இயலில் தேடலாம்!
337 results found with an empty search
- பாப்பாண்டும் ரயில்பூச்சியும்
அப்போதுதான் பாப்பாண்டு மாமரத்துப் பக்கம் வந்தான். மண்ணில் ஒரு பூச்சி ஊர்ந்து சென்றது. அதை பார்க்கவே அவனுக்கு அதிசயமாக இருந்தது. அன்றுதான் முதல் தடவை அப்படியொரு பூச்சியைப் பார்க்கிறான். அது அவ்வளவு அழகு. சிகப்பும் கறுப்பும் கலந்த அழகு வண்ணம். பக்கத்தில் சென்று உற்று பார்த்தான். அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது. அப்படியே, ரயில் போலவே இருந்தது. ஒரு குச்சியால் அதைத் தொட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் சுருண்டு கொண்டது. அப்படியே கிடந்தது. பாப்பாண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்ததும் மறுபடியும் உடலை நேராக்கி ஊர்ந்தது. பாப்பாண்டு தாத்தாவிடம், “ தாத்தா ..இது என்ன பூச்சி? ” என்று கேட்டான். “ இதுவா.. இதுக்குப் பேரு ரயில்பூச்சி..” என்றார் தாத்தா. உடனே பாப்பாண்டுவின் சின்ன மூளையில் கேள்வி முளைத்தது. ” ஏன் தாத்தா.. ரயில் பூச்சின்னு பேரு வந்தது? “ என்று கன்னத்தில் ஒரு விரலை வைத்துக் கொண்டே கேட்டான். தாத்தா சிரித்துக் கொண்டே, ” ரயில் பெட்டிகளைச் சேர்த்து வைத்த மாதிரி உடம்பு இருக்குல்ல..ரயிலைப் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு சுட்டிப்பையன் வைத்த பேரு தான் ரயில்பூச்சி..” என்றார். பாப்பாண்டுக்கு அந்த ரயில்பூச்சியை பிடித்து விட்டது. தரையில் ஊர்ந்து போகும்போது அப்படியே மிதக்கிற மாதிரியே இருக்கும். தினமும் ரயில்பூச்சியோடு விளையாடுவான். பேசுவான். ஆடுவான். பாடுவான். அவன் சொல்வதை எல்லாம் ரயில்பூச்சி கேட்கும். மகிழ்ச்சியாக இருந்தால், அவன் கைகளில் ஏறிவரும். ஒருநாள், பாப்பாண்டு ரயில்பூச்சியிடம், ” நீ…..! இத்தனை கால்களுடன்…… அழகாய் ஊர்ந்து போகிறாய்… இத்தனை கால்களும் உனக்கு யார் தந்தது? ” என்று ஆச்சரியத்துடன் பாப்பாண்டு கேட்டான். ” எனக்கு என் அம்மாதான் தந்தார்.. ” என்றது ரயில்பூச்சி. ” உன் அம்மாவுக்கு யார் தந்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் பாப்பாண்டு. "ம்ம்ம்.. இயற்கை தான் எங்கள் இனத்துக்கு இத்தனை கால்களைக் கொடுத்தது. “ என்று ரயில்பூச்சி சொன்னது. பாப்பாண்டு யோசிக்கவே இல்லை. அடுத்த கேள்வியைக் கேட்டான். “ எப்படி இயற்கைக்கு யாருக்கு எத்தனை கால் கொடுக்க வேண்டும் என்று தெரியும்..? பாரு.. எனக்கு இரண்டு கால் தான், நாய்க்கு நாலு கால்.. எறும்புக்கு ஆறுகால்.. சிலந்திக்கு எட்டுகால்.. “ என்று சொல்லி நிறுத்தினான். கொஞ்ச நேரத்துக்கு ரயில்பூச்சி எதுவும் பேசவில்லை. யோசித்தது. பிறகு மெல்ல தலையைத் தூக்கியது. முன்னங்காலால் முகத்தைத் தேய்த்தது. “ பாப்பாண்டு என்னுடைய தாத்தா சொல்லியிருக்காரு.. ஒவ்வொரு உயிரும் இந்த பூமியில் வாழறதுக்கு ஒவ்வொரு சிறப்பான உடல் அமைப்பை உருவாக்கிக் கொண்டன.. அப்படித்தான் நாங்களும் உருவாக்கிக் கொண்டோம்.. அறிவியலைப் படிக்கும்போது உனக்குத் தெரியும்.. “ என்று பேசிவிட்டு உடம்பை முன்னும் பின்னும் சுருக்கி நீட்டியது. பாப்பாண்டுவின் கண்கள் விரிந்தன. ரயில்பூச்சி சொல்வதைப் புரிந்து கொள்ள முயற்சித்தான். “ உங்க தாத்தாவுக்கு எல்லாம் தெரியுமா? “ என்று கேட்டான் பாப்பாண்டு. “ ஏன் உன்னுடைய தாத்தாவுக்கும் எல்லாம் தெரியுமே. நீ கேட்டுப்பாரு..என்னுடைய தாத்தா எங்களுக்கு மண்ணில் எப்படி பள்ளம், மேடு பார்த்து லாவகமாக செல்வது என சொல்லித் தந்தார். எங்கள் உணவு எது? எப்படி சாப்பிடுவது? என்றும் சொல்லிக் கொடுத்தார். மரத்தின் மேல், கீழே விழாமல் எப்படி மரத்தைப் பிடித்து செல்வது என்றும் சொல்லித் தந்தார். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார். ” என்றது ரயில்பூச்சி. அதைக் கேட்ட பாப்பாண்டு பேச ஆரம்பித்தான். “ என் தாத்தாவும்…. இந்த உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றியது? செடி, கொடிகள், மரங்கள். பூச்சிகள் புழுக்கள், விலங்குகள் பறவைகள் இவை எல்லாம் எப்படி தோன்றின? என்றும் சொல்லிக் கொடுத்தார். அறிவியலைப் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்” ரயில் பூச்சி, “ நல்ல தாத்தா..” என்றது. பாப்பாண்டு, “ ஆமாம்.. அறிவியலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மிடம் கதைகளைச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்லுவார்..” என்று பெருமையாகச் சொன்னான். ரயில்பூச்சி மகிழ்ச்சியில் அவனுடைய கையில் ஏறி உடம்பைத் தூக்கி நடனம் ஆடியது. பாப்பாண்டுவும் துள்ளிக்குதித்து நடனம் ஆடினான்.
