சடைக்கணவாய்க்கு எத்தனை கால்?
- நாராயணி சுப்பிரமணியன்
- Jun 15
- 2 min read

ஆக்டோபஸ் (Octopus) என்ற கடல் உயிரியை அனைவரும் அறிந்திருப்போம். தமிழில் இது சடைக்கணவாய் அல்லது பேய்க்கணவாய் என்று அழைக்கப்படுகிறது. பேய்க்கணவாய் என்றதும் பயந்துவிடவேண்டாம். இதன் உடல் நிறமும் எட்டு உறுப்புகளும் கொஞ்சம் விநோதமாக இருப்பதால் இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இது கடமா என்றும் அழைக்கப்படுகிறது.
"பேய்க்கணவாய்க்கு எட்டு கால் இருக்கும்" என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அட, இவ்வளவு ஏன்? "ஆக்டோபஸ்" என்ற ஆங்கிலச்சொல்லுக்கே "எட்டுக்கால்கள் கொண்ட உயிரி" என்றுதான் பொருள். ஆனால் உண்மையில் சடைக்கணவாய்க்கு எட்டு கால்கள் கிடையாது.
என்ன விளையாடுகிறீர்களா என்று கேட்கத் தோன்றுகிறதா? குழப்பம் வருகிறதா? மீண்டும் ஒருமுறை சடைக்கணவாயின் படத்தைப் பார்த்து எத்தனை கால்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? எட்டுதானே இருக்கு என்று யோசிக்கிறீர்களா?

எட்டு என்பது சரிதான், ஆனால் அவை கால்கள் அல்ல. கைகள்.தலை சுற்றுகிறதா? கொஞ்சம் விளக்கமாகப் பேசலாம்.
கைகளின் செயல்பாடுகள் என்ன? பொருட்களைப் பற்றிக்கொள்வது, தொட்டுப் பார்ப்பது. கால்களின் வேலை என்பது நம் உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வது. இங்கே விலங்குகளைப் பொறுத்தவரை "நடப்பது" என்று சொல்லிவிட முடியாது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால், கங்காரு, தவளை போன்ற பல உயிரிகள் நடப்பதே இல்லை. ஆனாலு இவை இடம் பெயர்கின்றன. அவற்றின் கால்கள் குதிப்பது, தாவுவது போன்ற செயல்பாடுகளின்மூலம் அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்கின்றன. ஆகவே கால்களின் வேலை அதுதான் - நாம் இடம்பெயர் உதவுவது. எது பற்றிக்கொள்ள, தொட்டுப் பார்க்க உதவுகிறதோ அது கை. இடம் பெயர எது உதவுகிறதோ அது கால். இதுதான் பொது வரையறை.

இப்போது நாம் சடைக்கணவாய்க்கு வருவோம். சடைக்கணவாயின் தலையில் இருந்து தொங்கும் எட்டு உறுப்புகள் கைகளைப் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றன. இரை விலங்குகளைப் பிடிப்பது, சுற்றியுள்ளவற்றைத் தொட்டுப் பார்ப்பது, கைகளின் நுனியில் இருக்கும் உணர்வு செல்கள் மூலமாக வேதிப்பொருட்களைத் தெரிந்துகொள்வது, பாறைகளை உருட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்வதற்குக் கணவாய்கள் கைகளைப் பயன்படுத்துகின்றன.
சரி, பேய்க்கணவாய் நீந்தும்போது என்ன ஆகும்?
பேய்க்கணவாய்கள் அந்த எட்டு உறுப்புகளை வைத்து நீந்துவதில்லை. உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றி அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையால் நீந்துகின்றன. இதை Jet propulsion என்பார்கள்.
சரி, பேய்க்கணவாய் தரையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறோமே, அது நடப்பதுபோலத்தானே?
சில நேரம் மிக அரிதாக இவை கடலின் தரைப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த எட்டு உறுப்புகளும் நகர்வதற்கு உதவுகின்றன என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான நேரம் இந்த எட்டு உறுப்புகளும் என்ன செய்கின்றன என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
ஆகவே இந்த எட்டு உறுப்புகளும் கைகளைப் போலவே செயல்படுவதால் இவற்றைக் "கைகள்" என்றே சொல்லவேண்டும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா? ஒரு சில கணவாய் விஞ்ஞானிகள், "இந்த எட்டு கைகளில் இரண்டு கைகள் மட்டும் கால்களைப் போல சில நேரம் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அவற்றைக் கால்கள் என்று சொல்லலாம்" என்று சொல்லி வருகிறார்கள். மற்ற விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. இவர்களும் தொடர்ந்து விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கும்வரை இவற்றைக் கைகள் என்றே சொல்லலாம். இனிமேல், சரியாக சொல்வீர்கள்தானே, எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். "சடைக்கணவாய்க்கு எட்டு கைகள், இவற்றுக்கு இருப்பதை கால் என்று சொல்லமுடியாது".

அதுசரி, அதென்ன எட்டு? ஏன் இவற்றுக்கு ஆறு கால்களோ ஏழு கால்களோ ஒன்பது கால்களோ இல்லை? என்ன காரணமாக இருக்கும்? யோசித்து பதில் அனுப்புகிறீர்களா? காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. விரைவில் நானே
Comments