இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- அறமதியின் கதை
அன்பினியும் அறமதியும் நாளை நிகழப்போகும் அந்தச் சிறப்புமிக்க சந்திப்பிற்காக, அன்பினி பையை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளது எண்ணங்கள் டெல்லியின் கடமைப் பாதையில் (Kartavya Path) துள்ளிக் குதித்தன. ஜன்னல் வழி புகுந்த கடும் குளிர்க்காற்று, மெல்லிய ஊசியாய் அவள் மேனியில் தைத்தது. திடீரென எதையோ நினைவுகூர்ந்தவள், தன் குறிப்பேட்டை எடுத்தாள். பொத்தானை அழுத்தியதும் 'கிளிக்' எனத் திறந்தது அது. அதில் அன்பினியின் ஆசைகள், கேள்விகள், கோபங்கள், சோகங்கள், அனுபவங்கள், ஓவியங்கள், கிறுக்கல்கள் என்று எல்லாமே இருந்தது. அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று விடாமல் எழுதிவிட்டதாக நிம்மதி அடைந்து ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும். அதற்குள் வண்ணங்களால் நிறைக்கப்பட்ட வானத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றிவிட்டது. அவள் தங்கியிருந்த 'ராஷ்ட்ரிய ரங்ஷாலா' முகாம் ஒரு குட்டி இந்தியா. ரோஜாவின் அழகுடன் மல்லியின் வாசனை சேர்ந்தது போல, தேங்காய் எண்ணெய் வாசம் வீசும் கேரளத்து அவியலுடன், பஞ்சாபி பரத்தாவின் நெய் மணம் சங்கமித்து அவளது சுவாசத்தில் இழைந்தோடியது. வெவ்வேறு மாநிலங்களின் வண்ணவண்ண உடைகளும், புரியாத மொழிகளின் கொஞ்சல்களும், வண்ண விளக்குகளின் ஒப்பனையில் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கு நடனமாடும் நீரூற்றைப் (Fountain) போல அங்கே ஒன்றிணைந்திருந்தன. வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், இனங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலைகள் என அந்த முகாம் ஒரு பலவகைப் பூக்களால் ஆன நந்தவனத்தைப் போலத் திகழ்ந்தது. அந்த நந்தவனத்தில் அன்பின் மணம் வண்ணமயமாக வீசியது. சைகைகளாலும், புன்னகையாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயன்றபோது, இதயங்களைப் பிணைக்க மொழியை விட 'அன்பு' ஒன்றே போதுமானது என்பதை அந்த நாட்கள் அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தன. இந்த இருபத்தைந்து நாட்களில் அவள் கண்ட அந்தப் பன்முகத்தன்மைதான், இன்று அவள் கடமைப் பாதையில் கண்ட காட்சியின் நிஜமான அர்த்தம் என்பதை அவள் உணர்ந்தாள். இன்று காலை, 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது அன்பினியின் கால்கள் அதிர்ந்தன. ஒட்டுமொத்த கூட்டமும் ஒன்றாக, ஒரே மூச்சில் 'இந்தியர்' என்ற உணர்வோடு, உணர்வுகள் உச்சிக்கு எழுந்த அந்தத் தருணம். அன்பினிக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது. கம்பீரமாகத் தமிழ்நாட்டின் ஊர்தி வந்துகொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் பிரம்மாண்டமான எல்.இ.டி (LED) சுவர்களால் கட்டமைக்கப்பட்ட ஊர்தி அது. பக்கவாட்டில் பறை இசைக்கலைஞர்கள், பறை அதிர வாசித்துக் கொண்டே ஆடி வந்தார்கள். ஊர்தியின் மேலே மிகப்பெரிய எல்.இ.டி திரைகளாலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble), சிலை வடிவமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதற்கு முன்புறமாக ஐந்து பிரம்மாண்டமான, அதிநவீன தானாக ஒன்றிணையும் உருமாறும் ரோபோக்கள் நின்றிருக்க, நடுவே தமிழணங்காக அன்பினி கம்பீரமாக நின்றிருந்தாள். அந்தத் தருணத்தில் அன்பினி முழுமையாகத் தமிழணங்காகவே மாறி இருந்தாள். அவள் தலையில் சிந்தாமணி அதிகாரத்தின் சின்னமாக மின்னியது. 'ழகரம்' தாங்கிய வேலை ஏந்தியிருந்த கைகளில் வளையாபதி ஒளி வீசியது. மனிதாபிமானம் என்னும் உயரிய அறத்தைப் போதிக்கும் மணிமேகலை , அவளது இடுப்பை அலங்கரித்திருந்தது. காதுகளில் குண்டலகேசி குண்டலங்களாக ஒளிர, கால்களில் சிலப்பதிகாரத்தின் சிலம்பு சுடர் போலப் பிரகாசித்தது. ஒவ்வொரு ரோபோவும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் குறியீடாக நின்றிருந்தது. ஒரு கணம் அது அந்தக் காப்பியத்தின் முக்கியக் கதாபாத்திரமாகவும், அடுத்த கணம் 'லெகோ' (Lego) கட்டமைப்புச் செங்கற்களைப் போல, தானே உருமாறி ஒரு புத்தகத்தின் உருவம் எடுத்து, அந்த காப்பியப் பெயரையும் அது கூறும் அறத்தையும் காட்டியது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்தை அந்த ஊர்தி நெருங்கியபோது, அந்த ஐந்து ரோபோக்களும் ஊர்தியின் தரையில் தகர்ந்து, நடுவே ஊர்ந்து வந்து தமிழணங்கைத் தூக்கி நிறுத்தின. அவை ஒரு பீடம் போல உருமாறியிருந்தன. அந்த நொடி, அவற்றின் திரைகளிலிருந்து வெளிவந்த ஒளிக்கீற்றுகள் 'அறம்' என்று முப்பரிமாண ஒளிப்படமாக (3D Hologram) காற்றில் மிதந்தன. கூடியிருந்த அனைவரும் செம்மைத் தமிழின் அறத்தையும், குடியரசு இந்தியா மக்களுக்கு வழங்கிய அதிகாரத்தின் அறத்தையும் ஒன்றிணைத்த அந்தப் பொன்னான கணத்தில் பூரித்துப் போய் நின்றிருந்தனர். இவையனைத்தையும் மிகத் துல்லியமாக தனது குறிப்பேட்டில் படம் பிடித்திருந்தாள் அன்பினி. தனது எழுத்துக்களுக்கு ஆங்காங்கே ஓவியங்களும் அழகு சேர்த்திருந்தன. "மூவண்ணப் பலூன்கள் வானத்தில் வண்ண நட்சத்திரங்களைப் போல இருந்தன; மூவண்ணப் புகையோ குட்டி வண்ண மேகங்களைப் போல மிதந்தன" என எழுதியவள், அதன் அருகில் ஒரு குட்டி டூடுல் (Doodle) வரைந்தாள். பின்பு, முழுத் திருப்தியோடு தனது குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள். நாளை குடியரசுத் தலைவரைச் சந்திக்கப்போவதும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றச் சுற்றலாவின் ஒரு பகுதியாக நூலகத்தைப் பார்க்கப்போவதும் அவள் மனம் முழுவதையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. உடலும் மனமும் ஒரு கட்டத்தில் அயர்ந்து தூக்கத்தைத் தழுவியது. அன்பினி படுத்திருந்த அந்தக் காட்சி, நீரில் மிதந்த பிரதிபலிப்புச் சிற்றலைகளில் ஆடுவதைப் போல மெல்லக் கலைந்தது. நாடாளுமன்ற நூலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதி பாதுகாக்கப்பட்ட அந்தப் பெட்டியின் அருகில் நின்றிருந்தாள் அன்பினி. அவளது கைகள் அந்தப் பெட்டியில் பட்டதும், 'பட்' என்ற சத்தத்துடன் அந்த கண்ணாடி மூடி திறந்தது. 'ஹிஸ்' என்று ஹீலியம் வாயு வெளியேறிய அந்தத் தருணம், ஒரு மெல்லிய மினுமினுப்புடன், தங்க நிறத்தில் 'Constitution of India' என்று பொறிக்கப்பட்ட அட்டை தெளிவாகத் தெரிந்தது. ஒரு குழந்தை தன் அம்மாவைப் பிஞ்சு விரல்களால் தழுவுவதைப் போல, அவள் அந்தப் புத்தகத்தைப் திறந்தாள். 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகத்திற்கு மேலே கம்பீரமாக மூன்று சிங்கங்கள் நின்றிருக்க, துள்ளும் குதிரைக்கும் நிமிர்ந்த காளைக்கும் நடுவே அசோகச் சக்கரம் பந்தமாக அமைந்திருந்தது. "இந்தியர்கள் அமைதி, பண்பாடு மற்றும் நற்பெயரின் தூதுவர்கள்" என்று ஜவஹர்லால் நேருவின் குரல் அன்பினியின் காதுகளில் அசரீரி போல ஒலித்தது. தன்னையறியாமல் அன்பினி அடுத்த பக்கத்தைப் புரட்டினாள். அந்தப் பக்கத்திலிருந்த ஓவியங்கள் காகிதங்களிலிருந்து மின்னல் வேகத்தில் முப்பரிமாணமாக முளைத்தன. இலைகளும் தழைகளும் நீண்டு விரிந்து படர்ந்தன. கொடிகள் ராட்சதக் கொடிகளாக உருமாறின. தாமரை மொட்டுகளும் மலர்களும் வான் உயரத்திற்கு வளர்ந்தன. சட்டென்று தங்க நிற மயில் ஓவியங்கள், வண்ணமயமான உயிருள்ள மயில்களாக அகவித் திரிந்தன. பிளிறும் யானையும், திமிறும் காளையும், துள்ளும் குதிரையும், பாயும் சிங்கமும் நான்கு மூலைகளிலிருந்தும் தாவி ஓடின. அன்பினியின் உடல் மொத்தமும் நடுங்கியது; அவளது சுவாசம் புயலைப் போல வேகமெடுத்தது. அவள் அங்கிருந்து ஓடிவிட எத்தனித்தபோது, அந்த எட்டு சட்டக (Geometric) ஓவியங்களும் ஒன்று சேர்ந்து ஒரு மாயக் கம்பளம் போல அவள் கால்களுக்குக் கீழே விரிந்தது. மெல்ல மேலெழுந்த கம்பளத்தில் அவள் 'தொப்பென்று' அமர்ந்தாள். வெல்வெட் (மூதாய்) பூச்சியின் மேனியைப் போல அது மென்மையாய் இருந்தது. அன்பினி திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என்ன நடக்கிறது? யார் அந்தப் பெண்? மெல்லப்புன்னைகைத்த அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த கருணை அன்பினியின் பயத்தை ஒளியைப் போல நீக்கியது. அந்த அழகு நிரம்பிய, அன்பின் உருவமான தங்கத் தாரகை, அன்பினியின் கைபிடித்துக் கொண்டாள். அவளுடைய தொட்டவுடன் மாயக்கம்பளம் பறக்கத் தொடங்கியது. அன்பினிக்கு இப்போது பயமில்லை. பலகாலம் ஒன்றாகப் பழகிய ஒரு தோழியின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்தாள். யார் இவங்க? இவங்க பேர் என்ன? எனக்கு ஏன் இவங்களப் பார்த்தா ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க மாதிரி இருக்கு?” என்று அன்பினி மனதில் கேள்விகள் எழுந்தன. புன்னகைத்த அந்தப் பெண், "நான் ஓர் அணங்கு. என் பெயர் அறமதி" என்றாள். ‘அறம்’ ‘மதி’ இந்த சொற்கள் அன்பினியின் உடலில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது. ” யார் இந்த அறமதி ? ( அறிவோம் தெளிவோம் ) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- பொட்டல் காட்டில் மர்மம்