- குழந்தைகள் உரிமைகள் - 3
உலகிலுள்ள எல்லா நாடுகளின் அரசாங்கங்களும் அந்தந்த நாட்டுக் குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று யுனிசெஃப் தனது பிரகடனத்தின் நான்காவது அம்சத்தில் வலியுறுத்துகிறது. அவ்வாறு தங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு எல்லா உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்ய அவை தங்களால் இயன்ற அத்தனைக் கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும் என்று அது விதித்திருக்கிறது. இந்த இடத்தில், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்பது என்ன, அது எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும், இருக்க வேண்டும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் பொதுத்தேர்தல்கள் நடப்பது பொதுவான ஒரு நடைமுறை. நமது நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சட்டமன்றப் பேரவைக்கும் தேர்தல்கள் நடைபெறும். எம் எல் ஏ க்கள், எம் பி க்கள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் போன்றோரை நமது மக்கள் வாக்குகள் அளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எம் எல் ஏக்களும், எம் பிக்களும் கூடித் தங்களுக்குள் ஒருவரை அந்தந்த மாநில முதல்வர் ஆகவும், இந்திய அளவில் பிரதமர் ஆகவும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு உருவாகும் நிர்வாக அமைப்புக்கு ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்று பெயர். ஆனால், இந்த அரசாங்கம் என்றைக்கும் நிலையாக இருப்பதில்லை. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் கட்சி எதுவோ அதனுடைய அரசாங்கம்தான் பதவியில் இருந்து ஆட்சி செய்யும். ஆனால், எப்போதுமே நிலையாக, நிரந்தரமாக இருக்கும் ஒரு நிர்வாக அமைப்பு, இந்தியாவிலும் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து கொண்டிருக்கும். அந்த அமைப்புக்கு ‘அரசு’ ( ‘state’ )என்று பெயர். இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இந்த அரசின் கீழ்தான் இயங்குகின்றன. எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவாகத் தீர்மானித்து நிறைவேற்றினாலும் கூட, அரசுத்துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் – வளர்ச்சித்துறை அதிகாரிகள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் ஒரு மனதாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து,மனதார ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால்தான் அந்தச்சட்டத்தின் பயன்கள் பொது மக்களைப் போய்ச்சேரும். எந்த ஓர் இயந்திரத்திலும், ஒரு பெரிய பற் சக்கரத்துடன் இணைந்த பல சிறிய பற்சக்கரங்கள் அனைத்தும் எந்தப் பல்லிலும் உடைசலோ,கீறலோ இல்லாமல் ஒரே சீராக இயங்கினால்தான் அந்த இயந்திரத்தின் இயக்கம் தடைப்படாமல் வேலை நடக்கும். ஆனால், இந்த நாட்டின் இன்றைய அரசியல் அமைப்பில், மிக வலுவான, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஓர் ஒன்றிய அரசு, தனது பிரதிநிதிகளாக உள்ள ஆளுநர்களைக் கொண்டு, மாநில சட்டமன்றங்களின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களைக் கூட, ஒப்புதல் அளிக்காமல் தடை செய்வது, நிதியளிக்க மறுப்பது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். பல இலட்சம் குழந்தைகளின் கல்வி உரிமைகளைப் பாதிக்கும், மறுக்கும் நீட் தேர்வை நிராகரிக்கும் சட்டம்,புதிய கல்விக்கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்ற சட்டம் போன்ற பல சட்டங்களை நிறுத்தி வைக்கும் போக்கைக் காண்கிறோம். இது ஏதோ ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் அரசியல் சண்டை மட்டுமே அல்ல;மாறாக,இந்த மாநிலத்தில் மாநில அரசின் கல்வி நிலையங்களில் பயிலும் பல இலட்சம் குழந்தைகளின் விருப்புரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இத்தகைய நிலைமை இந்த நாட்டில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசியல்,சமூக,பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப நிலவுவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளின் செய்தியறிக்கைகளிலும் பார்க்கிறோம். யுனிசெஃப் அமைப்பு, எல்லா நாட்டு அரசாங்கங்களுமே குழந்தைகளின் உரிமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சர்வதேசப் பிரகடனத்தில் விதித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று, உலகில் பல நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில், அந்தப் போர்களுக் குக் காரணங்கள் எவையாயிருப்பினும், போரில் ஈடுபடும் இருதரப்புக் குழந்தைகளுமே அந்தப் போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதேயாகும். ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் – இப்படி எந்தப் போர் என்றாலும், உணவுப் பொருள்கள், மருந்துகள், ரொட்டிகள், பால் போன்று குழந்தைகளுக்கு மிக மிக அத்தியாவசியத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு விடுவது அந்தப் போரின் உடனடி விளைவாக ஆகி விடுகிறது. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, இப்படி இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்புடன் தான் நடத்தும் போரில், செஞ்சிலுவைச்சங்கம் மூலம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், ரொட்டிகளைக் கூட அவர்களுக்கு வழங்க அனுமதிக்காததால் சுமார் 14,000 குழந்தைகள் சாவின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகின் அனைத்துப் பகுதி மக்களையுமே மனம் பதறச் செய்தது. எனவேதான், யுனிசெஃப் அமைப்பு, உலகின் எல்லா அரசாங்க நிர்வாகிகளுக்கும் தனது சர்வதேசக் குழந்தைகள் பிரகடனத்தின் நான்காவது அம்சத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் முழு மனதுடன் ஈடுபாடு காட்டும்படி வலியுறுத்தல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அரசியல் அதிகாரம் என்ற ஒரே குறிக்கோளின் மீது தவிர, வேறு யாருடைய நலன்கள் குறித்தும் துளியும் கவலைப்படாத அரசாங்கங்களின் போக்கை எப்படி, எப்போது, யாரால் மாற்ற முடியும் ? இதுதான் இன்று நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும் !
