top of page

குழந்தை இலக்கியம் பேசும் சாதி

ree

ஆங்கிலத்திலிருந்து தமிழில் - வே.சங்கர்


தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் சாதி பற்றிய கள்ளமௌனங்களை வேரறுத்து உரத்தகுரலில் பேசத்தொடங்கியிருக்கிறது.


”தற்போது, தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தோன்றியிருக்கும் புதிய அலை, புனைக்கதைகள் மற்றும் மீளுருவாக்கம் செய்யப்படும் புராணக்கதைகள் மூலம் சாதியை நேரடியாக எதிர்கொள்கிறது. இவை இளம் வாசகர்கள் மத்தியில் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கின்றன”.


இளம் வாசகர்கள், நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் அநீதிகளைப் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த சிறார் கதைகளின் வழியாக, சாதி ஆணவங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறத்தொடங்குகிறார்கள். அவை நீண்டகாலமாக நிலவிவரும் சமூக மேலதிகார வர்க்க அமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.


இது வெறும் தேவதைக்கதைகள் அல்ல. நீதிக்கதையும் அல்ல. சாதி பற்றிய கதை.


திருச்சி மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மகிழ்நிலா ‘நீலப்பூ’ என்ற புத்தகத்தை வாசிக்கும்வரை, இவ்வுலகம் மீதான பார்வை இத்தனை பெரிதாக மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது மாறியது.


அவள் வாசித்த ‘நீலப்பூ’, என்ற நாவல் மகிழ்நிலாவின் வயதொத்த கீர்த்தியின் கதையைச் சொல்கிறது. சாதிவெறியால் உண்டான வன்முறையால், அவளது கிராமமே எவ்வாறு நாசமாகிறது என்பதை அவள் நேரில் காண்கிறாள். அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவுடன், மகிழ்நிலா, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு ”ஒரு அமைதியான கிராமமே சாதி வன்முறையால் அழிந்து, அப்பாவி மக்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகிப் போகிறதென்றால், உலகம் ஒரு பேரழிவை நோக்கிப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது” என்று ஒரு உருக்கமானக் கடிதம் எழுதியிருந்தாள்.


அதன் உடனடித் தாக்கம்:

பெரும்பாலும், பெரியவர்கள்தான் சாதி எதிர்ப்பு இலக்கியங்களையும், அதன் அரசியல் நுணுக்கங்களையும் வாசிக்கிறார்கள். ஆனால், இப்பொழுது, புதிய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள், சிறார்களுக்கான கதைகளை எழுதுகிறார்கள். இவர்களது கதைகள் சாதி ஒடுக்குமுறையை அடையாளம் காணவும், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வையும் வழங்குகின்றன.

’நீலப்பூ’ கதையில், கீர்த்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முக்கியமான சம்பவம், வேறு சாதியைச் சேர்ந்த அவளது நண்பனும் வகுப்புத் தோழனுமான அருண், ஒரு கூட்டத்துடன் வந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கி நாசமாக்கும் காட்சி. அதன் தொடர்ச்சியாக வன்முறை மூண்டு கிராமத்தையே அழிவுக்குள் இட்டுச்செல்கிறது. இருப்பினும், கீர்த்தி கொஞ்சமும் பயமின்றி தனியாக அருண் குடியிருக்கும் பகுதிக்கு நடந்து சென்று, அவனது நோட்டுப்புத்தகத்தைத் திருப்பித் தருகிறாள். அவளது துணிச்சலான பயணம் மற்றும் அதில் சந்திக்கும் மனிதர்கள்தான் இந்தக் கதையின் மையக்கரு.


இந்தப் புத்தகம் எழுப்பும் கூர்மையான கேள்விகள்:

• சாதி அடிப்படையிலான வன்முறையால் யாருக்கு லாபம்?

• ஏன் தலித் மாணவர்களின் கல்வி வளங்கள் எப்போதும் முதல் இலக்காக தாக்கப்படுகின்றன?

• சாதி எப்படிக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறது?


