உலகை மாற்றச் சொன்ன மார்க்ஸ்
- சரிதா ஜோ
- Aug 15
- 3 min read

ஜோ: வணக்கம் செல்லக்குட்டிகளா! இன்னைக்கு நாம பார்க்கப் போற ஆளுமை கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
நகுலன்: நான் ஒரு புத்தகத்தில் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் பெரிய தாடியுடன் கம்பீரமாக இருந்தார்.
ரதி: இந்த உலகத்தில் எல்லோரும் சமமா வாழனும்னு சொன்னவர்னு என்னோட அண்ணன் சொல்லியிருக்கார்.
ஜோ: வாவ்! அருமை. பரவாயில்லையே, அவரைப் பத்தித் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே! சரி, இன்னிக்கு நாம இன்னும் கொஞ்சம் அவர் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? மார்க்ஸ் ஜெர்மனியில் 1818-ல் பிறந்தவர். அவரோட தந்தை ஒரு வழக்கறிஞர். சின்ன வயசுல இருந்தே மார்க்ஸ் புத்தகங்களைத் தான் நண்பனாக வைத்துக்கொண்டார். அவர் ஒரு வலிமையான அறிவாற்றல் கொண்ட மாணவன்.
கல்யாணம் ஆயிடுச்சு. அவரோட மனைவி பெயர் ஜென்னி… . அவங்களுக்கு ஏழு குழந்தைங்க. ஆனா சில குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துட்டாங்க. அவர்கள் குடும்பம் பெரும்பாலான நேரங்களில் வறுமையிலே வாழ்ந்தாங்க.. ஆனால் அதை எல்லாம் மார்க்ஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஏழை எளிய மனிதர்களின் துயரங்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை நூல்களை வாசித்தார்.
அவர் ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர், புரட்சியாளர் மட்டுமல்ல தத்துவவாதியும் கூட.
நகுலன்: அவங்க போராடினாரா ?
ஜோ: நிறையப் போராடி இருக்கிறாரு. சாதாரணமான ஏழை எளிய தொழிலாளர்களுக்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய எழுத்துக்கள் சிந்தனைகள் இன்றும் உலகம் முழுவதும் பல பெரிய போராட்டங்களை தூண்டி விடுகின்றது. அவர் சொன்ன முக்கியமான கருத்து எல்லா மனிதர்களும் சமமாக வாழ வேண்டும் என்பதுதான். ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே உள்ள பெரிய வேறுபாட்டிற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக சொன்னவர்.
நகுலன்: மார்க்ஸ் எதாவது புத்தகம் எழுதியிருக்காரா அத்தை,?
ஜோ: எழுதியிருக்காரு. ரொம்ப முக்கியமான புத்தகம் – "தாஸ் காப்பிட்டல்" (Das Kapital). தமிழில் மூலதனம் என்ற பெயரில் வெளிவந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக அவர் 1700 புத்தகங்களை ஆய்வு செய்தார். அதில் பொருளாதாரம், தொழிலாளர்களின் நிலை, பணம் ஒரே இடத்தில் எப்படி குவிகிறது.. உழைப்பாளிகள் எப்போதும் ஏன் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் என்ன? இந்த நிலைமை மாற என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றியும் எழுதி இருக்காரு.. .
ரதி: அது எங்கள மாதிரி பசங்க படிக்க முடியுமா அத்தை?
ஜோ : நீங்க படிக்கலாம். புரியறது கொஞ்சம் சிரமமா இருக்கும்.உதாரணமாக — ஒரு தொழிலாளி ஒரு நாள் முழுக்க வேலை செய்கிறார். ஆனா அவருக்குச் சம்பளம் குறைவா இருக்கு. அவங்க உழைச்சதை வைத்து முதலாளி அதிகச் செல்வம் சேர்க்கிறாரு. இது நியாயமா?
நகுலன்: இல்லையே! எங்க வீட்டில் அப்பா அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. ஆனா கூட எங்க வீட்டில் எல்லாம் வாங்க முடியாது. அதுவும் இதே மாதிரி தானே?
ஜோ: அப்படித்தான் நகுலா. அருமையா புரிஞ்சுக்கிட்டையே. மார்க்ஸ் சொல்றது இதைத்தான்.தொழிலாளிகளே உண்மையிலேயே உலகத்தை நடத்துறவங்க. அவங்க முக்கியமானவங்க. அவங்களுக்கு உரிய மதிப்பு, சம்பளம், உரிமைகள் இருக்கணும் அப்படின்னு நினைச்சாரு.
நகுலன் : அவர் எங்க வேலை பார்த்தாரு? அவர் ஒரு ஆசிரியரா?
