அன்புள்ள அப்பா
- க.சம்பத்குமார்
- Aug 15
- 2 min read

தமிழில் பதின்பருவ குழந்தைகள் குறித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கின்றன. அக்குழந்தைகள் வாசிக்க என்று எண்ணற்ற புத்தகங்கள் இருந்தாலும்கூட அவ்வயது குழந்தைகளின் நடத்தைகளை பிரதிபலிக்கும் நூல்கள் வெகு சிலவே. அதிலும் புனைவாக்க வகைமைகளில் அரிதாகவே காணக் கிடைக்கின்றன.
அன்புள்ள அப்பா என்கிற நூல் அப்படியான வகைமையில் அமைந்திருக்கும் என்பதை வாசிக்கத் தொடங்கும் வரை அறிந்திருக்கவில்லை. பொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் நூல்கள் மீது பெரும் விருப்பம் எனக்கு உண்டு. அந்நிறுவனத்தின் நூல்களை வாசித்ததின் வழியாகவே இந்திய அளவிலான நல்ல நூல்களின் அறிமுகம் கிடைத்தது.
“அன்புள்ள அப்பா” மராட்டி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியே இந்நூல்.
நூல் குறித்த மேலதிக விவரங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை.
முதல் அத்தியாயம் வாசிக்கத் தொடங்கும்போதே கதை நாயகனான பிபுல் குறித்த அறிமுகம் அதிரடியாகப் பதிவாகிறது. அவனது வீட்டிலுள்ள சகோதரிகள் மற்றும் அவனது தாய் உட்பட அனைவரும் எப்படி அவனிடம் பயந்து ஒடுங்கி நிற்க தலைப்படுகின்றனர் என்பது விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
கதை பதின்பருவ வயதினர் விரும்பும் வகையில் சாகசமும் துப்பறிதல் சார்ந்த கிளர்ச்சியும் உடையதாக இருப்பதால் வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
தான் யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவனல்ல;
எனது விருப்பத்திற்கேற்பவே பள்ளி செல்வதும் செல்லாமலிருப்பதும் என ஒவ்வொரு காரியத்திலும் குடும்பத்திலுள்ளவர்களைப்
பதைபதைப்போடு வைத்துக் கொண்டிருப்பவன் பிபுல். அவனைத் தவிர அக்குடும்பத்திலுள்ள பிற குழந்தைகள் அவ்வளவு சமர்த்தாக பள்ளி செல்ல கிளம்பித் தயாராகையில் இவனைக் குறித்து மட்டும் மனம் புழுங்கி புழுங்கி சாகக்கிடக்கிறாள் அவனது அம்மா.
அம்மாவோடு உடனிருக்கும் மூத்தவள் ராணி தன் குடும்பத்தில் நிலையறிந்து பள்ளி நாட்களை இழக்க வேண்டிய சூழல் நேருகிறது. அவனது தந்தையோ அரசுப்பணி காரணமாக வெளியூரில் இருந்து வந்தாலும் நாள்தோறும் பிபுலை நினைத்து வருத்தப்பட வேண்டியவராகவே இருக்கிறார்.
இத்தனைக்கும் இடையில் தன்னையொரு முரடனாக வளர்த்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து திரியும் பிபுல் தனது நண்பர்களோடு சேர்ந்து பகல் நேரங்களில் திரைப்படம் பார்க்கவும் மாலை நேரங்களில் இருள் கூடிய பகுதிகளில் அமர்ந்து சிகரெட் புகைக்கவும் பழகிக் கொள்கிறான்.
ஒரு மாணவனை திருத்தி நல்வழிப்படுத்த அவனது குடும்பம் மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களான மருத்துவர், சமூக சேகவர், மளிகைகடைக்காரர், காவல் நிலைய அதிகாரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்வது நல்ல விளைவினைத் தருகிறது.
