top of page

பேசும் கடல்

ree

கடல் பாட்டியிடம் பேசும் போது நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்லுமளவுக்கு பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கேள்வி பதில் தொடர்ந்து கொண்டே இருந்தன.  இப்போது அவர்களின் அப்பாவிடமும் நிறைய கேள்வி கேட்க தொடங்கினர்.  


"அப்பா ........அப்பா நீங்கள் எப்பவும் வெற்றிலை போட்டுக்கிட்டே இருக்கீங்கல உங்களுக்கு வாய் வலிக்காதா?"  என்று அமுதா தன் அப்பாவின் மீசையை தடவிக் கொண்டே கேட்டாள்.


 "ஆமாம்.......  அப்பா! நானும்  இதை கேட்க நினைத்தேன் " இனியனும் இணைந்து கேட்டான். 

"இரண்டு பேரும் கடல் பாட்டிகிட்ட கேள்வி கேட்டது போய்  என்னிடம்மா.....?  சரி சொல்றேன்" என்று சிரித்தார் அப்பா.


ஆர்வத்தோடு இருவரும் கேட்கத் துணிந்தனர். 


" கடல்ல மீன் பிடிக்க அதிகாலை 2 மணி மூன்று மணி என்று நேரம் காலம் பாராமல் செல்வோம். காலநிலைக்கு ஏற்றார் போல், காற்றின் திசைக்கும், கடலின் நீரோட்டத்திற்கும் ஏற்றார் போல் தொழில் செய்யும் நேரம், காலம் எல்லாம் மாறுபடும். ஒரே சீரான நேரத்தில் கடல் தொழில் செய்வோம் என்று சொல்ல முடியாது. கடல் தொழில் செய்பவர்களுக்கு மூன்று பெரும் சிக்கல்கள் உருவாகும். "........


என்று சொல்லியவர் ஒரு கணம் நிறுத்தினார். தன் வாயிலிருந்து வெற்றிலை எச்சிலை துப்புவதற்கு எழுந்து போனார்.  


"மூன்று சிக்கல்கள் என்னப்பா ........." அமுதாவும், இனியனும் அவசர அவசரமாக அப்பாவிடம் கேட்டார்கள்.


" பசி, தூக்கம் ,கடும் குளிர் இவை மூன்று கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்.  இவை மூன்றுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தான்"


" அப்பா என்னப்பா சொல்றீங்க ......" இனியன் அப்பாவின் உணர்வோடு இணைந்தான்.


" ........சாமத்துல இரண்டு மணிக்கு போனால் 12 மணி நேரம் கழித்து தான் திரும்ப கரை வர முடியும்.  அதுவரை கடல் தண்ணீரிலேயே இருப்பது நிலத்தில் இருப்பது போல் எளிதானது அல்ல. முதலில் கடும் குளிர், பனி காலங்களில் வெற்றிலை போட்டால் குளிர் நம்மை தாக்கும் உணர்வே தெரியாது. நாவும் , பற்களும் மரத்து போகும்"   என்று அப்பா சொல்வதைக் கேட்ட குழந்தைகள் அவரைக் கனிவுடன் பார்த்தனர்.

 

I love you அப்பா " என்று அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அமுதா . 


இனியன் அப்பாவின் முதுகை கட்டிப் பிடித்துக் கொண்டான்.


அப்பாவின் முகத்தில் புன்னகை பூத்தது. அவர் தொடர்ந்தார்..... 


"நீண்ட நேரம் வெற்றிலையை மென்றுகொண்டே, வாயில் ஒதுக்கி வைப்பதால் பசியும் எடுக்காது தூக்கமும் வராது . கடலில் பயணிக்கும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்,  எப்போது அலை  உயர்ந்து எழும் என்று தெரியாது.  வெற்றிலையை வாயில் ஒதுக்கி வைத்து மென்று கொண்டே இருந்தால் தூக்கமும் வராது, பசியும் இராது, குளிர் காற்றும் தாக்காது"


என்று தன் தோளில் சாய்ந்து கேட்டுக்கொண்ட பிள்ளைகளின் தலையை தடவினார் அப்பா .


அண்ணே..... அண்ணே சோளக்காற்று, கச்சான்காற்று, வாடைக்காற்று எதுவும் நம்ம அப்பாவை தாக்காமல் இருக்கணும்னா கொஞ்சம் வெற்றிலை போட்டாலே போதுமா?


என்று அமுதா இனியனிடம் கூறினாள்.


" ஆமாம் அமுதா ஆனால் எல்லோரும் புகையிலை சேர்த்து போடுறாங்களே அதான் கவலையா இருக்கு....."


" தம்பி இனியா..... புகையிலை போடுறது தப்புதான் ஆனால் அந்த குளிரை தாங்க கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறார்கள்".


தாழ்ந்த குரலில் பேசினார் அப்பா. அவரும் புகையிலை போடுவார். அதைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள்.


"அமுதா.... காற்றுக்கு பெயரிடும் மீனவர்கள் அந்த காற்றை  எதிர்கொள்ள கண்டுபிடித்தது தான் வெற்றிலை பாக்கு போல."


" ஆமாம் அண்ணே, எனக்கு வெற்றிலை போடும் நபர்களை பார்த்தாலே பிடிக்காது.  ஆனால் இப்போதான் தெரியுது, ஒரு இலைக்குப் பின்னால் இவ்வளவு சோகமா? "

என்று அமுதா இப்போது பொறுப்பாக பேசினாள் .


ஓங்கி அடித்த அலை அமுதாவின் கால்நினைத்து சென்றது.


" இன்னைக்கு உங்க அப்பா கிட்டயே இருந்துட்டீங்க, என்கிட்ட வரலையா‍? ”

என்று கடல்பாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார்.


” ஆமாம் பாட்டி ! அப்பா வெற்றிலை போடுவது பற்றி பேசினார்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம் .”


என்று சேர்ந்த குரலில் சொன்னார்கள்.


"அது சரி....  உங்களுக்கு இன்னொன்னு சொல்லட்டுமா  இதுநாள் வரை கடல் தொழில் செய்யும் மீனவர்கள் கடலில் மது அருந்துவது கிடையாது.  அதுதான் அவங்க எனக்குத் தரும் மரியாதை"


" அப்படியா !......." இருவரும் ஆச்சரியமாய் கேட்டார்கள்.


” பாட்டி பாட்டி பாய் மரம்னா என்ன? ” என்று அமுதா கேட்டாள்.


” சொல்றேன்........ கண்மணிகளே....” என்று சொன்ன பாட்டி மீண்டும் மறைந்து போனார்.


( கடல் பேசும் )


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Aug 15
Rated 5 out of 5 stars.

💯 Reality

Like
bottom of page