மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்
- கொ மா கோ இளங்கோ

- Jul 15
- 3 min read
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

இன்று எனக்கு நாற்பது வயது. கோடையில் ஒரு நாள் நான் பாட்னா சென்றேன்.
பாட்னா எனக்கு முற்றிலும் புதிய நகரம். அங்கே எனக்கு அறிமுகமானவர்கள் யாரும்
இல்லை. நான் நினைத்ததைச் சாதிக்க ஏற்ற ஒரு சரியான இடம் எனத் தீர்மானித்தேன்.
கடைவீதியில் உள்ள விளம்பரப் பலகைகளை வாசித்தபடி நடந்தேன். இறுதியாக நான்
தேடிவந்த இடத்தைக் கண்டுபிடித்தேன்.
அது ஒரு முடி திருத்தம் செய்யும் கடை.
முடி திருத்தம் செய்ய எனக்குத் தடை இருந்தது. நாற்பது ஆண்டுகளில் முதல்
முறையாக அந்தத் தடையை மீறி நான் அங்கு சென்றேன். நான் ஒரு சீக்கியக்
குடும்பத்தில் பிறந்தவன். நீளமான தலைமுடி, அடர்ந்து வளர்ந்த தாடி, அடர்த்தியான
மீசை இவை அனைத்தும் எனது அடையாளம்.
எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம்
செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச்
சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின.
சில சீக்கிய நண்பர்கள் சிறு வயதிலேயே முடி திருத்திக் கொண்டனர். என் நெருங்கிய
நண்பன் பன்னிரண்டு வயதில், தடையை மீறி முடியைத் திருத்தி தன்னை அழகு
படுத்திக் கொண்டான். அவனது பெற்றோர் எப்படி அனுமதித்தார்கள் என்று
தெரியவில்லை. சிறு வயதில் எப்போதும் எனக்கு அவ்வாறு செய்ய ஆசை இல்லை.
எனது அம்மா சீக்கிய மதத்தை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவர். எனக்கு அனைத்து
வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். நானும் அவர் விருப்பப்படி எல்லாவற்றையும்
செய்தேன். ஒவ்வொரு வாரமும் குருத்வாரா சென்றேன். கீர்த்தனை செய்தேன்.
அர்தாஸ் படித்தேன். சிறு வயதிலேயே தஸ்தார் (தலைப்பாகை) அணிந்தேன். நான்
இளமையாக இருந்தபோது, தெருக்களில் மக்கள் "ஓய் சர்தார்! தேரே பரா பஜ் கயே"
அல்லது "ஜூடி" என்று கூச்சலிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தபோது அம்மா கவனமாக
எனது தோற்றத்தை மாற்றினார். நான் ஒரு சீக்கியப் பையனைப் போலத்
தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு சிறுமியைப் போல குதிரைவால் சடை
போட்டுவிட்டார்.
கலவரத்தில் எங்கள் வீடு எரிந்து சாம்பலானது. பிறகு நாங்கள் அகதிகளைப் போல
வீடு வீடாக அலைந்தோம். பயங்கரவாதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து
ஒதுங்கும் நாங்கள், அதற்கான விலையைக் கொடுத்தோம்.
அன்று ஒரு சம்பவம் நடந்தது. பஞ்சாப்பில் காவல்துறையினரால் ஒரு பேருந்து
நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தில் இருந்த ஒரே சீக்கியன் நான்தான். பேருந்திலிருந்து
இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது உடைமைகள் அனைத்தும்
இரக்கமின்றி வெளியே சாலையில் வீசப்பட்டன. பேருந்தில் இருந்தவர்கள் வேடிக்கை
பார்த்தார்கள். என்னிடம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடைக்காதபோது,
சிதறிக்கிடந்தவற்றை அள்ளி எடுக்க நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு வெட்கம்
பிடுங்கியது.
மறுபடியும் பேருந்து கிளம்பியதும், பயணிகள் என்னைக் குற்றவாளியைப் போலப்
பார்த்தார்கள். அந்த நேரத்தில், இறங்கிச் சென்று எங்காவது மறைந்து போக
வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பல
ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. ஆனாலும் நான் தலைப்பாகையும், தாடியும் வைத்த
சீக்கியனாகவே இருந்தேன்.
அப்படியானால், எனது அடையாளத்தை அழிக்க நாற்பது வயதில் நான் ஏன்
முடிதிருத்தும் கடையில் காத்திருந்தேன்?
இந்த மாற்றம் படிப்படியாக வந்தது. சீக்கிய மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று
குழந்தையாக இருந்தபோது எனக்குச் சொல்லப்பட்டது. கோயில்களிலும்,
தேவாலயங்களிலும் இருக்கும் சிலைகளைப் பற்றி எதிர்மறையான விஷயங்கள்
கூறப்பட்டன. இந்த வடிவங்களில் கடவுளை நாம் ஒருபோதும் காண முடியாது என்றும்
கூறப்பட்டது.
குருத்வாராவுக்குச் சென்றபோது, சீக்கியர்களின் கடைசி குருவாகக் கருதப்படும்
