இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- காட்டைப் பிடித்த கேடு
அது ஒரு வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. அங்கு மாலி என்ற குரங்கும் காளி என்ற குரங்கும் வாழ்ந்துவந்தன. மரத்தில் அமர்ந்து கொண்டு பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பது அவைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாகனத்தில் செல்பவர்கள் அவர்களைப் புகைப்படம் எடுப்பதைப் பார்த்திருக்கின்றன. அப்படி எடுப்பதைப் பார்க்கும் பொழுது தங்களிடமும் இது போன்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இருவரும் பேசிக் கொள்வார்கள். ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாகசம் செய்து கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் சட்டைப் பையிலிருந்து ஒரு அலைபேசி கீழே விழுந்ததைக்கூட கவனிக்காமல் சென்று விட்டனர். மாலியும் காளியும் விரைந்து சென்று அதை எடுத்துக்கொண்டுவந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தன. அந்த மரம் காட்டுப் பூவரசன் மரம். மிகப் பெரிய மரம். நான்கு பேர் நின்று கைகளைச் சேர்த்து பிடித்தால்தான் பிடிக்க முடியும். அவ்வளவு பெரியது அந்த மரம். அந்த மரத்தில்தான் காளியும் மாலியும் பெரும்பாலும் இருப்பார்கள். கையில் கிடைத்த அந்த அலைபேசியைத் திருப்பி திருப்பிப் பார்த்தது மாலி. காளி, மாலியைப் பார்த்து "எவ்வளவு நேரம்தான் அதை நீயே வச்சுகிட்டு இருப்பே. எங்கிட்டே கொடு நான் கொஞ்சம் நேரம் வச்சிருக்கேன்" என்றது. " மாட்டேன் மாட்டேன் இப்பக் கொடுக்கமாட்டேன்" என்றது மாலி... காளி கோபித்துக்கொண்டது. "உன்னப் போயி நல்லவன்னு நெனச்சம்பாரு"என்று சொல்லித் தன் தலையில் அடித்துக் கொண்டது. காளி வருந்துவதை பார்க்க முடியாத மாலி உடனே அலைபேசியை காளியிடம் கொடுத்தது. அலைபேசியை வாங்கிய காளி மாலியைப் போலவே திருப்பி திருப்பி பார்த்தது. திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக்கொண்டு கிளைக்கு கிளை தவ்வியது. அலை பேசியைக் கீழே போடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது. அதன் பின்னாலேயே மாலியும் ஓடியது. மோனிகா மோனிகா என்று அது மிகுந்த ஒலி உடன் பாடியது. அலைபேசி அலறவும் தம் கையில் உள்ள அலைபேசியை அங்கும் இங்கும் மாறி மாறி பிடித்ததில் அலைபேசி ஆன் ஆகிவிட்டது. அந்தப் பக்கம் இருந்து ஹலோ ஹலோ டேய் நான் தான் அம்மா பேசுறேன் ஏன்டா பேசவே மாட்டேங்குற? எங்கடா போன கல்லூரி போவதாகச் சொல்லிட்டு எங்க போனே? என்று அம்மா திட்ட தொடங்கினார். காளிக்கும் மாலிக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் தலையைச் சொரிந்து கொண்டார்கள். அழைப்பு நின்றவுடன் மாறி மாறி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். செல்பி எடுப்பதில் ஆர்வமான அவர்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதை வச்சுக்கிட்டு செல்ஃபி புகைப்படமா எடுத்து தள்ளினார்கள். தேன் எடுக்க வந்த தேனீ அந்தச் செய்தியைக் காடு முழுக்கச் சொன்னது. அதைப் பார்க்க க் கொஞ்ச நேரத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், முயல், குரங்கு, மயில், குயில், மைனா, புறா, கழுகு, ராஜாளி, முள்ளெலி என அங்கு ஒரு பெரும் படையே திரண்டுவிட்டது. அத்தனை பேரும் அவர்களைப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினார்கள். இவ்விருவர் யாரையுமே பார்க்கவில்லை அப்படி இப்படி நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடியே இருந்தனர். அங்கு கூடிய விலங்குகளும் பறவைகளும் அவர்களை அழைத்துப் பார்த்தன. கத்தி பார்த்தன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காளியும் மாலியும் அவர்களையும் சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தன. அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிட்டு கூட பார்த்தனர் இவைகள் இரண்டும் கண்டுகொள்ளவே இல்லை. சமூக வலைத்தளங்களில் பேசும் நபர்களைப் போல் காளியும் மாலியும் பேச தொடங்கினார்கள். காட்டில் உள்ள காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களே பாருங்கள் நான் தான் காளி இவன்தான் மாலி. எங்கள் பக்கத்தில் தான் கிளி இருக்குது பாருங்க ஹலோ சொல்லு என்றது காளி உடனே கிளி ஹலோ ஹலோ என்றது. பக்கத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த குயிலைக் காட்டி இந்த காட்டிலேயே இவங்க கூட்டம்தான் நல்லா பாடுவாங்க கேட்கிறீர்களா நண்பர்களே என்று சொல்லிவிட்டு குயிலிடம் அலைபேசியைத் திருப்பியவுடன் குயில் அழகாய் பாடியது. அப்படி அங்குள்ள ஒவ்வொன்றையும் காட்டி மாலியும் காளியும் பேசிக்கொண்டே இருந்தன. அதையெல்லாம் மற்ற மிருகங்களும் நேரம் காலம் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்த ராஜாளி கழுகுக்கு கோபம் வந்துவிட்டது காளி மாலி இருவரும் பேசாம அந்த அலைபேசி கீழே போடுங்க. இல்லை என்றால் ரெண்டு பேரையும் காடு கடத்தி விடுவேன். பாத்துக்கங்க என்று சத்தமா கத்தியது. அப்போதுதான் தேனீயும் ஆமாம் நானும் என் வேலைய செய்யாம அதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வருந்தியது தேனீ அப்படி சொல்லியதும் மற்ற விலங்குகளும் வருந்தின. ராஜாளி கழுகு அன்பாகச் சொல்லிப் பார்த்தது. பின்பு மிரட்டிப் பார்த்தது. மாலியும் காளியும் கேட்பதாகவே இல்லை. கடைசியில் ராஜாளி கழுகு பறவைகளோடும் விலங்குகளோடும் ஆலோசனை செய்தது. ஏக மனதாக விலங்குகளும் பறவைகளும் அந்த அலைபேசியைப் பிடுங்கி எங்கிருந்து எடுத்தார்களோ அங்கே வைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். சோறு தண்ணீர் இல்லாம பித்து நிலைக்கு போயிருந்த காளி மாலியிடமிருந்து ராஜாளி கழுகு அந்த அலைபேசியைப் பிடுங்கியது. ராஜாளி கழுகு பிடுங்கியதும் மாலியும் காளியும் அழுதார்கள் அழுதார்கள் அப்படி அழுதார்கள். குதித்தார்கள், உருண்டார்கள், புரண்டார்கள் கத்தினார்கள் யாரும் கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் வேறு வழி இல்லாமல் இருவரும் அமைதியானார்கள். பிறகுதான் பசியை உணர்ந்தார்கள். தம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவுகளையும் நினைத்தார்கள். அலைபேசியைப் பார்த்து பார்த்து கண்கள் எரிச்சல் கொண்டதையும் கைகள் வலியை அடைந்ததையும் உணர்ந்தார்கள். அச்சச்சோ அந்த கேடுகெட்ட இயந்திரத்தை வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காமல் வீணாகப் போகிறார்களே என்று வருந்தின. அவர்களிடமிருந்து பிடுங்கிய அலைபேசியை எடுத்த இடத்தில் கொண்டு சென்று போட்டது ராஜாளி கழுகு. எல்லோரும் அப்பாடா காட்டைப் பிடித்த கேடு அகன்றது என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மகிழ்ந்தார்கள். காளியும், மாலியும் கூட ஏதோ சுமையை இறக்கி வைத்ததைப் போல் மகிழ்ந்தனர். ஈரோடு சர்மிளா முனைவர். மு. சர்மிளாதேவி, கல்லூரிப்பேராசிரியர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர். தீவிர வாசிப்பிலும் எழுத்திலும் பேரார்வம் கொண்டவர். பின் நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷின் படைப்புகளில், எவஞ்சொன்னது ராஜான்னு, மகிழினி IPS,மந்திரச்சங்கும் பப்பிக்குட்டியும், கோடைக்குதூகலம், ஆந்தையும் மரங்கொத்தியும்,துணிச்சல்காரி, வானி, போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- அறமதியின் கதை -2
