பதின் பருவக் கவிதைகள்
- ந.பெரியசாமி

- Jun 15
- 1 min read

வேண்டுதல்
ஊரெல்லாம் நிறைய்ய வீடிருக்க
ஏன்தான் குடி வந்தானோ
எங்க வீட்டுக்கு.
எப்பவுமே அவனும்
என்னைவிட நல்லா
படித்தபடி இருக்கிறான்.
எதற்கெடுத்தாலும் எங்கப்பா
அவனையே காரணம் காட்டி
அடிக்கவேற செய்யறாரு.
அய்யா அய்யனாரப்பா
ஐம்பது ரூவா உண்டியலில் போடுகிறேன்
மறக்காம என் கோரிக்கையை
நிறைவேற்றி வைத்திடு.
நாளை வரும் ரிசல்ட்டில்
அவனைவிட ஒரு மார்க்காவது
அதிகமாக வாங்கவேண்டும்
அதனால் எனக்கு கிடைக்கும்
ஐ போன் அலைபேசி.
எதைக் கற்றோம்
ஒரே இழுப்பில் இழுத்த
பீடியை வீசியபடி
எரிச்சலோடு கத்தினார்
என்னத்த சொல்லிக் கொடுக்கறாங்க
வாழ்க்கையை வாழ
கற்றுக்கொடுக்காத பாடத்தை
படித்தென்ன பிரியோஜனம்
கண்களில் நீர் திரள
கத்தியால் உடலைக் கீறினார்.
எழுதிய தேர்வில்
எடுக்க முடியாது போகும்
தேர்ச்சி மதிப்பெண்களென
அவளாக முடிவெடுத்து
ஆயுளை முடித்துக்கொண்டு
பிணவறையில்
தூங்குவதுபோல் கிடக்கிறாள்.
வெளியான ரிசல்ட்டில்
வெற்றி கொண்டது அறியாமல்.
ஆசிரிய தேவதை
இன்ஜினியர் டாக்டரென
எல்லோரும் விரும்பும்
குட்டைகளில் ஊறும்
மட்டைகளாக இருக்காதீங்க என்றவறை
எரிச்சலோடு பார்த்தோம்.
அவரவர் ஆர்வத்திற்கேற்ற
படிப்புகள் நிறைய்ய இருக்கென
பட்டியல் இட்டுக்கொண்டிருந்தவரை
வாய்பிளந்து அதிசயித்தோம்
வாய்ப்புகள் ஆயிரம் இருக்கென.
இப்போ
வெப்ப மண்டலக் காடுகளில்
பட்டாம்பூச்சி ஆய்வு மாணவியாக
பறந்தபடி இருக்கிறேன்
உடன்படித்த அனைவரும்
அவரவருக்கான துறைகளில்
ஆளுமைகளாக
ஆனந்தித்து வாழ்கிறார்கள்.
மனதுள்
வழிகாட்டிய ஆசிரியர்
வாழ்கிறார் தேவதையாக.




Comments