படங்களுடன் வெளியான நீலப்பூ என்ற இந்நாவல் வானம் பதிப்பகத்தால் டிசம்பர் 2021-ல் வெளியிடப்பட்டது.


தமிழ் (குழந்தைகள்) சிறார் இலக்கியம், ஆங்கில சிறார் இலக்கியத்தில் உள்ளதைப் போலவே, 3-8 வயது (மழலை இலக்கியம், தொடக்கநிலை வாசகர்களுக்கானது), 8-12 வயது (சிறார் இலக்கியம், மத்தியநிலை வாசகர்களுக்கானது), 12-18 வயது (பதின்பருவ இலக்கியம்,அல்லது வளர் இளம் பருவ இலக்கியம்) ஆகிய வயது பிரிவுகளுக்கேற்ப அமைந்துள்ளது. சாதிப்பாகுபாடு குறித்த கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு பிரிவுகளில்தான் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும், அந்தக் கதைகளில் வரும் மையக் கதாபாத்திரங்கள், பெரும்பாலும், வாசகர்களின் வயதொத்தவர்களாகவே இருப்பார்கள்.

தன் 13 வயது மகனுக்காக ‘நீலப்பூ’ புத்தகத்தை வாங்கிய கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோரில் ஒருவர் Frontline–க்குக் கூறியதாவது: “ஒரு குழந்தை பத்துவயது நிறைவடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சாதியைப் பற்றிய பரந்த உரையாடல்களைத் தொடங்கலாம். ஆனால், அவர்கள் தங்களது கருத்துக்களைச் சிந்திக்கத்தொடங்கும் பதின்ம வயதில், குறிப்பாக இடஒதுக்கீடு பற்றிக் கேள்விப்படும் காலகட்டத்தில், அவர்களுடன் அது குறித்தான தீவிரத்தன்மையைப் பேசுவது மிகமிக அவசியம்”

பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன், இந்த வகை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். “நான் பல பரிமாணங்களுடன் கூடிய கதையை எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், குழந்தைகள் அது பற்றிப் புரிந்துகொள்ளக் கொஞ்சமாவது போராட வேண்டும். அப்போதுதான், அது குறித்தான புரிதல் ஆழமாக அவர்கள் மனதில் பதியும்” என்று Frontline-க்கு கூறினார்.

2022-ல் எழுத்தாளர் விழியன் எழுதிய ’தேன்முட்டாய்’ (புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு) கதையில், ஒரு சாதி வெறிகொண்ட கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுக்கும் சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தக் கதை தமிழ்நாட்டில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொலியின் தழுவலாக அமைந்திருந்தது.

தர்மபுரி, விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகள்தான் ‘நீலப்பூ’ கதையின் அடிநாதமாக விளங்கியது.

விஷ்ணுபுரம் சரவணனின் ‘கயிறு’ என்ற சிறுநூல் 1 லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுத்தீர்ந்தது தமிழ் சிறார் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்தப் புத்தகம் பெரியார் ஈ.வே.ராமசாமியின் மேற்கோளுடன் தொடங்குகிறது:


“எந்தவொன்றையும் சுதந்திரமாக, சுத்த அறிவுகொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி. அப்போது தான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்”

’கயிறு’ என்ற கதையில், ஏழாம் வகுப்பு படிக்கும் செழியனை ஒரு கடைக்காரர் குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்தும் கயிறு ஒன்றைக் கையில் அணியச் சொல்கிறார். அவனது தாய் வளர்மதி, தெளிவாகவும், தீவரமாகவும் செயல்படும் கதாப்பாத்திரம். பொதுவாகச் சொல்லப்படும், ‘செய் / செய்யாதே’ என்று கட்டளையிடும் பெற்றோரைப்போல் இல்லாமல், அவனுள் ’ஏன்?, எதற்கு?’ என்ற கேள்வியைக் கேட்க ஊக்குவிக்கிறாள். முடிவில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் செழியன் அதற்கேற்பத் தானாகவே செயல்படுகிறான்.

