குழந்தைகள் உரிமைகள் - 3
- கமலாலயன்
- Jun 15
- 2 min read

உலகிலுள்ள எல்லா நாடுகளின் அரசாங்கங்களும் அந்தந்த நாட்டுக்
குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனைவருக்கும்
கட்டாயம் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று யுனிசெஃப் தனது
பிரகடனத்தின் நான்காவது அம்சத்தில் வலியுறுத்துகிறது. அவ்வாறு தங்கள்
நாட்டுக் குழந்தைகளுக்கு எல்லா உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்ய
அவை தங்களால் இயன்ற அத்தனைக் கடமைகளையும் தவறாமல் செய்ய
வேண்டும் என்று அது விதித்திருக்கிறது.
இந்த இடத்தில், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ‘அரசாங்கம்’ ( ‘government’ )
என்பது என்ன, அது எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம்
தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும், இருக்க
வேண்டும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது மூன்றாண்டுகளுக்கு
ஒரு முறை நாடு முழுவதும் பொதுத்தேர்தல்கள் நடப்பது பொதுவான ஒரு
நடைமுறை.
நமது நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை இந்திய
அளவில் நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சட்டமன்றப்
பேரவைக்கும் தேர்தல்கள் நடைபெறும். எம் எல் ஏ க்கள், எம் பி க்கள்,
மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின்
தலைவர்கள் போன்றோரை நமது மக்கள் வாக்குகள் அளிப்பதன் மூலம்
தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எம் எல் ஏக்களும், எம்
பிக்களும் கூடித் தங்களுக்குள் ஒருவரை அந்தந்த மாநில முதல்வர் ஆகவும்,
இந்திய அளவில் பிரதமர் ஆகவும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு உருவாகும் நிர்வாக அமைப்புக்கு ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்று பெயர். ஆனால், இந்த அரசாங்கம் என்றைக்கும் நிலையாக இருப்பதில்லை. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் கட்சி எதுவோ அதனுடைய அரசாங்கம்தான் பதவியில் இருந்து ஆட்சி செய்யும். ஆனால், எப்போதுமே நிலையாக, நிரந்தரமாக இருக்கும் ஒரு நிர்வாக அமைப்பு, இந்தியாவிலும் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து கொண்டிருக்கும். அந்த அமைப்புக்கு ‘அரசு’ ( ‘state’ )என்று பெயர்.
இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இந்த அரசின் கீழ்தான் இயங்குகின்றன. எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவாகத் தீர்மானித்து நிறைவேற்றினாலும் கூட, அரசுத்துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் – வளர்ச்சித்துறை அதிகாரிகள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் ஒரு மனதாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து,மனதார ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால்தான் அந்தச்சட்டத்தின் பயன்கள் பொது மக்களைப் போய்ச்சேரும். எந்த ஓர் இயந்திரத்திலும், ஒரு பெரிய பற் சக்கரத்துடன் இணைந்த பல சிறிய பற்சக்கரங்கள் அனைத்தும் எந்தப் பல்லிலும் உடைசலோ,கீறலோ இல்லாமல் ஒரே சீராக இயங்கினால்தான் அந்த இயந்திரத்தின் இயக்கம் தடைப்படாமல் வேலை நடக்கும்.
ஆனால், இந்த நாட்டின் இன்றைய அரசியல் அமைப்பில், மிக வலுவான, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஓர் ஒன்றிய அரசு, தனது பிரதிநிதிகளாக உள்ள ஆளுநர்களைக் கொண்டு, மாநில சட்டமன்றங்களின் அனைத்துக் கட்சி
உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களைக் கூட,
ஒப்புதல் அளிக்காமல் தடை செய்வது, நிதியளிக்க மறுப்பது போன்ற
நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். பல இலட்சம்
குழந்தைகளின் கல்வி உரிமைகளைப் பாதிக்கும், மறுக்கும் நீட் தேர்வை
நிராகரிக்கும் சட்டம்,புதிய கல்விக்கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்தத்
தேவையில்லை என்ற சட்டம் போன்ற பல சட்டங்களை நிறுத்தி வைக்கும்
போக்கைக் காண்கிறோம்.
இது ஏதோ ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் அரசியல் சண்டை மட்டுமே அல்ல;மாறாக,இந்த மாநிலத்தில் மாநில அரசின் கல்வி நிலையங்களில் பயிலும் பல இலட்சம் குழந்தைகளின் விருப்புரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
இத்தகைய நிலைமை இந்த நாட்டில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும்
அந்தந்த நாட்டு அரசியல்,சமூக,பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப நிலவுவதைப்
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளின் செய்தியறிக்கைகளிலும்
பார்க்கிறோம்.
யுனிசெஃப் அமைப்பு, எல்லா நாட்டு அரசாங்கங்களுமே
குழந்தைகளின் உரிமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தங்களால்
இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சர்வதேசப்
பிரகடனத்தில் விதித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று,
உலகில் பல நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில், அந்தப் போர்களுக்
குக் காரணங்கள் எவையாயிருப்பினும், போரில் ஈடுபடும் இருதரப்புக்
குழந்தைகளுமே அந்தப் போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்
என்பதேயாகும்.
ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் – இப்படி எந்தப் போர் என்றாலும், உணவுப் பொருள்கள், மருந்துகள், ரொட்டிகள், பால் போன்று குழந்தைகளுக்கு மிக மிக அத்தியாவசியத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு விடுவது அந்தப் போரின் உடனடி விளைவாக ஆகி விடுகிறது. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, இப்படி இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்புடன் தான் நடத்தும் போரில், செஞ்சிலுவைச்சங்கம் மூலம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், ரொட்டிகளைக் கூட அவர்களுக்கு வழங்க அனுமதிக்காததால் சுமார் 14,000 குழந்தைகள் சாவின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகின் அனைத்துப் பகுதி மக்களையுமே மனம் பதறச் செய்தது.
எனவேதான், யுனிசெஃப் அமைப்பு, உலகின் எல்லா அரசாங்க நிர்வாகிகளுக்கும் தனது சர்வதேசக் குழந்தைகள் பிரகடனத்தின் நான்காவது அம்சத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் முழு மனதுடன் ஈடுபாடு காட்டும்படி வலியுறுத்தல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அரசியல் அதிகாரம் என்ற ஒரே குறிக்கோளின் மீது தவிர, வேறு யாருடைய நலன்கள் குறித்தும் துளியும் கவலைப்படாத அரசாங்கங்களின் போக்கை எப்படி, எப்போது, யாரால் மாற்ற முடியும் ? இதுதான் இன்று நம் முன்னுள்ள
மில்லியன் டாலர் கேள்வியாகும் !
Comments