top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • காலத்தை சுமந்தோடும் ‘வானி’

    ‘வானி' என்கிற இந்நாவலை நாவலின் கடைசிக் காட்சியிலிருந்து குறிப்பிடுவது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். மருத்துவர் சத்தியசுந்தரி அவர்கள் நாவலின் கடைசி அத்தியாயத்தில் வானி ஆற்றில் இறங்கி கால் நனைத்து நின்று கொண்டிருப்பார். நித்திலா, பாட்டியின் முகத்தில் புலப்படும் சோகத்தை புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பாள். இதோ, இந்த தலைமுறைக்கு நாங்கள் இந்த ஆற்றை காப்பாற்றிக் கொடுத்துவிட்டோம். இனிவரும் தலைமுறைகளுக்கும் ஆற்றின் பாதுகாப்பு மீது இதே ஆர்வமும் அக்கறையும் இருக்குமா? என்கிற மனவோட்டத்தோடு நித்திலாவைப் பார்ப்பார் சத்தியசுந்தரி அம்மா. நாவலில் மட்டுமல்ல நடப்பிலும் இதே எதிர்பார்ப்பினை இளைய தலைமுறைகளிடம் இச்சமூகம் கொண்டிருக்கிறது. புதிய புதிய மாற்றங்களை எல்லாத் தளங்களிலும் விரும்பும் இளைஞர்கள் அந்தந்த தளங்களில் இதற்கு முன்பு நடந்துள்ளவைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா! இளைஞர்களின் கற்கும் ஊடகம் டிஜிட்டல் மயமாகி இருந்தாலும் இன்னமும் அதனால் புத்தகங்களின் இடத்தை சற்றும் நெருங்க இயலவில்லை. ஆகையால் புத்தக வாசிப்பை கைவிடாதவர்களாக இருக்கும்பட்சத்தில் இந்நாவலில் வரும் சத்தியசுந்தரி போன்ற சூழலியல் போராளிகளின் நீட்சியாக அக்குழந்தைகளும் சமூகத்தின் அறனாகப் போற்றப்படுவார்கள். இனி நாவலின் பக்கங்களுக்குள் நுழையலாம். உண்மையில் இந்நாவல் என்பது எழுத்தாளர் நக்கீரன் குறிப்பிடுவது போல இளையோர்களுக்கான கதையாக மட்டுமல்லாது மருத்துவரின் வரலாறாக; பவானி ஆற்றின் ஒரு காலகட்டத்தின் ஆவணமாக; ஈரோடு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வரலாறாக என பன்முகத் தோற்றத்தோடு விளங்குகிறது. பரவலாக வெளியுலகு அறிந்திராத தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்ககால நிகழ்வுகளில் ஒன்றைப் பேசுகிறது. மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் 1980 களின் காலகட்டத்தில் திருப்பூரின் சாயக்கழிவுகளை ஈரோட்டில் கொண்டு சேர்த்ததுபோலவே அதேமலைத்தொடரின் மற்றொரு பக்கத்திலிருந்து உற்பத்தி ஆகும் ‘வானி' என சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற பவானி நதி, சவுத் இந்தியன் விஸ்கோஸ் என்கிற ரெயான் நூழிலைத் தொழிற்சாலையின் இரசாயன நச்சுக்கழிவுகளை அதன் நீர்வழித்தடத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் பாதிப்பை உண்டாக்குகிறது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வந்த சத்தியசுந்தரி அம்மாள் அவர்கள் 30000 ற்கும் மேலானவர்களுக்கு மகப்பேறு மருத்துவர் பார்த்தவராக இருந்தாலும் ஒரு நதியினை அழிவிலிருந்து மீட்டெடுத்த சமூக மருத்துராகவே சிறப்புற்றிருக்கிறார். ஆம், அவரே பவானி நதிப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவராக இருந்து பெரும் பணியை சவாலாக நிறைவேற்றி இருக்கிறார். அவரின் வாழ்வை பேசுவதாக வரும் இந்நாவலை நித்திலா என்கிற அவரது பேத்தியின் கண்கொண்டு நாம் காணும் வகையில் வடிவாகியுள்ளது. தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் பொதுமக்கள் அனைவரிடமும் பொதுவான ஒரு பாதிப்பு இருப்பதை உணர்ந்து அதன் மூலத்தை கண்டறியும்போது அவர் ஆற்றில் கலந்திடும் நச்சு இரசாயனங்களின் ஆபத்தை உணர்ந்து கொள்கிறார். அதன்பின் ஒத்த சிந்தனை கொண்ட மருத்துவர் ஜீவா, சுந்தரம், குணசேகரன், சுகந்தா என பலரின் கூட்டுச் சிந்தனைகளால் போராட்டக்குழுவினை கட்டமைத்து பலவிதமான போராட்டங்களை முன்னெடுக்கிறார். இந்தியாவின் மிக முக்கியமான பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் விஸ்கோஸ் ஆலையின் முதலாளிகள் திட்டமிட்ட கொலை முயற்சி முதல் பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் மருத்தவரின் திகிலான தருணங்களை இந்நாவலில் வாசிக்கும்போது மனம் அச்சத்தால் அதிர்வுறுகிறது. வீதி நாடகங்கள், துண்டறிக்கை எனத் தொடங்கி மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் என நீண்டு பின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வாயிலாக நீதியை வென்றெடுக்கிறார்கள் பவானி நதிப் பாதுகாப்பு கூட்டமைப்பினர். அதன்பிறகுதான் சத்தியசுந்தரி அம்மாள் பவானி நதியில் கால் நனைத்தபடி அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பதாக இந்நாவல் நிறைவடைகிறது. சத்தியசுந்தரி அம்மாள் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்குரிய இளம் தலைமுறையின் உருவமாக இந்த நாவலிலேயே நித்திலாவை எழுத்தாளர் உலவ விட்டிருக்கிறார். வெறும் வரலாற்று ஆவணமாகப் புலப்படும் இக்கதையை அழகான புனைவாக; கதையோட்டமாக வாசிக்க சிறுமி நித்திலா என்கிற கதாபாத்திரத்தின் பங்கு அளப்பறியது. நித்திலாவின் கேள்விகளும், காலத்தை உணர்ந்து கொள்ள அவளெடுக்கும் முனைப்பும் பொருப்புணர்வும் வாசிக்கும் இளையோர்களின் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி. நித்திலாவை நாவலின் ஒரு கதாபாத்திரமாக மட்டும் என்னால் உணர முடியவில்லை. நாவல் இளையோரிடம் சொல்லவரும் மாற்றத்தின் குறியீடாகவே பல இடங்களில் என்னால் உணர முடிந்தது. முதலில் அம்மாவிடம் கதை கேட்பவளாக வருபவள் நாவலின் இடையிலேயே தேர்ந்த வாசிப்பாளராக மாறிவிடுவாள். வங்காரி மாத்தாய் குறித்த நூலின் வழியே கண்முன் நிகழும் சூழலியல் போராட்டத்தை உணர்பவளாக நாவலில் காட்சிபுடுத்தப்பட்டிருப்பாள். அதேபோல, பெரியவர்களோடு வீட்டிற்குள் நடக்கும் உரையாடல்களில் சுதந்திரமாக பங்கேற்றதன் விளைவாக தனது தோழியோடு பூங்காவொன்றில் சூழலியல் பேசுபவளாக மாறிவிடுவாள். பல நேரங்களில் கேள்விகளால் நிறைந்த அவளது மனம் கடந்தகால வரலாறுகளை அனுகுவதன் மூலமும் நிகழ்கால நடப்புகளை கூர்ந்து அவதானிப்பதன் வாயிலாகவும் பதில்களை அடைகிறது. வாசிப்பு, சுந்திரம், கூருணர்வு ஆகிய உணர்வுகளின் பிரதிபலிப்பாக திகழும் நித்திலாவையே சத்தியசுந்தரி அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைமுறையாக எழுத்தாளர் உருவகப்படுத்தியிருக்கிறார். மருத்துவர் சத்தியசுந்தரி அவர்களின் வாழ்விலிருந்து இந்நாவலை அனுகுவதற்கு நிகராக நாம் குறிப்பாக இளையோர்கள் நித்திலாவின் வாழ்விலிருந்து அவரவர்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அனுகலாம். இதுவே காலம் நமக்கிட்டிருக்கும் கட்டளை. நம்பிக்கையோடு முன்னகர்வோம் வெளிச்சத்தை நோக்கி. ஈரோடு பகுதியில் சூழலியல் சார்ந்து பல முக்கிய நகர்வுகளை உருவாக்கி இருக்கும் ‘சூழல் அறிவோம்' இயக்கத்தின் மிக முக்கியமான ஆக்கமாக இந்த ‘வானி' திகழப்போகிறாள் என்பதில் ஐயமில்லை. வாங்கி வாசியுங்கள். இக்கோடை விடுமுறை அர்த்தமுள்ளதாகட்டும். க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.

  • வாண்டுகளின் மேஜிக்

    இயல் மின்னிதழில் வெளியான எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்களின் வாண்டுகளின் நூலகம் கதையைப் படித்தவுடனேயே மிகவும் பிடித்துப் போனது. கதையின் மாணவச் செல்வங்கள் செம்மொழி சம்ஸ், லிசா பெயர்த் தெரிவுகள் அற்புதமாக இருந்தது. செம்மொழியின் அம்மா பெயர் தமிழ். அடடா! திரும்பத் திரும்பப் படிக்கும்போதும் அருமையாக இருந்தது. குழந்தைகளுக்கும் இக்கதையைச் சொல்லியாயிற்று. அவர்களும் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் இக்கதையை சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இதையும் தாண்டி இக்கதையைச் சமூகத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஏப்ரல் 23 உலகப் புத்தக தினத்தில் மாலையில் தங்களிடம் உள்ள புத்தகங்களை வைத்து வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை தொடங்குங்கள் என்று தெரிவித்தோம். கையிருப்பு புத்தகங்கள் சிலவற்றை பரிசாக வழங்கினோம். அந்நூலகங்களுக்கு வாண்டுகளின் நூலகம் என்று பெயர் சூட்டலாம் என்று சேர்ந்து பேசி முடிவு செய்யப்பட்டது. 6 குழந்தைகள் தங்கள் வீடுகளில் வாண்டுகளின் நூலகங்கள் தொடங்கினார்கள். இதில் குழந்தை சாஷினி உருவாக்கிய கிராமத்தில் உள்ள வாண்டுகளின் நூலகத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையில் ஆர்வமுடன் வந்து முதல்நாளில் இருந்து இப்போது வரை உற்சாகமாக வாசித்துவருவது மிகவும் மகிழ்ச்சியாக உணர வைத்தது. இதனைக் கண்ட குழந்தை சாஷினியின் உறவினர் தனது பகுதியிலும் இதுபோல் ஒரு நூலகம் அமைக்க முடிவு செய்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி அவர்கள் தனது கதையை புத்தகமாக வடிவமைப்புச் செய்து அளித்தார்கள். கலர் பிரிண்ட் செய்து ஸ்பைரல் போட்டு வாண்டுகளின் நூலகம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. வாண்டு மாமா எழுதிய புத்தகம் மற்றும் அவர் பற்றிய செய்தித்தாளில் வெளியான கட்டுரையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. பெரியதாழை ஆசிரியர் ஜொரோசி அவர்கள் வாண்டுகளின் நூலகம் புத்தகம் பிரிண்ட் செய்து வழங்க முன்வந்தார். மொத்தத்தில் வாண்டுகளின் மேஜிக் நூலகங்கள் அற்புதமாக வேலை செய்கிறது . சண்முக வடிவு. சிறார் வாசிப்பு இயக்க செயல்பாட்டாளர். 25 சமூக நூலகங்கள் மற்றும் 6 வாண்டுகளின் நூலகங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர். தமுஎகச மற்றும் தசிஎகச சீர் வாசகர் வட்டத்தின் புத்தகத் தூதுவர் திட்டம் ஆகிய அமைப்புகளில் செயல்பட்டு வருபவர்.

