நகரும் மாய வீடு
- விஜி ரவி
- Jun 15
- 2 min read

வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற இடம். ’நகரும் மாய வீடு’ என்கிற தலைப்பே குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாக, ஆச்சரியமூட்டுவதாக, எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது.
இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான கூரை வீடு மந்திர சக்தியால் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கெல்லாம் போகிறது? அதனுடன் யாரெல்லாம் பயணித்தார்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை மிக சுவைபட சுவாரசியமாக இந்த நூல் விவரிக்கிறது.
ஒரு குரங்காட்டி, தனது குரங்கிற்கு சிவப்பு சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிவித்து வித்தை காட்டுகிறான். வித்தை முடிந்ததும் இருவரையும் தெருநாய்கள் துரத்த, சாலையை கடக்க முயன்ற போது, குரங்காட்டி வாகனம் மோதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.
சிறு காயங்களுடன் தப்பித்த குரங்கு யாருமில்லாத ஒரு கூரை வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. தனக்கு இடையூறாக இருந்த உடைகளைக் கழட்டிப் போடுகிறது. இடுப்பில் கட்டி இருந்த கயிறு, ஒரு ஆணியில் மாட்டிக்கொள்ள குரங்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறது.
அதே சமயத்தில் வெளியே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கயிற்றில்
கட்டப்பட்டிருந்த சிறு பாட்டில் கீழே விழுந்து, புகை போன்ற ஏதோ ஒன்று குடிசை
முழுவதும் பரவுகிறது. அதனால் அந்த கூரை வீட்டிற்கு மந்திர சக்தி வந்து பேசவும், நகரவும் ஆரம்பிக்கிறது.
அந்த வீட்டில் ஒரு பெரிய பல்லியும் குட்டி எலியும், அணிலும் வசிக்கின்றன. மூன்று
ஜீவராசிகளும் பயந்து போனாலும் கூரையின் மூங்கில்களை வெட்டியாக பிடித்துக் கொள்கின்றன. கூரை வீட்டின் பயணம் தொடங்குகிறது.
சின்ன சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்ற அடுக்கு மாடி வீடுகளை பார்த்து கூரை வியந்து போகிறது. பின் அது காட்டின் அடிவாரத்திற்கு வருகிறது. தானியங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து சிதறும் தானியங்களை கொத்தித் தின்னும் ஏராளமான பறவைகள் பின்னால் வந்த வாகனங்களால், அடிபட்டு இறப்பதை பார்க்கும் கூரை வீடும்,
பல்லியும், எலியும் அணிலும் அதிர்ந்து போகின்றன.
சுயநலம் பிடித்த மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிலும் நிலைநாட்டி வைத்திருப்பதை ஆசிரியர் விவரிக்கிறார். அங்கே உள்ள மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து சிறு கற்களாக்கி அவற்றை வீடு கட்ட எடுத்துப் போகின்றனர். அதனால் பறவைகளும் பாம்புகளும் இன்ன பிற ஜீவராசிரியர்களும் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின்றன.
காட்டில் மரங்களை மனிதர்கள் வெட்டுகின்றனர். அதன் காரணமாக மரங்களில் இருக்கும் பறவைக்கூடுகள், முட்டைகள் குஞ்சுகளுடன் கீழே விழுந்து இறப்பதை வேதனையோடு பார்க்கிறது கூரை வீடு. தாய்ப்பறவைகளை இழந்த குஞ்சுப் பறவைகளை கூடோடு தன்னுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அணிலும் எலியும் தானியங்களை எடுத்து வந்து அவற்றை உடைத்து குஞ்சுகளுக்கு தருகின்றன. மனிதர்களிடம் இல்லாத ஜீவகாருண்யமும் கருணையும்
அவைகளுக்கு இருக்கின்றது. தப்பி வந்த குரங்கும் காட்டை வந்து அடைந்து, கூரை வீடுடன் சேர்ந்து வெயில் படும் இடங்களில் செடிகளை நடுகின்றன. சிறிது காலத்தில் ஏராளமான செடி கொடிகள் வளரத் தொடங்குகின்றன.
இதை வாசிக்கும் குழந்தைள் காடு என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும் சொந்தமான இடம், அதை தனது சுயநலத்திற்காக மனிதர்கள் அழிக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வார்கள்.
நூல்; நகரும் மாய வீடு
ஆசிரியர்; வே. சங்கர்
பக்கங்கள்; 64
விலை; 70
வெளியீடு; பாரதி பதிப்பகம்
Comments