ஜோ : நல்ல கேள்வி! மார்க்ஸ் தன் வாழ்நாளில் பல வேலைகளை செய்தார். சில நேரங்களில் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். பல முக்கியமான பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் நிரந்தரமாக வேலை பார்த்தவரல்ல. வாழ்நாள் முழுவதும் உலகை மாற்றுவதற்காகத் தன்னுடைய சிந்தனையைச் செலவழித்தார்.. வறுமை, சுரண்டல், பசி, அறியாமை, இல்லாத ஒரு பொன்னுலகத்தை எப்படி உருவாக்குவது என்று சிந்தித்து எழுதினார். அதனால் தான் இந்த உலகிலுள்ள தத்துவ வாதிகள் எல்லோரும் இந்த உலகத்தில் நிலவிய ஏற்ற தாழ்வுகளுக்கு விளக்கம் மட்டுமே சொன்னார்கள்.. ஆனால் மார்க்ஸ் ஒருவர் தான் இந்த உலகத்தை மாற்ற முடியும். ஏற்ற தாழ்வுகளில்லாத சமத்துவ உலகத்தை உருவாக்கமுடியும் என்று அறிவியல்பூர்வமாகச் சொன்னவர்..
ரதி: மார்க்ஸ் அரசியலில் இருந்தாராங்க அத்தை?
ஜோ:. அவர் நேரடியாக அரசியல் களத்தில் இல்லை. ஆனா அவர் சிந்தனைகள் அரசியல் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
அவரோட நண்பர் எங்கல்ஸ் உடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதினாரு.. இன்றும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் புத்தகம் அது..
நகுலன்: அப்படி என்ன அந்தப் புத்தகத்தில் இருக்கிறது அத்தை?
ஜோ: அது ஒரு சிறிய புத்தகம் தான். அதில், உலகம் எப்படி இருக்கிறது? அது எப்படி மாற்றப்படவேண்டும், பொதுவுடமைச் சமூகம் எப்படி இருக்கும் என்று சொல்றாங்க.
அதில் உள்ள ஒரு முக்கியமான வாசகம் –
"உலகத் தொழிலாளிகளே, ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை கை விலங்குகளைத் தவிர எதிரில் இருப்பதோ பொன்னுலகம் "
ரதி: அத்தை! இப்போ எங்கெல்லாம் அவரோட பொதுவுடமைச்சிந்தனை இருக்குது?
ஜோ: மிகவும் முக்கியமான கேள்வி! உலகம் முழுவதும் பொதுவுடமைக் கட்சிகள் இருக்கின்றன.. அவரது சிந்தனைகளைப் பின்பற்றி பொதுவுடமை ஆட்சியை உலகின் பல நாடுகள் நடத்தி வருகின்றன. உதாரணமாக சீனா, வியட்நாம், கியூபா, வட கொரியா, இலங்கை, வெனிசுலா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சி நடக்கிறது.
.
நகுலன்: மார்க்ஸ் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு இருந்துச்சாங்க அத்தை?
ஜோ: அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்ன கருத்துகளுக்காக வேலைகளில இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கும் அவருடைய குடும்பத்தாரும் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடினர். அந்த நேரத்தில் அவருடை உற்ற தோழர் ஏங்கெல்ஸ் தான் உதவி செய்தார்.. ஏங்கெல்ஸ் இல்லை என்றால் மார்க்ஸால் மூலதனம் நூலை எழுதி இருக்கவே முடியாது என்று சொல்வார்கள்.. அதனால் தான் மார்க்ஸ் தொடர்ந்து எழுதுவதையும் சிந்திப்பதையும் நிறுத்தல. அவர் ஜெர்மனியில் பிறந்தாலும் பல நாடுகளுக்குத் துரத்தப்பட்டார்.. பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து. அவர் இறந்தது கூட லண்டனில் தான்.
ரதி: அவரைப் போல நாம் சிந்திக்க முடியுமா?
ஜோ : நிச்சயமாக! அதற்கு முதல் பாடம் எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும்.. இப்போது நாம் வாழும் சமூகம் எப்படி இப்படி சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது? அனைவருக்குமான கல்வி, உரிமை, சமவாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், சுருக்கமாகச் சொன்னால் எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும்.. எப்படி? என்று கேள்விகளின் பின்னால் சென்று ஆய்வு செய்யும்போது நாமும் நிறைய வாசிக்கவும் யோசிக்கவும் முடியும்..
நகுலன்: ரதி நாம் நாளை அவரைப் பற்றி ஓர் பாடல் எழுதலாமா?
ஜோ: அதுவும் அருமை நகுலா! நீ பாடல் எழுது. ரதி நீ அவரைப் பற்றிக் கட்டுரை எழுதேன்?
ரதி: சரிங்க அத்தை! “மார்க்ஸும் சமத்துவமும்”ன்னு தலைப்பா வைக்கலாமா?
ஜோ: ஆகா! நல்ல தலைப்பு! நீங்க ரெண்டு பேரும் பாடலையும் கட்டுரையையும் எடுத்துட்டு வந்து அத்தை கிட்ட காமிக்கப் போறீங்க சரியா?
நகுலன், ரதி : சரிங்க அத்தை கண்டிப்பாகச் செய்றோம்!
வாழ்க சமத்துவம்! வாழ்க சமூக நீதி!
Comentarios