top of page

நவீனச் சிறார் இலக்கியத்தில் புதிய பாதையை உருவாக்கியவர்

ree

கடந்த பத்து ஆண்டுகளில் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் புதிய வேகமெடுத்திருக்கிறது. இதுவரை யாரும் பேசாப்பொருட்களைப் பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவரை அண்டை மாநில மொழிகளில் வெளிவரும்  சிறார் படைப்புகள் குறித்த வியப்பிலிருந்த  தமிழ்ச்சிறார் இலக்கியம் இப்போது அவர்களே வியக்கும்வண்ணம் புதிய திசைகளில் புதிய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், போன்ற சமகாலப்பாடுபொருட்களைப் படைப்புகளில் பேசத்தொடங்கியிருக்கிறது. 


தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலம் புதிய திசையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய புரஸ்கார் விருது அவர் எழுதிய ஒற்றைச்சிறகு ஓவியா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அர்ப்பணிப்பு மிக்க அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.  


கவிஞராகவும், இதழாளராகவும் சிறார் எழுத்தாளராகவும் விளங்குகிற விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த இரண்டு வருடங்களில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாணவர்களிடம் தலைகாட்டும் சாதிப்பாகுபாடு குறித்து அவர்களுடைய தோளில் கை போட்டு உரையாடும் அற்புதமான படைப்பாகக் கயிறு கதைப்புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் வித்தியாசமான, தனித்துவமான கருப்பொருளுடன் எழுதும் விஷ்ணுபுரம் சரவணன் ஒற்றைச்சிறகு ஓவியாவில் சமகாலத்தின் மிகமுக்கியமான பிரச்னையைப் பற்றி குழந்தைகளிடம் பேசுகிறார். இந்த நூலை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரென் வெளியிட்டிருக்கிறது.


சாதாரணமாக ஒரு துப்பறியும் கதை போல ஐந்து நண்பர்களுடன் தொடங்கும் கதை முதல் அத்தியாயத்திலேயே வேகமெடுக்கத் தொடங்குகிறது. குழந்தைகளின் ஆரவத்தைத் தூண்டும் வகையில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று யோசிக்க வைக்கிறது. கதை இப்படித்தான் போகும் என்ற நம்முடைய அனுமானங்களை முற்றிலும் மாற்றிக் கொண்டேயிருக்கிறது. பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஐந்து நண்பர்களில் ஓவியாவுக்கு சிறகு முளைத்தவுடன் கதை ஃபேண்டசியாக மாறிவிடுகிறது. 


ஃபேண்டசியின் வழியே ஏன் நிலத்தில் மண்புழுக்கள் காணாமல் போயின? என்ற கேள்வியை எழுப்பி மெல்ல மெல்ல இரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நுண்ணுயிர்கள் வாழத்தகுதியற்றதாக மாறுகிற விஷயத்தையும், எண்ணெய்க்கம்பெனியினால் தண்ணீர் மஞ்சள் நிறமாகி குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிடுகிற ஆபத்தையும், எண்ணெய்க்கசிவினால் நெல்வயல்கள் அழியும் அபாயத்தையும் அடுத்தடுத்துச் கதையின் ஓட்டத்தில் அழகாகச் சொல்லிக் கொண்டே போகும் போது சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய பிரதியாக மாறுகிறது ஒற்றைச் சிறகு ஓவியா.


மண்புழு ஓவியம், தண்ணீர் காட்டும் பாதை, கண்களின் வழியே கனவைப் பார்த்தல் என்று குழந்தைகளை ஈர்க்கும் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கிறது ஒற்றைச் சிறகு ஓவியா.


அந்த ஊரின் மக்கள் ஒன்று திரண்டு போராடுகிற காட்சியும் கதையினூடே சிறார்களின் பார்வையிலேயே சொல்லியிருப்பது சிறப்பு. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் முற்றிலும் எதிர்பாராத புதிய புதிய திருப்பங்களையும் சுவாரசியமான முடிச்சுகளையும் சவால்களையும், சிறார்களின் வாசிப்புக்கேற்ற ருசியில் வழங்கியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். குழந்தைகளே அந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதாக்க் கதை முடியும் போது குழந்தைகளுக்கு நம் சமகாலப் பிரச்னையான சுற்றுச்சூழல் குறித்து நிறைய விஷயங்களை அறிந்திருப்பார்கள். 


விஷ்ணுபுரம் சரவணனின் நீலப்பூ, என்ற நாவலும் சாதிச்சண்டையால்  நடக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் குழந்தைகளின் உளவியலில் உருவாகும் மாற்றங்களையும் பேசுகிறது.. அவருடைய ஒவ்வொரு நூலிலும் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்னைகளைக் கலை அமைதியுடன் மிகச் சிறப்பாக, குழந்தைகள் வாசிக்கும் எளிய மொழிநடையில் படைத்திருக்கிறார். 


தன்னுடைய சொந்த ஊரான விஷ்ணுபுரத்தின் மீதான பிரியத்தினால் தன்னுடைய பெயரின் முன்னொட்டாகச் சேர்த்துக் கொண்டிருக்கிற விஷ்ணுபுரம் சரவணன் ஒரு கவிதை நூல், நான்கு சிறார் நாவல்கள், ஒன்பது சிறார் சிறுகதை நூல்கள், நான்கு பெற்றோர் ஆசிரியருக்குமான நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை  நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களின் இணையாசிரியராகப் பணிபுரிகிறார். குழந்தைகள் வாசிப்பின் அவசியம் குறித்தும் சிறார் இலக்கியம் எழுதுவது எப்படி என்பதைக் குறித்தும் புத்தகக்கண்காட்சிகளிலும், பள்ளிகளிலும் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். 


தன்னுடைய படைப்புகளின் வழியே நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலத்தை முன்னகர்த்திக் கொண்டு செல்லும் விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் பாலசாகித்ய விருது தமிழ்ச்சிறார் இலக்கியத்திற்கு மற்றுமொரு புதிய வண்ணத்தைச் சேர்த்திருக்கிறது. அந்த வண்ணத்தின் ஒளியில் புதிய மாற்றங்களை, புதிய பாதையை உருவாக்கும் கலைஞனாக விஷ்ணுபுரம் சரவணன் திகழ்கிறார்.


---- உதயசங்கர்

(நன்றி - தமிழ் இந்து)


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page