top of page

லண்டனிலிருந்து அன்புடன் -3

ree

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.


பள்ளி ஆண்டு விழா என்றால் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். விதவிதமான விளக்குகள், வண்ணமயமான ஆடைகள், ஆடல், பாடல், நடனம், நாடகம் என எவ்வளவு அழகாக இருக்கும். “மேடை நாடகம்” என்பதை நாம் எல்லோருமே ஆண்டு விழாவில்தானே பார்த்திருப்போம். ஆனால் பாருங்கள்! லண்டனிலுள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடப்பதில்லை. 


ஆண்டுவிழாக்கள் இல்லாதது பெரிய வருத்தம்தான். இருந்தாலும் குழந்தைகள் நடிக்கும் நாடகத்திற்கென தனியே நிகழ்வுகள் பள்ளிகளில் நடக்கும். நாடகத்தினைக் காணப்பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள். ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்கள் என்றால், சுமார் 15 நிமிட அளவில் அந்த நாடகம் அமையும். அதுவே உயர் வகுப்புகள் என்றால், 1.30 மணி நேர அளவில் நாடகம் நடக்கும்.


இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள்.


கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அவர்கள் எடுத்து கொள்வார்கள்.  அப்படிப் பெற்றோராக நான் பார்த்த நாடகம் மூலம் அறிமுகமான புத்தகம் தான் “Handa’s Surprise”. ஹான்டா எனும் சிறுமி, தனது தோழியான அகேயோவைச் சந்திக்கப் பக்கத்துக் கிராமத்திற்குச் செல்கிறாள். தனது தோழிக்கு இன்ப அதிர்ச்சி தர அவள் ஆசைப்படுகிறாள். அகேயாவிற்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று எண்ணி ஏழு விதமான பழங்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்கிறாள். 


“நான் தரப் போகும் இந்தப் பரிசு அகேயாவிற்கு கட்டாயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று அவள் எண்ணிக்கொண்டே செல்கிறாள். கூடையைத் தலையில் வைத்துச் செல்லும் வழியில், குரங்கு ஒன்று வருகிறது, அது கூடையிலுள்ள வாழைப்பழத்தை எடுத்துச் சென்று விடுகிறது. அடுத்து வான் கோழி வருகிறது, கொய்யாப் பழத்தை எடுத்துச் சென்றுவிடுகிறது. இப்படியாக வரிக்குதிரை, யானை, ஒட்டகச்சிவிங்கி, மான், கிளி என அடுத்தடுத்து வரும்  விலங்குகள் ஒவ்வொன்றாகப் பழங்களை எடுத்துச் சென்று விடுகின்றன.


ஹான்டா, தனது தோழி மகிழ்ச்சி அடையப் போகிறாள் என்பதைக் கற்பனைச் செய்து கொண்டே இருந்ததால், பழங்கள் காணாமல் போனதை அவள் அறியவில்லை. வெறும் கூடையை அவள் தலையில் வைத்துச் சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது, அங்கு ஒரு ஆடு ஓடி வந்துகொண்டிருந்தது. அது வேகமாக வந்து, ஒரு ஆரஞ்சு பழ மரத்தை மோதியது. அந்த ஆரஞ்சு மரத்தைத் தான் ஹான்டா கடந்துகொண்டிருந்தாள். மரத்திலிருந்து விழுந்த ஆரஞ்சு பழங்கள் எல்லாம் ஹான்டாவின் கூடையில் விழுந்தன.


இந்தக் கதை எதுவும் அறியாத ஹான்டா, அகேயாவைக் கண்டதும், “உனக்கு நான் ஒரு surprise வைத்திருக்கிறேன்” என்று சொல்லி கூடையைக் கீழே வைக்கிறாள். “ஓ! ஆரஞ்சு பழங்கள்…எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஆரஞ்சு பழங்கள். இது எனக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான் ஹான்டா” என அகேயா மகிழ்ச்சியில் குதிக்கிறாள். 


“நாம் வேறு பழங்கள் அல்லவா கொண்டு வந்தோம், கூடையில் ஆரஞ்சு பழங்கள் எப்படி வந்தன” என ஹான்டா அதிர்ச்சி அடைகிறாள். என்று கதை முடிகிறது.


இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் & ஓவியர் “Eileen Browne”. இவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தக் கதை ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதாக அவர் வரைந்திருப்பார். புத்தகத்தின் அட்டைப்படமும் சரி, அதன் உள் ஓவியங்களும் சரி, பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்துவிடும்.


இங்கிலாந்தில் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர் என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன். அதனால், பல்வேறு நாடுகள் குறித்தும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை குறித்தும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் “Handa’s Surprise” புத்தகம் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது.


இந்தப் புத்தகம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. 30 வருடங்கள் கடந்து இன்றும் இந்தப் புத்தகம் கொண்டாடப்பட்டு வருகிறது.


ree

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page