- பேசும் கடல் - 3
“ அண்ணா...... அண்ணா சுனாமியை ஆழிப்பேரலைன்னு தானே சொன்னாங்க, ஆழிப்பேரலையின் ஜப்பானிய பெயர்தானே சுனாமி? “ "ஐயோ கொஞ்சம் பொறு அமுதா...... நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்போம்" “ பாட்டி..... என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க..... எப்பவும் வேகமா அலை அடிச்சிட்டு இருப்பீங்களே...... என்னாச்சு" " பேரப்பிள்ளைகளா? நான் அமைதியா இருப்பதும், ஓங்கி அலையடிப்பதும் காற்றின் அழுத்தத்தால் தான். காற்றின் அழுத்தம் இருந்தா பெரிய அலையா இருக்கும், இல்லைன்னா? சின்ன அலையா இருக்கும்" "அப்போ பாட்டி ஆழிப்பேரலை காற்றினால் தான் வந்ததா? ” சற்றும் யோசிக்காமல் அமுதா கேட்டாள். " சபாஷ் பாராட்டுக்கள்...... மொதல்ல ஆழி என்றால் என்ன என்பது புரிய வேண்டும்" “ஆமாம்......ஆமாம்...... சொல்லுங்க" இனியனுக்கு ஆர்வம் கூடியது. "பொதுவாக மக்கள் கடல், அலை என்ற இரண்டு சொற்களால் என்னைப் பார்ப்பார்கள். ஆனால் கடலின் மக்களாகிய நெய்தல் நிலத்தவர்கள் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் . ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் என்னை ஆழி என்று தான் அழைப்பார்கள். காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள். ” "பேசுவார்களா ?எப்படி? ” என்று இருவருமே வியப்போடு கேட்டார்கள். " பெரிய அலை வரும்போது படகில் செல்லும் மீனவர்கள் எல்லோரும் படகில் எழுந்து நின்று "தாயே தாழ்ந்து வா தாயே" என்று வேண்டுதல் செய்வார்கள் அலை மிக உயரமாக வரும்போது மீனவர்களை அது பாதிக்கும் என்பதால் "கடல் ஆத்தா ...... தாழ்ந்து வா ஆத்தா " என்று கேட்டுக் கொண்டாலே அலைகள் அமைதியாகும்." "உண்மையாகவா? கேட்டதும் நீங்க அமைதியா இருப்பீங்களா? " என்று இனியன் கேட்டான். "அது அவங்க நம்பிக்கை, இது தாய் பிள்ளை உறவு போன்றது மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது" என்று கடல்பாட்டி சொன்னார். அப்போது அவருடைய குரல் தழுதழுத்தது. ” அது சரி மேட்டருக்கு வாங்க, ஆழின்னா என்ன அதைப் பற்றி சொல்லவே இல்ல" என்று ஆர்வத்தோடு அமுதா கேட்டாள். ” மீனவர்கள் கடலில் எழும் அலைக்கும் பல பெயர்களை சூட்டி உள்ளார்கள். மார்சா, மாரியா , ஆழி என்று அழைப்பார்கள். இதில் ஆழி என்பது காற்றின் விசையால் அலைகள் விரிந்து, எழும்பி இரண்டு மடிப்பு போல் மடங்கி அடிப்பதை ஆழி என்பார்கள். இது மிக ஆபத்தானது. அலைகள் எழும்பி மடங்கி அடிக்கும் போது மீனவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களால் தப்பிக்க முடியாது. அந்த அலை அவ்வளவு வேகமாக அடிக்கும்.” என்று கடல்பாட்டி சொல்லும்போதே ஆழியின் ஓசை கேட்டது. ” கேட்கும்போதே பயமாயிருக்கு அண்ணா? ” அமுதா இனியனின் கைகளை இறுகப் பற்றி கொண்டாள். "அமுதா பயப்படாதம்மா.... ஆழி இரண்டு வகை உண்டு கரைய ஆழி, வெலங்க ஆழி அதாவது கரைப்பகுதியில் ஏற்படும் பேரலை. தூரத்தில் ஏற்படும் பேரலை .கடலில் பயணிக்கும் போது மீனவர்கள் கடலோடும் காற்றோடும் அலையோடும் பேசுவார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள் " ” ஆமாம். அது உண்மைதான் எங்க வீட்டிலையும் அப்பாவும் பெரியப்பாவும் பேசுவாங்க ...தான் கேட்டு இருக்கேன் ” என்றான் இனியன். “ பேரப்பிள்ளைகளா? காற்று , கடல் இரண்டும் மீனவர்களுக்கு உயிரும், உடலும் போன்றது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவார்கள். அதற்கு அவர்கள் பல பெயர்கள் சூட்டி மகிழ்வார்கள் ” என்றார் கடல்பாட்டி பெருமையாக. ” அது சரி உங்க பிள்ளைகள நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? ” என்று அமுதா கிண்டலாகச் சொன்னாள். . ” ஆமாம் ....அவர்கள் கடலின் மக்கள்..” என்று கம்பீரமாகச் சொன்னார் கடல்பாட்டி. ” அது சரி....காற்றுக்கு எப்படி பெயரிடுவாங்க....? ” என்று இனியன் கேட்டான். ” சொல்றேன் கண்ணுகளா..” என்று சொல்லிவிட்டு காணாமல் போனார் கடல்பாட்டி. ( கடல் பேசும் )
- ஏழு ஹைக்கூ
நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு இளைப்பாறக் கிடைக்கவில்லை காடு * அம்மா கால் பித்த வெடிப்பு பாசத்தின் பள்ளத்தாக்கு, கற்துகளும் விரும்பி உட்புகும் * ஊரை காக்க விரும்பும் அய்யனார் எல்லையை தாண்டி ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர். * நீருக்கும் மனிதன்மேல் பயம், சருவலைக்காரணம் காட்டி, கடலை அடைகிறது * நரியின் குழியில் விழுந்த புலிக்கூட்டம் இன்னும் இழக்கவில்லை வீரத்தை (இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்) * புத்தகத்தை புரட்டிடும் மனிதன் இருவிரலால் தன் வாழ்வையே புரட்டுகிறான். * யானையைகாட்டிலும் மனிதனிடமே அதிகம் உள்ளது மதம். எழுதியவர்: ஹ. சக்திவேல், 11ஆம் வகுப்பு, இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 8015626376
- ஏன் பிறந்தோம் -3
விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சுய செயல்பாடு தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவை தானாகவே செயல்படுகின்றன. அவை மனிதர்களைப் போல சுதந்திரமாக, படைப்பூக்கமிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட செயலுக்கு எதிர்வினை புரிகின்றன. அந்த எதிர்வினை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான செயல்பாடே. உயிர்வாழ்தலும் இனப்பெருக்கமும்தான் அவற்றின் அடிப்படை நோக்கம். அதேமாதிரித்தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் செயல்படுகின்றன. உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும் உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல், அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுதல். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு, இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல். அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவிசெய்வது போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் தாவரஉண்ணிகள் மறைந்துவிடும். தாவரஉண்ணிகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணிகள் மறைந்துவிடும். ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்? மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக வளரும் பெரும்பாலான தாவரங்களைச் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்துவிடும். அந்தப் பூச்சிகள், புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்துவிடும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. நுணுக்கமான வைரஸாக இருந்தாலும் சரி, உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கியிக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ப சிறப்பு குணங்களை, தகவமைப்புகளைப் பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. அதைப் பற்றிக் கூடுதலாக நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது: அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் என்பதே. இந்த மாற்றங்கள் தானாக உருவானவையா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா? உண்மை என்ன? புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவுசெய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது. அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (Survival Instict), அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு. அதேபோல புதிய உயிர்கள் தோன்றுவதற்கு மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது திடீர்மாற்றமே காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஹோமோ சேப்பியன்ஸ் என்கிற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியதுகூட, மரபணுக்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்தான் (Chromosome Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமேகூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் அவை கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா? இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான். எப்படி? ( தத்துவம் அறிவோம் )
- நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற இடம். ’நகரும் மாய வீடு’ என்கிற தலைப்பே குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாக, ஆச்சரியமூட்டுவதாக, எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது. இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான கூரை வீடு மந்திர சக்தியால் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கெல்லாம் போகிறது? அதனுடன் யாரெல்லாம் பயணித்தார்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை மிக சுவைபட சுவாரசியமாக இந்த நூல் விவரிக்கிறது. ஒரு குரங்காட்டி, தனது குரங்கிற்கு சிவப்பு சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிவித்து வித்தை காட்டுகிறான். வித்தை முடிந்ததும் இருவரையும் தெருநாய்கள் துரத்த, சாலையை கடக்க முயன்ற போது, குரங்காட்டி வாகனம் மோதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். சிறு காயங்களுடன் தப்பித்த குரங்கு யாருமில்லாத ஒரு கூரை வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. தனக்கு இடையூறாக இருந்த உடைகளைக் கழட்டிப் போடுகிறது. இடுப்பில் கட்டி இருந்த கயிறு, ஒரு ஆணியில் மாட்டிக்கொள்ள குரங்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறது. அதே சமயத்தில் வெளியே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கயிற்றில் கட்டப்பட்டிருந்த சிறு பாட்டில் கீழே விழுந்து, புகை போன்ற ஏதோ ஒன்று குடிசை முழுவதும் பரவுகிறது. அதனால் அந்த கூரை வீட்டிற்கு மந்திர சக்தி வந்து பேசவும், நகரவும் ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெரிய பல்லியும் குட்டி எலியும், அணிலும் வசிக்கின்றன. மூன்று ஜீவராசிகளும் பயந்து போனாலும் கூரையின் மூங்கில்களை வெட்டியாக பிடித்துக் கொள்கின்றன. கூரை வீட்டின் பயணம் தொடங்குகிறது. சின்ன சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்ற அடுக்கு மாடி வீடுகளை பார்த்து கூரை வியந்து போகிறது. பின் அது காட்டின் அடிவாரத்திற்கு வருகிறது. தானியங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து சிதறும் தானியங்களை கொத்தித் தின்னும் ஏராளமான பறவைகள் பின்னால் வந்த வாகனங்களால், அடிபட்டு இறப்பதை பார்க்கும் கூரை வீடும், பல்லியும், எலியும் அணிலும் அதிர்ந்து போகின்றன. சுயநலம் பிடித்த மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிலும் நிலைநாட்டி வைத்திருப்பதை ஆசிரியர் விவரிக்கிறார். அங்கே உள்ள மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து சிறு கற்களாக்கி அவற்றை வீடு கட்ட எடுத்துப் போகின்றனர். அதனால் பறவைகளும் பாம்புகளும் இன்ன பிற ஜீவராசிரியர்களும் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின்றன. காட்டில் மரங்களை மனிதர்கள் வெட்டுகின்றனர். அதன் காரணமாக மரங்களில் இருக்கும் பறவைக்கூடுகள், முட்டைகள் குஞ்சுகளுடன் கீழே விழுந்து இறப்பதை வேதனையோடு பார்க்கிறது கூரை வீடு. தாய்ப்பறவைகளை இழந்த குஞ்சுப் பறவைகளை கூடோடு தன்னுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அணிலும் எலியும் தானியங்களை எடுத்து வந்து அவற்றை உடைத்து குஞ்சுகளுக்கு தருகின்றன. மனிதர்களிடம் இல்லாத ஜீவகாருண்யமும் கருணையும் அவைகளுக்கு இருக்கின்றது. தப்பி வந்த குரங்கும் காட்டை வந்து அடைந்து, கூரை வீடுடன் சேர்ந்து வெயில் படும் இடங்களில் செடிகளை நடுகின்றன. சிறிது காலத்தில் ஏராளமான செடி கொடிகள் வளரத் தொடங்குகின்றன. இதை வாசிக்கும் குழந்தைள் காடு என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சொந்தமான இடம், அதை தனது சுயநலத்திற்காக மனிதர்கள் அழிக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வார்கள். நூல்; நகரும் மாய வீடு ஆசிரியர்; வே. சங்கர் பக்கங்கள்; 64 விலை; 70 வெளியீடு; பாரதி பதிப்பகம்
- ஆஹா!
