பூச்சி இறால் தெரியுமா?
- நாராயணி சுப்பிரமணியன்
- Aug 15
- 1 min read

மீன் சந்தைகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். சற்றே வித்தியாசமான உடலுடன் கொஞ்சம் இறால் போலவே இருக்கும்
இந்த உயிரி "பூச்சி இறால்" என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது.
இறால் என்று பெயர் இருந்தாலும் இது இறால் இனம் அல்ல. சிங்கிஇறால்கள், நண்டுகள், இறால்கள் எல்லாவற்றுக்கும் ஒரு தூரத்து உறவினர் என்று சொல்லலாம். சிறு கடல் புழுக்கள், கணவாய்கள், சிப்பிகள், மீன்கள் போன்றவற்றை இவை வேட்டையாடி சாப்பிடும்.
ஆங்கிலத்தில் இதன் பெயர் Mantis shrimp. Praying Mantis என்ற ஒரு வகை பூச்சி இருக்கிறது, தெரியுமா? இது தமிழில் கும்பிடு பூச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பூச்சியைப் போலவே முன்னால் இருக்கும் கைகளை வைத்து வேட்டையாடுவதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
அறிவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதற்கு வைத்திருக்கும்
செல்லப்பெயர் என்ன தெரியுமா? "கட்டைவிரல் நறுக்கி".
சரியாகக் கையாளாவிட்டால் இது நம்மைக் காயப்படுத்திவிடும் பலம் கொண்டது.
அதென்ன அப்படிப்பட்ட பலம்??? ஒருமுறை இது தாக்கும்போது 1500 நியூட்டன் விசை இருக்குமாம்! ஒரு திறமையான பாக்ஸிங் வீரர் பலத்தைத் திரட்டி ஓங்கி ஒரு குத்துவிட்டால் எவ்வளவு வலுவாக இருக்குமோ, அவ்வளவு வலு! இவ்வளவு வலுவும் குறைவான வேகத்தில் வருவதில்லை. ஒரு நொடிக்கு 23 மீட்டர் வேகம், அதாவது மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் இந்தத் தாக்குதல் நிகழும்!

இந்தப் பூச்சி இறால்களுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. இவற்றின் பார்வைத்திறனும் அலாதியானது. கிட்டத்தட்ட மனிதர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு இவை பார்வைத்திறன் கொண்டவை.

சில பூச்சி இறால் வகைகள் உணவாகப் பயன்படுகின்றன. சில இனங்கள் அழகுக்காக மீன்தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.
Comments