இயலில் தேடலாம்!
211 results found with an empty search
- மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ இன்று எனக்கு நாற்பது வயது. கோடையில் ஒரு நாள் நான் பாட்னா சென்றேன். பாட்னா எனக்கு முற்றிலும் புதிய நகரம். அங்கே எனக்கு அறிமுகமானவர்கள் யாரும் இல்லை. நான் நினைத்ததைச் சாதிக்க ஏற்ற ஒரு சரியான இடம் எனத் தீர்மானித்தேன். கடைவீதியில் உள்ள விளம்பரப் பலகைகளை வாசித்தபடி நடந்தேன். இறுதியாக நான் தேடிவந்த இடத்தைக் கண்டுபிடித்தேன். அது ஒரு முடி திருத்தம் செய்யும் கடை. முடி திருத்தம் செய்ய எனக்குத் தடை இருந்தது. நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அந்தத் தடையை மீறி நான் அங்கு சென்றேன். நான் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவன். நீளமான தலைமுடி, அடர்ந்து வளர்ந்த தாடி, அடர்த்தியான மீசை இவை அனைத்தும் எனது அடையாளம். எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச் சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின. சில சீக்கிய நண்பர்கள் சிறு வயதிலேயே முடி திருத்திக் கொண்டனர். என் நெருங்கிய நண்பன் பன்னிரண்டு வயதில், தடையை மீறி முடியைத் திருத்தி தன்னை அழகு படுத்திக் கொண்டான். அவனது பெற்றோர் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் எப்போதும் எனக்கு அவ்வாறு செய்ய ஆசை இல்லை. எனது அம்மா சீக்கிய மதத்தை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவர். எனக்கு அனைத்து வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். நானும் அவர் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்தேன். ஒவ்வொரு வாரமும் குருத்வாரா சென்றேன். கீர்த்தனை செய்தேன். அர்தாஸ் படித்தேன். சிறு வயதிலேயே தஸ்தார் (தலைப்பாகை) அணிந்தேன். நான் இளமையாக இருந்தபோது, தெருக்களில் மக்கள் "ஓய் சர்தார்! தேரே பரா பஜ் கயே" அல்லது "ஜூடி" என்று கூச்சலிட்டதை நினைத்துப் பார்க்கிறேன். டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தபோது அம்மா கவனமாக எனது தோற்றத்தை மாற்றினார். நான் ஒரு சீக்கியப் பையனைப் போலத் தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு சிறுமியைப் போல குதிரைவால் சடை போட்டுவிட்டார். கலவரத்தில் எங்கள் வீடு எரிந்து சாம்பலானது. பிறகு நாங்கள் அகதிகளைப் போல வீடு வீடாக அலைந்தோம். பயங்கரவாதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து ஒதுங்கும் நாங்கள், அதற்கான விலையைக் கொடுத்தோம். அன்று ஒரு சம்பவம் நடந்தது. பஞ்சாப்பில் காவல்துறையினரால் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தில் இருந்த ஒரே சீக்கியன் நான்தான். பேருந்திலிருந்து இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது உடைமைகள் அனைத்தும் இரக்கமின்றி வெளியே சாலையில் வீசப்பட்டன. பேருந்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். என்னிடம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடைக்காதபோது, சிதறிக்கிடந்தவற்றை அள்ளி எடுக்க நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு வெட்கம் பிடுங்கியது. மறுபடியும் பேருந்து கிளம்பியதும், பயணிகள் என்னைக் குற்றவாளியைப் போலப் பார்த்தார்கள். அந்த நேரத்தில், இறங்கிச் சென்று எங்காவது மறைந்து போக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. ஆனாலும் நான் தலைப்பாகையும், தாடியும் வைத்த சீக்கியனாகவே இருந்தேன். அப்படியானால், எனது அடையாளத்தை அழிக்க நாற்பது வயதில் நான் ஏன் முடிதிருத்தும் கடையில் காத்திருந்தேன்? இந்த மாற்றம் படிப்படியாக வந்தது. சீக்கிய மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று குழந்தையாக இருந்தபோது எனக்குச் சொல்லப்பட்டது. கோயில்களிலும், தேவாலயங்களிலும் இருக்கும் சிலைகளைப் பற்றி எதிர்மறையான விஷயங்கள் கூறப்பட்டன. இந்த வடிவங்களில் கடவுளை நாம் ஒருபோதும் காண முடியாது என்றும் கூறப்பட்டது. குருத்வாராவுக்குச் சென்றபோது, சீக்கியர்களின் கடைசி குருவாகக் கருதப்படும் சீக்கியப் புனித நூல், ஒரு தங்க இருக்கையில் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அது அழகான பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஒருவர், புனித நூலை பல்லக்கில் சுமந்து சென்றார். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு மதம், சொந்தப் புனித நூலுக்கு ஒரு சிலையின் வடிவத்தை அளித்தது அப்போது எனக்குப் புரிந்தது. புனித நூலின் குறிப்புகள் பற்றி விவாதித்த யாரையும் நான் பார்த்ததில்லை. உண்மையில், பெரும்பாலான சீக்கியர்கள் அதைப் படித்ததில்லை. வழிபாட்டுச் செயல்முறை, மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. எனக்கும் மனதளவில் மதம் தொடர்பான பல கேள்விகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு சீக்கிய குருவும், எனது கேள்விகளுக்கு இதுவரை பதிலளித்ததில்லை. நான் அதைப் பற்றித் தேடினேன். பல்வேறு புத்தகங்களைப் படித்தேன். அறியாமை எனக்குக் கசப்பாக இருந்தது. நீண்ட யோசனையில் இருந்தேன். நாவிதர், என்னை வாடிக்கையாளர் நாற்காலியில் உட்காரச் சொன்னார். ஆனால் அவர் சற்று குழப்பமடைந்ததாகத் தோன்றியது. நான் போலி நம்பிக்கையுடன் முன்னோக்கி நடந்து நாற்காலியில் அமர்ந்தேன். என் நீண்ட முடியை வெட்டச் சொன்னேன். எனக்கு எந்த ஸ்டைல் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். "நீங்கள் விரும்பும் எந்த வடிவமும் எனக்குப் பொருத்தமானது" என்றேன். சீக்கிய மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒருவர் செய்தால், தண்டனையாக குருத்வாராவிற்கு வரும் எல்லோரது செருப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று யாரோ சொன்னது நினைவில் இருந்தது. அப்போது அவர் பாவத்திலிருந்து விடுபடுவார். மீண்டும் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார். எனவே முடி வெட்டிய பிறகு, நான் தவறு செய்ததாக உணர்ந்து, என் மதத்திற்குத் திரும்ப விரும்பினால், எனது மதத் தலைவர் தீர்மானிக்கிற தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும். முடி திருத்துபவர் சீப்பையும், கத்தரிக்கோலையும் கையில் எடுத்து, என் தலைமுடியைத் தொட அனுமதி கேட்டார். ஏனென்றால் வேறு யாரும் சீக்கியரின் தலைமுடியைத் தொடக்கூடாது. நான் 'ஆம்' என்றேன். முதலில், ஒரு கொத்து முடி கீழே விழுந்தது. நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அதுதான் நான் கடைசியாக என்னை இந்த வடிவத்தில் பார்த்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. நாற்காலியைச் சுற்றி நீண்ட முடிகள் சிதறிக்கிடந்தன. தலைபாரம் குறைந்ததாக இருந்தது. நான் இப்படியொரு வடிவம் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தாடியை வெட்டும்போது, முடிதிருத்துபவர், “இன்னும் கொஞ்சம் வெட்ட வேண்டுமா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். சலூனில் இருந்த மற்றவர்கள் எல்லோரும், தங்கள் வேலையை விட்டுவிட்டு எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். முழு தாடியும் நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக என் முகத்தைப் பார்த்தபோது, என் கன்னங்கள் தெரிந்தன. என்னை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. நான் என் வயதை விட இளமையாகத் தெரிந்தேன். முடிதிருத்துபவரின் வேலை முடிந்தது. நான் அவருக்கு நன்றி சொல்லி, அங்கிருந்த எல்லோருக்கும் வணக்கம் வைத்தேன். என்னை அடையாளம் காண முடியவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள். நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். முன்கதவைத் திறந்து வீட்டினுள் செல்வதற்கு முன்பு, மோத்தி என்னை அடையாளம் காண்பாளா என்று பயந்தேன். ஆனால் நான் கதவைத் திறந்ததும் என்னை நோக்கிப் பாய்ந்தாள். கட்டி அணைத்தாள். இந்த உலகில், யாரும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என் செல்லப் பிராணி மோத்தி என்னுடன் இருக்கிறாள். அதன் நட்பு நீடிக்கும் வரை யாருடைய விமர்சனங்களையும், தீர்ப்பையும் என்னால் எதிர்கொள்ள முடியும். முன்பைவிட மோத்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஏனென்றால் அவளால் என் முடி இல்லாத கன்னங்களை எளிதாக நக்க முடிந்தது.
- ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?
உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடரோ என எதுவாக இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டன. அவற்றைக் குறித்து எந்தப் புகாரும் அவற்றுக்கு இல்லை. ஏன் இப்படி நடக்கிறது? தெரியாது. இதை மாற்ற முடியுமா? தெரியாது. இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா? தெரியாது. ஏனெனில், அவற்றுக்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்கும் அளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை. பரிணாமக் கோட்பாட்டின்படி இயற்கையான வாழும்நிலையில் மாற்றம் இல்லாதபோது, எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா? வாழும்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல் ஆகியவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழாதபோது, அந்த உயிரினங்களும் தலைகீழாக மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எனவேதான், ஒரு புலி புலியாகவே இப்போதும் நீடிக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவேதான் இப்போதும் இருக்கிறது. இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அதாவது வாழும்நிலை என்பதே ஒவ்வொரு உயிரின் இருப்பைத் தீர்மானிக்கிறது. வாழும்நிலைதான் அந்த உயிரின் உணர்வையும் அறிவையும் முடிவு செய்கிறது. வாழும்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகிறது. ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில்தான் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது. சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது. சரியா? ஆனால், காடு அழியும்போது என்ன நடக்கிறது? உணவு கிடைக்காது, இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை. புலி என்கிற இனம் அந்தக் காட்டில் அழிந்துவிடும். நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? புலி ஏன் மரங்களை நட்டு காட்டை உருவாக்கக் கூடாது? நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா? கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்துவிடும். இயற்கையை மாற்ற முடியும், கட்டுப்படுத்த முடியும், திருத்த முடியும் என்று அதற்குத் தெரியாது. ஆனால், யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றனவே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? உண்மைதான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் மட்டுமல்ல, வேறு பல உயிரினங்களும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால், யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும்போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா? அல்லது வண்ணத்துப்பூச்சி மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின், செடிகளின் இனப்பெருக்கத்துக்கு நான் உதவுகிறேன் என்று தெரிந்து, ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா? இல்லையே. யானைக்கோ வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது. அவற்றின் உயிரியல் இயல்பும், உடலியல் செயல்பாடுகளும் இயற்கையாக நடப்பவை. அப்படி என்றால்? அவை சிந்தித்துச் செயல்படவில்லை. மனித இனம் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறது. மனிதர்களும் திடீரென சிந்திக்கவில்லை. மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாக மனிதர்களும் கலந்தே இருந்தார்கள். எப்படி மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? எப்போது அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? மனிதர்களிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது? என்கிற கேள்விகள் வருகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், மனித இனத்தின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா? கை விரல்களில் இருந்துதான். கேளுங்கள்! எப்படி? ( தத்துவம் அறிவோம் ) - ஆதி
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 3
1.நடந்தா உடம்பு குறையும்னு சொல்றாங்க. ஆனால், யானைக்கு உடம்பு குறையவேயில்லை, ஏன்? (த.சி.பத்ரிபிரசாத், ஐந்தாம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.) நல்லா யோசிச்சிருக்கீங்க பத்ரிபிரசாத். உடல் எடையைக் குறைக்க எல்லாரும் நடக்கச் சொல்கிறார்கள். அதேநேரம் காட்டுயிர்களில் அதிகம் நடப்பது யானை. அதன் உடல் எடை குறையவில்லையே. இந்த இரண்டு விஷயத்தையும் இணைச்சு யோசிச்சு கேள்வி கேட்டதற்கு நன்றி. நம் நாட்டில் வாழும் காட்டு யானை ஒன்றின் சராசரி எடை 4,000 கிலோவுக்கு மேல். ஒரு நாளைக்கு 150-200 கிலோ இலை, தழைகளை அது சாப்பிடுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2 கி.மீ.இல் தொடங்கி 7 முதல் 10 கி.மீ.வரை யானைகள் நடக்கின்றன. இவ்வளவும் நடந்துசெல்வது எதற்காக? இரை தேடத்தான். ஒரு நாளின் முக்கால் பங்கு நேரத்தில் இரை தேடுவதற்காக யானைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக்கொள்வோம். நாமெல்லாம் குழந்தையாகப் பிறக்கிறோம். அதிலிருந்து நம் உடல் எடை ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பதின்பருவத்தைத் தாண்டி வளர்ந்தவுடன் நம் உடல் எடை கிட்டத்தட்ட நிலையாகிவிடுகிறது. பிறகு வயது முதிரும்போது குறையத் தொடங்குகிறது. இதேபோலத்தான் யானைகளுக்கும் நடைபெறும். யானை குட்டியாக இருந்ததில் இருந்து, வயது ஏறஏற எடை அதிகரித்து, வளர்ந்தவுடன் எடை நிலைபெற்றுவிடும். வயது முதிரும்போது எடை குறையத் தொடங்கிவிடும். எல்லா உயிரினங்களும் அவற்றின் உயரம், உடல் சுற்றளவின் அடிப்படையில் உகந்த எடை என்று ஒன்று இருக்கிறது. அந்த உகந்த எடை இருந்தால்தான், அந்த உயிரினம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, எடையைப் பராமரிக்க எல்லா உயிரினங்களும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அதிகப்படி எடை இருந்தால் நடந்தோ, உடற்பயிற்சி செய்தோ, உணவின் அளவைக் குறைத்தோ எடையைக் குறைக்க வேண்டும். இலை, தழை, புல், இளம் கிளைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை யானை உண்ணும். அவை தம் உடல் எடையை பராமரிக்க நிஜமாகவே நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது. அந்த இரையைத் தேட நிறைய நடக்கவும் வேண்டியிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை, எதிரானவை அல்ல. அதனால், யானை எவ்வளவு நடந்தாலும் எடை குறைவதில்லை. 2.ராட்டினத்திலோ, பூங்காவில் சுழலும் குதிரையிலோ உட்கார்ந்து சுற்றிய பிறகு, அந்த ராட்டினமோ குதிரையோ நின்றுவிடுகிறது. அதன் பிறகு நமக்குத் தலைசுற்றுவது ஏன்? அவை நின்ற பிறகு, நம் உடல் சுற்றாமல் நின்றுவிடுகிறது. ஆனாலும், தலைசுற்றுவது போல் தோன்றுகிறதே, அது ஏன்? த.மதிவதனி, 4ஆம் வகுப்பு, ஆரப்பாளையம், மதுரை நல்ல கேள்வி மதிவதனி. நம் உடல் ஏன் இப்படிச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் உள்காதுப் பகுதிதான் நம் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பொதுவாக நம் உடலோ அல்லது வாகனத்தில் நாம் சென்றாலோ அந்த இயக்கத்துக்கு ஏற்ப நம் உடலை சமநிலையில் வைப்பதற்கு, உள்காது பகுதி எதிர்வினை ஆற்றுகிறது. நமது உள்காதுப் பகுதியில் அரை வட்ட வடிவில் சில கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்களில் திரவம் உள்ளது. நம் உடலைச் சுற்றும்போதோ, ராட்டினம், சுழலும் குதிரையில் சுற்றும்போதோ இந்த திரவமும் சேர்ந்து சுற்றும். அந்தக் கால்வாய்களில் உள்ள நுண்ணிய முடிகள், இந்த இயக்கம் தொடர்பாக மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இயக்கத்துக்கு ஏற்ப உடலை சமநிலையில் வைக்க இது தேவை. அதேநேரம், நம் உடல் சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்கூட, நிலைமத்தின் (inertia) காரணமாக திரவம் சற்று நேரத்துக்கு சுற்றுவதால், அந்த சமிக்ஞை சிறிது நேரத்துக்கு செல்லும். நம் உடல் இயங்குவதை நிறுத்தியிருக்கும். ஆனாலும் மூளைக்குச் செல்லும் தவறான சமிக்ஞையின் காரணமாகத் தலை மட்டும் சுற்றும். சிறிது நேரத்தில் இந்த சமிக்ஞை நின்று, இயல்பு நிலைக்கு நாம் திரும்பிவிடுவதால், தலைசுற்றல் நின்று உடலைப் போலவே தலையும் இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது. -------- அமிதா
- மெகலோடான்