வீஷ் என்று பறந்தது அந்த மாயக் கம்பளம். "அறமதி" யார் என்ற குழப்பம் இப்போது அன்பினிக்குத் தீர்ந்தது. தன் வரலாற்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது: "உலகிலேயே நீளமான அரசியல் அமைப்புச் சட்டம் நம்ம நாட்டோடதுதான். ஒரு பள்ளிக்கூடத்துக்கு எப்படி விதிகள் இருக்கோ, அதே மாதிரி ஒரு நாட்டுக்கான பெரிய ரூல்ஸ் புக் தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டம்." ஆசிரியர் மேஜையில் இருந்த வண்ணத் தாள்களைக் காண்பித்தார். "ஒவ்வொரு பக்கத்தையும் கையாலேயே எழுதி, அழகான ஓவியங்கள் வரைஞ்சிருக்காங்க. இது நம்ம நாடாளுமன்ற நூலகத்துல பத்திரமா இருக்கு." "டீச்சர், இதுல இருக்குற பெரிய வார்த்தைங்களை பார்த்தாலே பயமா இருக்கே! எங்கள மாதிரி குழந்தைங்க இத எப்படிப் புரிஞ்சுக்க முடியும்?" என்று கேட்டான் குமார். "நமக்கு பயன் தர்ற புது டெக்னாலஜியை எப்படி ஆர்வமா கத்துக்குறோமோ, அதே மாதிரிதான் நம்மள பாதுகாப்பா வச்சிருக்குற சட்டத்தையும் தெரிஞ்சுக்கணும். இது ஒண்ணும் கடினம் இல்லை," என்றார் ஆசிரியர். அன்பினி 'முகப்புரை' என்று வாசித்தாள். ஆசிரியர் விளக்கினார், "ஒரு பெரிய கட்டிடம் அஸ்திவாரத்துல நிக்குற மாதிரி, அரசியல் அமைப்புச் சட்டத்தோட அஸ்திவாரம்தான் இந்த முகப்புரை." அன்று முதல் அன்பினியின் குறிப்பேடு முழுவதும் முகப்புரையில் இருந்த ஓவியங்களால் நிறைந்திருந்தது. அறமதியைப் பார்த்த அன்பினி, "நீ அரசியல் அமைப்புச் சட்டம் தானே?" என்று கேட்டாள். "ஆமா, உன் கனவுல வர்ற நான் உனக்குத் தெரிஞ்சவளாத்தானே இருக்கணும்?" என்று சிரித்தாள் அறமதி. அப்போது மேகங்கள் மேல் நேரு தாத்தாவைக் கண்டாள் அன்பினி. "ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பதே நமது நோக்கம்," என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். "பிரிட்டிஷ் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சப்போ அவர் பேசினது தானே இது. நான் இந்த வீடியோவ பாத்திருக்கேன். சுதந்திரம் கிடைச்சப்போ ஏன் அவர் சோகமா பேசுறாரு?" என்று கேட்டாள் அன்பினி. "சுதந்திரம் கிடைச்சப்போ பசி, வறுமை, படிப்பு அறிவு இல்லாதது, பாகிஸ்தான் பிரிவினைன்னு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதனாலதான், சுதந்திரம் என்பது வெறும் கொண்டாட்டம் இல்ல, அது ஒரு பெரிய பொறுப்புன்னு நேரு சொன்னாரு," என்றாள் அறமதி. அப்போது அறமதியின் சிந்தாமணி வீசிய காற்றில் விலகியது. அன்பினி அதைச் சரி செய்ய உதவினாள். அவள் கை பட்டதும் அதில் ‘இறையாண்மை’ என்று மின்னியது. அந்த வெளிச்சத்தில் பிரிட்டிஷ் கொடி கீழே இறக்கப்பட்டது தெரிந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிக்கொண்டிருந்தார். “இறையாண்மைன்னா வேற ஒரு நாடோ, ஒரு ராஜாவோ நம்ம நாட்டை ஆட்சி செய்ய முடியாது, இல்லையா?” அன்பினி கேட்டாள். "அழகா சொன்ன! நம்ம நாட்டுக்கான முடிவுகளை நாமே எடுக்குற உயர்ந்த அதிகாரம்தான் இறையாண்மை. அது மட்டுமல்ல, யாரும் எந்த வித த்திலும் தலையிட முடியாது. சுதந்திரமான முடிவுகளை எடுக்க வழிவகை செய்யும்.. உலக அரங்கில் மற்ற நாடுகளோட வியாபாரம் செய்யவும், வேண்டாதப்போ அதைத் தவிர்க்கவும் நமக்கு முழு உரிமை இருக்கு. அதோட, உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்தியா மத்த நாடுகளோட நட்பு ரீதியான ஒப்பந்தங்களைச் செய்யவும்,. இந்திய மக்கள் கையிலதான் அந்த அதிகாரம் இருக்கு. அதை பாதுகாக்குற கடமையும் அவுங்களுக்கு இருக்கு” என்று சொல்லி முடித்தாள் அறமதி. “அதனாலதான் முகப்புரை 'இந்திய மக்களாகிய நாம்' அப்படின்னு ஆரம்பிக்குதா” என்றாள் அன்பினி “கரெக்ட். யாரெல்லாம் இந்தியா மக்கள்? உன்ன மாதிரி குழந்தைகளையும் சேர்த்துன்னு நினைக்கிறியா?” “நிச்சயமா! என்னைப் போல இருக்குற குழந்தைகளையும் சேர்த்து, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை... குஜராத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை.. எல்லாரும் இந்தியா மக்கள் தான்.” “ஆமா. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்தது தான் இந்திய ஒன்றியம். அதுல இருக்குற 140 கோடி மக்களும் தான் இந்த நாட்டின் மன்னர்கள்." "அறமதி, நீ எப்படி தமிழ் பேசுற? உனக்கு இங்கிலீஷ் ஹிந்தி மட்டும் தான் தெரியுமுன்னு நான் நெனச்சேன்" என்று அன்பினி வியந்தாள். "எல்லா இந்தியர்களும் என்கூடப் பேசனும், நான் சொல்லுறத புரிஞ்சுக்கனும் இல்லையா. அதனால தான் 22 மொழிகள் அதிகாரப் பூர்வ மொழிகளா இருக்கு” “அப்போ ஹிந்தி நம்ம நாட்டோட தேசிய மொழி இல்லையா?” “இல்ல, நம்ம நாட்டோட பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மரியாதையைக் கொடுத்தாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் 299 பேர் இருந்த குழு விவாதிச்சாங்க. பல மதங்கள், பல கொள்கைகள் கொண்ட பல பிரதிநிதிகள் இருந்தாங்க. அதுல 15 பெண்கள் இருந்தது சிறப்பு. அம்பேத்கர் தன் புத்தி கூர்மையால எல்லா சந்தேகங்களுக்கும் பதில் சொன்னாரு.” “அடேங்கப்பா! இவளோ பேர் இருந்தா ஒரே சத்தமா இருந்திருக்குமே. இப்படி தான் நம்ம தேசிய சின்னம், விலங்கு, பறவை, தேசிய கீதம் எல்லாத்தையும் முடிவு பண்ணுனாங்களா?” “ஆமா. மதச்சார்பற்ற சின்னங்களையும், வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துற 'ஜன கண மன' பாடலைத் தேசியகீதமாவும் பாத்து பாத்து தேர்வு பண்ணுனாங்க." அப்போது, சுதந்திரம் கிடைத்த நாளில், தலைவர்கள் உணர்ச்சி பொங்க தேசிய கீதத்தைப் பாடுவதையும், மக்கள் கொண்டாடுவதையும் அன்பினி கண்டாள். திடீரென அந்தக் காட்சிகள் மறைய, அன்பினியின் இதயம் படபடவென அடித்தது. தைரியமான அன்பினி இப்போது ஏதோ ஒன்றைக் கண்டு நடுங்கத் தொடங்கினாள். அன்பினி ஏன் நடுங்கினாள்? அப்படி என்ன நடந்தது? ( அறிவோம் தெளிவோம் )... சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- 100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் 21. 2. 2026 அன்று காலை 9 மணிக்குத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதுரைக்கிளையின் தலைவர் நஜுமுதீன் தலைமையேற்றார். தசிஎகச வின் மாநிலத்தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் துவக்கவுரையுடன் துவங்கியது. மதுரை மாநகர் செயலாளர் மு.சுலைகா பானு நிகழ்வினைப் பற்றிய நோக்க உரையாற்றினார்கள். மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் (திருமங்கலம்), திரு ரகுபதி அவர்களும், மணியம்மை பள்ளி தாளாளர் பி வரதராசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் கதைகளை கூற தொடங்கினார்கள். கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் , ஆயிஷா நடராசன், விழியன், விஷ்ணுபுரம் சரவணன், சுகுமாரன், சரிதா ஜோ, யெஸ்.பாலபாரதி, ஆதிவள்ளியப்பன், உதயசங்கர், கன்னிக்கோவில் ராஜா, கார்த்திகாகவின்குமார் உள்ளிட்ட சமகால எழுத்தாளர்களின் 100 கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு காக்கா நரி வடை யில்லை தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளில்லை. மகாபாரத, ராமாயாணக்கதையில்லை. குரான், பைபிள் கதையில்லை. நாட்டுப்புறக்கதையில்லை. 