top of page

இயலில் தேடலாம்!

337 results found with an empty search

  • அம்கா

    நூல் :- அம்கா  ஆசிரியர் :- விழியன் பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம்  பக்கங்கள்:- 80 விலை :- ரூ.80/-    வணக்கம் செல்ல குழந்தைங்களே.. வாழ்க்கையில் எவை எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரும் என்று நினைக்கறீங்க?  படிப்பு, அந்தஸ்து, வேலை, பணம் இப்படி நிறைய சொல்லிட்டு போகலாம். ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி தரும் ஒன்று. மனதளவில்,  உடல் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று பற்றிக்கொள்ளுதல், வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று ;நமக்கு மகிழ்வையும் தரும் கூடிய ஒன்று.           அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள 14 கதைகளிலும் பொதுவான அம்சம் இறுகப் பற்றிக் கொள்ளுதல் தான். ஒரு நெகிழ்வான வாசிப்பு அனுபவத்தை தரும் நூல். அம்கா :-        மகிழமது என்ற குழந்தை, அந்தஸ்து வேறுபாடு இன்றி , ஒரு சுகாதாரப் பணியாளரின் மகள் சசியுடன் பழகுகிறாள். பசி வயிற்றோடு வரும் குழந்தைக்கு வயிற்றுக்கும், அவள் அறிவுப் பசிக்கும் உணவிட ஆரம்பிக்கிறாள். அந்தக் குழந்தை இவளுக்கான நினைவு பரிசாக ஒரு ஓவியத்தை வரைந்து நன்றி! அம்கா.. என்று  எழுதி இருக்கிறது. அக்கா என்பதை பிழையாக எழுதி இருக்கிறாள்  என்று நினைக்கிறீர்களா? இல்லை அவள் அன்பை அந்த சொல்லில் காட்டியிருக்கிறாள்.  அதன் பொருள் தெரிய கதையை வாசியுங்கள் குட்டீஸ்.   இரைச்சல் :-          பெரும்பாலான நேரங்களில் பெரியவர்களான நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். ஆனால் நாம் செய்கின்ற செயல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில்லை. அப்படி ஒரு பள்ளியின் அருகே இருக்கும் கோவிலில், ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் கடவுள் பாடல்கள் வைக்கப்படுகிறது. அதைத் தட்டி கேட்டால் அது மத பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஆசிரியர்கள் பயப்படும் வேளையில், பள்ளிக்கு புதிதாக வந்த நாகப்பன் என்ற மாணவன் , அறிவுப்பூர்வமாய் செய்த செயல், அந்த ஊர் பெரியவர்களின் மனதை மாற்றியது. அப்படி அவன் என்ன செய்தான்?    பிடிச்சுக்கோ:- உள்ளடக்கிய கல்வி முறை என்பது அனைத்து குழந்தைகளும், அவர்களின் திறன்கள் மற்றும் தேவைகளைப் பொருட்படுத்தாமல், ஒரே வகுப்பறையில், ஒரே பள்ளிகளில் படிக்கும் ஒரு கல்வி முறை. ஆனால் நம் வகுப்பறைகள், கல்விக் கூடங்கள் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி  குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா?   அப்படி நடக்க முடியாமல் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பள்ளிக்கு வரும்  சூர்யா என்ற குழந்தையின் அம்மாவின் பாரத்தை குறைப்பதற்காக, சூர்யாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பது தான் கதை.    தற்காலிக தாத்தாக்கள்:-       இளமையில் வறுமைக் கொடிது; முதுமையில் தனிமை கொடிது; அப்படி தனிமையான முதுமையில் வசிக்கும் தாத்தாக்கள்,  தங்களுக்கான உலகத்தை எப்படி  நேர்மையான அணுகு முறையோடு உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை பேசும் கதை.    அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை:-         ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்கிறார். ஆனால் திடீரென்று அங்கே எதிர்பாராமல் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டதால்,  நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தே பள்ளிக்கு செல்கிறார். இது சாதாரணமாக நடந்தது அல்ல.  இதன் பின் ஏதோ இருக்கிறது. அதைக் கண்டறிய காவல்துறை வருகிறது. அது ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்தாலும், தங்களது அறிக்கையில் அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை என்று அந்த காவல்துறை ஆய்வாளர் மேரி பதிவு செய்து அனுப்புகிறார். ஏன் அவர் நடந்ததை எழுதவில்லை? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.    அ.ள்.ளி அள்ளி அ.ர.வ.ணை அரவணை அள்ளி அரவணை:-    பள்ளிகளில் அனைவரும் சமம் என்று சொன்னாலும் கூட, எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. அப்படி புத்தகக் கண்காட்சிக்கு தனக்கு வர எப்போதும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று ஏக்கப்பட்டு கீர்த்தி என்ற குழந்தை பீரித்தி  என்ற குழந்தையிடம்  சொல்வதைக் கேட்ட  கவிதா அக்கா  துரிதமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும், அனைத்து குழந்தைகளும் புத்தகக் கண்காட்சிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அந்த கவிதா அக்கா?   ஒரு பிரியாணி பார்சல்ல்ல்:-     தேவனும், ராகுலும் நண்பர்கள். எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பிரியாணி வாங்கி சாப்பிட ஆசை. காலை உணவு உண்ண தரும் காசை சிறிது செய்தாக சேகரித்து பிரியாணி வாங்க ஒரு  கடைக்கு செல்கிறார்கள். ஆனால் போதுமான அளவு தொகை அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்களுக்கு வயிறு முட்ட பிரியாணி கிடைத்ததோடு, ஒரு வயதான கண் தெரியாத பாட்டிக்கும் சேர்த்தே பிரியாணி கிடைத்தது. எப்படி கிடைத்திருக்கும்? அந்தக் கடையில் மனிதம் நிறைந்த நெஞ்சங்களும் இருந்தது என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமா?    குமோங்மங் - திடீரென வந்த வால் நட்சத்திரம்:-       கொரோனா காலகட்டத்தில், வாகனங்கள் அதிகம் செல்லாததால் ஒலி மாசுபாடில்லை; புகை மாசுபாடு இல்லை; ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தக் கதையில் கற்பனையில் வரும் ஒரு வால் நட்சத்திரம், உலகில் உள்ள அனைத்து  வாகன எரிபொருட்களையும் மாயமாய் கொண்டு சென்று விடுகிறது. என்ன   நடந்தது என்பது தான் கதை.    ஊற்று:-          மருதன், மோகனா ,வந்தனா, டேனிஷ் என்ற நான்கு குழந்தைகள், தங்கள் முன்பின் அறியாத தினேஷ் என்ற சிறுவனுக்கு உதவி செய்கிறார்கள். முன்பின் அறியாத சிறுவனுக்கு என்ன உதவி செய்தார்கள்?  உதவி என்பது அறிந்தவர்களுக்கு மட்டும்தான் செய்ய வேண்டுமா? அதேபோல் கேட்டால் தான் உதவி செய்ய வேண்டுமா என்ன ?         இப்படி இந்த தொகுப்பில் உள்ள நிறமற்ற வண்ணங்கள், க்ளாப்ஸ், வீர தீரம், கதம் கதம் கொக்கோ ரதம் ரதம் கிக்கோ, இந்த மலைக்கே போன்ற கதைகள் அன்பையும் இறுகப்பற்றுதலையும்  அழுத்தமாய் பேசுகிறது.         சக மனிதர்களுக்கு வாழ்தலில் நாம் தரும் ஆக பெரும் நம்பிக்கை இறுகப்பற்றுதலே. என்ன குட்டீஸ் நீங்களும் தேவையானவர்களின் கரங்களை இறுகப்பற்றிக் கொள்வீர்கள் தானே?

