பேசும் கடல் - 3
- சகேஷ் சந்தியா
- Jun 15
- 2 min read

“ அண்ணா...... அண்ணா சுனாமியை ஆழிப்பேரலைன்னு தானே சொன்னாங்க, ஆழிப்பேரலையின் ஜப்பானிய பெயர்தானே சுனாமி? “
"ஐயோ கொஞ்சம் பொறு அமுதா...... நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்போம்"
“ பாட்டி..... என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க..... எப்பவும் வேகமா அலை அடிச்சிட்டு இருப்பீங்களே...... என்னாச்சு"
" பேரப்பிள்ளைகளா? நான் அமைதியா இருப்பதும், ஓங்கி அலையடிப்பதும் காற்றின் அழுத்தத்தால் தான். காற்றின் அழுத்தம் இருந்தா பெரிய அலையா இருக்கும், இல்லைன்னா? சின்ன அலையா இருக்கும்"
"அப்போ பாட்டி ஆழிப்பேரலை காற்றினால் தான் வந்ததா? ”
சற்றும் யோசிக்காமல் அமுதா கேட்டாள்.
" சபாஷ் பாராட்டுக்கள்...... மொதல்ல ஆழி என்றால் என்ன என்பது புரிய வேண்டும்"
“ஆமாம்......ஆமாம்...... சொல்லுங்க" இனியனுக்கு ஆர்வம் கூடியது.
"பொதுவாக மக்கள் கடல், அலை என்ற இரண்டு சொற்களால் என்னைப் பார்ப்பார்கள். ஆனால் கடலின் மக்களாகிய நெய்தல் நிலத்தவர்கள் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் .
ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் என்னை ஆழி என்று தான் அழைப்பார்கள்.
காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள். ”
"பேசுவார்களா ?எப்படி? ” என்று இருவருமே வியப்போடு கேட்டார்கள்.
" பெரிய அலை வரும்போது படகில் செல்லும் மீனவர்கள் எல்லோரும் படகில் எழுந்து நின்று "தாயே தாழ்ந்து வா தாயே" என்று வேண்டுதல் செய்வார்கள் அலை மிக உயரமாக வரும்போது மீனவர்களை அது பாதிக்கும் என்பதால் "கடல் ஆத்தா ...... தாழ்ந்து வா ஆத்தா " என்று கேட்டுக் கொண்டாலே அலைகள் அமைதியாகும்."
"உண்மையாகவா? கேட்டதும் நீங்க அமைதியா இருப்பீங்களா? "
என்று இனியன் கேட்டான்.
"அது அவங்க நம்பிக்கை, இது தாய் பிள்ளை உறவு போன்றது மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது" என்று கடல்பாட்டி சொன்னார். அப்போது அவருடைய குரல் தழுதழுத்தது.
” அது சரி மேட்டருக்கு வாங்க, ஆழின்னா என்ன அதைப் பற்றி சொல்லவே இல்ல" என்று ஆர்வத்தோடு அமுதா கேட்டாள்.
” மீனவர்கள் கடலில் எழும் அலைக்கும் பல பெயர்களை சூட்டி உள்ளார்கள். மார்சா, மாரியா , ஆழி என்று அழைப்பார்கள்.
இதில் ஆழி என்பது காற்றின் விசையால் அலைகள் விரிந்து, எழும்பி இரண்டு மடிப்பு போல் மடங்கி அடிப்பதை ஆழி என்பார்கள். இது மிக ஆபத்தானது. அலைகள் எழும்பி மடங்கி அடிக்கும் போது மீனவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களால் தப்பிக்க முடியாது. அந்த அலை அவ்வளவு வேகமாக அடிக்கும்.” என்று கடல்பாட்டி சொல்லும்போதே ஆழியின் ஓசை கேட்டது.
” கேட்கும்போதே பயமாயிருக்கு அண்ணா? ” அமுதா இனியனின் கைகளை இறுகப் பற்றி கொண்டாள்.
"அமுதா பயப்படாதம்மா.... ஆழி இரண்டு வகை உண்டு கரைய ஆழி, வெலங்க ஆழி அதாவது கரைப்பகுதியில் ஏற்படும் பேரலை. தூரத்தில் ஏற்படும் பேரலை .கடலில் பயணிக்கும் போது மீனவர்கள் கடலோடும் காற்றோடும் அலையோடும் பேசுவார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள் "
” ஆமாம். அது உண்மைதான் எங்க வீட்டிலையும் அப்பாவும் பெரியப்பாவும் பேசுவாங்க ...தான் கேட்டு இருக்கேன் ”
என்றான் இனியன்.
“ பேரப்பிள்ளைகளா? காற்று , கடல் இரண்டும் மீனவர்களுக்கு உயிரும், உடலும் போன்றது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவார்கள். அதற்கு அவர்கள் பல பெயர்கள் சூட்டி மகிழ்வார்கள் ” என்றார் கடல்பாட்டி பெருமையாக.
” அது சரி உங்க பிள்ளைகள நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? ” என்று அமுதா கிண்டலாகச் சொன்னாள். .
” ஆமாம் ....அவர்கள் கடலின் மக்கள்..”
என்று கம்பீரமாகச் சொன்னார் கடல்பாட்டி.
” அது சரி....காற்றுக்கு எப்படி பெயரிடுவாங்க....? ” என்று இனியன் கேட்டான்.
” சொல்றேன் கண்ணுகளா..” என்று சொல்லிவிட்டு காணாமல் போனார் கடல்பாட்டி.
( கடல் பேசும் )
அருமை ❤️