100 குழந்தைகளும் சமகாலத்தைப் பேசும் சமகாலக்கதைகளையே சொன்னார்கள். நிகழ்ச்சி மதுரை பண்பலையில் ‘ உங்களைத் தேடி ‘ என்ற நிகழ்ச்சியில் நேரலையாக காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பானது. நிழ்வினைப் பற்றிய செய்திகள் இந்து தமிழ் திசை , தினமலர், மாலை முரசு , தினகரன் போன்ற நாளிதழ்களில் வெளியானது . அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மைக்குடி , விடத்தகுளம் போன்ற கிராமங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர் . தொடர்ச்சியாக 100 குழந்தைகள் 100 கதைகளை கூற நிகழ்வு மாலை நான்கு மணிக்கு நிறைவுற்றது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலிருந்து சைமோன் நடேசன் , வழக்கறிஞர் சுரேஷ் லிவிங்டன் தாஸ், ஆகியோர் வந்திருந்தனர். கதைகளைக் கூறிய மாணவர்கள் அனைவருக்கும் உலகச் சாதனை சான்றிதழும் , கேடயமும், பதக்கமும் அளித்து பாராட்டு அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கவிக்குயில் கணேசன், ஆசிரியர்கள் சிவா , சரவணன், எழுத்தாளர் அமுதா செல்வி, அனுசுயா , பாரதி இலக்கியப் பேரவை முருகன் , திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை விஸ்வநாததாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக நிறைவுரையை கவிஞர் துளிர் வழங்க நன்றியுரையினை முனைவர் ஜோசப்பின் மேரி வழங்க விழா இனிதே நிறைவுற்றது. மு.சுலைகா பானு 34 வருட ஆசிரியப்பணி 50க்கும் மேற்பட்ட அமைப்புகளில் ஆசிரியப் பணி & கல்விச் சேவைக்காக விருது வழங்கி பாராட்டியுள்ளனர் . தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 42 மணி நேரம் 19 நிமிடம் தொடர் கற்பித்தலில் உலக சாதனை ( Teaching Marathon )
- சிரியாவின் மகள்
மைத்ரேயி குல்கர்னி தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் எல்லோரும் கைகளில் இருந்த பயணச்சீட்டுகளைப் பதற்றத்துடன் பார்த்தபடி, விமானம் நிற்கும் நுழைவாயில்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "விமானங்கள் தாமதமாகும்..." என்ற அறிவிப்பு இடைவிடாது ஒலித்து, அங்கிருந்தவர்களின் பதற்றத்தை இன்னும் அதிகரித்தன. நான் விமான நிலையத்துக்கு வந்து சுமார் ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. மெல்ல மெல்ல எனக்கு ஒரு கசப்பான உண்மை புரியத் தொடங்கியது. இன்று எனக்கு விமானத்தில் இடம் கிடைக்கப் போவதில்லை. அடுத்த விமானம் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் கிளம்பும். இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. இந்தப் பயணத்தின் தொடக்கமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. இஸ்தான்புல் வருவதற்கு முன்பே, கிளம்ப வேண்டிய நாளில் வீட்டில் ஒரு சிறிய விபத்து. அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதில் பாதி நேரம் போனது. அதன் பிறகு, விமான நிலையத்திற்கு வரும் வழியில் முன்னெப்போதும் இல்லாத ஒரு போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி ‘இந்தப் பயணம் இப்போது வேண்டாம்’ என்று என்னைத் தடுப்பது போலவே எனக்குத் தோன்றியது. பயணக் களைப்பில், உடல் முழுவதும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வலியெடுத்தது. கையில் துருக்கி நாட்டு விசா (Visa) இல்லாததால், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் வழியில்லை. இந்த இருபத்தி நான்கு மணி நேரம் என்பது வெறும் நேரமல்ல, அது ஒரு பெரும் சுமை. தங்குவதற்கு ஒரு விடுதி தேட வேண்டும் அல்லது இந்த இருக்கையிலேயே இரவைக் கழிக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் இன்னும் ஒரு முழு நாளைக் கழிக்க வேண்டும் என்று நினைத்தாலே சலிப்பும், பயமும் சூழ்ந்து கொண்டது. துரதிர்ஷ்டவசமாக அலைபேசியின் பேட்டரியும் தீர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அப்பா, அம்மாவிற்கு நான் பத்திரமாக இருக்கிறேன் என்று ஒரு தகவல் சொல்லக்கூட வழியில்லை. விமான நிலைய வை-பை (Wi-Fi) வேலை செய்யவில்லை. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன். சுற்றிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே பல முகங்கள். சிலர் தரையில் படுத்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. ஒவ்வொருவருக்கும் ஒரு அவசரம். நீண்ட யோசனையில் ஆழ்ந்தேன். விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்டக் காற்று உடலைத் தழுவினாலும், உள்ளுக்குள் ஒருவித வெப்பம் தகித்துக் கொண்டே இருந்தது. கையில் இருந்த பையை இறக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு கண்ணாடிச் சுவரோரம் உட்கார்ந்தேன். அப்போது எனக்குத் தாகம் தொண்டையை அடைத்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு சொட்டு கூட இல்லை. அருகில் இருந்த ஒரு சிறிய கஃபேவுக்குச் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். ஆனால், அங்கே என் ஏ.டி.எம் கார்டுகள் எதுவுமே வேலை செய்யவில்லை. கையில் ரொக்கப் பணமும் இல்லை. ‘பரவாயில்லை. தண்ணீர் குடிக்காமலேயே இன்னும் ஒரு நாள் இருந்துவிடலாம்’ என்று என்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, அந்தப் பாட்டிலை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினேன். ‘ஏன் இந்தப் பயணத்திற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம்?’ என்று மனதிற்குள் என்னையே திட்டித் தீர்த்தேன். பிறகு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தேன். அப்போது, என் தோள் மீது ஒரு கை பட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன். தேவதையைப் போல ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அவள், உடல் முழுவதையும் மறைத்த வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அவளது கண்கள் கருணையால் நிறைந்து இருந்தன. அவளது புன்னகையில் எனது களைப்பு ஒரு கணம் மறைந்து போனது. அவள், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை என்னிடம் நீட்டி, "இதை எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்காகத்தான்" என்று ஆங்கிலத்தில் சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மடக்குக் குடித்தேன். அந்த ஒரு மிடறு தண்ணீர் என் தொண்டையை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் குளிர்வித்தது. நான் அவளோடு சென்று அமர்ந்தேன். அவளுக்கு அருகில் ஒரு சிறிய குழந்தை. அந்தக் குழந்தையின் கண்கள், அதிகாலையில் மலரும் மொட்டுகளைப் போல அழகாக இருந்தன. "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய அமைதிக்குப் பிறகு, "நான் சிரியாவிற்குப் போகிறேன்... என் பெற்றோரைப் பார்க்க" என்றாள் அவள். 'சிரியா' என்ற பெயரைப் கேட்டதுமே என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ‘யுத்தம் கொழுந்துவிட்டு எரியும் அந்த நரகத்திற்கு இப்போது ஏன் போகிறாள்?’ என்று நான் மனதுக்குள் நினைத்ததை அவளது கண்கள் கண்டுகொண்டன. "என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. அவர் அங்கே தனியாக இருக்கிறார். நான் போனால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்" என்று அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் மரணத்தைப் பற்றிய பயமில்லை. அம்மாவைப் பார்க்கத் துடிக்கும் ஒரு மகளின் பேரன்பு மட்டுமே இருந்தது. தொடர்ந்து அவள் பேசினாள். அவளது ஊருக்கு அருகில் உள்ள நகரங்களில் எல்லாம் போரின் உக்கிரம் தாள முடியாத அளவிற்கு இருப்பதாகவும், வானிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள் அடுக்குமாடி கட்டடங்களைத் தூசியாக்கும் காட்சிகளைப் பார்த்ததாகவும் விவரித்தாள். அன்புக்குரியவர்களைப் போரில் பறி கொடுத்துவிட்டு, இடிபாடுகளுக்கு நடுவே மக்கள் கதறும் ஓலச் சத்தம் அங்கே அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றாள். "அம்மா இருக்கும் ஊர் இப்போதைக்கு அமைதிதான். ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதே ஆபத்து. விமானம், டாக்ஸி, பேருந்து என எதிலுமே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் நான் போக வேண்டும்..." என்று சொல்லும்போது, அவளது கண்களில் தைரியம் தெரிந்தது. அவளது துயரத்தோடு ஒப்பிடும்போது, என் விமானம் தாமதமானதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து நான் மும்பை சென்றால், அங்கே எனக்காக ஒரு டாக்ஸி காத்திருக்கும். வீட்டின் கதவைத் திறந்ததும் அப்பா அணைத்துக் கொள்வார். அம்மா எனக்குப் பிடித்த அவல் உப்புமா செய்து வைத்திருப்பார். எனது உலகம் பாதுகாப்பானது. ஆனால் இந்தப் பெண்? கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, எப்போது குண்டு விழும் என்று தெரியாத ஒரு போர்க்களத்திற்குள் துணிச்சலோடு நுழையப் போகிறாள். இவ்வளவு பெரிய கவலையைச் சுமந்து கொண்டு, எனக்குத் தண்ணீர் கொடுத்து உதவிய பெருந்தன்மை என்னை நிலைகுலையச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு நான் இந்தியா திரும்பினேன். செய்திகளில் சிரியாவில் போர் தீவிரமடைந்த செய்திகள் வந்தன. இடிந்து விழும் வீடுகளையும், எரியும் வீதிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் முகமும், அவளது குழந்தையின் அழகான கண்களுமே நினைவுக்கு வந்தன. அவளைப் போல எத்தனையோ மகள்கள் தன் பெற்றோருக்காகவும், எத்தனையோ தாய்கள் பிள்ளைகளுக்காகவும் தவித்துக் கொண்டிருப்பார்கள். போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல. ஆயிரக்கணக்கானோரின் அன்பையும், எதிர்பார்ப்பையும், வாழ்வையும் சிதைப்பது என்பதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். போரைப் பற்றிய கதைகள் எல்லாமே வேதனையானவைதான். இப்போது அவளைத் தொடர்புகொள்ள என்னிடம் எந்த வழியும் இல்லை. ஆனால், எனது தோழி, அந்தச் சிரியாவின் மகள் குடிக்கத் தந்த ஒரு மிடறு தண்ணீர், வாழ்நாள் முழுதும் மனதை ஈரம் குறையாமல் வைத்திருக்கும். கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- வளரிளம் புதிர்ப்பருவம் - 9
பிரையோனி, ஜேமியிடம் உரையாடத் தொடங்கினார். உனக்கு ஒரு தோழி இருந்தால் என்ன செய்வாய்? எங்கே கூட்டிட்டுப் போவாய்? சினிமாவுக்கு. என்ன மாதிரியான படம்? ஹாரர். A - சான்றிதழ் படமா? ஆமா. தியேட்டரில் ஈஸியா ஏமாத்திட்டு உள்ளே போயிடலாம். சினிமா முடிந்த பிறகு நீ அவளோடு நடந்து சென்று நேரம் செலவளிப்பாயா? இல்ல நேரே வீட்டுக்கா? வீட்டுக்கெல்லாம் போக மாட்டேன். "அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோணுமா?" என்று பிரையோனி கேட்டார். ஜேமிக்கு லேசான அதிர்ச்சி. "இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் நீங்க கேட்கலாமா?" என்றான். ஏன், ஸ்கூல்ல இதெல்லாம் பேசமாட்டீங்களா? ஜேமி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். உன் வயசுல இருக்கிற பையன், ஒரு பொண்ணு கிட்ட அல்லது பையன் கிட்ட எந்த அளவுக்கு உடல் ரீதியா நெருக்கமா நடந்துக்கலாம்னு நீ நினைக்குற? நான் Gay இல்லேன்னு சொல்லிட்டேன். நீ Gay என்று நான் சொல்லவே இல்லியே! இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா? ஆமாம். உன்னால முடிஞ்சா சொல்லு. தெரியல. தொடுறது, முத்தம் கொடுப்பது.... உன்னைப் பொறுத்தவரை தொடுவதுன்ன என்ன? உடல் பகுதிகளைத் தொடுவது. ஒவ்வொரு பகுதியாக பிரையோனி கேட்கக் கேட்க, "ஒருவேளை தொடுவேன்" என்று ஜேமி தயங்கித் தயங்கிச் சொன்னான். "நிஜமாகவே நீங்க இப்படியெல்லாம் கேட்கலாமா?" என்று ஜேமி கேட்டான். உன்னை மாதிரி ஒரு 13 வயசுப் எதிர் பாலின ஈர்ப்பு உள்ள பையன், ஒரு பொண்ணோட உடலைத் தொடுவது சாதாரணமானது என்று நினைக்கிறாயா? பிரையோனியின் கேள்விகள் இன்னும் வெளிப்படையாக வரத் தொடங்கியதும் ஜேமியும் பெண் பிள்ளைகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்வேன் என்று பேசத் தொடங்கினான். அவர்களும் என்னைத் தொட்டார்கள் என்று சொன்னான். எங்கெல்லாம் தொட்டார்கள் என்று விவரித்தான். அவ்வப்போது தயங்கினான். இங்கு சரி, தப்பு என்று எதுவுமில்லை ஜேமி, நீ எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் என்று பிரையோனி சொன்னார். சற்றே யோசித்த ஜேமி, நான் சொன்னதெல்லாம் நடக்கவில்லை என்றான். Porn படங்களைப் பார்ப்பாயா? நான் பார்க்க மாட்டேன். மற்றவர்கள் பார்ப்பாங்க. "ஆனால் என்னுடன் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளைகளின் ஆடைக்குறைவான படங்களைப் பார்த்தேன்.அதாவது மேலாடை இல்லாமல்!" என்றான் ஜேமி. இது தெரிந்தால் அந்தப் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? எவ்வளவு வருந்துவார்கள்? வகுப்பில் எல்லாரும் தானே பார்த்தார்கள். பிரையோனி அதிர்ச்சியடைகிறார். "கெயிட்டி அதில் ஒருத்தியா?" என்று கேட்டார். ஜேமியின் முகம் இருண்டது. உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று அவன் குரல் தடுமாறியது. எப்படி இதை யூகித்தீர்கள்? என்று கேட்டான். நான் யூகிக்கவில்லை. Snapchat இல் அவதான் ஒருத்தனுக்கு அனுப்பினா அவன் எல்லாருக்கும் காட்டினான். ஆணின் காதல், காமம் போன்ற உணர்வுகள் குறித்து இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. ஆனால் வளரிளம்பருவத்தில் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லாம். குழந்தைப் பருவக் காதல் என்று பெருமிதத்தோடு சொல்வதும் உண்டு. ஓர் ஆண் குழந்தை வளர வளரப் பெண்ணை ஆணின் சொத்து, உரிமை என்றெல்லாம் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கிறது. பெண் உடல் மீதான ஈர்ப்பை வளரிளம்பருத்தில் உணரத் தொடங்குகிறது. வளரிளம் பருவ ஆண் பிள்ளைகள் தங்களுக்குள் பெண்ணைப் பற்றி என்ன பேசுவார்கள்? பெண் பிள்ளைகள் ஆணைப்பற்றி என்ன பேசிக்கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக மேலை நாடுகளில் வளரிளம்பருவ இலக்கியங்கள் இருக்கின்றன. இங்கு நமது வாழ்விலிருந்து யோசிக்கலாம். பிறகு இதுபற்றி விரிவாக உரையாடலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தங்கள் நாள் குறிப்பு ஏடுகளில் காதலைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதனால் வகுப்பில் காதலைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கினேன். 'காதல்' என்று கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்கள் முன் சாக்பீசை நீட்டினேன். பலத்த போட்டிக்கிடையே அதைக் கையில் வாங்கியவர், நெறியாளர் ஆனார். அன்பு, புனிதமானது, நட்பு, வாழ்க்கை, மனதைப் புரிந்துகொள்ளுதல், சுகம், தெரிந்து கொள்வது, அழிவதில்லை, உண்மை, சந்தோஷம், மனதிற்குப் பிடித்தவரை நேசிப்பது, வரலாறு, திருமணம், பழகுவது, விரும்புவது, மனதில் பாரம், காதல் ஒரு நோய், உயிருக்கும் மேல், காதல் ஒரு காமம், ஏமாற்றி சுற்றுவது, காதல் ஒரு போதை, பணச்செலவு, வாழ்வில் முக்கியமானது, விரும்பும் பெண்ணை மணம் முடிப்பது, இன்பம், அறியாதவர்களை இணைப்பது, காதல் பொன்னாது, வாழ்க்கையை மாற்றும், துன்பம், ஏமாற்றுவது, மனதளவில் நேசிப்பது, காதல் ஒரு பைத்தியம், எந்தப் பருவத்திலும் வருவது காதல், காதல் ஒரு நல்ல காலம், காதல் ஒரு துணிவு, துள்ளாத மனமும் துள்ளும், காதல் அழகானது. அதுவரை திறக்காத வாய்களும் திறந்தன. மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்த எண்ணங்களால் கரும்பலகை நிரம்பி வழிந்தது. காதலைப் பற்றி சமூகம் பேசும் அனைத்தையும் ஒன்றாகக் கேட்க முடிந்தது. பாட வேளையும் நிறைவடைந்தது. அனைவரும் சொன்னவற்றை யோசிக்கும் போது ஆச்சரியமும் வருத்தமும் தோன்றின. வளரிளம் பருவத்தினரை காதல் என்ற வார்த்தை பாடாய்ப்படுத்துகிறது. இவர்கள் யாரைக் காதலிக்கின்றனர்? கற்பிதங்களும் வயதின் ஆர்வமும் ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? போன்ற பல்வேறு எண்ணங்கள் மனதுள் எழத்தொடங்கின. ஒரு வினாத்தாளை உருவாக்கி அனைவரிடமும் கொடுத்து எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விகளை எல்லாம் எழுதினேன். அவற்றிலிருந்து சில கேள்விகளை மட்டும் தட்டச்சு செய்து வினாத்தாளை உருவாக்கினேன். தொடர்ந்து பேசுவோம்!