இனியன், ஏழாம் வகுப்பு ஒரு நாள் கார்த்திக் தனது நண்பர்களுடன் பொட்டல் காட்டிற்கு போனான். அங்கு எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர். எப்பவும் போல் கார்த்திக் கேப்டனாக இருந்தான். மேட்ச் தொடங்கியது. எதிர் அணியை விட கார்த்திக் அணி 40 ரன்கள் வித்தியாசம் இருந்தது. 20 பந்துகளில் 40 ரன்கள் அடிக்க வேண்டும். எதிர் அணியில் ஒருவன் திடீரென்று 6 ரன்களை ஒரே அடியில் அடித்தான். அதை தொடர்ந்து நான்குக்கள், ஆறுகள் என்று அடித்து கொண்டே இருந்தான். கடைசி பந்து நான்கு ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது அவன் அந்த பந்தை தூக்கி அடித்தான். பந்து பறந்து போய் விழுந்த இட த்தைப் பார்த்து முத்து ஓடி போய் பந்தை பிடித்து விட்டான். கார்த்திக் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து விட்டது. ஆனால் முத்துவின் கையில் பந்துடன் வரும்போது அவன் கையிலிருந்து ரத்தம் சொட்டியதைக் கார்த்திக் பார்த்தான். “ டேய் முத்து என்னடா ஆச்சு? “ என்று கேட்டான் கார்த்திக். முத்துவே அப்போது தான் கவனித்தான். ஏதோ நரம்பு அறுத்து விட்டது போல ரத்தம் கொட்டியது. என்ன அது என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுடைய கையை இறுக்கிப் பிடித்தான் சுரேஷ். சில நொடிகளில் ரத்தம் வருவது நின்றுவிட்ட து. முத்துவின் கையில் இருந்து பந்தை வாங்கிய கார்த்திக்கின் விரல்களில் வித்தியாசமாக ஏதோ பட்டது. தடவிப்பார்த்தான். நீளமான இரும்புக்கம்பி மாதிரி இருந்த து. பந்தில் ஒட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பியை எடுத்தான். அது என்னவென்று பார்த்தால் மங்கிய நிறத்தில் தங்கச்சங்கிலி மாதிரி இருந்தது. . ” டேய்!... தங்க செயின்டா ” என்று சுரேஷ் கத்தினான். “ இன்னிக்கி விலைக்கி செம காசுடா.. நீ வித்தால் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கலாம்..” என்றான் முத்து. ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது கார்த்திக்கின் கனவு. கார்த்திக்கின் கண்களில் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் சைக்கிள் தெரிந்தது. கார்த்திக் என்ன சொல்லப்போகிறான் என்று எல்லோரும் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கார்த்திக் வாயைத் திறந்தான். ” டேய் போய் போலீஸ் கிட்ட கொடுத்திடலாம்டா ” என்றான் கார்த்திக். எல்லோரும் சென்று காவலர் அதிகாரியிடம் கொடுத்தனர். அவர்கள் அதை பார்த்து பழசாக இருக்கிறதே என்று ஆராய்ச்சி அலுவலர்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அது 2000 வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது என்று கூறினர். அந்த பொட்டல் காட்டை ஆய்வு செய்து நிறைய நாணயங்கள், வளையல்கள், மண்பாண்டங்கள் கண்டறிந்தனர். அப்புறம் கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்தது.
- தத்துவம் அறிவோம் - 11
கடவுள் உருவான கதை என்னது? மனிதர்கள் கடவுளை உருவாக்கினார்களா? நம்பும்படியாகவா இருக்கு? கடவுள் தானே இந்த உலகத்தைப் படைத்தார். காற்றைப் படைத்தார். நீரைப் படைத்தார். உயிர்களைப் படைத்தார். அவர் எங்கும் இருப்பவர். எப்போதும் இருப்பவர். இப்படி நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். வெகுகாலத்துக்கு முன்னால் எல்லா மனிதர்களும் இப்படித் தான் நம்பினார்கள். இப்போதும் நம்புகிறார்கள். ஆனால் ஹோமோ சேப்பியன்ஸ் இந்த பூமியில் பிறந்தபோது அவர்களுக்குக் கடவுள் என்றால் யார் என்றே தெரியாது. இந்த உலகம் எப்படி பிறந்த து என்று தெரியாது. காற்று எப்படி உருவானது என்று தெரியாது. நீர் எப்படி உருவானது என்று தெரியாது. இயற்கையில், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் எப்படி உருவாயின என்று தெரியாது. அவர்கள் பிறக்கும்போதே இவை எல்லாம் இருக்கின்றன. அவ்வளவு தான். ஆனால் உயிர் வாழ்வதற்கான போராட்டம் பல இன்னல்களைக் கொண்டுவந்த து. பல நேரங்களில் தன்னுடன் இருந்த சக தோழர்களை இழக்க நேர்ந்த து. தன்னைச் சுற்றிலும் இருந்த இயற்கையை மரம், செடி,கொடி, விலங்குகள் அனைத்தையும் தன்னிச்சையாகச் செயல்படுவதைப் பார்த்தான். தன்னைப் போலவே அவற்றுக்கு உயிர் இருப்பதாக நினைத்தான். அந்த உயிர் உடலில் இருந்து போனாலும் அது மறைவதில்லை. ஆவியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நம்பினான். இப்போதும் அப்படித்தானே! ஆவி பேய் பிசாசு என்று கதைகள் இருக்கின்றன இல்லையா? எப்படி அந்தச் சிந்தனை மனிதனுக்குத் தோன்றியது தெரியுமா? நம்முடைய மூளை தான் காரணம். அப்படியா? மூளையின் வளர்ச்சிப்போக்கில் மனிதன் தினம் தினம் கண்ட காட்சிகளும் அனுபவங்களும் மூளையின் ஞாபகச்சேகரிப்பில் சேர்ந்து விடும். அந்த அனுபவங்களும் காட்சிகளும் அவன் உறங்கும்போது கனவுகளாக வெளிப்பட்டன. இப்போது கூடப் பாருங்கள் நமக்கு எவ்வளவு கனவுகள் வருகின்றன? அந்தக் கனவுகள் ஏன் வருகின்றன என்று யோசித்திருக்கிறோமா? சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. சில கனவுகள் பயங்கரமாக இருக்கின்றன. சில கனவுகள் துன்பம் தருகின்றன. சில கனவுகளில் பகலில் நடந்த அத்தனைக் காட்சிகளும் மறுபடியும் வருகின்றன. சில கனவுகளில் நாம் பார்க்காத காட்சிகளும் வருகின்றன. சில கனவுகளில் இறந்தவர்கள் வருகிறார்கள். சில கனவுகளில் விநோதமான உருவங்கள் வருகின்றன. பகலில் நாம் அந்த உருவங்களைக் கற்பனையே செய்திருக்கமாட்டோம். இனி உங்களுக்குக் கனவுகள் வரும்போது ஏன் அப்படிப்பட்ட கனவுகள் வந்தன என்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் இறந்த உயிர்கள் கனவுகளில் வந்தபோது மனிதர்கள் அந்த உயிர்களின் ஆவி இந்த உலகத்தை விட்டுப் போகவில்லை. இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று நம்பினார்கள். அந்த ஆவிகளைச் சமாதானம் செய்ய வேண்டும். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி அவர்களைச் சாந்தமடைய வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அப்போது கூட்ட த்தில் சிலர் பூசாரிகள் ஆனார்கள். அவர்கள் சில சடங்குகளை உருவாக்கினார்கள். மந்திரங்களை உருவாக்கினார்கள். பலி கொடுத்தார்கள். நல்லதும் கெட்ட தும் அந்த ஆவிகளால் தான் நடக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே மனிதர்கள் அந்த ஆவிகளை வணங்கி வழிபட்டார்கள். ஆவிகளை நல்ல ஆவிகள் என்றும் கெட்ட ஆவிகள் என்றும் பிரித்தார்கள். எதை எல்லாம் வணங்கினார்கள் தெரியுமா? கல்லை வணங்கினார்கள். மண்ணை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள் செடி, கொடிகளை வணங்கினார்கள். புழுவை, பூச்சியை, பறவையை விலங்குகளை வணங்கினார்கள். அவர்களுடன் வாழ்ந்து மறைந்த சக மனிதர்களையும் வணங்கினார்கள். இந்த வழிபாட்டு முறைகளின் வழியாகத் தான் மெல்ல மெல்ல கடவுள் உருவானார். ஆவி வழிபாடு தான் கடவுள் வழிபாடாக மாறியது. புரிகிறதா? அதனால் தான் இப்போதும் கல்லை வணங்குகிறோம். நிலத்தை வணங்குகிறோம். நீரை வணங்குகிறோம். சில மரங்களில் சிவப்புத்துணியோ, மஞ்சள் துணியோ கட்டி வணங்குகிறோம். மலையை வணங்குகிறோம். இந்த உலகத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்த கடவுள்களை எண்ணிப்பாருங்களேன். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கடவுள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடவுள், அப்படி என்றால் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? இப்படி மாவட்ட த்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு, கண்ட த்துக்குக் கண்டம் என்று எத்தனை கோடி கடவுள்கள் இருக்கிறார்கள். அடேங்கப்பா! என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இப்போது சொல்லுங்கள் கடவுள்களை உருவாக்கியது யார்? மனிதர்கள் தானே! உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- நீர்வாழ் விலங்குகள் எப்படித் தூங்கும்?