  • பறம்பின் பாரி – தொல் தமிழ்க்குடியின் அறம்

    வரலாறும் மொழியும் அடுத்தடுத்த தலைமுறைக்கு பழுதுபடாமல் கடத்தப்பட வேண்டியது  மிக முக்கியமான ஒன்று.  இதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மொழியியல் அறிஞர்களுக்கும் எத்துணை பங்கும் பொறுப்பும் இருக்கின்றதோ அதில் சற்றும் குறையாத அளவுக்கு இலக்கியவாதிகளின் பங்களிப்பும்  இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பறம்பின் பாரி என்ற வரலாற்று நாவலை இளையோருக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள்.     இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தீராக் காதலும் கருணையும் கொண்ட தலைசிறந்த பண்புடைய தலைவனான  பறம்பின் பாரியை பாணர்களும் புலவர்களும் சிலாகித்து பாடினர். அப்படிப்பட்ட இனக்குழு சமூகத்தின் தலைவனான பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் நீட்சியே இந்த நாவல்.   உலகின் தொல்குடியான தமிழ்குடியின் அறம் சார்ந்த வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும்  பாரியின் சங்க கால வாழ்க்கையை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இப்படியானதொரு இளையோர் நாவலினை  மிகச் சிறந்த முறையில் படைத்திருக்கிறார்.   "சாகசங்களை தேடும் பதின்ம வயதில் பறம்பின் ஏழு மலைகளை அறிந்து கொள்வதில் தன் முழு ஆற்றலையும் செலவழித்தான் பாரி. ஒரே நேரத்தில் இளமையின் வலிமையையும் முதுமையின் பேரன்பையும் பாரியால் காட்ட முடிந்தது" என்பதை வாசிக்கும் போது எப்படி பாரி பேராற்றல் உடைய தலைவனாக தன்னுடைய பதின் பருவத்திலேயே  உருவாகிக் கொண்டிருந்தான் என்பதை இந்த நாவலின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது.   தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களும் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்த போதிலும் பாரியிடம் கிடைக்கப்பெற்ற  கருணையை வேறு  எந்த மன்னரிடமும் எந்தப் பாணரும் புலவரும் உணர வில்லை என்று கபிலர் குறிப்பிடுவதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவருடைய பதின் பருவம் இருந்தது என்பதனை அறிந்து கொள்ள இந்த நாவல் துணை செய்கிறது.    கடல் கடந்து பரவி இருக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கும் பாரியின் வரலாற்றை இளையோருக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவன் வேள்பாரியாக உருவாவதற்கு பாரியின் பதின் பருவத்துக்காலம் எப்படி துணை செய்தது என்பதையும் கண்முன் காட்சிகளாக விரித்து காட்டுகிறது இந்த நாவல்.  வாசித்து முடித்து சில வாரங்கள் கடந்துவிட்டாலும் பாரியின் கரம் பிடித்து பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி  இப்போதும் மனது முழுவதும் நிரம்பி வழிகிறது. வெளியீடு - வானம் பதிப்பகம் தொடர்புக்கு - 9751549992

  • பாட்டுப்பாடுவோமா!

    1.கப்சிப் நாயுக்கும் நாயுக்கும் சண்டையாம் பூனையும் பூனையும் பார்த்ததாம் பூனைக்கும் பூனைக்கும் சண்டையாம் எலியும் எலியும் பார்த்ததாம் எலிக்கும் எலிக்கும் சண்டையாம் பல்லியும் பல்லியும் பார்த்ததாம் பல்லிக்கும் பல்லிக்கும் சண்டையாம் பொத்து பொத்துன்னு விழுந்ததாம் பொத்து பொத்துன்னு விழுந்ததும் கப்பு சிப்புன்னு இருந்ததாம். 2.மாமா வீட்டுத்தோட்டம் மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது சின்னஞ் சிறியத் தொட்டிகள் செடியைத் தாங்கி நிற்குது புடலை பாகற் காய்களோ தலைக்கு மேலே தொங்குது கத்திரிக்காய் செடி எல்லாம் பூத்து காய்த்து கிடக்குது தக்காளி செடி கூட பழுத்து பளுவில் தொங்குது குழம்புக் கேற்ற செடிகொடிகள் பந்த லிலே படருது பூச் செடிகள் பழவகைகள் கீரை களும் வளருது மாமா வீட்டுத் தோட்டம் மாடி யிலே இருக்குது மாறா வந்து பாரேன் அதிச யமாய் இருக்குது

  • பகா எண்களுக்கும் பகு எண்களுக்கும் என்ன தான் பிரச்சனை?