- அரவணைக்கப்பட வேண்டிய கரம்
மனிதர்களிடம் ஆழப் பதிந்துவிடும் பண்பாட்டுக்கூறுகள் அவர்களின் சிந்திக்கும் எல்லைகளை பெருமளவு மட்டுப்படுத்திவிடுகின்றன. வகுப்பறைகளில்கூட பல அறிவியல்பூர்வமான தர்க்கங்களை எழுப்பி பல விசயங்களை உரையாடினாலும்கூட குழந்தைகளால் வீடுகளிலும் ஊரிலும் பின்பற்றப்படும் சமூக நடவடிக்கைகளுக்கு ஏற்பவே செயல்பட முடிகிறது. அறிவியல் முறைகளற்ற பலவற்றின் மீதும் கேள்வியெழுப்பும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு அதட்டலும் அமைதியுமே பதிலாக அமையும்போது அவர்கள் கேள்வி கேட்பதன் ஆர்வத்தை குறைத்துக் கொள்கின்றனர். அவ்விடத்தை நிரப்பும் ஒழுக்கம் சார்ந்த அளவீடுகளும் பக்தி சார்ந்த அச்சமும் குழந்தைகளையும் தொற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவை கடத்தப்படுகின்றன. அதுவே வாழ்வியலாகவும் கட்மைக்கப்படுகிறது. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “இடம்” என்கிற சிறார் நாவல் அப்படியொரு பகுதியை தொட்டுத்தான் பேசுகிறது. இடதுகை பழக்கம் உள்ள சிறுவனின் மீது நடத்தப்படும் உளவியல் தாக்கத்தை இந்நாவல் பேசுகிறது. “இடதுகை” என்பது நமது பண்பாட்டு அடிப்படையில் குறைந்த மதிப்பினையே பெற்றிருக்கிறது. அத்தகைய இடதுகை பழக்கம் கொண்டிருக்கும் சிறுவனின் உத்வேகமான செயல்பாடுகள் கல்விக்கூடத்திலேயே புறக்கணிக்கப்படும் சூழலையும் பிறகு அதிலிருந்து மீளும் மனங்களையும் இந்நாவல் அழகாக காட்சிப்படுத்துகிறது. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே விறுவிறுப்பை ஏற்றிவிடும் ஆசிரியர் பின்னகர்ந்து ஒவ்வொரு திரைச்சீலையாக விலக்கி கதையின் ஒருகட்டத்தில் மைய கதாபாத்திரமான ஆதவனின் சிக்கலை நமக்கு காட்டிவிடுகிறார். இதற்குப் பிறகு ஆதவனோடு சேர்ந்து நாமும் கதையோட்டத்தில் பயணப்பட்டு இறுதியாக நிறைவெய்த வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவு ஓட்டத்திற்குப் பிறகு பந்தயக்காரர்கள் ஆசுவாசத்தோடு அடையும் நிதானத்தை கடைசி சில அத்தியாயங்களில் நம்மையும் உணர செய்கிறார் கதையாசிரியர். வரலாற்றில் உயர்வாக வைத்து மதிக்கப்படும் நாயகர்களை நாம் இயல்பாகவே வலதுகை பழக்கம் உள்ளவர்களாகவே நாம் உருவகித்துக் கொள்கிற இயல்பு நம்மிடம் எப்படி வந்து சேர்ந்திருக்கும். அது, இடதுகைப் பழக்கம் குறித்த நமது புரிதலின்மையின் காரணமாகவே அமைந்திருக்கிறது என்பதை நாவலின் போக்கில் நான் உணர்ந்து கொண்டேன். ஆதவனின் இடதுகை பழக்கம் பெற்றோர்களாலும் நண்பர்களாலும் இன்னமும் சொல்வதென்றால் வகுப்பறையிலும்கூட இயல்பாக ஏற்கப்பட்டாலும் பொதுவிடத்தில் அப்பழக்கம் அவ்வளவு மரியாதைக்குரியது அல்ல என்பதன் குறியீடாகவே அறிவழகன் ஆசிரியரின் தயக்கத்தையும் தலைமையாசிரியரின் நிர்பந்தத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்விருவருக்குமான பதிலாக அமையும் மாவட்ட ஆட்சியரின் செயல் வாசகர்கள் யாராலும் யூகிக்க முடியாததாக அமைந்தது இந்நாவலின் செய்நேர்த்திக்கான சிறந்த பகுதி. கதையோட்டத்தின் ஊடாகவே நா. வானமாமலை, மா. பொ. சி, நாடகாசிரியர் ஞாநி ஆகியோரை அறிமுகப்படுத்திய பாங்கும் வட்டம் என்பதற்கான குறிப்பும் பாராட்டத்தகுந்தது. இவைகளை விடவும் குழந்தைகளின் நாடக பயிற்சியின் போது வந்தமர்ந்த காக்கையின் மீது தனிப்பிரியம் உண்டாகிவிட்டது. குழந்தைகளின் இயல்பான உரையாடலின் போது கலையரங்கின் உள்ளே வந்தமரும் காக்கை, ஆதவன், கட்டபொம்மனின் வசனத்தை பேசிடும் தருணத்தில் விருட்டென பறந்து சென்றிடுகிறது. ஆகா! இதிலேயே ஆதவனின் நாடக குரல் ஒத்திகை எத்தகையது என்பது காட்சிபூர்வமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த நாவலை வாசித்ததும் இணையதளங்களின் வழியாக பல புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். ஆசிரியர் குறிப்பிட்டதைப் போன்று அறிவியல் கண்டுபிடிப்பு முதற்கொண்டு பண்பாட்டு மற்றும் மத சிந்தனைகள் வரை இடதுகை பழக்கம் குறித்து மாற்று சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பதை உணர்ந்து கொண்டேன். புத்தக அளவும், அச்சாக்கமும், வடிவமும், படங்களுக்கென தனிப்பக்கங்களை ஒதுக்கியதும் இந்நூலை குழந்தைகளுக்கு நெருக்கமானதாக மாற்றத்தக்க முயற்சி. சால்ட் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள். விஷ்ணுபுரம் சரவணன் அவர்களிடமிருந்து மற்றுமொரு சமூக பார்வையுள்ள நூல் இது. குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் வாசித்து நூலின் செய்தியை பரவலாக்க வேண்டும். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.
- ரெங்கசாமி வாத்தியாரின் விசில்
விசில் சப்தம் கேட்டாலே அது ரெங்கசாமி வாத்தியாராகத்தான் இருக்கும். ஆசிரியர் ஓய்வறையிலிருந்து வெளியேறும்போதே ஒரு விசிலடித்துவிட்டுத்தான் பிரம்போடு கிளம்புவார். வராண்டா கார்டனில் லாந்திக்கொண்டிருக்கும் மாணவர்கள் அடுத்த நொடியே பொந்துக்குள் பதுங்கும் எலிகளைப் போல வகுப்பறைக்குள் ஒடுங்கிப்போவார்கள். அந்த நேர அமைதியில் காற்றும் அமர்ந்து வீசும். மரம் செடிகளில் இலையசைவுகளும்கூட அடங்கி மெதுவாக தலையசைக்கும். வராண்டாவில் அவர் நடந்து வரும் காலடி ஓசை அருகில் கேட்டதும் லேசாக தலையை திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் போது அவரும் சன்னல் வழியாக பார்ப்பார். அந்த முகத்தில் கருவிழிகள் மட்டும் அசைந்து அருகில் வருவது போல் ஒருவித மிரட்சியாய் இருக்கும். அவரிடம் கண்டிப்பு இருந்தாலும் ஒருநாளும் யாரையும் அவர் அடித்து ஒருவரும் பார்த்ததில்லை. அவரது குரலும் மைனா கூப்பிடுவது போல க்கிர்.. கிர்ரி.. என மிகச்சிக்கனமான கீச்சுக்குரலாகத்தான் வெளிப்படும். மொத்த வகுப்பும் ‘கப்..சிப்’பாக இருக்கும் போது இந்த பன்னீர் மட்டும் எழுந்து, “ஏய்.. இவரை இப்பொழுது அடிக்கட்டுமா” என்று கேட்டு பூனையைப் போல அவருக்கு பின்னாலேயே போவான். உள்ளங்கையை பொத்தினாற்போல வைத்துக்கொண்டு அவர் முதுகில் ஒரு போடு போடுவான். அவர் அதிர்ந்து போய் பின்னால் திரும்பி ஏன் என்று கேட்பதற்குள் முந்திக்கொண்டு, “சார் முதுகுல பூச்சி ஓடுனது சார்” என்பான். “சரி..சரி. நீ போய் உட்கார்ந்து படி” என்று பிரம்பை ஆட்டிக்கொண்டு மறுபடியும் வராண்டாவில் நடக்க ஆரம்பித்துவிடுவார். நாளை முதல் பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குவதை நினைக்கும் போதே பன்னீருக்கும், அமுதனுக்கும் உண்டான சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவர்கள் ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேர வகுப்பில் கணித ஆசிரியர் ரெங்கசாமியின் அறிவிப்பை கேட்டதும் வகுப்பே இறக்கை தட்டி பறப்பது போல் உற்சாகமானது. “எனது அன்பு மாணவர்களே.. இங்கிருந்து தென்திசையில் பார்த்தால் நீலவண்ணமாய் மடிந்துமடிந்து மலைமுகடுகள் தெரிகிறது பார்த்தீர்களா…” “ஆமாம் சார்… குருமலை” “அங்கேதான் ஒரு இரண்டு நாட்கள் நாம் எல்லோரும் சுற்றுலா செல்கிறோம். உங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்று வந்து சொல்லுங்கள் நாளை காலையில் புறப்படலாம்” ‘வீட்டுப்பாடம் படிக்க வேண்டாம். எழுதவேண்டாம். அய்..