  • கதைகள் வாழ்க்கையை மாற்றும் - கில் லூயிஸ் (Gill Lewiss)

    தமிழில் : உதயசங்கர் ஒரு கால்நடை மருத்துவரும் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளருமாவார். அவருடைய முன்பைய நூல்களில் One White Dolphin மற்றும் Wild Wings (இரண்டும் Atheneum வெளியீடுகள்) அடங்கும். இந்நூல்கள் இரண்டும் Green Earth Book Award விருதைப் பெற்றவை. அவர் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவர்களிடம் பல செல்லப்பிராணிகள் உள்ளன; அவற்றில் ஒரு மீட்கப்பட்ட Shetland குதிரையும் உள்ளது. 1. நீங்கள் எழுத்தாளராக ஆக எது உங்களைத் தூண்டியது? நான் சிறு வயதிலிருந்தே கதைகள் எழுத மிகவும் விரும்பினேன். ஆனால் எனது கையெழுத்து சீரற்றதாகவும், எழுத்துப் பிழைகள் அதிகமாகவும் இருந்ததால், நான் எழுத்தாளராக முடியாது என்று நினைத்தேன். நான் அறிவியல் படித்து பின்னர் கால்நடை மருத்துவரானேன். இருந்தாலும் கதைகளுக்கான ஆர்வம் எப்போதும் இருந்தது. என் குழந்தைகளுக்கு கதைகளைப் படித்துக் காட்டத் தொடங்கியபோது, மீண்டும் கதைகள் சொல்லுவதில் காதல் ஏற்பட்டது. நாம் அனைவரும் கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் உடையவர்கள்—அதுவே நம்மை மனிதர்களாக ஆக்குகிறது. 2. உங்களைப்பற்றி மக்களுக்குத் தெரியாத ஒரு விஷயம்? என்னால் ஆந்தைகளை அழைக்க முடியும். 3. எழுத்தாளராக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கதைகள் மனிதர்களின் மனதையும் எண்ணங்களையும் மாற்றும் சக்தி கொண்டவை என்று நான் நம்புகிறேன். அவை உலகத்தையும் மாற்ற முடியும். கதைகள் மனிதர்களுக்கிடையிலான சுவர்களை உடைத்து, புரிதல் மற்றும் இரக்கத்தை உருவாக்குகின்றன. என் பல புத்தகங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றன. என் கதைகள் வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியதாக அவர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 4. உங்களுடைய ஒரு சாதாரண வேலை நாள் எப்படி இருக்கும்? எனக்கு ஒரு நிரந்தர நாள் இல்லை! நான் ஒரு புத்தகத்தில் பணியாற்றும்போது, காலை 9 மணி முதல் 1 மணி வரை எழுத முயற்சிப்பேன். முதல் வரைவை எழுத மன அமைதி அவசியம். எழுதுவது நன்றாக சென்றால் நேரம் விரைவாக போய்விடும். எழுத முடியாதபோது நேரம் மிகவும் மெதுவாக நகரும்; அப்போது நான் காபி குடிப்பதும் சிறிய வேலைகளையும் செய்வேன். பிற்பகலில் நிர்வாக வேலைகள் செய்வேன். மாலை நேரம் குடும்பத்திற்காக இருக்கும். சில சமயம் நீண்ட நாட்கள் எழுதாமல் இருப்பேன்; சில சமயம் கடைசி தேதிநெருங்கிவிட்டால்அதிக நேரம் உழைக்கவேண்டியதிருக்கும். . 5. உங்கள் கதைகளுக்கான யோசனைகள் எங்கிருந்து வருகின்றன? யோசனைகள் எங்கிருந்தும் வரலாம். A Story Like the Wind என்ற கதை மங்கோலிய நாட்டுக் கதையிலிருந்து தொடங்கியது. பின்னர் ஒரு சிரிய இளைஞனின் உண்மை வாழ்க்கை அனுபவம் அதை விரிவாக்கியது. இசையும் கதைகளும் மனிதர்களை இணைக்கின்றன. 6. ஒரு புத்தகத்தைத் தொடங்குவதற்கு முன் எவ்வளவு ஆய்வு செய்வீர்கள்? நான் நிறைய ஆய்வு செய்கிறேன், குறிப்பாக விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கதைகளுக்கு. நான் அந்த இடத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அங்கு வாழும் மக்களுடன் பேசுவேன். ஒரு கதையை வாசகர்களுக்கு நன்றாக உணர வைக்க முயற்சிப்பேன். 7. புதிய கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு உந்துதல் எங்கிருந்து கிடைக்கிறது? எனக்கு சரியாகத் தெரியாது. கதைகள் என்னைத் தேடி வரும் போல உணர்கிறேன். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் என் மனதில் தெளிவாக தோன்றும்; அதன் பின்னர் அதன் கதையை எழுதத் தொடங்கிவிடுவேன். 8. நீங்கள்ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடும் செயல்முறை எப்படி இருக்கும்? ஒரு யோசனை உருவாவது மிகவும் அழகான தருணம். அதன் பிறகு முதல் வரைவை எழுதுவது கடினமான வேலை. நான் பல முறை திருத்தி எழுதுவேன். பின்னர் ஆசிரியருக்கு அனுப்புவேன். ஆசிரியர் கருத்துக்கள் வழங்குவார். மீண்டும் திருத்தம் செய்யப்படும். அதன் பிறகு எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்படும். இறுதியில் 9–12 மாதங்களில் புத்தகம் வெளியிடப்படும். 9. உங்கள் வாழ்க்கையில் முக்கியமான சாதனை என்ன? என் புத்தகங்கள் வாசகர்களின் எண்ணங்களை மாற்றியதாக அவர்கள் எழுதும் கடிதங்கள் கிடைப்பதே மிகப் பெரிய சாதனை. 10. குழந்தைகள் உங்கள் புத்தகங்களில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நாம் அனைவரும் இந்த பூமியின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அதை பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.

  • ஓர்சுண்ட் பாலம் – சுவீடன் – டென்மார்க்

    நான் சுவீடன் நாட்டில் வசித்தபோது, மால்மோ நகரத்தில் ஒரு வருடம் தங்கியிருந்தேன் (2004ஆம் வருடம்). மால்மோ சுவீடனின் தென்பகுதியிலுள்ள நகரம். இது சுவீடனின் மூன்றாவது பெரிய நகரம். சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோம், மால்மோவிலிருந்து சுமார் அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து டென்மார்க் மிகவும் அருகாமையில் அமைந்திருக்கும் நாடாகும். டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் மால்மோவிற்கு மேற்கே அமைந்த ஒரு பெருநகரம். மால்மோவையும் கோபன்ஹேகனையும் பிரிப்பது பால்டிக் கடல். கடல் பிரிக்கும் இந்தப்பகுதிக்கு ஓர்சுண்ட் (Oresund) என்று பெயர். கி.பி. 2000-ஆம் ஆண்டுக்கு முன் வரை கோபன்ஹேகனுக்குப் பயணம் செய்யச் சாலைவழி எதுவும் இல்லை. கடல் வழிதான். கோபன்ஹேகனில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்கோ, மற்ற சரக்குப் போக்குவரத்து மேற்கொள்வதற்கோ கப்பல் போக்குவரத்தையே முற்றிலும் நம்பியிருந்த நிலை. இக்கடலின் குறுக்காக ஒரு பாலம் அமைத்தால் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருக்குமே என்று இரு நாட்டு அரசுகளும் நீண்ட காலமாகவே யோசித்து வந்தன. இறுதியாக அத்திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. கி. பி 1990-ல் இறுதித் திட்டம் வகுக்கப்பட்டு மால்மோவிற்கும் கோபன்ஹேகனுக்கும் இடையே கடலின் மீது பாலம் அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றால் மிகப்பெரும் நன்மைகள் இரு நாடுகளுக்கும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுற்றுலா, கலை, பண்பாடு, வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளுள் இரு நாடுகளும் மேலும் நெருங்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய் இரு அரசுகளும் அறிவித்தன.கடலில் சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் நீளத்துக்குப் பாலம் அமைப்பது எளிய காரியமன்று. இது சாலை மற்றும் இரயில் செல்லும் இருப்புப்பாதை என ஈரடுக்குப் பாலமாக அமைக்க முடிவானது. மேல்தளத்தில் சாலையும் கீழ்தளத்தில் இரயில் பாதையும் அமைப்பதற்கென வேலைகள் விறுவிறுப்பாய் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கடற்பாலம் கட்டும் கட்டுமானப் பணிகளிலுள்ள சவால்களைச் சமாளிப்பதைவிட இப்பாலம் கட்டுவதற்கு எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பது இரு அரசுகளுக்கும் பெரிய சவாலாய் இருந்தது. கடலின் நடுவே இப்பாலம் கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவித்தன. இப்பகுதியில் உள்ள அரிய பல பறவையினங்களுக்கு பாதிப்பு நேரும் என்றனர். பால்டிக் கடலின் அடியில் உள்ள இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதோடு கடல் நீரின் ஓட்டம் இதனால் தடைப்படும் என்றும், பாலம் கட்டப்படுவதால் ஏற்படப்போகும் மாசு மற்றும் வேதிப்பொருட்களினால் மீனினங்கள் மாண்டுவிடும் என்றும் கிளர்ச்சிகள் எழுந்தன. கடல் நீரின் உவர்ப்புத்தன்மையில் (Salinity) மாறுதல் ஏற்பட்டுச் சூழியல் சமநிலையின்மை நிலவும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பசுமையமைதி அமைப்பும் (GreenPeace) எதிர்ப்புத் தெரிவித்தது.இரு நாட்டு அரசுகளும் இப்பிரச்சினைகளை விவாதிக்கச் சிறப்பு விசாரணைகளை நடத்தின. சூழல் மாசுபடாதவண்ணம் பாலத்தைக் கட்டிக்கொள்ளும் வகையில் பாலம் கட்டும் திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. பெரும்பான்மையான அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவீடன் நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஒலோஃப் யோஹன்ஸன் (Olof Johansson) என்பவர் தனது பதவியைத் துறந்தார்.தொடர்ந்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டுமானப்பணிகள் தொடங்கின. முதலில் வகுத்திருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. கடல் மீது எட்டு கிலோமீட்டருக்கு ஒரு பாலம், பின்னர் கடலுக்குள் நான்கு கிலோமீட்டர் நீளத்தில் ஒரு சுரங்கப் பாலம் மற்றும் கடற்பாலத்திலிருந்து சுரங்கப் பாலம் இணையுமிடத்தில் ஒரு செயற்கைத்தீவு ஆகியவை அமைக்க முடிவானது. கோபன்ஹேகன் செல்லும் விமானங்களில் நீங்கள் பயணம் செய்தால், தரையிறங்கும் போது விமானச் சன்னல் வழியாக வெளியே பாருங்கள். அன்றைய வானிலை தெளிவாயிருந்தால் நீல நிறக் கடலும், கடலின் ஊடே ஓடும் ஒரு பாலமும் அழகாய்க் கண்ணில் விரியும். கடல் நடுவே திடீரென்று பாலம் மறைந்து போவதையும் பார்ப்பீர்கள். நடுக்கடலில் உயரமான நான்கு தூண்கள் பாலத்திற்கு மேல் வளர்ந்து கொண்டிருப்பதும் தெரியும். உலகிலேயே இரண்டாவது நீளமான தொங்குபாலம் (Suspension Bridge) இதுதான். சுமார் 1.6 கீலோமீட்டர் நீளத்தில் அமைந்தது இந்தக் கம்பி - தாங்குப் பாலம் (Cable-stayed). உயர் இழுவிசை(Hyper tension) கொண்ட இக்கம்பிகளைத் தாங்கும் தூண்கள் (Pylons) இருநூறு மீட்டர் உயரத்திற்கும் மேல் கம்பீரமாக நிற்கின்றன. சுவீடனின் மிக உயர்ந்த கட்டிட அமைப்பு இந்தத் தூண்கள் எனலாம். இந்தத் தொங்கு பாலத்தின் இரு புறமும் இணைபவை அணுகுபாலங்கள் (Approach bridges). சுவீடனின் மேற்குப்பகுதியிலிருந்து தொங்கு பாலத்தில் இணைவது ஒன்று; பாலத்தைத் தாங்க 120 மீட்டர் இடைவெளியில் அமைந்த தூண்கள் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்குத் தொடர்ந்து தொங்குபாலத்தில் முடிகிறது. தொங்குபாலத்தின் முடிவில் தொடரும் மற்றொரு அணுகுபாலம் மூன்று கிலோமீட்டர்கள் நீளமுடையது. நூற்று நாற்பது மீட்டர் இடைவெளியிலமைந்த தூண்கள் இப்பகுதியைத் தாங்குகின்றன. கடல் மட்டத்திற்குக் கீழ் பதினைந்து மீட்டர் ஆழத்திற்குச் செல்வன இத்தூண்கள். கடலுக்குள் செயற்கையாய் அமைக்கப்பட்டிருக்கும் தீவுப்பகுதியில் இந்த அணுகு பாலம் முடிகிறது. கடலின் மேலே ஓடிக்கொண்டிருந்த பாலம் கடலுக்குள் ஓடி முகம் புதைத்துக்கொள்வது போன்ற ஒரு தோற்றம். பாலம் சுரங்கப்பாதையாய்த் தொடர்வதற்கு ஏதுவாய் இந்தச் செயற்கைத் தீவுப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கில் சாலையும், கீழடுக்கில் இருப்புப்பாதையுமாய் அமைந்த பாலத்தின் உருவம் இத்தீவுப்பகுதியில் மாற்றம் கொள்கிறது. சாலையும் இரயில் பாதையும் இணையாகச் சிறிது தூரம் செல்கின்றன. இத்தீவின் நீளம் சுமார் நான்கு கிலோமீட்டர்கள். கடலுக்குள் நிலப்பகுதியை உருவாக்க ஏகப்பட்ட மணலும் கல்லும் தேவைப்பட்டன.ஏழு மில்லியன் கன மீட்டர் மணலும் ஒன்றரை மில்லியன் கன மீட்டர் கற்களும், பாலம் அமைக்கையில் தோண்டப்பட்ட கடலடி மண்ணும் இப்பகுதியில் கொட்டப்பட்டு நிலமானது. பாலத்தின் மேலடுக்கு சாலைப் போக்குவரவுதீவிலிருந்து ஆரம்பிக்கும் சுரங்கப்பாதை கோபன்கேஹன் நகரின் கிழக்குக்கரையில் முடிகிறது. இந்தச் சுரங்கம் நான்கு குழாய்களைக்கொண்டது. இரண்டு சாலைக்குழாய்கள் , இரண்டு இரயில் பாதைக்குழாய்கள். அனைத்தும் ஒருவழிப்பாதைகள். நான்கு கிலோமீட்டர் நீளச் சுரங்கத்தில் அவரச வழிகள் 88 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த நான்கு குழாய்கள் தவிர அவசர காலத்தில் பயன்படுத்தும் ஒரு பாதையும் சுரங்கத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்தின் உட்சுவர்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. தொடரும் இரயில் பாதை கோபன்ஹேகனின் விமான நிலையம் வழியே சென்று நகரின் மையத்தை அடைகிறது. விமான நிலையத்தின் அடித் தளத்திலேயே இரயில் நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்தப்பாலம் கட்டி முடிக்க இரண்டு பில்லியன் யூரோ செலவானது. கி. பி 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி போக்குவரவுக்குத் திறக்கப்பட்டது.டென்மார்க்கும் சுவீடனும் பனிக்காலத்தில் (Ice Age) உறைபனியின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனவாம். இரு நாடுகளும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாலம் மூலம் மீண்டும் தரைவழியால் இணைக்கப்பட்டன. இன்னும் சில தகவல்கள், குறிப்புகளாய். 1. ஒரு தடவை இப்பாலத்தைக் கடப்பதற்கு முப்பது யூரோ நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாலத்தை அடிக்கடி கடக்கும் டாக்ஸிகளுள் உணர்வி (Sensor) ஒன்று பொருத்தப் பட்டிருக்கும் . சுங்கம் வசூலிக்கும் இடத்துக்கருகே வந்ததும் இந்த உணர்வியை டாக்ஸி ஓட்டுனர்கள் இயக்குகிறார்கள். டாக்ஸியின் தகவல்கள் உடனடியாய்ப் பறிமாறப்பட்டு கடன் அட்டைகள் மூலம் கட்டணம் வசூலாகிறது. 2.பாலப்போக்குவரவு துவங்குவதற்கு முதல் மாதம் 21 கிலோமீட்டர் தூர மராத்தான் ஓட்டம் பாலம் வழியாய் நடைபெற்றது. எண்பதாயிரம் பேர் இதில் பங்கேற்றனர். வருடந்தோறும் கோடையில் இந்த ஓட்டம் நடைபெறுகிறது. 3. பாலம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பத்து லட்சம் வாகனங்கள் இதனைக்கடந்து சென்றன. மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வாகனங்கள் பாலம் மீது பயணம் செய்திருக்கின்றன. 4. மோசமான வானிலை, சூறைக்காற்றுக்கள் வீசும் சமயங்களில் தற்காலிகமாய்ப் பாலப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் சுரங்கப் பாலத்தில் தீப் பிடித்ததாய் வதந்தி நிலவியும் போக்குவரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 5. சர்வதேச பாலங்கள் மற்றும் கட்டுமானப் பொறியியல் அமைப்பு (IABSE), 2003 -ஆம் ஆண்டின் சிறந்த பாலமாக ஓர்சுண்ட் பாலத்தைத் தேர்ந்தெடுத்தது. எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி

  • குழந்தைகளின் உரிமைகள் - 13

    ஐக்கிய நாடுகளின் அமைப்பு - குழந்தைகளின் உரிமைகள் குறித்த சர்வதேசப் பிரகடனம்: பதினான்காவது உரிமையாக ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தெரிவிக்கும் அம்சம் எதுவெனில், குழந்தைகள் தங்களின் சொந்தச் சிந்தனைகள் எவையாக இருப்பினும், தாம் விரும்பும் மதம் எதுவாக இருப்பினும், கருத்துகள் எவையாக இருப்பினும், அவற்றை சக மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தேர்வு செய்து கொள்ளலாம்; அவற்றைப்பற்றிய கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்தரங்குகளில் பங்கேற்கலாம். அவற்றைப் பரப்புரைகளின் மூலம் மற்றவர்களிடம் பரப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இங்கு உடனே நம் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி இதுவாகவே இருக்கும்: "என்னது? குழந்தை, தனக்கென்று ஒரு மதத்தைத் தேர்வு செய்து கொள்ள முடியுமா? அது எப்படி நடக்கும்? ஒரு குழந்தை, அதன் பெற்றோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மதத்தைத்தானே சேர்ந்திருக்க முடியும்? அதற்கென்று தனியே வேறு மதம் எப்படியிருக்க முடியும்?" இது நமது பொதுப் புத்தியிலுள்ள நீண்ட காலப் புரிதலின் விளைவு. குழந்தைகள் இன்றைக்குத் தமது பெற்றோரின் சாதி, மதம்,இனம் ஆகியவற்றைத் தவிர, வேறு எத்தனை விஷயங்களில் பெற்றோரின் விருப்பங்கள் தாம் தமது விருப்பங்களும் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? நன்றாக யோசித்துப் பார்ப்போம்: உணவு, திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், உடைகள், ரசிக்கும் இசை, சினிமா, ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின், மாடல் பெர்சனாலிட்டி - என எல்லாவற்றிலும் அவர்களுக்கென்று தேர்வுகள் இருக்கின்றன. சமீப காலத்திய நடப்புகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்: எந்த நடிகரின் கட்சிக்குப் பெற்றோர் வாக்களிக்க வேண்டும் என்பதைக்கூடத் தாங்களே தீர்மானித்து, அதைத்தவிர்த்துப் பெற்றோர் வேறு முடிவுகளை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக அல்லது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகப் பெற்றோரை மிரட்டும் அளவுக்கு இன்றைய குழந்தைகளின் மனநிலைகளில் தீவிர விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுதான் எதார்த்தம்! இது நமக்குக் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், விழுங்கித்தான் ஆக வேண்டும்! இவையெல்லாவற்றிலும் தமக்கென தனிப்பட்ட தேர்வுகளைக் கொண்டிருக்கும் குழந்தைகள், மதம், சிந்தனைகள்,கருத்துகள் ஆகியவற்றில் தேர்வுகளைக் கொண்டிருக்க மாட்டார்களா? இப்படி நாம் சொல்லும் போது, உடனே, மற்றவர்களைத் தங்களின் மதத்திற்கு மாறும்படிக் கட்டாயப்படுத்துகிறார்கள், மத மாற்றத்தைத் திணிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் அவலங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. ஆனால், ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, குழந்தைகளின் உரிமைகள் குறித்த தீர்மானம், அது குறித்த சர்வதேசப் பிரகடனம் போன்றவற்றில், இந்தத் தனியுரிமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது; இந்தப் பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில்,இந்தியாவும் ஒன்று. ஆகவே, யூனிசெஃப் அமைப்பின் வழிகாட்டலில் இந்த உரிமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகிறது. நமது பிள்ளைகள் நம் கண்முன்னே வளர்கிறார்கள். "நான் வளர்கிறேனே மம்மி…" எனப் பாடுகிறார்கள். அந்த வளர்ச்சிப் பாதையில், மேற்கண்டவாறு உள்ள யூனிசெஃப் உரிமைகளை அவர்கள் அறிந்துகொள்ளு மாறு செய்வது பெற்றோரின் கடமை என அந்த அமைப்பின் பிரகடனம் சொல்கிறது. அவ்வாறு செய்யும் போது,அவர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், சக மனிதர்களில் எவரையும், அவர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுக்கவோ, மறுத்து நிற்கவோ ஒரு போதும் முயலக்கூடாது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. எனவே, குழந்தைகள், தமது உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கும், மற்றவர்களின் உரிமைகளுக்குக் குறுக்கே நிற்காமல் இருப்பதற்கும் அவர்களுக் குப் பெற்றோரே வழி காட்டவும், துணை நிற்கவும் வேண்டும் என யூனிசெஃப் பிரகடனம் கூறுகிறது. நாம் இந்த விஷயங்களில் தெளிந்த அறிவுடன், சமநிலையுடன், சரியான ஒரு புரிதலுடன் செயல்பட வேண்டும் என்பதே இதன் அடிநாதம். கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • திமிங்கிலங்களும் ஓங்கில்களும் ஏன் கரை ஒதுங்குகின்றன?

    "கரை ஒதுங்கிய திமிங்கிலம் - மீட்புப் பணியில் வனத்துறையினர்" போன்ற தகவல்களை நாம் செய்தித்தாளில் பார்க்கலாம். திமிங்கிலங்கள், கடல் பன்றிகள் (Porpoises), ஓங்கில்கள் (Dolphins) போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன. ஒரு கடல்வாழ் பாலூட்டி கையறு நிலையிலோ காயமுற்றோ நோய்வாய்ப்பட்டோ அல்லது இறந்தோ கரையில் வந்து கிடப்பதை "கரை ஒதுங்குதல்" என்பார்கள். இது ஆங்கிலத்தில் Beaching அல்லது Stranding என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் ஒரு தனி விலங்கு கரை ஒதுங்கும்அல்லது பல விலங்குகள் ஒன்றாகக் கரை ஒதுங்கலாம். இது துல்லியமாக இதனால் மட்டும்தான் ஏற்படும் என்று குறிப்பிட்டுச் சொல்வது கொஞ்சம் கடினமானது.ஏனென்றால் பெரும்பாலான சூழல்களில் ஒரு விலங்கு கரை ஒதுங்கியபின்புதான் நமக்குத் தெரியவரும். கரை ஒதுங்குவதற்கு முன்பாக அந்த விலங்கு கடலில் எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டது என்பது நமக்குத் தெரியாது, இல்லையா? ஆகவே ஒரு யூகமாகத்தான் நம்மால் காரணங்களை சொல்லமுடியும். சரி, என்னென்ன காரணங்கள் இருக்கலாம்? நோய்வாய்ப்பட்ட கடல் பாலூட்டிகள் நன்றாக நீந்த முடியாமல் சோர்ந்துபோய் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கரைக்கு அருகில் வரலாம். கரைக்குப் பக்கத்தில் வந்துவிட்டால் ஆழம் குறைவான அந்தப் பகுதியில் அவை மாட்டிக்கொண்டு கரை ஒதுங்கலாம். வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க வேகமாக நீந்தும் கடல் பாலூட்டிகள் கரைக்கு அருகில் வந்து மாட்டிக்கொள்ளலாம். சிலவகை கடல்பாசிகளின் நச்சுப்பொருட்கள் திமிங்கிலங்களின் மூளைச் செயல்பாட்டை பாதிக்கலாம்.மூளை பாதிக்கப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் திசை தெரியாமல் நீந்தி கரைக்கு வரும். கடலில் இருக்கும் மாசுபாடுகளால் திமிங்கிலங்களுக்கு நோய் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் திசை தெரியாமல் நீந்தி கரைக்கு வரும். பெரிய கப்பல்களில் இருக்கும் ப்ரொப்பெல்லர்கள் (Propellers) எனப்படும் பாகங்களும் கடலில் மிதக்கும் மீன்பிடி வலைகளும் கடல்வாழ் பாலூட்டிகளுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் சோர்ந்துபோய் திசை தெரியாமல் நீந்தி கரைக்கு வரும். கடல்வாழ் பாலூட்டிகள், குறிப்பாகத் திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் மேக்னடைட் (Magnetite) என்ற ஒருவகைப் படிகக்கல் இருக்கிறது. இது பலவீனமான காந்தப்புலத்தைக் கூட ஏற்று திசை அறிவிக்கக்கூடியது. இந்தப் படிகம் திமிங்கிலங்கள் திசை அறிய உதவுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கடலில் ஏற்படும் மாற்றங்களால் காந்தப்புலம் மாறும்போது கடல்வாழ் பாலூட்டிகள் திசை கண்டுபிடிக்கும் திறன் மாறும், இவை தடுமாறி கரைக்கு வந்துவிடும். திமிங்கிலங்களும் ஓங்கில்களும் ஒலியை வைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். கடலுக்குள் ஏற்படும் ஒலி மாசுபாடு இந்தத் தகவல் பரிமாற்றத்தில் குறுக்கிடுகிறது, இது கடல்வாழ் பாலூட்டிகளை பாதிக்கிறது. ஏதோ ஒரு தனி கடல் பாலூட்டி நோயுற்றதாலோ பயத்தாலோ கரைக்கு அருகில் வந்துவிட்டால் அது ஆபத்தில் இருப்பதாகக் குரல் எழுப்பும். இந்தக் குரலைக் கேட்டு அதன் உறவினர்களும் நண்பர்களும் அதற்கு உதவுவதற்குக் கரையை நோக்கி வரலாம். ஆழமற்ற பகுதிக்கு அருகில் வந்த உடனேயே இந்த விலங்குகள் எல்லாம் மாட்டிக்கொள்ளும். உங்களுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கடல்வாழ் பாலூட்டிகள் கரை ஒதுங்கினால் உடனே வனத்துறைக்குத் தகவல் சொல்லுங்கள். அல்லது காவல் துறைக்கோ தீயணைப்புத் துறைக்கோ தகவல் சொல்லி அவர்கள் மூலம் வனத்துறையினரை அணுகலாம். அங்கு கூட்டமாகக் கூடி மீட்புப் பணிகளில் குறுக்கிட வேண்டாம். கரை ஒதுங்கிய விலங்கின்மேல் ஏறி உட்காரக் கூடாது, அதைத் தொட்டுப்பார்க்கவோ சீண்டவோ கூடாது. அது பாதிக்கப்பட்ட விலங்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு செல்ஃபி பாயிண்ட் அல்ல. ஆகவே பொறுப்புடன் இருக்க வேண்டும். பாதிப்பைக் குறைத்து அந்த விலங்கை பத்திரமாக அதன் வாழிடத்துக்கு அனுப்பி வைப்பதுதான் நமது கடமை. நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.

