ஆரம்பக் கல்வி படக்கதைகள்
- சாலை செல்வம்
- Jun 15
- 2 min read

தற்போதைய பாடப்புத்தகங்கள், அதிலும் ஆரம்பக்கல்வி பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். இலக்கியத்தில் காட்சிப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓவியங்களை நவீன சிறார் இலக்கியத்தின் ஒரு பகுதியாக நாம் பார்ப்பதுபோல், பாடப்புத்தகங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓவியங்களே பாடத்தின் பெரும்பகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. நவீன மொழிக்கற்றலின் முக்கிய அம்சமாக கதைகளே உலகம் முழுவதும் முன்னிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஆரம்பக் கல்வி பாடப்புத்தகத்திலும் கதை மிகுதியாக ஆக்கப்பட்டதுடன் படக்கதைகளுக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. பாடங்களும், ஓவியங்களும்/படங்களும் என பாடப்புத்தகம் காட்சிப்படுத்தலின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஓவியங்கள், இலக்கியமாகவும் இலக்கியத்தின் பகுதியாகவும் எப்பொழுதும் செயல்பட்டுவருகின்றன. ஓவியங்களுடன் எழுத்தும் இணைந்து புத்தகங்களில் அடுத்தடுத்த நிலைக்கு பயணிக்கின்றன. மொழியினைப் பயிற்றுவிக்கவும் புத்தகத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வண்ண ஓவியங்களும் படங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஓவியங்களும் படங்களும் ஒரு பொருளாக, மனிதராக, உறவாக, காட்சியாக... என விதம்விதமாக புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசையில் ஓவியங்களும் படங்களும் நிறைந்த புத்தகத்தைக் குழந்தைகள் ஆர்வத்துடன் கையில் எடுப்பார்கள். புத்தகத்துடன் தனியாக நேரத்தை செலவிடுவார்கள். ஒரு குழந்தையும் மற்றொரு குழந்தையும் சேர்ந்து அமர்ந்து மகிழ்ச்சியோடு பேசிக்கொள்வதைப் பார்க்கலாம். இவ்வரிசையில்தான் புத்தகத்தில் பார்த்த காட்சிகளைக் கதையாக விவரிக்கின்றனர்.
மொழிக் கற்றலில் ஓவியங்களில் உள்ள படங்களைப் கவனித்து பார்ப்பார்கள். பார்த்த படங்களை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுவார்கள், படங்களைப் பற்றி பேசுவார்கள் / படங்களை வார்த்தையாக மாற்றுவார்கள் / படங்களைப் பார்த்து வரைவார்கள். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற மிக முக்கியமான மொழித்திறன்களை வளர்த்தெடுப்பதில் படங்களின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. இதனால் ஆரம்பக்கல்வியில் அதிலும் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்தில் எழுத்தைவிட அதிகமாகப் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாடப்புத்தகங்களில் ஓவியங்களும், படங்களும், செயற்படங்களும், காட்சிப்படங்களும், கதைப்படங்களும், படக்கதைகளும் என ஓவியங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். படக்கதைகளை மாணவர்களின் மொழி நிலை, வகுப்பிற்கு ஏற்ப எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்:
படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது.
கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம்.

படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்:
படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது.

கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம்.
படக்கதை வாசித்தல்:
படங்கள் கதையாக இருக்கும். கதையை வழிநடத்தும். சிறு வார்த்தைகளும் வாக்கியங்களும் படத்தின் உதவியோடு கதை வாசிப்பிற்குள் அழைத்துச்செல்ல உதவும். படத்தின் உதவியோடு வார்த்தைகளை மாணவர்கள் படிப்பார்கள். ஆசிரியர் வாசித்ததை மனதில் வைத்து படிப்பார்கள். வார்த்தையைக் காட்டி, ஆனால் அதில் இல்லாத ஒன்றை உச்சரிப்பார்கள். ஆர்வமும் பழக்கமும் கூடக்கூட வாசிப்பு நிலைக்கு படக்கதை அழைத்துச்செல்லும்.
நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படக்கதைகள்:
நான்காம், ஐந்தாம் வகுப்புகளிலும் படக்கதைகள் உள்ளன. பெரிய வாக்கியங்கள் அதிக பக்கங்கள், கனமான பாடப்பொருள்கள் என அடுத்தநிலைக்கு அவை நகர்ந்துள்ளன. ஆனாலும் வாசிப்பு என்பது மாணவர்களிடம் கவனமாக எடுத்துச்செல்லப்படும் ஒரு நிகழ்வு. படிப்படியாக மாணவர்களுக்கு உதவவேண்டிய ஒன்று. அதற்கான திட்டங்களில் படக்கதையின் பங்களிப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன்.
படக்கதைகள் கவனிக்கப்பட வேண்டியவை:
ஒவ்வொரு வகுப்பிலும் பாடமாக நான்கு படக்கதைகள்வரை இடம்பெற்றுள்ளன. அதோடு பயிற்சியிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கதைகள், அதிலும் படமே கதையாக வருவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேவேளை பாடமாக, பாடத்தின் கருப்பொருளை மையப்படுத்தியதாக வரும்பொழுது இலக்கியத்தின் தன்மை குறைந்து காணப்படுகிறது. வலிந்து மேற்கொள்ளும் போதனையாகிறது. அதோடு இதன் மொழி சார்ந்து இன்னும் பேசப்பட வேண்டியுள்ளது.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றலில் பெரும் சிரமத்தை பாடப்புத்தகத் தமிழ் ஏற்படுத்துகிறது என்பதை மொழிப்பாட வடிவமைப்பு சார்ந்து பலர் வலியுறுத்திவருகின்றனர். குழந்தைகளுக்கு புரியும்படியான மொழி, புழக்கத்திலுள்ள மொழி, அவர்களின் அனுபவத்தோடு இணைந்த மொழி ஆகியவை பாடப்புத்தகத்தையும் பாடங்களையும் வகுப்பறையையும் சென்றடைய கதை சார்ந்த மொழி பேருதவியாக இருக்கும். அது முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டிய அவசியத்தை நாம் திரும்பத்திரும்ப பேச வேண்டியுள்ளது.
Comments