சீக்கியப் புனித நூல், ஒரு தங்க இருக்கையில் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
அது அழகான பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஒருவர், புனித நூலை பல்லக்கில்
சுமந்து சென்றார். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு மதம், சொந்தப் புனித
நூலுக்கு ஒரு சிலையின் வடிவத்தை அளித்தது அப்போது எனக்குப் புரிந்தது.
புனித நூலின் குறிப்புகள் பற்றி விவாதித்த யாரையும் நான் பார்த்ததில்லை.
உண்மையில், பெரும்பாலான சீக்கியர்கள் அதைப் படித்ததில்லை. வழிபாட்டுச்
செயல்முறை, மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.
எனக்கும் மனதளவில் மதம் தொடர்பான பல கேள்விகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு
சீக்கிய குருவும், எனது கேள்விகளுக்கு இதுவரை பதிலளித்ததில்லை. நான் அதைப்
பற்றித் தேடினேன். பல்வேறு புத்தகங்களைப் படித்தேன். அறியாமை எனக்குக்
கசப்பாக இருந்தது.
நீண்ட யோசனையில் இருந்தேன். நாவிதர், என்னை வாடிக்கையாளர் நாற்காலியில்
உட்காரச் சொன்னார். ஆனால் அவர் சற்று குழப்பமடைந்ததாகத் தோன்றியது. நான்
போலி நம்பிக்கையுடன் முன்னோக்கி நடந்து நாற்காலியில் அமர்ந்தேன். என் நீண்ட
முடியை வெட்டச் சொன்னேன். எனக்கு எந்த ஸ்டைல் வேண்டும் என்று என்னிடம்
கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். "நீங்கள் விரும்பும் எந்த வடிவமும் எனக்குப்
பொருத்தமானது" என்றேன்.
சீக்கிய மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒருவர் செய்தால், தண்டனையாக
குருத்வாராவிற்கு வரும் எல்லோரது செருப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று
யாரோ சொன்னது நினைவில் இருந்தது. அப்போது அவர் பாவத்திலிருந்து
விடுபடுவார். மீண்டும் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார். எனவே முடி வெட்டிய
பிறகு, நான் தவறு செய்ததாக உணர்ந்து, என் மதத்திற்குத் திரும்ப விரும்பினால்,
எனது மதத் தலைவர் தீர்மானிக்கிற தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும்.
முடி திருத்துபவர் சீப்பையும், கத்தரிக்கோலையும் கையில் எடுத்து, என் தலைமுடியைத்
தொட அனுமதி கேட்டார். ஏனென்றால் வேறு யாரும் சீக்கியரின் தலைமுடியைத்
தொடக்கூடாது. நான் 'ஆம்' என்றேன். முதலில், ஒரு கொத்து முடி கீழே விழுந்தது.
நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அதுதான் நான் கடைசியாக என்னை
இந்த வடிவத்தில் பார்த்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. நாற்காலியைச் சுற்றி நீண்ட
முடிகள் சிதறிக்கிடந்தன. தலைபாரம் குறைந்ததாக இருந்தது. நான் இப்படியொரு
வடிவம் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தாடியை வெட்டும்போது,
முடிதிருத்துபவர், “இன்னும் கொஞ்சம் வெட்ட வேண்டுமா?” என்று மீண்டும் மீண்டும்
கேட்டுக் கொண்டே இருந்தார்.
சலூனில் இருந்த மற்றவர்கள் எல்லோரும், தங்கள் வேலையை விட்டுவிட்டு எங்கள்
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். முழு தாடியும் நீக்கப்பட்ட பிறகு முதல்
முறையாக என் முகத்தைப் பார்த்தபோது, என் கன்னங்கள் தெரிந்தன. என்னை
அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. நான் என் வயதை விட இளமையாகத்
தெரிந்தேன்.
முடிதிருத்துபவரின் வேலை முடிந்தது. நான் அவருக்கு நன்றி சொல்லி, அங்கிருந்த
எல்லோருக்கும் வணக்கம் வைத்தேன். என்னை அடையாளம் காண முடியவில்லை
என்று எல்லோரும் சொன்னார்கள். நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து
வெளியேறினேன்.
முன்கதவைத் திறந்து வீட்டினுள் செல்வதற்கு முன்பு, மோத்தி என்னை அடையாளம்
காண்பாளா என்று பயந்தேன். ஆனால் நான் கதவைத் திறந்ததும் என்னை நோக்கிப்
பாய்ந்தாள். கட்டி அணைத்தாள்.
இந்த உலகில், யாரும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என் செல்லப் பிராணி
மோத்தி என்னுடன் இருக்கிறாள். அதன் நட்பு நீடிக்கும் வரை யாருடைய
விமர்சனங்களையும், தீர்ப்பையும் என்னால் எதிர்கொள்ள முடியும். முன்பைவிட
மோத்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஏனென்றால் அவளால் என் முடி இல்லாத
கன்னங்களை எளிதாக நக்க முடிந்தது.




Comments