பல குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "இப்பவும் மெகலோடான் (மெக்) இருக்கா?" என்பதுதான். மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன. மெகலோடான் என்ற சொல்லுக்கு "பெரிய பற்களுடையது" என்று பொருள். இதன் பற்கள் பிரம்மாண்டமாக இருந்ததால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். "பெரிய பல்" என்று சும்மா பேச்சுக்கு என்று யாரும் சொல்லவில்லை. ஒரு பல்லே அதிகபட்சம் 18 சென்டிமீட்டர் நீளம் இருக்குமாம்! அதாவது அரையடி ஸ்கேலைவிட கொஞ்சம் அதிகமான உயரம்! இதை அடிப்படையாக வைத்து நாம் இதற்குத் தமிழில் "பெரும்பல் சுறா" என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த பூமியில் இதுவரை தோன்றிய சுறாக்களிலேயே மிகப்பெரியது பெரும்பல் சுறாதான். இது சுமார் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை ஐம்பதாயிரம் கிலோ இருக்கும். பிற சுறாக்கள், திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகள், பெரிய மீன்கள் ஆகியவற்றைப் பெரும்பல் சுறாக்கள் வேட்டையாடி சாப்பிட்டிருக்கின்றன. பெரும்பல் சுறாக்களின் உடல் சற்றே மெலிதான, நீண்ட அமைப்பு கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். என்னதான் அளவில் பெரியதாக இருந்தாலும் இது வேகமாக நீந்தக்கூடியது அல்ல என்றும், பதுங்கிப் பதுங்கி இரைக்கு மிக அருகில் போய் பிறகு விரைவாகத் தாக்கும் பண்பு கொண்டது எனவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன பொதுவாக அழிந்துபோன விலங்குகளை நாம் தொல்லுயிர் எச்சங்கள் (Fossils) மூலமாகத்தான் அறிந்துகொள்வோம். டைனோசர்களைக் கூட அப்படித்தான் விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர். உடலில் இருக்கும் எலும்புகள் கடினமாகி இறுகும்போது தொல்லுயிர் எச்சங்கள் உருவாகும். ஆனால் சுறாக்களின் உடலில் எலும்புகள் கிடையாது. குருத்தெலும்புதான் இருக்கும். நமது காதுகளிலும் மூக்கிலும் இருக்கும் எளிதில் வளையக்கூடிய எலும்புதான் குருத்தெலும்பு. சுறாக்களின் உடல் முழுக்கவே இந்தக் குருத்தெலும்புதான் இருக்கும். எலும்பு கிடையாது என்பதால் அந்த எலும்புக்கூடு தொல்லுயிர் எச்சமாகவும் மாறாது. எலும்புக்கூடு கிடைக்காது என்றால் எப்படி அதன் உடல் நீளத்தையெல்லாம் கணக்கு போட்டார்கள்? அங்குதான் இருக்கிறது சுவாரஸ்யம். சுறாக்களின் பற்கள் வழக்கமானவைதான். அவை தொல்லுயிர் எச்சமாக மாறக்கூடியவை. கிடைக்கும் பல் எச்சங்களை வைத்துதான் உடல் நீளம், எடை எல்லாவற்றையும் கணக்கு போட்டிருக்கிறார்கள். காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் பிற விலங்குகளுடன் ஏற்பட்ட போட்டி ஆகியவற்றால் பெரும்பல் சுறாக்கள் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
- மாயச்சதுரங்கள்
ஜோதிலிங்கம் கணிதவியலாளர் 3x3, 4x4, 5x5 அளவுள்ள கட்டங்களில் எண்களை நிரப்பி பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் மற்றும் குறுக்கும் நெடுக்குமாக கூட்டினால் ஒரே கூட்டுத்தொகை வருமாறு செய்வது மாயச் சதுரமாகும். உதாரணம் மேற்கூறிய தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் ஒன்றாகவே வருகிறது
- பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும். சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது, “மியாவ் மியாவ்.. என்னை விடறா.. குண்டுப்பையா.. மியாவ் ” என்று கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும் பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும். ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள் நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத் தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு, “தங்கச்சி.. என் பையனை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து. “நிச்சயமாக அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது. இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது. “ பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு பசிக்குது..கர்ர்ர்” என்று உறுமியது. “ இதோ உனக்கு உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது இரவாகி விட்டது. அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள். அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது. பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின் விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது. அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு தான்! புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்! “கர்ர்ர் உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது. நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது. பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப் பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது. இப்போது கூடப் பாருங்கள்! இந்தக் கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது. ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்
- நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்
கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவரை அண்டை மாநில மொழிகளில் வெளிவரும் சிறார் படைப்புகள் குறித்த வியப்பிலிருந்த தமிழ்ச்சிறார் இலக்கியம் இப்போது அவர்களே வியக்கும்வண்ணம் புதிய திசைகளில் புதிய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், போன்ற சமகாலப்பாடுபொருட்களைப் படைப்புகளில் பேசத்தொடங்கியிருக்கிறது. தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலம் புதிய திசையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது அவர் எழுதிய ஒற்றைச்சிறகு ஓவியா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அர்ப்பணிப்பு மிக்க அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். கவிஞராகவும், இதழாளராகவும் சிறார் எழுத்தாளராகவும் விளங்குகிற விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த இரண்டு வருடங்களில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாணவர்களிடம் தலைகாட்டும் சாதிப்பாகுபாடு குறித்து அவர்களுடைய தோளில் கை போட்டு உரையாடும் அற்புதமான படைப்பாகக் கயிறு கதைப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் வித்தியாசமான, தனித்துவமான கருப்பொருளுடன் எழுதும் விஷ்ணுபுரம் சரவணன் ஒற்றைச்சிறகு ஓவியாவில் சமகாலத்தின் மிகமுக்கியமான பிரச்னையைப் பற்றி குழந்தைகளிடம் பேசுகிறார். இந்த நூலை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு துப்பறியும் கதை போல ஐந்து நண்பர்களுடன் தொடங்கும் கதை முதல் அத்தியாயத்திலேயே வேகமெடுக்கத் தொடங்குகிறது. குழந்தைகளின் ஆரவத்தைத் தூண்டும் வகையில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வைக்கிறது. கதை இப்படித்தான் போகும் என்ற நம்முடைய அனுமானங்களை முற்றிலும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஐந்து நண்பர்களில் ஓவியாவுக்கு சிறகு முளைத்தவுடன் கதை ஃபேண்டசியாக மாறிவிடுகிறது. ஃபேண்டசியின் வழியே ஏன் நிலத்தில் மண்புழுக்கள் காணாமல் போயின? என்ற கேள்வியை எழுப்பி மெல்ல மெல்ல இரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நுண்ணுயிர்கள் வாழத்தகுதியற்றதாக மாறுகிற விஷயத்தையும், எண்ணெய்க்கம்பெனியினால் தண்ணீர் மஞ்சள் நிறமாகி குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிற ஆபத்தையும், எண்ணெய்க்கசிவினால் நெல்வயல்கள் அழியும் அபாயத்தையும் அடுத்தடுத்துச் கதையின் ஓட்டத்தில் அழகாகச் சொல்லிக் கொண்டே போகும் போது சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய பிரதியாக மாறுகிறது ஒற்றைச் சிறகு ஓவியா. மண்புழு ஓவியம், தண்ணீர் காட்டும் பாதை, கண்களின் வழியே கனவைப் பார்த்தல் என்று குழந்தைகளை ஈர்க்கும் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கிறது ஒற்றைச் சிறகு ஓவியா. அந்த ஊரின் மக்கள் ஒன்று திரண்டு போராடுகிற காட்சியும் கதையினூடே சிறார்களின் பார்வையிலேயே சொல்லியிருப்பது சிறப்பு. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் முற்றிலும் எதிர்பாராத புதிய புதிய திருப்பங்களையும் சுவாரசியமான முடிச்சுகளையும் சவால்களையும், சிறார்களின் வாசிப்புக்கேற்ற ருசியில் வழங்கியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். குழந்தைகளே அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதாக்க் கதை முடியும் போது குழந்தைகளுக்கு நம் சமகாலப் பிரச்னையான சுற்றுச்சூழல் குறித்து நிறைய விஷயங்களை அறிந்திருப்பார்கள். விஷ்ணுபுரம் சரவணனின் நீலப்பூ, என்ற நாவலும் சாதிச்சண்டையால் நடக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் குழந்தைகளின் உளவியலில் உருவாகும் மாற்றங்களையும் பேசுகிறது.. அவருடைய ஒவ்வொரு நூலிலும் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்னைகளைக் கலை அமைதியுடன் மிகச் சிறப்பாக, குழந்தைகள் வாசிக்கும் எளிய மொழிநடையில் படைத்திருக்கிறார். தன்னுடைய சொந்த ஊரான விஷ்ணுபுரத்தின் மீதான பிரியத்தினால் தன்னுடைய பெயரின் முன்னொட்டாகச் சேர்த்துக் கொண்டிருக்கிற விஷ்ணுபுரம் சரவணன் ஒரு கவிதை நூல், நான்கு சிறார் நாவல்கள், ஒன்பது சிறார் சிறுகதை நூல்கள், நான்கு பெற்றோர் ஆசிரியருக்குமான நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களின் இணையாசிரியராகப் பணிபுரிகிறார். குழந்தைகள் வாசிப்பின் அவசியம் குறித்தும் சிறார் இலக்கியம் எழுதுவது எப்படி என்பதைக் குறித்தும் புத்தகக்கண்காட்சிகளிலும், பள்ளிகளிலும் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். தன்னுடைய படைப்புகளின் வழியே நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலத்தை முன்னகர்த்திக் கொண்டு செல்லும் விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் பாலசாகித்ய விருது தமிழ்ச்சிறார் இலக்கியத்திற்கு மற்றுமொரு புதிய வண்ணத்தைச் சேர்த்திருக்கிறது. அந்த வண்ணத்தின் ஒளியில் புதிய மாற்றங்களை, புதிய பாதையை உருவாக்கும் கலைஞனாக விஷ்ணுபுரம் சரவணன் திகழ்கிறார். ---- உதயசங்கர் (நன்றி - தமிழ் இந்து)
