top of page

ஸ்டீவன் ஹாகிங்


ree

20 வயதில் தீவிரமான நோய் கண்டறியப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி வாழ வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதற்குப் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்து, பல இயற்பியல் கோட்பாடுகளை உருவாக்கி, இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்து நமக்கு அனைவருக்கும் உத்வேகம் தந்த தனித்துவமான மனிதர் ஸ்டீவன் ஹாக்கிங்.


அந்த மாபெரும் அறிவியல் அறிஞரைப் பற்றி சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ‘ஸ்டீவன் ஹாகிங் :முடிவிலிருந்து ஒரு தொடக்கம்’ என்னும் நூலை எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் எழுதி, ஓங்கில் கூட்டம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஆக்ஸ்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் பிராங்க் . தாயின் பெயர் ஐசோபெல் ஹாக்கின்ஸ். தந்தை ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.


தன்னுடைய 17 ஆவது வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பின்பு அண்டவியலில் முனைவர் பட்டம் பெற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அவர் கருந்துளை பற்றிய ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார்.


1974 இல் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கிய காலத்திலிருந்து இவருக்கு அமியோடிரோபிக் லாட்டெரல் செலரோசிஸ் என்ற அரிதான நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயின் தாக்கம் தொடங்கியிருந்தது. மெல்ல மெல்ல நடப்பதில் தடுமாற்றம் ஆரம்பித்து, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது.


அந்த நோயின் தாக்கத்தால் அவர் நாடி நரம்பு எல்லாம் சிதைக்கப்பட்டு வந்தாலும் அவருடைய சிந்தனையையும் மனதையும் அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ரோஜர் பென் ரோஸ் என்ற மூத்த அறிவியலாளரின் கருத்தரங்கத்திற்கு சென்று கொண்டு திரும்பி வந்த நேரத்தில் , இந்த ஒருமை கணத்தேற்றத்தை பிரபஞ்ச வெளி முழுமைக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன? என்று எழுந்த ஒரு சிந்தனை தான் அவருக்கு அது சார்ந்த ஆய்வு கட்டுரையை எழுத வைத்து முனைவர் பட்டம் கிடைக்க வழி செய்தது.

இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங்.

அதற்குப் பிறகு ஜெனிவா நகரில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு எஞ்சி இருந்த பேச்சுத்திறனும் பறிபோனது. அப்போதும் அவர் சோர்ந்து போய்விடவில்லை. ஏனென்றால் அவருடைய சிந்தனைகளுக்கு தான் எல்லை இல்லையே.

அதற்குப் பிறகு அவருடைய கண்ணசைவைக் கொண்டு சொற்களை உருவாக்கி உரையை தயாரித்துக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தார்.

கலிபோர்னியாவை சேர்ந்த , வால்ட் வால்டோஸ் என்ற நண்பர் Equalizer version EZ keys என்ற மின் பொருளை இவருக்காக பிரத்தியேகமாக தயாரித்து தந்தார். ஹாகிங் கண்ணசைவு, விரல் அசைவு இவற்றைக் கொண்டு எல்லாம் அவர் எண்ணங்களை சொற்களாக்க இந்த மென்பொருள் உதவியது.

1988 இல் வெளிவந்த அவருடைய காலம் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் அவருக்கு மிகப்பெரிய புகழை வாங்கி தந்தது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்ட இந்த நூல் , கோடிக்கணக்கான பிரதிகள் விற்றன.

புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்கரு மென் விசை , அணுக்கரு பெரு விசை இந்த நான்கு திசைகளும் தான் பிரபஞ்சம் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக்கும் அடிப்படை. ஒருங்கிணைந்த கோட்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது ஐன்ஸ்டீனின் கனவு. ஸ்டீபன் ஹாக்கிங் இதற்காகத்தான் பெரும்பாடு பட்டார். Theory of everything இந்த கொள்கைக்கு பெயர் சூட்டி இருந்தார். ஆனாலும் அவராலும் இந்த ஆய்வை முடிக்க இயலவில்லை.

இவருடைய அறிவியல் ஆய்வுகளுக்காக மட்டும் இவர் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல. விடாமுயற்சி, தன்னம்பிக்கை வாழ்வில் எந்த கடினமான கணத்திலும் சோர்ந்து போய்விடாமல் தன் தேடல்களை நோக்கி பயணப்பட்ட ஒரு தனித்துவமிக்க மனிதர். நிச்சயம் இவருடைய வாழ்க்கை வரலாறை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும்.


நூல்:- ஸ்டீவன் ஹாகிங் ( முடிவில் இருந்து ஒரு தொடக்கம்)

ஆசிரியர் : கமலாலயன்

வெளியீடு :- ஓங்கில் கூட்டம் - பாரதி புத்தகாலயம்

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page