  • தத்துவம் அறிவோம் -14

    விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட து. வேட்டைச்சமூகமாக வாழ்ந்த மனிதர்கள் ஒரே இட த்தில் நிலையாக இருக்க முடியவில்லை. உணவுக்காக ஒவ்வொரு இடமாக அலைந்தனர். கால மாற்றங்களுக்கு ஏற்ப இடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்படி மாறும்போது அங்கே ஏற்கனவே இருந்த மனித இனத்துடன் சண்டை போட்டார்கள். சில சமயம் வெற்றி பெற்றார்கள். சில சமயம் தோல்வியடைந்தார்கள். வெற்றி பெற்ற போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஆண்களைக் கொன்றார்கள். பெண்களைச் சேர்த்துக் கொண்டார்கள். தோல்வியடைந்த போது தங்கள் கூட்டத்தையே இழந்தார்கள். அபூர்வமாக நட்பாகவும் இணைந்து வாழ்ந்தார்கள். இதனால் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றம் என்பது புதிய மனிதக்கலப்பினங்கள் தோன்றின.ஏனெனில் அப்போது ஹோமோ சேப்பியன்ஸுக்கும் முன்னும் பின்னுமாக ஒன்பது வகையான மனித இனங்கள் இருந்தன. ஹோமோ எரக்டஸ் ஹோமோ ஹாபிலஸ் ஹோமோ ருடால்பென்சிஸ் ஹோமோ ஃப்லோசியன்ஸ் ஹோமோ நியாண்டர் தால் ஹோமோ டேனிசோவன்ஸ் ஹோமோ ஆஸ்டிரோபிதிகலஸ் ஹோமோ ஆண்டெஸ்ஸர் ஹோமோ நாலெடி இப்படி பல ஹோமோக்கள் வாழ்ந்தன. தமிழ்நாட்டில் கூட 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனம் வாழ்ந்திருக்கிறது. கற்கோடாரிகளைத் தொழிற்சாலை அமைத்து உற்பத்திச் செய்திருக்கிறார்கள். சென்னை அருகே அத்திரப்பாக்கத்தில் நடந்த அகழாய்வில் இந்தக் கற்கோடாரிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது பூமியில் வாழ்கிற ஒரே ஒரு இனமாக ஹோமோசேப்பியன்ஸ் மட்டுமே இருக்கிறோம். மற்ற இனங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்துவிட்டன. அறிவியலறிஞர் டார்வின் தன்னுடைய பரிணாமக்கோட்பாட்டில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக சொல்வது “ SURVIVAL OF THE FITTEST “ அதாவது சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது உயிர்வாழும்.என்பது தான். ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே அப்படி சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்கள். ஆனால் அதே நேரம் ஹோமோசேப்பியன்ஸ் தனியான இனமில்லை. புரியவில்லையா? இன்றைக்கிருக்கும் ஹோமோசேப்பியன்ஸ் இதுவரை வாழ்ந்த பல மனித இனங்களின் கலவை தான். எப்படி? சமீபத்தில் நடந்த மரபணு ஆராய்ச்சியில் ஹோமோசேப்பியன்ஸின் மரபணுவில் நியாண்டர் தால் மனிதனின் மரபணுவும், டேனிசோவன்ஸின் மரபணுவும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால்? எந்த இனமாக இருந்தாலும் சுத்தமான இனம் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கலப்பினம் தான். இதைத் தான் அறிவியல் சொல்கிறது. அதனால் என்ன? நம் ஒவ்வொருவரின் மரபணுவிலும் உலகமுழுவதுமுள்ள மனிதர்களின் மரபணு கலந்து நாம் உலக மனிதர்கள் என்று சொல்கிறது. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று சொல்கிறது. என்ன சரியா? வேட்டைச் சமூகத்தில் இருந்து விவசாய சமூகமாக எப்போது மனிதகுலம் மாறியது?மனிதன் தோன்றி இரண்டரை லட்சம் ஆண்டுகளானாலும் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது இப்போது தான். சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பு தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தது யார் தெரியுமா? பெண்கள் தான். சாதாரணமாக காடுகளில் வளர்ந்த புல் வகைகள் தானியங்களை உதிர்த்தபோது அதை உணவுக்காகச் சேகரித்தவர்கள் பெண்கள். சேகரித்த அந்தத் தானியங்கள் ஈரப்பதம் இருந்தால் முளைப்பதைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள். பின்பு அதை தரையில் ஊன்றி அதன் வளர்ச்சியைப் பேணியவர்கள் பெண்கள். வளர்ந்து பூப்பூத்து காய்காய்த்து கதிராகித் தானியங்களைத் தரும்வரை ஒவ்வொரு செயலையும் பார்த்தவர்கள் பெண்கள். பிறகுதான் தானாக முளைத்த நெல், கோதுமை, சாமை, வரகு, தினை, பார்லி போன்ற தானியங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாத்தி கட்டி விதைத்தார்கள். அந்த விதைகள் வளர்ந்து மீண்டும் தானியங்கள் தரும்வரை அந்த இட த்திலேயே இருந்தார்கள். அந்தத் தானியங்கள் அவர்களுடைய உணவுத்தேடலை குறைத்தது. தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தானிய விளைச்சல் பிறகு திட்டமிட்டதாக மாறியது. விவசாயம் பிறந்தது. (தத்துவம் அறிவோம்) உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • பூங்கா நண்பர்கள்

    ” ஸ்ஸ்ஸ்ஸ்.. காது கேட்கிறதா? “ என்று ஒரு சத்தம் கேட்டது. வானத்திலிருந்து ஸ்மைலி நிலா எட்டிப் பார்த்தது. தூரத்திலிருந்த நட்சத்திரம் கூட காதுகளைக் கூர்மையாக்கியது. பூங்காவில் ஆழ்ந்த உறக்கத்தில் கார்பன் டை ஆக்ஸைடை குறட்டையாக விட்டுக்கொண்டிருந்த செடிகள் லேசாய் அசைந்து கொடுத்தன. அந்தச் செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சிகள் “ யார் அது? யார் அது? கீச் கீச் “ என்று சத்தமிட்டன. ஒரு ஓரமாய்ப் போய்க் கொண்டிருந்த சாரைப்பாம்பு வாயில் கௌவிய தவளையுடன் ஒரு கணம் நின்று சுற்றிலும் பார்த்தது. “பகல்ல தான் மனிதர்கள் தொந்திரவு என்றால் இரவிலும் வந்து இப்படிச் செய்கிறார்களே..” என்று நினைத்துக் கொண்டே வேகவேகமாக ஊர்ந்து சென்றது. அப்போதும் கூட அருகில் கிடந்த சிமெண்ட பெஞ்சு அசையவில்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. மறுபடியும் “ஸ்ஸ்ஸ்ஸ்.. ஏய் என்ன இப்படித் தூங்கறே?“ என்றது முதலில் கூப்பிட்ட கிரானைட் பெஞ்சு. அது நகரத்தின் நடுவில் இருந்த பூங்கா. நள்ளிரவு நேரம். அப்போது தான் பூங்காவில் இருக்கும் பெஞ்சுகள், மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், புழுக்கள், பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள், எலிகள், தவளைகள், குருவிகள், மைனாக்கள், காகங்கள், நாய்கள், பூனைகள், மரங்களின் கிளைகளில் தங்கி ஓய்வெடுக்கும் காற்று, பூங்காவின் காவல்காரர் மணி அண்ணன் எல்லாரும் தூங்குகிற நேரம். அந்த நேரத்தில் இந்தச் சத்தம் எல்லோரையும் உசுப்பிவிட்டது. ஆனால் கிராணைட் பெஞ்சின் நண்பனான சிமெண்ட பெஞ்சு கண்விழிக்கவில்லை. காற்றுக்குப் பொறுக்கவில்லை. மரங்களிலிருந்து குளிரை அள்ளிக் கொண்டு அப்படியே சிமிண்ட் பெஞ்சின் மீது போய் மோதியது. “எப்பா எந்திரிப்பா? உன் பிரண்ட் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்..” என்று ஊளையிட்ட து. சிமெண்ட் பெஞ்சு குளிரில் நடுங்கிய படியே, “ஸ்ஸ்ஸ் யப்பா என்ன குளிரு...“ என்று நடுங்கிக் கொண்டே கண்களைத் திறந்தது. எதிரில் கிரானைட் பெஞ்சு கோபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. உடனே, “ ஹிஹ்ஹி கொஞ்சம் அசந்துட்டேன்.. வயசாயிடுச்சில்ல..” என்று இளித்தது. உடனே கிரானைட் பெஞ்சு, “ ஆ ..ஊ..ன்னா வயசாயிடுச்சுன்னு சொல்லிருவியே.. இன்னிக்குக் கூட இரண்டு பெரியவர்கள் பேசும்போது, கேட்டியா சம்முகம்.. எம்பேரன்..ஒண்ணாங்கிளாஸ் படிக்கான்.. இப்ப தினமும் கேக்க ஆரம்பிச்சுட்டான்..தாத்தா நீ எப்ப செத்துப்போவே? எப்ப செத்துப் போவேன்னு.. நான் கேட்டேன்.. ஏண்டா செல்லம் கேக்கிறே? இல்லை ரோஷனுடைய தாத்தா செத்துப் போனதுக்குக் கூட்டமாய்க்கூடி பட்டாசு போட்டாங்களாம்.. பழம் காசு.. எல்லாம் தூக்கி வீசுனாங்களாம்.. அப்படிங்கிறான்..“ என்று சிரித்தபடியே சொன்னார் அந்தப் பெரியவர். சம்முகம் சிரித்தார்.. “ டேய் சோமு.. குழந்தைகளுக்கு வயசானா செத்துப் போவாங்கன்னு தெரிஞ்சிருக்கில்ல.. அது தான் முக்கியம்.. அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும்.. மற்றபடி அர்த்தம் தெரிஞ்சு கேட்டிருக்க மாட்டான்..” என்று சம்முகம் சொல்லி முடித்ததும் இரண்டுபேரும் அமைதியாகிவிட்டனர் பேசவேயில்லை. அப்படியே கொஞ்ச நேரத்தில் எழுந்து போய் விட்டனர் என்று சொல்லியது. அதைக் கேட்ட சிமெண்ட் பெஞ்சு கொஞ்சநேரம் பேசவில்லை. “ என்ன தூங்கிட்டியா கிழவா? “ என்று கிசுகிசுத்தது கிரானைட் பெஞ்சு. பெரிய பெருமூச்சுடன் சிமெண்ட் பெஞ்சு, “ இல்லைப்பா.. எனக்குக் கூடத்தான் வயசாயிருச்சு.. ஒரு கால்ல பாதி அரித்து விட்டது.. உடலில் இருந்த பளபளப்பு போய்விட்டது. வெயிட்டாய் நாலுபேர் உட்கார்ந்தால் நானும் அப்படியே உட்கார்ந்துருவேன்.. ஆனால் இன்னிக்கிப் பாரு…மத்தியானநேரம்.. கொஞ்சம் புழுக்கமாகத் தான் இருந்தது. வேர்க்க விறுவிறுக்க ஒரு பள்ளிக்கூடப்பையன் வந்து என்மீது உட்கார்ந்தான்.. வந்ததிலிருந்தெ ஒரு நிலையில் இல்லை.. பள்ளிப்பையைத் திறப்பான் மூடுவான்.. திறப்பான் மூடுவான்.. முகமே இருண்டு போயிருந்தது. கிராமத்துப்பையன் போலிருந்தான். ஒருவேளை கிராமத்துப்பள்ளிக்கூடத்தில் படிக்கிறானோ என்னவோ? எப்போதும் அழப்போகிறவனைப் போல இருந்தான்.. அவனுடைய வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. முன்பு மாதிரி காது சரியாக் கேட்பதில்லையா? என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. உற்றுக் கேட்டேன். பகீரென்றது. ‘நான் இருக்க க்கூடாது.. செத்துப்போயிரணும்..’ என்று திரும்பச் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். எப்படியிருக்கும் எனக்கு? சின்னப்பையனுக்கு இப்படி ஒரு எண்ணம் வரணும் என்றால் எவ்வளவு கொடூரம் நடந்திருக்க வேண்டும்? என்று யோசித்தேன்.. அந்தச் சின்னஞ்சிறுசிடம் என்ன நடந்தது என்று கேட்கநினைத்தேன்.. ஒருவேளை தன் துயரத்தை வெளியில் சொன்னாலாவது வேதனை குறையுமல்லவா? சாகவேண்டிய வயதா? சாக நினைக்கலாமா? எனக்குப் பதட்டமாகிவிட்ட து. எப்படிக்கேட்பது? என்று தெரியவில்லை. காற்று அண்ணாச்சியை அழைத்தேன். அண்ணாச்சி தான் எப்போதும் எல்லா இடங்களிலும் இருப்பாரே.. உடனே காற்று அண்ணாச்சி குளிர்ந்த காற்றை அள்ளிக் கொண்டுவந்து அப்படியே அந்தப் பையன் மீது வீசினார். குளிர்ந்த காற்று பட்டதும் அவன் முகத்திலிருந்த வெப்பம் தணிந்தது. என் மீதும் காற்றுப்பட்டதால் நானும் அவனைக் குளிர்வித்தேன்.. அவன் முகம் கொஞ்சம் சாந்தமானது.. நான் அவனிடம் மானசீகமாக, ‘ பேசு தம்பி பேசு.. “ பேசினால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.. என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. நான் பேசியது கேட்டதோ இல்லை காற்று அண்ணாச்சியினால் அவனுடைய மனக்கொதிப்பு குறைந்ததோ தெரியாது.. அவன் பேசத் தொடங்கினான். என்னை மட்டும் ஏன் சார் இப்படிச் செய்யச் சொல்லணும்? நல்லாப்படிக்கிறேன்.. பள்ளிக்கூட த்தில் ஒழுங்காக இருக்கிறேன்..சரி படிக்காவிட்டாலும் தான் என்ன? இப்படிச் செய்யச் சொல்லணுமா? வேறு பையன்களை ஏன் சொல்லலை? முதலில் வகுப்பில் இருக்கும் தண்ணீர்ப்பானையில் தண்ணீர் குடிக்க க்கூடாது.. தனியாத்தண்ணீர் கொண்டு வரணும் என்று சொன்னார். சரி என்று கொண்டு வந்தேன்.. பிறகு மற்ற பையன்களை விட்டுக் கொஞ்சம் தள்ளி உட்காரவேண்டும் என்று சொன்னார்.. உட்கார்ந்துகிட்டேன்.. என்னிடம் மற்ற பையன்கள் யாரும் அப்படி வித்தியாசமாய் நடக்கவில்லை. என்னிடம் பேசுவார்கள்.. கணக்கு நோட்டை வாங்கிக் கணக்கைப் போடுவார்கள்.. படம் வரையச் சொல்வார்கள். ஆனால் ஒரு சில பையன்கள் எனக்கு அருகில் கூட வரமாட்டார்கள்.. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.. ஆனால் சார் இப்படிச் சொல்வார் என்று நினைக்கவில்லை. மூன்று நாட்களாய் என்னை கக்கூஸ் கழுவச் சொல்கிறார்… அதுவும் எப்படி? டேய் கிட்ணன் மகன் தானே உனக்கு அதெல்லாம் பழக்கமா இருக்கும்.. போ.. போய் கழுவிட்டு வா.. என்கிறார். இவர்கள் மனதில் எவ்வளவு குப்பை இருந்தால் இப்படிச் சொல்ல முடியும்? அப்பா துப்புரவுத்தொழிலாளி என்பதால் நானும் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு எப்படி வருகிறது? முதலில் முடியாது என்றேன்.. எனக்குப் பழக்கமில்லை சார்.. என்று பணிவாகத் தான் சொன்னேன்.. அதைக் கேட்டதும் நான் பதில் பேசிவிட்டேன்.. மறுத்துவிட்டேன் என்று கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. என்னை அடிக்கிறார்! என்னுடைய அப்பாவோ அம்மாவோ கூட அடித்த தில்லை.. ஒரு குழந்தையை அடிக்கிறோமே என்ற உணர்வு இல்லை.. இவர்கள் எல்லாம் மனிதர்களா என்று தெரியவில்லை. வலி தாங்காமல் நான் போய் கழுவினேன். ஆனால் இனி முடியாது.. யாரிடம் போய்ச் சொல்லமுடியும்? எங்கள் கிராமமே சாதிகளாய் தான் பிரிந்திருக்கிறது.. இன்றும் கழுவச் சொல்லிவிடுவாரோ என்று பயந்து தான் ஊரிலிருந்து இந்த நகரத்துக்கு வந்து விட்டேன்.. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நான் செத்துப் போய் விடுகிறேன்.. என்று அவன் சொன்னதைக் கேட்ட தும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார். மனிதர்களா? இவர்கள் என்று காரித்துப்பத் தான் தோன்றியது. முதலில் இந்தச் சிறுவனின் மனதை மாற்ற வேண்டுமே. நான் என்ன செய்ய முடியும்? எல்லோரையும் அழைத்தேன். காற்றை அழைத்தேன் பறவைகளை அழைத்தேன் பூச்சிகளை அழைத்தேன் பூக்களை அழைத்தேன் மரங்களை அழைத்தேன் செடிகளை அழைத்தேன் கொடிகளை அழைத்தேன் மனிதர்களையும் அழைத்தேன் காற்று வீசியது. பூக்கள் ஒளிர்ந்து மணம் வீசின. பறவைகள் இன்னிசை பாடின. பூச்சிகள் ரீங்காரமிட்டன. மரங்கள் தலையசைத்தன. செடிகளும் கொடிகளும் கூட அந்தப் பையனிடம் பேசத் தொடங்கின. அந்தச் சிறுவன் அப்படியே என் மீது படுத்து உறங்கிவிட்டான். அவன் மனதின் பாரம் குறைய நான் அவனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொண்டேன். ” என்றது சிமெண்ட் பெஞ்சு. ” அப்ப நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன் “ என்று கேட்டது கிரானைட் பெஞ்சு. “ அங்.. நல்லாக்குறட்டை விட்டுத் தூங்கிகிட்டு இருந்தே..” என்று சொன்னது சிமெண்ட் பெஞ்சு. “ அப்புறம் என்னாச்சு? “ என்று கேட்ட து கிரானைட் பெஞ்சு. ” இருட்ட ஆரம்பித்ததும் காவல்காரர் மணி வந்து பூங்கா மூடுகிற நேரம் வந்து விட்டது என்று எல்லோரையும் அனுப்பும் போது இவனை எழுப்பினார். அவர் அந்தப் பையனுடைய அப்பாவுக்கு நண்பராம்.. அவர் அவனை அழைத்துக் கொண்டு போனார். அவ்வளவு தான்பா..” என்றது சிமெண்ட் பெஞ்சு. “ இப்படி ஒரு நிலைமை எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது.. “ என்ற கிரானைட் பெஞ்சு. “ சரி.. இப்படி ஒரு நிலைமை வந்தால் நீ என்ன செய்வாய்? அதைச் சொல்லேன்..” என்றது சிமெண்ட் பெஞ்சு. கிரானைட் பெஞ்சு என்ன சொல்லியிருக்கும்? உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • பள்ளி குழந்தைகளின் கோடை கால விடுமுறையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி?