சரவணன், சாதியைச் சரியான சமூகப் பின்னணியில் வைத்துப் பேசுகிறார். கதையின் முடிவில் நீதிபோதனை செய்வதைத் தவிர்க்கிறார். உண்மையை அதன்போக்கில் உணரச்செய்கிறார். ’தேன்முட்டாய்’ சமூகப் புறக்கணிப்பை நேரடியாக எதிர்கொள்ளும் கதை. ஆனால், ’கயிறு’ சாதிப் பிரிவினையை வெளிப்படையாகக் காட்டும் கதை. இவை இரண்டும் தற்போது மிகமுக்கியமான நூல்கள். ஏனெனில், சமீபத்தில் குறிப்பாகத் திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஆகஸ்டில், திருநெல்வேலி நாங்குநேரியில், ஒரு தலித் சிறுவனும் அவனது சகோதரியும் உயர்சாதி மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. அவர் 2024 ஜுன் மாதத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ”கையில் கட்டப்படும் கயிறு, நெற்றியில் வைக்கப்படும் குறியீடுகள் போன்ற சாதி அடையாளங்களைத் தடைசெய்யவேண்டும். பள்ளிகளின் பெயர்களிலிருந்து சாதி சம்பந்தப்பட்டப் பட்டங்களை அகற்றவேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

இங்கேதான் சாதிஎதிர்ப்புக்கதைகள் ஒரு இலக்கிய எதிர்மருந்தாக மாற்றமடைகின்றன.


சரிதா ஜோவின் ‘சாதித்த ஜோதி’ என்ற சிறுகதை, சின்னத்துரையின் நிஜவாழ்க்கையிலிருந்து உருவாகியுள்ளது. இதில் சாதி வன்முறைத் தாக்குதலில் தன் காலை இழந்த ஒரு சிறுமி பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் தனது திறமையை நிரூபிக்கிறாள். உண்மையில், சின்னத்துரையும் பல எதிர்ப்புகளைத் தாண்டி, 12-ஆம் வகுப்பில் 496/600 மதிப்பெண்கள் பெற்று தமிழக முதல்வரிடம் பாராட்டுக்களைப் பெற்றார்.


எழுத்தாளர் விழியன் எழுதிய மலைப்பூ (புக்ஸ் ஃபார் சில்ரன்,2021) என்ற சிறார் நாவல் கல்வியில் உள்ள அமைப்புசார் சமத்துவத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறது. இக்கதையின் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் லஷ்மி, மலைவாழ் பகுதியிலிருந்து தினமும் ஐந்துகிலோமீட்டர் தூரம் நடந்தும், மிதிவண்டி மற்றும் பேருந்தில் பயணித்தும் பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலும் ஆறாம் வகுப்பு சிறுமி. அவளது வீட்டில், கழிப்பறையோ, மின்விசிறியோ இல்லை. அவள் நகரப்புறத்திலிருந்து கல்விகற்க வரும் மற்ற மாணவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அவளது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டிருப்பதை உணர்கிறாள்.


எழுத்தாளர் விழியன், கதை ஓட்டத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (NCSC) ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியிருக்கிறார். லட்சுமி என்ற கதாபாத்திரம், திண்டுக்கல் அருகே உள்ள சின்னமலைப் பகுதியில் விழியன் சந்தித்த உண்மையான ஒரு சிறுமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, பலமுறை மறுபதிப்பாகியிருக்கிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறனின் கவனத்தையும் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உறுதியான நம்பிக்கையுடனும் சமூக நீதியுடனும் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள், குழந்தைகளுக்குக் கல்வி செய்யத்தவறிய மற்ற விசயங்களை அதிகம் கற்பிக்கின்றன. பெற்றோர்கள் காலம்காலமாகக் கொண்டிருக்கும் தங்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்றன. “சாதியைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்திக்கச் செய்வதற்காக, குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். சாதி எண்ணங்களில் அதிகமாக ஊறிப்போனவர்கள் அவர்கள்தான்.” என்று விழியன் கூறுகிறார்.