    வானத்தில் இருந்து தொப்பென கோலிக்குண்டு ஒன்று விழுந்தது. கோலிக்குண்டு எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. அது நகரத்தின் நடுவில் இருக்கும் மைதானத்தில் மட்டுமே விழும். அது கோலிக்குண்டுகளின் உலகம் மட்டுமல்ல. அது எண்களின் உலகமும்கூட. ஆனால் எல்லா கோலிக்குண்டும் ஒரே அளவில்தான் இருக்கும். ஒவ்வொரு கோலிக்குண்டிலும் ஓர் எண் எழுதி இருக்கும். அது இந்த உலகத்திற்கு வரும்போதே இருக்கும். குண்டு விழுந்ததும் அதில் என்ன எண் இருக்கும் என எல்லோரும்  உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏன்? ஏனெனில், இப்போது அங்கே ஒரு பிரச்சனை. பிரச்சனை என்பதைவிடச் சண்டை என்று சொல்லலாம். சண்டைகூட இல்லை, மனக்கசப்பு. அங்க யாருக்குள்ளே மனக்கசப்பு வந்துவிடப்போகிறது? எண்களுக்குள்தான். ஆமாம் ஆமாம். அங்கே ஒவ்வொரு கோலிக்குண்டிற்கும் ஓர் எண் இருக்கும். அவை அதிகபட்ச இரண்டு இலக்க எண்ணாக இருக்கும். 02,03,04ல் தொடங்கி....98,99 வரைக்கும். பூஜ்ஜியம் என்று எந்தக் கோலிக்கும் எண்கள் இல்லை. ஒவ்வொரு எண்ணும் பல எண்ணிக்கையில் இருக்கும். அதே சமயம் எல்லாக் கோலிக்குண்டும் ஒரே மாதிரி இருக்காது. அதற்குள் இருக்கும் குமிழிகள் வேறு வேறு மாதிரி இருக்கும். [உடனே வீட்டில் இருக்கும் கோலிக்குண்டினை ஆராயச் சென்றுவிடவேண்டாம்]. எண் இரண்டு முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களில் பல பிரிவுகள் இருக்கும். ஆனால் பிரதானமாக இரண்டு வகையான எண்களே அங்கே பேசப்பட்டன. பகா எண்கள் (Prime Numbers). பகு எண்கள் (Composite Numbers).  பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். . எண் 5 தன்னாலும் 1ஆல் மட்டுமே வகுபடும் அல்லவா. அது பகா எண். எண் 6, தன்னால் 1,2,3ஆல் வகுபடும் என்பதால் பகு எண். பகா எண்கள் வீராப்பான எண்கள். கொஞ்சம் கெத்தாகச் சுற்றும் எண்கள். யாரிடமும் எளிதாகப் பேசாது, ஆனால் யாராவது அழைத்து பேசினால் பேசும். பகு எண்கள் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சுற்றி நண்பர்கள் இருப்பார்கள். நெருங்கின உறவுக்கார எண்களும் இருக்கும். சத்தமாகச் சிரித்துக்கொண்டே இருக்கும். சாலையில் போய்வரும் குண்டுகளிடம் பேச்சுக்கொடுத்து ஒரே சத்தமாக இருக்கும். பக்கத்தில் எங்காவது போகவேண்டும் என்றால் குண்டுகள் உருண்டபடியே பயணிப்பார்கள். இன்னும் கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் என்றால் மூன்று சக்கர ஆட்டோக்களில் செல்வார்கள். ஓட்டுநர் என யாரும் இருக்க மாட்டார்கள். தானியங்கி ஆட்டோக்கள். ஒரு நாள் அந்த சம்பவம் நடந்தது. ஆட்டோவில் எண் 7ம், எண் 20ம் பயணித்தனர். ஏறியதில் இருந்து 20ஆம் எண் பேச்சை நிறுத்தவே இல்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் 7ஆம் எண் கோலி பதில் சொன்னது. என்ன சாப்பிட்டீங்க, எங்க படிக்கறீங்க, வெயில் அதிகமா இருக்கு, தண்ணீர் குடிக்கறீங்களான்னு நச நசன்னு பேசிக்கொண்டே வந்தது. என்னுடைய வகுத்திகள் 2,4,5,10 என்று பெருமையாக சொன்னது 20 எண் கொண்ட கோலிக்குண்டு. நாங்க எல்லாம் கெத்தான பகா எண்கள் என்று சொன்னது 7ஆம் எண் கொண்ட கோலிக்குண்டு. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மூன்று பாலங்களைக் கடந்தது ஆட்டோ. ஆட்டோவில் இருந்த சிகப்பு பொத்தானை அழுத்தியது 20. அதை எங்கே அழுத்தினாலும் அங்கே வண்டி நிற்கும். வண்டி நின்றது. “எண் 7, கொஞ்சம் இறங்கினா நான் கீழ இறங்கிப்பேன்” என்றது. 7 நகரவே இல்லை. அப்படியே போங்க என்று சொன்னது. 7ஆம் எண் கோலிக்குண்டினைத் தாண்டினால்தான் 20ஆம் எண் கோலிக்குண்டால் வெளியே வர முடியும். தாவ முயன்றது. தொம்மென 7ஆம் எண் கோலிக்குண்டின்மீது விழுந்தது 20. 7க்கு செம வலி. வலி பொறுக்க முடியாமல் திட்ட ஆரம்பித்தது. இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கித் திட்ட ஆரம்பித்தனர். “கொஞ்சம் இறங்கி ஏறி இருந்தால் சிக்கலே இல்லாமல் போயிருக்கும்” - 20 “இவ்ளோ பெருசா இருந்தா எப்படி நடமாட” - 7 அப்படியே வாய்தகராறு முத்தியது. 20ன் பக்கம் பகு எண்கள் சேர்ந்துகொண்டன. 7ன் பக்கம் பகா எண்கள் சேர்ந்து கொண்டன. 20க்கும் 7க்குமான சண்டை இப்போது பகு எண்ணுக்கும் பகா எண்ணுக்குமான சண்டையாக மாறிவிட்டது. “பகா எண்களால் எல்லோருடனும் சேர்ந்த வாழவே முடியல” “பகு எண்கள் எல்லா இடத்திலும் இடத்தை நிரப்பி அமைதியே கெடுது” மாறி மாறி திட்டிக்கொண்டனர். எல்லா கோலிகுண்டுகளும் திரண்ட காட்சி பயங்கரமாக இருந்தது. அது நடந்தபின்னர் அந்த உலகமே அமைதியாக இருந்தது. பேச்சுவார்த்தைகள், கேளிக்கை கொண்டாட்டம் என எதுவுமே நடைபெறவில்லை. எப்போதும் ஒரு போர் சூழல் நிலவியது. வானத்தில் இருந்து குண்டு விழும் மைதானத்தில் அடிக்கடி எல்லோரும் சேர்வார்கள். புதிய கோலிக்குண்டு விழுந்தால் அது பகு எண்ணா, பகா எண்ணா எனக் காண்பதற்காக. அணிக்கு ஆள் சேர்க்கின்றார்களாம். மாதத்தின் முதல் தேதி அன்று. எல்லோரும் மைதானத்தில் கூடி இருந்தனர். இடப்பக்கம் ஒரு அணியினர், வலப்பக்கம் ஒரு அணியினர். இன்று நிச்சயம் புதிய கோலிக்குண்டு விழும். வானத்தையே ஆவென பார்த்துக்கொண்டு இருந்தனர். மிகப்பெரிய கோலிக்குண்டு வானில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. பெருசு என்றால் மிகப்பெருசு. எல்லோரும் தூர ஓடினார்கள். எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. ஒரு தும்பி எப்படி பூ மீது அமருமோ அப்படி இலகுவாகத் தரையில் இறங்கியது. “ஏ.. அங்க பாருங்க ஒன்றாம் எண் கோலிக்குண்டு” ஆமாம். இதுவரையில் யாருமே ஒன்றாம் எண் கோலிக்குண்டினைப் பார்த்ததே இல்லை. ஒரு சின்ன கோலிக்குண்டு “இது பகா எண் அணியில் சேருமா, பகு எண் அணியில் சேருமா?” என்று கேட்டது. ஒன்று.. ஒன்று.. ஒன்று என அந்த உலகமே ஆரவாரத்தில் இருந்தது. அமைதி உடைந்திருந்தது. ஒன்றாம் எண் கோலிக்குண்டு தன் பையில் இருந்து ஒரு சொம்பினை எடுத்து வெளியே வைத்தது. “ஏ பஞ்சாயத்து செய்ய வந்திருக்குடா” என்று பேசிக்கொண்டனர். “வணக்கம் எண் கோலிக்களே, உங்களுக்குள் பிரச்சனை என அறிந்தோம். பிரச்சனையைத் தீர்க்கவே வந்துள்ளேன். யாராவது இரண்டு பக்க பிராதையும் சொல்லுங்க” என்றது ஒன்றாம் கோலிக்குண்டு. பகா எண்களை தலைமை தாங்கிய கோலிகுண்டு ”எங்களுக்குன்னு தனி நாடு பிரிச்சு கொடுங்க” என்றது. பகு எண் தலைமையும் ஆமாம் ஆமாம் என்றது. ஒன்றாம் எண் புன்னகைத்தது. “நாம எல்லோரும் எண்கள். பகா எண்கள் இல்லை என்றால் எப்படிப் பகு எண்கள் இருக்க முடியும். 20ன் வகுத்திகள் 2,4,5,10. இதில் எத்தனை பகா எண்கள் இருக்கு கவனிங்க. 4ன் வகுத்திகளும் 2,2 அவையும் பகா எண்களே. 10ன் வகுத்திகள் 2,5. இவை ரெண்டு பகா எண்களே. எல்லாம் சேர்த்தவைகளே எண்களின் உலகம். எல்லோரும் சேர்ந்து உலவும்போது நமக்கு மகிழ்ச்சி. இந்த எண் உலகம் எல்லோருக்குமானது, யாரும் உயர்வும் அல்ல, யாரும் தாழ்வும் அல்ல. இயங்க முடியாத கோலிகுண்டுகளுக்கு வலுவான கோலிகுண்டுகள் தானே கைக்கொடுக்க வேண்டும்? அது நம்ம கடமை அல்லவா?” ஒன்றாம் எண் பேசி முடித்ததும் அது சொல்வது சரி என்று ஒப்புக்கொண்டனர். மீண்டும் எல்லோரும் ஒன்றாக இணைந்தனர். ஒன்றாகச் சேர்ந்து பாடல் ஒன்றும் பாடினார்கள். என்ன பாட்டாக இருக்கும்?

  • யுனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் – 4

    குழந்தைகள் தமது உரிமைகளைப் பற்றியும்,அவற்றை எவ்வாறு வென்றெடுப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் எந்த ஒரு விஷயம் பற்றியும் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்? தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், தாம் வாழ்கிற சமூகங்களின் மனிதர்கள் ஆகியோரிடமிருந்தும், பத்திரிகை –தொலைக்காட்சி - யூடியூப் உள்ளிட்ட நவீன மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமே அறிந்து கொள்கிறார்கள். இந்த அறிதல் செயல்பாட்டுக்குக் குடும்பங்களும்,சமூகங்களும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு குழந்தைகளுக்குக் கற்பிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு அனுமதியும், ஆதரவும் அளிப்பது அவற்றின் கடமை என யுனிசெஃப் அமைப்பின் பிரகடனத்தின் ஐந்தாவது விதி சொல்கிறது. ஒரு குடும்பமோ,சமூகமோ தமது குழந்தைகளுக்கு எதையேனும் கற்பிக்க விரும்பினால் அவர்கள் பாட்டுக்கு அதைச்செய்து கொள்ள முடியும்தானே? இதில் அரசாங்கம் அனுமதிக்க என்ன இருக்கிறது என்ற கேள்வி, இதைப் படிக்கும் பலரின் மனங்களிலும் எழக்கூடும். ஓர் எல்லை வரை அரசாங்கத்துக்கு ஒரு பங்கும் கிடையாது என நாம் வாதத்துக்கு ஒப்புக் கொள்வோம்.  ஆனால், குடும்பம், இன்றைய நவீன சூழலில் கூட, தமது குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இப்படியான கற்பித்தலைச் செய்கிறதா? சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி விட்ட இளம் பெண் ரிதன்யாவினுடைய மரணம்,அதற்குக் கூறப்படும் காரணங்கள், பரிதாபமாக அந்தப்பெண் கண்ணீரும் கம்பலையுமாகத் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றிக் கதறி அழுது கொண்டே விவரித்த சம்பவங்கள், இறுதியில் அவருடைய தற்கொலை – இவையெல்லாம் எதைக்காட்டுகின்றன? அந்தப் பெண்ணின் பெற்றோர் அவருக்குக் கோடி கோடியாகப் பணம் செலவழித்து நகைகளையும்,ஆடை ஆபரணங்களையும், இன்ன பிறவற்றையும்தாம் கொட்டிக் கொடுத்திருந்தார்களே தவிர, ஒரு பெண் என்ற முறையில் அவளுக்குக் குடும்பத்திலும்,சமூகத்திலும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன, அவை கிடைக்காமற் போனாலோ,மறுக்கப்பட்டாலோ, யாரேனும் அவரைக் கொடுமைப்படுத்தினாலோ அதை எதிர்த்து என்ன செய்வது,எப்படி அதிலிருந்து மீள்வது என்பதைப் பற்றி எல்லாம் ஒரே ஓர் அணுவளவும் சொல்லித்தரவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? அந்தப் பெண்ணின் பெற்றோர் இப்போது கதறிக் கதறி அழுது புலம்புவதைப் பார்க்கையில், நமக்கு ஒரு புறம் பரிதாப உணர்வும்,அனுதாபமும் எழுந்தாலும் நிதானமாக யோசிக்கும் போது கோபமும்,வெறுப்பும்தானே தோன்றுகின்றன? அவர்களுக்கே இந்த உரிமைகள்,உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் ஒரு துளியும் அறிவில்லை அல்லது இருந்தும்,அவற்றில் ஒரே ஓர் அணுவளவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதுதானே உண்மை?    திருமணமாகிக் கணவன் வீட்டிற்குப் போய் இருபதாவது நாளிலேயே அந்தப் பெண் பெற்றோரிடம் வந்து கணவன் வீட்டாரிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியெல்லாம் கதறியழுது சொல்லியிருக்கிறார். ஆனால்,அவர்கள் மட்டுமல்லர், அந்தப்பெண் யாரிடம் எல்லாம் சொன்னாரோ அவர்களில் ஒருவர் கூட, அந்தப்பெண்ணுக்குத் துணிவூட்டி,”உனக்கு இழைக் கப்படுபவை குற்றங்கள். இவற்றை நீ அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட உனக்கு உரிமைகள் உண்டு” என்ற உண்மையைக் கூறவில்லை. காரணம், இவையெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்னும் உணர்வு யாருக்கும் இருந்திருக்கவில்லை; அல்லது நமக்கு எதற்கு வம்பு என்னும் பொதுப் புத்தி!  பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் இந்த உண்மையை உணர்த்தி, பாதிக்கப்படுவோரின் பக்கம் நிற்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் யுனிசெஃப் தனது பிரகடனத்தில் வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு,சிறு வயதிலிருந்தே அவர்களின் உரிமைகளைக் கற்றுத்தர வேண்டும். அப்படிக் கற்றுத்தரும் போதுதான்,அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தமது உரிமைகளை ஆகச்சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்கிறது யுனிசெஃப். அவர்கள் பெரியவர்களாக வளர வளர, நாம் நேரடியாக அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை குறையும் என்பது அந்தப் பிரகடன விதியின் உள்ளார்ந்த விருப்பம். ஏனெனில், எவ்வளவிற்குக் குழந்தைகள் வளர்கிறார் களோ, அந்த அளவுக்கு அவர்களுக்குக் குறைந்த அளவுக்கே வழிகாட்டல் தேவைப்படும் என்கிறது.   அரசாங்க அமைப்புகளுக்கும் இந்த மனித உரிமைகள் பற்றிய கல்வியும், விழிப்புணர்வும் அவசியம் என்பது, இரு தினங்களுக்கு முன் நடந்த அஜித் குமாரின் மரணம், - உண்மையில்,அது அரசே செய்த கொலை எனலாம் – தமிழ்நாட்டு மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. மடப்புரம் கோயிலில் நடந்த ஒரு திருட்டைப் பற்றி விசாரிக்க அங்கு போன போலீசார், அங்கே தற்காலிகப் பணியாளராகக் காவல்காரர் பொறுப்பில் இருந்த அஜித் குமாரை ‘விசாரணை’ செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையின் முடிவில் அவரைக் கொலை செய்து தூக்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள். திரைப்படங்கள்,நாவல்களில் பார்க்கும்,படிக்கும் போதே இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பதற வைப்பவை. நிஜத்தில் நடக்கும் போது, என்றைக்குத்தான் இந்தக் காவல் துறையினருக்கு மனிதத்தன்மை பற்றிய அறிவு வரும் என விரக்தியாக இருக்கிறது. இம்மாதிரி ஏதேனும் நடக்கும் போது, ஒரு வாரத்திற்கு எல்லாம் அமளி துமளிப்படும்! கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப்பணிக்கான உத்தரவு, வீட்டுமனைப் பட்டா, ஓர் அரசியல் கட்சியின் சார்பில் ஐந்து இலட்சம் பணம்- எல்லாம் இன்று அஜித்குமாரின் இல்லம் போய்ச்சேர்ந்திருக்கின்றன! போலீஸ் உயர் அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு “இப்படியெல்லாம் காவல் நிலையங்களில் ‘விசாரணை’கள் நடக்கவே கூடாது; இம்மாதிரித்  ‘தனி’ப்படை களை உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்றெல்லாம் உத்தரவுக்கு மேல் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!  நல்லது; இந்த விழிப்புணர்வும்,எச்சரிக்கையுணர்வும் நிரந்தரமாகட்டும்! தனி மனிதர்களும்,குடும்பங்களும்,ஒட்டுமொத்தச் சமூகமும் நமது குழந்தைகளுக்கு மனித உரிமைகள் பற்றி, பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத்தரட்டும்! அரசாங்கங்கள் அந்தக் கற்றல் செயல்பாடு கள் எவ்விதத்திலும் தடைப்படாமல் தொடர்வதை உறுதி செய்யட்டும்!

