கரும்பு பெண்மணி யார்?
- உதயசங்கர்
- Jun 15
- 2 min read

ரதி : ஸ்ஸ்ஸ்ஸ்.. என்ன வெயில்!
நகுலன் : ஒரு கரும்பு ஜூஸ் குடிச்சா நல்லாருக்குமில்ல..
உதயசங்கர் : வாங்க செல்லங்களா.. இந்தா கரும்புச்சாறு குடிங்க..
குழந்தைகள் : ஐய்.. தாத்தா.. உங்கள எதிர்பார்க்கவே இல்லை.. சரிதா ஜோ அத்தை எங்கே?
உதயசங்கர் : சரிதா ஜோ அத்தை இந்த மாசம் லீவு போட்டுட்டாங்க.. அதான் நான் வந்துட்டேன்.. கரும்புச்சாறு எப்படி இருக்கு?
ரதி : சூப்பரா இருக்கு தாத்தா…. எனக்கு எப்பவுமே கரும்புச்சாறு தான் பிடிக்கும்..
உதயசங்கர் : செயற்கையான ரசாயான பான்ஙகளை விட இயற்கையான கரும்புச்சாறு உடம்புக்கு ரொம்ப நல்லது இல்லையா? இப்ப நான் ஒரு கேள்வி கேட்கப்போறேன்..
நகுலன் : எனக்குத் தெரியுமே.. கரும்புச்சாறில் என்ன சத்துகள் இருக்கின்றன? அப்படின்னு தானே.!.
உதயசங்கர் : செல்லமே.. என்ன அறிவு? ஆனால் நான் கேட்கப்போற கேள்வி வேற.. கரும்புக்கு இனிப்புச்சுவையைக் கொடுத்தது யாரு?
குழந்தைகள் : யாரு? இயற்கை தானே…!!!
உதயசங்கர் : இயற்கையில் இந்தியாவில் விளைந்த கரும்புக்கு இத்தனை இனிப்புச்சுவை இல்லை..அந்த இனிப்புச்சுவையை ஒரு பெண் அறிவியலாளர் தான் கொடுத்தார்..
குழந்தைகள் : அப்படியா? யாரு? யாரு? யாரு?
உதயசங்கர் : எதுக்கு இத்தனை யாரு? அவர் தான் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள்.. 1897- ஆம் பிறந்தவர். அவருடைய முழுப்பெயர் கக்கத் இடவேலத் ஜானகியம்மாள்.. கேரளாவைச் சேர்ந்த தாவரவியலாளர்.
ரதி : உண்மையில் பெருமையாக இருக்கு தாத்தா..யார் அந்த ஜானகியம்மா? அவங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க..
உதயசங்கர் : ஜானகியம்மா அவரது வீட்டில் 19 ஆவது குழந்தை. அவருக்கு சிறு வயதிலிருந்தே படிக்க வேண்டும் என்று ஆசை.. அப்பாவிடம் அடம்பிடித்து சென்னையில் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் ஹோம் சயின்ஸ் மட்டும் தான் படிக்க முடியும்..
நகுலன் : அப்படியா தாத்தா..!
உதயசங்கர் : ஜானகியம்மாளின் வகுப்புக்கு ஒரு தாவரவியலாளர் வந்தார். அவரிடம் ஜானகியம்மாள் நிறையக் கேள்விகளைக் கேட்டார்.. எல்லாம் தாவரவியல் தொடர்பான கேள்விகள்..அதைக் கேட்ட தாவரவியலாளர் அவரை சென்னையிலேயே தாவரவியல் படிக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டார்.
ரதி : கரும்பு எப்போது வரும் தாத்தா?
உதயசங்கர் : இந்தா வந்துருச்சி.. ஜானகியம்மாள் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்கே தாவர உயிரணுவியல் ( CYTOLOGY ) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் ஜானகியம்மாள் தான்..
குழந்தைகள் : ஆகா.. சூப்பர் தாத்தா..
உதயசங்கர் : அமெரிக்காவில் புதுவகை கத்தரிக்காயைக் கண்டுபிடித்தார். அதை ஜானகி கத்தரிக்காய் என்று இப்போதும் அழைக்கிறார்கள். கோவையில் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் கலப்பினக் கரும்பைக் கண்டுபிடித்தார்..
நகுலன் : இந்தியாவில் அவரைக் கொண்டாடியிருப்பார்களே..!
ரதி : ஆமாமா.. கொண்டாடிடக் கிண்டாடிப் போறாங்க.. இந்தக் காலத்திலேயே பெண்கள் என்ன செய்தாலும் பாராட்டறதுக்கு யோசிக்கிறாங்க..
உதயசங்கர் : ரதி சொல்றது உண்மை தான்.. அவர் பெண் என்பதாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் நிறைய அவமானங்களைச் சந்தித்தார்..ஆனாலும் அறிவுத்தாகம் அவருக்கு ஊக்கம் தந்து கொண்டேயிருந்தது.
ரதி : வேறு என்ன கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறார் கரும்புப்பெண்மணி ஜானகியம்மாள்?
உதயசங்கர் : பூக்களின் நிறங்களை மாற்றியிருக்கிறார்..
நகுலன் : எப்படி தாத்தா..?
உதயசங்கர் : ரோஜா என்றால் ரோஸ் நிறம் தான் இருந்தது. ஆனால் ஜானகியம்மாள் மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, சிவப்பு ரோஜா, என்று உருவாக்கினார்.. மஞ்சளும் வெள்ளையும் கலந்த ரோஜாவுக்கு அவர் பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்..
ரதி : என்ன பெயர் தாத்தா?
உதயசங்கர் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்..
குழந்தைகள் : எப்படி தாத்தா இந்த அறிவியலாளரைத் தெரிந்து கொண்டீர்கள்..?
உதயசங்கர் : எழுத்தாளர். இ.பா. சிந்தன் இந்தியாவின் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள் என்று ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார்.. அந்தப் புத்தகத்தைப் பஞ்சு மிட்டாய் பிரபுவின் ஓங்கில் கூட்டம் அமைப்பும் புக் ஃபார் சில்ட்ரெனும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.. வாங்கி வாசித்துப் பாருங்கள்.. இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்..
குழந்தைகள் : சரி தாத்தா.. அடுத்த மாதம் சரிதா ஜோ அத்தை வந்துருவாங்களா?
உதயசங்கர் : நிச்சயமா வந்துருவாங்க செல்லங்களா.. இனிமேல் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது…யார் ஞாபகத்துக்கு வருவாங்க?
ரதி : இடவேலத் கக்கத் ஜானகி அம்மாள்..
உதயசங்கர் : ரோஜாப்பூவைப் பார்க்கும்போது…
நகுலன் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்!
அனைவரும் சேர்ந்து : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.! மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்!.
எளிதில் படிக்க, புரிந்து கொள்ள முடிகிறது. நடையும் நன்றாக உள்ளது.