இதிகாசங்கள் மீதான மீள்பார்வை.


சரவணன், விழியன் மற்றும் சரிதா ஜோ ஆகியோர் சாதி சமத்துவக் குறைபாடுகளையும், அதன் சமூகத்தாக்கத்தையும் பதிவுசெய்கின்ற அதே வேளையில், பாலசாஹித்ய புரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர், இந்து இதிகாசங்களில் காணப்படும் சாதிய அடுக்குகளில் உள்ள அமைப்பை நேரடியாக கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம், அதன் மீதான விவாதத்தை மேலும் ஒரு படி முன்னேற்றுகிறார்.


கட்டை விரலின் கதை (வானம் பதிப்பகம், 2023) எனும் நூலில், உதயசங்கர் மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனின் கதையை மறுபார்வையிடுகிறார். ஏகலைவனின் குருபக்தியைப் போற்றும் பாரம்பரியக் கதையமைப்பை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒரு பழங்குடி வில்வீரனாகிய ஏகலைவனிற்கு, தேவதத்தனாகிய துரோணாச்சாரியாரின் பயிற்சி அவசியமா?” என்ற கேள்வியை நம்முன்னால் வைக்கிறார்.


இவர், குறிப்பாக 1990களுக்குப் பிறகு, இந்துத்துவா வலதுசாரிகளால் சாதியமேலாண்மையைப் புனிதப்படுத்த இதிகாசங்கள் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கிறார்.. ஏகலைவன் மற்றும் துரோணாச்சாரியாரின் கதை பக்திப்போர்வையின்கீழ் சாதிக்கொடூரத்தைக் மறைக்க நுட்பமாகப் புனையப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுப்பார்வையாக, ஒடுக்கப்பட்டோர் வரலாற்று எதிர்வாதத்தைக் எழுத விரும்பினேன்,” என்று கூறும் இவருக்கு, இந்த எண்ணம் தமிழ்த் தெருநாடகக் கலைஞர் பிரளயன் எழுதி இயக்கிய ’உபகதை’ என்ற நாடகத்தை பார்த்த பிறகு தோன்றியிருக்கிறது.


’பறம்பின் பாரி’ என்ற நூலில், சங்க காலத் தலைவன் பாரியின் எழுச்சியை உதயசங்கர் ஆராய்கிறார். அதோடு, ஆரியர்களின் இடப்பெயர்ச்சி, திராவிட அடையாளம், மற்றும் ஆதிப்பொதுவுடமைச் சமூகத்திலிருந்து தனியுடமைச் சமூகம் நோக்கிச் செல்லும் பரிணாம மாற்றத்தை கதைகளோடு நுட்பமாக இணைக்கிறார். கவிஞர் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு, சு. வெங்கடேசனின் ’வீரயுக நாயகன் வேள்பாரி’, மற்றும் ஆர். பாலகிருஷ்ணனின் ’சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ போன்றவற்றிலிருந்து ஆதாரத்தைத் திரட்டித்தருகிறார்.


தீண்டாமை என்ற தலைப்பைத் தொடுதல்


முன்னேறிய சட்டங்கள் அமலில் இருந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை பல இடங்களில் இன்னும் பரவலாகவே காணப்படுகிறது. சாதி முறையில் மேல்அடுக்கைச் சேர்ந்த இந்துப் பெற்றோர்கள் தலித் அங்கன்வாடி பணியாளர்கள் சமைத்த உணவைத் தொட மறுப்பது முதல், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சாதிவழி அவமானங்கள் வரை பல்வேறு உருவங்களில் இது தொடர்கிறது.


சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் எழுதிய பிரேமாவின் புத்தகங்கள் (புக்ஸ் ஃபார் சில்ரன், 2024) என்ற நூலிலுள்ள கதைகள் இந்த விசயத்தை நேரடியாக எதிர்கொள்கின்றன. அதில் இடம் பெற்றுள்ள "பார்வதி அத்தையின் பொங்கல்" என்ற சிறுகதை, தலித் அங்கன்வாடி பணியாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் அவமானங்களையும் உருக்கமாக விவரிக்கிறது. இதேபோல், "ஆறறிவு" மற்றும் "மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டா?" போன்ற கதைகள், சாதி சார்ந்த மேலதிகாரப் போக்குகள் மற்றும் ஒன்றாக அமர்ந்து உண்பதில் உள்ள தடைகளை, சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தும் கதைகளாக உள்ளன.


தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடப்புத்தகங்களில்:

”தீண்டாமை ஒரு பாவச்செயல்”.

”தீண்டாமை ஒரு குற்றச்செயல்”.

”தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்”


என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊடக அறிக்கைகள், ”இந்தக் கொடூர நடைமுறை இன்னும் பல இடங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது” என்கிறது.


கோ.மா.கோ. இளங்கோ எழுதிய "சஞ்சீவி மாமா" (புக்‌ஸ் ஃபார் சில்ட்ரன், 2017) என்ற பாதி-புனைவுக் கதையில், ஒரு தலித் துப்புரவுப்பணியாளருக்கும், பேச்சிராசு என்ற 11 வயது சிறுவனுக்கும் இடையிலான நட்பைக் கருணையுடன் படம் பிடிக்கிறது. இது எழுத்தாளர் இளங்கோவின் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டது. சாதிக்கொடுமையையும் கருணையின் சாத்தியத்தன்மையைக் குழந்தைகள் உணரக்கூடிய கதையாக இது அமைந்துள்ளது. இதைத் தலித் அல்லாத எழுத்தாளர் ஒருவர், சாதிச்சலுகையைத் தெளிவாக உணர்ந்து, ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதியிருக்கிறார்.


முந்தைய காலப் படைப்புகள்


குழந்தைகள் இலக்கியத்தில் சாதி பற்றிய எழுத்துகள் புதிதல்ல. எஸ். ஹரிஹரன் (ரேவதி என்ற புனைபெயரில்) எழுதிய 'கொடி காட்ட வந்தவன்' (1978) கதையின் ஆரம்பக் காட்சிகளைச் சரவணன் குறிப்பிடுகிறார். இந்நாவல், ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த, போராளியான குழந்தை மோகனைப் பின்தொடர்கிறது. விடுதலை இயக்கத்தால் தூண்டப்பட்டு, சாதி மற்றும் சாதியில் நிலவும் வர்க்க அடுக்குகளை எதிர்கொள்கிறான்.


ஒரு துணைக்கதையில், காந்தி, தாழ்சாதிக்காரர்களுக்குக் குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை என்பதை அறிந்து, அந்த அருவியில் குளிக்காமல் விலகிச் செல்கிறார் — இது கேட்பதற்கும் வாசிப்பதற்கு மென்மையாக இருந்தாலும், பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “நான்கு வருடங்களுக்கு முன், ரேவதி சொன்னது என்னவென்றால், “அது 25,000 பிரதிகளுக்குமேல் விற்றது. அது சாதி குறித்ததாக இருந்தது. ஆனால் இன்று யாரும் அதை மேற்கோள் காட்டுவதில்லை. நானே சமீபத்தில் தான் வாசித்தேன்.” என்று சரவணன் கூறுகிறார்.


முந்தைய காலங்களில், சாதி தொடர்பான விஷயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசத் தமிழ் சிறுவர் இலக்கியங்கள் எப்போதாவதுதான் தோன்றின; பூந்தளிர், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களில் அல்லது சில தொகுப்புகளில்தான் அவை இடம் பெற்றன. எனினும், அந்த எழுத்துகள் பெரும்பாலும் சிறுவர்களுக்கான முக்கிய வாசிப்பாக மாற்றப்படவில்லை. இன்றுபோல் திட்டமிட்டு உருவாக்கப்படும், தொடர்ந்து வளரும் சாதி எதிர்ப்பு இலக்கிய மரபு அப்போது இல்லவே இல்லை.