படம்: உ. நவீனா
- நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்! அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார். அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்! “இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார். “இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார். புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின. முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன. “நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன. சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது. “கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை. மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா. நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை. அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! “அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன். “இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது. கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
- நெல்லையில் வேனில் விழா -2025
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மற்றும் விரல்கள் நுண்கலை குழு இணைந்து, மே 10, 2025 அன்று குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 'வேணுவனம்' என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 35 குழந்தைகள் பங்கேற்றனர். திருமதி விஜி அவர்களின் கோலாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். அடிப்படை கோலாட்ட அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். அதன் பின் ஓலைக் கலைஞர் திரு. திலகராஜ் அவர்கள் சிறந்த கலைவழிக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தார். இவரின் அமர்வு ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர். எல்லாரும் செய்த பின்னரே அடுத்த பொம்மையைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார்! செய்து முடித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தனர்! எந்த குழந்தையும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் தெளிவுடன் நிகழ்வைக் கொண்டு சென்றார்! பிற்பகுதியில் ஓவியர் கார்த்திகா அவர்களின் கலைவகுப்பு நடைபெற்றது. 'நகலெடுக்காத கலை' என்பதையே அவர் வலியுறுத்து வருகிறார்! இடத்தைச் சுற்றி பார்த்து, குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை வரைந்தனர் – பூனை, மரங்கள், நாற்காலி, இலை எனப் பல வகையான ஓவியங்களால் அமர்வு களை கட்டியது. மரக்கதவில் இருந்த யானை சிற்பம், அறையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு மற்றும் பொருளாளர் ப்ரியா அவர்களின் உடையில் இருந்த வடிவமைப்பு என மூன்றையும் இணைத்து ஒரு பெண் குழந்தை வரைந்தது ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது! இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிறவிக் கலைஞர் என்பதைக் உணர்த்தியது! இறுதியில் சிறந்த கலை ஆசிரியர் மாஸ்டர். திரு. சந்துரு அவர்கள் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு வடிவங்களை வரையச் சொல்லி, அதன்மூலம் அவர்கள் வரைந்த விதத்திற்கு பின் இருக்கும் உளவியலை எடுத்துரைத்தார்! காலையில் காரப்பொரி, கருவேப்பிலை சாறு, மதியம் சாம்பார் சாதம், மோர் சாதம், மாலையில் கொண்டைக்கடலை சுண்டல், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' புத்தகம் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசாக வழங்கப்பட்டு, அதைப் படித்துக் கருத்து தெரிவிக்கவும், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் விவாதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. — தேவர்பிரான் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி கிளை, தலைவர்.
- சகுந்தலா தேவி
ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா! குழந்தைகள் : வணக்கம் ஜோ அத்தை ஜோ : கடந்த மாதம் இந்தியாவின் முதல் ஆசிரியரைப் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம் ஒரு முக்கியமான ஆளுமையை பத்தி பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி உங்களுக்குப் பிடிச்ச பாடம் எது? நகுலன் : அறிவியல் ரதி : கணக்கு நகுலன் : என்னது கணக்கா ஐயோ சாமி கணக்குனாலே எனக்கு காய்ச்சல் வந்துரும். ரதி : கணக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. புரிந்துகொண்டால் மிகவும் சுலபம் தெரியுமா? நகுலன் : ஓ நீ கணக்குல புலி என்று சொல்கிறாயா? ரதி : இப்போ சின்ன புலி சீக்கிரமா பெரிய புலி ஆயிடுவேன் நகுலன் : சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் சரியா சொல்றியா? ரதி கேளு நகுலன் 65 + 72 + 64 +32 +27+ 43+ 11 ரதி : 314 நகுலன் ஆச்சரியமா இருக்குது அத்தை! பாருங்க கையை இப்படி அப்படி ஆட்டி ஆட்டி உடனே சொல்லிட்டா! ஜோ : கூடிய சீக்கிரத்துல இந்தியாவுடைய முதல் பெண் கணித மேதை சகுந்தலா தேவி மாதிரி வர என்னோட வாழ்த்துக்கள். நகுலன் : யாருங்க அத்தை சகுந்தலாதேவி? அவங்க தமிழ்நாடா? ஜோ : இல்லை, அவங்க பெங்களூரு ரதி : அவர் கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கி இருப்பாங்க. அதனால் தான் அவர் அந்த கின்னஸ் சாதனை எல்லாம் செய்ய முடிந்தது. ஜோ : அதுதான் இல்ல அவங்க ஆரம்பப் பள்ளியைக் கூட தாண்டாதவங்க. ரதி : அப்படியா! அப்புறம் எப்படி இப்படி ஒரு பெயர் வாங்கினாங்க? ஜோ : அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார். நகுலன் : அடேயப்பா! அப்ப