  • உரையாடல்களே பாடங்களாக…

    கதை, பாடல், உரைநடை... என இயங்கிவரும் இலக்கியத்தின் ஒரு பகுதியாக உரையாடல்களும் உள்ளன. இலக்கியத்தில் உரையாடலை மையப்படுத்தி தமிழில் நூல்கள் வெளிவந்துள்ள அனுபவம் நமக்கு உண்டு. உரையைவிட உரையாடல் முக்கியத்துவம் பெறும் காலம் இது. ஒற்றைக்கருத்தை உடைக்க, புரிதலை வலுப்படுத்த, நவீன சிந்தனைக்கான களமாக, திறந்த மனதோடு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள... என நேரடியான உரையாடல் மூலம் கருத்தாக்கங்களை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் இது. ஆரம்பக் கல்வியில் உரையாடல் வடிவத்தில் பல்வேறு பொருண்மைகளை மையப்படுத்திய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.  ஒவ்வொரு வகுப்பிற்கும் நான்கு பாடங்கள்வரை அவர்களது நிலைக்கேற்ப இடம்பெற்றுள்ளன. -  பாடமாக உள்ள உரையாடலை குழுவாக வாசித்தல் - அதையே நாடக வடிவில் பேசிக் காட்டுதல் - ஏதேனும்  தலைப்பின் கீழ் அல்லது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இயல்பாக உரையாடல் நிகழ்த்துதல் - சில உரையாடல்களை எழுத்தாக்குதல்... என்பதாக பாடங்கள் மொழியையும் மொழித்திறனையும், வாழ்க்கை அனுபவங்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளையும் முன்னெடுத்து செல்கின்றன. பாடத்தலைப்புகள்: நூலகம்: மூன்றாம் வகுப்புப் பாடத்தில் மாமாவும் தேனருவியும் நூலகத்திற்குச் செல்லுதல். கணினி உலகம் : மகிழினியும் மதியும் உரையாடுவது. கரிகாலன் கட்டிய கல்லணை: விடுமுறையில் அத்தையும் மாமாவும் கனிமொழியையும் மணிமொழியையும் கல்லணைக்கு அழைத்துச் சென்று கரிகாலன் கட்டிய கல்லணையைச் சுற்றிப் பார்ப்பது போன்ற பாடம். பசுவுக்குக் கிடைத்த நீதி : மனுநீதிச்சோழனின் அரண்மனை உரையாடல். விதைத் திருவிழா : ஆசிரியரும் மாணவர்களும் உரையாடுதல். தப்பிப் பிழைத்த மா ன்:  காகமும் மானும் பேசுவது. எழில் கொஞ்சும் அரு வி: சித்தியும் சித்தப்பாவும் அங்கவை சங்கவையுடன் ஒகேனக்கல் அருவிக்குப் போய்வந்த அனுபவம். நாயும் ஓநாயும் : தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் உரையாடுவது உயர்திணையும் அஃறிணையும்  - அப்பாவும் எழிலியும்  உரையாடுவது பாடத்தின் உரையாடல்கள்: புதுவை வளர்த்த தமிழ் யாழினி : அப்பா, பாரதிதாசனின் பாடலொன்றை சொல்லுங்களேன். அப்பா : சொல்கிறேன், யாழினி. “ தமிழுக்கும் அமுதென்று பேர்…"இது மட்டுமா? இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துக்களை முன்வைத்து நிறைய பாடல்களை அவர் பாடியுள்ளார்.  மாட்டு வண்டியிலே தாத்தா: நல்லா சிந்தித்துச் சொல்லுங்க. ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு. இளமதி: ‘கை’தாத்தா தாத்தா: கொஞ்சமா இருந்தா சிலன்னு சொல்வோம். நிறைய இருந்தா என்னன்னு சொல்வோம். இளமதி: ‘பல’தாத்தா...   இலக்கணக் கற்றலுக்கான உரையாடல்கள்:   கற்கண்டு ஐந்தாம் வகுப்புப் பாடத்தில் கற்கண்டு என்ற தலைப்பில் இலக்கணத்தை மையப்படுத்தி, உரையாடல் வடிவில் சிறு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி, இணைப்புச் சொற்கள், மயங்கொலிப்பிழை, மூவிடப் பெயர்கள்... போன்ற மொழிக்கூறுகளைப் புரிந்துகொள்ள அவை பேருதவியாக உள்ளன.      மயங்கொலிப்பிழை: மலர்: என்னப்பா இது? வளர்: நீதானே தவளையைக் கொண்டுவரச் சொன்னாய்? மலர்: என்ன? நான் தண்ணீர் பிடிக்கத் தவலை கேட்டால், நீ தண்ணீரில் வாழும் தவளையைக் கொண்டு வந்துள்ளாயே!    மாற்றி யோசிக்க வேண்டியவை: பாடப்பொருளை எளிதாகப் புரிந்துகொள்வதற்காக உரையாடல் வடிவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், கனமான பாடப்பொருளும் அதன் எழுத்துத் தமிழ்மொழிநடையும் குழந்தைகளைத் திக்குமுக்காடச் செய்வதாகவே உணரவைக்கிறது. எளிய வார்த்தைகள், வாக்கியங்கள், தெரிந்த வார்த்தைகள் என இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர்களால், அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளின் மூலம் மொழியை எளிதாக உள்வாங்கிக்கொள்ளமுடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. உரையாடல் பாடங்கள் அனைத்துமே ஆணை அறிவாளியாக, பதிலளிப்பவனாக மட்டுமே காட்டியுள்ளன. தாத்தா, மாமா, சித்தப்பா, ஆசிரியர் என எல்லோருமே ஆண்களாக உள்ளனர். கல்லணை பாடத்தில் மாமாவின் மனைவியாக அத்தையும் அருவிக்குப் போகலாமா பாடத்தில் சித்தப்பாவின் மனைவியாக சித்தியும் இடம்பெறுகின்றனர். துடுக்காக பதிலளிக்கும் பெண் குழந்தைகளைப் பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் பார்க்க முடிகிறது.

