top of page

கனவு பயணம்

  • Writer: அமுதா செல்வி
    அமுதா செல்வி
  • May 15
  • 3 min read


விஜியும் சல்மாவும் தோழிகள். எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். விஜி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கதையை பேசுவாள். தெரு கதையை பேசுவாள்.


இவளுக்கு வாய் வலிக்குமா? வலிக்காதா? என்று அவளை பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.


விஜி சொல்லும் கதைகளை கேட்கும் பொறுமையான காதுகள் சல்மாவின் காதுகள். அவள் நம்ப முடியாத பல கதைகளை கூறுவாள். சல்மா கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்பாள்.


விஜிக்கு நிறைய ஆசைகள் இருந்தன. வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும். சைக்கிள் ஓட்டனும். யார் உதவியும் இல்லாம தானாகவே குளிக்கணும். அவசரம்னா தானாகவே நடந்து கழிவறைக்குப் போகணும். பள்ளிக்கூடத்துக்கு தனியா சைக்கிள்ல போகணும்.


இப்படி நிறைய ஆசைகள். எல்லா ஆசைகளும் ஆசைகளாக மட்டுமே இருந்தன.


விஜியால் நடக்க முடியாது. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி முட்டியால் தவழ்ந்து தான் நகர்வாள். அவளுக்கு சல்மாவை மிகவும் பிடிக்கும்.


விஜியின் அப்பா தினமும் தின்பண்டம் வாங்கி வருவார். அதில் கொஞ்சத்தை எடுத்து டப்பாவில் மறைத்து வைப்பாள்.


அடுத்த நாள் காலையில் அதை சல்மாவுக்கு தருவாள். "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடுப்பா" என்பாள் சல்மா. விஜி விடமாட்டாள். சில நேரங்களில் அவளே ஊட்டியும் கூட விடுவாள்.


விஜி நன்றாக பாடுவாள். ஆனாலும் விஜிக்கு பாடுவதில் பெரிய விருப்பமில்லை. அவளுக்கு சல்மாவுடன் கதை பேசத்தான் பிடித்திருந்தது. அவள் எப்போதாவது பாடுவாள்.


இது பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் தெரியாது.

விஜி... பாட்டு பாடுப்பா....என்பாள் மலர். உடனே அனைவரும் விஜியை சுற்றி நின்று கொள்வார்கள் பாடு விஜி.... பாடு.... என்று கோரசாக கத்துவார்கள்.


யார் விஜியை பாடச் சொன்னாலும் அவள் பாட மாட்டாள்.


"விஜி பாடு" என்று சல்மா கூறியவுடன் விஜி பாடத் தொடங்குவாள்.


அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.


" விஜி சூப்பரா பாடுறம்மா. உனக்குப் பாடத் தெரியும் என்று நீ ஏன் சொல்லவே இல்லை " என்றார் மகா டீச்சர். விஜியை திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டார்.


மகிழ்ச்சியில் அவள் அன்று இரவு தூங்கவே இல்லை. அடுத்த நாள் உடற்கல்வி பாட வேளை வந்தது. அனைவரும் மைதானத்திற்கு சென்று விட்டார்கள்.


விஜியை மூன்று சக்கர வாகனத்தில் சல்மாவும் அனிதாவும் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். மைதானத்தின் ஒரு ஓரத்தில் மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள் .


நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.


அவள் ஆசையாய் பார்ப்பதை சல்மா பார்த்து விட்டாள். தன் வகுப்பு தோழர்களை அழைத்துக் கொண்டு விஜியின் பக்கத்தில் வந்தாள். சல்மாவும் அனிதாவும் இரண்டு பக்கவாட்டில் பிடித்துக் கொண்டனர். பின்பக்கம் இரண்டு பேர் பிடித்துக் கொண்டார்கள். வேகமாக தள்ளிக்கொண்டே மைதானத்திற்குள் ஓடினார்கள். அப்படியே மைதானத்தை வட்டமடித்தார்கள்.