மிகவும் சோர்வாக உணரும்போது, தூக்கம் வருகிற வேளையில் முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவிக்கொண்டால் தூக்கம் போய்விடுகிறது. அப்படியென்றால் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் விலங்குகள் எப்படித் தூங்குகின்றன? முதலில் முகத்தில் நீரை அடித்தால் நமக்கு ஏன் தூக்கம் போகிறது என்று தெரிந்துகொள்வோம். காற்றில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்கும் நம்மைப் போன்ற விலங்குகளின் முகத்தில் நீர் பட்டுவிட்டால் மூளை சுறுசுறுப்பாகிவிடும். "இவர் நீருக்குள் இருக்கிறார்" என்று மூளை யோசிக்கும். "நீருக்குள் இருப்பவர் விழிப்புடன் கவனமாக இருந்தால்தான் அவர் சரியாக சுவாசிப்பார், விழிப்பாக இருந்தால்தான் அவர் உயிர் பிழைப்பார்" என்று யோசிக்கும். உடனே கவனம் மற்றும் விழிப்புநிலையை உருவாக்கும். நமக்குத் தூக்கம் கலைந்துவிடும். காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதால் நீருக்குள்ளேயே வாழும் விலங்குகளைத் தண்ணீர் எதுவும் செய்யாது. ஆனால் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கவேண்டும் என்றால் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கவேவேண்டும். ஆகவே நீர்வாழ் விலங்குகளால் மனிதர்களைப் போல ஆடாமல் அசையாமல் தூங்க முடியாது. பல மீன்கள் தூங்கும்போதும் மெதுவாக நீந்திக்கொண்டோ ஆடிக்கொண்டோ இருக்கின்றன. இன்னும் சில மீன்கள் தூங்குவதே இல்லை! இவற்றுக்குத் தூக்கம் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதே கடலுக்குள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்கும் பாலூட்டிகள்கூட இருக்குமே! அவை எப்படித் தூங்குகின்றன? பாலூட்டிகளின் மூளையில் இரண்டு கோளங்கள் (Hemispheres) இருக்கும். தூங்கும்போது இவற்றின் ஒரு மூளைக்கோளம் மட்டுமே ஓய்வெடுக்கும். இன்னொரு கோளத்தின் உதவியால் இவை நீந்திக்கொள்ளும். நீர்ப்பரப்புக்கு மேலே வந்து சுவாசித்துக்கொள்ளும்! இன்னும் சில பாலூட்டிகள் மூச்சை தம்கட்டிக்கொண்டு தூங்குகின்றன, சுவாசிக்கும் நேரம் வரும்போது விழித்துக்கொள்கின்றன. இதை நுண் தூக்கம் (Micro sleep) என்று அழைக்கிறார்கள். உங்களுக்குத் தூக்கம் பிடிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்? நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது ,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும் , விலங்குகளும் பாலினமும் , ஆழ்கடல், சூழலும் பெண்களும் , நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.
- எல்லைகட்டிய உலகின் சிறிய பறவை
இது ஒரு தொகுப்பு நூல். டொனால்டு பார்த்தலுமே, ஷிர்லி ஜேக்ஸன், ஹெச. ஹெச். முன்ரோ ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளின் தமிழ் மொழியாக்க நூல் இது. இத்தோடு குழந்தைகளின் அகவுலகை பிரதிபலிக்கும் பரையன் பேட்டன் எழுதிய இரண்டு கவிதைகளும் இடம்பெற்றுள்ளது. குட்டி ஆகாயம் பதிப்பகம் மிக சிரத்தையோடு வெளியிட்டுள்ள சிறந்த நூல் தேர்வுகளில் இதுவும் ஒன்று என அறுதியிட்டுக் கூற முடியும். குழந்தைகள் எப்போது முழுமையாக தங்களது குழந்தைமையை வெளிப்படுத்துகிறார்களோ அப்போதெல்லாம் பெரியவர்களின் சமநிலை குலைந்துவிடுவதை பார்க்க முடிகிறது. வானமளவு விரிந்திருந்த தன் மனவெளியில் தங்களுக்கான எல்லைக்கோடுகள் தடித்துக் கொண்டே வருவதை பெரியவர்கள் உணரத் தவறிவிடுகின்றனர். பெரிதும் புறத்தை சார்ந்ததாகவே அமைந்துவிடும் அவர்களது மன எல்லைக்கு அப்பால் உள்ளதை ஏற்கும் பக்குவம் குறைந்து கொண்டே வருகின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உள்வட்டத்திற்கு நெருக்கமாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் நேசிப்பிற்கும் பாராட்டிற்கும் தகுதியானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியானவர்கள மட்டும்தானா? பெரியவர்களின் மனவிரிவு மட்டுமே குழந்தைகளை அளவிடுவதற்கான கருவியாகிட முடியுமா? இதுவே நம்மிடம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. குழந்தைகள், ஏதேனும் ஒரு விளையாட்டு சாதனத்தை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்து கொண்டிருக்கும் வரை சமர்த்தானவர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவரே தன்னியல்பாக ஒரு காகிதத்தை கிழிக்கவோ; பொம்மையை உடைத்து உள்ளிருக்கும் பாகங்களை ஆராயவோ; வண்ணப் பென்சில்களை தரையில், சுவற்றில் பயன்படுத்தவோ தொடங்குகையில் பெரியவர்களின் கோபத்திற்கும் வசவிற்கும் ஆளாகிறார். இவ்வேளைகளிலெல்லாம் அக்குழந்தை பெரியவர்களின் மனவிரிவிற்கு அப்பால் விலகிச் செல்கிறார் என்பது பொருள். இப்படியான பதட்டத்தை தொடர்ந்து பெரியவர்களுக்கு உருவாக்கும் குழந்தைகளின் இயல்புகள் இங்கு எதிர்மறையான பெயர்களாலேயே அழைக்கப்படுகிறது. அக்குழந்தைகளின் ஆர்வம் அப்பருவத்திலேயே முடக்கப்படுகிறது. இன்னமும் எல்லை கட்டிக்கொள்ளாத குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் அதிருப்தியை குதர்த்தகமாகப் பார்க்காமல் அதை மீறவும் எதிர்க்கவும் தன் வழிகளில் விளையாட்டாக முயல்கிறது. பலவேளைகளில் பெரியவர்கள் நாம், குழந்தைகள் பொய் பேச தொடங்குவதாகவும் தவறான வழிகளில் ஈடுபாடு கொள்வதாகவும் அச்செயல்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறோம். வளர வளர நம்மனதில் படிந்துவிடும் நோய்மையான பூஞ்சை கூறுகள் குழந்தைகளின் அகவளர்ச்சியை தடுப்பதைக் குறித்து பெரியவர்களாகிய நமக்கு எவ்வித அசூயையும் இருப்பதி்லை. பறக்க எத்தனிக்கும் குழந்தையின் சிறகுகளை இளம் பிராயத்திலேயே வெட்டி எறிந்து விடுகிறோம். ஆனாலும் அதன் தழும்புகள் குழந்தைகளின் காலம் முழுதும் வடுவாக தேங்கி நின்றுவிடுகிறது. வெளிச்சத்தை மட்டுமே ஒளியாக கருதும் பெரியவர்களை போலில்லாது இரவின் ஒளியையும் உணர்ந்தவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். வெளிச்சம், இருள் என்கிற பாகுபாடுகூட அவர்களிடம் அப்போதைக்கு இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கத் தெரிந்த அவர்களுக்கு பெரியவர்களின் பார்வைகள் புரிபடுவதில்லை. அதற்கான மீறலே குழந்தைகளின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. பெரியவர்களின் எதேச்சதிகார மனநிலை குழந்தைகளை புரிந்து கொள்ள உதவாவது. அவர்களோடு நெருங்கி உறவாடவும் குழந்தைகள், நம்மை அவர்களோடு இணைத்துக் கொள்ள முன்வரும்படியாகவும் நம்மை மாற்றிக்கொள்ளும்போதுதான் அவர்களை நாம் நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும். இந்த தொகுப்பிலுள்ள மூன்று கதைகளில் முதலிரண்டு கதைகள் இப்படியொரு எண்ணத்தையே முன்னிறுத்துகிறது. கதை உருவாகியிருக்கிற பாங்கும் கலை நேர்த்தியும் இக்கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது. மூன்றாவது கதை, நாம் இச்சூழலெங்கும் விதைத்திருக்கிற நச்சு கனிகளை விரும்பி சுவைக்கத் தொடங்குகிற குழந்தைகளின் அகவுலக சிதைவுகளை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் நீதியும் ஒழுக்கமும் குழந்தைகளுக்கான பாடமல்ல முறையாக பெரியவர்கள் கற்றொழுக வேண்டிய முறைமைகள் என்பதை இக்கதையின் எளிய வடிவம் நமக்குணர்த்துகிறது. ப்ரையன் பேட்டன் அவர்களின் கவிதைகள் இந்த நூலுக்கு அணி சேர்க்கின்றன. குழந்தைகள் குறித்து ஆர்வமாகவும் ஆழமாகவும் செயலாற்ற விழைகிற ஒவ்வொரு இதயங்களும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. கோவையை சார்ந்த குட்டி ஆகாயம் மிகுந்த சிரத்தையோடு பதிப்பித்திருக்கின்ற இந்நூலுக்கு இன்னமும்கூட வாசக வெளிச்சம் படவேண்டிய தேவை இருப்பதாக நான் உணர்கிறேன். வாங்கி வாசியுங்கள்.... நிறைய பேசுங்கள் குழந்தைகளே..... க.சம்பத்குமார் அரசுப்பள்ளி ஆசிரியர். "பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று" என்கிற கவிதை தொகுப்பு ஒன்று எழுதியுள்ளார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அவிநாசி கிளை பொறுப்பாளர்.