- குழந்தை இலக்கியம் பேசும் சாதி
ஆங்கிலத்திலிருந்து தமிழில் - வே.சங்கர் தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் சாதி பற்றிய கள்ளமௌனங்களை வேரறுத்து உரத்தகுரலில் பேசத்தொடங்கியிருக்கிறது. ”தற்போது, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தோன்றியிருக்கும் புதிய அலை, புனைக்கதைகள் மற்றும் மீளுருவாக்கம் செய்யப்படும் புராணக்கதைகள் மூலம் சாதியை நேரடியாக எதிர்கொள்கிறது. இவை இளம் வாசகர்கள் மத்தியில் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கின்றன”. இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இது வெறும் தேவதைக்கதைகள் அல்ல. நீதிக்கதையும் அல்ல. சாதி பற்றிய கதை. திருச்சி மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மகிழ்நிலா ‘நீலப்பூ’ என்ற புத்தகத்தை வாசிக்கும்வரை, இவ்வுலகம் மீதான பார்வை இத்தனை பெரிதாக மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது மாறியது. அவள் வாசித்த ‘நீலப்பூ’, என்ற நாவல் மகிழ்நிலாவின் வயதொத்த கீர்த்தியின் கதையைச் சொல்கிறது. சாதிவெறியால் உண்டான வன்முறையால், அவளது கிராமமே எவ்வாறு நாசமாகிறது என்பதை அவள் நேரில் காண்கிறாள். அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், மகிழ்நிலா, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு ”ஒரு அமைதியான கிராமமே சாதி வன்முறையால் அழிந்து, அப்பாவி மக்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகிப் போகிறதென்றால், உலகம் ஒரு பேரழிவை நோக்கிப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்று ஒரு உருக்கமானக் கடிதம் எழுதியிருந்தாள். அதன் உடனடித் தாக்கம்: பெரும்பாலும், பெரியவர்கள்தான் சாதி எதிர்ப்பு இலக்கியங்களையும், அதன் அரசியல் நுணுக்கங்களையும் வாசிக்கிறார்கள். ஆனால், இப்பொழுது, புதிய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள், சிறார்களுக்கான கதைகளை எழுதுகிறார்கள். இவர்களது கதைகள் சாதி ஒடுக்குமுறையை அடையாளம் காணவும், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வையும் வழங்குகின்றன. ’நீலப்பூ’ கதையில், கீர்த்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முக்கியமான சம்பவம், வேறு சாதியைச் சேர்ந்த அவளது நண்பனும் வகுப்புத் தோழனுமான அருண், ஒரு கூட்டத்துடன் வந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கி நாசமாக்கும் காட்சி. அதன் தொடர்ச்சியாக வன்முறை மூண்டு கிராமத்தையே அழிவுக்குள் இட்டுச்செல்கிறது. இருப்பினும், கீர்த்தி கொஞ்சமும் பயமின்றி தனியாக அருண் குடியிருக்கும் பகுதிக்கு நடந்து சென்று, அவனது நோட்டுப்புத்தகத்தைத் திருப்பித் தருகிறாள். அவளது துணிச்சலான பயணம் மற்றும் அதில் சந்திக்கும் மனிதர்கள்தான் இந்தக் கதையின் மையக்கரு. இந்தப் புத்தகம் எழுப்பும் கூர்மையான கேள்விகள்: • சாதி அடிப்படையிலான வன்முறையால் யாருக்கு லாபம்? • ஏன் தலித் மாணவர்களின் கல்வி வளங்கள் எப்போதும் முதல் இலக்காக தாக்கப்படுகின்றன? • சாதி எப்படிக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறது? படங்களுடன் வெளியான நீலப்பூ என்ற இந்நாவல் வானம் பதிப்பகத்தால் டிசம்பர் 2021-ல் வெளியிடப்பட்டது. தமிழ் (குழந்தைகள்) சிறார் இலக்கியம், ஆங்கில சிறார் இலக்கியத்தில் உள்ளதைப் போலவே, 3-8 வயது (மழலை இலக்கியம், தொடக்கநிலை வாசகர்களுக்கானது), 8-12 வயது (சிறார் இலக்கியம், மத்தியநிலை வாசகர்களுக்கானது), 12-18 வயது (பதின்பருவ இலக்கியம்,அல்லது வளர் இளம் பருவ இலக்கியம்) ஆகிய வயது பிரிவுகளுக்கேற்ப அமைந்துள்ளது. சாதிப்பாகுபாடு குறித்த கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு பிரிவுகளில்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும், அந்தக் கதைகளில் வரும் மையக் கதாபாத்திரங்கள், பெரும்பாலும், வாசகர்களின் வயதொத்தவர்களாகவே இருப்பார்கள். தன் 13 வயது மகனுக்காக ‘நீலப்பூ’ புத்தகத்தை வாங்கிய கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோரில் ஒருவர் Frontline–க்குக் கூறியதாவது: “ஒரு குழந்தை பத்துவயது நிறைவடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சாதியைப் பற்றிய பரந்த உரையாடல்களைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் தங்களது கருத்துக்களைச் சிந்திக்கத்தொடங்கும் பதின்ம வயதில், குறிப்பாக இடஒதுக்கீடு பற்றிக் கேள்விப்படும் காலகட்டத்தில், அவர்களுடன் அது குறித்தான தீவிரத்தன்மையைப் பேசுவது மிகமிக அவசியம்” பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன், இந்த வகை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். “நான் பல பரிமாணங்களுடன் கூடிய கதையை எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், குழந்தைகள் அது பற்றிப் புரிந்துகொள்ளக் கொஞ்சமாவது போராட வேண்டும். அப்போதுதான், அது குறித்தான புரிதல் ஆழமாக அவர்கள் மனதில் பதியும்” என்று Frontline-க்கு கூறினார். 2022-ல் எழுத்தாளர் விழியன் எழுதிய ’தேன்முட்டாய்’ (புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு) கதையில், ஒரு சாதி வெறிகொண்ட கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுக்கும் சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தக் கதை தமிழ்நாட்டில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொலியின் தழுவலாக அமைந்திருந்தது. தர்மபுரி, விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகள்தான் ‘நீலப்பூ’ கதையின் அடிநாதமாக விளங்கியது. விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’ என்ற சிறுநூல் 1 லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுத்தீர்ந்தது தமிழ் சிறார் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்தப் புத்தகம் பெரியார் ஈ.வே.ராமசாமியின் மேற்கோளுடன் தொடங்குகிறது: “எந்தவொன்றையும் சுதந்திரமாக, சுத்த அறிவுகொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி. அப்போது தான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்” ’கயிறு’ என்ற கதையில், ஏழாம் வகுப்பு படிக்கும் செழியனை ஒரு கடைக்காரர் குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்தும் கயிறு ஒன்றைக் கையில் அணியச் சொல்கிறார். அவனது தாய் வளர்மதி, தெளிவாகவும், தீவரமாகவும் செயல்படும் கதாப்பாத்திரம். பொதுவாகச் சொல்லப்படும், ‘செய் / செய்யாதே’ என்று கட்டளையிடும் பெற்றோரைப்போல் இல்லாமல், அவனுள் ’ஏன்?, எதற்கு?’ என்ற கேள்வியைக் கேட்க ஊக்குவிக்கிறாள். முடிவில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் செழியன் அதற்கேற்பத் தானாகவே செயல்படுகிறான். சரவணன், சாதியைச் சரியான சமூகப் பின்னணியில் வைத்துப் பேசுகிறார். கதையின் முடிவில் நீதிபோதனை செய்வதைத் தவிர்க்கிறார். உண்மையை அதன்போக்கில் உணரச்செய்கிறார். ’தேன்முட்டாய்’ சமூகப் புறக்கணிப்பை நேரடியாக எதிர்கொள்ளும் கதை. ஆனால், ’கயிறு’ சாதிப் பிரிவினையை வெளிப்படையாகக் காட்டும் கதை. இவை இரண்டும் தற்போது மிகமுக்கியமான நூல்கள். ஏனெனில், சமீபத்தில் குறிப்பாகத் திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆகஸ்டில், திருநெல்வேலி நாங்குநேரியில், ஒரு தலித் சிறுவனும் அவனது சகோதரியும் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர் 2024 ஜுன் மாதத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ”கையில் கட்டப்படும் கயிறு, நெற்றியில் வைக்கப்படும் குறியீடுகள் போன்ற சாதி அடையாளங்களைத் தடைசெய்யவேண்டும். பள்ளிகளின் பெயர்களிலிருந்து சாதி சம்பந்தப்பட்டப் பட்டங்களை அகற்றவேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். இங்கேதான் சாதிஎதிர்ப்புக்கதைகள் ஒரு இலக்கிய எதிர்மருந்தாக மாற்றமடைகின்றன. சரிதா ஜோவின் ‘சாதித்த ஜோதி’ என்ற சிறுகதை, சின்னத்துரையின் நிஜவாழ்க்கையிலிருந்து உருவாகியுள்ளது. இதில் சாதி வன்முறைத் தாக்குதலில் தன் காலை இழந்த ஒரு சிறுமி பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் தனது திறமையை நிரூபிக்கிறாள். உண்மையில், சின்னத்துரையும் பல எதிர்ப்புகளைத் தாண்டி, 12-ஆம் வகுப்பில் 496/600 மதிப்பெண்கள் பெற்று தமிழக முதல்வரிடம் பாராட்டுக்களைப் பெற்றார். எழுத்தாளர் விழியன் எழுதிய மலைப்பூ (புக்ஸ் ஃபார் சில்ரன்,2021) என்ற சிறார் நாவல் கல்வியில் உள்ள அமைப்புசார் சமத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது. இக்கதையின் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் லஷ்மி, மலைவாழ் பகுதியிலிருந்து தினமும் ஐந்துகிலோமீட்டர் தூரம் நடந்தும், மிதிவண்டி மற்றும் பேருந்தில் பயணித்தும் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு சிறுமி. அவளது வீட்டில், கழிப்பறையோ, மின்விசிறியோ இல்லை. அவள் நகரப்புறத்திலிருந்து கல்விகற்க வரும் மற்ற மாணவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அவளது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டிருப்பதை உணர்கிறாள். எழுத்தாளர் விழியன், கதை ஓட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (NCSC) ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியிருக்கிறார். லட்சுமி என்ற கதாபாத்திரம், திண்டுக்கல் அருகே உள்ள சின்னமலைப் பகுதியில் விழியன் சந்தித்த உண்மையான ஒரு சிறுமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, பலமுறை மறுபதிப்பாகியிருக்கிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறனின் கவனத்தையும் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான நம்பிக்கையுடனும் சமூக நீதியுடனும் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள், குழந்தைகளுக்குக் கல்வி செய்யத்தவறிய மற்ற விசயங்களை அதிகம் கற்பிக்கின்றன. பெற்றோர்கள் காலம்காலமாகக் கொண்டிருக்கும் தங்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்றன. “சாதியைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்கச் செய்வதற்காக, குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். சாதி எண்ணங்களில் அதிகமாக ஊறிப்போனவர்கள் அவர்கள்தான்.” என்று விழியன் கூறுகிறார். இதிகாசங்கள் மீதான மீள்பார்வை. சரவணன், விழியன் மற்றும் சரிதா ஜோ ஆகியோர் சாதி சமத்துவக் குறைபாடுகளையும், அதன் சமூகத்தாக்கத்தையும் பதிவுசெய்கின்ற அதே வேளையில், பாலசாஹித்ய புரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர், இந்து இதிகாசங்களில் காணப்படும் சாதிய அடுக்குகளில் உள்ள அமைப்பை நேரடியாக கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், அதன் மீதான விவாதத்தை மேலும் ஒரு படி முன்னேற்றுகிறார். கட்டை விரலின் கதை (வானம் பதிப்பகம், 2023) எனும் நூலில், உதயசங்கர் மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனின் கதையை மறுபார்வையிடுகிறார். ஏகலைவனின் குருபக்தியைப் போற்றும் பாரம்பரியக் கதையமைப்பை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒரு பழங்குடி வில்வீரனாகிய ஏகலைவனிற்கு, தேவதத்தனாகிய துரோணாச்சாரியாரின் பயிற்சி அவசியமா?” என்ற கேள்வியை நம்முன்னால் வைக்கிறார். இவர், குறிப்பாக 1990களுக்குப் பிறகு, இந்துத்துவா வலதுசாரிகளால் சாதியமேலாண்மையைப் புனிதப்படுத்த இதிகாசங்கள் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கிறார்.. ஏகலைவன் மற்றும் துரோணாச்சாரியாரின் கதை பக்திப்போர்வையின்கீழ் சாதிக்கொடூரத்தைக் மறைக்க நுட்பமாகப் புனையப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுப்பார்வையாக, ஒடுக்கப்பட்டோர் வரலாற்று எதிர்வாதத்தைக் எழுத விரும்பினேன்,” என்று கூறும் இவருக்கு, இந்த எண்ணம் தமிழ்த் தெருநாடகக் கலைஞர் பிரளயன் எழுதி இயக்கிய ’உபகதை’ என்ற நாடகத்தை பார்த்த பிறகு தோன்றியிருக்கிறது. ’பறம்பின் பாரி’ என்ற நூலில், சங்க காலத் தலைவன் பாரியின் எழுச்சியை உதயசங்கர் ஆராய்கிறார். அதோடு, ஆரியர்களின் இடப்பெயர்ச்சி, திராவிட அடையாளம், மற்றும் ஆதிப்பொதுவுடமைச் சமூகத்திலிருந்து தனியுடமைச் சமூகம் நோக்கிச் செல்லும் பரிணாம மாற்றத்தை கதைகளோடு நுட்பமாக இணைக்கிறார். கவிஞர் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு, சு. வெங்கடேசனின் ’வீரயுக நாயகன் வேள்பாரி’, மற்றும் ஆர். பாலகிருஷ்ணனின் ’சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ போன்றவற்றிலிருந்து ஆதாரத்தைத் திரட்டித்தருகிறார். தீண்டாமை என்ற தலைப்பைத் தொடுதல் முன்னேறிய சட்டங்கள் அமலில் இருந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை பல இடங்களில் இன்னும் பரவலாகவே காணப்படுகிறது. சாதி முறையில் மேல்அடுக்கைச் சேர்ந்த இந்துப் பெற்றோர்கள் தலித் அங்கன்வாடி பணியாளர்கள் சமைத்த உணவைத் தொட மறுப்பது முதல், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சாதிவழி அவமானங்கள் வரை பல்வேறு உருவங்களில் இது தொடர்கிறது. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் எழுதிய பிரேமாவின் புத்தகங்கள் (புக்ஸ் ஃபார் சில்ரன், 2024) என்ற நூலிலுள்ள கதைகள் இந்த விசயத்தை நேரடியாக எதிர்கொள்கின்றன. அதில் இடம் பெற்றுள்ள "பார்வதி அத்தையின் பொங்கல்" என்ற சிறுகதை, தலித் அங்கன்வாடி பணியாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் அவமானங்களையும் உருக்கமாக விவரிக்கிறது. இதேபோல், "ஆறறிவு" மற்றும் "மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டா?" போன்ற கதைகள், சாதி சார்ந்த மேலதிகாரப் போக்குகள் மற்றும் ஒன்றாக அமர்ந்து உண்பதில் உள்ள தடைகளை, சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தும் கதைகளாக உள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடப்புத்தகங்களில்: ”தீண்டாமை ஒரு பாவச்செயல்”. ”தீண்டாமை ஒரு குற்றச்செயல்”. ”தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊடக அறிக்கைகள், ”இந்தக் கொடூர நடைமுறை இன்னும் பல இடங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது” என்கிறது. கோ.மா.கோ. இளங்கோ எழுதிய "சஞ்சீவி மாமா" (புக்ஸ் ஃபார் சில்ட்ரன், 2017) என்ற பாதி-புனைவுக் கதையில், ஒரு தலித் துப்புரவுப்பணியாளருக்கும், பேச்சிராசு என்ற 11 வயது சிறுவனுக்கும் இடையிலான நட்பைக் கருணையுடன் படம் பிடிக்கிறது. இது எழுத்தாளர் இளங்கோவின் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது. சாதிக்கொடுமையையும் கருணையின் சாத்தியத்தன்மையைக் குழந்தைகள் உணரக்கூடிய கதையாக இது அமைந்துள்ளது. இதைத் தலித் அல்லாத எழுத்தாளர் ஒருவர், சாதிச்சலுகையைத் தெளிவாக உணர்ந்து, ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். முந்தைய காலப் படைப்புகள் குழந்தைகள் இலக்கியத்தில் சாதி பற்றிய எழுத்துகள் புதிதல்ல. எஸ். ஹரிஹரன் (ரேவதி என்ற புனைபெயரில்) எழுதிய 'கொடி காட்ட வந்தவன்' (1978) கதையின் ஆரம்பக் காட்சிகளைச் சரவணன் குறிப்பிடுகிறார். இந்நாவல், ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த, போராளியான குழந்தை மோகனைப் பின்தொடர்கிறது. விடுதலை இயக்கத்தால் தூண்டப்பட்டு, சாதி மற்றும் சாதியில் நிலவும் வர்க்க அடுக்குகளை எதிர்கொள்கிறான். ஒரு துணைக்கதையில், காந்தி, தாழ்சாதிக்காரர்களுக்குக் குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்பதை அறிந்து, அந்த அருவியில் குளிக்காமல் விலகிச் செல்கிறார் — இது கேட்பதற்கும் வாசிப்பதற்கு மென்மையாக இருந்தாலும், பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “நான்கு வருடங்களுக்கு முன், ரேவதி சொன்னது என்னவென்றால், “அது 25,000 பிரதிகளுக்குமேல் விற்றது. அது சாதி குறித்ததாக இருந்தது. ஆனால் இன்று யாரும் அதை மேற்கோள் காட்டுவதில்லை. நானே சமீபத்தில் தான் வாசித்தேன்.” என்று சரவணன் கூறுகிறார். முந்தைய காலங்களில், சாதி தொடர்பான விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசத் தமிழ் சிறுவர் இலக்கியங்கள் எப்போதாவதுதான் தோன்றின; பூந்தளிர், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் அல்லது சில தொகுப்புகளில்தான் அவை இடம் பெற்றன. எனினும், அந்த எழுத்துகள் பெரும்பாலும் சிறுவர்களுக்கான முக்கிய வாசிப்பாக மாற்றப்படவில்லை. இன்றுபோல் திட்டமிட்டு உருவாக்கப்படும், தொடர்ந்து வளரும் சாதி எதிர்ப்பு இலக்கிய மரபு அப்போது இல்லவே இல்லை. எழுத்தாளர் தெய்வசிகாமணி சாதி எதிர்ப்பு அரசியலை சிறுவர் இலக்கியங்களில் எழுதியிருக்கிறார் என்று சரவணன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நூலின் ஒரு பிரதிகூட இன்று எங்கும் கிடைக்கவில்லை. 