  • மதத்தைத் துறக்கலாமா? - அஜேந்தர் சிங்

    தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ இன்று எனக்கு நாற்பது வயது. கோடையில் ஒரு நாள் நான் பாட்னா சென்றேன். பாட்னா எனக்கு முற்றிலும் புதிய நகரம். அங்கே எனக்கு அறிமுகமானவர்கள் யாரும் இல்லை. நான் நினைத்ததைச் சாதிக்க ஏற்ற ஒரு சரியான இடம் எனத் தீர்மானித்தேன். கடைவீதியில் உள்ள விளம்பரப் பலகைகளை வாசித்தபடி நடந்தேன். இறுதியாக நான் தேடிவந்த இடத்தைக் கண்டுபிடித்தேன். அது ஒரு முடி திருத்தம் செய்யும் கடை. முடி திருத்தம் செய்ய எனக்குத் தடை இருந்தது. நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அந்தத் தடையை மீறி நான் அங்கு சென்றேன். நான் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவன். நீளமான தலைமுடி, அடர்ந்து வளர்ந்த தாடி, அடர்த்தியான மீசை இவை அனைத்தும் எனது அடையாளம். எனக்கு எல்லோரையும் போல இரண்டு மனங்கள் இருந்தன. ஒரு மனம் முடி திருத்தம் செய்யச் சொன்னது. மற்றொரு மனம் வேண்டாம் என்று தடுத்தது. இந்தச் சோதனையும், உள் போராட்டமும் நீண்ட நாட்களாக என்னைத் துரத்தின. சில சீக்கிய நண்பர்கள் சிறு வயதிலேயே முடி திருத்திக் கொண்டனர். என் நெருங்கிய நண்பன் பன்னிரண்டு வயதில், தடையை மீறி முடியைத் திருத்தி தன்னை அழகு படுத்திக் கொண்டான். அவனது பெற்றோர் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் எப்போதும் எனக்கு அவ்வாறு செய்ய ஆசை இல்லை. எனது அம்மா சீக்கிய மதத்தை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுபவர். எனக்கு அனைத்து வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். நானும் அவர் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்தேன். ஒவ்வொரு வாரமும் குருத்வாரா சென்றேன். கீர்த்தனை செய்தேன். அர்தாஸ் படித்தேன். சிறு வயதிலேயே தஸ்தார் (தலைப்பாகை) அணிந்தேன். நான் இளமையாக இருந்தபோது, ​​தெருக்களில் மக்கள் "ஓய் சர்தார்! தேரே பரா பஜ் கயே" அல்லது "ஜூடி" என்று கூச்சலிட்டதை நினைத்துப் பார்க்கிறேன். டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தபோது அம்மா கவனமாக எனது தோற்றத்தை மாற்றினார். நான் ஒரு சீக்கியப் பையனைப் போலத் தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு சிறுமியைப் போல குதிரைவால் சடை போட்டுவிட்டார். கலவரத்தில் எங்கள் வீடு எரிந்து சாம்பலானது. பிறகு நாங்கள் அகதிகளைப் போல வீடு வீடாக அலைந்தோம். பயங்கரவாதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயந்து ஒதுங்கும் நாங்கள், அதற்கான விலையைக் கொடுத்தோம். அன்று ஒரு சம்பவம் நடந்தது. பஞ்சாப்பில் காவல்துறையினரால் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தில் இருந்த ஒரே சீக்கியன் நான்தான். பேருந்திலிருந்து இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எனது உடைமைகள் அனைத்தும் இரக்கமின்றி வெளியே சாலையில் வீசப்பட்டன. பேருந்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். என்னிடம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கிடைக்காதபோது, ​​சிதறிக்கிடந்தவற்றை அள்ளி எடுக்க நான் தனித்து விடப்பட்டேன். எனக்கு வெட்கம் பிடுங்கியது. மறுபடியும் பேருந்து கிளம்பியதும், பயணிகள் என்னைக் குற்றவாளியைப் போலப் பார்த்தார்கள். அந்த நேரத்தில், இறங்கிச் சென்று எங்காவது மறைந்து போக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. ஆனாலும் நான் தலைப்பாகையும், தாடியும் வைத்த சீக்கியனாகவே இருந்தேன். அப்படியானால், எனது அடையாளத்தை அழிக்க நாற்பது வயதில் நான் ஏன் முடிதிருத்தும் கடையில் காத்திருந்தேன்? இந்த மாற்றம் படிப்படியாக வந்தது. சீக்கிய மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று குழந்தையாக இருந்தபோது எனக்குச் சொல்லப்பட்டது. கோயில்களிலும், தேவாலயங்களிலும் இருக்கும் சிலைகளைப் பற்றி எதிர்மறையான விஷயங்கள் கூறப்பட்டன. இந்த வடிவங்களில் கடவுளை நாம் ஒருபோதும் காண முடியாது என்றும் கூறப்பட்டது. குருத்வாராவுக்குச் சென்றபோது, ​​சீக்கியர்களின் கடைசி குருவாகக் கருதப்படும் சீக்கியப் புனித நூல், ஒரு தங்க இருக்கையில் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அது அழகான பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஒருவர், புனித நூலை பல்லக்கில் சுமந்து சென்றார். சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு மதம், சொந்தப் புனித நூலுக்கு ஒரு சிலையின் வடிவத்தை அளித்தது அப்போது எனக்குப் புரிந்தது. புனித நூலின் குறிப்புகள் பற்றி விவாதித்த யாரையும் நான் பார்த்ததில்லை. உண்மையில், பெரும்பாலான சீக்கியர்கள் அதைப் படித்ததில்லை. வழிபாட்டுச் செயல்முறை, மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. எனக்கும் மனதளவில் மதம் தொடர்பான பல கேள்விகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு சீக்கிய குருவும், எனது கேள்விகளுக்கு இதுவரை பதிலளித்ததில்லை. நான் அதைப் பற்றித் தேடினேன். பல்வேறு புத்தகங்களைப் படித்தேன். அறியாமை எனக்குக் கசப்பாக இருந்தது. நீண்ட யோசனையில் இருந்தேன். நாவிதர், என்னை வாடிக்கையாளர் நாற்காலியில் உட்காரச் சொன்னார். ஆனால் அவர் சற்று குழப்பமடைந்ததாகத் தோன்றியது. நான் போலி நம்பிக்கையுடன் முன்னோக்கி நடந்து நாற்காலியில் அமர்ந்தேன். என் நீண்ட முடியை வெட்டச் சொன்னேன். எனக்கு எந்த ஸ்டைல் ​​வேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். "நீங்கள் விரும்பும் எந்த வடிவமும் எனக்குப் பொருத்தமானது" என்றேன். சீக்கிய மதத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒருவர் செய்தால், தண்டனையாக குருத்வாராவிற்கு வரும் எல்லோரது செருப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று யாரோ சொன்னது நினைவில் இருந்தது. அப்போது அவர் பாவத்திலிருந்து விடுபடுவார். மீண்டும் மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார். எனவே முடி வெட்டிய பிறகு, நான் தவறு செய்ததாக உணர்ந்து, என் மதத்திற்குத் திரும்ப விரும்பினால், எனது மதத் தலைவர் தீர்மானிக்கிற தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும். முடி திருத்துபவர் சீப்பையும், கத்தரிக்கோலையும் கையில் எடுத்து, என் தலைமுடியைத் தொட அனுமதி கேட்டார். ஏனென்றால் வேறு யாரும் சீக்கியரின் தலைமுடியைத் தொடக்கூடாது. நான் 'ஆம்' என்றேன். முதலில், ஒரு கொத்து முடி கீழே விழுந்தது. நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அதுதான் நான் கடைசியாக என்னை இந்த வடிவத்தில் பார்த்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. நாற்காலியைச் சுற்றி நீண்ட முடிகள் சிதறிக்கிடந்தன. தலைபாரம் குறைந்ததாக இருந்தது. நான் இப்படியொரு வடிவம் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தாடியை வெட்டும்போது, ​​முடிதிருத்துபவர், “இன்னும் கொஞ்சம் வெட்ட வேண்டுமா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். சலூனில் இருந்த மற்றவர்கள் எல்லோரும், தங்கள் வேலையை விட்டுவிட்டு எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். முழு தாடியும் நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக என் முகத்தைப் பார்த்தபோது, ​​என் கன்னங்கள் தெரிந்தன. என்னை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. நான் என் வயதை விட இளமையாகத் தெரிந்தேன். முடிதிருத்துபவரின் வேலை முடிந்தது. நான் அவருக்கு நன்றி சொல்லி, அங்கிருந்த எல்லோருக்கும் வணக்கம் வைத்தேன். என்னை அடையாளம் காண முடியவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள். நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். முன்கதவைத் திறந்து வீட்டினுள் செல்வதற்கு முன்பு, மோத்தி என்னை அடையாளம் காண்பாளா என்று பயந்தேன். ஆனால் நான் கதவைத் திறந்ததும் என்னை நோக்கிப் பாய்ந்தாள். கட்டி அணைத்தாள். இந்த உலகில், யாரும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என் செல்லப் பிராணி மோத்தி என்னுடன் இருக்கிறாள். அதன் நட்பு நீடிக்கும் வரை யாருடைய விமர்சனங்களையும், தீர்ப்பையும் என்னால் எதிர்கொள்ள முடியும். முன்பைவிட மோத்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஏனென்றால் அவளால் என் முடி இல்லாத கன்னங்களை எளிதாக நக்க முடிந்தது.