    பள்ளி குழந்தைகள் கோடை கால விடுமுறை காலங்களில் மிகத் தெளிவான சிந்தனையும், நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெறவும், தொடர் கால மேற்படிப்பு வாழ்க்கை சிறந்து விளங்கவும், சிறந்த எதிர்காலம் வளமாக மாறுவதற்கும் இந்த வழிகாட்டல் முறைகள் குழந்தைகளின் நுண் ஆற்றல் திறன் மேம்பாட்டிற்கு பெரும் நன்மைகள் சேர்க்கும். என்பது திண்ணம். கோடை விடுமுறையின் முக்கியத்துவம் கோடை விடுமுறை என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல - அது குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்கான தங்கமான காலம். இந்த இரண்டு மாத காலகட்டம், பள்ளியில் கிடைக்காத திறன்களை வளர்க்கும் அரிய வாய்ப்பாகும். உளவியல் ஆராய்ச்சி கூறுவது: American Academy of Pediatrics ஆய்வின்படி, கட்டமைக்கப்படாத விளையாட்டு நேரம் குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான சிந்தனை, சுய ஒழுக்கம், மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்கிறது. விடுமுறையை திட்டமிட்டு கழிக்கும் குழந்தைகள் புதிய கல்வியாண்டில் 23% அதிக கவனத்துடன் படிக்கிறார்கள். விடுமுறையின் 5 பரிமாணங்களை பார்க்கலாம். முதலில் பரிமாணம் பயன் என்ன? உடல் வளர்ச்சி ஆரோக்கியமான எலும்பு, தசை, நோய் எதிர்ப்பு சக்தி மன வளர்ச்சி கற்பனை, படைப்பாற்றல், சிந்தனை விரிவாக்கம் சமூக வளர்ச்சி நட்பு, ஒத்துழைப்பு, தலைமைத்துவம் உளவியல் வளர்ச்சி தன்னை அறிதல், நன்றியுணர்வு, மதிப்புகள் திறன் வளர்ச்சி கலை, இசை, தொழில்நுட்பம், விளையாட்டு தினசரி கட்டமைப்பு - ஒரு இலட்சிய அட்டவணை தெளிவான நாள் அட்டவணை குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வையும் ,நோக்கத்தையும் தருகிறது. ஆனால் இது கட்டாயமாக இல்லாமல், நெகிழ்வான வழிகாட்டியாக இருக்க வேண்டும். நேரம் செயல்பாடு நோக்கம் காலை 6:00-6:30 யோகா / ஓட்டம் / விளையாட்டு உடல் சுறுசுறுப்பு காலை 6:30-7:00 தியானம் / நன்றி சொல்லுதல் மன அமைதி காலை 7:00-8:00 காலை உணவு + குடும்ப நேரம் பிணைப்பு, ஊட்டம் காலை 8:00-10:00 படைப்பு நேரம் (கலை/எழுத்து/இசை) திறன் வளர்ச்சி காலை 10:00-12:00 கற்றல் செயல்பாடு (புத்தகம்/பயிற்சி) மூளை வளர்ச்சி மதியம் 12:00-2:00 உணவு + ஓய்வு மீட்டெடுப்பு மதியம் 2:00-4:00 சேவை / பயணம் / புதிய திறன் அனுபவம் மாலை 4:00-6:00 விளையாட்டு / நண்பர்கள் சமூக வளர்ச்சி மாலை 6:00-7:00 குடும்ப உரையாடல் / கதை உணர்ச்சி இணைப்பு இரவு 7:00-8:00 வாசிப்பு / படைப்பு எழுத்து அறிவு விரிவாக்கம் இரவு 8:30-9:00 தூக்கம் தயாரிப்பு + கண்ணாடி நேரம் சுய மதிப்பீடு செய்தல் வேண்டும். உடல் ஆரோக்கியம் - உற்சாக வாழ்க்கை விளையாட்டும் உடற்பயிற்சியும் கோடை காலம் என்பது திரை நேரத்தில் கழிக்கும் காலமாக மாறக்கூடாது. சூரிய ஒளியில் விளையாடுவது வைட்டமின் D தருவதோடு, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள் (அவசியம் கற்க வேண்டியவை) ● கிளிஞ்சல் விளையாட்டு - கை-கண் ஒருங்கிணைப்பு வளர்க்கும் ● கோலி விளையாட்டு - கணக்கு சிந்தனை வளர்க்கும் ● கண்ணாமூச்சி, சடுகுடு - குழு உணர்வும் ஆரோக்கியமும் ● நொண்டி, தாண்டி ஆடல் - சமச்சீர் உணர்வு (balance) மேம்படும் நவீன விளையாட்டுகள் ● நீச்சல் பயிற்சி - முழு உடல் ஆரோக்கியம் ● சைக்கிள் சவாரி - இதயம் மற்றும் நுரையீரல் வலுப்படும் ● யோகா / உடற்பயிற்சி - மனநலம் மற்றும் உடல் நலம் ஒருங்கிணைப்பு ● கால்பந்து / கைப்பந்து / கிரிக்கெட் - குழு விளையாட்டு திறன் மேம்பாடு. சத்தான உணவு கோடை கால அட்டவணை நேரம், உணவு, ஏன் சிறந்தது? என்ற விபரம் அடிப்படையில் படி காலை உணவு : இட்லி + சாம்பார் / தோசை + சட்னி : நார்ச்சத்து, புரதம் காலை சிற்றுண்டி: பழங்கள் (வாழை, மாம்பழம்) : இயற்கை சர்க்கரை, வைட்டமின் மதிய உணவு: சாதம் + கீரை + மோர் : இரும்பு சத்து, குளிர்ச்சி மாலை சிற்றுண்டி: கடலை / கொழுக்கட்டை / நீர் மோர் : புரதம், வயிறு நிறைவு இரவு உணவு : கஞ்சி / கோதுமை ரொட்டி + பருப்பு : எளிதில் செரிமானம் நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் / இளநீர் நீரிழப்பு தடுப்பு மூளை வளர்ச்சி - அறிவு பயணம் வாசிப்பு திட்டம் ஒவ்வொரு குழந்தையும் இந்த கோடையில் குறைந்தது 5-8 புத்தகங்கள் வாசிக்க வேண்டும். வாசிப்பு என்பது மூளையின் 'உடற்பயிற்சி'. வயதுக்கேற்ற புத்தக பரிந்துரைகள்: 6-8 வயது: படக்கதை புத்தகங்கள், சிறார் மின்இதழ், புதிய சிந்தனை அறிவியல், பகுத்தறிவு, கற்பனைக்கதைகள் 9-11 வயது: அறிவியல் கதைகள், மாயாஜாலக்கதைகள், கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிய கதைகள் 12-14 வயது: அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, இளையோர் இலக்கியம், ஆளுமை நூல்கள், சமூக சிந்தனை நூல்கள்., வரலாற்று நாவல்கள் 15+ வயது: யதார்த்தக்கதைகள், சமூகப்பிரச்னைகள் சார்ந்த கதைகள், நிர்வாக திறன், தத்துவம் சார்ந்த நூல்கள். புதிய திறன்கள் கற்றல் (Skill Building) திறன் வகை குறிப்பிட்ட செயல்பாடு பயன் மொழி திறன் ஒரு புதிய மொழி - பிடித்தமான பிற மொழிகள் / ஆங்கிலம் மற்றும் பிற உலக நாடுகளின் மொழிகள் ஏதேனும் ஒன்று, வேலைவாய்ப்பு, மூளை வளர்ச்சி கணித திறன் Vedic Mathematics, Logic Puzzles வேகமான கணக்கிடல் தொழில்நுட்பம் கோடிங் அடிப்படை (Scratch/Python) எதிர்கால திறன் படைப்பு கலை ஓவியம், கவிதை, கதை எழுதல் உணர்ச்சி வெளிப்பாடு இசை / நடனம் கர்நாடக சங்கீதம் / பரதநாட்டியம் கலாச்சாரம், ஒழுக்கம் சமையல் எளிய உணவு தயாரிப்பு தன்னிறைவு, பொறுமை. படைப்பாற்றல் திட்டங்கள் 1. 'என் கோடை விடுமுறை நாட்குறிப்பு' - ஒவ்வொரு நாளும் 5 வரி எழுதுதல் 2. ஒரு சிறு கதை அல்லது கவிதை நூல் உருவாக்குதல் 3. விஞ்ஞான சோதனைகள் - வீட்டிலேயே செய்யக்கூடியவை 4. தோட்டம் அமைத்தல் - ஒரு செடியை விதைப்பு முதல் முதல் அறுவடை வரை குறிப்புகள் எழுதி பராமரித்தல். 5. ஒரு புகைப்பட நினைவு ஆல்பம் உருவாக்குதல் திறன் பயிற்சி மேம்படும். சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி குடும்ப பிணைப்பை வலுப்படுத்துதல் கோடை விடுமுறை என்பது குடும்பத்துடன் நேரம் செலவிட சிறந்த வாய்ப்பு. சமூக ஊடகங்கள் தரும் செயற்கை இணைப்பை விட குடும்ப நேரம் குழந்தைக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை தருகிறது. குடும்ப செயல்பாடுகள்: வாரந்தோறும் ஒரு குடும்ப பயணம் | சமையல் கற்றல் - தாத்தா பாட்டி பாரம்பரிய சமையல் | கதை சொல்லுதல் மாலை நேரம் | குடும்ப விளையாட்டு மாலை | வீட்டு தோட்டம் அமைத்தல் | பெரியோரிடம் அவர் வாழ்க்கை கதை கேட்டல் சமூக சேவை - இளம் தலைவர்களை உருவாக்குதல் மற்றவருக்கு உதவுவது குழந்தையின் தன்னம்பிக்கையையும் நேர்மறை உலக பார்வையையும் வளர்க்கிறது. ● அனாதை இல்லம் / முதியோர் இல்லம் சந்திக்கவும் ● சுற்றுச்சூழல் சேவை - மரம் நடுதல், குப்பை அகற்றல் ● படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கற்றல் உதவி ● விலங்கு காப்பகம் சந்திப்பு மற்றும் கவனிப்பு ● வட்டார சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். நண்பர்களுடன் தரமான நேரம் செயல்பாடு வளர்க்கும் திறன்: குழு புத்தக வாசிப்பு, பிற கிளப் விவாதம், கேள்வி கேட்கும் திறன்: கூடாரம் அமைத்தல் / Nature Camp, சிக்கல் தீர்க்கும் திறன், ஒத்துழைப்பு குழு ஓவியம் / சிற்பம் படைப்பாற்றல், பகிர்தல் நாடகம் / சிறு நாட்டுப்புற நிகழ்ச்சி தன்னம்பிக்கை, மொழி திறன் விளையாட்டு போட்டிகள் போட்டி மனம், தோல்வியை ஏற்றல். தெளிவான சிந்தனை - மன ஆரோக்கியம் தியானம் மற்றும் சுய விழிப்புணர்வு நவீன உளவியல் ஆய்வுகள் குழந்தைகளுக்கு தினமும் 10-15 நிமிட mindfulness அல்லது தியானம் இருந்தால் கவனம், நினைவாற்றல் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு கணிசமாக மேம்படுவதாக அறிவியல் ஆய்வுகள் மிக தெளிவாக தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான எளிய தியான முறைகள் மூச்சு தியானம் (Box Breathing): 4 நொடி உள்ளிழுத்து, 4 நொடி நிறுத்தி, 4 நொடி வெளிவிட்டு, 4 நொடி நிறுத்துக பின் தொடர்ந்து 12 முறைகள் செய்தல்.‌ திரை நேர கட்டுப்பாடு (Screen Time Management) செல் மற்றும் டி.வி பார்வை. ஆரோக்கியமான திரை நேர விதிகள்: 6-10 வயது: அதிகபட்சம் 1 மணி நேரம் 11-14 வயது: அதிகபட்சம் 2 மணி நேரம் 15+ வயது: அதிகபட்சம் 3 மணி நேரம் உணவு நேரத்தில் திரை கூடாது தூக்கத்திற்கு 1 மணி நேரம் முன் திரை நிறுத்துவது அவசியம். உணர்ச்சி புத்திசாலித்தனம் (Emotional Intelligence) வளர்ப்பு சவால் தீர்வு திறன் கோபம் வரும்போது 3 மூச்சு எடு, காரணம் யோசி, பேசு தோல்வி வரும்போது என்ன கற்றேன்? என்று கேட்டுக்கொள் பயம் வரும்போது பயத்தை பெயரிட்டு அழை, சிறியதாக்கு சோர்வு வரும்போது உடலை கேள், ஓய்வு எடு, இயற்கையை பார் பொறாமை வரும்போது அவர் திறன், என் திறன் - வேறுவேறு பயணம் மற்றும் கலாச்சார அறிவு தமிழக சுற்றுலா - அறிவு பயணம் கோடை விடுமுறை பயணம் வெறும் சுற்றுலா அல்ல - வரலாறு, அறிவியல், கலாச்சாரம் ஆகியவற்றை நேரில் கற்கும் 'living classroom'. இடம்,கற்கும் விஷயம், வகை ஆகியன அறிதல் மகாபலிபுரம் / காஞ்சிபுரம் சிற்பக்கலை, பல்லவர் வரலாறு கலாச்சாரம் அறிதல். வேடந்தாங்கல் பறவை சரணாலயம் சூழலியல், பறவை இயல், இயற்கை அறிதல். ISRO / அண்ணா அறிவியல் மையம் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் அறிவியல் அறிதல். நீலகிரி / கொடைக்கானல் தாவரவியல் பூங்கா ,காலநிலை இயற்கை சூழல் அறிதல். தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிடக்கலை, சோழர் கால வரலாறு அறிதல். முசிறி / மாமல்லபுரம் தமிழ் வணிக வரலாறு அறிதல். தாத்தா பாட்டியிடம் பாடல்கள் கேட்டு கற்றுக்கொள்ளுதல். பெற்றோர்களுக்கான வழிகாட்டி பெற்றோர் பங்கு - என்ன செய்யலாம், என்ன தவிர்க்கலாம்? செய்ய வேண்டியவை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? குழந்தையின் ஆர்வத்தை கேளுங்கள், திட்டமிட்ட வேலையில் நிரப்பாதீர்கள், சிறு சேவைகள் வீட்டில் கற்றுக்கொடுங்கள், திரை நேரம் baby sitter ஆக பயன்படுத்தாதீர்கள், தோல்விகளை அனுபவிக்க விடுங்கள், எல்லாவற்றிலும் முதல் இடம் வேண்டும் என்று அழுத்தாதீர்கள், குழந்தையின் உணர்வை சரியாக validate செய்யுங்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள், ஒரு நாளில் ஒரு மணி நேரம் முழு கவனம் செலுத்துதல், குழந்தைக்கு தண்டனை அல்லது அச்சம் மூலம் கட்டுப்படுத்தாதீர்கள். குழந்தையுடன் வாரந்தோறும் Check-in ஒவ்வொரு வாரமும் குழந்தையிடம் கேளுங்கள்: இந்த வாரம் என்ன புதிதாக கற்றாய்? யாரோடு நேரம் செலவிட மகிழ்ச்சியாக இருந்தது? என்ன கடினமாக இருந்தது? எப்படி சமாளித்தாய்? அடுத்த வாரம் என்ன செய்ய விரும்புகிறாய்? உதவி வேண்டுமா? எதில்? என்று குறிப்புகள் கண்டிப்பாக எழுதி வைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.இது முக்கியமான செயல்பாட்டு திட்டம். டிஜிட்டல் திறன் வளர்ப்பு - ஆரோக்கியமாக டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான பயன்பாடு ஆக்கபூர்வமான டிஜிட்டல் செயல்பாடுகள்: Scratch.mit.edu - எளிய கோடிங் கற்க, Khan Academy Kids - கணிதம், அறிவியல் கற்க, Duolingo - புதிய மொழி கற்க, YouTube Learning Channels - அறிவியல், வரலாறு கற்க, Google Arts & Culture - உலக கலை, கலாச்சாரம் அறிய, iNaturalist - தாவரம் / விலங்கு அடையாளம் காண பயன்படுவதை எளிமையாக விளக்கம் செய்தல் வேண்டும். AI மற்றும் எதிர்கால திறன்கள் இந்த தலைமுறை குழந்தைகள் AI உலகில் வாழ போகிறார்கள். கோடை விடுமுறையில் அடிப்படை AI கருத்துகள் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்துதல் வேண்டும். ● 'AI என்றால் என்ன?' - குழந்தை நிலையில் புரிந்துகொள்வதற்கு ● Chatbots கேள்வி கேட்கும் திறன் வளர்ப்பு ● 'தவறான தகவல்' கண்டறியும் விமர்சன சிந்தனை பெறுவதற்கு, ● தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு - online safety இறுதி சிந்தனைகள் - ஒரு மகிழ்ச்சியான கோடை விடுமுறையின் இறுதி இலக்கு: ஒவ்வொரு குழந்தையும் விடுமுறை முடியும்போது: ஒரு புதிய திறன் கற்றிருக்க வேண்டும். ஒரு நல்ல புத்தகம் வாசித்திருக்க வேண்டும். ஒரு நினைவுகூர தக்க அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தோடு அர்த்தமுள்ள நேரம் செலவிட்டிருக்க வேண்டும. மற்றவருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்க வேண்டும்.இதுவே ஆற்றல்! இதுவே நிறை செல்வம்! என்பதை உணர்ந்தால் என்றும் வாழ்வில் வெற்றியே! விடுமுறை என்பது வெறுமையாக கழிப்பதல்ல - வாழ்க்கையின் விரிவாக்கமே விடுமுறை என்பதை அனைவரும் உணர வேண்டும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கோடை விடுமுறை நல்வாழ்த்துக்கள்! கோ.சுரேஷ்குமார் மேனாள் மேல்நிலைக்கல்வி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி ஆசிரியர், கல்வியாளர், சிறார் கதை ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர், "மைக்ரோகிரின்" வளர்ப்பு செயல்பாட்டாளர், வேளாண் விழிப்புணர்வு கட்டுரையாளர், பயிற்சியாளார்.