1987ஆம் ஆண்டு வெளியான 'வேதம் புதிது' திரைப்படத்தின் உள்ளடக்கம் அந்த நூலுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததாக அவரது மகன் கூறினார். இந்தவகையில், அந்தப் புத்தகம் இலக்கியத்தின் மிகச்சிலத் தடயங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது. ஆவணப்படுத்தாமையால் ஏற்படும் பாதிப்பு: இதுபோலக் காணாமல்போன படைப்புகள் மற்றொரு முக்கியச் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. தமிழில் குழந்தைகளுக்கான, ஆரம்ப கால சாதி எதிர்ப்புக் கதைகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஆவணப்படுத்துதலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், சரவணன் சில முக்கியமான ஆரம்பக்கட்ட உதாரணங்களை கண்டறிந்துள்ளார்: “எழுத்தாளர் நா. பிச்சமூர்த்தி 1930-40களில் ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற கதையை எழுதியுள்ளார். 1950-களுக்குப் பிறகு அழ. வள்ளியப்பா ‘இரு காக்கைகள்’ என்ற கதையை எழுதியுள்ளார். இரண்டும் சாதியை மையமாகக் கொண்ட பின்னணியுடன் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய முடியவில்லை, ஆனால் இருவருக்கும் சாதியைக் குறித்து எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்பது உறுதி.” பிச்சமூர்த்தியின் எழுத்துகள் பின்னாளில் மறுபடியும் கவனிக்கப்படத் தொடங்கின. சுதந்திரப் போராளியும் சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான சி.சு.செல்லப்பா, 1977 ஆம் ஆண்டு எழுத்துப் பிரசுரம் மூலம் அவரது கதைகளை "காக்கைகளும் கிளிகளும்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். இதில், ஒரு கிளி தன்னைச் சவர்ண சாதியினர் என நினைத்து, கடுமையான புயலின்போது காக்கைகளின் கூடுகளில் தங்க மறுக்கும் ஒரு உருக்கமான கதை இடம் பெற்றுள்ளது. இயற்கைச் சீற்றத்தின் மூலம், சாதி பெருமையின் அழிவை இறுதியில் வெளிப்படுத்துகிறது. இந்த ஆரம்ப கால எழுத்துகளில் சாதி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றிருந்தாலும், குழந்தைகளுக்கான கதைகளில் வெளிப்படையான சாதி பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் எழுதியிருக்கலாம் என பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் Frontline இதழுக்கு தெரிவித்தார். “அப்படி இருந்தாலும், கதைகளில் பயன்படுத்தப்படும் மொழி வழியில் நாம் அந்தந்தச் சாதிகளை அடையாளம் காண முடிகிறது,” என்றார் வள்ளியப்பன். இந்த மென்மையான அணுகுமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. ஒரு சிறார் இலக்கிய எழுத்தாளர் கூறுவதுபோல், மதிப்புமிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெ.தூரனின் கதைகளும் சமூகப் பிரச்சனைகளை வெறும் மேம்போக்காக மட்டுமே தொட்டுச்செல்கின்றன. இது இன்றைய காலத்தில் வெளிப்படையாக சாதியை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுடன் பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. சாதியை நேரடியாகக் கொண்டாடும் அல்லது எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கடந்த பத்தாண்டுகளில் தான் தீவிரமாகத் தோன்றத் தொடங்கியுள்ளன. அரசியல் பதிப்பு வெளியீடுகள் இதுபோன்ற கதைகளைப் பரவலாகப் பாரதி புத்தகாலயத்தைச் சார்ந்த "புக்ஸ் ஃபார் சில்ரன்" வெளியிட்டு வருகிறது. நகராஜன் கூறியபடி, 2002-ல் "புக்ஸ் ஃபார் சில்ரன்" தோன்றியதன் மூலம் குழந்தைகள் இலக்கியப்பதிப்பு உலகில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது, காரணம், அந்த வெளியீடு பாரம்பரியமாக சொல்லப்படும் கதைகளில் இருந்து விலகி, சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதைகளை வெளியிடத்தொடங்கியுள்ளன. அதேபோல், நூல்வனம் நிறுவனத்தின் வானம் பதிப்பகம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தலித் மற்றும் பெண்ணுரிமை குரல்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பதிப்புகளில் புராணங்களின் புதுமையான வருணனைகள், பெண்ணியம் மற்றும் பகுஜன் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஈர்ப்புமிக்க சிறுகதைகள் அடங்கும். 2021-ல் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் கதைசொல்பவர்கள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை நிறுவினர். இது சிறார் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கலை இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கான ஒருமித்த மேடையாக உள்ளது. முன்னேற்றப்பாதை: இந்தப் புத்தகங்கள் தற்பொழுது நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து வருகின்றன — குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் அரசு பள்ளிகளில், முற்போக்குச் சிந்தனைகொண்ட ஆசிரியர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் மாற்று வாசிப்புக்காக எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து களஞ்சியங்களை உருவாக்கி வருகின்றனர். டிஜிட்டல் வடிவப் புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் இவற்றை மேலும் எளிதில் அணுகக்கூடியவையாக மாற்றியுள்ளன, குறிப்பாக கிராமப்புறங்களில். பல தன்னார்வலர் அமைப்புகள் மற்றும் சமூக நூலகங்கள் கயிறு, மலைப்பூ, மற்றும் பிரேமாவின் புத்தகங்கள் போன்ற படைப்புகளை முன்வைத்து வாசிப்பு அமர்வுகளை நடத்துகின்றன; அவற்றுடன் பெரும்பாலும் விவாதங்கள், நடிப்பு காட்சிகள் மற்றும் எழுதும் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன. அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இளம் வாசகர்கள் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, தாங்களாகவே கேள்விகள் எழுப்பி, அவர்களை சுற்றியுள்ள சமத்துவமின்மையை உணர்ந்துகொள்ளவும், சில சமயங்களில் அதற்கு எதிராகவும் நிற்கிறார்கள். பல எழுத்தாளர்கள் Frontline இதழுக்குத் தெரிவித்ததாவது, ”சாதி எதிர்ப்பு குழந்தை இலக்கியத்திற்கு அரசு விருது மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தால், இந்த வகை புத்தக வெளியீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது”. இளங்கோ கூறியதாவது, குழந்தைகளுக்கான தமிழில் சாதி எதிர்ப்பு இலக்கியத்தை மேல்மட்ட சமூகம் இதுவரை கவனிக்கவே இல்லையென்றார். 2023 ஜூலை மாதம் அரசு தொடங்கிய "வாசிப்பு இயக்கம்" திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, இந்தக் கதைகள் மற்றும் புத்தகங்களையும் அதன் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இது மிகமுக்கியமானது, ஏனென்றால் மகிழ்நிலா சரவணனுக்கெழுதிய கடிதம் போலவே, அந்தக் கதைகள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை காட்டுகிறது. “இலக்கியம் தீர்வல்ல. ஆனால் அது ஒரு தொடக்கம்,” என்கிறார் சரவணன். “ஒரு புத்தகம் ஒரு குழந்தையின் மனத்தில் ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாக இருந்தால், அது போதுமானது. ஏனெனில், சாதி மௌனத்தின் வழியேதான் நிலைத்து நிற்கிறது. அந்த மௌனத்தை ஒற்றைக் கேள்வியால் தகர்த்தெறிய முடியும்.” நன்றி - Frontline On Line Magazine
- Adolescence web series - 2
காவலர்கள் ஜெமியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். காவல் நிலையம் எங்குள்ளது என்ற விவரத்தை ஜெமியின் பெற்றோரிடம் சொல்லி அங்கு வரச் சொல்கிறார்கள். செல்லும் வழியெங்கும் ஜெமி, "நான் எதுவும் செய்யவில்லை!" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். குரலில் பயமும் நடுக்கமும். கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. பதிமூன்று வயதுக் குழந்தை. வளரிளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். உடலிலும் உள்ளத்திலும் பட்டாம்பூச்சி பறக்கும் மாற்றங்கள். வண்ணமயமான எண்ணங்களின் காலம். நண்பர்களோடு பேசிச் சிரித்த எல்லாமே உண்மை என்று நம்பும் பருவம். சிரமமே இல்லாமல் எல்லாமும் எதிரே வரும் என்ற கானல் நம்பிக்கையின் பருவம். இது கனவிலும் எதிர்பாராத பேரதிர்ச்சி. ஜெமி மட்டுமல்ல எந்த வயதினர் ஆனாலும் தவறு செய்து சிக்கிக் கொண்டால் அழுது புலம்புகிறோம். நாம் செய்யும் போதே தவறு என்று தெரியும். என்ன தண்டனை என்றும் தெரியும். குழந்தைகளுக்கு இது தெரியாது. எது தவறு? தவறு செய்தால் பிறரையும் நம்மையும் எவ்வாறு பாதிக்கும்? என்ன தண்டனை? என்பவை குறித்துக் குழந்தைகள் எங்கு தெரிந்து கொள்வார்கள்? இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் வளர்ந்த மாதிரியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். குழந்தைகள் கேள்விகளை எழுப்பும் போது செய்வதறியாது திகைக்கிறோம். ஜெமியின் அப்பாவும் தவிக்கிறார். அம்மாவும் அக்காவும் அழுகிறார்கள். எங்கள் பையன் நல்வவன். தவறு செய்யவே மாட்டான். ஏதோ தவறுதலாக காவலர்கள் ஜெமியைக் கைது செய்திருக்கிறார்கள் என்று அவன் பெற்றோர் நம்புகிறார்கள். ஜெமியின் அப்பா அவனிடம் தனியே கேட்ட போதும் ' தவறு எதுவுமே செய்யவில்லை' என்று ஜெமி கூறுகிறான். அப்பா அவனை முழுமையாக நம்புகிறார். காவல்நிலையத்திற்கு ஜெமியை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவல் அலுவலருடன் சமூக