  • ஏன் பிறந்தோம்? - 4 சிந்தனை விதை எப்படி உருவானது?

    உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடரோ என எதுவாக இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டன. அவற்றைக் குறித்து எந்தப் புகாரும் அவற்றுக்கு இல்லை. ஏன் இப்படி நடக்கிறது? தெரியாது. இதை மாற்ற முடியுமா? தெரியாது. இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா? தெரியாது. ஏனெனில், அவற்றுக்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்கும் அளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை. பரிணாமக் கோட்பாட்டின்படி இயற்கையான வாழும்நிலையில் மாற்றம் இல்லாதபோது, எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா? வாழும்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல் ஆகியவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழாதபோது, அந்த உயிரினங்களும் தலைகீழாக மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  எனவேதான், ஒரு புலி புலியாகவே இப்போதும் நீடிக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவேதான் இப்போதும் இருக்கிறது. இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அதாவது  வாழும்நிலை என்பதே ஒவ்வொரு உயிரின் இருப்பைத் தீர்மானிக்கிறது. வாழும்நிலைதான் அந்த உயிரின் உணர்வையும் அறிவையும் முடிவு செய்கிறது. வாழும்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகிறது. ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில்தான் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது.  சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது. சரியா? ஆனால், காடு அழியும்போது என்ன நடக்கிறது? உணவு கிடைக்காது,  இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை. புலி என்கிற இனம் அந்தக் காட்டில் அழிந்துவிடும். நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? புலி ஏன் மரங்களை நட்டு காட்டை உருவாக்கக் கூடாது? நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா? கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்துவிடும். இயற்கையை மாற்ற முடியும், கட்டுப்படுத்த முடியும், திருத்த முடியும் என்று அதற்குத் தெரியாது. ஆனால், யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றனவே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? உண்மைதான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் மட்டுமல்ல, வேறு பல உயிரினங்களும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால், யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும்போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா? அல்லது வண்ணத்துப்பூச்சி மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின், செடிகளின் இனப்பெருக்கத்துக்கு நான் உதவுகிறேன் என்று தெரிந்து, ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா? இல்லையே. யானைக்கோ வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது. அவற்றின் உயிரியல் இயல்பும், உடலியல் செயல்பாடுகளும் இயற்கையாக நடப்பவை. அப்படி என்றால்?  அவை சிந்தித்துச் செயல்படவில்லை. மனித இனம் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறது. மனிதர்களும் திடீரென சிந்திக்கவில்லை. மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாக மனிதர்களும் கலந்தே இருந்தார்கள். எப்படி மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? எப்போது அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்? மனிதர்களிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது? என்கிற கேள்விகள் வருகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், மனித இனத்தின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா? கை விரல்களில் இருந்துதான். கேளுங்கள்! எப்படி? ( தத்துவம் அறிவோம் ) - ஆதி

  • புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம் - 3

    1.நடந்தா உடம்பு குறையும்னு சொல்றாங்க. ஆனால், யானைக்கு உடம்பு குறையவேயில்லை, ஏன்? (த.சி.பத்ரிபிரசாத், ஐந்தாம் வகுப்பு, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.) நல்லா யோசிச்சிருக்கீங்க பத்ரிபிரசாத். உடல் எடையைக் குறைக்க எல்லாரும் நடக்கச் சொல்கிறார்கள். அதேநேரம் காட்டுயிர்களில் அதிகம் நடப்பது யானை. அதன் உடல் எடை குறையவில்லையே. இந்த இரண்டு விஷயத்தையும் இணைச்சு யோசிச்சு கேள்வி கேட்டதற்கு நன்றி. நம் நாட்டில் வாழும் காட்டு யானை ஒன்றின் சராசரி எடை 4,000 கிலோவுக்கு மேல். ஒரு நாளைக்கு 150-200 கிலோ இலை, தழைகளை அது சாப்பிடுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 2 கி.மீ.இல் தொடங்கி 7 முதல் 10 கி.மீ.வரை யானைகள் நடக்கின்றன. இவ்வளவும் நடந்துசெல்வது எதற்காக? இரை தேடத்தான். ஒரு நாளின் முக்கால் பங்கு நேரத்தில் இரை தேடுவதற்காக யானைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக்கொள்வோம். நாமெல்லாம் குழந்தையாகப் பிறக்கிறோம். அதிலிருந்து நம் உடல் எடை ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பதின்பருவத்தைத் தாண்டி வளர்ந்தவுடன் நம் உடல் எடை கிட்டத்தட்ட நிலையாகிவிடுகிறது. பிறகு வயது முதிரும்போது குறையத் தொடங்குகிறது.  இதேபோலத்தான் யானைகளுக்கும் நடைபெறும். யானை குட்டியாக இருந்ததில் இருந்து, வயது ஏறஏற எடை அதிகரித்து, வளர்ந்தவுடன் எடை நிலைபெற்றுவிடும். வயது முதிரும்போது எடை குறையத் தொடங்கிவிடும். எல்லா உயிரினங்களும் அவற்றின் உயரம், உடல் சுற்றளவின் அடிப்படையில் உகந்த எடை என்று ஒன்று இருக்கிறது. அந்த உகந்த எடை இருந்தால்தான், அந்த உயிரினம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, எடையைப் பராமரிக்க எல்லா உயிரினங்களும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அதிகப்படி எடை இருந்தால் நடந்தோ, உடற்பயிற்சி செய்தோ, உணவின் அளவைக் குறைத்தோ எடையைக் குறைக்க வேண்டும். இலை, தழை, புல், இளம் கிளைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை யானை உண்ணும். அவை தம் உடல் எடையை பராமரிக்க நிஜமாகவே நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது. அந்த இரையைத் தேட நிறைய நடக்கவும் வேண்டியிருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை, எதிரானவை அல்ல. அதனால், யானை எவ்வளவு நடந்தாலும் எடை குறைவதில்லை. 2.ராட்டினத்திலோ, பூங்காவில் சுழலும் குதிரையிலோ உட்கார்ந்து சுற்றிய பிறகு, அந்த ராட்டினமோ குதிரையோ நின்றுவிடுகிறது. அதன் பிறகு நமக்குத் தலைசுற்றுவது ஏன்? அவை நின்ற பிறகு, நம் உடல் சுற்றாமல் நின்றுவிடுகிறது. ஆனாலும், தலைசுற்றுவது போல் தோன்றுகிறதே, அது ஏன்? த.மதிவதனி, 4ஆம் வகுப்பு, ஆரப்பாளையம், மதுரை நல்ல கேள்வி மதிவதனி. நம் உடல் ஏன் இப்படிச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் உள்காதுப் பகுதிதான் நம் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது. பொதுவாக நம் உடலோ அல்லது வாகனத்தில் நாம் சென்றாலோ அந்த இயக்கத்துக்கு ஏற்ப நம் உடலை சமநிலையில் வைப்பதற்கு, உள்காது பகுதி எதிர்வினை ஆற்றுகிறது. நமது உள்காதுப் பகுதியில் அரை வட்ட வடிவில் சில கால்வாய்கள் உள்ளன. அந்தக் கால்வாய்களில் திரவம் உள்ளது. நம் உடலைச் சுற்றும்போதோ, ராட்டினம், சுழலும் குதிரையில் சுற்றும்போதோ இந்த திரவமும் சேர்ந்து சுற்றும். அந்தக் கால்வாய்களில் உள்ள நுண்ணிய முடிகள், இந்த இயக்கம் தொடர்பாக மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இயக்கத்துக்கு ஏற்ப உடலை சமநிலையில் வைக்க இது தேவை. அதேநேரம், நம் உடல் சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்கூட, நிலைமத்தின் (inertia) காரணமாக திரவம் சற்று நேரத்துக்கு சுற்றுவதால், அந்த சமிக்ஞை சிறிது நேரத்துக்கு செல்லும். நம் உடல் இயங்குவதை நிறுத்தியிருக்கும். ஆனாலும் மூளைக்குச் செல்லும் தவறான சமிக்ஞையின் காரணமாகத் தலை மட்டும் சுற்றும். சிறிது நேரத்தில் இந்த சமிக்ஞை நின்று, இயல்பு நிலைக்கு நாம் திரும்பிவிடுவதால், தலைசுற்றல் நின்று உடலைப் போலவே தலையும் இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.  -------- அமிதா