  • பட்டுக்குட்டி

    யேய்…. யேய்… என்றுதான் அவளை அழைப்பார்கள். யேய் இங்க வா. யேய் அங்க போ. யேய்.. இதை எடுத்துட்டுப் போ. யேய்.. அதை எடுத்துட்டுப் போ. என்று யார் யாரோ வேலைகளைச் சொல்வார்கள். யேய்,, என்பது அவள் பெயர் இல்லை. ஆனால், அப்படித்தான் அழைப்பார்கள். அவளுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால், அவளுக்கே அது தெரியாது. அவள் பாட்டி மட்டும் அவளை “செல்லக்குட்டி” என்று கூப்பிடுவார். அவளுக்கு ஏழு வயதிருக்கும். அவளுக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அவளும் பாட்டியும் தூரத்தில் சின்னக் குடிசையில் வாழ்கிறார்கள்.  அவள் முகம், கை காலெல்லாம் அழுக்காகவே இருக்கும். அவள்  தலை முடி பரட்டையாக இருக்கும். எப்பொழுதும் இரண்டு அழுக்கான சட்டையும், இரண்டு பாவாடையும் உடுத்தியிருப்பாள். மேல் சட்டை கைப் பக்கம் கிழிந்திருக்கும். அப்படியே தான் அவள் ஊர் முழுவதும் சுற்றுவாள். தோளில் ஒரு பெரிய பிளாஸ்டிக் சாக்குப்பை போட்டிருப்பாள். நீளமாக ஒரு கம்பை வலது கையில் பிடித்திருப்பாள். கம்பின் நுனியில் ஒரு வளைந்த கம்பி கட்டியிருப்பாள். அதைக் கொண்டு, எதையும் பிடித்து இழுத்து விடுவாள்.  குப்கைளை விலக்கி பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் பொறுக்குவாள். அட்டைப் பெட்டிகள். வேண்டாத இரும்பு சாமான்கள். கிழிந்த பிளாஸ்டிக் பைகள். இப்படி பல வேண்டாத பொருட்களை அவள் பை முழுக்க நிரப்புவாள். பழைய பொருட்களைக் கடையில் கொண்டு சேர்ப்பாள். கொஞ்சம் பணம் கிடைக்கும். பாட்டியிடம் சரியாக எண்ணிக் கொடுப்பாள். இரவு வருவதற்கு முன்பே வீட்டுக்கு வந்து விடுவாள்.  அவள், காலையிலிருந்து மாலை வரை குப்பைகளை பரசும் போது, சில நேரம் அழகான கிழிந்த பொம்மைகள் கிடைக்கும். அவைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து விடுவாள். கிழிந்து போன அந்த பொம்மைகளை ஊசி நூலால் பாட்டி தைத்து தருவார். அப்புறம் பொம்மைகள் சரி ஆகி விடும். பழைய துணியால் அந்த பொம்மைகளுக்கு கலர்கலராக சட்டை, பாவாடை பாட்டி தைப்பார். பொம்மைகள் அழகாய் மாறிவிடும். அந்த பொம்மைகளோடு இரவில்  பேசிக்கொண்டடே தூங்கி விடுவாள். அவள், ஒரு நாள் பகலில் குப்பைகளை பரசிக் கொண்டிருந்தாள். அது  பெரிய பெரிய வீடுகள் உள்ள தெரு. ஒரு வீட்டின் சாளரத்தில் உட்கார்ந்திருந்த, ஒரு குட்டிப் பாப்பா அழுது கொண்டிருந்தாள். முதலில் இவள் கவனிக்கவில்லை. கொஞ்சம் உன்னிப்பாக கேட்டாள். அழும் சத்தம் இவள் காதில் நன்றாகவே கேட்டது. அது குட்டிப்பாப்பாவே தான். அந்த குப்பைகளையே பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவள் ஒரு நிமிடம் பயந்து விட்டாள். தன்னைத்தான் பார்த்து அழுகிறாளோ…. என்று நினைத்தாள். அவள், குட்டிப்பாப்பாவை விட்டு கொஞ்சம் விலகி நின்றாள். ஆனாலும், குட்டிப்பாப்பா அழுதாள். அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்து அழவில்லை என்று. அவள் குட்டிப் பாப்பாவிடம் என்ன? என்று கேட்டாள். ஆனால், குட்டிப்பாப்பா எதுவும் சொல்லவும் இல்லை. அழுகையையும் நிறுத்தவில்லை. அவள் மறுபடியும் கேட்டாள். இப்பொழுதும் அழுதாள். ஆனால், ஏம்… பொம்மை… என்று சொல்லிக் கொண்டே அழுதாள். அப்போது தான் அவளுக்கு டக்கென்று உறைத்தது. குட்டி பாப்பாவிடம் “ என்ன பொம்மை ” என்று கேட்டாள். குட்டி பாப்பா அழுகையை நிறுத்தினாள். அவளிடம் என் எல்லோ கலர் குட்டி நாய் பொம்மை…. என்றாள். அவள் சுற்றி சுற்றி பார்த்தாள். எங்கும் நாய்க் குட்டி பொம்மை இல்லை.  அவள் தேடுவதைப் பார்த்ததும் குட்டிப் பாப்பா அழுகையை நிறுத்தினாள். ஆனால், சாளரத்தின் வழியே மஞ்சள் நிற நாய் குட்டி பொம்மை தெரிகிறதா…? தேடினாள். எங்குமே இல்லை. குட்டிப் பாப்பா முகம் வாடியது. அவள், குட்டிப்பாப்பாவிடம் “எங்கேயாவது உன் நாய்குட்டி பொம்மை கிடைத்தால் கொண்டு வருகிறேன்” என்றாள். குட்டிப் பாப்பாவும்   தலை அசைத்தாள். அவள் அங்கிருந்து சென்றாள். அதன்பின், ஊருக்குள் எங்கெல்லாமோ சென்றாள். சென்ற இடமெல்லாம் குட்டிப்பாப்பாவின் நாய்க்குட்டி பொம்மையைத் தேடினாள். எங்கும் மஞ்சள் நிற நாய்க்குட்டி பொம்மை இல்லை. அவள் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அன்று இரவு பொம்மைகளோடு விளையாடி பேசிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளுக்கு நினைவெல்லாம் குட்டிப் பாப்பாதான். குட்டிப்பாப்பா அழுததையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவளிடமும் ஒரு நாய்க்குட்டி பொம்மை இருந்தது. அது கிழிந்து போன, நாய்க்குட்டி பொம்மை. அந்த பொம்மையைப் பாட்டி ஊசி நூலால் தைத்திருந்தாள். அதற்கு ஒரு பட்டுச் சட்டையும் தைத்துப் போட்டிருந்தாள். ஆனால் அது குட்டிப்பாப்பாவின் நாய்க்குட்டி பொம்மை இல்லையே. அவள் நாளையும் அழுவாளே…  நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள். மறுநாள் காலையில் அவள் சாப்பிட்டு, பாட்டியிடம் சொல்லி விட்டு பிளாஸ்டிக் சாக்கு, கையில் கொக்கிக் கம்புடன் கிளம்பினாள். ஆனால், இன்று முகத்தை தண்ணீரால் துடைத்தாள், தலையை சீவினாள். அவளுக்குள் ஒரு சந்தோசம். பெரிய வீடுகள் உள்ள தெருவிற்குள் சென்றாள். சில வீடுகளைக் கடந்து சென்றாள். குட்டிப்பாப்பாவின் வீடு மூன்றாவது தெரு. கடைசி வீடு. இரண்டு தெருவைக் கடந்தாள். மூன்றாவது தெருவுக்கு சென்றாள். எப்படியும் குட்டிப்பாப்பா அழுகையை நிறுத்தி விடலாம் என நினைத்து சிரித்துக் கொண்டாள். குட்டிப்பாப்பா வீட்டை நெருங்கினாள். அந்த வீட்டின் சாளரத்தில் பார்த்தாள். ஆனால், குட்டிப் பாப்பா அங்கு இல்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தாள். ஒரு வேளை குட்டிப் பாப்பா வீட்டிற்குள் இருக்கலாம். பிறகு பார்ப்போம்… என்று அவள் திரும்பினாள். “அக்கா..அக்கா… என் நாய்க்குட்டி பொம்மையை பார்த்தாயா,,?” என்று குட்டிப்பாப்பா அவள் கையை பிடித்தாள்.   அவள் கையை பிடித்து “அக்கா” என்று அழைத்ததில் ஒரு சந்தோசம்.  உடனே, அவள் பிளாஸ்டிக் சாக்கை திறந்தாள். குட்டிப்பாப்பா அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளிருந்து ஒரு நாய்க்குட்டி பொம்மையை வெளியே எடுத்தாள். குட்டிப் பாப்பா முகத்தில் சிரிப்பு பொங்கியது. அந்த நாய்க் குட்டி பொம்மை பட்டு போல் மினிங்கியது. அது குட்டிப் பாப்பா பொம்மை இல்லை. ஆனால் அதை விட அழகாக இருந்தது. குட்டிப்பாப்பா அந்த பொம்மையை அவளோடு சேர்த்து அணைத்தாள். கன்னத்தோடு ஒட்டிக் கொண்டாள். “ அக்கா………எனக்கு இந்த நாய்குட்டி பொம்மை ரொம்ப பிடிச்சிருக்கு இது பட்டுக்குட்டி என்றாள். குட்டிப்பாப்பா செய்வதைப் பார்த்து அவளும் சந்தோசத்தில் சிரித்தாள்.

  • எங்கள் வீட்டின் காலை விருந்தாளிகள்!