விஜி வண்டியின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அண்ணார்ந்து வானத்தை பார்த்தாள். வானத்தில் பறப்பது போல இருந்தது. விஜி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதற்குப் பிறகு ஒவ்வொரு உடற்கல்வி பாடவேலையிலும் விஜி இப்படியே பறவை போல் பறந்து மகிழ்ச்சியாய் இருந்தாள். நாள்கள் கடந்தன.


திடீரென்று பள்ளி பரபரப்பானது. மாவட்ட அளவிலான நாடகப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சல்மா அவ்வப்போது நாடக ஒத்திகைக்குச் சென்று விடுவாள்.


விஜிக்கு சல்மா இல்லாத நேரம் என்னவோ போல இருக்கும். உணவு இடைவேளையின் போது சல்மாவிடம் கேட்டு விட்டாள்.


"சல்மா எனக்கும் கை, கால் நல்லா இருந்திருந்தால் நானும் நாடகத்தில் சேர்ந்து இருக்கலாம் தானே" என்றாள்.


சல்மாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.


"டீச்சர் விஜியையும் நாடகத்தில் சேர்க்க முடியுமா?" என்று

ஒத்திகையின் போது டீச்சர்கிட்ட கேட்டாள் சல்மா.


வெளியூருக்கு எப்படிப்பா விஜியை கூட்டிட்டு போவது? என்றார் டீச்சர்.


நான் அவளை தூக்கிக் கொள்வேன். அது என் பொறுப்பு டீச்சர் என்றாள் சல்மா.


அன்று மாலை விஜியை அழைக்க வந்த அம்மாவிடம் மகா டீச்சர் விஷயத்தை கூறினார்.


அம்மாவுக்கு அதிர்ச்சி. "அவளால் எந்த வேலையும் தனியா செய்ய முடியாது டீச்சர். அவள் அங்கு வந்து என்ன செய்யப் போறா . கை குழந்தைய வச்சுக்கிட்டு என்னாலையும் உங்க கூட வர முடியாது. உங்களுக்கு தான் தொந்தரவா இருக்கும். வேண்டாமே டீச்சர்" என்றார்.


"விஜி நல்லா பாட்டு பாடுவா. நாடகத்திற்கு பாட்டு பாட ஆள் தேவை. விஜியால் அது முடியும். உங்களுக்கு அனுப்ப விருப்பம் இருந்தா சொல்லுங்க. மற்றவைகளை நாங்க பார்த்துக்கிறோம்" என்றார் மகா டீச்சர்.


" உங்க விருப்பப்படி செய்யுங்க". என்று சம்மதித்தார் விஜியின் அம்மா.


போட்டி நாள் வந்தது. விஜி குதூகலமாக கிளம்பினாள். சல்மாவும் அனிதாவும் சேர்ந்து விஜியை தூக்கிச் சென்று வேனில் உட்கார வைத்தனர். வேன் கிளம்பியது. ஜன்னல் ஓரத்தில் விஜி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் வயல்வெளி. எதிர் காற்று முகத்தில் அடித்தது. பிரபலமான சினிமா பாட்டு வேனில் ஒலித்தது. ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் விஜி. டிரைவர் அண்ணன் பக்கத்தில் இருந்த அப்துல்லா சொன்னான் "அண்ணன் பாட்டை நிப்பாட்டுங்க. விஜி நீ பாடு" அவன் சொன்னதும் எல்லோருமே சேர்ந்து கொண்டனர்.


விஜி பாடு.... விஜி பாடு ....என்று ஒரே கூப்பாடு போட ஆரம்பித்தார்கள்.


அவள் பாட..... அனைவரும் ஆட..... ஒரே குதூகலம்.


அது அவள் ஆசைப்பட்ட பயணம். பக்கத்தில் இருந்த சல்மா விஜியின் குதூகலமான முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.


இருவரின் கைகளும் இறுகப் பற்றி இருந்தன.

1 comentário

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
Valantina
15 de mai.
Avaliado com 5 de 5 estrelas.

மிகச்சிறப்பாக அன்பையும் மனிதத்தையும் குழந்தைகளுக்கும் அவர்கள் மூலம் பெரியவர்களுக்கும் விதைக்கப்பட்ட கதை.வாழ்த்துகள் தோழர்.

Curtir
bottom of page