top of page

புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 3

ree

1.நடந்தா உடம்பு குறையும்னு சொல்றாங்க. ஆனால், யானைக்கு உடம்பு குறையவேயில்லை, ஏன்?

(த.சி.பத்ரிபிரசாத், ஐந்தாம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.)


நல்லா யோசிச்சிருக்கீங்க பத்ரிபிரசாத். உடல் எடையைக் குறைக்க எல்லாரும் நடக்கச் சொல்கிறார்கள். அதேநேரம் காட்டுயிர்களில் அதிகம் நடப்பது யானை. அதன் உடல் எடை குறையவில்லையே. இந்த இரண்டு விஷயத்தையும் இணைச்சு யோசிச்சு கேள்வி கேட்டதற்கு நன்றி.

நம் நாட்டில் வாழும் காட்டு யானை ஒன்றின் சராசரி எடை 4,000 கிலோவுக்கு மேல். ஒரு நாளைக்கு 150-200 கிலோ இலை, தழைகளை அது சாப்பிடுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2 கி.மீ.இல் தொடங்கி 7 முதல் 10 கி.மீ.வரை யானைகள் நடக்கின்றன. இவ்வளவும் நடந்துசெல்வது எதற்காக? இரை தேடத்தான். ஒரு நாளின் முக்கால் பங்கு நேரத்தில் இரை தேடுவதற்காக யானைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.


ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக்கொள்வோம். நாமெல்லாம் குழந்தையாகப் பிறக்கிறோம். அதிலிருந்து நம் உடல் எடை ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பதின்பருவத்தைத் தாண்டி வளர்ந்தவுடன் நம் உடல் எடை கிட்டத்தட்ட நிலையாகிவிடுகிறது. பிறகு வயது முதிரும்போது குறையத் தொடங்குகிறது. 


இதேபோலத்தான் யானைகளுக்கும் நடைபெறும். யானை குட்டியாக இருந்ததில் இருந்து, வயது ஏறஏற எடை அதிகரித்து, வளர்ந்தவுடன் எடை நிலைபெற்றுவிடும். வயது முதிரும்போது எடை குறையத் தொடங்கிவிடும்.


எல்லா உயிரினங்களும் அவற்றின் உயரம், உடல் சுற்றளவின் அடிப்படையில் உகந்த எடை என்று ஒன்று இருக்கிறது. அந்த உகந்த எடை இருந்தால்தான், அந்த உயிரினம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, எடையைப் பராமரிக்க எல்லா உயிரினங்களும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அதிகப்படி எடை இருந்தால் நடந்தோ, உடற்பயிற்சி செய்தோ, உணவின் அளவைக் குறைத்தோ எடையைக் குறைக்க வேண்டும்.


இலை, தழை, புல், இளம் கிளைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை யானை உண்ணும். அவை தம் உடல் எடையை பராமரிக்க நிஜமாகவே நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது. அந்த இரையைத் தேட நிறைய நடக்கவும் வேண்டியிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை, எதிரானவை அல்ல. அதனால், யானை எவ்வளவு நடந்தாலும் எடை குறைவதில்லை.


ree

2.ராட்டினத்திலோ, பூங்காவில் சுழலும் குதிரையிலோ உட்கார்ந்து சுற்றிய பிறகு, அந்த ராட்டினமோ குதிரையோ நின்றுவிடுகிறது. அதன் பிறகு நமக்குத் தலைசுற்றுவது ஏன்? அவை நின்ற பிறகு, நம் உடல் சுற்றாமல் நின்றுவிடுகிறது. ஆனாலும், தலைசுற்றுவது போல் தோன்றுகிறதே, அது ஏன்?


த.மதிவதனி, 4ஆம் வகுப்பு, ஆரப்பாளையம், மதுரை


நல்ல கேள்வி மதிவதனி. நம் உடல் ஏன் இப்படிச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் உள்காதுப் பகுதிதான் நம் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பொதுவாக நம் உடலோ அல்லது வாகனத்தில் நாம் சென்றாலோ அந்த இயக்கத்துக்கு ஏற்ப நம் உடலை சமநிலையில் வைப்பதற்கு, உள்காது பகுதி எதிர்வினை ஆற்றுகிறது. நமது உள்காதுப் பகுதியில் அரை வட்ட வடிவில் சில கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்களில் திரவம் உள்ளது.

நம் உடலைச் சுற்றும்போதோ, ராட்டினம், சுழலும் குதிரையில் சுற்றும்போதோ இந்த திரவமும் சேர்ந்து சுற்றும். அந்தக் கால்வாய்களில் உள்ள நுண்ணிய முடிகள், இந்த இயக்கம் தொடர்பாக மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இயக்கத்துக்கு ஏற்ப உடலை சமநிலையில் வைக்க இது தேவை. அதேநேரம், நம் உடல் சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்கூட, நிலைமத்தின் (inertia) காரணமாக திரவம் சற்று நேரத்துக்கு சுற்றுவதால், அந்த சமிக்ஞை சிறிது நேரத்துக்கு செல்லும். நம் உடல் இயங்குவதை நிறுத்தியிருக்கும். ஆனாலும் மூளைக்குச் செல்லும் தவறான சமிக்ஞையின் காரணமாகத் தலை மட்டும் சுற்றும். சிறிது நேரத்தில் இந்த சமிக்ஞை நின்று, இயல்பு நிலைக்கு நாம் திரும்பிவிடுவதால், தலைசுற்றல் நின்று உடலைப் போலவே தலையும் இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது. 


-------- அமிதா

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page