- மாயப்புத்தகம்
மாயஜாலங்கள் இயல்பாக இருந்த ஒரு காலத்தில் தாமஸ் என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். புத்தகங்கள் வாசிப்பது என்றால் அவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்தது. ஒரு நாள் நூலகத்திற்கு போன போது அங்கே மறைந்திருந்த ஒரு விசித்திரமான மாயப்புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சி இவ்வளவுதான் என்றில்லை. இது என்ன… இதுவரை இப்படி ஒன்றை பார்த்ததில்லையே என்று அதை ஆர்வமாக தொட்டான். புத்தகத்தை கைவிரல்களால் தொட்ட அடுத்த விநாடியில் ஒரு வானுலக வெளிச்சம் அறை முழுவதும் பிரகாசித்தது. அவன் புரட்டிய புத்தகத்தில் விநோதமான அடையாளக்குறிகள் தோன்றி காற்றில் நடனமாடின. “ஆஹா… என்ன ஒரு வசீகரிக்கும் ஒளி. புதியதாக இருந்தாலும் இந்த நடனமாடும் அடையாளங்கள் நெடுநாட்கள் பழகிய நண்பனைப்போல் வசீகரம் செய்கிறதே” என்று ஆச்சரியமுற்றான். கொஞ்ச நேர அசைவுகளுக்குப் பிறகு அடையாளங்கள் அவைகளுக்குள் இடம்மாறி அமைந்து ஒரு வாக்கியமாக மாறியது. “வரவேண்டும் இளஞ்சிறுவனே… இப்பொழுது உனக்கு சில இரகசியங்களை அறிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது” “எனக்கு எதைப்பற்றி சொல்லப்போகிறாய்” தாமசின் மனதில் கிசுகிசுவென கேள்வி படர்ந்தது. “இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்” அடையாளக்குறிகள் வேகமாகச் சுழன்று கிசுகிசுப்பு சப்தமாக மாறியது. “பிரபஞ்ச வெளியில் பயணிக்க இப்போது என்னோடு புறப்படு” அறை முழுவதும் பலவிதமான வண்ணங்களில் நட்சத்திரங்கள் சுழன்று கொண்டிருந்தன. தாமசுக்கு விண்ணுலகின் அதிசயத்தில் மிதப்பது போலிருந்தது. திடீரென ஒரு எரிநட்சத்திரம் ஒளிரும் விண்மீன் படலமாக வானத்தில் கோடு கிழித்துக்கொண்டு போனது. தாமஸ் அந்த விண்மீன் பாதையில் இழுத்துச்செல்லப்படுவதை உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அதன் போக்கிற்கு இசைந்தான். அந்த பாதையில் தொடர்ந்து சென்றபோது அது விண்ணுலகப் பறவை வடிவத்திலிருந்த ஒரு அற்புதமான விண்வெளி ஓடத்திற்கு கூட்டிச்சென்றது. அதன் இருபுறமும் ஒளிரும் இரத்தினக்கற்கள் பதித்த இறக்கைகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. “வாருங்கள் இளம் ஆராய்ச்சியாளரே” அதன் மெல்லிய வரவேற்புக்குரல் கேட்டது. விண்வெளி ஓடத்தின் கதவுகள் பக்கவாட்டில் சறுக்கியபடி திறந்தன. அதன் வசதியான உட்புறத்தில் நட்சத்திர வரைபடங்கள், விண்ணுலக விளக்கப்படங்கள் மற்றும் கட்டுப்பாட்டக பலகத்துடன் வானுலக சக்தியின் ரீங்காரம் இசைத்துக்கொண்டிருந்தது. “இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதில் அமர்ந்து பறக்கும் அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்” என்று ஆவலுடன் ஓடத்தில் ஏறியதும் வண்ணவண்ண நட்சத்திர ஒளிகள் ஏற்படுத்திய உணர்வில் தாமசின் கண்கள் மினுமினுத்தன. கட்டுப்பாட்டு பலகத்தை தொட்டதும் விண்கலம் உயிர்பெற்று அதன் இறக்கைகள் ஒளிர்ந்தன. “ஹூஷ்.ஷ்” என மெல்லியதாக ஒலியெழுப்பியபடி கலம் பிரபஞ்சவெளியில் ஊடுருவிப்பறந்தது. எல்லையில்லாத விண்வெளிப்பரப்பில் மிதந்து போகும் தாமசுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது. நட்சத்திரங்களும் விண்மீன் திரள்களும் வானுலக அதிசயங்களை காண்பித்து விண்ணில் சுழன்று கொண்டிருந்தன. இப்போது நிறங்களை மாற்றிக்கொண்டு உயிரோட்டமான ஒன்றாக சுழன்று கொண்டிருந்த நெபுலா கோளை விண்கலம் நெருங்கியது. வாயுக்கள் மற்றும் தூசிகளால் ஆன சுழலும் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த நெபுலாவில் சறுக்கியபடி கலம் மெதுவாக தரையிறங்கியது. மினுக்மினுக்கென தோன்றி ஒளிரும் நட்சத்திரங்களின் பிரபஞ்ச நடனம் காணுவதற்கினிய காட்சியாக அமைந்தது. நெபுலாவில் நெடுந்தொலைவு பயணம் செய்து பாலைவனச்சோலை போன்ற ஓர் இடத்தை அடைந்தார்கள். அப்போது அங்கே ஒரு ஒளி உருவம் தோன்றி, “உன்னை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறேன். நான் இந்த சோலையின் பாதுகாவலன். என் பெயர் பயஸ். உனக்கு இதுவரை பலரும் அறியாத பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்ளவேண்டுமா” என்று கேட்டது. “ஆமாம். அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” ஆர்வம்கூட பதில் சொன்னான். “சரி. என்னோடு வா” என்று பழங்கால கலைப்பொருட்களும் வான்ஒளிக்கோளங்களும் நிரம்பிய ஒரு அறைக்கு பயஸ் கூட்டிச்சென்றது. “இரகசியங்கள் இந்த ஒளிக்கோளங்களில் அறிவாக பொதிந்து கிடக்கிறது. ஒவ்வொரு கோளத்திலும் ஒவ்வொரு பிரபஞ்ச உண்மை அடங்கியிருக்கிறது. அவற்றை உனக்கு சொல்லவேண்டுமென்றால் நீ மூன்று பழந்தமிழர்கால புதிர்களுக்கு விடை சொல்ல வேண்டும்” என்று ஒளி உருவமான பயஸ் சொன்னது. “சரி கேள்” என்று தயாரானான் தாமஸ். “உடைக்க முடியும் ஆனால் ஒரு போதும் பற்றிக்கொள்ள முடியாது. அது என்ன” ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு சட்..டென பதில் சொன்னான். “வாக்குறுதி. ஒரு வாக்குறுதியை மீறலாம். ஆனால் அதை கைகளால் பிடித்துப் பார்க்க முடியாது” அந்த பதிலை கேட்ட பயசின் முகம் அன்பான புன்னகையுடன் பிரகாசித்தது. “சரியாகச் சொன்னாய்” என்று அடுத்த புதிரை போட்டது. “எது எப்போதும் வரும். ஆனால் ஒரு போதும் வராது” ‘என்ன இது. சினிமாவில் வரும் காமெடி போல் உள்ளதே. இதற்கு என்ன பதில் சொல்வது’ என்று சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான். “நாளை என்பது இதன் விடை” பயஸ் அதை சரியென்று ஆமோதித்து தலையசைத்தது. “ஆம். நாளை எப்போதும் வருகிறது. ஆனால் அது உண்மையில் ஒரு போதும் வராது. ஏனென்றால் அது வரும் போது, அது ‘இன்று’ என அர்த்தம் ஆகிவிடுகிறது. இந்த சின்னவயதில் புத்திசாலியாக இருக்கிறாய்” என்று கடைசி புதிரை போட்டது. “தலையும் வாலும் இருக்கும். ஆனால் உடல் இல்லை. அது என்ன… சொல் பார்ப்போம்” தாமஸ் இமைகளை சுருக்கி விடையை தேடியதும் ‘பட்…’டென பதில் வந்தது. “நாணயம் என்பது இந்த புதிருக்கான விடை”. பயஸ் மகிழ்ச்சியில் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. “நீ மிகவும் புத்திசாலி. நாணயத்தின் ஒருபுறம் தலையும் மறுபுறம் வாலும் இருக்கும். ஆனால் அதற்கு உடல் இல்லை” பயஸ் கைகளை அசைக்கவும் அறிவுக்கோளங்கள் ஒளிரத்துவங்கி அறை முழவதும் தங்கம் போல் தகதகவென மின்னியது. அந்த அறிவுக்கோளங்கள் தாமசை நோக்கி மிதந்து வந்தன. அவை ஒவ்வொன்றிலும் பண்டைய கால அறிவுப்புதையல் நிரம்பியிருந்தது. தாமஸ் அவை சொன்ன இரகசியங்களை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான். பூமியிருந்து கலத்திற்கு ஒரு சமிக்ஞை வந்தது. கட்டுப்பாட்டுப் பலகம் ‘பீப்..பீப்…” என பதில் சமிக்ஞை அனுப்பியது. “உன் பயணம் இன்னும் வெகுதொலைவிற்கு உள்ளது. இங்கு தெரிந்து கொண்டதை பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்துவாயாக” என்று பயஸ் புன்முறுவல் செய்து விடை கொடுத்தது. கலத்தின் இயந்திரம் சலசலப்புடன் இயங்கத் தொடங்கியது. விண்ணுலகப்பறவை பூமியைப் பார்க்க இறங்கியது. விசித்திரமான உயிரினங்களை சந்தித்தது, பிரபஞ்ச இயக்கத்தின் காட்சிகளை பார்த்தது, விண்ணுலக இகசியங்களை அறிந்துகொண்டது என புதிய அனுபவங்களோடு தாய்மண்ணில் வந்து இறங்கினான். பயஸ் சொன்னது போல அவனுக்கு இன்னும் நிறைய வேலைகள் காத்திருந்தன. மாயப்புத்தகத்தின் பக்கங்கள் படபடவென அசைந்து, ஒரு பறவை இறக்கைகளை ஒடுக்கி மரக்கிளையில் அமர்வது போல அடுக்குப்பலகையில் போய் அமைதியாக உட்கார்ந்து கொண்டது. ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2
- மணல் வீடு
கோடி கோடி பணத்தினால் மாடி வீடு கட்டுவர் ; கோடி கோடி மணலினால் வீடு நாங்கள் கட்டினோம். செங்கல் தேவை யில்லையே ! சிமிண்டும் தேவை யில்லையே எங்கள் வீட்டைக் கட்டிட இரும்பும் தேவை யில்லையே ! ஐந்து நிமிட நேரத்தில் அழகு மிக்க வீட்டினைச் சந்து பொந்து இன்றியே குந்தி நாங்கள் கட்டினோம். கடலின் அலைகள் வீட்டினைக் கரைத்திட் டாலும் பயமிலை. உடனே புதிய வீட்டினை உவகை யோடு கட்டுவோம். ஏடு படிக்கும் யாவரும் கூடி வீடு கட்டினோம்) வீடு உடைந்து போகுமுன் ஒடி வந்து பாருங்கள்
- பூமி பார்த்துக் கொண்டுதானிருக்கிறது
