top of page

யுனிசெஃப் பிரகடனம் – குழந்தைகளின் உரிமைகள் – 4

ree

குழந்தைகள் தமது உரிமைகளைப் பற்றியும்,அவற்றை எவ்வாறு வென்றெடுப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் எந்த ஒரு விஷயம் பற்றியும் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்? தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், தாம் வாழ்கிற சமூகங்களின் மனிதர்கள் ஆகியோரிடமிருந்தும், பத்திரிகை –தொலைக்காட்சி - யூடியூப் உள்ளிட்ட நவீன மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமே அறிந்து கொள்கிறார்கள். இந்த அறிதல் செயல்பாட்டுக்குக் குடும்பங்களும்,சமூகங்களும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு குழந்தைகளுக்குக் கற்பிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு அனுமதியும், ஆதரவும் அளிப்பது அவற்றின் கடமை என யுனிசெஃப் அமைப்பின் பிரகடனத்தின் ஐந்தாவது விதி சொல்கிறது.


ஒரு குடும்பமோ,சமூகமோ தமது குழந்தைகளுக்கு எதையேனும் கற்பிக்க விரும்பினால் அவர்கள் பாட்டுக்கு அதைச்செய்து கொள்ள முடியும்தானே? இதில் அரசாங்கம் அனுமதிக்க என்ன இருக்கிறது என்ற கேள்வி, இதைப் படிக்கும் பலரின் மனங்களிலும் எழக்கூடும். ஓர் எல்லை வரை அரசாங்கத்துக்கு ஒரு பங்கும் கிடையாது என நாம் வாதத்துக்கு ஒப்புக் கொள்வோம். 


ஆனால், குடும்பம், இன்றைய நவீன சூழலில் கூட, தமது குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இப்படியான கற்பித்தலைச் செய்கிறதா? சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி விட்ட இளம் பெண் ரிதன்யாவினுடைய மரணம்,அதற்குக் கூறப்படும் காரணங்கள், பரிதாபமாக அந்தப்பெண் கண்ணீரும் கம்பலையுமாகத் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றிக் கதறி அழுது கொண்டே விவரித்த சம்பவங்கள், இறுதியில் அவருடைய தற்கொலை – இவையெல்லாம் எதைக்காட்டுகின்றன?


அந்தப் பெண்ணின் பெற்றோர் அவருக்குக் கோடி கோடியாகப் பணம் செலவழித்து நகைகளையும்,ஆடை ஆபரணங்களையும், இன்ன பிறவற்றையும்தாம் கொட்டிக் கொடுத்திருந்தார்களே தவிர, ஒரு பெண் என்ற முறையில் அவளுக்குக் குடும்பத்திலும்,சமூகத்திலும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன, அவை கிடைக்காமற் போனாலோ,மறுக்கப்பட்டாலோ, யாரேனும் அவரைக் கொடுமைப்படுத்தினாலோ அதை எதிர்த்து என்ன செய்வது,எப்படி அதிலிருந்து மீள்வது என்பதைப் பற்றி எல்லாம் ஒரே ஓர் அணுவளவும் சொல்லித்தரவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?


அந்தப் பெண்ணின் பெற்றோர் இப்போது கதறிக் கதறி அழுது புலம்புவதைப் பார்க்கையில், நமக்கு ஒரு புறம் பரிதாப உணர்வும்,அனுதாபமும் எழுந்தாலும் நிதானமாக யோசிக்கும் போது கோபமும்,வெறுப்பும்தானே தோன்றுகின்றன? அவர்களுக்கே இந்த உரிமைகள்,உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் ஒரு துளியும் அறிவில்லை அல்லது இருந்தும்,அவற்றில் ஒரே ஓர் அணுவளவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதுதானே உண்மை? 