சேவகர் ஒருவரும் இருக்கிறார். "ஜெமி, பதட்டப்படாதே. காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது நன்றாகத் தெரிந்த பதிலைச் சொல்லு. குழப்பமாக இருந்தால் No comments என்று சொல். உன்னுடன் வக்கீல் ஒருவர் இருக்கலாம். உனக்கு நம்பிக்கையான மூத்தவர் ஒருவரும் இருக்கலாம்." என்று காவல் அலுவலர் சொல்கிறார். காவல் நிலைய நடைமுறைகள் முடிந்து ஜெமியை ஓர் அறையில் இருக்க வைக்கிறார்கள். ஜெமியின் பெற்றோர் வேறு அறையில் இருக்கிறார்கள். காவல் நிலைய நடைமுறைகறையும் விசாரணை முறைகளையும் தனியே எழுதலாம். குழந்தை உரிமைகளை மீறிவிடாமல் கவனமாக அனைத்தும் நடைபெறுவது காவல்துறையினருக்குப் பாடம். ஜெமியின் அப்பாவுக்குத் தெரிந்த வழக்கறிஞர் யாரும் இல்லை என்பதால் அரசின் சார்பாக ஒருவரை வரவழைக்கிறார்கள். நம்பிக்கையான மூத்தவராக என் அப்பா என்னுடனேயே இருக்க வேண்டும் என்று ஜெமி கூறுகிறான். விசாரணை அறை. ஜெமி, அப்பா, வழக்கறிஞர் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே ஜெமியைக் கைது செய்த இரண்டு காவல் அதிகாரிகள். இந்த விசரணை முழுவதும் ஒலி ஒளி வடிவங்களில் பதிவு செய்யப்படும் என்று சொன்ன பிறகு விசாரணையைத் தொடங்குகிறார்கள். ஜெமி, நன்கு படிப்பவன். திறமையானவன். அவனுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கம் இருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படப்பதிவுகளைக் காட்டி விசாரிக்கிறார்கள். ஜெமி நிதானமாகப் பதில் சொல்கிறான். சிக்கலான கேள்விகளுக்கு கவனமாக No comments சொல்கிறான். ஜெமி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான விளம்பரப் பெண்களின் படங்களைப் பகிர்ந்திருக்கிறான். அவனது பாலுணர்வு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறான். அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இரண்டு பேர். ஒன்றாகப் பள்ளியில் படிப்பவர்கள். மூவரும்தான் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். மூன்று பேர் மட்டுமே நட்பாக இருக்கும் மும்முனை நட்பு சிக்கலானது என்று உளவியலில் கூறுகிறார்கள். சமத்துவம் இல்லாத மும்முனை நட்பு ஏராளமான நடத்தைச் சிக்கல்களை உருவாக்குகிறது. ஒரு சிறுமியின் படத்தைக் காட்டுகிறார்கள். இவள் பெயர் கேட்டி. உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியும், என் வகுப்பில் படிக்கிறாள் என்று ஜெமி சொல்கிறான். இவளைத்தான் நேற்று இரவு வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கொலை செய்திருக்கிறார்கள். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து. கடுமையான காயங்களால் அங்கேயே இறந்துவிட்டாள். இதைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். எதுவும் தெரியாது என்று ஜெமி கூறுகிறான். நேற்று இரவு வெளியே சென்றாயா என்று கேட்கிறார்கள். ஆம் என்று ஜெமி கூறுகிறான். நண்பர்களோடு வெளியே சென்று விட்டு நெடுநேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். ஒரு காலணியின் படத்தைக் காட்டி அது அவனுடையது என்பதை உறுதி செய்கிறார்கள். CCTV பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறார்கள். கேட்டி சென்ற வழியில் சிறிது நேரம் கழித்து ஜெமி சென்றிருக்கிறான். அவனுடைய உடைகளும் உருவமும் காலணிகளும் அது அவன் தான் என்று உறுதி செய்கின்றன. இறுதியாக இந்தக் காணொலியைப் பாருங்கள் என்று காவலர்கள் CCTV காட்சியைக் காட்டுகிறார்கள். ஜெமியின் முகம் இறுகுகிறது. அழத் தொடங்குகிறான். புதிர்கள் தொடரும்...
- சடைக்கணவாய்க்கு எத்தனை கால்?
ஆக்டோபஸ் (Octopus) என்ற கடல் உயிரியை அனைவரும் அறிந்திருப்போம். தமிழில் இது சடைக்கணவாய் அல்லது பேய்க்கணவாய் என்று அழைக்கப்படுகிறது. பேய்க்கணவாய் என்றதும் பயந்துவிடவேண்டாம். இதன் உடல் நிறமும் எட்டு உறுப்புகளும் கொஞ்சம் விநோதமாக இருப்பதால் இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இது கடமா என்றும் அழைக்கப்படுகிறது. "பேய்க்கணவாய்க்கு எட்டு கால் இருக்கும்" என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அட, இவ்வளவு ஏன்? "ஆக்டோபஸ்" என்ற ஆங்கிலச்சொல்லுக்கே "எட்டுக்கால்கள் கொண்ட உயிரி" என்றுதான் பொருள். ஆனால் உண்மையில் சடைக்கணவாய்க்கு எட்டு கால்கள் கிடையாது. என்ன விளையாடுகிறீர்களா என்று கேட்கத் தோன்றுகிறதா? குழப்பம் வருகிறதா? மீண்டும் ஒருமுறை சடைக்கணவாயின் படத்தைப் பார்த்து எத்தனை கால்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? எட்டுதானே இருக்கு என்று யோசிக்கிறீர்களா? எட்டு என்பது சரிதான், ஆனால் அவை கால்கள் அல்ல. கைகள்.தலை சுற்றுகிறதா? கொஞ்சம் விளக்கமாகப் பேசலாம். கைகளின் செயல்பாடுகள் என்ன? பொருட்களைப் பற்றிக்கொள்வது, தொட்டுப் பார்ப்பது. கால்களின் வேலை என்பது நம் உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வது. இங்கே விலங்குகளைப் பொறுத்தவரை "நடப்பது" என்று சொல்லிவிட முடியாது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால், கங்காரு, தவளை போன்ற பல உயிரிகள் நடப்பதே இல்லை. ஆனாலு இவை இடம் பெயர்கின்றன. அவற்றின் கால்கள் குதிப்பது, தாவுவது போன்ற செயல்பாடுகளின்மூலம் அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்கின்றன. ஆகவே கால்களின் வேலை அதுதான் - நாம் இடம்பெயர் உதவுவது. எது பற்றிக்கொள்ள, தொட்டுப் பார்க்க உதவுகிறதோ அது கை. இடம் பெயர எது உதவுகிறதோ அது கால். இதுதான் பொது வரையறை. இப்போது நாம் சடைக்கணவாய்க்கு வருவோம். சடைக்கணவாயின் தலையில் இருந்து தொங்கும் எட்டு உறுப்புகள் கைகளைப் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றன. இரை விலங்குகளைப் பிடிப்பது, சுற்றியுள்ளவற்றைத் தொட்டுப் பார்ப்பது, கைகளின் நுனியில் இருக்கும் உணர்வு செல்கள் மூலமாக வேதிப்பொருட்களைத் தெரிந்துகொள்வது, பாறைகளை உருட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்வதற்குக் கணவாய்கள் கைகளைப் பயன்படுத்துகின்றன. சரி, பேய்க்கணவாய் நீந்தும்போது என்ன ஆகும்? பேய்க்கணவாய்கள் அந்த எட்டு உறுப்புகளை வைத்து நீந்துவதில்லை. உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றி அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையால் நீந்துகின்றன. இதை Jet propulsion என்பார்கள். சரி, பேய்க்கணவாய் தரையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறோமே, அது நடப்பதுபோலத்தானே? சில நேரம் மிக அரிதாக இவை கடலின் தரைப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த எட்டு உறுப்புகளும் நகர்வதற்கு உதவுகின்றன என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான நேரம் இந்த எட்டு உறுப்புகளும் என்ன செய்கின்றன என்பதைத்தான் பார்க்கவேண்டும். ஆகவே இந்த எட்டு உறுப்புகளும் கைகளைப் போலவே செயல்படுவதால் இவற்றைக் "கைகள்" என்றே சொல்லவேண்டும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா? ஒரு சில கணவாய் விஞ்ஞானிகள், "இந்த எட்டு கைகளில் இரண்டு கைகள் மட்டும் கால்களைப் போல சில நேரம் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அவற்றைக் கால்கள் என்று சொல்லலாம்" என்று சொல்லி வருகிறார்கள். மற்ற விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. இவர்களும் தொடர்ந்து விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கும்வரை இவற்றைக் கைகள் என்றே சொல்லலாம். இனிமேல், சரியாக சொல்வீர்கள்தானே, எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். "சடைக்கணவாய்க்கு எட்டு கைகள், இவற்றுக்கு இருப்பதை கால் என்று சொல்லமுடியாது". அதுசரி, அதென்ன எட்டு? ஏன் இவற்றுக்கு ஆறு கால்களோ ஏழு கால்களோ ஒன்பது கால்களோ இல்லை? என்ன காரணமாக இருக்கும்? யோசித்து பதில் அனுப்புகிறீர்களா? காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. விரைவில் நானே
- ஆரம்பக் கல்வி படக்கதைகள்
