம். என்ன?”
யாரும் பதில் சொல்லாம் மெளனமாக இருந்தனர்.
“சரி, நாளைக்கு எதுக்காக லீவு விட்டிருக்கேன்”
“ரம்ஜான் பண்டிகை” என்று எழுந்து சொன்னான் முகிலன்.
“அதனால” என லீலா பேச்சைத் தொடர்வதற்குள், எழுந்த ஆகாஷ், “அக்கா, அன்னிக்கு எப்படியும் ரஹீமும் பாத்திமாவும் வர மாட்டாங்க. அப்ப அவங்களுக்கு மட்டும் லீவு விட்டுடலாமே… எங்களுக்கு டியுசன் வைக்கலாமே?” என்றாள் பிரின்ஸி.
“வைக்கலாம்தான்…. தீபாவளி அன்னிக்கு என்னென்ன செய்வீங்க சொல்லுங்க?”
“காலையில குளிச்சிட்டு, புது டிரெஸ் போட்டுகிட்டு பட்டாசு கொளுத்துவோம்” என்றனர் ஆகாஷூம் முகிலும்.
”ஒரு புஷ்வாணம் நல்ல வெளிச்சத்தோடு மேலே போய்ட்டு வர்றதைப் பார்க்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டார் லீலா
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றான் ஆகாஷ்.
“ரொம்ப இல்லக்கா… ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப” என்று வாயை இழுத்து மிமிக்ரி மாதிரி செய்துகாட்டினான் முகிலன். எல்லோரும் சிரித்தனர்.
”அப்படியா… உங்க தெருவுலேயே இருக்கிற ரஹீமும் அதே புஷ்வாணத்தைப் பார்த்தா அவனுக்கு மகிழ்ச்சியா இருக்கும்ல”
“நிச்சயம் இருக்கும்க்கா”
”சரி… புது டிரெஸ்… பட்டாசு அவ்வளோதானா தீபாவளி?”
“இல்ல இல்ல… ஸ்வீட்ஸ் நிறைய செய்வாங்க… அதை தெருவில இருக்கிற எல்லார் வீட்டுலேயும் கொண்டுபோய் கொடுப்போம்”
“ரஹீம் வீட்டுக்கும்தானே?”
“ஆமா… முதல்ல போறதே அவன் வீட்டுக்குத்தான்”
“ஏன் அவன் வீட்டுக்கு கொடுக்கணும்… அவனுக்குத்தான் தீபாவளி பண்டிகை இல்லையே?”
“நாங்க எல்லாம் ஸ்வீட் சாப்பிடும்போது அவனும் சாப்பிடனும் இல்லக்கா… பட்டாசுக்கூட அவனுக்குக் கொடுப்பேன்” என்றான் முகிலன்.
“அப்பன்னா, பண்டிகைங்கிறது ஏதோ ஒருவகையில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறதுதானே?”
“ஆமா?”
“அப்பன்னா, ரம்ஜானும் அப்படித்தானே? அது ரஹூம், பாத்திமா வீட்டு பண்டிகை மட்டுமா என்ன?”
மெளனமாக யோசித்தனர்.
“தீபாவளி, கிறிஸ்மஸ் பண்டிகை மகிழ்ச்சியில ரஹூமையும் பாத்திமாவையும் உங்களோடு சேர்த்துகொள்ற மாதிரி ரம்ஜான் பண்டிகை மகிழ்ச்சியில் உங்களையும் அவங்கக்கூட சேர்த்துக்க ஆசை படுவாங்க இல்ல”
“ஆமாக்கா” என்றனர் ஒரே குரலில்.
“அக்கா… ரம்ஜான் அன்னிக்கு காலையில இருந்து அவங்கக்கூட இருக்கோம். மாலையிலதானே டியூசன்?” என்று புதுகேள்வி கேட்டான் முகிலன்.
“ஆமா, வழக்கமான நாட்கள்ல டியூசனுக்கு அவங்களா வர முடியல்லன்னா… பரவாயில்ல… அவங்க கொண்டாடுற நேரத்துல டியூசன் வைச்சா என்ன பண்ணுவாங்க?”
“அவங்களே லீவு போட்டுடுவாங்க அக்கா”
“அப்ப வீட்டுல இருக்கிறப்ப, இன்னிக்கு அக்கா சொல்லிக்கொடுக்கிறத மிஸ் பண்றோம்னு அவங்களுக்கு தோணும்ல”
“ஆமா அக்கா… ஒருவேளை கொண்டாட்டத்தை விட்டுட்டு அவங்களே டியூசனுக்கு வந்துட்டா?” என்றாள் பூரணி.
“அவங்களே வந்தாலும் நாம வலுக்காட்டயப்படுத்தின மாதிரி தானே இருக்கும் பூரணி?”
“ஆமாக்கா”
“அதனால…” என்று லீலா பேச ஆரம்பித்ததை இடைமறித்த முகிலன்
“ஆமாக்கா… ஒருநாள் லீவு விட்டா எதுவும் ஆகிடாது. அதை சேர்த்து அடுத்த நாள் கூடுதலா நேரம் ஒதுக்கி படிச்சிடலாம். நாளைக்கு பாத்திமாவோடும் ரஹீமோடும் சேர்ந்து ரம்ஜானைக் கொண்டாடப் போறோம்” என்றான்.
இப்படிப் பேசி முடிக்கும்போதும் ரஹூமும் பாத்திமாவும் டியூசனுக்கு வந்தார்கள்.
“ஸாரி அக்கா… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றனர்.
”பரவாயில்லை. பாடத்தை ஆரம்பிப்போமா?” என்று லீலா கேட்க உற்சாகமாக எல்லோரும் தலையாட்டினர்.
அடுத்த நாள் ரம்ஜான்.
லீலா வீட்டு மொட்டை மாடியில் ஆகாஷ், முகிலன், பூரணி, பிரின்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கூடியிருந்தனர். எதற்காக?
டியூசனுக்காக இல்லை. தன் டியூசன் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து தருவதற்காக அங்கு வரச் சொல்லியிருந்தனர் ரஹூமும் பாத்திமாவும். அவர்களும் பிரியாணிக்காக ஆவலாகக் காத்திருந்தனர்.
மாடிப்படியில் இருவரும் ஏறிவரும் சத்தம் வருவதற்குள் பிரியாணியின் வாசம் மொட்டை மாடிக்கு வந்துவிட்டது. எல்லோரும் “ஹோ….” எனச் சத்தமிட்டு அவர்களை வரவேற்றனர்.
コメント