 

திருமணமாகிக் கணவன் வீட்டிற்குப் போய் இருபதாவது நாளிலேயே அந்தப் பெண் பெற்றோரிடம் வந்து கணவன் வீட்டாரிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியெல்லாம் கதறியழுது சொல்லியிருக்கிறார். ஆனால்,அவர்கள் மட்டுமல்லர், அந்தப்பெண் யாரிடம் எல்லாம் சொன்னாரோ அவர்களில் ஒருவர் கூட, அந்தப்பெண்ணுக்குத் துணிவூட்டி,”உனக்கு இழைக் கப்படுபவை குற்றங்கள். இவற்றை நீ அனுமதிக்கக் கூடாது. எதிர்த்துப் போராட உனக்கு உரிமைகள் உண்டு” என்ற உண்மையைக் கூறவில்லை. காரணம், இவையெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்னும் உணர்வு யாருக்கும் இருந்திருக்கவில்லை; அல்லது நமக்கு எதற்கு வம்பு என்னும் பொதுப் புத்தி! 

பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் இந்த உண்மையை உணர்த்தி, பாதிக்கப்படுவோரின் பக்கம் நிற்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் யுனிசெஃப் தனது பிரகடனத்தில் வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு,சிறு வயதிலிருந்தே அவர்களின் உரிமைகளைக் கற்றுத்தர வேண்டும். அப்படிக் கற்றுத்தரும் போதுதான்,அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, தமது உரிமைகளை ஆகச்சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்கிறது யுனிசெஃப்.


அவர்கள் பெரியவர்களாக வளர வளர, நாம் நேரடியாக அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை குறையும் என்பது அந்தப் பிரகடன விதியின் உள்ளார்ந்த விருப்பம். ஏனெனில், எவ்வளவிற்குக் குழந்தைகள் வளர்கிறார் களோ, அந்த அளவுக்கு அவர்களுக்குக் குறைந்த அளவுக்கே வழிகாட்டல் தேவைப்படும் என்கிறது.  


அரசாங்க அமைப்புகளுக்கும் இந்த மனித உரிமைகள் பற்றிய கல்வியும், விழிப்புணர்வும் அவசியம் என்பது, இரு தினங்களுக்கு முன் நடந்த அஜித் குமாரின் மரணம், - உண்மையில்,அது அரசே செய்த கொலை எனலாம் – தமிழ்நாட்டு மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. மடப்புரம் கோயிலில் நடந்த ஒரு திருட்டைப் பற்றி விசாரிக்க அங்கு போன போலீசார், அங்கே தற்காலிகப் பணியாளராகக் காவல்காரர் பொறுப்பில் இருந்த அஜித் குமாரை ‘விசாரணை’ செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையின் முடிவில் அவரைக் கொலை செய்து தூக்கிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள்.


திரைப்படங்கள்,நாவல்களில் பார்க்கும்,படிக்கும் போதே இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பதற வைப்பவை. நிஜத்தில் நடக்கும் போது, என்றைக்குத்தான் இந்தக் காவல் துறையினருக்கு மனிதத்தன்மை பற்றிய அறிவு வரும் என விரக்தியாக இருக்கிறது. இம்மாதிரி ஏதேனும் நடக்கும் போது, ஒரு வாரத்திற்கு எல்லாம் அமளி துமளிப்படும்! கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப்பணிக்கான உத்தரவு, வீட்டுமனைப் பட்டா, ஓர் அரசியல் கட்சியின் சார்பில் ஐந்து இலட்சம் பணம்- எல்லாம் இன்று அஜித்குமாரின் இல்லம் போய்ச்சேர்ந்திருக்கின்றன! போலீஸ் உயர் அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு “இப்படியெல்லாம் காவல் நிலையங்களில் ‘விசாரணை’கள் நடக்கவே கூடாது; இம்மாதிரித்  ‘தனி’ப்படை களை உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்றெல்லாம் உத்தரவுக்கு மேல் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்! 

நல்லது; இந்த விழிப்புணர்வும்,எச்சரிக்கையுணர்வும் நிரந்தரமாகட்டும்! தனி மனிதர்களும்,குடும்பங்களும்,ஒட்டுமொத்தச் சமூகமும் நமது குழந்தைகளுக்கு மனித உரிமைகள் பற்றி, பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத்தரட்டும்! அரசாங்கங்கள் அந்தக் கற்றல் செயல்பாடு கள் எவ்விதத்திலும் தடைப்படாமல் தொடர்வதை உறுதி செய்யட்டும்!                     


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page