அவர் தினமும் சர்க்கஸ் பார்க்க கூட்டிட்டு போய் இருப்பாரு. எங்க அப்பாவும் சர்க்கஸ் இருந்தால் எப்படி இருந்திருக்கும் நானும் தினமும் சர்க்கஸ் பார்த்து இருக்கலாம். ரதி : ஹ! ஹ! ஹ! எனக்கும் கூட அப்படித்தான் தோன்றியது. பிறகு என்னவாயிற்றுங்க அத்தை. ஜோ : அவரோட அப்பாவோடு சேர்ந்து சீட்டுக்கட்டு வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் அவரின் அப்பாவுக்கு சகுந்தலாவின் கணிதத் திறமை தெரிந்தது. தன்னோட வேலையை விட்டுட்டு தெருக்களில் தன் குழந்தையோட கணித திறமையை ஒரு நிகழ்ச்சியா நிகழ்த்திக் காட்டினார். ரதி : சமீபத்துல் செஸ் சாம்பியன் பிரக்யானந்தாவோட அப்பா கூட வேலையை விட்டுட்டு பிரக்யானந்தாவை பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அழைச்சிட்டு போனாரே அந்த மாதிரி சகுந்தலா அவரோட அப்பாவும் அழைச்சிட்டு போயிருக்காங்க. ஜோ : சரியாகச் சொன்னாய் ரதி! அதே மாதிரி தான். ரதி : எங்க அப்பா கூட எங்காவது போட்டி நடந்ததுன்னா என்ன கூட்டிட்டு போவாங்க லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அவருடைய அப்பா ஏன் போட்டிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை? ஜோ : அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரி நிறைய போட்டிகள் இல்லை. அதனால் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அழைத்துச் சென்று மாணவர்கள் முன்பு திறமை வெளிப்படுத்த வைத்தார். 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு நடத்துனர். இது நிறைய இடங்களில் பேசப்பட்டு அதன்பிறகு தன் குழந்தையோட திறமையை உலகத்துக்கு அறிய செய்யணும் என்பதற்காகவே 1944 இல் லண்டன் சென்று 1960 வரைக்கும் ஏராளமான நாடுகளுக்கு பயணம் செய்து சகுந்தலாதேவியோட திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். ரதி : அத்தை அவரோட திறமையைக் கண்டு பிடிப்பதற்கு எந்த மாதிரி கேள்விகள் கேட்டார்கள்? ஜோ : உதாரணத்திற்கு 1977 132 517 என்கிற எண்ணோட கனமூலத்தை வேகமா கணக்கிட்டாரு. அதுல கணினியவே தோற்கடிச்சுட்டார். அதன்பிறகு 1988 ஆர்தர் ஜென்குசன் என்கின்ற கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் சகுந்தலாதேவியோட கணிதத் திறமையைப் பரிசோதித்தார். 61 62 98 75 எண்ணின் கன மூலத்தையும் 170 859 375 என்கிற எண்ணோட ஏழாவது மூலத்தையும் கேட்டார். நகுலன் : இது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது கொஞ்சம் அதிக நேரம் எடுத்து இருப்பாரு. சரிங்களா அத்தை? ஜோ : இதில் தான் பெரிய ஆச்சரியமே. கேள்வி கேட்டு முடித்து அவர் நோட்டில் எழுதி முடிப்பதற்கு முன்பே பதில் சொல்லிட்டாரு. இது மாதிரி போகிற இடமெல்லாம் கேட்கிற கணக்குத் தொடர்பான அனைத்திற்கும் உடனே பதில் கொடுத்தாங்க. எல்லாரும் வியந்து போயிட்டாங்க. ரதி : எந்தக் கணக்கு பண்ணி கின்னஸில் இடம் பிடிச்சாரு?. ஜோ : ஜூன் 18, 1980இல் இம்பீரியல் கல்லூரி லண்டனில் கணினி துறை மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்கள் 76 86 36 97 74 87 0 மற்றும் 24 650 99 745 779 இந்த இரண்டு எண்களையும் பெருக்கி சரியா 28 வினாடிகளில் விடையைச் சொல்லிட்டார். நகுலன் : அதனால்தான் அவருக்கு கின்னஸ் கொடுத்தார்களா? நீதான் கணக்கில் பெரிய புலி ஆயிற்றே ரதி. இதை உன்னால் சொல்ல முடியுமா? சொல்லு பாக்கலாம்? ரதி : ஐயோடா! இவ்ளோ பெரிய எண்ணெல்லாம் என்னால் முடியாது. ஜோ : நகுலன், ரதி குட்டி இன்னும் வளர்ந்து இதைவிடப் பெரிய பெரிய கணக்கெல்லாம் போட முடியும். இல்லையா ரதி? ரதி ஆமாங்க அத்தை. அந்த இரண்டு எண்களையும் பெருக்கினதில் என்ன விடை கிடைத்தது? ஜோ : கேட்ப்பீர்கள் என்று தெரியும். அதனால தான் நான் சீட்டில் எழுதி வந்து இருக்கிறேன். என்னால் அவ்வளவு பெரிய எண்ணை மனப்பாடம் பண்ண முடியலை. 18 94 76 68 1777 995 426 462 773 730 இந்த எண்ணைச் சொல்வதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது. உண்மையாலுமே அவர் ஜீனியஸ்தான். ரதி : அவர்களைப் பற்றி இந்தியில் ஒரு படம் கூட வந்திருக்கிறதாகவும் 2013இல் கூகுள்ல முகப்புல மேடம் சகுந்தலாதேவியோட படத்தை வைத்ததாகவும் அப்பா சொல்லி இருக்காங்க. எப்பவுமே நீ ஒரு சகுந்தலா தேவி மாதிரி வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க அப்பா. ஜோ : சரியா சொன்னே. நீயும் சகுந்தலா தேவி மாதிரி கணக்கில் பெரிய சாதனைகள் புரியவும் நகுலனும் அவனுக்குப் பிடித்த அறிவியலில் பெரிய சாதனைகள் புரியவும் வாழ்த்துகள் தங்கங்களா! அடுத்த மாசம் இன்னொரு ஆளுமையை பற்றி தெரிந்து கொள்ளலாம் சரியா செல்லங்களா? குழந்தைகள் : சரிங்க அத்தை! நன்றிங்க!
- குழந்தைகளின் உரிமைகள் - 1
உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. இந்த ஐ. நா. சபையின் துணையமைப்புகளுள் ஒன்று : unicef என்கிற, உலகக் குழந்தைகளுக்கான அமைப்பு. உலகத்தின் குழந்தைகள் அனைவரும் கல்வி, சுகாதாரம், உணவு, உறைவிடம் உள்பட அனைத்து அடிப்படைத்தேவைகளையும் பெற்றுத்தன்னிறைவு பெற்றவர்களாக ஆக வேண்டும் என்பது இந்த அமைப்பின் குறிக்கோள், இலட்சியம். ஒரு குழந்தை என்றால் யார், அதன் உரிமைகள் என்னென்ன, அவற்றைப் பாதுகாப்பதில் பெற்றோர், குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்,சமுகத் தலைவர்கள் போன்று அனைத்துத்தரப்பினரும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக் குறித்து யுனிசெஃப் ஒரு தீர்மானம் இயற்றியிருக்கிறது. ” குழந்தைகளின் அனைத்து உரிமைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவையனைத்தும் ஒன்றுக்கொன்று சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குழந்தைகளிட மிருந்து எந்தக் காரணம் பற்றியும் பறித்துக் கொள்ளப்படக் கூடாதவை. ஒரு குழந்தை என்றால் யார் ? ஆணோ , பெண்ணோ , யாராயிருந்தாலும், 18 வயதிற்குக் கீழ் உள்ள எந்த ஒரு மனிதரும் குழந்தை என்று unicef வரையறுத்துள்ளது. இதை உலக நல வாழ்வு அமைப்பு உள்பட உலகமே ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. யுனிசெஃப் கன்வென்ஷனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறிப்பிடும் அனைத்து உரிமைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த உரிமைகள் உண்டு. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கே வேண்டுமாயினும் வசித்து வரலாம். எந்த மொழி பேசுவோராகவும் இருக்கலாம். அவர்களின் மதம் எது என்பதோ, அவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பதோ, அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதோ – இவை எதுவுமே பிரச்னையே இல்லை. அந்தக் குழந்தை, ஒரு பையனாகவோ, ஒரு சிறுமியாகவோ இருக்கக்கூடும். ஒரு சிலர் உடல், மன ரீதியான மாற்றுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுள் சிலர் பரம ஏழைகளாக இருப்பார்கள். வேறு சிலர் பணம் படைத்தவர்கள். இன்னும் சிலர் நடுத்தர நிலையில் இருக்கலாம். அவர்களின் பெற்றோர் யார் என்பதோ, அவர்களில் யார் மேற்கண்ட மூன்று நிலைகளில் எந்த நிலையைச் சேர்ந்தவர் என்பதோ இங்கு பிரச்னையில்லை. குழந்தைகளின் பெற்றோர் எந்தக் கடவுள் அல்லது மதத்தை நம்புகிறார்கள் என்பதும் நமக்கு முக்கியமல்ல. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும் பார்க்க வேண்டியதில்லை. மேற்கண்ட எந்த ஒரு விஷயத்தின் அடிப்படையிலும், எந்த ஒரு காரணத்தினாலும் எந்த ஒரு குழந்தையும் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. இவற்றுள் எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் எந்தக் குழந்தையும் நியாயமற்ற முறையில் நடத்தப்படக்கூடாது. ” Unicefகன்வென்ஷன் நிறைவேற்றிய மேற்கண்ட தீர்மானத்தின் முதல் அம்சமே மேலே சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஒரு வகையில், அதன் தமிழ் மொழியாக்க வடிவம் என்றே சொல்ல வேண்டும். இதுதான் மற்ற எல்லா அம்சங்களுக்கும் அடிநாதம். ஆனால் இன்றைய நிலை என்ன ? சற்றுக் கண்களை மூடிக்கொள்வோம். கடந்த பத்து அல்லது பதினைந்து நாள்களுக்குள் நமது கண்களில் பட்ட, நாம் பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சிச் செய்திகளில் படித்த, பார்த்த செய்திகளில், குழந்தைகள் பற்றியவற்றைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்து பார்ப்போம். மூன்று வயதுப் பெண் குழந்தையை, அதே பள்ளியில் படிக்கும் பன்னிரண்டு வயதுப் பையன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, தலையில் பாறாங்கல்லால் தாக்கியதில், அது மரணமடைந்தது. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு மூன்று ஆசிரியர்கள், தங்களின் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் குழந்தையின் மண்டையில் தாக்கி மண்டை ஓடு உடைந்திருக்கிறது. இவையும் இன்னமும் ஏராளமான செய்திகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம். இவை எதைக்காட்டுகின்றன ? நமது குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கிறது என்ற ஓர் எதார்த்தத்தைக் காட்டுகின்றன. மொத்தமுள்ள குழந்தைகளில் ஒரு பத்துப்பேரின் பிரசனைகளை வைத்து ஓட்டு மொத்தக் குழந்தைகளின் நிலைமையே இதுதான் என்று தீர்மானித்து விட முடியுமா ? முடியாது ! கூடாது ! ஆனால், இவை ஒரு வகைமாதிரிப் பிரச்னைகள். மற்ற குழந்தைகளின் நிலைமைகளில் வெவ்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பத்தில், தெருவில், பள்ளியில், பஸ்களில், கோயில்களில், பிற பொது இடங்களில் என்னென்ன வகையான துன்பங்களைக் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் உரிமைகள் இவை என்று உலகமே ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு விட்ட உரிமைகள் கூட, எந்த ஓரு இடத்திலும், ஒரு போதும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடியும். ( உரிமைகள் அறிவோம்.)
- லீவு
சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர். “ஏண்டா இவ்ளோ லேட்டு?” என்று முகிலன் கேட்க, “நான் எங்கடா லேட்டு… இன்னும் அக்கா கூட வரவே இல்லையே?” என்று பதில் சொல்லிகொண்டே புத்தகப் பையைக் கழற்றி கீழே வைத்தான். ”சரிடா…. அக்கா வரதுக்குள்ள முடிவை எடுத்துடணும்” என்றான் விக்கி. “ஆமாடா… மூணு நாளா இதை வைச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கீங்க. அக்கா கிட்ட தெளிவா சொல்லிடுவோம்” என்றாள் பூரணி. அனைவரும் அக்கா வருவதற்காகக் காத்திருந்தார்கள். அது லீலா வீட்டின் மொட்டை மாடி. லீலா ஆசிரியர் பணிக்குப் படித்திருக்கிறார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் தன் வீட்டு மொட்டை மாடியில் டியூசன் எடுக்கிறார். அதற்காக சின்ன பந்தல் போட்டப்பட்டிருக்கும். காலையில் பத்தாம் வகுப்புக்கும், மாலையில் ஒன்பது வகுப்புக்கும் டியுசன் எடுக்கிறார். அவரை முதலில் மிஸ் என்று அழைத்தார்கள். ஆகாஷ் மட்டும் அக்கா என்று கூப்பிட்டான். அது அப்படியே எல்லோருக்கும் பரவி ‘லீலா அக்கா’ என்றுதான் இப்போது அழைக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆகாஷ், முகிலன், பிரின்ஸி, ரஹீம் என ஒன்பதாம் வகுப்பில் உள்ள 40 பேரில் 18 பேர் இங்கு டியூசனுக்கு வந்துவிடுவார்கள். முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரே மாதம்தான் இருக்கிறது. அதனால் தீவிரமாகப் படித்தனர். லீலா படியேறி வரும் சத்தம் கேட்டதும் சலசல என்று இருந்த பேச்சுச் சத்தம் சட்டென்று நின்றது. “ஸ்கூல் விட்டு வந்து ஸ்நாக்ஸ் ஏதாச்சும் சாப்பிட்டிங்களா?” என்று கேட்டவாறே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் லீலா. ”ஓ” என்று எல்லோரும் சொல்லி முடித்தும் சிலர் மட்டும் குசுகுசு எனப் பேசுவது கேட்டது. “நான் என்ன சொல்லியிருக்கேன்… யார் பேசினாலும் சத்தமாப் பேசுங்க… இல்லாட்டி பேசாதீங்கன்னுதானே?” என்று லீலா கேட்டதும் குசுகுசு பேச்சு நின்றது. ”இவன்தான் அக்கா” என்று முகிலனைக் கைக்காட்டினாள் பிரின்ஸி. “என்ன முகிலா… என்கிட்ட சொல்லலாமா?” “இல்ல… அக்கா, நாளைக்கு டியூசன் லீவுன்னு சொன்னீங்க இல்ல…” தயங்கிகொண்டே சொல்ல ஆரம்பித்தான் முகிலன் “ஆமா… அதுக்கு என்ன?” “இல்லக்கா, நாளைக்கு லீவு விட வேண்டாமேன்னு பேசிட்டு இருந்தோம்” “என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சனி, ஞாயிறுல டியூசன் வைச்சா சில பேர வர மாட்டீங்க… இப்ப என்னடான்னா, நானே லீவு விட்டாலும் வேணாம்னு சொல்றீங்க?” என்று வியப்பாகக் கேட்டார் லீலா. “ இன்னும் ஒரு மாசம்தான் எக்ஸாம்க்கு இருக்குக்கா…. அதான்” என்று எழுந்து சொன்னான் ஆகாஷ். “ஓ! அப்படின்னா கூட்டா சேர்ந்து பேசியிருக்கீங்களா… அப்ப, அதைப் பேசி முடிச்சிட்டு பாடத்துக்குப் போலாம். என்ன?” யாரும் பதில் சொல்லாம் மெளனமாக இருந்தனர். “சரி, நாளைக்கு எதுக்காக லீவு விட்டிருக்கேன்” “ரம்ஜான் பண்டிகை” என்று எழுந்து சொன்னான் முகிலன். “அதனால” என லீலா பேச்சைத் தொடர்வதற்குள், எழுந்த ஆகாஷ், “அக்கா, அன்னிக்கு எப்படியும் ரஹீமும் பாத்திமாவும் வர மாட்டாங்க. அப்ப அவங்களுக்கு மட்டும் லீவு விட்டுடலாமே… எங்களுக்கு டியுசன் வைக்கலாமே?” என்றாள் பிரின்ஸி. “வைக்கலாம்தான்…. தீபாவளி அன்னிக்கு என்னென்ன செய்வீங்க சொல்லுங்க?” “காலையில குளிச்சிட்டு, புது டிரெஸ் போட்டுகிட்டு பட்டாசு கொளுத்துவோம்” என்றனர் ஆகாஷூம் முகிலும். ”ஒரு புஷ்வாணம் நல்ல வெளிச்சத்தோடு மேலே போய்ட்டு வர்றதைப் பார்க்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டார் லீலா “ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றான் ஆகாஷ். “ரொம்ப இல்லக்கா… ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப” என்று வாயை இழுத்து மிமிக்ரி மாதிரி செய்துகாட்டினான் முகிலன். எல்லோரும் சிரித்தனர். ”அப்படியா… உங்க தெருவுலேயே இருக்கிற ரஹீமும் அதே புஷ்வாணத்தைப் பார்த்தா அவனுக்கு மகிழ்ச்சியா இருக்கும்ல” “நிச்சயம் இருக்கும்க்கா” ”சரி… புது டிரெஸ்… பட்டாசு அவ்வளோதானா தீபாவளி?” “இல்ல இல்ல… ஸ்வீட்ஸ் நிறைய செய்வாங்க… அதை தெருவில இருக்கிற எல்லார் வீட்டுலேயும் கொண்டுபோய் கொடுப்போம்” “ரஹீம் வீட்டுக்கும்தானே?” “ஆமா… முதல்ல போறதே அவன் வீட்டுக்குத்தான்” “ஏன் அவன் வீட்டுக்கு கொடுக்கணும்… அவனுக்குத்தான் தீபாவளி பண்டிகை இல்லையே?” “நாங்க எல்லாம் ஸ்வீட் சாப்பிடும்போது அவனும் சாப்பிடனும் இல்லக்கா… பட்டாசுக்கூட அவனுக்குக் கொடுப்பேன்” என்றான் முகிலன். “அப்பன்னா, பண்டிகைங்கிறது ஏதோ ஒருவகையில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறதுதானே?” “ஆமா?” “அப்பன்னா, ரம்ஜானும் அப்படித்தானே? அது ரஹூம், பாத்திமா வீட்டு பண்டிகை மட்டுமா என்ன?” மெளனமாக யோசித்தனர். “தீபாவளி, கிறிஸ்மஸ் பண்டிகை மகிழ்ச்சியில ரஹூமையும் பாத்திமாவையும் உங்களோடு சேர்த்துகொள்ற மாதிரி ரம்ஜான் பண்டிகை மகிழ்ச்சியில் உங்களையும் அவங்கக்கூட சேர்த்துக்க ஆசை படுவாங்க இல்ல” “ஆமாக்கா” என்றனர் ஒரே குரலில். “அக்கா… ரம்ஜான் அன்னிக்கு காலையில இருந்து அவங்கக்கூட இருக்கோம். மாலையிலதானே டியூசன்?” என்று புதுகேள்வி கேட்டான் முகிலன். “ஆமா, வழக்கமான நாட்கள்ல டியூசனுக்கு அவங்களா வர முடியல்லன்னா… பரவாயில்ல… அவங்க கொண்டாடுற நேரத்துல டியூசன் வைச்சா என்ன பண்ணுவாங்க?” “அவங்களே லீவு போட்டுடுவாங்க அக்கா” “அப்ப வீட்டுல இருக்கிறப்ப, இன்னிக்கு அக்கா சொல்லிக்கொடுக்கிறத மிஸ் பண்றோம்னு அவங்களுக்கு தோணும்ல” “ஆமா அக்கா… ஒருவேளை கொண்டாட்டத்தை விட்டுட்டு அவங்களே டியூசனுக்கு வந்துட்டா?” என்றாள் பூரணி. “அவங்களே வந்தாலும் நாம வலுக்காட்டயப்படுத்தின மாதிரி தானே இருக்கும் பூரணி?” “ஆமாக்கா” “அதனால…” என்று லீலா பேச ஆரம்பித்ததை இடைமறித்த முகிலன் “ஆமாக்கா… ஒருநாள் லீவு விட்டா எதுவும் ஆகிடாது. அதை சேர்த்து அடுத்த நாள் கூடுதலா நேரம் ஒதுக்கி படிச்சிடலாம். நாளைக்கு பாத்திமாவோடும் ரஹீமோடும் சேர்ந்து ரம்ஜானைக் கொண்டாடப் போறோம்” என்றான். இப்படிப் பேசி முடிக்கும்போதும் ரஹூமும் பாத்திமாவும் டியூசனுக்கு வந்தார்கள். “ஸாரி அக்கா… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றனர். ”பரவாயில்லை. பாடத்தை ஆரம்பிப்போமா?” என்று லீலா கேட்க உற்சாகமாக எல்லோரும் தலையாட்டினர். அடுத்த நாள் ரம்ஜான். லீலா வீட்டு மொட்டை மாடியில் ஆகாஷ், முகிலன், பூரணி, பிரின்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கூடியிருந்தனர். எதற்காக? டியூசனுக்காக இல்லை. தன் டியூசன் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து தருவதற்காக அங்கு வரச் சொல்லியிருந்தனர் ரஹூமும் பாத்திமாவும். அவர்களும் பிரியாணிக்காக ஆவலாகக் காத்திருந்தனர். மாடிப்படியில் இருவரும் ஏறிவரும் சத்தம் வருவதற்குள் பிரியாணியின் வாசம் மொட்டை மாடிக்கு வந்துவிட்டது. எல்லோரும் “ஹோ….” எனச் சத்தமிட்டு அவர்களை வரவேற்றனர்.