ய்யா ஒரே ஜாலிதான்’ ‘டின்..டின்..டின்.. டிங்..” பள்ளிக்கூட மணி அடிக்கும் சப்தம் கேட்டது. புஸ்தகப்பையை தோளில் தொங்கவிட்டவாறு சிட்டாய் கலைந்து வீட்டைப் பார்க்க ஓடினார்கள். உற்சாகத்துள்ளலில் மனஇறுக்கம் தளர்ந்து ஓட்டம் பிடித்தது. அது அடுத்த தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. பொழுது விடிந்தது. இதமான வெயிலோடு மார்கழிமாத சூரியன் பிரகாசமாய் எழும்பிக்கொண்டிருந்தது. கோவில்பத்து பேருந்து நிலையம். “குருமலை” என்ற பெயர்ப்பலகையுடன் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு பேருந்து புறப்படுவதற்கு தயாராக இருந்தது. “ஒன்னு, ரெண்டு, மூணு… பதினாறு” ரெங்கசாமி வாத்தியார் வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக தலையைத் தொட்டு எண்ணினார். “ம்.. மொத்தம் பதினாறு பேரு. ஏறி உட்காருங்க” சொல்லி முடிப்பதற்குள் ‘தட..தட’வென படிக்கட்டுகள் சப்தமிட ஏறி இடம்பிடித்துக்கொண்டார்கள். பன்னீரும் நந்தனும் ஒரு இருக்கையில் அருகருகே இருந்துகொண்டனர். அவர்கள் சேக்காளிகள். எப்போது பார்த்தாலும் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கைபோட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள். பின்வாசலோரம் கடைசி இருக்கையில் எல்லோரையும் கண்பார்வையில் வைத்துக்கொள்ள வசதியாக வாத்தியார் அமர்ந்து கொண்டார். “நந்தா.. நம்மளை மாப்பிள்ளை பெஞ்சுன்னு வகுப்புல சொல்வாருல்ல. இப்ப பாரு.. அவரு கடைசி சீட்ல உட்கார்ந்திருக்காரு” பன்னீர் காதோடு காது வைத்து பேசினான். “க்..கெய்.ய்..” யென பேச்ச சப்தம் பெரிதாக கேட்டுக்கொண்டிருந்தது. “ஏலேய்… சத்தமில்லாம அமைதியாக இருக்கணும். சொல்லீட்டேன்.. ஆமா.. பன்னீரு.. உன் சத்தம்தான் பெருசா கேட்கு” ஒரு அதட்டு போட்டார். “ட்.ர்ரிர்… ட்.டி.ர்ர்..” இரட்டை விசில் சத்தத்துடன் பேருந்து புறப்பட்டது. “ப்.பிப்.. பீப்” “குருமலை 13 கி.மீ.” என்று சாலையோரம் கொடிகள் படர்ந்த மரத்தின் ஓரமாக நின்ற அறிவிப்புப்பலகை கைநீட்டிச் சொன்னது. கிராமங்களை தொட்டுப் போகும் சாலையில் ஒரு அரைமணி நேரப்பயணத்திற்குப் பின் குருமலை கிராமத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பேருந்து திரும்பியது. அங்கிருந்து பார்த்தால் கிழக்காக மடிந்து நீளும் மலைச்சரிவில் டிராக்டர் போகும் செம்மண் பாதையில் இரண்டு மைல்கற்கள் தூரம் காலாற நடந்தார்கள். வெருவெட்டை முட்செடிகளும் கிளுவையும் கள்ளிச்செடிகளும் பாதையின் இருபுறமும் அடர்ந்து நின்றன. ‘கி.ய்ய்’யென்று காட்டுவண்டுகளின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு புள்ளிமான் தன் குட்டிகளோடு பாதையின் ஊடாக மறுபக்கம் தாவிப்போனது. துள்ளியோடிய மான்களை பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள். மேகங்கள் கூடி பூந்தூறலாய் மழைத்துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இப்போது மரங்கள் அடர்ந்த சோலை கண்பார்வைக்கு தென்பட்டது. இன்றைய நாள் பொழுது இங்குதான் ஆனந்தமாக கடந்து போகும். அந்த இடத்தை “தாழையூத்து” என்று சுற்றுவட்டார மக்கள் சொல்வதை கேட்டு தெரிந்துகொண்டார்கள். தாழையூத்தில் நுழையும்போது ஐநூறு வருடங்கள் பழமையான பரந்து விரிந்து விழுதுகள் விட்டு நின்ற ஆலமரம் இலைகளை அசைத்து ‘வா..வா..’ என புன்னகைத்தது. நந்தன் தன் தாத்தாவுடன் இங்கு பலதடவை வந்து விளையாடியிருக்கிறான். ஒரு ஆள் கையை உயர்த்தி தொட்டுவிடும் உயரத்தில் இரண்டு கிளைகள் அடிமரத்தின் இருபுறமும் தணிவாக நீண்டிருந்தன. மரத்தின் ஒருபக்கக்கிளை நீண்டு கைகாட்டிய இடத்தில் ஊற்றுநீர் பெருகிய ஒரு குளம் இருந்தது. நீர்ப்பரப்பில் தாமரை இலைகள் படர்ந்து அதன் பூக்கள் மலர்ந்து விரிந்தும் மொட்டுகளாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு அழகாய் இருந்தன. நந்தன் பன்னீரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓடி தான் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த மரக்கிளையை பெருமையாகக் காண்பித்தான். “அய்..ய்.யா ஜாலி.. ஜாலி” என்று ஆறேழு பேர் அந்த தாழ்ந்த கிளையில் தொற்றி ஏறி உட்கார்ந்துகொள்ள கீழே நின்றவர்கள் ஊஞ்சலாட்டினார்கள். கிளையின் தளிர் இலைகள் சலசலவென அசைந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. “வந்தவுடனேயே மரத்துல ஏறிக்கிட்டீக. ஊத்துல போயி தண்ணீரை குடிப்போம். இறங்கி வாங்க” சற்று பின்னாலேயே வந்த வாத்தியார் விசிலை எடுத்து ஊதி கையசைத்தார். ரெங்கசாமி வாத்தியாருக்கு விசில் இணைபிரியாத நண்பன். அதை எப்போதும் கால்சட்டை பைக்குள் போட்டு வைத்திருப்பார். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதும் ஒரு சிறு சத்தம் கேட்டாலும் விசிலை எடுத்து ஊதிக்கொள்வார். காட்டிற்குள் அந்த விசில் அவசியமாக இருந்தது. ஆனாலும் அது இப்போது கறார் கண்டிப்புகள் இல்லாமல், ஒரு நண்பனைப்போல அரவணைப்பாக ஊதிக்கொண்டிருந்தது. கூட்டம் சுனையை பார்க்க திரும்பியது. மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருந்த ஒரு இடத்தில் வாய்க்கால் நிரம்பி ஓடும் அளவிற்கு ஊற்று நீர் பொங்கி வந்துகொண்டிருந்தது. நடந்துவந்த களைப்பு தீர தெளிந்த நீரை அள்ளிக்குடித்தால் இதுவரை பார்த்திராத அப்படியொரு சுவை தேங்காய்ப் பாலாய் இனித்தது. புதர்ச்செடிகளுக்கு அருகில் மயில்கள் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்த அற்புதமான காட்சியை, “அங்கே பாருங்க” என்று ஒருவன் கைநீட்டிக் காண்பித்தான். ரெங்கசாமி வாத்தியார், “எனக்கு பின்னாலேயே வாங்க. இந்த வனத்தில் அரிய வகை மூலிகைச்செடிகளை காண்பிக்கிறேன்” என்று தோப்பு முழுவதும் சுற்றிக்கொண்டு வந்தார். முகர்ந்தால் மணக்கும் சிறுசின்னி, கோபுரம்தாங்கி, சிவனார்வேம்பு, சர்பத் தயாரிப்பில் சேர்க்கப்படுகிற நன்னாரிக்கொடி, உத்தாமணி, ரசவாத மூலிகையான விராலிச்செடி, நறுமணம் மிக்க லெமன்கிராஸ் புல், கருடன் கிழங்குக்கொடி என ஒவ்வொன்றாக இனம் காண்பித்து அதன் பயன்பாடுகளை விளக்கியதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்தனர். இப்போது சூரியன் தலைக்கு மேலே உச்சிவானத்திற்கு வந்திருந்தது. சமையல் ஆக்கத்தெரிந்த கண்ணுச்சாமியும் மாரியும் காய்ந்த மரக்குச்சிகளை சேகரித்து, சுனைநீரை முகர்ந்து வந்து ஆலமரத்தடியில் மூன்று கற்களை எடுத்து முக்கோணமாய் அடுப்புக்கூட்டி மதிய உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக எடுபிடி வேலைகளை செய்வதற்கு கடைசி பெஞ்ச் பையன்கள் இரண்டு பேர் அடுப்பில் சுள்ளி விறகை தள்ளி நெருப்புமூட்டுவதும் வெங்காயம் உரிப்பதுமாக இருந்தனர். பழங்கால கமலைக்கிணறு, நீர் பாயும் வாய்க்கால்கள், மன்னர்கள் காலத்திய இளைப்பாறும் மாளிகை, மாமரநிழலில் பயன்பாடற்றுக் கிடந்த மாவரைக்கும் ஆட்டுரல், மசால் அரைக்கும் அம்மிக்கல் குழவி, மன்னரின் சேவகர்கள் தங்கும் அறைகளின் சுண்ணாம்புக்காரை சுவர்கள் என ஒவ்வொன்றாக காண்பித்துக்கொண்டே வந்தார் ரெங்கசாமி வாத்தியார். இப்போது தாழையூத்தின் கீழ்புறமாய் மலையடிவாரத்தை ஒட்டி இருந்த கன்னிமார் குளத்தின் கரையில் தன் குழுவோடு போய் நிழலோட்டமான இடத்தில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தார் வாத்தியார். குளத்தில் அல்லிக்கொடிகள் படர்ந்து அதில் வெண்ணிறப்பூக்கள் மலர்ந்திருந்தன. இந்தக் குளத்திற்கு தண்ணீர் வரத்து எப்படி வருகிறது என்று ஒருவன் கேட்க, மறுபக்கத்திலிருந்த நீர்வரத்து ஓடையை காண்பித்தார் வாத்தியார். மலையிலிருந்து வழிந்தோடிய மழைநீரும் பாறை