எழுத்தாளர் தெய்வசிகாமணி சாதி எதிர்ப்பு அரசியலை சிறுவர் இலக்கியங்களில் எழுதியிருக்கிறார் என்று சரவணன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நூலின் ஒரு பிரதிகூட இன்று எங்கும் கிடைக்கவில்லை. 1987ஆம் ஆண்டு வெளியான 'வேதம் புதிது' திரைப்படத்தின் உள்ளடக்கம் அந்த நூலுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்ததாக அவரது மகன் கூறினார். இந்தவகையில், அந்தப் புத்தகம் இலக்கியத்தின் மிகச்சிலத் தடயங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது.


ஆவணப்படுத்தாமையால் ஏற்படும் பாதிப்பு:


இதுபோலக் காணாமல்போன படைப்புகள் மற்றொரு முக்கியச் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. தமிழில் குழந்தைகளுக்கான, ஆரம்ப கால சாதி எதிர்ப்புக் கதைகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.


இந்த ஆவணப்படுத்துதலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், சரவணன் சில முக்கியமான ஆரம்பக்கட்ட உதாரணங்களை கண்டறிந்துள்ளார்: “எழுத்தாளர் நா. பிச்சமூர்த்தி 1930-40களில் ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற கதையை எழுதியுள்ளார். 1950-களுக்குப் பிறகு அழ. வள்ளியப்பா ‘இரு காக்கைகள்’ என்ற கதையை எழுதியுள்ளார். இரண்டும் சாதியை மையமாகக் கொண்ட பின்னணியுடன் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களா என்பதைக் கண்டறிய முடியவில்லை, ஆனால் இருவருக்கும் சாதியைக் குறித்து எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்பது உறுதி.”


பிச்சமூர்த்தியின் எழுத்துகள் பின்னாளில் மறுபடியும் கவனிக்கப்படத் தொடங்கின. சுதந்திரப் போராளியும் சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான சி.சு.செல்லப்பா, 1977 ஆம் ஆண்டு எழுத்துப் பிரசுரம் மூலம் அவரது கதைகளை "காக்கைகளும் கிளிகளும்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். இதில், ஒரு கிளி தன்னைச் சவர்ண சாதியினர் என நினைத்து, கடுமையான புயலின்போது காக்கைகளின் கூடுகளில் தங்க மறுக்கும் ஒரு உருக்கமான கதை இடம் பெற்றுள்ளது. இயற்கைச் சீற்றத்தின் மூலம், சாதி பெருமையின் அழிவை இறுதியில் வெளிப்படுத்துகிறது.


இந்த ஆரம்ப கால எழுத்துகளில் சாதி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றிருந்தாலும், குழந்தைகளுக்கான கதைகளில் வெளிப்படையான சாதி பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் எழுதியிருக்கலாம் என பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் Frontline இதழுக்கு தெரிவித்தார். “அப்படி இருந்தாலும், கதைகளில் பயன்படுத்தப்படும் மொழி வழியில் நாம் அந்தந்தச் சாதிகளை அடையாளம் காண முடிகிறது,” என்றார் வள்ளியப்பன்.


இந்த மென்மையான அணுகுமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. ஒரு சிறார் இலக்கிய எழுத்தாளர் கூறுவதுபோல், மதிப்புமிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெ.தூரனின் கதைகளும் சமூகப் பிரச்சனைகளை வெறும் மேம்போக்காக மட்டுமே தொட்டுச்செல்கின்றன. இது இன்றைய காலத்தில் வெளிப்படையாக சாதியை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுடன் பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. சாதியை நேரடியாகக் கொண்டாடும் அல்லது எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கடந்த பத்தாண்டுகளில் தான் தீவிரமாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.