தற்போதைய பாடப்புத்தகங்கள், அதிலும் ஆரம்பக்கல்வி பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். இலக்கியத்தில் காட்சிப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓவியங்களை நவீன சிறார் இலக்கியத்தின் ஒரு பகுதியாக நாம் பார்ப்பதுபோல், பாடப்புத்தகங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓவியங்களே பாடத்தின் பெரும்பகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. நவீன மொழிக்கற்றலின் முக்கிய அம்சமாக கதைகளே உலகம் முழுவதும் முன்னிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஆரம்பக் கல்வி பாடப்புத்தகத்திலும் கதை மிகுதியாக ஆக்கப்பட்டதுடன் படக்கதைகளுக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. பாடங்களும், ஓவியங்களும்/படங்களும் என பாடப்புத்தகம் காட்சிப்படுத்தலின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், இலக்கியமாகவும் இலக்கியத்தின் பகுதியாகவும் எப்பொழுதும் செயல்பட்டுவருகின்றன. ஓவியங்களுடன் எழுத்தும் இணைந்து புத்தகங்களில் அடுத்தடுத்த நிலைக்கு பயணிக்கின்றன. மொழியினைப் பயிற்றுவிக்கவும் புத்தகத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வண்ண ஓவியங்களும் படங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஓவியங்களும் படங்களும் ஒரு பொருளாக, மனிதராக, உறவாக, காட்சியாக... என விதம்விதமாக புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசையில் ஓவியங்களும் படங்களும் நிறைந்த புத்தகத்தைக் குழந்தைகள் ஆர்வத்துடன் கையில் எடுப்பார்கள். புத்தகத்துடன் தனியாக நேரத்தை செலவிடுவார்கள். ஒரு குழந்தையும் மற்றொரு குழந்தையும் சேர்ந்து அமர்ந்து மகிழ்ச்சியோடு பேசிக்கொள்வதைப் பார்க்கலாம். இவ்வரிசையில்தான் புத்தகத்தில் பார்த்த காட்சிகளைக் கதையாக விவரிக்கின்றனர். மொழிக் கற்றலில் ஓவியங்களில் உள்ள படங்களைப் கவனித்து பார்ப்பார்கள். பார்த்த படங்களை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுவார்கள், படங்களைப் பற்றி பேசுவார்கள் / படங்களை வார்த்தையாக மாற்றுவார்கள் / படங்களைப் பார்த்து வரைவார்கள். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற மிக முக்கியமான மொழித்திறன்களை வளர்த்தெடுப்பதில் படங்களின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. இதனால் ஆரம்பக்கல்வியில் அதிலும் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்தில் எழுத்தைவிட அதிகமாகப் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடப்புத்தகங்களில் ஓவியங்களும், படங்களும், செயற்படங்களும், காட்சிப்படங்களும், கதைப்படங்களும், படக்கதைகளும் என ஓவியங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். படக்கதைகளை மாணவர்களின் மொழி நிலை, வகுப்பிற்கு ஏற்ப எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்: படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது. கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம். படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்: படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது. கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம். படக்கதை வாசித்தல்: படங்கள் கதையாக இருக்கும். கதையை வழிநடத்தும். சிறு வார்த்தைகளும் வாக்கியங்களும் படத்தின் உதவியோடு கதை வாசிப்பிற்குள் அழைத்துச்செல்ல உதவும். படத்தின் உதவியோடு வார்த்தைகளை மாணவர்கள் படிப்பார்கள். ஆசிரியர் வாசித்ததை மனதில் வைத்து படிப்பார்கள். வார்த்தையைக் காட்டி, ஆனால் அதில் இல்லாத ஒன்றை உச்சரிப்பார்கள். ஆர்வமும் பழக்கமும் கூடக்கூட வாசிப்பு நிலைக்கு படக்கதை அழைத்துச்செல்லும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படக்கதைகள்: நான்காம், ஐந்தாம் வகுப்புகளிலும் படக்கதைகள் உள்ளன. பெரிய வாக்கியங்கள் அதிக பக்கங்கள், கனமான பாடப்பொருள்கள் என அடுத்தநிலைக்கு அவை நகர்ந்துள்ளன. ஆனாலும் வாசிப்பு என்பது மாணவர்களிடம் கவனமாக எடுத்துச்செல்லப்படும் ஒரு நிகழ்வு. படிப்படியாக மாணவர்களுக்கு உதவவேண்டிய ஒன்று. அதற்கான திட்டங்களில் படக்கதையின் பங்களிப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். படக்கதைகள் கவனிக்கப்பட வேண்டியவை: ஒவ்வொரு வகுப்பிலும் பாடமாக நான்கு படக்கதைகள்வரை இடம்பெற்றுள்ளன. அதோடு பயிற்சியிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கதைகள், அதிலும் படமே கதையாக வருவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேவேளை பாடமாக, பாடத்தின் கருப்பொருளை மையப்படுத்தியதாக வரும்பொழுது இலக்கியத்தின் தன்மை குறைந்து காணப்படுகிறது. வலிந்து மேற்கொள்ளும் போதனையாகிறது. அதோடு இதன் மொழி சார்ந்து இன்னும் பேசப்பட வேண்டியுள்ளது. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றலில் பெரும் சிரமத்தை பாடப்புத்தகத் தமிழ் ஏற்படுத்துகிறது என்பதை மொழிப்பாட வடிவமைப்பு சார்ந்து பலர் வலியுறுத்திவருகின்றனர். குழந்தைகளுக்கு புரியும்படியான மொழி, புழக்கத்திலுள்ள மொழி, அவர்களின் அனுபவத்தோடு இணைந்த மொழி ஆகியவை பாடப்புத்தகத்தையும் பாடங்களையும் வகுப்பறையையும் சென்றடைய கதை சார்ந்த மொழி பேருதவியாக இருக்கும். அது முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டிய அவசியத்தை நாம் திரும்பத்திரும்ப பேச வேண்டியுள்ளது.
- லண்டனிலிருந்து அன்புடன் -3
உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பள்ளி ஆண்டு விழா என்றால் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். விதவிதமான விளக்குகள், வண்ணமயமான ஆடைகள், ஆடல், பாடல், நடனம், நாடகம் என எவ்வளவு அழகாக இருக்கும். “மேடை நாடகம்” என்பதை நாம் எல்லோருமே ஆண்டு விழாவில்தானே பார்த்திருப்போம். ஆனால் பாருங்கள்! லண்டனிலுள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடப்பதில்லை. ஆண்டுவிழாக்கள் இல்லாதது பெரிய வருத்தம்தான். இருந்தாலும் குழந்தைகள் நடிக்கும் நாடகத்திற்கென தனியே நிகழ்வுகள் பள்ளிகளில் நடக்கும். நாடகத்தினைக் காணப்பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள். ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்கள் என்றால், சுமார் 15 நிமிட அளவில் அந்த நாடகம் அமையும். அதுவே உயர் வகுப்புகள் என்றால், 1.30 மணி நேர அளவில் நாடகம் நடக்கும். இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள். கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அவர்கள் எடுத்து கொள்வார்கள். அப்படிப் பெற்றோராக நான் பார்த்த நாடகம் மூலம் அறிமுகமான புத்தகம் தான் “Handa’s Surprise”. ஹான்டா எனும் சிறுமி, தனது தோழியான அகேயோவைச் சந்திக்கப் பக்கத்துக் கிராமத்திற்குச் செல்கிறாள். தனது தோழிக்கு இன்ப அதிர்ச்சி தர அவள் ஆசைப்படுகிறாள். அகேயாவிற்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று எண்ணி ஏழு விதமான பழங்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்கிறாள். “நான் தரப் போகும் இந்தப் பரிசு அகேயாவிற்கு கட்டாயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று அவள் எண்ணிக்கொண்டே செல்கிறாள். கூடையைத் தலையில் வைத்துச் செல்லும் வழியில், குரங்கு ஒன்று வருகிறது, அது கூடையிலுள்ள வாழைப்பழத்தை எடுத்துச் சென்று விடுகிறது. அடுத்து வான் கோழி வருகிறது, கொய்யாப் பழத்தை எடுத்துச் சென்றுவிடுகிறது. இப்படியாக வரிக்குதிரை, யானை, ஒட்டகச்சிவிங்கி, மான், கிளி என அடுத்தடுத்து வரும் விலங்குகள் ஒவ்வொன்றாகப் பழங்களை எடுத்துச் சென்று விடுகின்றன. ஹான்டா, தனது தோழி மகிழ்ச்சி அடையப் போகிறாள் என்பதைக் கற்பனைச் செய்து கொண்டே இருந்ததால், பழங்கள் காணாமல் போனதை அவள் அறியவில்லை. வெறும் கூடையை அவள் தலையில் வைத்துச் சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது, அங்கு ஒரு ஆடு ஓடி வந்துகொண்டிருந்தது. அது வேகமாக வந்து, ஒரு ஆரஞ்சு பழ மரத்தை மோதியது. அந்த ஆரஞ்சு மரத்தைத் தான் ஹான்டா கடந்துகொண்டிருந்தாள். மரத்திலிருந்து விழுந்த ஆரஞ்சு பழங்கள் எல்லாம் ஹான்டாவின் கூடையில் விழுந்தன. இந்தக் கதை எதுவும் அறியாத ஹான்டா, அகேயாவைக் கண்டதும், “உனக்கு நான் ஒரு surprise வைத்திருக்கிறேன்” என்று சொல்லி கூடையைக் கீழே வைக்கிறாள். “ஓ! ஆரஞ்சு பழங்கள்…எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஆரஞ்சு பழங்கள். இது எனக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான் ஹான்டா” என அகேயா மகிழ்ச்சியில் குதிக்கிறாள். “நாம் வேறு பழங்கள் அல்லவா கொண்டு வந்தோம், கூடையில் ஆரஞ்சு பழங்கள் எப்படி வந்தன” என ஹான்டா அதிர்ச்சி அடைகிறாள். என்று கதை முடிகிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் & ஓவியர் “Eileen Browne”. இவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தக் கதை ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதாக அவர் வரைந்திருப்பார். புத்தகத்தின் அட்டைப்படமும் சரி, அதன் உள் ஓவியங்களும் சரி, பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்துவிடும். இங்கிலாந்தில் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர் என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன். அதனால், பல்வேறு நாடுகள் குறித்தும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை குறித்தும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் “Handa’s Surprise” புத்தகம் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. இந்தப் புத்தகம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. 30 வருடங்கள் கடந்து இன்றும் இந்தப் புத்தகம் கொண்டாடப்பட்டு வருகிறது.












