லண்டனிலிருந்து அன்புடன் - 5
- பஞ்சுமிட்டாய் பிரபு

- Aug 15
- 2 min read
க்ரெஃபல்லோவின் பிள்ளை

சென்ற பதிவில் க்ரெஃபல்லோ என்ற அட்டகாசமான கதையைப் பார்த்தோம். இந்தப்பதிவில் அதன் தொடர்ச்சியான “க்ரெஃபல்லோவின் பிள்ளை” கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.
க்ரெஃபல்லோ கதையில் எலி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அது கற்பனையில் உருவாக்கிய க்ரெஃபல்லோ இறுதியில் உண்மையில் வந்துவிடும் அல்லவா? இந்தக்கதையில் க்ரெஃபல்லோவும் அதன் பிள்ளையான குட்டி க்ரெஃபல்லோவும் முக்கியகதாபாத்திரங்கள். ஆனால், குட்டி க்ரெஃபல்லோ எலியை நேரில் பார்த்திருக்காது.
“எலி ஒரு பயங்கரமான விலங்கு. அது நம்மைச் சாப்பிட்டுவிடும். அதனால் காட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது” என்று சொன்னது க்ரெஃபல்லோ. அதனால், எலி மிகப் பெரிய பயங்கரமான விலங்கு என்று நினைத்தது
குட்டி க்ரெஃபல்லோ.
இருந்தும் ஒரு பனிக்காலத்தில், குட்டி க்ரெஃபல்லோ காட்டைவிட்டு வெளியே செல்லும். போகும் வழியில் க்ரெஃபல்லோ கதையில் வந்த பாம்பு, நரி, ஆந்தை ஆகிய கதாபாத்திரங்களைச் சந்திக்கும். எலி பற்றி அப்பா சொன்ன அடையாளம் ஒவ்வொரு விலங்கிடமும் ஏதாவது இருக்கும். அதனால் ஒவ்வொரு விலங்கிடமும், “நீ தான் அந்தபயங்கரமான எலியோ?” என்று சந்தேகமாகக் கேட்கும். அது எலி இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகும். இறுதியில் எலியைச் சந்திக்கும்.
எலி தம்மாத்துண்டு இருக்கும் அல்லவா? அதனால் குட்டி க்ரெஃபல்லோ எலியைச்
சாப்பிடுவதற்காகப் பிடித்துவிடும். அதன் பிறகு எலி எப்படித் தப்பித்தது, குட்டி
க்ரெஃபல்லோ எப்படி அப்பாவிடம் சென்றது என்பதுதான் கதை.
இந்த குட்டிக் கதையை நான் 1.5 மணி நேர நாடகமாகப் பார்த்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதுவும் திரையரங்கில் சென்று பார்த்தேன்.
திரையரங்கு நாடகம் என்றால், அதில் வெறும் வசனங்கள் மட்டும் இருக்காது. பின்னணி இசை மற்றும் பாடலும் உண்டு. பார்வையாளர்களும் சேர்ந்து பாடுவது போன்று பாடலை அமைத்திருந்தார்கள். நாடகம் என்றால் மேடை வடிவமைப்பு முக்கியம் அல்லவா. பெரிய காட்டையே மேடையில் உருவாக்கியிருந்தார்கள், அதுவும் கதையில் பனிக்காலம் வரும் காட்சியில், மேடையில் பனிப்பொழிவு வருவது போல அழகாக வடிவமைப்புச் செய்திருந்தார்கள். காட்சிகளுக்குத் தகுந்தாற்போல் அவற்றை மாற்றியும் அமைப்பார்கள்.
ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் உண்டான் மேடையைத் திரை போட்டு
மறைக்காமலே மாற்றிவிடுவார்கள்.
க்ரெஃபல்லோ பெரிய உருவம், எளிமையாக வேடம் போட்டுவிடலாம். ஆனால், எலி, ஆந்தை, பாம்பு ஆகியவை சிறிய உருவம் அல்லவா?
அதற்கு எப்படி வேடமிடுவார்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள். அதற்கு அவர்கள் பெரிய அளவிலான பொம்மைகளையா(puppets) பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு 32பக்க படக் கதையை இவ்வளவு அழகான நாடகமாக மாற்ற முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அழகான வடிவமைப்பு, பின்னணி இசை, பாடல், ஒப்பனை என ஒவ்வொன்றையும்
குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் செய்திருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள்கூட அங்குக் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.
இந்த கதையை நான் புத்தகமாகப் படித்திருக்கிறேன், 30 நிமிட திரைப்படமாகவும், 1.5 மணி நேர நாடகமாகவும் பார்த்தேன். அதுமட்டுமல்ல, கேளிக்கைப் பூங்காவில் Amusement ride ஆகவும் சென்றிருக்கிறேன். ஆமாம் செல்லங்களா!
லண்டனில் குழந்தைகளுடன் செல்லக்கூடிய எந்த ஒரு இடமாக இருந்தாலும் சரி! அது அருங்காட்சியகமாக இருக்கலாம், அறிவியல் கண்காட்சியாக இருக்கலாம், பூங்காவாக இருக்கலாம், திருவிழா-பொருட்காட்சி-கேளிக்கைப் பூங்கா போன்ற இடமாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதில் குழந்தைகள் புத்தகத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்.
அதனால்தான், யாராவது என்னிடம் வந்து,
“லண்டனில் ரொம்ப பிடித்த விசயம் என்ன?”
என்று கேட்டால்,
“குழந்தைகளுக்கான புத்தகம்”
என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிடுவேன்.
என்ன நான் சொல்வது சரிதானே!




Comments