அரசியல் பதிப்பு வெளியீடுகள்


இதுபோன்ற கதைகளைப் பரவலாகப் பாரதி புத்தகாலயத்தைச் சார்ந்த "புக்ஸ் ஃபார் சில்ரன்" வெளியிட்டு வருகிறது. நகராஜன் கூறியபடி, 2002-ல் "புக்ஸ் ஃபார் சில்ரன்" தோன்றியதன் மூலம் குழந்தைகள் இலக்கியப்பதிப்பு உலகில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது, காரணம், அந்த வெளியீடு பாரம்பரியமாக சொல்லப்படும் கதைகளில் இருந்து விலகி, சமூகப் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதைகளை வெளியிடத்தொடங்கியுள்ளன.


அதேபோல், நூல்வனம் நிறுவனத்தின் வானம் பதிப்பகம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தலித் மற்றும் பெண்ணுரிமை குரல்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பதிப்புகளில் புராணங்களின் புதுமையான வருணனைகள், பெண்ணியம் மற்றும் பகுஜன் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஈர்ப்புமிக்க சிறுகதைகள் அடங்கும். 2021-ல் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் கதைசொல்பவர்கள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை நிறுவினர். இது சிறார் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கலை இலக்கியச் செயல்பாட்டாளர்களுக்கான ஒருமித்த மேடையாக உள்ளது.


முன்னேற்றப்பாதை:


இந்தப் புத்தகங்கள் தற்பொழுது நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து வருகின்றன — குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் அரசு பள்ளிகளில், முற்போக்குச் சிந்தனைகொண்ட ஆசிரியர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் மாற்று வாசிப்புக்காக எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து களஞ்சியங்களை உருவாக்கி வருகின்றனர்.


டிஜிட்டல் வடிவப் புத்தகங்கள் மற்றும் ஒலிப்புத்தகங்கள் இவற்றை மேலும் எளிதில் அணுகக்கூடியவையாக மாற்றியுள்ளன, குறிப்பாக கிராமப்புறங்களில். பல தன்னார்வலர் அமைப்புகள் மற்றும் சமூக நூலகங்கள் கயிறு, மலைப்பூ, மற்றும் பிரேமாவின் புத்தகங்கள் போன்ற படைப்புகளை முன்வைத்து வாசிப்பு அமர்வுகளை நடத்துகின்றன; அவற்றுடன் பெரும்பாலும் விவாதங்கள், நடிப்பு காட்சிகள் மற்றும் எழுதும் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.


அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இளம் வாசகர்கள் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, தாங்களாகவே கேள்விகள் எழுப்பி, அவர்களை சுற்றியுள்ள சமத்துவமின்மையை உணர்ந்துகொள்ளவும், சில சமயங்களில் அதற்கு எதிராகவும் நிற்கிறார்கள்.


பல எழுத்தாளர்கள் Frontline இதழுக்குத் தெரிவித்ததாவது, ”சாதி எதிர்ப்பு குழந்தை இலக்கியத்திற்கு அரசு விருது மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தால், இந்த வகை புத்தக வெளியீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது”.


இளங்கோ கூறியதாவது, குழந்தைகளுக்கான தமிழில் சாதி எதிர்ப்பு இலக்கியத்தை மேல்மட்ட சமூகம் இதுவரை கவனிக்கவே இல்லையென்றார். 2023 ஜூலை மாதம் அரசு தொடங்கிய "வாசிப்பு இயக்கம்" திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, இந்தக் கதைகள் மற்றும் புத்தகங்களையும் அதன் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


இது மிகமுக்கியமானது, ஏனென்றால் மகிழ்நிலா சரவணனுக்கெழுதிய கடிதம் போலவே, அந்தக் கதைகள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை காட்டுகிறது. “இலக்கியம் தீர்வல்ல. ஆனால் அது ஒரு தொடக்கம்,” என்கிறார் சரவணன். “ஒரு புத்தகம் ஒரு குழந்தையின் மனத்தில் ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாக இருந்தால், அது போதுமானது. ஏனெனில், சாதி மௌனத்தின் வழியேதான் நிலைத்து நிற்கிறது. அந்த மௌனத்தை ஒற்றைக் கேள்வியால் தகர்த்தெறிய முடியும்.”


நன்றி - Frontline On Line Magazine


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page