top of page

யூனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் : 5

ree

ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று யுனிசெஃப் பிரகடனத்தின் ஆறாவது விதி சொல்லுகிறது. குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடைபெற வேண்டும். இன்றுள்ள சூழலில் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பெற்றோர் இந்தக்கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர் என்று நாம் பொதுவாகக் குறிப்பிடலாம். 


பெரும்பாலும் இருவரும் -தந்தை,தாய்- வேலைகளுக்குப் போயாக வேண்டிய நிலையில்தான் இத்தகைய குடும்பங்கள் இருக்கின்றன. பெண்கள், தாங்கள் எந்த வேலையில் இருந்தாலும் தமது குழந்தைகளின் படிப்பு,இதர தேவைகள் பற்றிய சிந்தனையுடனேயே எப்போதும் இருப்பதைக் காண முடிகிறது.


பேருந்துகளிலோ,மின்சார இரயில்களிலோ பயணிக்கும் தாய்மார்கள், தமது குழந்தைகள் அன்றைய தினம் என்ன சாப்பிட்டார்கள், சரியாகச் சாப்பிட்டார்களா என்றோ,அல்லது ஒன்றுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குப் போனார்களா என்றோ,அல்லது உடல்நலம் குன்றி இருந்தாலும் பிடிவாதமாகப் பள்ளிக்குப் போய் விட்டார்கள்,அங்கே போய் எப்படி இருக்கிறார்களோ என்னவோ என்று புலம்பிக்கொண்டே பயணிப்பதை நாம் கொஞ்சம் கவனித்தால் அறிய முடியும். அதே போல, மாலையில் வீடு திரும்பும் போதே அன்று இரவு சமையலுக்குத் தேவையான காய்கறிகள், குழந்தைகள் விரும்பிக் கேட்டிருக்கும் திண்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிச்சுமந்து கொண்டு சோர்வுடன் வீடு திரும்புவதையும் நாம் காணலாம். ஆனால், கிராமப்புறங்களில் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது.


பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களும்,பெண்களும் கூலி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போவதே சிரமம். பெரிய குழந்தைகள், கைக்குழந்தைகளாக உள்ள சிறிய பிள்ளைகளைப் பராமரித்துக் கொண்டு, பெற்றோரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டோ அல்லது அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இடுப்பில் சிறிய குழந்தைகளையும் தூக்கி வைத்துக் கொண்டே,வீடுகளின் முன்னால் அல்லது தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும். பெற்றோர் மாலை மங்கி,இருட்டிய பிறகு வந்து ஏதேனும் உணவு சமைத்துக் கொடுத்தால் அந்தப்பிள்ளைகள் உண்டு விட்டுத் தூங்கிப் போவார்கள். 


வசதி படைத்த வீடுகளிலும்,நடுத்தர வர்க்கத்துக் குடியிருப்புகளிலும் உள்ள நிலைமைகள் வேறு. மேற்கண்ட கிராமப்புறக் குடியிருப்புகளின் நிலைமைகள் வேறுதாம். இத்தகைய வேறுபட்ட சமுகப்பின்னணிகள் எவையாக இருப்பினும், எந்த ஒரு குழந்தையின் உயிர் வாழும் உரிமையை யாரும் மறுக்க முடியாது,கூடாது. 


எந்த அரசாங்கமாக இருந்தாலும், அந்தந்த நாட்டு மக்களின் குழந்தைகள் அனைவரையும் உயிருடன் பாதுகாப்பது அந்த அரசாங்கங்களின் கடமை என்று யுனிசெஃப் விதி கூறுகிறது. அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் வாழ்வதை அரசாங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, அவர்கள் ஆகச்சிறப்பான வழியில் வளர்ந்து மேம்பட்ட ஒரு வாழ்க்கையைப் பெறுவதையும் அவை உறுதிப் படுத்த வேண்டும்!


சுருங்கச்சொன்னால், உயிருடன் இருப்பதை மட்டுமன்றி, முழு உயிர்ப்புடன்,மன நலத்துடனும், உடல் நலத்துடனும் குழந்தைகள் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை என்பது யுனிசெஃப் பிரகடனத்தின் விதி. இதை அந்தப்பிரகடனத்தில் கையெழுத்திட் டுள்ள அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், உண்மை யில், நடைமுறையில் அப்படி அவை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்றனவா? இந்தக்கேள்வி மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்று! 


இன்று உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால், ஒப்பீட்டு அளவில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் ஓரளவுக்குத் தமது நாட்டின் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்தைச்செலுத்துகின்றன என்பதை அறியலாம். அங்கேயும் கூட, திடீர் திடீரென்று பள்ளிகளில், ஷாப்பிங் மால்களில், பூங்காக்களில், இரயில்-விமான நிலையங்களில் யாரேனும் மனநிலை பிறழ்ந்த அல்லது அதி தீவிர அரசியல் கொள்கைகளின் பெயரால் ஆயுதம் தாங்கிய நபர்கள் கண்மூடித்தன மாகத்துப்பாக்கிச் சூடுகள் நடத்திக் குழந்தைகளைக் கொன்று குவிப்பதையும் காண்கிறோம். ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில் படிக்கும் குழந்தைகளிலேயே கூட ஒரு சிறுவன் கையில் துப்பாக்கியுடன் மனம் போனபடி சுட்டுப் பிற குழந்தைகளைக் கொல்வது,காயப்படுத்துவது ஆகியவையும் நடக்கின்றன. 


இன்னொரு மோசமான சூழ்நிலை, உக்ரேன்-ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே அல்லது இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போன்று தொடர்ந்து நடக்கும் போர்களில் அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு இனங்களைச்சேர்ந்த மக்கள், தங்களுக்குள் மோதிக்கொள்ளும் உள் நாட்டுப் போர்களில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிறு குழந்தைகள் கொத்துக் கொத்தாய் நூறு-ஆயிரக்கணக்கில் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அவலம். பள்ளிகளை,மருத்துவ மனைகளைக் குறி வைத்து விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. அதை விடவும் மோசம், காஸா பகுதியில்,கையறு நிலையில் பசியுடன் உணவுக்காகக் கையேந்தி நிற்கும் பச்சிளம் குழந்தைகளை எந்த மனித நேய உணர்வும் இல்லாமல் சுட்டுத்தள்ளி விட்டுப் பெருமிதத்துடன் அதைப் பற்றிச் செய்தி அறிக்கைகள் வெளியிடும் அரசாங்கங்கள், அவற்றின் தலைவர்களின் அற உணர்வற்ற செயல்கள்!


இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும் எந்தக்கொடுமையையும் தடுக்கவோ, குறைந்த பட்சம் வலிமையாகக் கண்டிக்கவோ கூட உலகின் எந்த நாட்டு அரசும்,அரசியல் தலைவரும் முன்வருவதில்லை என்ற எதார்த்தம் நம் நெஞ்சில் அறைந்து கொண்டிருக்கிற காலம் இது. உலக மக்களின் மனச்சாட்சிக்கு  என்ன ஆகி விட்டது என்ற கேள்வி நம் மனதைப் பிளக்கிறது. விடை காண வேண்டிய கடமை நம் முன் மலை போல நிற்கிறது. என்ன செய்யப்போகிறோம்?


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page