மோகன் குளிரூட்டப்பட்ட கவச உடை அணிந்திருந்தான். தலையில் விண்வெளிவீரர்களைப் போல தலைக்கவசம். அந்தக் கவசத்துக்குள் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர். இடுப்புப்பட்டையில் இன்னொரு ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தது. பள்ளியின் காத்திருப்பு அறையில் இருந்து வெளியே பார்த்தான். . வானம் வெள்ளைவெளேரென்று இருந்தது. மேகங்கள் இல்லை. மரங்கள் இல்லை. செடி, கொடிகள் இல்லை. மலைகள் இல்லை. அருவிகள் இல்லை. நதிகள் இல்லை. கடல்கள் இல்லை. காற்று இல்லை. பூமி வெள்ளைவெளேரென்று இருந்தது. வேறு என்ன இருந்தது? வானாளவிய பாலங்கள் சிலந்தி வலைப்பின்னலைப் போல பின்னிக் கிடந்தன. மேகங்கள் இல்லாத தினால் பெரிய சிறிய டிரோன்கள் குறுக்குமறுக்கும் பறந்து கொண்டிருந்தன. மோகனை அழைத்துச் செல்லும் டிரோன் இன்னும் வரவில்லை. டிராபிக் ஜாம் என்ற செய்தி அவனுடைய மூளையில் நேரடியாக டெலிவரி ஆகியிருந்தது. மோகன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். எங்கு பார்த்தாலும் வாகனங்கள்.. தரையில் செல்லும் வாகனங்கள் உண்மையில் தரையில் செல்லவில்லை. அவை தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை சற்று விலை குறைவானவை. வாடகையும் குறைவு. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஊர்ந்து கொண்டிருந்தன. மோகனைப் போன்ற வசதியான குழந்தைகள் வானில் பறக்கும் டிரோன்களில் பறப்பார்கள். அவன் பள்ளிக்கூட த்துக்குப் போகும்போதும் சரி வரும்போதும் சரி. சாலைகளிலோ, தெருக்களிலோ மனிதர்களைத் தவிர எந்த உயிரினத்தையும் பார்த்ததில்லை. ஒரு பூவையோ, காயையோ, பழத்தையோ செடியையோ மர த்தையோ பார்த்த தில்லை. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எதையும் பார்த்த தில்லை. அவ்வளவு ஏன்? அவை எல்லாம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. அவனுடைய கணினியில் பூச்சிகள் விலங்குகள் பறவைகள் செடிகள் மரங்கள் எல்லாம் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று சொல்லப்பட்டிருந்த து. அவ்வளவு ஏன் தண்ணீர் கூட ஹைஜீனிக் இல்லை என்று வேதியியல் விவரங்களுடன் மனப்பாடப்பகுதியில் இருந்த து. எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் தண்ணீர், ஆக்சிஜன், உணவுப்பொருட்கள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. அதற்கென்றே கே.எப்.சி, மெக்னோல்டு, ரிலையன்ஸ், டி மார்ட், போன்ற கம்பெனிகள் 1000 மாடிக்கட்டிடங்களைக் கட்டி ரோபோக்களை வைத்து உற்பத்தி செய்தார்கள். சாப்பிட நேரமோ, பொறுமையோ இல்லாதவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அவற்றைச் சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் எடுக்காது. பசி இருக்காது. சோர்வு இருக்காது. உறக்கம் வராது. மரணமும் கிடையாது. எனவே மனிதர்கள் எல்லோரும் அந்தக் கம்பெனிகளில் ஆயுள் காலச் சந்தாக்களைக் கட்டினார்கள். மோகனின் அம்மா ஒரு கம்பெனி, அப்பா ஒரு கம்பெனி, தங்கை ஒரு கம்பெனி, அவன் ஒரு கம்பெனி. எனவே எல்லாக்கம்பெனிகளின் ஆபர்களும் கழிவுகளும் இலவசங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. மோகனுக்குப் பசிப்பது போல இருந்தது. உடனே அவனுடைய கையில் இருந்த உடல் கண்காணிப்புத் திரையில் சிவப்பு விளக்கு எரிந்த து. எத்தனை கலோரி குறைந்திருக்கிறது? எத்தனை கலோரி தேவை? அதற்கு எந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திரையில் காட்டியது. உடனே அவன் அவனுடைய கால்சட்டைப்பைக்குள் கையை விட்டான். ரோஸ் நிற மாத்திரையை எடுத்து வாயின் அருகில் கொண்டு போனான். உடனே அது காந்தசக்தி ஈர்ப்பைப் போல வயிற்றுக்குள் போய்விட்டது. உடனே சிவப்பு விளக்கு அணைந்து விட்டது. மனிதர்களைத் தவிர யாருமில்லாத உலகத்தில் மீண்டும் மீண்டும் கணினித் திரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்து விட்டான். அம்மா சொன்னார். நூறாண்டுகளுக்கு முன்னால் ஹிஸ்டரி சேனலில் ஒரு கரப்பான் பூச்சி ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட து. உடனே பன்னாட்டுப்படைகள் அதன் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுத்து அழித்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு ஈ, எறும்பைக் கூடப் பார்க்க முடியவில்லை என்று சொன்னார். மோகனுக்கு அன்று முதல் ஒரு ஆவல் தோன்றி, ஆசையாகி, அதன்பிறகு இலட்சியமாகவே மாறிவிட்ட து. மனிதர்கள் மட்டுமே வாழும் இந்தப் பூமியில் அனைத்து உயிர்களும் வாழும்படி மாற்ற வேண்டும். மறைந்த இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும். எல்லா உயிர்களும் சம மென்று மனிதர்கள் உணரவேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்காக அவன் இரவு உறங்கும்போது வேண்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய இந்த வேண்டுதலைப் பூமியின் உள்ளே மறைந்திருந்த இன்னொரு இயற்கைக் கேட்டது. அதற்கு அந்தக் குழந்தையின் வேண்டுதலைக் கேட்டு மனம் இளகி விட்ட து. அதற்கு முன்புவரை எல்லோரையும் அழிக்கும் மனித இனம் விரைவில் மறைந்து விடும். பிறகு புதிய உலகத்தை, பறவைகளை, விலங்குகளை, பூச்சிகளை, மரம் செடி கொடிகளை, மலைகளை, அருவிகளை எல்லாம் படைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தது. மோகனின் வேண்டுதல் பூமியின் மனதை இளக்கி விட்டது. மறுநாள் காலையில் பாலங்களுக்குக் கீழிருந்து மலைகள் முளைத்து வந்தன. மலைகளில் அருவிகள் விழுந்தன. மலைகளிலிருந்து காடுகள் விரிந்தன. செடிகள் பூத்தன. கொடிகள் பின்னிப்படர்ந்தன. மரங்களில் காய்களும் கனிகளும் தோன்றின. காடுகளிலிருந்து விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், பூமி முழுவதும் பரவின. கடல்கள் தோன்றின. கடலிலிருந்து மேகங்கள் தோன்றின. மேகங்கள் மழை பொழிந்தன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் தோன்றின. நீர்நிலைகள் தோன்றின. மனிதர்களின் அத்தனை கவசங்களும் கழன்று விழுந்தன. மனிதர்கள் அந்தப் புதிய உலகை வியப்புடன் பார்த்தனர். மோகன் கண்விழித்ததும் ஒரு குயிலின் சத்தத்தைக் கேட்டான். 350 ஆவது மாடி சன்னல் வழியே பார்த்த போது ஒரு சொர்க்கம் தெரிந்த து. மோகனின் முகத்தில் புன்னகை விரிந்தது. உதயசங்கர் 200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- ஹன்ஸ் குகைகள், பெல்ஜியம்
பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள். மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள். பெல்ஜியத்தின் தலைநகரம் (ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) பிரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது ஹன்ஸ் குகை. இந்தக் குகை, ப்ரஸல்ஸ் நகரிலிருந்து சுமார் நூற்று இருபது கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்திருக்கிறது. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse). நானும் என் நண்பனும் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம் (2001ஆம் வருடம்) என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்றைய பயணத்திற்கு இடையூறாய் இருந்தன. குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடையப் பத்து நிமிடப் பயணம் ஆனது. செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும், புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும், வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது. அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய்க் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. சிறு சிறு மரப்படிகள் அமைக்கப்பட்டிருக்க, கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல, அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன. குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன பொங்கூசிப் பாறைகள் (stalagmites); குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து, விழுதுகளாய்த் தொங்குவன தொங்குபாறைகள் (stalactites); திரைச்சீலை போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன, கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள், ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த (பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும்) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள், யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள். இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள். ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி, சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள், சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு. சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புகளைப் போன்ற பொங்கூசிப்பாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம். ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும், ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஓர் ஒளி-ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின. சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி. அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை. இது ஒரு குற்றாறு. இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில்தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம். நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன. படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய, வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி. திடுக்கிட்டுத் திரும்பினால் "குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு. இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள். பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள், மான்கள், குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம். இதையெல்லாம் விட பெரிய அதிசயம், அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் "வன விலங்கில் புது வரவு, அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி, குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் போன்றவை கண்ணுக்குக் குளுமை சேர்த்தன. நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். மாடு மேய்ப்பவர்களைப் போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள், தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர்க் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள். பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம் எழில் சின்னதம்பி இயற்பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி. சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். அயல்நாடுகளில் அலுவலகப் பணி. ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு - சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை’ காலாண்டிதழிலும் 'தடாரி' மின்னிதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. வெளியான நூல்கள் ‘கடைசி வருகை’ ‘கடலோடியின் மனைவி’, ‘வரவிருக்கும் நூல் சிலந்தி
- சீனா பாடாவின் ஆபக்
இந்தியில்: ஃபயாஸ் அகமது தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ தினமும் காலையில் சில பழக்கமான சத்தங்களைக் கேட்டுத்தான் எனது கண்கள் திறக்கும். தூக்கம் வழியும் கண்களைத் துடைத்துக்கொண்டு, கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு தெருமுனைப் பொதுக் குழாய்க்கு ஓடுவேன். அங்கே மனிதர்களின் நீண்ட வரிசை ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து நிற்கும். அதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்! எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மனிதர் வசித்தார். சுற்றி இருப்பவர்கள் அவரை 'ஆபக்' என்று அழைப்பார்கள். அந்தப் பெயர் எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும். ‘ஒரு இந்தியருக்கு எப்படி இப்படி ஒரு பெயர் இருக்க முடியும்?’ என்று நான் அடிக்கடி யோசிப்பேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. உண்மையில், ஆபக் இந்தியர் அல்ல. அவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். நான் குடியிருந்த அதே கட்டிடத்தில்தான் அவரும் வசித்தார். எங்கள் பகுதியில் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இருந்தது. தெருவோரக் குழாயில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீர் பிடிப்பார்கள். வழிப்போக்கர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்கள் என எல்லோரும் அங்கேதான் வருவார்கள். கொல்கத்தாவில், நாங்கள் வசித்த பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அங்கு வசிப்பவர்கள், பொதுவாக அவர்களைச் 'சீனா' என்று கூப்பிடுவார்கள். அதனால்தான் அந்த இடத்திற்கு 'சீனா பாடா' (சீனா குடியிருப்பு) என்று பெயர் வந்தது. சீன மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் எங்களது வீட்டருகில் தாராளமாகக் கிடைக்கும். சீன நாட்டவருக்கு வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், பள்ளிக்கூடம் என எல்லாமே அங்கு உண்டு. அவர்களுக்கு ஒரு கோயிலும் இருந்தது. ஆனால், சில வியாபாரிகள் சேர்ந்து அந்தக் கோயிலை ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மாற்றிவிட்டார்கள். கீழே கோயில் இருந்த இடத்தை ஒரு பாதுகாப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். சாமி கும்பிடும் இடத்தை இப்படி மாற்றிவிட்டார்களே என்று யாரும் சண்டை போடவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது எனக்குச் சிறு வயது என்பதால் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு குழப்பமான விஷயமாகத் தெரிகிறது. ஆபக் ஒரு சீனக்காரர். மொட்டை மாடிக்கு மாற்றப்பட்ட அந்தக் கோயிலின் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த ஒரு சிறிய இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். அதிகாலையிலேயே அவர் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார். “நீ சீனா, உன் அப்பா சீனா, உன் குடும்பமே சீனா” என்று அவர் சொல்லும்போது புருவங்கள் கோபத்தில் சுருங்கும், முகம் சிவக்கும். இதற்கெல்லாம் காரணம் ‘தபாரக் அலி' என்பவர்தான். தபாரக் அலியும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் தான். அவர் ஆபக்கை அடிக்கடி சீண்டிப் பார்ப்பார். சும்மா இருக்காமல், “ஏய் ஆபக்! நீ ஒரு சீனாக்காரன்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவ்வளவுதான், ஆபக்கிற்குப் பயங்கர கோபம் வந்துவிடும். இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடக்கும். இது தினமும் நடக்கும் ஒரு விஷயம். “நீ ஒரு சீனாக்காரன்” என்று தபாரக் அலி சொல்வது, ஆபக்கிற்கு ஒரு கெட்ட வார்த்தையை விட அதிக வலியைத் தரும். அந்த வேதனை அவர் முகத்திலேயே தெரியும். அவர் கோபத்தில் துடிப்பார். அருகில் நிற்பவர்கள் இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர் திட்டிக் கொண்டே குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு, வேகமாகத் தன் வீட்டிற்குள் சென்றுவிடுவார். அவர் தங்கியிருந்த இடத்தை ஒரு 'வீடு' என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. மாடிக்குச் போகும் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த அந்தச் சிறிய இடம்தான் அவருடைய உலகம். ஆபக், சண்டை போட்டு ஓய்ந்த பிறகு, சில அலுமினியக் கம்பிகளை எடுத்துப் பறவைக் கூண்டுகள் செய்யத் தொடங்குவார். அவர் தன் மனதில் உள்ள கவலைகளை எல்லாம் அந்தக் கம்பிகளை வளைப்பதன் மூலமே தீர்த்துக் கொள்வார் போலத் தோன்றும். கோயிலைப் பாதுகாப்பதும், கூண்டுகள் செய்வதும்தான் அவருடைய வேலை. கோயிலுக்கு வரும் மக்கள், அன்போடு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனால், அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். ஆபக் தயாரிக்கும் கூண்டுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மக்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து ஆசையோடு வாங்கிச் செல்வார்கள். அவருக்கு நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அன்றைய சாப்பாட்டிற்குப் பணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பார். கொல்கத்தாவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவருடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மனைவி மற்றும் குழந்தைகள் என எல்லாரும் சீனாவில் இருந்தார்கள். பாவம், அவரால் யாரையும் போய்ப் பார்க்க முடியாது. அங்கிருந்து யாரும் இவரைத் தேடி வரவும் முடியாது. உண்மையில் ஆபக் ஒரு போர்க்கைதி. 