    குருவிகளும் புறாக்களும் காக்கைகளும் எவ்விப் பறந்து வானத்தில்  ஏறுவதைப் பார்த்தால் எல்லோருக்குமே கொஞ்சம் ஏக்கம் பிறக்கும். நம்மாலும் அப்படிப் பறக்க முடியவில்லையே! எனக்கோ, அதே பறவைகள் எங்கள் பக்கத்து வீட்டு மாடித் தரையில் இறங்குவதைப் பார்த்தாலே கூட ஏக்கம் ஏற்படும். நம்ம மாடிக்கு அந்தப் பறவைகள் வரவில்லையே! அந்த வீட்டில் குடியிருப்பவர் ஒவ்வொரு நாளும் காலையில் மாடிக்கு  வருவார். மடியில் முடிந்து வைத்திருக்கும் ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரிப்பார். அதிலே இருக்கிற ஏதோ ஒரு பொருளைக் கையில் அள்ளியெடுத்துத் தரையில்  தூவுவார். இங்கேயிருந்து பார்க்கிறபோது அது என்ன என்று தெரிவதில்லை. சில நொடிகளில் எங்கிருந்தோ புறாக் கூட்டம் வரிசையாக வந்து இறங்கும். தரையில் சுற்றிவந்து கீழே கிடப்பதை முழுதாகக் கொத்தித் தின்ற பிறகு திரும்பிப் பறந்துவிடும். புறாக்களோடு கொஞ்சம் காக்கைகளும் சேர்ந்துகொள்ள, அந்தக் காட்சியை விட்டுக் கண்களை விலக்குவதே எனக்குக் கடினமாக இருக்கும். "அவங்க இங்கேயும் வந்துட்டுப் போனா நல்லா இருக்குமே!" இந்த எண்ணம் என் மனசுக்குள் சிறகடிக்கும். ஒருநாள் அவரிடம் கேட்டேன்: “பறவைகளுக்கு என்ன தீவனம் போடுகிறீர்கள்? அரிசியா, நெல்லா அல்லது வேற ஏதாச்சும் தானியமா?” அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு வியப்பும் குழப்பமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. “காரச்சேவு வாங்கி வைத்திருக்கிறேன். அதைத்தான் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்துக் கொண்டுவந்து போடுகிறேன்,” என்றார் அவர். பறவைகளுக்கு இப்படி எண்ணெயில் பொரித்த, உப்பும் காரமும் மிகுந்த உணவுகளைத் தீவனமாகக் கொடுக்கலாமா? கூடாது என்று முன்பு விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. பறவைகளின் செரிமான மண்டலம் மனிதர்களுக்கு இருப்பதைப் போன்றதல்ல; உப்பு, எண்ணெய் வகையறா உணவுகள் அவற்றின் சிறுநீரகத்தையே கூட பாதித்துவிடும். நம் கண்ணில் படாத இடத்தில் இருந்துகொண்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கும். பறவைகளை வரவழைக்கும் ஆர்வம் தொடர்ந்தது. காலை நடைப்பயிற்சிக்குப் போகும்போது, வழியில் இன்னொரு வீட்டு மாடிக்கும்  பறவைகள் ஏதோ சொந்தக்காரர்கள் போலக் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். கூச்சத்தை ஒதுக்கிவைத்தேன், அந்த வீட்டின் முன் நின்று பறவைகளைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்மணியிடம்  கேட்டேன். அவர் சரியான வழியைக் காட்டினார். "அய்யா, பறவைகளுக்குக் கோதுமை, சோளம், கம்பு இன்னும் அது போல இயற்கையான தானியங்களைத்தான் தரணும். அதுதான் அவங்களோட ஆரோக்கியத்திற்கு நல்லது. நான் அப்பப்ப கீரைத் தண்டுகளையும் துண்டு துண்டா நறுக்கிப் போடுவேன்," என்றார். என்னைப் போலவே அவரும் பறவைகளை “அவங்க” என்று குறிப்பிட்டதைப் பாராட்டிவிட்டு விடைபெற்றேன். மறுநாளே எங்கள் வீட்டு மாடித் தரையின் ஒரு பகுதியைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினேன். வீட்டிலிருந்த கோதுமையைக் கைப்பிடி அளவு எடுத்து வந்து  தூவினேன். சாப்பிட்ட பிறகு தாகம் எடுக்குமே? இதற்கென்றே முதல் நாள் மாலையில் வாங்கி வந்திருந்த ஓரடிக்கு ஓரடி சதுர வடிவ, நான்கு அங்குல உயரமுள்ள மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி ஓர் ஓரமாக வைத்தேன். ஒரு புறாவும் வரவில்லை. காரச்சேவு சுவைக்குப் பழகிவிட்டார்கள்  போலும் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலை நடைப் பயிற்சி நேரத்தில், அந்த வீட்டின் முன்பாக நின்றேன். என்னைக் கவனித்துவிட்டவராக அந்தப் பெண் உள்ளிருந்து வந்தார். “நீங்க சொன்ன மாதிரிதான் செஞ்சேன். ஆனா புறா வரலையேம்மா,” என்று கேட்டேன். அவர் புன்னகைத்தார். “உடனே வந்துட மாட்டாங்கய்யா. தினமும் அங்கே இரை கிடைக்கும்னு உறுதிப்படுத்திட்டு வருவாங்க. நாலைஞ்சு நாள் கூட ஆகும். பொறுமையா காத்திருங்க, ஆனா தினமும் புதுசா தானியம் வைக்கணும். தண்ணீர் மாத்தணும். அப்புறம், தானியம் வைச்சுட்டு அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கக்கூடாது… தள்ளிப் போயிடணும்,” என்று கூறினார். இந்த ஆலோசனையைப் பின்பற்றினேன். சில நாட்களில் அருமையான அந்த மாற்றம் நடந்தது! முதலில் மூன்று புறாவினர் வந்தார்கள். சில நிமிடங்களில் மேலும் மேலும் பலர் வந்தார்கள். சாம்பல் வண்ணமும் வெள்ளையுமாக இருந்த புறாக்களோடு காக்கைகள் சேர்ந்தபோது ஏதோ ஒரு நவீன ஓவியம் தீட்டப்பட்ட திரை போல இருந்தது. இப்படியே சில நாட்கள் போன பிறகு, மைனாக்கள் இணைந்தார்கள்.  இவற்றைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் வந்து இறங்கினார்கள். ‘அட, நகரத்திலே சிட்டுக்குருவிகள் குறைந்துபோய்விட்ட நிலைமையில் இவர்கள் நம் இடத்திற்கு வந்திருக்கிறார்களே,’ என்ற பரவசத்தை அவர்கள் மனதில் இறக்கினார்கள்! அவர்கள்  தானியங்களைக் கொறித்துவிட்டுப் போய்விடுவதில்லை, குட்டிக் குளம் போன்ற அந்த மண் சட்டியில் இறங்கி உல்லாசமாகக் குளியல் போட்டுச் செல்கிறார்கள்! சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டும் தலையை நீரில் மூழ்கியெடுத்துச் சிலுப்பிக்கொண்டும் அவர்கள் ஆட்டம் போடுவதைப் பார்ப்பது நமக்கே ஒரு புத்துணர்ச்சிதான்!  அந்தப் பெண்மணி தன் குடும்பத்தாருடன் ஒருநாள் எங்கள் வீட்டு வழியாகச் சென்றபோது என்னைப் பார்த்துக் கையசைத்தார். நான் அவர்களை உள்ளே அழைத்து, எல்லோருக்கும் இனிப்பு–காரம்–தேநீர் கொடுத்துவிட்டு, பறவை விருந்தினர்கள் வருகை பற்றி உற்சாகத்தோடு சொன்னேன். அவர்கள் மேலும் சில முக்கியமான குறிப்புகளைக் கொடுத்தார்கள். பறவைகள் மீது அவர்கள் எல்லோருக்குமே அன்பும் அக்கறையும் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்கள் தெரிவித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் இங்கே தொகுத்துச் சொல்கிறேன்:  பொதுவாகப் பறவைகள் காலை 6 மணியிலிருந்து 11 மணி வரை இரை தேடும். மாலை நேரத்திலும் சில பறவைகள் இரை தேடிச் செல்லும் என்றாலும் காலையில் மட்டும் நாம் தீவனம் வைப்பதே போதுமானது. மாலையிலும் உணவிட விரும்பினால் அளவு குறைவாக வைக்கலாம்.  பறவைகளுக்கு ஒரு நினைவாற்றல் உண்டு. பாதுகாப்பான நிலைமை இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்றால் அவர்கள் நாள்தோறும் நம்மை நாடித் தவறாமல் வருவார்கள். சிட்டுக்குருவிகள் பொதுவாகக் கூட்டமாக வந்து குளிப்பதைப் பார்த்து ரசிக்கலாம். அமைதிச் சின்னம் என்று நாம் சொல்கிற புறாக்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளத்தான் செய்யும். அதைப் பார்த்துக் கவலைப்பட வேண்டியதில்லை. விரைவில் சமாதானமாகிவிடும். காக்கைகள் உணவை உண்பதோடு தொண்டையில் சேகரித்து வைத்துக் குஞ்சுகளுக்காக எடுத்துக்கொண்டும் போவார்கள். பெரும்பாலான பறவைகளும் அப்படித்தானே… உணவை விட பறவைகளுக்குத் தண்ணீர் முக்கியம். அதுவும் நகரச் சூழலில் அந்த வசதியை நாம் ஏற்படுத்திக்கொடுப்பது பறவைகளுக்குப் பேருதவியாக இருக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் அல்லாமல் மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைப்பது நல்லது. அது தண்ணீரைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். நம்மைப் போலவே பறவைகளுக்கும் அந்த இயற்கையான குளிர்ந்த நீர் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற வகையில், தண்ணீர்ச் சட்டியை, வெயில் படாத நிழலான இடத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் மாற்றும் வேலையை மாலை நேரத்தில் செய்யலாம். பறவைகளிடம் பாசம் காட்டலாம், ஆனால் சட்டியில் படியும் பாசத்தை அவ்வப்போது கழுவித் துடைத்து பளிச்சென வைத்திருக்க வேண்டும். நாம் போடும் கோதுமை, சோளம், கம்பு ஆகிய மூன்றும் புறாக்களுக்குத் தேவையான  கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தையும், ஆற்றலையும் வழங்கக்கூடிய