உரையாடல்களே பாடங்களாக…
- சாலை செல்வம்
- Jul 15
- 2 min read

கதை, பாடல், உரைநடை... என இயங்கிவரும் இலக்கியத்தின் ஒரு பகுதியாக உரையாடல்களும் உள்ளன. இலக்கியத்தில் உரையாடலை மையப்படுத்தி தமிழில் நூல்கள் வெளிவந்துள்ள அனுபவம் நமக்கு உண்டு. உரையைவிட உரையாடல் முக்கியத்துவம் பெறும் காலம் இது. ஒற்றைக்கருத்தை உடைக்க, புரிதலை வலுப்படுத்த, நவீன சிந்தனைக்கான களமாக, திறந்த மனதோடு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள... என நேரடியான உரையாடல் மூலம் கருத்தாக்கங்களை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் இது.
ஆரம்பக் கல்வியில் உரையாடல் வடிவத்தில் பல்வேறு பொருண்மைகளை மையப்படுத்திய பாடங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வகுப்பிற்கும் நான்கு பாடங்கள்வரை அவர்களது நிலைக்கேற்ப இடம்பெற்றுள்ளன.
- பாடமாக உள்ள உரையாடலை குழுவாக வாசித்தல்
- அதையே நாடக வடிவில் பேசிக் காட்டுதல்
- ஏதேனும் தலைப்பின் கீழ் அல்லது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இயல்பாக உரையாடல் நிகழ்த்துதல்
- சில உரையாடல்களை எழுத்தாக்குதல்... என்பதாக பாடங்கள் மொழியையும் மொழித்திறனையும், வாழ்க்கை அனுபவங்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளையும் முன்னெடுத்து செல்கின்றன.
பாடத்தலைப்புகள்:
நூலகம்:
மூன்றாம் வகுப்புப் பாடத்தில் மாமாவும் தேனருவியும் நூலகத்திற்குச் செல்லுதல்.
கணினி உலகம்:
மகிழினியும் மதியும் உரையாடுவது.
கரிகாலன் கட்டிய கல்லணை:
விடுமுறையில் அத்தையும் மாமாவும் கனிமொழியையும் மணிமொழியையும் கல்லணைக்கு அழைத்துச் சென்று கரிகாலன் கட்டிய கல்லணையைச் சுற்றிப் பார்ப்பது போன்ற பாடம்.
பசுவுக்குக் கிடைத்த நீதி:
மனுநீதிச்சோழனின் அரண்மனை உரையாடல்.
விதைத் திருவிழா:
ஆசிரியரும் மாணவர்களும் உரையாடுதல்.
தப்பிப் பிழைத்த மான்:
காகமும் மானும் பேசுவது.
எழில் கொஞ்சும் அருவி:
சித்தியும் சித்தப்பாவும் அங்கவை சங்கவையுடன் ஒகேனக்கல் அருவிக்குப் போய்வந்த அனுபவம்.
நாயும் ஓநாயும்:
தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் உரையாடுவது
உயர்திணையும் அஃறிணையும் - அப்பாவும் எழிலியும் உரையாடுவது
பாடத்தின் உரையாடல்கள்:
புதுவை வளர்த்த தமிழ்
யாழினி: அப்பா, பாரதிதாசனின் பாடலொன்றை சொல்லுங்களேன்.
அப்பா: சொல்கிறேன், யாழினி. “ தமிழுக்கும் அமுதென்று பேர்…"இது மட்டுமா? இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துக்களை முன்வைத்து நிறைய பாடல்களை அவர் பாடியுள்ளார்.
மாட்டு வண்டியிலே
தாத்தா: நல்லா சிந்தித்துச் சொல்லுங்க. ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு.
இளமதி: ‘கை’தாத்தா
தாத்தா: கொஞ்சமா இருந்தா சிலன்னு சொல்வோம். நிறைய இருந்தா என்னன்னு சொல்வோம்.
இளமதி: ‘பல’தாத்தா...
இலக்கணக் கற்றலுக்கான உரையாடல்கள்:
கற்கண்டு
ஐந்தாம் வகுப்புப் பாடத்தில் கற்கண்டு என்ற தலைப்பில் இலக்கணத்தை மையப்படுத்தி, உரையாடல் வடிவில் சிறு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி, இணைப்புச் சொற்கள், மயங்கொலிப்பிழை, மூவிடப் பெயர்கள்... போன்ற மொழிக்கூறுகளைப் புரிந்துகொள்ள அவை பேருதவியாக உள்ளன.
மயங்கொலிப்பிழை:
மலர்:என்னப்பா இது?
வளர்:நீதானே தவளையைக் கொண்டுவரச் சொன்னாய்?
மலர்:என்ன? நான் தண்ணீர் பிடிக்கத் தவலை கேட்டால், நீ தண்ணீரில் வாழும் தவளையைக் கொண்டு வந்துள்ளாயே!
மாற்றி யோசிக்க வேண்டியவை:
பாடப்பொருளை எளிதாகப் புரிந்துகொள்வதற்காக உரையாடல் வடிவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், கனமான பாடப்பொருளும் அதன் எழுத்துத் தமிழ்மொழிநடையும் குழந்தைகளைத் திக்குமுக்காடச் செய்வதாகவே உணரவைக்கிறது. எளிய வார்த்தைகள், வாக்கியங்கள், தெரிந்த வார்த்தைகள் என இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர்களால், அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளின் மூலம் மொழியை எளிதாக உள்வாங்கிக்கொள்ளமுடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
உரையாடல் பாடங்கள் அனைத்துமே ஆணை அறிவாளியாக, பதிலளிப்பவனாக மட்டுமே காட்டியுள்ளன. தாத்தா, மாமா, சித்தப்பா, ஆசிரியர் என எல்லோருமே ஆண்களாக உள்ளனர். கல்லணை பாடத்தில் மாமாவின் மனைவியாக அத்தையும் அருவிக்குப் போகலாமா பாடத்தில் சித்தப்பாவின் மனைவியாக சித்தியும் இடம்பெறுகின்றனர். துடுக்காக பதிலளிக்கும் பெண் குழந்தைகளைப் பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் பார்க்க முடிகிறது.
Comments