1962 இல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்தது. மற்ற போர்களைப் போலவே இதிலும் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இரண்டு நாடுகளுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. போரில் சில வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். சீன வீரராகச் சண்டை போட்ட ஆபக்கையும் இந்திய வீரர்கள் பிடித்துவிட்டார்கள். போர் முடிந்த பிறகு, இரண்டு நாடுகளும் கைதிகளைத் திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஆபக் மட்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. அவரே இதைச் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். ஆபக்கைப் போலவே கொல்கத்தாவிலேயே தங்கிவிட்ட சீன வீரர்கள் இன்னும் பலர் இருந்தார்கள். சீன அரசாங்கம் அவர்களைத் திரும்பக் கூப்பிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அதன் பலன் ஆபக் போன்ற ஏழை வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. தபாரக் அலி கிண்டல் செய்யும்போது ஆபக் யாரைத் திட்டியிருப்பார்? தன் நாட்டு அரசாங்கத்தையா, தன் நாட்டு மக்களையா? தன் குடும்பத்தையா? தெரியவில்லை. ஆபக் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும், அவரால் கொல்கத்தாவை விட்டு வெளியே எங்கும் போக முடியாது. கடந்த முப்பது வருஷங்களாக, ஆபக் கடையில் இருந்து கம்பிகளை வாங்கி வருகிறார். நாள் முழுவதும் உட்கார்ந்து பொறுமையுடன் பறவைக் கூண்டுகள் செய்து கொண்டிருப்பார். களைப்பாக இருந்தால் சுவரில் சாய்ந்தபடி அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவார். இதுதான் அவருடைய தினமும் நடக்கும் வாழ்க்கை. ஆபக்கைப் பார்க்கும்போது எனக்கு இந்திய 'ஆபக்'களின் ஞாபகம் வருகிறது. சீனாவின் ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு தெருக் குழாயடியில், இந்திய வீரர்கள் யாராவது தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே இருக்கும் ஒரு சீனக்காரர் அவர்களைக் கிண்டல் செய்யும்போது, அவர்கள் முகமும் இதேபோலக் கோபத்தில் சுருங்கும். அதில் ஒருவர் காலையில் எழுந்ததும் சத்தமாகப் பேசுவார். “நீ இந்தியன், உன் அப்பா இந்தியன், உன் குடும்பமே இந்தியன்” கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- குழந்தைகளின் உரிமைகள் - 9
குழந்தைகளுக்குக் குரலெழுப்பும் உரிமை - யூனிசெஃப் பிரகடனம் காலங்காலமாகக் குழந்தைகள், தங்களைப் பாதிக்கும் அல்லது தாங்கள் எதிர் கொள்ளும் ஏதேனும் ஒரு பிரச்னையில் தங்களின் கருத்தைக் கூற பெரியவர்கள் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள்; ஏழைகள் - பணக்காரர்கள்; அதிகாரிகள் - சாதாரணக் கூலி உழைப்பாளிகள்; ஆண்கள் - பெண்கள்; கிராமத்தவர் - நகர மக்கள் - என்று எந்த வித வேறுபாடும் கிடையாது. உலகம் முழுவதிலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களிடை யே யும் இந்த ஒரு விஷயத்தில் பரிபூரண ஒற்றுமை நிலவுகிறது. "நீ சின்னப்பொண்ணு, ஒனக்கு என்ன தெரியும்?" "மொளச்சு மூணு எல உடல, அதுக்குள்ள பெரியவங்ககிட்டயே யோசன சொல்றியா நீ?" "பெரியவங்க பேசிக்கிட்டிருக்கறப்ப நீ என்ன பெரிசாக் கருத்துச் சொல்ல வந்துட்ட?" "பெரியவங்க சொன்னாங்கன்னாக் கேட்டுக்கணும்…ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர் வார்த்தை பேசக்கூடாது…" "பெத்தவங்க நாங்க, ஒனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா? நாங்க சொல்றபடி செய்யி, போ!" – இப்படிப்பட்ட வசனங்களை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் வலியுறுத்தும் எல்லா 'அறங்'களும் இந்த ஒற்றைத் தொனியிலேயே எவ்வித மாறுதலும் இன்றிக் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மில் யாரேனும் மறுக்க முடியுமா? குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. அமைப்பின் பிரகடனமும், சர்வதேச நாடுகளின் கூட்டு மாநாட்டில் அனைத்து நாடுகளும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், இன்னும் இவை போன்ற பிற ஆவணங்களும் மேற்கண்ட 'பெரிய'வர்களின் கருத்துகளைத் தீர்மானகரமாக மறுக்கின்றன. "தங்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையைப்பற்றியும் கருத்துக் கூறுவதற் குக் குழந்தைகள் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. தங்களின் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் குழந்தைகள் ஏதேனும் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளவே செய்கின்றன. அது முற்றிலும் சரியான கருத்தாக இருந்தாக வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறான கருத்தாகவே கூட இருக்கலாம். அல்லது சரியான கருத்தையும் ஒரு குழந்தை கூறக் கூடும். 'பெரியவர்'கள் .மட்டும் எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்க ளிலும் மிகவும் சரியான கருத்துகளைக் கூறி விடுகிறார்களா, என்ன? எனவே, தன்னைப் பாதிக்கும் அல்லது தன் கண்களில் படும் எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்குத் தோன்றும் எந்த ஒரு கருத்தையும் எவ்விதத் தயக்கமுமின்றி, சுதந்திரமாக எந்த ஒரு குழந்தையும் கூற வேண்டும். அவ்வாறு குழந்தைகள் கூறும் எந்த ஒரு கருத்தையும் யாரும் தடை செய்யக்கூடாது என்கிறது யூனிசெஃப் பிரகடனம். குழந்தைகளின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்வதும், அவர்களின் கருத்துகள் சரியானவைதாம் எனில் அவற்றை மனதார ஏற்றுக் கொள்வதும் நமது கடமை. அரசாங்கங்களின், ஆளுவோரின் கடமை. பெற்றோரின், ஆசிரியர்களின், அதிகாரிகளின், ஏன், நம் அனைவரின் கடமையுமாகும். வயது வந்த பெரியவர்கள், குழந்தைகள் கூறும் கருத்துகளைத் தீவிர கவனம் கொடுத்துக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்ற இந்த விதியை உலகம் மதிக்கிறதா? பெரிய ஏமாற்றமே நமக்குக் காத்திருக்கிறது. கொஞ்ச நாள்களுக்கு முன்னாள், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிய ஜெனீவா உச்சி மாநாட்டில், கிரெட்டா துன்பர்க் என்னும் பெண் உலக நாடுகளின் தலைவர்கள் அத்தனை பேரையும் நோக்கிக் கேள்விகளை அடுக்கினாள். "சுற்றுச்சூழலும், உலகளாவிய வெப்பமய மாதல் நிலைமைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றனவே, உலக நாடுகளும், அவற்றை ஆளும் இத்தனை தலைவர்களும் நம்மைச் சுற்றி லும் என்ன நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப்பற்றி என்றேனும் கொஞ்ச நேரமாவது யோசிக்கிறீர்களா? எங்களைப்போன்ற குழந்தைகளுக்கு நாளை நீங்கள் எந்த மாதிரியான உலகத்தை விட்டு விட்டுப்போவீர்கள்?" என்று கேட்டாள் அந்தப்பெண். முதன்முதலில் இதே கேள்விகளை அவள் தன் பெற்றோரிடம் எழுப்பினாள். அவர்கள் சொன்ன மறுமொழிகளும், சமாதானங்களும் கிரெட்டாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பள்ளியில், சக மாணவிகளிடம் பேசினாள். ஆசிரியர்களைக் கேட்டாள். கண்களில் படும் அத்தனை மனிதர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்டாள். சரியான பதிலை யாரும் அவளுக்குத் தர முடிய வில்லை. பள்ளியில் சக மாணவிகளைத் திரட்டிக்கொண்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினாள். பள்ளிகளின் முன்னால், அரசு அலுவலகங் களின் முன்னால், பொது மன்றங்கள்- சட்டமன்றங்கள்- நாடாளுமன்றங்கள் அனைத்தின் முன்னாலும் இத்தகைய முற்றுகைப்போராட்டங்களை சாத்தியமான எல்லா நாடுகளிலும் அவள் முன்னெடுத்தாள். முதலில் எந்த இடத்திலும், யாரும் கிரெட்டாவையோ அல்லது அவளைப் போல் கேள்விகளை எழுப்பிய பிற குழந்தைகளையோ சட்டை கூடப் பண்ணவில்லை. அவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்குப் போகாமலே இருந்தார்கள். தேர்வுகளை எழுத மறுத்தார்கள். பயணங்கள் எவற்றையும் மேற்கொள்ளாமல் தவிர்த்தார்கள். ஒரு சிறு புள்ளியில் தோன்றிய இந்த இயக்கம், பெரும் சூறாவளியாய்ச் சுழன்று பெரிதான பிறகுதான் உலகம் அவர்களின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியது. சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான எல்லா சர்வதேச மாநாடுகளுக்கும் கிரெட்டா துன்பர்க் அழைக்கப்பட்டாள். அவள் கேட்ட