இடுக்குகளிலிருந்து கசியும் நீரும் குளத்தில் வந்து நிரம்பியிருந்தது. குளத்தில் தாவிக்குதித்தும் நீச்சலடித்தும் ஆனந்தமாய் குளியல் போட்டவர்களுடன் தண்ணீரை தட்டியும் இறைத்து வீசியும் ஒரு சிறுபிள்ளையைப் போல விளையாடிக்கொண்டிருந்தார் ரெங்கசாமி வாத்தியார். பாக்கெட்டிலிருந்த விசிலை கரையோர மரத்தின் கிளையில் தொங்கவிட்டு பத்திரப்படுத்திவிட்டுத்தான் குளத்தில் இறங்கியிருந்தார். அவருக்கு குருமலைக்காட்டின் ஒவ்வொரு அங்குலப்பகுதியும் அத்துப்படியான விசயம். தனக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்தே அடிக்கொரு தடவை இங்கு வந்து போனால்தான் அவருக்கு இதயமே துடிக்கும். மனிதர்களிடம்கூட ஏற்பட்டிராத ஈர்ப்பை இந்த மலை அவரிடம் கொண்டிருந்தது. அந்த இணைப்பின் அந்நியோன்யத்தில் ஏமாற்றங்களையும் நிம்மதியற்ற பொழுதுகளையும் தான் கண்ட அநீதிகளையும் தொலைத்துவிட்டிருந்தார். அந்த மலை தன்னை நாடி வந்தவர்களை தன் மடியில் கிடத்தி தாலாட்டும் ஒரு தாயாகவே இருந்தது. கரையில் நின்ற அத்திமரத்தின் நிழல், நீர்ப்பரப்பில் படர்ந்து அலையோட்டமாய் தவழ்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. “க்.கெள.வ்...க்.கவ்..” புதர்ச்செடிகளிலிருந்து புள்ளிமான்கள் கத்தும் சப்தம் கேட்டது. மான்கள் கூட்டமாய் மறுகரையில் நின்றுகொண்டிருந்தன. வழக்கமாக தண்ணீர் குடிக்க வரும் இடத்தில் ஆர்ப்பரிப்பு சப்தம் கேட்டு அவை மருட்சியோடு பார்த்தன. “ம்.. கரையேறி வந்துருங்க. மதிய உணவுக்குப் போகலாம்” குரலை கேட்டு குளம் அமைதியானது. கரையேறிய வாத்தியார் முதல் வேலையாக விசிலை எடுத்து ஒரு ஊதல் ஊதினார். அமைதி திரும்பிய குளத்தின் நீர்ப்பரப்பில் இப்போது மான்கள் இறங்கின. அலுங்காமல் அலம்பாமல் தண்ணீரை குடித்த மான்களுக்குத்தான் அந்த குளத்தோடு எவ்வளவு பரிச்சயம். அது மான்களுக்கு தாய்மடி. “புதிய விருந்தாளிகளாய் நாங்கள் வசிக்கும் காட்டிற்கு வந்திருக்கிறீர்களே.. இங்கே என்னவெல்லாம் பார்த்தீர்கள்” மான்கள் நெருங்கி வந்து கேட்டன. “உங்களைத்தான் பார்க்க வந்தோம்” ரெங்கசாமி வாத்தியாரின் குரலை கேட்டதும் அந்த மான்கள் தலையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அவரை பலநாட்களாகப் பார்த்துப்பார்த்து அறிமுகமான மான்கள்தான் அவை. “இந்தக் காடு முழுவதும் சுற்றினாலும், தண்ணீர் தாகமென்றால் வெகுதூரம் நடந்து தாழையூத்திற்குத்தான் வரவேண்டியதிருக்கிறது. இங்கு நாய்கள் நடமாட்டம் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு வயதான மானை நாய்கள் அடித்துத் தின்றுவிட்டன” கொம்புகளைச் சிலுப்பியபடி ஒரு ஆண்மான் சொல்லியது. “நாய்களை சுட்டுப்போடணும். எங்க வீட்ல வேட்டைத்துப்பாக்கி இருக்கு சார்” ஒருவன் ஆவேசமாய் எம்பிக்குதித்தான். “ஏலேய்.. சும்மா இருலே. நீ பாட்ல எதையாவது சுட்டுப்போடாத” வாத்தியார் அமைதிப்படுத்தினார். அவர் எப்போதும் இப்படித்தான். யாராவது உணர்ச்சி வயப்பட்டு பரபரப்பானால் அமைதியாகப் பேசி அவர்களை சாந்தப்படுத்துவார். கண்டிப்புக்காக வெளித்தோற்றத்தில் விறைத்துக் கொள்வதுபோல் தோற்றமளித்தாலும் அது ஒரு நடிப்புக்குத்தான். மனதிற்குள் சதாநேரமும் சாந்தமாகவே இருப்பார். அப்படியொரு குணவாகு அவருக்கு வாய்த்திருந்தது. “தாழையூத்தில் இருந்து சுற்றுப்பட்டு ஊர்களுக்கு போர்வெல் தண்ணீர் போகுது சார். எங்கள் ஊர் தலைவர்கிட்ட சொல்லி, குடிநீர் குழாயில் நல்லி பொருத்தி மான்களுக்கு தண்ணீர்த்தொட்டி திறக்கச்சொல்வேன் சார்” செந்தில் ஆவலாய் சொன்னான். செந்திலின் ஊர் அருகில்தான் இருக்கிறது. “தெலுங்கானா மாநிலத்தில் புள்ளிமான்தான் மாநிலவிலங்காக இருக்கிறது. இந்த மான்களைப் பார்க்கும்போதே நமக்குள் ஒரு சாந்தமான உணர்வு பரவுகிறது. அதனால் நாமும் இதற்கு தண்ணீரை கொடுத்து பராமரிப்பு செய்யவேண்டும். எதையாவது கொடுக்கும்போதுதான் நமக்கும் ஒரு சந்தோசம் வருகிறது” வாத்தியார் சொன்னதை கேட்டு புள்ளிமான்கள் துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது. பொய்யாமொழி அய்யனார் கோவிலில் உச்சிகால பூசை ஆகும் மணியோசை கேட்டது. அது ஒரு பழமையான கோவில். கடும் வெயில் காலத்திலும் குளிர்ச்சி தரும் கல்மண்டபங்கள் கோவிலில் இருந்தன. கருவறையில் மூலவர் அய்யனாருடன் பூரணம், பொற்கலையின் தத்ரூபமான காட்சியில் சாம்பிராணிப்புகை மிதந்துகொண்டிருந்தது. கோவிலின் முகப்பில் குதிரை மீதேறி வேட்டைக்குப் போவது போன்ற அய்யனாரின் காரைச்சிற்பம் காண்பவர்களுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஆலமரத்தடியில் அப்போதுதான் கண்ணுச்சாமி ஆக்கிவைத்திருந்த ‘கூட்டாஞ்சோறு’ கமகமவென மணம் பரப்பிக்கொண்டிருந்தது. ஒரு வட்டமடித்து சுள்ளென்ற பசியோடு அமர்ந்தவர்களுக்கு முன்பாக தாமரை இலையில் அரிசி, பருப்பு, கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், நாட்டு வெங்காயம், மிளகாய் சேர்த்து ஆக்கிய கூட்டாஞ்சோறும் தக்காளி பச்சடியும் பரிமாறியதை ருஷி பார்க்கும் மகிழ்வான நேரம் இப்போது கைகூடி வந்திருந்தது. இலையிலிருந்து சூடான புகை வெளியேறி மிதந்து கொண்டிருந்தது. காட்டுச்சோறு ‘இன்னும் கொடு.. கொடு’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிட்டது. “சமையல் பிரமாதம். சோறாக்கிய இரண்டு பேரையும் வாழ்த்தணும்” என்று அவர்களுக்கு கத்திரிக்காய் மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆலமரக்காற்றும் வெயிலோடு உறவாடிய இலைகளின் இயல்புகலந்த நிழலோட்டமும் அவர்களை ஸ்பரிசமாய் தொட்டு மெளனமொழியில் பேசியது. மரத்தின் நிழல் மெல்ல மெல்ல கிழக்கில் சரியத்தொடங்கியது. காய்ந்த இலைதழைகள் சிதறிக்கிடந்த தரையில் பேசிக்கொண்டும் உடலைச் சாய்த்து படுத்துக்கொண்டும் இருந்தவர்கள் ரெங்கசாமி வாத்தியாரின் ஒற்றை விசில் சப்தம் கேட்டு கொத்தாக எழுந்தனர். பொழுது இருட்டுவதற்குள் மலை உச்சியில் இருக்கிற ‘தவசி குகை’க்கு போய் வருவோம் என்று வாத்தியார் முன்னால் நடந்தார். நீர்ச்சுனையிலிருந்து இடது புறமாய் பிரிந்துபோகும் தடத்தில் நடந்து மயில் வனத்தின் ஊடாக போய் மலையேறினார்கள். வழியெங்கும் எலுமிச்சை புற்கள் அசைந்து வாசனை பரப்பின. சில்லென்ற காற்று பாறைகளில் மோதி சுழன்று திரும்பியது. குகையை எட்டிப்போனபோது நாலாபுறமும் இருந்த ஊர்கள் தம் இருப்பை காட்டி நட்பு கொண்டாடின. இது இந்த ஊர்.. அது அந்த ஊர்.. என்று தனக்கு தெரிந்த ஊர்ப்பெயர்களை சொல்லிக்கொண்டே வந்தார் ரெங்கசாமி. மூச்சு வாங்க நடந்து குகை வாயிலுக்கு முன்னால் போய் நின்றபோது அங்கே ஒருவிதமான அமானுஷ்யமான அமைதி நிலவுவதை உணரமுடிந்தது. குகையின் மேல் ஒரு கல்லாலமரம் வளர்ந்து முன்னால் எட்டிப்பார்த்தது. பக்கவாட்டில் கற்றாழை இனமான ‘மருள்’ செடிகள் முளைத்திருந்தன. குகைக்கு முன்னால் ஒரு வெட்டையான நிலப்பகுதி அமர்வதற்கு வசதியாக இருந்தது. அதை சுற்றி பொடிவட்டு இலைகளுடன் ‘மை மரங்கள்’ அசைந்து கொண்டிருந்தன. குகையின் வாயிலை ஒரு கல்பாறை அடைத்துக்கொண்டிருந்தது. குகைவாசலின் முன்புறமிருந்த பள்ளத்தில் இறங்கிய பன்னீர் தான் கொண்டுவந்திருந்த திராட்சை கொத்தை ஒரு கல்மீது வைத்துவிட்டு வந்தான். குகைக்கு உள்ளிருந்து கீரிப்பிள்ளைகள் மெல்ல எட்டிப்பார்த்தன. அவற்றின் வாய்ப்பகுதி வித்தியாசமாக கோவைப்பழம் போல சிவப்பு நிறத்திலிருந்தது. அவை திராட்சையை தின்றுவிட்டு ‘இன்னும் கிடைக்குமா’ என்று ஏறிட்டுப் பார்த்தன. “கொஞ்ச நேரம் மெளனமாக இந்த இடத்தில் அமைதியாக உட்காருவோம். எதுவும் பேசாமல் சும்மா இருந்தால்தான் இந்த இடத்தின் சக்தியை கிரகிக்கமுடியும்” சொல்லி முடிக்கும்முன் இதுவரை கேடடுக்கொண்டிருந்த பேச்சு சத்தம் ஒடுங்கியது. நிசப்தமான பொழுதில் காடு அதன் பாஷையில் பேசுவது கேட்டது. இதுவரை கண்டிராத மனதை கவரும் நேரமாக அது இருந்தது. “காட்டுப்பன்றிகள் வெளியே வரும் நேரம். இப்போது இறங்கினால் சரியாக வரும்” என்று வாத்தியார் சைகை செய்து முன்னால் போனார். அடிவானத்திலிருந்த கல்மரத்தை அடைந்தபோது சூரியன் தொடுவானத்திற்கு மேல் இறங்கிக்கொண்டிருந்தது. ஒரு சிறுபாறைக் கல்தான் மரத்தின் உருவத்தில் அங்கே இருந்தது. “வாருங்கள்.. பேச்சியம்மன் குகையை பார்த்துவிட்டுப் போகலாம்” என்று கல்மரத்திலிருந்து பக்கவாட்டுச்சரிவில் கொஞ்சதூரம் கூட்டிக்கொண்டு போனார். ஒரு இருபது பேர் கூடி கால்களை நீட்டி தளர்வாக உட்கார வசதியாக அந்தக் குகை விசாலமாக இருந்தது. மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க வசதியான இடம்தான் என்று அங்கிருந்து திரும்பினார்கள். சுனையை கடந்து செல்லும் போது ஏழெட்டு காட்டுப்பன்றிகள் ‘உர்..