top of page

மெகலோடான்

ree

பல குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "இப்பவும் மெகலோடான் (மெக்) இருக்கா?" என்பதுதான். 


மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன.


மெகலோடான் என்ற சொல்லுக்கு "பெரிய பற்களுடையது" என்று பொருள். இதன் பற்கள் பிரம்மாண்டமாக இருந்ததால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.  "பெரிய பல்" என்று சும்மா பேச்சுக்கு என்று யாரும் சொல்லவில்லை. ஒரு பல்லே அதிகபட்சம் 18 சென்டிமீட்டர் நீளம் இருக்குமாம்! அதாவது அரையடி ஸ்கேலைவிட கொஞ்சம் அதிகமான உயரம்! இதை அடிப்படையாக வைத்து நாம் இதற்குத் தமிழில் "பெரும்பல் சுறா" என்று பெயர் வைத்துக்கொள்ளலாம்.

ree

இந்த பூமியில் இதுவரை தோன்றிய சுறாக்களிலேயே மிகப்பெரியது பெரும்பல் சுறாதான். இது சுமார் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை ஐம்பதாயிரம் கிலோ இருக்கும். பிற சுறாக்கள், திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகள், பெரிய மீன்கள் ஆகியவற்றைப் பெரும்பல் சுறாக்கள் வேட்டையாடி சாப்பிட்டிருக்கின்றன. பெரும்பல் சுறாக்களின் உடல் சற்றே மெலிதான, நீண்ட அமைப்பு கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். என்னதான் அளவில் பெரியதாக இருந்தாலும் இது வேகமாக நீந்தக்கூடியது அல்ல என்றும், பதுங்கிப் பதுங்கி இரைக்கு மிக அருகில் போய் பிறகு விரைவாகத் தாக்கும் பண்பு கொண்டது எனவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன

பொதுவாக அழிந்துபோன விலங்குகளை நாம் தொல்லுயிர் எச்சங்கள் (Fossils) மூலமாகத்தான் அறிந்துகொள்வோம். டைனோசர்களைக் கூட அப்படித்தான் விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர். உடலில் இருக்கும் எலும்புகள் கடினமாகி இறுகும்போது தொல்லுயிர் எச்சங்கள் உருவாகும். ஆனால் சுறாக்களின் உடலில் எலும்புகள் கிடையாது. குருத்தெலும்புதான் இருக்கும். நமது காதுகளிலும் மூக்கிலும் இருக்கும் எளிதில் வளையக்கூடிய எலும்புதான் குருத்தெலும்பு. சுறாக்களின் உடல் முழுக்கவே இந்தக் குருத்தெலும்புதான் இருக்கும். எலும்பு கிடையாது என்பதால் அந்த எலும்புக்கூடு தொல்லுயிர் எச்சமாகவும் மாறாது.


எலும்புக்கூடு கிடைக்காது என்றால் எப்படி அதன் உடல் நீளத்தையெல்லாம் கணக்கு போட்டார்கள்?

அங்குதான் இருக்கிறது சுவாரஸ்யம். சுறாக்களின் பற்கள் வழக்கமானவைதான். அவை தொல்லுயிர் எச்சமாக மாறக்கூடியவை. கிடைக்கும் பல் எச்சங்களை வைத்துதான் உடல் நீளம், எடை எல்லாவற்றையும் கணக்கு போட்டிருக்கிறார்கள்.


காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் பிற விலங்குகளுடன் ஏற்பட்ட போட்டி ஆகியவற்றால் பெரும்பல் சுறாக்கள் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page