பல கேள்விகள், அமெரிக்க நாட்டின் செயல்களைப் பற்றியதாக இருந்தது. உலக வெப்பமயமாதலுக்கு அந்த நாடுதான் உலகிலேயே அதிக சதவீத அளவுக்குக் காரணமாக இருக்கிறது என்னும் உண்மையைக் கிரெட்டா புள்ளிவிவரங்களுடன் நிறுவினாள். இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியின் போது, அவரே எரிச்சலடைந்து 'இந்தப்பெண் சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொண்டிருக்கிறாள்" என்று கத்திய செய்தியைப் பத்திரிகைகளில் நாம் படித்திருப்போம். இதுதான் நாம் குழந்தைகளின் உரிமைக்குரல்களுக்குக் கொடுக்கும் மரியாதை! ஆரம்பத்தில் கிரேட்டாவின் முரல் அலட்சியப்படுத்தப்பட்டது. அவள் ஒரு தனியாளாக இருக்கவில்லை; அவளுக்குப் பின்னால் பல்லாயிரம், பல லட்சம் குழந்தைகள் திரண்டு குரல்களை எழுப்பியபின், உலக நாடுகள் கொஞ்சம் அசைந்தன. ஒரு சில உறுதிமொழிகளை அந்தக்குழந்தைகளுக்கு அரசாங்கங் களின் தலைவர்கள் கொடுத்தார்கள். பெரியவர்கள் அளிக்கும் உறுதிமொழி களை எவ்வளவு தூரத்திற்கு அவர்களே மதிப்பார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய குரல்கள் ஓய்ந்து விட்டன. இப்போது கிரெட்டா துன்பர்க் என்ன செய்கிறாள்? யாருக்கேனும் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- குழந்தைகளின் உளவியலைக் கட்டமைக்கும் புத்தகங்கள்
மூ.அப்பணசாமி, ஆலோசகர், தமிழ்நாடு பாடநூல் கழகம். நேர்காணல் - சாலை செல்வம் 1.தங்கள் பொறுப்பில் செயல்பட்டுவரும் இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து.... கொரோனா பெரு முடக்கம் உலகம் முழுவதும் மழலையர் வகுப்பு குழந்தைகளில் இருந்து மேனிலை மாணாக்கர் வரை குழந்தைகளிடம் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் உருவான கற்றல் இடைவெளியால் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டு வருவது சவாலாக இருந்தது. ஏற்கனவே, பாடத்திட்டம் கடந்த வாசிப்பு மற்றும் கலை முயற்சிகள் மாணாக்கர் இடையே குறைந்து வருகிறது. கடந்த 20 -30 ஆண்டுகளில் வாசிப்பு தொடர்பாக எதிர்மறை தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை மீண்டும் கற்றல் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருதலையும் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தலையும் இணைக்கும் வகையிலும் அரசு அறிவித்த திட்டம் இளந்தளிர் இலக்கியத் திட்டம். கடந்த நான்காண்டுகளாக செயபடுத்தி வருகிறோம். சிறார் மனதை கதைகளாலும் பாடல்களாலும், நாடகங்களாலும் காமிக்ஸ்களாலும் வண்ணங்களைக் கொண்டு அழகூட்டும் முயற்சியே இத் திட்டம். சிறார்களின் படைப்பூக்கத்தினையும் சமூகத் திறன்களையும் ஊக்கப்படுத்தும் முயற்சியாக சிறார்களுக்கான நூல்களை ஒரு கதை – ஒரு புத்தகம் என்ற அளவில் தமிழ்நாட்டின் தலை சிறந்த சிறார் படைப்பாளிகளைக் கொண்டு எழுதச் செய்து சிறந்த ஓவியர்களின் கலை வண்ணத்தில் அனைத்தும் வண்ணங்களாக வெளியிடப்படுகின்றன. ஒரு அரசு இதுபோன்று பாடத்திட்டம், மதிப்பெண் போன்ற இலக்குகளோடு சிறார்களின் படைப்பாற்றலையும் வாசித்தலையும் கவனப்படுத்துகிறது என்ற வகையில் இது ஒரு முன்னோடித் திட்டம் ஆகும். ஏனெனில் இதுபோன்ற பணிகள் வேறு மாநிலங்களில் அரசால் மேற்கொள்ளபடுகிறதா என்று தெரியவில்லை. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தில் எந்த மாதிரியான சிறார் புத்தகங்கள் கொண்டுவரப்படுகின்றன. 5-8, 9 -11- 12 -14, பதின் பருவத்தினர் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளாகப் பிரித்து அக்குழந்தைகளுக்குப் பொருத்தமான கதைகளும் ஓவியங்களும் தீட்டப்படுகின்றன. அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி என்ற அடிப்படையில் கதைக்கருக்கள் உருவாக்கப்பட்டு பன்மையம், சமூக நீதி, சமத்துவம், சுற்றுச்சூழல் தூய்மை ஆகிய விழுமியங்களில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் சிறார் புத்தகங்களின் பயன்பாடு குறித்து... ஒரு கதைக்கு அதிகபட்சம் 500 – 600 சொற்கள்; 25 - 40 விழுக்காட்டுக்குள் எழுத்து; 60 – 75 விழுக்காடு வண்ண ஓவியங்கள் என வடிவமைக்கப்பட்டன. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஓவியர்களுக்கும் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு படைப்பாளிகளும் ஓவியர்களும் இணைந்து இளஞ்சிறார்களுக்கான படைப்புகளை உருவாக்கினர். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை மேம்பாடு, சிக்கல்களைத் தீர்த்தல், பற்றுதலை உருவாக்குதல்,தாமாகவே கதைசொல்லக்கற்றல் கதை சொல்லியாதல்,கற்றல் திறன் மேம்பாடு போன்ற திறன்கள் மேம்பட்டால் மகிழ்வோம். இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் கீழ் வெளியாகும் புத்தகங்களுக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? குழந்தைகள் தாமாகப் புதிய சொற்பிரயேகங்களைப் பயன்படுத்துதல், மாற்றி யோசிக்கும் திறன், பகுத்தாய்வை வளர்த்தல், உணர்ச்சிகர சூழலைத் தாமே கையாளுதல்; நினைவுகளை மீட்டுதல், கற்பனையைப் படைப்பாக்குதல்; அறம் வளர்த்தல்; பண்பாட்டை அறிதல்; உணர்ச்சிகளைக் கையாளுதல், எப்போதும் பற்றுணர்வை உருவாக்குதல்; நகைச்சுவை, பகடி ஆற்றலை வளர்த்தல். இதற்காக சமத்துவம், பன்மையம், சிறார் உரிமைகள், பால் பாகுபாடு அகற்றல், உடலியல் மாற்றங்கள், சமூக நீதி, சுற்றுச்சூழல், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகம்,உள்ளூர் வரலாறு என பல்வேறு பொருண்மைகள் முடிவு செய்யப்பட்டன. பொதுவாக நமது சிறார்களுக்கு அறிமுகமாகும் கதைகள், ஓவியங்கள் ஒன்று ஐரோப்பிய முகங்களும் பண்பாடும் சூழலும் கொண்டதாக இருக்கிறது. அல்லது இந்திய பெருங்கதையாடலை ஒட்டியதாக அமைகிறது. நமது குழந்தைகளுக்கான கதைகளோ ஓவியங்களோ தமிழ் பண்பாட்டையோ சூழலையோ காண்பிக்கிறதா என்பது கேள்விதான். மேலும், ஒரு குடும்பம் என்றால் Stereotype ஆக அப்பா, அண்ணன்கள் புத்தகம் படிப்பார்கள், கணினியில் அமர்ந்திருப்பார்கள். அம்மா, அக்கா, அத்தை, பாட்டி யாராக இருந்தாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல, சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர் இணைந்ததுதான் சமூகம், பள்ளி, பொது வெளிகள். இதுபோன்ற பன்மைத்துவம் எங்களது படைப்புகளில் மிளிர்கின்றன. இந்த பொருண்மைகளை முன்பே தீர்மானம் செய்து அதைப்படைப்பாக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து சுதந்தரமும் காலமும் அளிக்கப்படுவதால் இது சாத்தியம் ஆகிறது. படைப்புச் சுதந்தரமும் பயிற்சியும் இங்கு அபூர்வமாக இசைவு (Fusion) பெறுகிறது. இளம்தளிர் இலக்கியத்திட்டத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து… கடந்த 4 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனைத்து நூல்களும் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொறு புத்தகமாகப் பார்க்கையில்.. நான்காண்டுகள் தொடர்ந்து மாராத்தான் பயிலரங்குகள்.. புது முயற்சியாக பொருண்மை அடிப்படையில் தலைப்புகள் கொடுத்து அதில் விருப்பமான பொருண்மைகளைத் தேர்வு செய்து ஈடுபட்டனர். படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போல தெரிந்தாலும் காலத்தின் தேவை கருதி படைப்புகளை எழுத மூத்த எழுத்தாளர்கள் முதல் முதல் முறை எழுத்தாளர் வரை சுமார் 50 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். எழுத்து தெரியாத குழந்தையில் இருந்து உயர்நிலை மாணாக்கர் வரை படைப்புகள் உருவாக்கப்பட்டன. இது ஒரு அபூர்வமான Fusion ஆகும். இன்னும் பல நூறு புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஆண்டுக்கு 100 சிறார் நூல்களகவது உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றினை சிறார்கள் அறியச்செய்யும் வகையிலான காமிக்ஸ் தொடர் நூல்கள் புது முயற்சியாக அமையும், மேலும். உலக கிளாசிக்ஸ் நாவல்களின் குழந்தைகளுக்கான தமிழ் பதிப்பு, மாங்கா காமிக்ஸ் போன்ற புகழ்பெற்ற சிறார் காமிக்ஸ் தமிழாக்கம், ஈரான், துருக்கி சிறார் கதைகள் தமிழாக்கம், 5 வயதுக்குக் கீழான மழலைகளுக்கான படப் புத்தகங்கள் இவற்றில் உள்ளடக்கம். சாலை செல்வம் பெண்ணியலாளர், கல்வியியலாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார். புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.