  • மெகலோடான்

    பல குழந்தைகளுக்கு இருக்கும் ஒரு பெரிய கேள்வி, "இப்பவும் மெகலோடான் (மெக்) இருக்கா?" என்பதுதான்.  மெகலோடான் (Megalodon) என்ற ஒருவகை சுறா இப்போது இல்லை. எப்போதோ அழிந்துவிட்டது. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலகட்டம் வரை இந்த சுறாமீன்கள் வாழ்ந்திருக்கின்றன. மெகலோடான் என்ற சொல்லுக்கு "பெரிய பற்களுடையது" என்று பொருள். இதன் பற்கள் பிரம்மாண்டமாக இருந்ததால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.  "பெரிய பல்" என்று சும்மா பேச்சுக்கு என்று யாரும் சொல்லவில்லை. ஒரு பல்லே அதிகபட்சம் 18 சென்டிமீட்டர் நீளம் இருக்குமாம்! அதாவது அரையடி ஸ்கேலைவிட கொஞ்சம் அதிகமான உயரம்! இதை அடிப்படையாக வைத்து நாம் இதற்குத் தமிழில் "பெரும்பல் சுறா" என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த பூமியில் இதுவரை தோன்றிய சுறாக்களிலேயே மிகப்பெரியது பெரும்பல் சுறாதான். இது சுமார் 60 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை ஐம்பதாயிரம் கிலோ இருக்கும். பிற சுறாக்கள், திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகள், பெரிய மீன்கள் ஆகியவற்றைப் பெரும்பல் சுறாக்கள் வேட்டையாடி சாப்பிட்டிருக்கின்றன. பெரும்பல் சுறாக்களின் உடல் சற்றே மெலிதான, நீண்ட அமைப்பு கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். என்னதான் அளவில் பெரியதாக இருந்தாலும் இது வேகமாக நீந்தக்கூடியது அல்ல என்றும், பதுங்கிப் பதுங்கி இரைக்கு மிக அருகில் போய் பிறகு விரைவாகத் தாக்கும் பண்பு கொண்டது எனவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன பொதுவாக அழிந்துபோன விலங்குகளை நாம் தொல்லுயிர் எச்சங்கள் (Fossils) மூலமாகத்தான் அறிந்துகொள்வோம். டைனோசர்களைக் கூட அப்படித்தான் விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர். உடலில் இருக்கும் எலும்புகள் கடினமாகி இறுகும்போது தொல்லுயிர் எச்சங்கள் உருவாகும். ஆனால் சுறாக்களின் உடலில் எலும்புகள் கிடையாது. குருத்தெலும்புதான் இருக்கும். நமது காதுகளிலும் மூக்கிலும் இருக்கும் எளிதில் வளையக்கூடிய எலும்புதான் குருத்தெலும்பு. சுறாக்களின் உடல் முழுக்கவே இந்தக் குருத்தெலும்புதான் இருக்கும். எலும்பு கிடையாது என்பதால் அந்த எலும்புக்கூடு தொல்லுயிர் எச்சமாகவும் மாறாது. எலும்புக்கூடு கிடைக்காது என்றால் எப்படி அதன் உடல் நீளத்தையெல்லாம் கணக்கு போட்டார்கள்? அங்குதான் இருக்கிறது சுவாரஸ்யம். சுறாக்களின் பற்கள் வழக்கமானவைதான். அவை தொல்லுயிர் எச்சமாக மாறக்கூடியவை. கிடைக்கும் பல் எச்சங்களை வைத்துதான் உடல் நீளம், எடை எல்லாவற்றையும் கணக்கு போட்டிருக்கிறார்கள். காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் பிற விலங்குகளுடன் ஏற்பட்ட போட்டி ஆகியவற்றால் பெரும்பல் சுறாக்கள் அழிந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

  • மாயச்சதுரங்கள்

    ஜோதிலிங்கம் கணிதவியலாளர் 3x3, 4x4, 5x5 அளவுள்ள கட்டங்களில் எண்களை நிரப்பி பின்னர் அவற்றின் கூட்டுத்தொகை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் மற்றும் குறுக்கும் நெடுக்குமாக கூட்டினால் ஒரே கூட்டுத்தொகை வருமாறு செய்வது மாயச் சதுரமாகும். உதாரணம் மேற்கூறிய தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வளமாகவும் ஒன்றாகவே வருகிறது

  • பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?

    முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும்.  சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது, “மியாவ் மியாவ்.. என்னை விடறா.. குண்டுப்பையா.. மியாவ் ” என்று கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும் பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும்.  ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள் நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத் தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு, “தங்கச்சி.. என் பையனை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து. “நிச்சயமாக அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது. இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது. “ பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு பசிக்குது..கர்ர்ர்” என்று உறுமியது. “ இதோ உனக்கு உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது இரவாகி விட்டது.    அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள்.  அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது. பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின் விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது. அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு தான்! புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்!  “கர்ர்ர் உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது.  நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது. பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப் பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது.   இப்போது கூடப் பாருங்கள்! இந்தக் கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது.  ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்

bottom of page