முன் காலங்களில் குழந்தைகளை அவர்கள் அறியாமலேயே அவர்களின் நடத்தைகளை கண்காணித்துக் கொண்டிருப்பதற்கான சூழல்; அவர்களோடு உரையாடிக் கொண்டிருப்பதற்கான சூழல் எல்லோருக்கும் வாய்க்கப்பட்டிருந்தது. பெற்றோர்களைத் தாண்டி உறவினர்கள் உட்பட எல்லோருமே அன்னியர்களாகிப் போன இன்றைய சூழலில்
குழந்தைகளோடான கவனத்தை வெளி சமூகம் குறைத்துக் கொண்டுள்ளது.
இது இன்றைய சூழலின் பெரும்பிழை.
இந்நாவலில் சிகரெட் வாங்கச் செல்லும் சிறுவனிடம் மளிகைகடைகாரர் சிகரெட்டைத் தராமல் அவ்வளவு வருந்தி கரைந்து போவதையும்; வேறு வழியின்றி அம்மாணவனுக்கு சிகரெட்டை கொடுத்துவிட்டு பெரும்பாவம் செய்துவிட்ட குற்றவுணர்வோடு உடனே கடையை அடைத்துவிட்டுக் கிளம்புவதையும் வாசிக்கும்போது இன்றைய காலங்களில் இப்படியான
தருணமெல்லாம் சாத்தியமா? என எண்ணத் தோன்றுகிறது.
கதையில் வரும் புலனாய்வு அதிகாரி மகனை விசாரணைக்காக காவல் நிலையம்
அழைத்துச் செல்ல முற்படும்போது அவனது அப்பாவும் உடன் வர முனைகிறார். அப்போது பளீரென புலனாய்வு அதிகாரி நிகுஞ்சா சில வார்த்தைகளை பேசிவிடுவார். அது பெற்றோர்கள் எல்லோருக்குமானதாக அமைந்திருக்கும்.
நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஏதேனும் ஒருவகையில் பிபுலை வசைபாடி விடுபவர்களாக இருக்க ராணியின் தோழியான மிருணாளினி தனது நேசத்தாலும் அக்கறையாலுமே பிபுலை தேற்றி வழிநடத்துபவளாக இருக்கிறாள். தவறுகளுக்கான தண்டனை குறித்த அச்சத்தில் தன்னை உணரத் தொடங்கும் தருணத்தில்தான் அவனுக்கு மற்றவர்களின் நேசமான பார்வையும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. கடைசி வரை கைவிடாத அவளின் தூய்மையான அன்பு அவனை இறுதியில் நெறிப்படுத்திவிடும் என்கிற
நம்பிக்கையை அளித்து நிறைவடைகிறது நாவல்.
பிறழ்நடத்தை உள்ளவனாக மாறிப் போன குழந்தையை மீட்டெடுக்க அக்குழந்தையைச் சார்ந்துள்ள அனைவரும் எடுக்கும் முயற்சிகள் நாவல் வடிவமாக சாகச உணர்வோடும் பதைப்பூட்டும் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களோடும் சுவைபட எழுதப்பட்டிருக்கிறது.
இந்நூலில் இடம்பெறும் ஓவியங்களின் உருவ தோற்றங்களும் கதையின் நிகழிடத்தை பொருத்தமாக சொல்லிவிடுகின்றன.
இன்றைய வகுப்பறைகளில் குழந்தைகளின் அதீத குறும்புகளையும்
வெளிப்பாட்டுத்திறன்களையும் முறைப்படுத்த இயலாது தவிக்கின்ற ஆசிரியர்களுக்கு இந்த நூலை வாசிப்பதென்பது ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும் இன்னமும் நம்பிக்கையோடு
செயலாற்றவும் உதவிகரமாக அமையும்.
நானும்கூட இந்த நூலை வகுப்பறையில் குழந்தைகளிடம் அவர்களுக்கான சாயலோடு கதையாகச் சொல்லலாம் என விரும்புகின்றேன்.
வாய்ப்பு அமையுமானால் நீங்களும்கூட இந்நூலை வாசிக்கலாம் நண்பர்களே.
க.சம்பத்குமார்
Comentários