உர்..ர்’ரென உறுமியபடி வழிமறித்து நின்றன. தலை முதல் பின்பகுதி வரை பிடரிமயிர்கள் கம்பி போல் சிலிர்த்துக்கொண்டு நின்றது. அதன் கன்னத்தில் ரோமமும் வாலில் மயிர்க்குஞ்சமும் காற்றில் அசைந்தது. கீழ்த்தாடையில் இரண்டு கோரைப்பற்கள் வளைந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. பன்றிகளின் உறுமல் சப்தம் பயமுறுத்துவது போலிருந்தது. ரெங்கசாமி வாத்தியார் பதட்டமடையாமல் தோள் பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து கீழே வைத்தார். பழவாசனை பன்றிக்கூட்டத்தை கிறங்கச்செய்ததில் அவை அமைதியானது. பழத்தை தின்றுகொண்டே ஒரு பெரிய பெண்பன்றி பெருமையாய் பேசத்தொடங்கியது. “நாங்கள் ஐம்பது கிலோ எடையுள்ள பெரிய கல்லையும் புரட்டிப்போட்டு விடுவோம். கிழங்குகளை தின்பதற்கு மண்ணைக்கிளறி தோண்டும்போது நீரும் காற்றும் உட்புகுந்து அதில் பறவைகள் போட்ட எச்சங்களின் விதைகள் முளைத்து விருட்ஷங்களாகி வனம் செழிப்பாகிறது. நீங்களோ பேராசையில் வனத்தையே அழிக்கிறீர்கள்” என்று கோபத்துடன் கேட்டது. “உங்கள் ஆதங்கம் புரிகிறது. நாங்களும் உங்கள் நண்பர்கள்தான்” கண்ணுச்சாமிதான் பன்றிகளுக்கு பதில் சொன்னான். “சார்.. எங்க அப்பா கூட சொல்லுவாரு. ஏலேய்.. பரீட்சையில மார்க் குறைவாக வாங்கியிருக்க. நீ பன்னி மேய்க்கத்தாம்லே லாயக்குன்னு திட்டுவார்” அழகர் தன் கதையை எடுத்துவிட்டான். “அப்படியா.. எங்களை மரியாதையில்லாமல் பேசுனாரு. எதற்கெடுத்தாலும் பன்னி மாதிரி இருக்க.. பன்னி மாதிரி திங்கிறேன்னு எங்களை இழிவாகப் பேசுறீக. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு எங்களை எதற்காக ஊடால இழுக்கீக” பன்றி தலையை திருப்பிப் பார்த்தது. “அவர்களுடைய நிலத்தில் சோளம், வேர்க்கடலை விதைத்திருந்த போது எல்லாத்தையும் முண்டிக்கிளறி தின்றுவிட்டீர்களாமே. அதனால் ஒரு கோபத்தில் சொல்லியிருப்பார்” வாத்தியார் சமாளித்தார். “செவித்திறனும் பார்வையும் குறைவுங்கிறதால மோப்ப சக்தியால் தரையை பார்க்க குனிந்து உணவை தேடி போகிறோம். நிலத்தின் பொலியில் ரோமங்களை துணியில் சுற்றிப்போட்டு வைக்கிறீர்கள். அதை தின்று தொண்டையில் சிக்கி அலறும்போது மற்ற பன்றிகளையும் அலறவிட்டு விரட்டுறீகளே..” பன்றிகள் திருப்பிக்கேட்டன. “சீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சுபாவம் இருக்கும். அதனதன் இயல்பில் சாந்தமாகவோ ஆக்ரோசமாகவோ அதன் குணங்களை வெளிப்படுத்தும். இந்தப் பன்றிகள்தான் கரடியைவிட கொடூரமாக திருப்பித்தாக்கும் பழக்கமுடையது. அதனால் இங்கே ரொம்ப நேரம் இருக்கவேண்டாம். இவைகளோடு வாதம் செய்யாமல் அப்பிடியே பேசிக்கொண்டே போயிருவோம்” என்று வாத்தியார் சொல்லவும் பழங்களை கீழே சிதறிக்கொண்டே நைசாக அந்த இடத்தைவிட்டு கடந்துவிட்டார்கள். “உடல் சூட்டை தணித்துக்கொள்ள சேற்றில் புரண்டு உடலில் சேறு பூசிக்கொள்கிற பன்றிகளோடு நமக்கெதற்கு சகவாசம்” என்று தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டு விறைப்பாக நடந்து போனான் அழகர். அது மாடியுடன் கூடிய காட்டு பங்களா. ஒரு காலத்தில் வேட்டையாடவும் பொழுது போக்கிற்காகவும் படைவீரர்களுடன் வந்த ராஜாக்கள் தங்கி ஓய்வெடுத்த பங்களா. மேல்மாடியில் நான்கு புறங்களிலும் கம்பி அடைப்புகளுடன் கூடிய தாழ்வாரங்கள் இருந்தன. அதில் நின்று காட்டின் அழகையும் மலைமுகடுகளையும் அதன் சரிவுகளையும் பார்த்து மகிழலாம். வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கலாம். இன்று இரவு அந்த பங்களாவில்தான் தங்குவதற்காக சென்றார்கள். சன்னல்கள் காற்றோட்டமாக திறந்து வைக்கப்பட்டு தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அறையிலும் தாழ்வாரங்களின் மூலைகளிலும் அரிக்கேன் விளக்குகள் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தன. இரவு உணவுக்குப்பின் ரெங்கசாமி வாத்தியார் சொன்ன சுவாரஸ்யமான கதைகளை கேட்டுக்கொண்டிருந்தனர். உறங்குவதற்கு முன் தோப்பில் ஒரு சுற்று நடை போய்வருவோம் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த அரிக்கேன் விளக்குகள் இரண்டை எடுத்துப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கி நடந்தார்கள். மரங்களும் புல், செடி கொடிகளும் அந்த நிசப்தமான இரவில் உறங்கிக்கொண்டிருந்தன. காற்று மெதுவாக வீசி இலைகளை அசைத்து ‘உஸ்..ஸ்..”சென உசுப்பிக்கொண்டிருந்தது. ஆலமரம் விழுதுகளை ஆட்டியவாறு இந்நேரத்தில் வருவது யாரென்று ஒய்யாரமாய் நின்று பார்த்தது. நிலவு மலைமுகடுகளுக்கு மேல் எழும்பி பிரகாசித்துக்கொண்டிருந்தது. ‘வ்.வுய்..ய்..’யென காட்டு வண்டுகள் முரலும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுனையில் ஊற்றெடுத்து வாய்க்காலில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த நீரோட்டம் நிலவொளியில் பொன்னிறமாய் ஒளிர்ந்தது. பாதையிலேயே மேம்போக்காக நடந்து மச்சுபங்களாவுக்கு திரும்பி வந்தபோது நரிகள் ஊளையிடும் சப்தம் அருகில் கேட்டது. இரவில் உறங்கியவர்களை குருமலைக்காற்று அடிக்கொரு தடவை வந்து தொட்டுப் பார்த்து போனது. அதிகாலையில் மயில்களின் அகவலும் விதவிதமான பறவை ஒலிகளும் கேட்டு விழிப்பு தட்டியது. தாமரைக்குளத்தில் போய் குளித்து மகிழ்ந்த புத்துணர்வில், “புறப்படலாம்” என்று ரெங்கசாமி வாத்தியார் விசிலை எடுத்து ஊதவும் அங்கிருந்து திரும்பிச்செல்ல மனமில்லாமல் மெல்ல ஊரைப் பார்க்க நடந்தார்கள். ஆலமரம் இலைகளை அசைத்து, “அடிக்கொரு தடவை இங்கே வாங்க” என்று வழி அனுப்பி வைத்தது. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2
- தியாவின் மாயத் தூரிகை
வெள்ளை நிற காகிதமும் வண்ணப் பென்சிலும் எடுத்தாள்! உள்ளம் சொன்ன ஓவியத்தை உடனே வரையத் துடித்தாள்! “புதிய வால் வரைந்து தா” என்று பூனை ஓடி வந்தது! “கழுத்து மணி வரைந்து தா” எனக் கன்றும் முன்னே வந்தது! “சிவப்பு கொண்டை மாற்று” என்று சேவல் வந்து கேட்டது! “சிறகில் வண்ணம் தீட்டு” எனத் தட்டான் பூச்சி கேட்டது! மண்ணில் ஊர்ந்த நத்தையோ “கம்மல் வேண்டும்” என்றது! தியாவிடம் கொலுசு கேட்டு துள்ளி வந்தது குட்டி நாய்! அருகில் நின்ற தாத்தாவோ ஆசையாக அவளிடம், “ஆச்சி காதுக்கு தண்டட்டி, அழகாய் வரைந்து தா” என்றார்! தங்க நிறத்தில் தண்டட்டி தியா வரைந்து தந்தாளே! அதை எடுத்து தாத்தாவும் ஆச்சி காதில் பூட்டினார்! ஓவியத்து நகை அங்கே உண்மையான மாயம் கண்டு திகைத்து நின்ற தியாவுடன் தாத்தா சேர்ந்து சிரித்தாரே! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.