சிறந்த தானியங்களாகும். இருப்பினும்,  சரிவிகித உணவிற்காக  வாரத்தில் ஓரிருமுறை  சிறிதளவு பச்சைப் பயறு அல்லது உளுந்து கலந்து கொடுக்கலாம். இது பறவையினரின் தசை வளர்ச்சிக்கும் இறக்கை வலிமைக்கும் துணையாகும். ஒரு நாள் ஒரு தானியம் என்று சிலர் வைக்கிறார்கள். அப்படியில்லாமல் ஒவ்வொரு முறையும் இந்த தானியங்களைக் கலவையாக வைப்பதே நல்லது. பறவையாருக்குப் பற்கள் கிடையாது என்பதால், தானியங்களை வயிற்றுக்குள்ளேதான் அரைக்க வேண்டும். அதற்குச் சிறிய கற்கள் தேவைப்படும். உணவுக்கு அருகிலேயே பெரு மணல், சிறு கற்கள், செங்கல் பொடி, முட்டை ஓடு என வைப்பது செரிமானத்திற்கு உதவும். மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் சிறிதளவு கருப்பு எள்,  கடுகு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் துணையோடு பறவையன்பர்கள் தங்களின் உடல் வெப்பநிலையைப் பராமரித்துக்கொள்வார்கள். தானியங்களையும் பயறுகளையும் சிலர் ஊறவைத்து இடுகிறார்கள். பறவைகள் இயற்கையாக உலர்ந்த தானியங்களையே சாப்பிட்டுப் பழகியிருக்கின்றன. ஊறவைத்துப் பரிமாறுகிறபோது, நொதித்தல் விளைவுகள் ஏற்பட்டுப் பறவைகளின் வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக குஞ்சுகள் மிகவும் சிரமப்படும். ஆகவே உலர்ந்த தானியங்களைப் பரிமாறுவதே ஏற்றது. இந்த வழிகாட்டல்களை எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் குழந்தைகள் எல்லோருமே போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுத்துகிறோம். புறாக்களும் காக்கைகளும் குருவிகளும் மைனாக்களும் எங்களை வாஞ்சையோடு பார்ப்பது போல உணர்கிறோம். முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கூண்டில் அடைத்து வைத்து, வேளாவேளைக்கு இரையும் தண்ணீரும் வைத்து அன்பாகப் பராமரிப்பதாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் பறவைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே செய்கிறோம். அந்தக் கொடுமையை நாங்கள் செய்யவில்லை என்பதால் காலை நேர மாடி நண்பர்கள் கூடுதல் அன்புடன் வந்து செல்கிறார்கள். விரைவில் இந்த இறக்கை விருந்தாளிகளுடன் பச்சைக் கிளிகளும், வீட்டின் பின்னால் உள்ள மரத்தில் அமர்ந்து செல்லும் பெயர் தெரியாத வேறு சில வண்ணப் பறவைகளும் சேர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். வரவேற்கக் காத்திருக்கிறோம். இப்போதெல்லாம் மாடியில் உணவை வைத்த பிறகு, நான் அந்த வழியாக அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தாலும்  பறவை நண்பர்கள் பதறிப் பறப்பதில்லை. "நம்ம ஆள்தான்" என்று இயல்பாகத் தானியங்களைக் கொத்தி எடுத்துக்கொள்கிறார்கள். தானியக் கலவையைத் தாம்பாளம் போன்ற ஒரு அகலமான மரத்தட்டில் வைக்கிறோம்.  இன்னொரு சுவையான செய்தி –பக்கத்து வீட்டு நண்பரும் தானிய விருந்தளிக்கத் தொடங்கிவிட்டார். “காக்கை குருவி எங்கள் ஜாதி” – இது நம் மகாகவி பாரதி பாட்டு. அவருடைய அனுமதியோடு எனது மாற்று: “காக்கை குருவிகளின் ஜாதி நான்.” அ. குமரேசன் பத்திரிகையாளர் பணியில் நாற்பதாண்டுகளாகப் பயணம். தற்போது ‘செம்மலர்’ இதழின் துணையாசிரியர். நேரடிப் புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமாக 42 புத்தகங்கள். சிறாருக்கென  எழுதிய ‘எதிர்ப்பதம்’, ‘வனவிலங்கு உடலில் வரி வந்தது எப்படி’ ஆகிய கதைப் புத்தகங்கள் 2, ‘சாரி  பெஸ்ட் ஃபிரெண்ட்’, ‘உலகைச் சுற்றி 80 நாட்கள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் 6. கட்டுரையாக்கங்களில் கூடுதல் ஈடுபாடு. உரை நிகழ்த்துவதிலும், குழந்தைகளோடு உரையாடுவதில் இரட்டிப்பாகவும் ஆர்வம்.

  • இலண்டனிலிருந்து அன்புடன் – 11

    உலகின் மோசமான விண்வெளி வீரர் ‘லண்டனிலிருந்து அன்புடன்’ தொடரில், இம்மாதம் “The Long-Lost Secret Diary of the World’s Worst Astronaut” என்ற ஒரு கலக்கலான புத்தகத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். “என்ன இது? புத்தகத்தின் பெயர் இவ்வளவு நீளமாக இருக்கிறது?” என்று யோசிக்கிறீர்களா? இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் டிம் காலின்ஸ் (Tim Collins), இதுபோல ‘The Long-Lost Secret Diary of the World’s Worst...’ (Pirate, Samurai, Knight) எனப் பல வேடிக்கையான புத்தகங்களை எழுதியுள்ளார். அழகிய ஓவியங்கள், பெரிய எழுத்துக்கள் என இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும், கதை சொல்லும் விதமும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். 200 பக்கங்கள் இருந்தாலும், ஒரு பக்கத்தில் சில வரிகளே இருப்பதால் உங்களால் மிக எளிதாக வாசிக்க முடியும். இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ஒரு நாட்குறிப்பு (Diary) வடிவில் எழுதப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும் அல்லவா? ஒவ்வொரு நாளும் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அதில் குறித்து வைப்போம் அல்லவா? அதே போன்ற ஒரு டைரிதான் இந்த நாவல். இது “எல்லி” (Ellie) என்ற 12 வயது சிறுமியின் ரகசிய டைரி. எல்லி தனது டைரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே எழுதுவாள். சில நாட்களில் டைரி எழுதாமல் சோம்பேறித்தனமாகக்கூட இருந்துவிடுவாள்! எல்லியின் டைரி ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது. (வருடம் ஏதும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் இது எதிர்காலத்தில் நடக்கும் கதை என்று ஆசிரியர் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.) அன்றுதான் அமெரிக்காவின் நாசா (NASA) நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு (Mars) ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. எல்லியின் தந்தை நாசாவில் வேலை பார்ப்பவர். அதனால் அந்த விண்கலம் விண்ணில் பாய்வதை மிக அருகில் இருந்து பார்க்கும் அருமையான வாய்ப்பு எல்லிக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு, கோடை விடுமுறையில் அப்பாவுடன் நாசா அலுவலக நூலகத்திற்கு எல்லி தொடர்ந்து செல்கிறாள். அங்கே அவள் செய்யும் குறும்புத்தனங்கள், அதனால் நாசாவில் ஏற்படும் சிக்கல்கள், அதைச் சரி செய்ய நாசா எடுக்கும் அதிரடி முடிவுகள் எனப் புத்தகம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இறுதியில் எல்லி வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்கிறாள். "செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கிய முதல் மனிதர்" எனும் பெருமையையும் பெறுகிறாள்! எல்லியுடன் வேறு சில மாணவர்களும் இந்தப் பயணத்தில் இணைகின்றனர். அதில் தேவ் எனும் இந்தியச் சிறுவனும் உண்டு. மொத்தம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவல், விண்வெளிப் பயணத்தில் இருக்கும் அறிவியலை மிகவும் சுவாரசியமாகவும் துல்லியமாகவும் நமக்குச் சொல்கிறது. இது ஒரு கற்பனைக் கதை என்றாலும், ஒரு விண்வெளி வீரராக என்னென்ன பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை எல்லி வழியாக ஆசிரியர் மிகவும் நகைச்சுவையாக விளக்குகிறார். புத்தகத்தில் ஆங்காங்கே, “Get Real” எனும் தலைப்பில் சில உண்மைத் தகவல்களை ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார். எது கற்பனை, எது அறிவியல் உண்மை என்பதை இது விளையாட்டாகப் புரியவைக்கும். அதேபோல், புத்தகத்தின் முடிவில் “Mission to Mars” எனும் தலைப்பில் செவ்வாய் கிரகப் பயணம் குறித்த அறிவியல் மற்றும் வரலாற்று முயற்சிகளையும், மனித இனத்தின் விண்வெளிச் சாதனைகளையும் ஆசிரியர் எளிமையாக அறிமுகப்படுத்துகிறார். விண்வெளி குறித்து அறிய ஆர்வமுள்ள குட்டீஸ் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. உங்களைப் போன்ற மாணவர்களின் பார்வையிலிருந்து மிகவும் குறும்புத்தனமாகவும், அதே சமயம் அக்கறையுடனும் இந்தப் புத்தகம் பேசுகிறது. பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

bottom of page